Twenty 20 உலகக்கிண்ணம் பற்றிய நேற்றைய எனது பதிவில் விட்ட ஒரு தவறை சீர் செய்யவும், எனது பதிவு இடப்பட்ட பின்னர் நடைபெற்ற சில நிகழ்வுகள், வெளிவந்த புதிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவுமே இந்தப் பதிவு...
(தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஒரு கிரிக்கெட் பதிவு)
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகளை வைத்தே இரண்டாம் சுற்றான Super Eight சுற்றுக்கான அணிகள் அடங்கும் பிரிவுகள் தீர்மானிக்கப் படுகின்றன என்று நான் தப்பாக நினைத்து விட்டேன்,, தெளிவாக கீழ்க்காணும் இணையத் தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தும் தப்பாக புரிந்துகொண்டது என் தவறே.
சுட்டிக் காட்டியிருந்த அனானிக்கு பின்னூட்டத்தில் நன்றி சொல்லி இருந்தேன்...
அதாவது இந்த Twenty 20 உலகக் கிண்ணம் ஆரம்பிக்க முன்பே ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள் தீர்மானிக்கப் பட்டுவிட்டன.
கடந்த Twenty 20 உலகக் கின்னப்போட்டிகளில் ஒவ்வொரு அணிகளும் பெற்ற நிலைகளை வைத்தே இவை தீர்மானிக்கப் பட்டிருக்கின்றன..
எனவே நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளுமே வெறும் 'டப்பா' போட்டிகளாகி இருக்கின்றன.
ஆக Twenty 20 நூறாவது போட்டியை வென்ற பெருமையை இலங்கை அணி தனதாக்கியதும், டில்ஷான் தனது அபார தொடர் அதிரடியை மேலும் தொடர்ந்தும், 40 வயது சனத் வயது தனக்கு தடையே இல்லை என்பதை நிரூபித்ததுமே நேற்றைய நாளின் முதல் போட்டியின் சிறப்பாகவும், இரண்டாவது போட்டியில் மீண்டும் formக்கு திரும்பிய சாகிர் கானின் பந்து வீச்சும், அயர்லாந்தின் முதலாவது T20சர்வதேசத் தோல்வியும் சிறப்பம்சங்களாகிப் போகின.
ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடி,
பிரிவு E இல் இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளும்,
பிரிவு F இல் அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசீலாந்து ஆகிய அணிகளும் உள்ளடங்கி இருக்கின்றன.
Group E Group F
A1: India B1: Pakistan
B2: England A2: Ireland
C1: West Indies C2: Sri Lanka
D2: South Africa D1: New Zealand
இதனடிப்படையில் E பிரிவு கடுமையான பிரிவாகவும், இலங்கைக்கு அரையிறுதி செல்லும் பாதையை இலகுவாக்கிய பிரிவாக F பிரிவும் அமைந்திருப்பது தெளிவு.
இந்தப் பிரிவில் இலங்கை ஏனைய மூன்று அணிகளையும் பந்தாடும் என்பது நிச்சயம்.
அயர்லாந்தின் பருப்பு இலங்கையிடம் வேகாது..
நியூசீலாந்து நல்ல, கட்டுக் கோப்பான அணியாக இருந்தாலும் கூட, காயங்கள் அவர்களைப் போட்டுப் படுத்தி எடுக்கின்றன.
காயங்கள்,உபாதைகள் இல்லாமல் உருப்படியாக இருக்கும் வீரர்கள் பதினொருவர் மாத்திரமே..
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ICL இலிருந்து மீண்டும்,மீண்டும் அணிக்குள் வருகின்ற சகலதுறை வீரர் அப்துல் ரசாக்கின் வரவு அணியை உற்சாகப்படுத்தும். எனினும் இலங்கை அணியை வெல்லக் கூடிய அளவுக்கு பாகிஸ்தான் முன்னேறும் என்று நான் கருதவில்லை.. உலகக் கிண்ணத்தில் தடுமாறிய பாகிஸ்தான் அணியை உற்சாகப்படுத்த இம்ரான் காண இருந்தார்.. இவரோ உலகக்கிண்ணத்தையே WWF Wrestlingஓடு ஒப்பிடும் கேனத் தனமான யூனிஸ் கான் தானே..
களத்தடுப்பிலும் சோம்பேறிகள் பலபேரை அணியில் வைத்துக் கொண்டு பாகிஸ்தான் அரையிறுதி கூட வருமோ சந்தேகம் தான்..
இலங்கை அணி உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறது..
சங்கக்காரவின் திட்டமிட்ட வழிநடத்தளோடு, சிரேஷ்ட,புதிய வீரர்கள் அனைவருமே தத்தம் பங்களிப்பை சரியாக வழங்கி வருகிறார்கள். Weak link என்று எதையுமே அணியில் காணமுடியவில்லை (சாமர சில்வா ஓட்டங்களை இனிப் பெறுவார் என்று நம்பலாம்)
மென்டிஸ்,மாலிங்க,முரளி இந்த மூன்று M களும் எதிரணிகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருவது இறுதிப் போட்டிவரை இலங்கையை நடைபோட வைக்கும் என்பது நிச்சயம்.
துடுப்பாட்ட வீரர்களில் டில்ஷானின் தொடர்ச்சியான அதிரடி form நீடிக்கிறது. சனத் நேற்று விளாசியது போல் இன்னும் நான்கு போட்டிகளில் அடி பின்னினால் இறுதிப் போட்டி இதோ..
