கொஞ்சநாளாகவே இருந்த சூழ்நிலைகள், மன உளைச்சல்கள், வேதனைகளாலும், மேலதிக வேலைப்பளுவினாலும் பதிவு போடுவதைப் பற்றி நினைக்கவே முடியவில்லை.
(ஆனாலும் இன்னும் பல நண்பர்கள் IPL தொகுப்பு, T 20 உலகக்கிண்ண முன்னுரை, ஆய்வு என்று பதிவுகள் இட்ட நேரம் கைகளும் மனதும் குறுகுறுத்ததை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.)
கொஞ்ச நாளாவது கிரிக்கெட் பற்றிப்பதிவு போடாமல் இருக்கலாமேன்னு பார்த்தால் விடுறாங்களா?
Twenty 20 உலகக்கிண்ணப்போட்டிகள் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஏதாவது அதிசயங்கள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள்!
IPL தென்னாபிரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் போதே, T20 உலகக் கிண்ணப்போட்டிகள் பற்றிய அலசல்கள், ஆரூடங்கள், ஆராய்ச்சிகள் எல்லாம் ஆரம்பித்தாயிற்று!
எல்லோரைப் போலவே நானும் நடப்பு சாம்பியன் இந்திய அணிக்கே இம்முறையும் வெற்றிக்கான வாய்ப்பை கருதினேன்.
இரண்டாவதாகத் தென் ஆபிரிக்காவையும், மூன்றாவதாக அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையையும் கருதியுள்ளேன். எமது வானொலியின் 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியிலும் இதுபற்றிக் குறிப்பிட்டு வைத்துள்ளேன்.
எனினும் உலகக் கிண்ணங்களைத் தம் அணிகளுக்கு வென்று கொடுத்த இரண்டு அணித்தலைவர்கள் Twenty 20 பற்றி - உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் முன் சொன்ன விடயங்கள் இவை.....
இம்ரான் கான் - பாகிஸ்தான்
இந்த Twenty 20 வகை போட்டிகளை நான் பார்ப்பதே இல்லை. குருட்டு அதிர்ஷ்டம் வாய்ந்த போட்டிகள் இவை.
அர்ஜீன ரணதுங்க - இலங்கை
லொத்தர்ச் சீட்டிழுப்பு போட்டிகள் இவை. அதிர்ஷ்டமும் ஓரிரு ஓவர்களில் போட்டியின் முடிவே மாறிவிடும். வேண்டுமானால் பாருங்கள் நாளை நடைபெறவுள்ள (June 5) போட்டியில் எனது அபிமான இங்கிலாந்து வெற்றி பெற 60வீத வாய்ப்புக்களும், நெதர்லாந்து வெற்றி பெற 40வீத வாய்ப்புக்களும் உள்ளன.அந்த நாளில் இருக்கும் அதிர்ஷ்டத்தில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம்.
இவர்கள் சொன்னதில் சில பல உண்மைகள் இருக்கின்றன.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் அணி சார்ந்தவையாக, அணி ஒற்றுமையே வெற்றிக்கு வழியிட்டாலும் இந்த 20 ஓவர்கள் போட்டியில் தனியொரு வீரரின் திறமை போட்டியின் முடிவை மாற்றும் போதும் ஒரு ஓவரில் விளாசப்படும் ஓட்டங்கள், வீழ்த்தப்படும் விக்கெட்டுக்கள், தவறவிடப்படும் பிடிகள் என்பன திடீரென போட்டியின் போக்கையே மாற்றிவிடும் என்பது உண்மைதான்!
எனினும் விரைவுபடுத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் வேகத்துக்கு ஈடுகொடுத்து வியூகம் வகுத்து சவாலை எதிர்கொள்வது திறமைதானே!
அர்ஜீன சொன்னதை நிரூபிப்பது போல முதல் போட்டியிலேயே போட்டிகளை நடாத்துகின்ற நாடான இங்கிலாந்து – பகுதி நேர கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட கற்றுக்குட்டி அணியான நெதர்லாந்திடம் தோற்றுப்போனது!
இங்கிலாந்து தோற்றுப் போனது நெதர்லாந்தின் குருட்டு அதிர்ஷ்டத்தாலா?
