இலங்கையா இந்தியாவா? விரிவான அலசல்..

ARV Loshan
17
உலகக் கிண்ணம் - இதுக்கு தான் இத்தனை போட்டி..

இன்று இடம்பெறும் இரண்டு போட்டிகளோடு 2009 Twenty 20 உலகக் கிண்ணப்போட்டிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகின்றன.

இன்று இடம்பெறும் இரண்டு போட்டிகளுமே எந்தவிதமான மாற்றங்களையும் அடுத்த சுற்றான சூப்பர் எய்ட் (Super Eights) சுற்றுக்கு தெரிவாகும் அணிகளில் எந்தவித தாக்கங்களையும் ஏற்படுத்தப் போவதில்லை..

காரணம் எட்டு அணிகளும் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு விட்டன.

நேற்று எட்டாவது அணியாகத் தப்பிப் பிழைத்துக் கொண்டது பாகிஸ்தான்.

ஆனாலும் இன்றைய போட்டிகளின் முக்கியத்துவம் இன்னொரு விதத்தில் தெரிவான 8 அணிகளுக்கு முக்கியம்.

வெளியேறிய நான்கு அணிகளையும் பார்க்கும் போது நம்பமுடியாமல் இருப்பதென்னவோ உண்மை தான்...

ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து .. சரி..
பங்களாதேஷ் கூட சரி.. இன்னமும் வளரவில்லை..

ஆனால் ஆஸ்திரேலியா????? நடப்பு டெஸ்ட் மற்றும் ஒருநாள் சாம்பியன்கள்.. கிரிக்கெட்டின் எந்தவொரு அம்சத்திலும் தலை சிறந்தவர்கள்.. அண்மைக்காலம் வரை யாராலும் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள்...

அவர்களா இப்படி? நம்பித் தான் ஆகவேண்டும்..

எந்தவொரு போட்டியிலும் வெல்லாமலே முதலாம் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலியா தங்கள் தோல்விகள் பற்றி ஆழ ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

எனினும் அவுஸ்திரேலியா அணிக்கு அடுத்து முக்கியமான ஆஷஸ் தொடருக்கு தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கு நல்லதொரு ஓய்வு கிடைத்துள்ளது என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். (வேறென்ன தான் இனி செய்வது?)
படம் நன்றி - குசும்பன்

தற்போது அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள எட்டு அணிகளும் இன்னமும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட உள்ளன...

A,C பிரிவுகளில் முதலாவது இடம் பெற்ற அணிகளும், B,D பிரிவுகளில் இரண்டாவது இடம் பெற்ற அணிகளும் E பிரிவிலும்
B,D பிரிவுகளில் முதலாவது இடம் பெற்ற அணிகளும், A,C பிரிவுகளில் இரண்டாவது இடம் பெற்ற அணிகளும் F பிரிவிலும்
தமக்குள்ளே மோதவுள்ளன..

இனித் தான் உண்மையான உலகக் கிண்ணப் போட்டிகள் என்னும் அளவுக்கு சூடு பிடிக்கப்போகிறது..

இதனால் தான் இன்றைய இரு போட்டிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன..

A மற்றும் C பிரிவுகளில் யார் முதலிடம் பிடிப்பார்கள் என்பதை இன்றிரவு தெரிந்து கொள்ளலாம்.

A பிரிவில் இந்தியா தான் என்பது உறுதியாகத் தெரிந்தாலும், யார் கண்டார் ஆஸ்திரேலியாவுக்கு சறுக்கியது, இந்தியாவுக்கும் நடக்கலாம்...

எனினும் இன்று மாலை நடக்கவிருக்கும் இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம் தான் விறுவிறுப்பாக இருக்கப் போகிறது...

இரண்டு அணிகளில் யார் பலம் பொருந்தியது என்று சொல்லத் தெரியவில்லை..

எனினும் மேற்கிந்தியத் தீவுகள் கெய்லின் அதிரடி,அசுர துடுப்பாட்டத்தையே மிக அதிகளவில் நம்பியிருப்பதாக நினைக்கிறேன். அவர் சறுக்கினால் அணியும் சறுக்கி விடுகிறது...

எனினும் இலங்கை அணி சமபலம் பொருந்திய அணி என்பதோடு, எந்தவொரு அணியையும் அச்சுறுத்தக் கூடிய பல வீரர்கள் இலங்கை அணியில் இருக்கிறார்கள்.

