பெண்கள் ஆடினால் பிடிக்காதோ?

ARV Loshan
11

மகளிர் உலகக் கிண்ணத்துடன் அனைத்து அணிகளின் தலைவிகள்


மகளிர் உலகக் கிண்ணப்போட்டிகள் ஆரம்பிக்கு முன்னர் பதிவிட வேண்டும் என்று ஆரம்பித்து பல்வேறு வேலைகள் காரணமாக அரை இறுதிகள் ஆரம்பிக்க இருக்கும் நேரத்தில் தான் பதிவுக்காக வருகிறது இந்த மகளிர் உலகக் கிண்ண தொகுப்பு...

எனினும் ஆண்கள் உலகக் கிண்ணப்போட்டிகள் போலல்லாமல் இதில் எதிர்பார்த்ததைப் போலவே எல்லாப் போட்டிகளின் முடிவுகளும் இதுவரை நடந்திருக்கின்றன.. (ஆண்கள் போட்டிகளில் பல முடிவுகள் அதிர்ச்சியாக அமைந்து நம்ம மூக்குகளை உடைத்து இருக்கின்றன)

பெண்கள் கிரிக்கெட் கூடுதல் பிரபல்யம் அடையத் தொடங்கியது 2000ம் ஆண்டுக்குப் பிறகே!

எனினும் ஏனைய பெண்கள் விளையாட்டுக்களைப் போல கவர்ச்சி விடயத்தில் இறுக்கமான கொள்கைகள் கொண்டிருந்ததால் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை போலும்.

குறிப்பாக ஆசியாவில் ஆண்கள் கிரிக்கெட் அடைந்த பிரபல்யத்தின் கால் பங்களவு கூட மகளிர் கிரிக்கெட் பெறவில்லை.

பாகிஸ்தானிய, இலங்கை மகளிர் அணி இன்னமும் குறைமாதக் குழந்தைகள் போவவே இருக்க, மிதாலி ராஜ், ஜீலான் கோஸ்வமி, அஞ்சும் சோப்ரா போன்ற வீராங்கனைகள் மூலம் இந்திய அணி அண்மைக்காலத்தில் பெற்று வரும் வெற்றிகள் இந்தியப் பெண்கள் அணியை உலகில் கூர்ந்து கவனிக்கப்படும் அணிகளுள் ஒன்றாக மாற்றியுள்ளது.

அண்மையில் கூட அவுஸ்திரேலியாவில் 8 நாடுகள் பங்குபற்றிய உலகக கிண்ணப்போட்டிகள் நடந்து முடிந்திருந்தன. எனினும் ICC எனப்படும் சர்வதேச கிரிக்கெட் பேரவை பெண்கள் கிரிக்கெட்டை பிரபல்யப்படத்தவும், சந்தைப்படுத்தவும் எடுத்திருக்கும் சரியானதொரு தருணமும் களமும் தான் இங்கிலாந்தில் நேற்று ஆரம்பமாகியுள்ள மகளிர் Twenty 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர்.

உலகக்கிண்ணத்தில் பங்கேற்ற அதே 8 அணிகள் - 9 நாட்களுக்குள் போட்டிகள் நிறைவடையும். ஆனால் இதில் முக்கியமான விஷயம் ஆண்களின் அரையிறுதிகளும், இறுதிப்போட்டியும் இடம்பெறும் அதே நாளில், அதே மைதானங்களில் முதல் போட்டியாகப் பெண்களின் போட்டியும் இடம்பெறவுள்ளன.

இதன் மூலம் அதிகளவில் கிரிக்கெட் மகளிரும் கவனிக்கப்படவுள்ளன.

மார்ச் மாதம் இடம்பெற்ற மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் தொலைக்காட்சி மூலமாக ரசித்துள்ளார்கள்.

இதிலே சிறப்பம்சம் இதுதான். மகளிருக்கான முதலாவது T 20 உலகக்கிண்ணம்!

பங்குபற்றும் 8 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பிரிவு A : அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள்

பிரிவு B : இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்



இவற்றிலே நடப்பு உலகச் சாம்பியனும், போட்டிகளை நடத்துகின்ற நாடுமான இங்கிலாந்தே அதிக வாய்ப்புள்ள நாடாகக் கருதப்படுகிறது.

உலகின் சிறந்த தலைவிகளில் ஒருவராகக் கருதப்படும் சார்லட் எட்வர்ட்ஸின் அணியில் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை கிளயர் டெய்லர் மற்றும் உலகக்கிண்ணப் போட்டிகளில் கூடுதல் விக்கெட்டுக்களை வீழ்த்திய லோரா மார்ஷ் என்று இங்கிலாந்து அணி ஒரு சூப்பர் லேடிஸ் அணி.


இங்கிலாந்து அணியின் தலைவி சார்லட் எட்வர்ட்ஸ்

BIG 4 என்ற பலமான நான்கு பெண்கள் அணிகளும் இலகுவாக அரையிறுதிகளும் நுழையும் என எதிர்ப்பார்க்கலாம். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா இந்த நான்கு அணிகளுக்கும் ஏனைய நான்கு அணிகளுக்குமிடையேயான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் போல – (இதனால் தான் அரையிறுதிப் போட்டிகளுக்குப் பிறகே – தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் செய்ய முடிவெடுத்தார்களோ? )

அழகிய அணி என்றழைக்கப்படும் அவுஸ்திரேலிய மகளிர் அணியும் தம் நாட்டின் ஆண்கள் அணி போல டெஸ்ட், ஒரு நாளில் பிரகாசித்தாலும் T 20 போட்டிகளில் பெரிதாக சோபிப்பதில்லை. (நியூசிலாந்தை 3 போட்டிகள் கொண்ட தொடரில் அண்மையில் வென்றதை தவிர)

முன்னாள் உலகச்சம்பியன்கள் தம் சொந்த மண்ணில் வைத்தே தமது பரம வைரிகளிடம் இவ்வாண்டின் ஆரம்பத்தில் பட்டத்தை இழந்ததனால் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தோடு இம்முறை களமிறங்கி இருக்கிறது.

