November 20, 2011

விட்டதெல்லாம் சேர்த்து - கிரிக்கெட்டெல்லாம் கோர்த்து


பத்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் மும்முரமாக டெஸ்ட் போட்டிகள் விளையாடி வந்த வேளையில் ஒரு கிரிக்கெட் பதிவு கூட என்னிடம் இருந்து இல்லையே என்று உங்களில் எத்தனை பேர் ஆச்சரியப்பட்டீர்களோ?

அது தான் வாழ்க்கை போலும்..
எழுதவேண்டும் என்று யோசிப்பேன் ஆனால் ஏதாவது ஒரு வேலை.. அல்லது அலுப்பு..
மற்றும் அதிகரித்த கிரிக்கெட்..

இந்த இரு மாத காலங்களில் கிரிக்கெட் உலகை அவதானித்தால் சில முக்கிய விடயங்கள் புலப்படும்....

இந்திய, இங்கிலாந்து அணிகளின் சொந்த மண் ஆதிக்கம்..
பாகிஸ்தான் மிஸ்பாவின் தலைமையில் மீண்டும் ஒரு உறுதியான அணியாக எழுந்து வருவது..
இலங்கை அணியின் தொடர் சரிவு
மேற்கிந்தியத் தீவுகள் அணி தன்னைக் குறைந்தபட்சம் ஒரு சராசரி அணியாகவாவது மாற்றிக்கொள்ளப் போராடி வருவது
சிம்பாப்வே அணியின் டெஸ்ட் மீள்வருகையும் அவர்களின் அணித் தலைவர் பிரெண்டன் டெய்லர் தனியொரு போராளியாக நிற்பதும்
ரொஸ் டெய்லரின் தலைமையில் நியூ சீலாந்து புதியவர்களையும் இணைத்து ஒரு பலமான அணியாக மாற முயற்சிப்பது
தென் ஆபிரிக்கா தா விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்ற எடுக்கும் புதிய தலைமைத்துவ வியூகங்கள்
ஆஸ்திரேலிய அணியின் சரிவும் அதை மீட்க எடுக்கப்படும் முயற்சிகளும், மூத்த veerargalin மீதான அழுத்தமும்


இந்தியா இங்கிலாந்துக்கு சென்று ஒரு போட்டியையும் வெல்ல முடியாமல் படு தோல்வியுடன் நாடு திரும்பிய வேளையில் எல்லோரிடமும் இருந்த ஒரு எண்ணம் - இந்தியா வழமை போல வெளிநாட்டு மண்ணில் ஸ்விங்கும், எகிறும் பந்துகளுக்கு தடுமாறுகிறது.. அது தெரிந்ததே..
ஆனால் இங்கிலாந்து உலகின் மிகப் பலமான டெஸ்ட் அணியாகிவிட்டது & பலம் வாய்ந்த ஒருநாள் அணியாகவும் மாறிவருகிறது.

ஆனால் இங்கிலாந்து இந்தியா வந்த வேளையில் இரு பக்கமும் காயங்கள் காரணமாக நட்சத்திரங்கள் இல்லாத நிலையில் இந்தியா இங்கிலாந்தைத் துவைத்துத் தொங்கப்போட்டு மீண்டும் கிரிக்கெட் உலகைக் குழப்பி விட்டது.
இந்தியாவிடம் உள்ள புதிய கிரிக்கெட் வளமும், அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்ககளை இப்போதைக்கு ஓய்வு பெறச் சொல்லத் தேவையில்லை என்பதையும் மட்டுமன்றி, உள்நாட்டில் இந்தியாவில் அசைத்துப் பார்க்க (டெஸ்ட் போட்டிகளிலுமா என்பதை அடுத்த தொடர் தான் சொல்லவேண்டும்) இன்னொரு அணி இப்போதைக்கு இல்லை என்பதையும் இந்தியா காட்டிவிட்டது.

முரளியின் ஓய்வோடு இலங்கை அணியின் சரிவு என்று பலர் புலம்புவதை அவதானித்து வந்திருக்கிறேன்..
ஆனால் முரளியை மட்டுமல்ல, இலங்கை மிக முக்கியமாக சமிந்த வாசையும் இழந்து தவிக்கிறது.
முரளியின் ஓய்வுக்குப் பிறகு விக்கெட்டுக்களை டெஸ்ட் போட்டிகளில் எடுப்பது மிக சிரமமாகியுள்ளது மட்டுமன்றி, போட்டிகளில் தோல்வியடையாமல் தப்பவாவது துடுப்பாட்ட வீரர்களின் பெரிய பங்களிப்பையும் இலங்கை தேடுகிறது.

