ஐந்துக்குப் பிறகு அப்பாடா ஒன்று வென்றோம்..

ARV Loshan
30

இன்று இடம்பெற்ற கொம்பக் (Comapq) கிண்ணத்தின் முதலாவது போட்டியின் முடிவு இலங்கை அணிக்கு வெற்றி 97 ஓட்டங்களால். ஆனால் இன்று மாலை நான்கு மணி போல இதனை யாராவது ஆரூடம் கணித்து என்னிடம் சொல்லி இருந்தால் பைத்தியக்காரனின் உளறல் என்று கேலி பண்ணி சிரித்திருப்பேன்.

சில விஷயங்களை இன்றைய போட்டி மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

இலங்கை அணி உள்நாட்டு சிங்கங்கள்..

R. பிரேமதாச மைதானத்தில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி அநேகமாகப் போட்டியில் வெல்லும்.

இரவு நேரம் துடுப்பெடுத்தாடும் அணி தடுமாறும்.

கிரிக்கெட்டில் இறுதிவரை எதுவுமே சொல்ல முடியாது..

இன்று போட்டி ஆரம்பிக்கு முன் இலங்கை அணி பற்றி ஏக குழப்பம்.. நிறையப் பேருக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது.

முரளி விளையாடுவார் என்று இறுதிவரை பலரும் எதிர்பார்த்தோம்.ஆனால் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே வைத்து சங்கக்கார முரளியின் காயம் இன்னும் பூரண குணமடையாதது பற்றி சொல்லி இருந்தார்.

சனத் ஜெயசூரியவுக்கு உயர் இரத்த அழுத்தம் என்றொரு வதந்தி பரவியது. மனிதர் இன்று பந்துவீசியதைப் பார்க்கும்போது எதிரணிக்குத் தான் அழுத்தம் வரும்.
நாற்பது வயதிலும் மனிதர் எப்படி இரும்பாய் இருக்கிறார்.. துடுப்பு கைவிட்டால் பந்துவீச்சில் பின்னி எடுக்கிறார். ஆனால் களத்தடுப்பு கொஞ்சம் சோர்வடைவது மனதுக்குள்ளே ஒரு கவலை.

நியூ சீலாந்து வேகப் பந்துவீச்சாளர்களின் அதிரடியில் தடுமாறி இலங்கையின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் மாறி மாறி பவிலியன் சென்றதைப் பார்த்தபோதும் கேட்டபோதும்(வெற்றியில் ஸ்கோர் விபரங்கள் கேட்டுக் கொண்டே தான் வீட்டுக்கு வந்தேன்)

ஒரு கட்டத்தில் நான்கு விக்கெட்டுக்கள் 38 ஓட்டங்களுக்கு; பின்னர் ஐந்தாவது விக்கெட் 69 ஓட்டங்களுக்கு வீழ்ந்தபோது பிரேமதாச மைதானத்தில் ஆறாவது தொடர்ச்சியான தோல்வி நிச்சயம் என்றே யோசித்தேன்.

பாகிஸ்தானுடன் இரண்டு ஒருநாள் போட்டிகள், பின்னர் டுவென்டி 20 போட்டி.. நியூ சீலாந்து அணியுடன் அடுத்தடுத்து இரு டுவென்டி 20 போட்டிகள்..

ஆனால் நடந்தது வேறு..

இலங்கை அணியின் Mr.Consistent சமரவீர ஒருநாள் அணியில் தன்னை நிரூபித்துக் காட்டத் தேர்ந்தெடுத்த இன்றைய நாள் நியூ சீலாந்துக்கு தோல்வியை வழங்கிவிட்டது.

சதமடித்த சமரவீர..

டெஸ்ட் போட்டிகளில் மலையாக ஓட்டங்கள் குவித்தும் கழக மட்டத்தில் வேகமாக துடுப்பெடுத்தாடுவதில் தனக்கென பெயரெடுத்தும் டெஸ்ட் அணியில் மட்டுமே அவரை வைத்து பல வருடங்களை வீணாக்கிய முன்னாள் தேர்வாளர்கள் இன்று தங்கள் பழஞ் செருப்புக்களை தேடிக் கொண்டிருப்பார்கள்(தங்கள் தலைகளில் அடித்துக்கொள்ள)

தடுமாற்றமில்லாத ஆட்டம்.தேவைக்கேற்ப நின்று ஆடி பின்னர் வேகமாக ஓட்டங்களை அதிகரித்தது என்று சமரவீரவின் ஆட்டம் இளைய துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒரு பாடம்.

தனக்குக் கிடைத்த இன்றைய பதினெட்டாவது ஒருநாள் இன்னிங்க்சில் முதல் தடவையாக ஐம்பதைத் தாண்டிய அவர் கன்னி சதத்தை எட்டியதோடு, அடித்த துடுப்பாட்டப் பிரயோகங்கள் ஒருநாள் போட்டிகளிலும் சமரவீர இனி கலக்குவார் என்பதைக் காட்டியுள்ளன.

ஆனால் இப்போதே வயது 32ஆவதால் 2011உலகக் கிண்ணத்தோடு சமரா டாட்டா காட்டிவிடுவார் (அல்லது அவருக்கு தேர்வாளர்கள் காட்டி விடுவார்கள்) என்பது உறுதி.

