என்னை(யும்) (மீண்டும்) ஏமாற்றிய இந்தியா...

ARV Loshan
33

தலைப்பிலேயே நிறைய விஷயங்கள் நீங்களாக ஊகித்துக்கொண்டால் இந்த அப்பாவி பொறுப்பாளியல்ல...

நான் இங்கே பதிவிடப்போவது முற்று முழுக்க கிரிக்கெட் பற்றியே..


இந்தியாவை நம்பிப் பதிவிட்டோர்,கருத்துக் கூறியோர் அத்தனை பேரின் மூஞ்சியிலும் இந்தியா கரியைப் பூசிவிட்டது.. (இது நடந்து ரொம்பக் காலமே என்று யாரும் சொல்லப் படாது.. நான் அண்மையில் இந்தியா உலகக்கிண்ண போட்டியில் வெளியேறியதை மட்டுமே சொன்னேன்)

முதல் சுற்றில் இரண்டு நோஞ்சான் அணிகளை பந்தாடி விட்டு சூப்பர் 8 சுற்றில் பந்து மூன்று போட்டிகளிலும் அடி வாங்கி நொண்டி,நொந்து தங்கள் மூஞ்சியிலும் எங்கள் கணிப்புக்களிலும் கரி பூசிப் போயுள்ளது இந்தியா..

அதிலும் நேற்று தென் ஆபிரிக்காவுடன் பெற்றது அவமானகரமான தோல்வி..
காரணமே சொல்ல முடியாத அப்பட்டமான அடி.. கொஞ்சம் கூடப் போராடாமல் சுருண்டு போன இந்த இந்தியாவையா நாமெல்லாம் உலகின் மிகச் சிறந்த அணி என்று கருதினோம்..
எப்படி இருந்த இந்தியா....


கடந்த T 20 உலகக்கிண்ணம் வென்றவர்கள் - IPL இல் பிரகாசித்த நட்சத்திரங்களை உடைய அணி – அணியில் வீரர்களுக்குப் பதிலாக நட்சத்திரங்களைக் கொண்ட அணி – உலகின் மிகக் 'கூலான' தலைவரின் வழி நடத்தல் என்று ஒருவர் இருவரல்லர் ஒட்டுமொத்த விமர்சகர், நிபுணர்களினாலும் Hot Favourites என்று கருதப்பட்ட இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளை இரண்டாம் சுற்றில் பெற்றது ஆச்சரியத்தைவிட அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.

சொன்னது போலவே இந்திய அணி மற்றுமொரு உலகக்கிண்ணக் கனவிலும் தன்னைப்பற்றிய எண்ணங்களிலும் மதர்ப்போடு மிதந்து கிடந்த வேளை வெற்றிகளுக்காகத் தவம் கிடந்த இரண்டு அணிகளான இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் பவுன்சர் பந்துகளாலும் இந்திய அணியைப் பயமுறுத்தி பின்னி நாருரித்துவிட்டன.


நம்பித் திரண்டு வந்து ஏமாந்து போன ரசிகர்கள்...


வேகப் பந்து வீச்சு தான் இந்தியாவில் அச்சுறுத்துகிறது என்று பார்த்தால் நேற்று தென் ஆபிரிக்காவின் சுழல் பந்து வீச்சாளர்களும் உருட்டி எடுத்து விட்டார்களே.. என்ன கொடுமை தோனி இது? தென் ஆபிரிக்காவின் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களும் சேர்ந்து 9 ஓவர்களில் 32 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்கள்..

Hot favourites என்ற நிலையிலிருந்து அரையிறுதிகளுக்குக் கூடத் தெரிவாகாமல் போய் அனைவரது கேலிப்பேச்சுக்கும் உள்ளான அணியாக இந்தியா இரண்டு அடுத்தடுத்த போட்டிகளில் மாறிப்போனது பரிதாபம்!

மறுபக்கம் பக்கத்து நாடு இலங்கை தொடர் வெற்றிகளுடன் பட்டை கிளப்பிக்கொண்டிருந்தாலும் எத்தனையோ வழிகளில் எவ்வளவோ உதவிகள் செய்த இந்திய நண்பர்களுக்கு எதுவுமே பிரதியுபகாரமாக செய்யமுடியாமல் போனதும் பரிதாபம் தான்!

இந்திய - இலங்கை இறுதிப்போட்டிக்கு கட்டியம் கூறியிருந்த நான், இந்தியா அரையிறுதிக்கு வந்தாலும் - பாகிஸ்தான் முன்னாலேயே தோற்றுவிடும் என்றேன் - நடந்ததோ தலைகீழ்!

இந்திய அணியின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர் என் சக அறிவிப்பாள – நண்பர்! இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்த அடுத்த நாள் - வாழ்க்கை தொலைந்து போனவர் போல வந்திருந்தார்.