களத்தடுப்பில் இன்னமும் இலங்கை சூரர்கள் தான்.. (புதிய வீரர் ஏஞ்சலோ மத்தியுவின் fielding சாகசம் நேற்றுப் பார்த்தீர்களா?)
இந்திய அணி இதுவரை சந்தித்து வந்த ஒல்லிப்பிச்சான் அணிகளை விட இனி சந்திக்கப் போகும் மூன்று அணிகளுமே சவாலானவை..
கொஞ்சம் அசந்தாலும் இந்தியாவையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டு சென்று விடும் அணிகள் மற்ற மூன்றும்..
சொந்த மண்ணில் விளையாடும் பலத்தோடும் முதல் தோல்வி தந்த பாடத்தோடும் இங்கிலாந்து இந்த இரண்டாம் சுற்றில் விளையாடும் என எதிர்பார்க்கிறேன்..
கோல்லிங்க்வூடின் தலைமைத்துவமும், மஸ்கரெநாஸ், ரைட், போபாரா ஆகிய மூன்று சகலதுறை வீரர்களுமே இங்கிலாந்தின் பலமும் அடையாளமும்.
மேகிந்தியத்தீவுகள் நான் நேற்றைய பதிவில் சொன்னது போல அணித் தலைவர் கெயிலில் தான் கிட்டத்தட்ட முழுமையாகத் தங்கியுள்ளது.
எனினும் சர்வான், எட்வர்ட்ஸ், சந்தர்போல், பிராவோ போன்றோர் தங்களை நிரூபித்துக் காட்டவேண்டும்.
வளர்ந்து வரும் லேண்டில் சிமன்ஸ், போலார்து போன்றோரும் தேவையான பொழுது தம்மை நேற்று போல் வெளிப்படுத்தினால் எந்த அணியையும் அந்த நாளில் வெல்லும்.
ஆனால் பாகிஸ்தான் போலவே இந்த அணியிலும் ஒரு மந்தமும், ஒற்றுமையின்மையும் தெரிகிறது.
தென் ஆபிரிக்கா தான் இந்திய,இலங்கை அணிகளின் உலகக் கிண்ண கனவுகளின் நேரடி யமன் என்று துணிந்து சொல்வேன்.
உலகக் கிண்ணம் வெல்லும் அத்தனை தொகுதியும் உள்ள மற்றும் ஒரு அணி இது.
இன்று மாலை இங்கிலாந்து அணிக்கெதிராக தென் ஆபிரிக்க அணி வெல்கின்ற விதத்தில் இந்திய அணியுடன் தென் ஆப்ரிக்காவின் மோதல் பற்றி அறிந்து கொள்ளலாம்.
களத்தடுப்பும், தேவையானபோது தேவையான வீரர்கள் தேவையான அவதாரம் (பந்து வீச்சு, துடுப்பாட்டம்) எடுப்பது தென் ஆபிரிக்காவின் மிகப் பெரிய பலங்கள்.
எனினும் உலகக் கிண்ணம் என்று வந்தாலே துரதிர்ஷ்டம் இவர்களைத் துரத்தியடிக்கிறது.
மழை, தடுமாற்றம், டென்ஷன், தவறாகக் கணக்கிடல் என்று பதினேழு வருடங்களாகவே உலகக் கிண்ணம் தென் ஆபிரிக்காவோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.
இம்முறை விடுவதாக இல்லை என்று உறுதியோடு வந்திருக்கிறார்கள்.
இந்திய அணியில் தோனி மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கக் கூடாது என்று சொன்னது சரியாகப் போச்சு..
எப்போதுமே தான் அவ்வாறு வரப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார். ரோகித் ஷர்மாவின் formஉம், ரெய்னா, யுவராஜின் அதிரடியையும் தோனி சரியாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
நீண்ட நாள் எதிர்பார்த்த சாகிர் காணும் விக்கெட்டுக்களை எடுக்க ஆரம்பித்து விட்டார்.. இரு குழல் துப்பாக்கிகள் போல சுழல் பந்துவீச்சாளர்கள்.. இன்னும் பதான் சகோதரர்கள்,இஷாந்த்..
இந்தியா மீண்டும் ஒரு கிண்ணத்தைக் குறிவைக்க இது போதாதா?
போட்டிகள் செல்லும் நிலைகளைப் பார்த்தால், பிரிவு இலிருந்து இந்தியா, தென் ஆபிரிக்காவும், இலிருந்து இலங்கையும், நியூ சீலாந்தும் அறையிருதிகளுக்கு வரலாம் என்று நினைக்கிறேன்.
இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம் இம்முறை இடம்பெறாதேன்பது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம்...
எனினும் இரு பிரிவுகளிலும் இந்தியா, இலங்கை அணிகள் முன்னணி வகித்தால் இந்திய - இலங்கை இறுதிப் போட்டி நிச்சயம்..
இரண்டு விக்கெட் காக்கும் கூர்மையான மதிநுட்ப தலைவர்களின் அணிகள் மோதும் விறுவிறுப்பான போட்டி பார்க்க காத்திருக்கிறேன்.
பின்னிணைப்பு - இன்று ஆரம்பிக்கும் பெண்களுக்கான உலகக் கின்னப்போட்டிகள் பற்றி தனியாக நாளை அல்லது சனிக்கிழமை பதிவிடுகிறேன்... படங்களோடு தான்.. (கண்ணுக்கு குளிர்ச்சி????)
(இல்லேன்னா மகளிர் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்குகிறதோ இல்லையோ, நம்ம ஆண் சிங்கங்கள் அடிபிடிக்கு வந்துவிடும்... )