அவுஸ்திரேலியா அணியின் உப தலைவி லீசா ஸ்தலேகர்

நியூசிலாந்து மகளிர் துரிதமாக முன்னேற்றமடைந்த அணிகளுள் ஒன்று! மார்ச் மாதம் நடந்த உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை, வந்த உற்சாகத்துடன் இம்முறை T 20 உலகக்கிண்ணத்தில் குறிவைத்துள்ளது.

முதலாவது T 20 பெண்கள் சாம்பியனாக நியூசிலாந்து பெண்கள் வந்தால் ஆச்சரியப்படவேண்டாம்.

இன்னொரு விஷயம் - 2வது அழகான அணியாக பலரால் வர்ணிக்கப்படும் அணி இது

தென் ஆபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவு மகளிர் அணிகள் இரண்டுமே பெரிதாக அச்சுறுத்தக்கூடிய அணிகள் அல்ல. தோல்விகளையே சந்தித்துப் பழக்கமானவை.

தென் ஆபிரிக்க மகளிர் அணி

எனினும் மேற்கிந்தியத்தீவுகள் 'பெரியவை' நான்கை விட எஞ்சிய நான்கு அணிகளில் சிறந்தது எனலாம்.
முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷெர்வின் காம்பலின் பயிற்றுவிப்பில் அனுபவம் குறைவான எனினும் துடிப்பான அணி.


அடுத்த பிரிவில் மூன்று ஆசிய அணிகளும் இங்கிலாந்தும் ..


இந்திய மகளிர் அணி இளமையும் அனுபவமும் பொங்கி வழியும் ஒரு அற்புத கலவை. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலகக்கிண்ணத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்;தி அரையிறுதிகளுக்குள் வந்த அணி.

தமது நாட்டின் ஆண்கள் அணிபோலவே ( 2007 ) முதல் தடவையாக இடம்பெறும் T 20 உலகக்கிண்ணத்தை வென்றெடுக்க முழுப்பிரயத்தனத்தை எடுப்பார்கள். ( இம்முறை தோனி குழுவினர் சொதப்பியது போல இந்த மங்கையர் சொதப்பமாட்டார்கள் என்று நம்பலாம் )

மிகப்பலவீனமான அணியாகக் கருதப்படும் பாகிஸ்தான் மிக இளமையான அணிகளுள் ஒன்று. உலக்ககிண்ணப்போட்டிகளில் பல அணிகளையும் ஆச்சரியப்படுத்தி 6ம் இடம் பிடித்தது.


இறுதியாக இலங்கை அணி..
T 20 போட்டிகளை முதல் தடவை இலங்கைப் பெண்கள் விளையாடியதே இப்போதுதான்.

புதிய அணி – புதிய தலைவி.

உலகக்கிண்ணப் போட்டிகளில் ஒரு போட்டியில் தானும் வெல்ல முடியாத அணி. இம்முறை பாகிஸ்தானியப் பெண்களை முதல் போட்டியில் தோற்கடித்து உற்சாகமடைந்திருக்கிறது.

எனினும் ஆஸ்திரேலியாவில் கண்ட படு மோசமான தோல்விகள் அடுத்தும், சில ஒழுக்க பிரச்சினைகள் தொடர்பாகவும் முன்னாள் தலைவி உட்பட சிரேஷ்ட வீராங்கனைகள் மூவர் நீக்கப்பட்ட்டதன் தாக்கம் இன்னமும் அணியில் தெரிகிறது.

நேற்றைய போட்டிகளுடன் அரை இறுதிப் போட்டிகளுக்கான நான்கு அணிகளும் உறுதியாகி இருக்கின்றன,.. எதிர்பார்க்கப்பட்ட நான்கு அணிகளுமே அரை இறுதியில் மோதவுள்ளன..

இந்தப் போட்டிகளை பார்க்கக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆண்கள் அரை இறுதிப் போட்டிகளுக்கு முன்னர் இவை நடைபெறும்.

உங்கள் ஜென்ம சாபல்யத்துக்காக படங்களையும் தேடி எடுத்து தந்திருக்கிறேன்..
நன்றி CRICINFO

என்ன தான் கவர்ச்சி இல்லாவிட்டாலும், அழகாக ஆடினாலும், ஆண்கள் கிரிக்கெட் போல வேகமும் சுவாரஸ்யமும் கொஞ்சம் பெண்கள் ஆட்டத்தில் குறைவு என்பதே என் கருத்து..

ஆனாலும் இம்முறை சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள ஆக்கபூர்வமான அக்கறை மூலமாக பெண்கள் கிரிக்கெட் பிரபல்யமாக அமையும் என்று எதிர்பார்ப்போம்.


(இன்று மாலை இடம்பெறும் கிளைமாக்ஸ் ஆட்டத்துக்காகக் காத்திருக்கிறேன்.. நான்க்கவது அரை இறுதி அணியாக இலங்கை உள்ளே நுழையும் என்பதே எனது நம்பிக்கை.. தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள்,பாகிஸ்தானுடன் இலங்கையும் அரை இறுதி சென்றாலே திறமைக்கான தகுந்த பரிசு வழங்கப்பட்ட திருப்தி..)


Post a Comment

11Comments

Please Select Embedded Mode To show the Comment System.*