முன்னொரு பதிவில் அஜந்த மென்டிசின் ஆட்டம் எல்லாம் இந்தியாவுடனும்,பாகிஸ்தானுடனும் தான் என்றும் ஆஸ்திரேலியாவுடன் மோதும் போது நடப்பதைப் பாருங்கள் என்று சொன்னவர்கள் எல்லாரும் அவுஸ்திரேலியா அணியை மென்டிஸ் உருட்டியதைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்...


பொன்டிங்கே சொன்னது போல மாதக் கணக்காக வீடியோ பதிவுகள் போட்டுப் பார்த்தும் பயனில்லாமல் மென்டிசை மந்திரவாதி என்று புகழ்கிறார்கள் ஆஸ்திரேலியர்கள்...

தான் தலைமை தாங்கிய முதலாவது போட்டியிலேயே வெற்றியுடன், அரைச் சதம், போட்டி சிறப்பாட்டக்காரர் விருது என்று கலக்குகிறார் சங்ககார..

சங்கா & முரளி - வெற்றிகளை நோக்கி...

என்னை இன்னமும் அவர் மேல் வைத்துள்ள மதிப்பை உயர்த்திய விடயங்கள் அவுஸ்திரேலியா அணிக்கெதிராக இலங்கை அணித்தேரிவு மற்றும் பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதம்.

மக்ரூப், இந்திக்க டீ சேரம், துஷார, ஒரு நாள் தரப்படுத்தல்களில் முதலாம் இடத்தில் இருக்கும் நுவன் குலசேகர போன்றோரை அணியில் எடுக்காமல் அனுபவம் குறைந்த என்ஜெலோ மத்தியு, இசுரு உதான போன்றோரை அணியில் இணைத்தது ஒரு ரிஸ்க் என்றே என்னைப் போல் பலரும் யோசித்திருக்கக் கூடும்.. இருவருக்கும் அதுவே முதல் போட்டி வேறு...

ஆனால் அவர்களின் பங்களிப்பு.. மத்தியுவின் ஆரம்ப ஓவரிலேயே வோர்னர் ஆட்டமிழந்தார்..
உதான இரண்டு விக்கெட்டுக்கள்..

சங்கா ஆஸ்திரேலியாவை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம் மத்தியுவையும், சனத் ஜெயசூரியவையும் ஆரம்பப் பந்து வீசப் பயன்படுத்தியது..

அவுஸ்திரேலியா அணியைத் தோற்கடித்த அளவுகடந்த இறுமாப்போடு இன்று களமிறங்க மாட்டார்கள் என்று நம்பியிருப்போமாக..

சங்கக்கார என்னும் கூர்மையான கிரிக்கெட் அறிவு கொண்ட ஒருவரின் தலைமையில் இலங்கை அணி தொடர்ந்து வெற்றி நடை போடும் என்றே நான் நம்புகிறேன்..

டோனி இந்திய அணிக்குக் கொடுத்த புது இரத்தப் பாய்ச்சல் போல இப்போது சங்கா இலங்கைக்கு மாற்றங்கள் ஏற்படுத்தும் வேளை..


இன்றைய போட்டியில் இன்னுமொரு சிறப்பம்சம், Twenty 20 வரலாற்றில் இது நூறாவது போட்டி..

இந்த T 20 போட்டிகளில் அதிகளவான போட்டிகளை விளையாடிய அணிகள் ஆஸ்திரேலியா, நியூ சீலாந்து (தலா 23 போட்டிகள்)

இவையே அதிக தோல்விகளையும் சுவை பார்த்தவையும் இவையே.. 12

அதிக வெற்றிகளை பெற்றிருக்கும் அணி பாகிஸ்தான். (19 போட்டிகளில் 14 வெற்றிகள்)
தென் ஆபிரிக்கா (20 போட்டிகளில் 13 வெற்றிகள்)

ஆச்சரியமான விடயம் என்னவென்றால் T 20 போட்டிகளை விளையாடிய அணிகளில் அயர்லாந்து மட்டுமே இதுவரை எந்தவொரு போட்டியிலும் தோற்காத ஒரே நாடு.

இன்று இந்திய அணி அயர்லாந்துக்கு முதலாவது தோல்வியை வழங்குமா? அல்லது அயர்லாந்து அடுத்த அதிர்ச்சியை அளிக்குமா?