வழமையாக இந்திய அணி தோற்றால் இவரைப் போட்டு அழாக்குறையாக வறுத்தெடுப்பது எனக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று.

எனினும் அன்று அவர் இருந்த நிலையில் பார்க்கப் பாவமாக இருந்தது.

தோனியைத் தாறுமாறாக ஏசிக்கொண்டிருந்தார். இந்தியா தோற்றுவிட்டது என்பதைவிட, தோனி வேண்டுமென்றே இந்தியாவைத் தோற்க வைத்துவிட்டார் என்றே அவர் சத்தியம் செய்யாத குறையாகப் புலம்பிக்கொண்டிருந்தார்.

'நான் நினைத்தால் வெல்வேன் - நினைத்தால் இந்தியாவைத் தோற்கவைப்பேன்' என்று யாரிடமோ ஜம்பமாகக் காட்டவே இந்த அடுத்தடுத்த தோல்விகள் என்பதே அவரது நியாயம்!

தோனி விட்ட சில மோசமான முடிவெடுப்புத் தவறுகள் அவரை அவ்வாறு உறுதிபட சொல்ல வைத்திருக்கலாம்.

ஆனால் நான் ஆரம்பம் முதலே தோனியின் ரசிகனல்ல... தோனியின் ஆரம்பகால அசுரவேகம் அதிரடியில் பிரமித்துப்போனாலும் முன்பிருந்து அவரை என்னால் ஒரு அணிக்காக விளையாடும் வீரராக (Team man) ஏற்றுக்கொள்ளமுடியவி;ல்லை.

சிரேஷ்ட வீரர்களை மதிக்காத, கொஞ்சம் தலைக்கனம் கொண்டவராக, சுயநலம் உடையவராக, தன் அழகு, விக்கெட் போன்றவற்றிலேயே அதிக அக்கறையுடையவராகவே தோனியை நான் பார்த்து வந்திருக்கிறேன்.

பல இடங்களில் எனது எண்ணப்பாங்குகள் சரி என்பதை வாசிக்கும் உங்களில் பலரும் ஏற்பீர்கள்.

இலங்கை டெஸ்ட் சுற்றுலாவில் விலகி ஓய்வெடுத்தது. (கும்ப்ளே தலைவர்) பின் ஒரு நாள் தொடரின் தலைவராகப் பொறுப்பேற்று வந்து விளையாடியது.

சிரேஷ்ட வீரர்கள் பலருடன் முறுகல் - மற்றும் அவர்கள் பற்றி தோனி பகிரங்கமாக வழங்கிய சில பேட்டிகள் (குறிப்பாக கும்ப்ளே, சேவாக், கங்குலி & ட்ராவிட்)

தேசிய உயர் விருதுகள் கிடைக்கும் போதும் அந்த விழாவுக்கு (பத்மஸ்ரீ) வராமல் அவமதித்தது.

முன்பு போல் இல்லாமல் ஓட்டக்குவிப்பில் கவனம் சிதறியமை.

கூழாகிப் போன கேப்டன் கூல் (Captain Cool)

முன்பு அதிரடி ஆட்டம் ஆடிய தோனியின் தலையில் அதிர்ஷ்ட தேவதை குடியிருந்தது போல தொட்டதெல்லாம் துலங்கியது. அவர் எடுத்த சடுதியான முடிவுகள் கூட சரித்திரம் படைத்தன. இப்போது தரித்திரம் பிடித்தவராக அவரை மாற்றி உள்ளது.

அவரது ஓட்டக் குவிப்பும் நொண்டியடிக்கிறது.. மைதானத்திலும் சொர்ந்தவராக காணப்படுகிறார். எடுக்கும் முடிவுகளும் சறுக்கி விடுகின்றன.

தோனியின் சரக்கு தீர்ந்துவிட்டதா? அல்லது கலைத்து கிரிக்கெட் மீது ஆர்வமற்றுப் போய் விட்டதா? IPLஇல் சென்னை சூப்பர் கிங்க்சின் கடைசி ஆட்டங்களின் போதும் தோனி அசுவாரஸ்யமாக விளையாடியது கண்டிருப்பீர்கள்..

முன்பு பார்த்த சிக்சர் அடிக்கும் அதிரடி தோனி எங்கே போனார்? இப்போ ஒன்றிரண்டு ஓட்டங்களோடு பவுண்டரி அடிக்கவே தடவித் தடுமாறுகிறார். என்னவாயிற்று?

இம்முறை தோனி தலைவராகவும், துடுப்பாட்ட வீரராகவும் சறுக்கியது அவர் மேல் எல்லோருடைய விரல்களும் நீண்டு தோனியை பிரதான குற்றவாளியாக்கினாலும், யுவராஜ் தவிர வேறு எந்த துடுப்பாட்ட வீரருமே சோபிக்கவில்லை.. ரோகித் ஷர்மாவும் முதல் சுற்றோடு சரி..

