ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ள (யுத்தம் முடிந்தால் அதுதானே அர்த்தம்) இந்நிலையில் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் சமூக மத்தியிலும் பிறர் மத்தியிலும் முளைவிட்டுள்ள, சில சந்தேகங்கள் கேள்விகளையும் அரசியல் நோக்கர்கள் சிலரின் அல்லது பலரின் எதிர்வு கூறல்கள், எண்ணப்பாங்குகளையும் பகிர்ந்துகொள்வதற்கே இந்தப்பதிவு.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பே கடந்த இருதசாப்தங்களுக்கு மேலாக இலங்கையிலுள்ள தமிழரின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்து வந்துள்ள நிலையில் (விமர்சித்தவர்கள், அதிருப்தியாளர்கள், எதிரான கட்சிகள் ஏன் அப்போதைய இலங்கை அரசு உள்ளிட்ட பல நாடுகளே இதை ஏற்றிருந்தன) இன்று விடுதலைப்புலிகளோ, தலைவரோ இல்லாமல் போயுள்ள நிலையில் (கேள்விக்குறிகள், சந்தேகங்கள் ஒரு புறம் இருக்கட்டும்) அடுத்த கட்டத் தமிழர் தரப்புத் தலைமை யாரிடம் சொல்லும்?
புற தேசத்திலிருந்து வரும் தலைமைக் கட்டளையையோ. கருத்துக்களையோ கூட ஏற்கும் பக்குவத்தில் இங்கே யாருமில்லை என்பது தெளிவு!
அது பத்மநாதனாகவும் இருக்கலாம் இல்லை தமிழக முதல்வராகவும் இருக்கலாம்!
இதற்குள்ளே இலங்கையின் டெய்லி மிரர் (Daily Mirror) நாளேட்டில் 27ம் திகதி உபுல் ஜோசப் பெர்னான்டோ என்ற பத்திரிகை எழுத்தாளர் பிரபாகரனின் இறப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்தைக் கருணாநிதி நிரப்புவாரா என்று கேள்வியெழுப்பியுள்ளார். ( Prabhakaran’s death; Will Karunanidhi fill the void)
சிங்கள மக்கள் மத்தியில் எழுத்துக்களால் பெரிதும் மதிக்கப்படும் உபுலின் இந்தக் கேள்வியினதும், அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் பல கருத்துக்களினதும் அடிப்படையில் பெரும்பான்மை சிங்களவரின் எண்ணவோட்டங்களை விளங்கக் கூடியதாக உள்ளது.
தமிழகத்திடமும், இந்தியாவிடமும் இயற்கையிலேயே சிங்களவர் கொண்டுள்ள அச்சமும்,சந்தேகமும், கலைஞர் வடிவில் (இன்று ஐயாவுக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்துக்களையும் இதனூடு சொல்லும்போது கலைஞரும்,அவரது ஆதரவாளரும் மனம் குளிரக் கூடும்) தமக்கு எதிரான தலைமையாக மாறிவிடும் என்று நினைக்கிறார்கள் போலும்.
அதிலும் அண்மையில் அமைச்சர் முரளீதரன் (கருணா அம்மான்) அண்மையில் கலைஞரின் ஆலோசனைகளை கேட்பேன் என்று கூறியதும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலைஞர்களுக்கு வாழ்த்து சொல்லி உதவி கேட்டதும் அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழக முதல்வரை சந்தித்ததும் கலைஞரின் எதிர்கால வகிபாகம் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது உண்மை தான்.
யுத்தம் நடை பெற்ற கடந்தகாலங்களில் குரல் (மட்டும்) எழுப்பி வந்த கலைஞர் இனி நடவடிக்கைகள் மூலமாக செய்யப் போவதென்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
(இல்லாவிட்டால் துணை முதல்வரைத் தான் இனி நம்ப வேண்டுமோ?)