இரண்டே இரண்டு வீரர்கள் மாத்திரமே தொழில்சார் வீரர்களாக அயர்லாந்துக்காகக் களம் இறங்குகிறார்கள்.ஏனைய அனைவரும் இரண்டாம் சுற்று ஆட்டங்களில் பங்கெடுக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளதால் தங்கள் மேலதிகாரிகளிடம் மேலதிக விடுமுறை கேட்டிருக்கிறார்களாம்.

அரையிறுதி வரை பயணித்தால் இன்னும் கடின முயற்சியோடு அதிர்ஷ்டம் தான்.

அடுத்து இந்திய அணி..

இந்த அணியை என்ன செய்து வீழ்த்தலாம் என்பதே ஏனைய எல்லா அணிகளுக்கும் இருக்கும் கவலை..

அணியின் சமச்சீர்த் தன்மை தொடக்கம், அனைத்து துறைகளிலும் பலம், நுண்ணியமான முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமை, எந்தவொரு அணியையும் அடித்து நொறுக்கி, போட்டிகளின் முடிவுகளைத் தலைகீழாக்கக் கூடிய துடுப்பாட்ட வீரர்கள், யாரை எடுப்பது யாரை விடுவது என்னும் அளவுக்கு சிறப்பான பந்து வீச்சாளர்கள் என்று இந்தியா தான் T 20 போட்டிகளின் மிகச் சிறந்த அணி.

எனினும் இம்முறை சேவாக் இல்லாதது (தோனியோடு மோதல் என்று முன்னர் சொல்லப்பட்டது;பின்னர் தோட்பட்டை காயம் காரணமாக இப்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.. மர்மம் துலங்கும்) இனிவரும் போட்டிகளில் இந்தியாவில் பாதிக்கலாம்..

எனினும் இம்முறை நான் பிரகாசிப்பார் என்று எதிர்பார்த்த சுரேஷ் ரேய்னாவுக்கு மேல் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ரோகித் ஷர்மா, கம்பீர், யுவராஜ் என்று இந்திய அணிக்கு அள்ள அள்ளக் குறையாத வளங்கள்..

தோனி மட்டும் தன்னை துடுப்பாட்ட வரிசையில் மேலேடுக்காமல் ரேய்னாவை மூன்றாம் இலக்கத்தில் ஆட அனுப்பலாம் என்றே தோன்றுகிறது.

இன்று இலங்கையும் இந்தியாவும் தத்தம் போட்டிகளில் வென்றால் அடுத்த சுற்றில் இவ்விரு அணிகளும் ஒரே பிரிவில் விளையாடும்.. எனினும் இந்திய பாகிஸ்தானிய அணிகள் இனி சந்தித்தால் அது அரையிறுதி அல்லது இறுதியில் தான்.. (இரண்டில் ஒன்று முன்னமே வெளியேறா விட்டால்)

மற்றைய அணிகளில் தென் ஆபிரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் , நியூசீலாந்தும் சவால் விடக் கூடிய அணிகளாகத் தெரிகிறது..

இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறக்கூடிய அத்தனை தகுதிகளும், வேகம்,உத்வேகம்,பலம் ஆகியனவும் ஸ்மித்தின் தென் ஆபிரிக்க அணியிடம் இருக்கிறது.

மிக நீண்ட காலாமாக ஒரு முக்கிய வெற்றிக் கிண்ணம் கிடைக்காத ஏக்கத்தில் இருக்கின்ற தென் ஆப்ரிக்கர்கள் இம்முறை எப்படியாவது இந்தக் கிண்ணத்தைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்று திட சங்கற்பத்தோடு இம்முறை போராடி வருவது கண்கூடு.

நேற்றைய நியூ சீலாந்து அணிக்கெதிரான போட்டியில் இறுதிப் பந்துவரை போராடி ஒரு ஓட்டத்தால் வென்றதே எவ்வளவு தூரம் ஒவ்வொரு போட்டிம் சிரத்தை காட்டுகிறார்கள் எனக் காட்டுகிறது.

ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் தென் ஆபிரிக்க வீரர்கள் களம் இறங்கும் போது பாருங்கள்.. எவ்வளவு உறுதி,ஒற்றுமை அவர்களிடம் தெரிகிறதென்று.