இல்லவே இல்லை என அடித்துக் கூற முடியும்.
முதலில் இறுக்கமான பந்துவீச்சால் இங்கிலாந்தைக் கட்டிப்போட்டு எந்தவொரு சிக்ஸரும் அடிக்கவிடாமல் செய்த பின்னர் சிக்ஸர்களை வெளுத்து வாங்கிய நெதர்லாந்து வென்றது நியாயம் தானே?
எளிதாக வென்றுவிடலாம் என்ற அளவுகடந்த தன்னம்பிக்கையோடு முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விளையாடிய இங்கிலாந்தின் தலைக்கனத்துக்கு கிடைத்த மரண அடியே அந்த நெதர்லாந்தின் ஆச்சரியமான வெற்றி.
அதைத் தொடர்ந்து வந்த அடுத்த அதிர்ச்சி அவுஸ்திரேலியா அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் கொடுத்த மரண அடி..
அப்படி ஒரு தோல்வியை ஆஸ்திரேலியா எதிர்பார்த்தே இருக்காது.
பயிற்சி ஆட்டங்களில் மிகப் பலமான அணியாகத் தெரிந்த ஆஸ்திரேலியாவா இது? நம்ப முடியவில்லை..
பிரிவு C இல் இடம்பெற்ற மூன்று அணிகளுமே பலமானவையாகத் தெரிந்தாலும் ஆஸ்திரேலியா,இலங்கை ஆகியன அடுத்த சுற்றுக்கு செல்லும் என்றே நானும் நம்பி இருந்தேன்.
நேற்று இலங்கை அணி கொடுத்த அடியோடு ஆஸ்திரலிய அணி வெளியேறியுள்ளது.
சங்கக்கார இலங்கை அணியின் தலைவராக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே தலைவராக தனது முத்திரையைப் பதித்தது சிறப்பம்சம்.
அத்துடன் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் அவரே தெரிவானார்.
(தோனியின் வழியில் மற்றொரு விக்கெட் காக்கும் தலைவர்???)
ஒரு உலகக் கிண்ணப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி முதல் சுற்றோடு வெளியேறுவது பதினெட்டு ஆண்டுகளில் இதுவே முதல் தடவை.
அவுஸ்திரேலியா அணி தனது Twenty 20 அணுகுமுறை பற்றி சீரியஸாக சிந்திக்கவேண்டிய தருணம் வந்துள்ளது என்று நினைக்கிறேன்.
பாகிஸ்தானிய அணிக்கும் காலம் சரியில்லை.. இங்கிலாந்து வெளியேறும் போலிருந்த நிலை இப்போது பாகிஸ்தானுக்கு.. இன்று நெதர்லாந்துடன் வாழ்வா சாவா போராட்டம்..
24 ஓட்டங்களால் அல்லது இலக்கை 17 ஓவர்களில் பெற்றால் மாத்திரமே பாகிஸ்தானுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு உள்ளது..
பங்களாதேஷ் அணியும் இந்தியாவில் தாம் வெல்வோம் என்ற கனவுக் கோட்டை தகர்ந்து நேற்று வெளியேறியுள்ளது.
அயர்லாந்தையே வெல்ல முடியாத இவர்கள் இந்தியாவில் வெல்வதாக ஜம்பம் அடித்தது சிரிப்போ சிரிப்பு...
பார்க்கப்போனால் இப்போது பலமாக எஞ்சி இருப்பது இந்தியா, தென் ஆபிரிக்கா, இலங்கை, நியூ சீலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன மட்டுமே.. இன்றிரவு நெதர்ந்லாந்தா அல்லது பாகிஸ்தானா என்பது தெரிய வந்து விடும்...
வழமையாக இப்படியொரு தருணம் என்றால் பாகிஸ்தான் போராடி வெல்ல முயற்சிக்கும் என்பது உறுதி,,
ஆனால் நானும் பாகிஸ்தான் அணியிடம் எந்தவொரு ஆக்ரோசத்தையோ, போராட்ட குணத்தையோ காண முடியவில்லை...
இன்று போட்டிகளை பார்த்த பிறகு இன்னும் சில முக்கிய,சுவாரஸ்ய விஷயங்களை நாளை பதிவிடுகிறேன்.