எனினும் பலவீனமாகவும் தடுமாறியும்கொண்டிருந்த இலங்கையின் மத்திய வரிசை டெஸ்ட் அணி போலவே வலுப்பெறும்.

இணைப்பாட்டத்தினால் வெற்றியைத் தந்த சமரவீர & மத்தியூஸ்

இலங்கை அணியின் புதிய கண்டுபிடிப்பாக தொடர்ந்து பிரகாசித்துவரும் மத்தியூசுடன் சேர்ந்து சமரவீர பெற்ற 127 ஓட்ட இணைப்பாட்டம் தான் இன்றைய வெற்றியின் அத்திவாரம்.

நியூ சீலாந்து அணி மொத்தமாகப் பெற்ற ஓட்டங்களே இந்த இணைப்பாட்டத்தை விட எட்டு ஓட்டங்கள் குறைவு.

யாரோ வெள்ளை வானில் வந்து விரட்டி விட்டுப் போனமாதிரி நியூ சீலாந்து துடுப்பெடுத்தாட வந்ததில் இருந்து ஒரே பதற்றமாகவும் விட்டால் காணும் போய்விடுகிறோம் என்ற மாதிரியும் வருவதும் போவதுமாக ஆட்டமிழந்தனர்.

மாலிங்க யோர்க்கிய நான்கு விக்கெட்டுக்கள்..

மாலிங்க பயமுறுத்தியே யோர்க்கர் மூலமாக நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்றாலும்கூட, எனக்கென்னவோ ஆரம்ப வேகப் பந்துவீச்சாளர்கள் குலசேகர, துஷார ஆகியோரின் கட்டுக்கோப்பான,துல்லியமான பந்துவீச்சு தான் நியூ சீலாந்தை நிலைகுலைய வைத்தது என்பேன்.

மென்டிசின் துணை பெரிதும் இல்லாமலேயே நியூ சீலாந்தின் ஆயுதத்தை வைத்தே (வேகப் பந்துவீச்சு) நியூ சீலாந்தை சுருட்டிவிட்டது இலங்கை.

இந்த முக்கோண ஒருநாள் போட்டித் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு அணியை எதிர்த்தாட ஒரே ஒரு போட்டி மட்டுமே என்பதால் இன்று மேலதிக புள்ளியோடு வென்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானதாகவே நான் நம்புகிறேன்.

இனி இழுபறி இந்தியாவுக்கும் நியூ சீலாந்துக்கும் இடையில் தான்.. இந்தியா இறுதிக்கு வந்தால் தான் விறுவிறுப்பு இருக்கும். சொதப்பாமல் நியூ சீலாந்தை இந்தியா வெல்லுமா?

வருகிற வெள்ளிக்கிழமை இந்திய நியூ சீலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி..

Cricket Rock stars என்று அழைக்கப் படும் இந்திய அணி ரொக்குமா திக்குமா என்பது அவர்களுக்கே தெரியாத விஷயம்.. சச்சின்,திராவிட்,டோனி என்ற மூன்று பெரும் தலைகள் வருவதை விட சேவாக் வராததே பெரிய ஒட்டையாகத் தெரிகிறது.

மாலிங்க,குலா,துஷார சேர்ந்து இந்திய அணியை உருட்டுவார்கள் என்று நம்பியிருக்கலாமா? (டேய் லோஷன், நீ திருந்த மாட்டாயடா.. இப்போ தான் ஐந்துக்குப் பிறகு ஒரு வெற்றி,, இதுக்குள் ஆலவட்டம்.. )

இதற்கிடையே எனது Model நண்பியொருத்தி facebookஇல் இன்று பிற்பகல் ஒரு தகவல் அனுப்பி இருந்தார் .. நியூ சீலாந்து அணியுடன் தான் கலந்துகொண்ட விருந்தொன்றில் அவர்களுக்கு தான் ஊற்றிக்கொடுத்த குடிவகைக்கு இத்தனை சக்தியா என்று.. (அப்போது இலங்கை உருண்டு கொண்டிருந்தது..)

உண்மை தான் தோழி ரொம்ப அதிகமாகவே ஊத்திட்டீங்க போல.. அப்படியே இந்தியாவுக்கும் ஊத்துங்க.. ஒரேயடியா ஊத்திக் கொள்ளும்.. ;)



பி.கு - ௦ போட்டி முடிவடைந்ததும் பதிவிட ஆரம்பித்தாலும் பதிவேற்றும் நேரம் நள்ளிரவு தாண்டிவிட்டது,. எனவே நேற்று, இன்று குழப்பம் இருக்கலாம்..

கிரிக்கெட் பதிவு எழுதாதே என்று மிரட்டல் விடுகின்றவர்களிடம் இருந்து எனது கிரிக்கெட் பதிவின் வாசகர்கள் தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கிறேன்..

பிறந்திருக்கும் இன்றைய நாளில் ஒரு சிறப்பு.. 09/09/09

* இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் இன்று ஆரம்பித்துள்ளது.. அது உத்தியோகபூர்வமாக தொடங்கியவுடன் உங்களோடு பகிரங்கமாகப் பகிர்ந்துகொள்கிறேன்..


Post a Comment

30Comments

Please Select Embedded Mode To show the Comment System.*