இலங்கையைப் பொறுத்தவரை அடுத்து யார் அதிக தமிழர்களின் ஆதரவைப் பெறப் போகும் தமிழ் தலைவர் என்ற கேள்விக்கு, எதிர்வரும் யாழ்ப்பாண மாநகரசபை,வவுனியா நகரசபை தேர்தல்கள் சிலவேளை விடை தரலாம். பெரும்பான்மைத் தமிழர்கள் வாக்களித்தால்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சம்பந்தன், டக்லஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி முரளீதரன் ... இம்மூவரில் யார் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.. (இதிலெல்லாம் அக்கறையில்லாதோரும் உண்டு)
ஜனநாயக நீரோட்டம் இனி எந்தத் திசையில் எம்மக்களை இழுக்கும் என்று இருந்து பார்க்கலாம்..
இன்னொரு பக்கம் பல கட்சிகளின் பெயர்கள் மாற்றப்பட வேண்டிய நிர்பந்தத்தை அரசு ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுவதை இங்கே நான் சொல்லியே ஆகவேண்டும்.
காரணம்..
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு பரபரப்புக் கருத்தை முன்வைத்திருக்கிறார்.
"யுத்தத்தில் ஈழம் என்ற கொள்கையை நாம் (இவ்வளவு காலமும் அரசாங்கம் என்ன செய்தாலும் எதிர்த்தவர்கள் இவர்கள்) தொர்கடித்திருக்கிறோம்.. இப்போது அரசியல் ரீதியிலும் தோற்கடிக்கவேண்டும்.
கட்சிப் பெயர்களில் ஈழம் என்பதைக் கொண்டுள்ள கட்சிகள் அனைத்தும் தடை செய்யப் படவேண்டும். இல்லாவிட்டால் என்றோ ஒருநாள் மீண்டும் தனிநாடு என்ற பிரிவினை எண்ணம் தோற்றுவிக்கப்படக் கூடும்"
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - EPDP
ஈழமக்கள் புரட்சிகர அமைப்பு - EROS
தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் - PLOTE
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - TELO
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - EPRLF
ஆகியனவே அவர் குறிப்பிட்டுள்ள "ஈழ" கட்சிகள்.
ஜனநாயக நீரோட்டத்தில் நீண்டகாலமாக கலந்திருந்தும் இலங்கை இல்லாமல்,ஈழமாகவே அவர்கள் கட்சிப் பெயர்கள் இருப்பது முர்ணபாடா அல்லது முடிந்த முடிபா?
ஈழம் பற்றிய அச்சமும், கரவும் இன்னமும் இருப்பதையும் அவை முற்றாகக் களையப்படவேண்டும் என்பதில் கட்சி வேறுபாடு கடந்து காட்டப்படும் அக்கறையும் தெரிவது உறுதி.
இன்னொரு பக்கம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற மனித உரிமைகள் சம்பந்தமான பிறேஅரனை மீதான வாக்கெடுப்பில் இலங்கை வென்றது அரசுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி.
அத்தனை ஆதரவு குறிப்பாக ஆசிய நாடுகளை ஒன்றாக சேர்த்தமை இலங்கையின் ராஜதந்திர வெற்றியாகக் கருதினாலும், சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் தமது பிராந்தியங்கள் மீது ஐரோப்பிய நாடுகள் செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவே அந்த வாக்கெடுப்பை பயன்படுத்தின என்ற கருத்தும் நிலவுகிறது.
எனினும் பரம வைரிகளை இணைத்து தன் பக்கம் சேர்த்து மேலைத்தேயம் முழுவதையும் வெற்றிகொண்டதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் இலங்கை, பரப்பிலே தான் சிறிய நாடாக இருந்தாலும் ராஜதந்திர ரீதியாக தன் பலத்தைக் காட்டியுள்ளது.
இதன் விளைவுகள் உலகம் முழுவதிலும் இன்னும் சிறிது காலத்தில் அலைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஐ.நா சபையை பல்லுக் கழட்டிய பாம்பாக மாற்றி, தன் பக்கம் கொண்டு வரப்பட்ட குற்றச் சாட்டுக்களை அப்படியே மேலைத்தேய ஏகாதிபத்திய எதிர்ப்பாக மாற்றி, பின்னர் ஐ.நா செயலாரையும் இலங்கைக்கே அழைத்து 'பெப்பே' காட்டிய திறமை வேறு யாருக்கு தான் வரும்.