சங்கக்கார தவிர மிச்ச எல்லோருமே ஒட்டுமொத்தமாக formஐ இழந்துவிட்டார்களோ என்ற ஒரு ஐயம்.
ஒரு நாள் போட்டிகளாக இருந்தால் லசித் மாலிங்க மட்டுமே சரணம்.

கிரிக்கெட் சபைக் குழப்பங்கள் தேர்வாளரின் குழப்பங்கள் அணிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்ததை பாகிஸ்தான், இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் மிக சமீபமாக ஆஸ்திரேலிய அணிகளின் வரலாறுகள் சொன்னதைப் போல இலங்கை அணியும் இவ்வாறே தான்.
ஆனாலும் இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னர் இலங்கை அணியைப் புறக் காரணிகள் பெரிதாகப் பாதித்திருக்கவில்லை; ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.

வெற்றி பெறுவது எப்படி என்று அணிக்கு மறந்து போயுள்ளது. போராடத் தெரியவில்லை.
வெற்றி பெறவேண்டிய போட்டிகளை இலகுவாக எதிரணிக்குத் தாரை வார்க்கிறது.

அணிக்குள் மாற்றங்கள் கொண்டுவர முதல்,  முதலில் அணியின் மனோநிலையை மாற்றவேண்டும்.இதற்கு என்னைப் பொருத்தவரை டில்ஷானுக்குப் பதிலாகப் பொருத்தமானவர் ஒருவரை அணித்தலைவராகக் கொண்டுவருதல் முக்கியமானது.
அஞ்சேலோ மத்தியூஸ் அந்த இடத்துக்குப் பொருத்தமானவர் என்று இன்னும் நிரூபித்ததாக இல்லை.
பூரண உடற்தகுதியும் இல்லை; பொறுப்புணர்ந்து நேரத்துக்கேற்றது போல துடுப்பெடுத்தடுவதும் இல்லை.
உதாரணம் - நேற்றைய ஒருநாள் போட்டி.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் (சதம் பெற்ற நிலையில்) இவ்வாறு தான் நடந்தது.

சங்கக்கார மட்டும் ஓட்டங்கள் குவித்து இலங்கை வெல்லப் போவது நடக்காது. அது அவர் மேல் அதிக அழுத்தங்களை ஏற்றி சங்காவையும் விரைவில் வெறுத்துவிட வைக்கப் போகிறது.

இங்கிலாந்தில் இந்தியாவின் டிராவிட் எவ்வாறு தனிநபராக நின்று ஓட்டங்களை மலையாகக் குவித்துப் போராடினாரோ, அதே போலத் தான் மத்தியகிழக்கின் தகிக்கும் வெயிலில் சங்கக்காரவும் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனித்துப் போராடவிடப்பட்டார்.

சங்கா மூன்று டெஸ்ட், ஐந்து இன்னிங்சில் 516 ஓட்டங்கள்..
(இலங்கை வீரர் ஒருவர் ஒரு டெஸ்ட் தொடரில் ஐநூறு ஓட்டங்கள் கடந்த மூன்றாவது சந்தர்ப்பம் இது)
இலங்கைக்குத் தான் மூன்று டெஸ்ட் போட்டிகளை விட அதிக டெஸ்ட் போட்டிகள் ஒரு தொடரில் தரப்படுவதே இல்லையே.
டிராவிட் நான்கு டெஸ்ட், எட்டு இன்னிங்சில் 461 ஓட்டங்கள்..

வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன், இயன் பெல் ஆகியோர் ஐந்நூறு ஓட்டங்களைக் கடந்திருந்தார்கள்.

அண்மைக்காலத் தொடர்கள் எல்லாவற்றிலும் காணப்படும் இந்த அதிசய ஒற்றுமை, ஒவ்வொரு அணியினதும் முதுகெலும்புகள் போன்ற துடுப்பாட்ட வீரர்கள் எல்லாப் போட்டியிலுமே திடமாக, தனியாக நின்று ஓட்டக் குவிப்பில் அசத்துவது...
இலங்கையில் வைத்து மைக்கேல் ஹசி, அதன் பின் சங்கா, டிராவிட், பெல், பீட்டர்சன், இப்போது இந்தியாவில் சந்தர்போல் மற்றும் 'புதிய லாரா' டரன் ப்ராவோ, இவர்களுடன் என்றும் இளமையுடன் இன்றும் வலம் வரும் டிராவிட் + லக்ஸ்மன்.