எவ்வளவு நாள் தான் தனியாகவே போராடுவது - யுவராஜ்


பந்து வீச்சாளர்களில் இஷாந்த் ஷர்மா தொடர்ந்து சொதப்பியதோடு, மற்றவர்களும் தேவையான நேரங்களில் பிரகாசிக்கவில்லை..

2007இல் மந்திரசக்தியாக மற்ற அணிகளைக் கட்டிப்போட்ட இந்தியாவின் மின்னல் வேகக் களத்தடுப்பு போய் ஒளிந்துகொண்டது எங்கே என்று தெரியவில்லை..
யுவராஜ்,தோனி கூட தடுமாறி இருந்தார்கள்..

உண்மையில் 2007இல் யாருக்கும் Twenty 20 கிரிக்கெட் பற்றி பெரிதாகத் தெரிந்திருக்காத நிலையில் அனுபவமற்றுக் களமிறங்கிய இந்தியா வெற்றி வாகை சூடியது.

இம்முறையோ எல்லோருமே ஆட்டங்களைக் கரைத்துக் குடித்திருந்தார்கள் IPL வேறு தகுந்த பயிற்சியை வழங்கி எல்லா அணிகளையும் சூடேற்றி இருந்தது. இந்திய அணியோ அதிகமாக விளையாடி களைத்துப் போயிருந்தது.

இதற்கிடையில் சேவாகின் இழப்பும் இந்தியாவில் மிகப் பெரியளவில் பாதித்தது. அவருக்குப் பதில் ரோகித் ஷர்மாவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்ப மத்திய வரிசையிலும் வெற்றிடம் ஏற்பட்டது.

தோனி - சேவாக் மோதல் என்ற பரபரப்பும் (எவ்வளவு தான் ஒற்றுமை என்று காட்ட முயற்சி எடுத்தாலும் கூட) அணிக்குள் ஒரு வித மந்த சூழ்நிலையை தொற்றுவித்ததென்னவோ உண்மை.

இந்திய அணியை இம்முறை நாங்கள் எல்லோரும் அதிக வாய்ப்புடைய அணியாகக் கருதியது மிகப்பெரிய தவறு என்று இப்போது தான் நான் உணர்கிறேன்.

காரணம் இரு உலகக் கிண்ணங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி போட்டிகளில் பெரிதாக சோபிக்கவே இல்லை. ஒரு நாள் போட்டிகளில் தான் இந்திய வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்தது.

தனித் தனி வீரர்களாக ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினார்களே தவிர அணியாக அவர்களின் பெறுபேறு சிறு அணிகளுக்கேதிராகவே சிறப்பாக இருந்தது.

எதிரணிகள் நல்ல முறையில் இந்திய அணியின் பலவீன ஓட்டைகளைக் கற்றறிந்து இந்தியாவை பந்தாடி விட்டன.

ஒன்றா இரண்டா பலவீனம்? காணும் இடமெல்லாம் பலவீனம் என்றால் யாரும் அடிப்பார்கள் தானே..

இந்திய அணியின் நல்ல காலமோ, ரசிகர்களின் நல்ல காலமோ இந்திய அணி பாகிஸ்தானிடமோ, இலங்கையிடமோ தோற்காமல் வெளியேறியுள்ளது..

இல்லாவிட்டால் ரசிகர்கள் கொந்தளித்திருப்பார்கள்.

இப்போது அடுத்த கட்டம் பற்றி யோசிக்கும் நேரம்.. தலைவர் தோனி, வீரர்கள், தேர்வாளர்களுக்கு...

வீரர்கள் உடல்,மனதளவில் களைத்துப் போயிருக்கிறார்கள் என்பதை காரணம் காட்டும் பயிற்றுவிப்பாளர் கரி கேச்டனும், தேர்வாளர்களும் இன்று மாலை கூடி மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய ஒரு நாள் அணியைத் தெரிவு செய்யப் போகிறார்களாம்.

யாருக்கு ஓய்வு கொடுப்பது, யாருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து கழுத்தறுப்பது என்பதெல்லாம் அவரவர் கையில்..

உலகக் கிண்ணம் தகுதியான இன்னொரு அணியின் தலைவரின் கையில்...

இந்தத் தொடரில் எந்தத் தோல்வியும் காணமல் அரையிறுதி நோக்கி சென்றுள்ள இலங்கை அல்லது தென் ஆபிரிக்க அணியின் தலைவரின் கரங்களில் தான் இம்முறை உலகக் கிண்ணம் தவழும் என்பதே எனது எதிர்பார்ப்பு.. (இவங்க எப்போ என் மூகுடைப்பான்களோ? ஆனாலும் பரவாயில்லை.. எவ்வளவு உடைப்பட்ட்டிட்டோம்.. )

Post a Comment

33Comments

Please Select Embedded Mode To show the Comment System.*