புலிகளுக்கு மட்டுமல்லாமல் இதன் மூலம் எதிர்க்கட்சிக்கும்,அதன் தலைவர் ரணிலின் ஜனாதிபதியாகும் கனவுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த தன் மீதான விமர்சனங்களுக்கும் ஜாதிபதி ஆப்படித்த பெருமை சிங்கள நாளேடுகளில் மட்டுமன்றி, ஆங்கில நாளேடுகளிலும், ஊடகங்களிலும் தெரிகிறது.
இன்று மிகப்பெரிய உச்சக் கட்ட யுத்த வெற்றிக் கொண்டாட்டம் கொழும்பில் கலை கட்ட நடைபெற்று, யுத்தத்தின் முடிவு இராணுவப் பாரம்பரியப் படி ஜனாதிபதிக்கு இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டது. (இன்றைய நாள் கொண்டாட்டத்தினால் கொழும்பு நகர போக்குவரத்து மட்டுமன்றி, முழு நகருமே ஸ்தம்பித்தது வேறு கதை)
அடுத்தது என்ன?
ஜனாதிபதி அண்மைக்காலமாக எல்லா இடங்களிலும் தமிழில் தன்னால் முடியுமானளவு உரையாற்றி வருகிறார்.நம்பிக்கை தொனிக்க பேசுகிறார்.
அபிவிருத்தி, மக்களுக்கு நன்மை,மீளக் குடியமர்த்தல் பற்றியெல்லாம் உறுதி தருகிறார். வடக்கு,வன்னிக்கான நாள் திட்டம் வேறு முன்னேடுக்கப்படவுள்ளதாம்.
சொன்னபடி செய்வதும், சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து முகாம்களில் அவதியுறும் அப்பாவி மக்களுக்கு நிரந்தரத் தீர்வு (அவர்களுக்காவது) ஒன்று கூடுமானவரை விரைவாகப் பெற்றுத் தரப்படுவதே முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
அந்த மக்கள் எங்களை விட செல்வச் செழிப்போடும்,மகிழ்ச்சியோடும் வாழ்ந்தவர்கள்.. இப்போது அவர்களின் நிலை பற்றி வெளியாகும் படங்கள்,காணொளிகள்,கட்டுரைகள்,செய்திகள் பற்றி அறியும் பொது மனதில் தாங்கமுடியா சோக அலைகள். என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்? நம்பிக்கை எல்லாம் தளர்ந்து போய், நம்பியிருந்த எல்லாம் இழந்து போய் இன்னமும் விடிவு என்பதே இல்லாமல்..
ஒரு சில இடங்களில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களின் போது இடம் பெற்ற அசம்பாவிதங்கள் தவிர பெரிதாக துவேஷ விதைகளோ, துன்ப நிகழ்வுகளோ இடம்பெறவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
இந்த தெளிவும், துன்பப்பட்ட மக்கள் மீதான பரிதாபமும் 90 சதவீதமான சிங்கள மக்களிடம் இருப்பதை உணர முடிகிறது. யுத்த வெற்றிகளின் மகிழ்ச்சி இன்னும் ஓரிரு தினங்களில் அடங்க,தம் பக்க இழப்புக்களும் உண்மையாக வெளிவர ஆரம்பிக்க - யுத்தத்தால் இடம்பெயர்ந்து முகாம்களில் குற்றுயிரும்,குலையுயிருமாக வதை பட்டுக் கொண்டு எதிர்காலம் புரியாமல் உள்ள மக்களுக்கு விரைவுத் தீர்வொன்றுக்கு வழிவகுக்கும் எண்ணப் பாங்கை அவர்களுக்கு மனதில் மேலும் அகலாமல் இருக்கச் செய்யவேண்டும்.
ஊடகங்கள்,அரசியல்வாதிகள் ஆகியோருக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது.
வழமை போல கேள்விக்குறியாகவே (தமிழ் மக்களைப் பற்றிய பதிவு அதுவும் எதிர்காலம் பற்றி என்றாலே இது தானோ?) இந்தப் பதிவின் முடிவையும் விட்டு செல்லவேண்டி உள்ளது..