தென் ஆபிரிக்காவிலும் அம்லா, டீ வில்லியர்ஸ் மற்றும் ஷேன் வொட்சன்.
சங்கா, டிராவிட், கலிஸ், லக்ஸ்மன் , ஹசி, சந்தர்போல் போன்ற வீரர்களைப் பார்க்கையில் ஒரு விஷயம் தெளிவாகிறது.

தொடர்ந்து ஓட்டக் குவிப்பில் ஈடுபடும் இவர்கள் அணியின் தேவையறிந்து தங்களை அந்த விதமாக அர்ப்பணிக்கிறார்கள்.
இளையவர்கள் வந்தும் இவர்களின் இடங்களை நிரப்ப முடியவில்லை என்பதும், Twenty 20 வடிவங்கள் வந்தும் இவர்கள் அவற்றிலும் தம்மை நிரூபித்துள்ளார்கள் என்பதும் முக்கியமானவை.

இன்னொன்று, இதுவரை சர்ச்சைகளும், சண்டைகளும், பிரச்சினைகளும், பதவி சிக்கல்களும் இவர்களை சுற்றியதும் இல்லை; இவர்களும் இடம் தான் துண்டு போட்டாச்சே என்று பயிற்சியும் முயற்சியும் இல்லாமல் இருந்ததும் இல்லை.

இனின் வரும் இளைய வீரர்களுக்கு இவர்கள் தான் முன்மாதிரிகள்.

ஆனால் இந்த வரிசையில் இருந்தவரும் இப்போது தன் இடத்தை நிலை நிறுத்தத் தடுமருபவருமான ரிக்கி பொன்டிங் தென் ஆபிரிக்காவில் ஆடவுள்ள இறுதி இன்னிங்க்ஸ் சில வேளை அவரது இறுதி டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆகலாம்.
பாவம் பொன்டிங்.




இந்த வருடத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் தன்னை நிலைநிறுத்திய மிகச் சிறந்த இளைய துடுப்பாட்ட வீரராக டரன் ப்ராவோ மிளிர்கிறார்.
லாராவை ஞாபகப்படுத்தும் துடுப்பாட்டப் பிரயோகங்கள், நிதானமும் அதிரடியும் கலந்த அணுகுமுறை, தொடர்ச்சியாகக் கலக்கி வரும் பக்குவம் என்று நீண்ட காலம் நிற்பார் போலத் தெரிகிறது.


இன்னும் ஒரு மேற்கிந்தியத் தீவுகளின் நம்பிக்கை நட்சத்திரம் கேர்க் எட்வேர்ட்ஸ்.
தொடர்ச்சியாக சிறப்பாக செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவின் ஷோன் மார்ஷ் அடுத்த டெஸ்ட் புதுமுகம். காயத்திலிருந்து அடுத்த தொடரில் மீள்வார் என நம்பலாம்.

அதே போல பந்துவீச்சில் பல இளையவர்கள் கைதூக்கிக் காட்டியுள்ளார்கள்.
மிக அண்மையாக அறிமுகப் போட்டியிலேயே 9 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்திய புது மாப்பிளை ரவிச்சந்திரன் அஷ்வின்.

மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் போட்டியிலேயே அசத்தினாலும் காயத்தினால் அடுத்த போட்டியில் விளையாட முடியாது போன எலியாஸ் சனி, இந்தியாவில் வைத்து இதுவரை பெரிதாக செய்துகாட்ட முடியாது இருக்கும் தேவேந்திரா பிஷூ, இந்தியாவின் புதிய வேகப்பந்து கண்டுபிடிப்பு உமேஷ் யாதவ், தென் ஆபிரிக்காவின் அறிமுக அசத்தல் வேர்னன் பிலாண்டர், ஆஸ்திரேலியாவின் டீன் ஏஜ் அதிசயம் பட் கமின்ஸ் என்று பலர் வந்துள்ளார்கள்.

பாவம் இலங்கைப் பக்கம் தான் யாருமே புதிதாக இல்லை.