மேற்கிந்தியத் தீவுகள் இடையிடையே அச்சுறுத்தினாலும் கெயில் தான் அங்கே விஸ்வரூபம் எடுத்து தெரிகிறார். சர்வான், எட்வர்ட்ஸ், சந்தர்போல், பிராவோ போன்றோர் தங்களை நிரூபித்துக் காட்டவேண்டும்.
நியூ சீலாந்தை நானும் பல காலமாக Twenty 20 போட்டிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட சிறப்பான அணிஎன்றே கருதி வந்திருக்கிறேன்.அதற்கேற்ற சகலதுறை வீரர்கள்,அதிரடி துடுப்பாட்ட வீரர்கள்,நுணுக்கமான பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், எதோ ஒரு குறை காணப்படுவது தெரிகிறது.
என்னான்னு தெரிஞ்சா யாராவது சொல்லுங்களேன்...

இன்னுமொரு சிக்கல் காயங்கள் மற்றும் உபாதைகள்..

அணித் தலைவர் வெட்டோரியின் காயம் இன்னும் குணமடையவில்லை.. நேற்று நியூ சீலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் டெய்லருக்கும் காயம்.. இன்னும் ஒரு சிலரும் தடுமாறுகிறார்கள்..

அரையிறுதி வாய்ப்பு கொஞ்சம் சிரமமே..

பாகிஸ்தானும் இங்கிலாந்தும் பரவாயில்லை ரகமே.. இவ்விரு அணிகளுக்கும் இருக்கும் பெரிய பிரச்சினையே தங்கள் முழு ஆற்றல்களையும் தேவையான போது பயன்படுத்த முடியாமல் இருப்பதே.

இரண்டு அணிகளுமே தத்தமது முதல் போட்டிகளின் பின்னர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான பின்னர் அடுத்த போட்டியில் ரோசத்தோடு விளையாடி அபாரமான வெற்றி ஈட்டியவை..

எனினும் இந்தியா, தென் ஆபிரிக்கா,இலங்கை அணிகளுக்கு இவை ஈடு கொடுக்குமா என்றால் சந்தேகம் தான்..

இப்போதைக்கு இந்தியா தென் ஆபிரிக்க இறுதிப் போட்டிக்கே வாய்ப்பிருப்பதாக நான் கருதுகிறேன்.. (அரை இறுதியில் இவை சந்திக்காவிட்டால்)

ஆனால் இலங்கை இந்தியா இறுதி போட்டிக்கு வந்தால் நல்லா இருக்கும் என மனம் ஆசைப்படுகிறது..

இன்னொரு விஷயம் பார்த்தீர்களா?

இம்முறை IPLக்கு தமது வீரர்களை அதிகளவில் அனுப்பாத/ வீரர்கள் விளையாடாத அணிகள் தடுமாறி இருக்கின்றன.. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் ..

இதுவரைக்கும் பல விறுவிறுப்பான போட்டிகள் பார்த்து விட்டோம்.. நேற்றைய தென் ஆபிரிக்க நியூசீலாந்து போட்டியை விட நெதர்லாந்து இங்கிலாந்தை இறுதிப் பந்தில் வென்ற முதல் போட்டி தான் best.

இன்னும் பல நெருக்கமான, இறுதிப் பந்துவரை இதயத் துடிப்புக்களை எகிற வைக்கின்ற போட்டிகள் இனித் தான் வரப் போகின்றன..
அதுமட்டுமல்லாமல் எத்தனை புதிய சாதனைகள் படைக்கப்படுமோ என்ற கேள்வியும் இருக்கிறது...

இருந்து பார்ப்போமே...

கிரிக்கெட் பிரியர்களுக்கு இன்னொரு விஷயத்தை ஞாபகப்படுத்தலேன்னா என் தலை வெடிச்சிடும்...

இப்போது உலகக் கிண்ணம் நடைபெறும் இதே இங்கிலாந்தில் நாளை முதல் மகளிருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்கின்றன..
எட்டு அணிகள் பங்கேற்கின்றன...

உங்களுக்காக எட்டு மகளிர் அணித்தலைவிகளும் உலகக் கிண்ணத்தோடு எடுத்துக் கொண்ட படம் ஒன்று...

படங்கள் நன்றி cricinfo

பி.கு - கொஞ்சம் நீளம் தான்.. என்ன சிறது.. எழுத ஆரம்பித்தால் கை தான் நிறுத்துதில்லையே...


Post a Comment

17Comments

Please Select Embedded Mode To show the Comment System.*