பாகிஸ்தானில் துடுப்பாட்டப் பக்கமாக டெஸ்ட் அரங்கில் ஹபீஸ், தௌபீக் உமர, அசார் அலி என்று இளையவர்கள் நிதானிப்பதையும், மீண்டும் உமர் குல், சயீத் அஜ்மல் எல்லா விதமான போட்டிகளிலும் விக்கெட்டுக்களை எடுக்க ஆரம்பித்திருப்பதும் அவமானங்கள், பின்னடைவுகளின் மத்தியிலும் பாகிஸ்தானுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருப்பதைக் காட்டுகிறது.

ஆனால் கூடவே ஒரு கேள்வியுடன்..
மீண்டும் எப்போது இவை அனைத்தும் குலையும்?

இலங்கையின் மீது இப்போதைக்குப் பெரிதாக நம்பிக்கையில்லை.

இந்தியா மும்பாயில் தெரிவு செய்யும் அணி பற்றிய ஆர்வம் அதிகமாகவே உள்ளது.
எதிர்காலம் கொஹ்லியா? அல்லது மும்பாய் மைந்தன் ரோஹித் ஷர்மாவா?
புதிதாக வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் விளையாடுவாரா ?

மிக முக்கியமாக சச்சினின் நூறாவது சதம் அவரது சொந்த ஊரிலே, அவரது ரசிகர்களுக்கு முன்னால் கிடைக்குமா?
உலகக் கிண்ணத்தை மும்பையிலே வென்று ஜென்ம சாபல்யம் கண்டது போல இதுவும் நடக்குமா?

ஆனால் சச்சின் நூறாவது சதத்தை மும்பையிலே பெற்றால் நூறு பொற்காசுகள் என்பது போல அபத்தம் வேறு ஏதும் கிடையாது.

தன் மீதான அழுத்தங்கள் அதிகரிப்பதையும் அது ஆஸ்திரேலியா வரை தொடர்ந்தால் அணியையும் பாதிக்கும் என்பதையும் தவிர்க்கவாவது சச்சின் மும்பையில் சதம் பெற்றால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

இன்று வரை,
இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் கூடுதலான ஓட்டங்களைக் குவித்துள்ள துடுப்பாட்ட வீரர்கள்....
http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=1;spanmax1=19+Nov+2011;spanmin1=1+Jan+2011;spanval1=span;template=results;type=batting

இந்த வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் கூடுதலான ஓட்டங்களைக் குவித்துள்ள துடுப்பாட்ட வீரர்கள்....
http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=2;spanmax1=19+Nov+2011;spanmin1=1+Jan+2011;spanval1=span;template=results;type=batting 


டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியோர்
http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=1;spanmax1=19+Nov+2011;spanmin1=1+Jan+2011;spanval1=span;template=results;type=bowling


ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியோர்
http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=2;spanmax1=19+Nov+2011;spanmin1=1+Jan+2011;spanval1=span;template=results;type=bowling




சச்சின் நூறாவது சதம் அடிக்கட்டும்.. அடுத்த கிரிக்கெட் பதிவில் சந்திக்கலாம்.



4 comments:

Unknown said...

நல்ல ஒரு பதிவு வேலை பதிவுகளிடையே தெரிகிறது. பதிவு விரைவாகவே முடிந்து விடுகிறது

வந்தியத்தேவன் said...

//சச்சின் நூறாவது சதம் அடிக்கட்டும்.. அடுத்த கிரிக்கெட் பதிவில் சந்திக்கலாம்.//

ஹாஹா நல்லதொரு பதிவை கடைசி வரியின் மூலம் சீரியசாக்கிவிட்டீர்கள். சச்சினின் நூறாவது சதம் இப்போதைக்கு இல்லை...

யோ வொய்ஸ் (யோகா) said...

மிகப் பெரிய பதிவு. ஆனால் வழமையான லோஷனின் பதிவுகளை போன்றல்லாமல் பல விடயங்களை தொட்டு மட்டும் சென்றிருக்கிறீர்கள்...

Mohamed Faaique said...

///மத்தியகிழக்கின் தகிக்கும் வெயிலில் சங்கக்காரவும் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனித்துப் போராடவிடப்பட்டார்.///

அண்ணா... இது குளிர் காலம்....

உங்கள் கிரிக்கட் பதிவை பார்த்ததில் சந்தோசம்.. நன்றி

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner