November 07, 2011

கமல்ஹாசன் - உள்ள நாயகன்

கமல்ஹாசன்....
எனது ஆதர்ச நாயகன்.. .  எனது அபிமானத் திரை நாயகன்..

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒவ்வொரு role modelகள், முன்மாதிரிகள் இருப்பார்களே.. எனக்கு அது போல இருக்கும் பல role modelகளில் சிறுவயது முதல் மாறாமல் ஆழப் பதிந்து தாக்கத்தை உருவாக்கிய ஒருவர் கமல்.(ஒவ்வொரு துறைகளில் ஒரு பிடித்தவர் இருப்பாரே அதைச் சொன்னேன்.. அவர்கள் என் மானசீக வழிகாட்டிகள்/குருக்கள்)எனக்கு(ம்) பிடித்த கமலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கலைத் துறை, ஊடகத் துறையில் சிறுவயது முதல் கொண்ட ஆர்வம், தேடலும் கூட அதற்கான காரணமாக இருக்கலாம்.
ஆனால் சினிமா என்பதைப் பார்த்து ரசிப்பதோடு, சில விஷயங்களை அதனூடாகத் தேடி அறிந்து கொள்ளும் உசாத்துணையாகக் கொள்வதோடு நின்றுவிட வேண்டும்; வாழ்க்கையை அதற்குள் தொலைத்துவிடக் கூடாது என மனதார நம்பும், மற்றவருக்கு முடிந்தளவு எடுத்துக் கூறி வரும் எனக்கு கமலைப் பிடித்த அளவு வேறு எந்தக் கதாநாயக நடிகரையும் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக இந்தளவு ஆழமாகப் பிடிக்கவில்லை.

இது ஆச்சரியமான விடயமே இல்லை.

கமல் ஒரு சகலதுறையாளன். தனியே ஒரு சாகசக் காரனாக, எப்போதும் ஒரு திரைப்படத்தின் இறுதியில் வில்லன்களை அடித்து வீழ்த்தி வெற்றிகளையே சுவைக்கும் ஒரு அசாதாரண, ஆச்சரியமான, கற்பனை நாயகனாக இல்லாமல் எம்மைப் போல உணர்ச்சிகள் நிறைந்த, வாழ்க்கையில் தோல்விகளையும் சோகங்களையும் காணுகின்ற சாதாரண மனிதராகவும் சிறுவயது முதல் கமலைத் திரையில் பார்த்தது இதற்கான முக்கியமான காரணமாக இருக்கலாம்.ஆனால் இன்று வரை கமலின் புகைப்படங்களை வைத்துப் பூசை செய்து பக்தனாகவோ , கமல் செய்வதை எல்லாம் அப்படியே பின்பற்றி ஒரு அடிமையாகவோ, கமல் பற்றித் தப்பாகக் கதைத்த யாரோ ஒருவருடன் சண்டை பிடித்து வெறியனாகவோ நான் நடந்து கொண்டது கிடையாது.
அதில் இன்று வரை மிகத் தெளிவாகவே இருந்து வருகிறேன்.

கமலின் சில படங்கள், அவரது சில கருத்துக்கள், அவரது வாழ்க்கை நடைமுறைகள் பற்றி எழுகின்ற விமர்சனங்களை விமர்சனங்களாகவே பார்ப்பதுண்டு.
கமல் எனக்குப் பிடிக்கும் என்பதால் விமர்சனங்கள் எனக்கு எதிரானவை என்றும், விமர்சிப்போர் என் எதிரிகள் என்றும் நான் எண்ணியது/எண்ணுவது கிடையாது.
ஆனாலும் கமலைப் பிடிக்கும்..

எனக்கு நினைவு தெரிந்த வயதில் முதலில் பார்த்த கமல் படம் எதுவென்று நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துப் பார்க்கிறேன்..
மூன்றாம் பிறை?? சலங்கை ஒலி?? வாழ்வே மாயம்?? அவர்கள்? இளமை ஊஞ்சலாடுகிறது? நீயா??
சரியாக ஞாபகம் இல்லை.

ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில் பார்த்திருந்த மற்ற எல்லாக் கதாநாயகர்களை விடவும் எதோ ஒரு வித்தியாசம் கமலிடம் இருப்பதை உணர்ந்திருந்தேன்.
அப்போது கமல் தான் என் ஒரே favoriteஆ என்று இப்போது யோசித்தால் தெரியவில்லை..

காரணம் ரஜினியின் பொல்லாதவன், தில்லு முல்லு போன்ற படங்கள் அந்தக் காலத்தின் எனது விருப்புக்குரிய படங்களாக இருந்திருக்கின்றன.
அதன் பின் வந்த ஆண்டுகளில் ஆனந்தபாபு, விஜய்காந்த், அரவிந்தசாமி, மாதவன், அஜித், மம்மூட்டி, ஷாருக் கான், அமீர் கான், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என்று விருப்பங்கள் நீண்டாலும் நிரந்தரமாக நேசிக்கும் ஒரு திரை நாயகன் என்றால் கமல் மட்டும் தான்.

இத்தனை காலம் ரசனை மாறாமல் கமல் மீதான விருப்பம் இருப்பதற்கான காரணங்களை யோசித்துப் பார்த்தேன்...
இது ஒரு வெறித்தனமான ரசிக விருப்பாக இல்லாமல், வியப்போடும் நயப்போடும் கூடிய ஒரு நேச மதிப்பு என்று தான் கருதவேண்டியுள்ளது.அண்மையில் நான் மகாநதி திரைப்படப் பாடல் வரிகளை பேஸ் புக்கில் பகிர்ந்திருந்தேன்..
எதை யார் சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு..
# மகாநதி
அதில் வரும் இந்த வரிகள் போல சிறுவயதில் இருந்து எதையும் கேள்வி எழுப்பி மறு வாசிப்புக்கு உட்படுத்தியே நம்பி வந்த மனப்பாங்கு எந்த ஒரு விடயத்தையும் அறிவுரீதியாகவும் அணுகி வந்த இருவர் மேல் மனதார நேசிக்கக் காரணமாக அமைந்தது.

அதில் ஒருவரை நேசிக்க இன்னொருவர் காரணமாக அமைந்திருக்கலாம் என்று இப்போது எண்ணுகிறேன்.
ஒருவர் எழுத்தாளர் அமரர் சுஜாதா.
இன்னொருவர் சாட்சாத் கமல்ஹாசன்.

கமலின் வித்தியாசமான சில சிந்தனைக் கருக்கள் அவரது சில பேட்டிகளில் தொனித்த ஒரு ஆழ்ந்த புலமை (அதை சிலர் ஞானச் செருக்கு என்று சொன்னாலும் அதுவும் எனக்குப் பிடித்ததே), 90களுக்குப் பின்னைய படங்களில் கமலின் நவீனத்துவ, பின் நவீனத்துவ சிந்தனைக் கூறுகளும், சில பல தத்துவார்த்தங்களும் இவர் ஒரு genius, something different from others என்று எண்ண வைத்திருந்தன.

சலங்கை ஒலி படம் பார்த்த என் தம்பி செந்தூரன் (அப்போது வயது நான்கு) பாரத நாட்டியம் பழகவேண்டும் என்று அடம்பிடித்துப் பழகியது தனிக் கதை.

அந்த சிறுவயதிலேயே மூன்றாம் பிறை, பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், அபூர்வ ராகங்கள், சொல்லத் தான் நினைக்கிறேன் என்று வித விதமான கமலின் படங்கள் பார்த்து "அட இந்தாளால் மட்டும் எப்பிடி இது முடியுது?" என்று ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்.

அப்போது வெளிவந்த 'இதயம் பேசுகிறது' இதழில் கமல் பேட்டியொன்றில் சொல்லியிருப்பார் "எனக்குப் படிப்பில் பட்டம் இல்லை; ஆனாலும் நானாக சுயமாக கற்க வேண்டியவை என்று நான் நினைக்கும் எல்லாவற்றையும் கற்கிறேன். நிறைய வாசிக்கிறேன். அப்போது தான் இந்த உலகையும் மனிதரையும் வாசிக்கக் கூடியதாக இருக்கும்".

வாசிப்பில் ஈடுபாடு உடைய எனக்கு இது ஒரு புதிய உத்வேகம் தந்தது.
பின்னாளில் வானொலியில் நுழைந்தபோதும் மற்றவர் மாதிரியில்லாமல் வித்தியாசமாக இருக்கவேண்டும்; நிகழ்ச்சிகளை வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற ஒரு வெறியை வழங்கியதும் கமலின் இதுமாதிரியான விஷயங்கள் தான்.

போட்டி நிறைந்த உலகில் விஷய ஞானத்தோடும், வித்தியாசமாகவும் முன்னேறினாலே மற்றவரிடமிருந்து தனித்துத் தெரியக் கூடியதாக இருக்கும் என்று கமலை விட வேறு யாரைப் பார்த்து அதிகமாக உணர முடியும்?

எம் துறையில் தொடர்ந்து நீடிக்க எம்மை நாமே update செய்துகொள்வது அவசியம் என்பதை தம் தேடல், வாசிப்பு மூலமாக அடிக்கடி சொல்லிவந்த என் வானொலிக் குரு எழில்வேந்தன் அண்ணாவும், மானசீக Role modelஆன திரு.அப்துல் ஹமீத் அவர்களும் போலவே கமல்ஹாசனும் அமைந்துபோனது என்னுடைய ரசனைக்கான வெற்றி.

மனிதனையும் மனசாட்சியையும் நம்புவோருக்கு மதமும் கடவுளும் தேவையில்லை என்று கமல் நினைத்ததை நான் விரும்பவில்லை. நான் மிகுந்த பக்தி நிறைந்த ஒரு குடும்பத்தில் அதுவும் இரு சமய நம்பிக்கைகள் ஒன்றாக இணைந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தவன்.

ஆனால் காலப்போக்கில் கேள்விகேட்டு எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கில் சமயம், கடவுள் பற்றிய என் கேள்விகளுக்கு எங்கணும் பதில் இல்லாமல் பாடசாலை வாழ்க்கை முடியும் தறுவாயில் நான் சமயம் இல்லாதவனாக மாற அங்கேயும் கமலுடன் ஒத்திசைகிறேன்.

தேடல் என்பது எப்போதுமே எனக்குப் பிடித்த விஷயம்.. கமலிடமும் எனக்கு அது மிகப் பிடித்தது.

கமல் ஆங்கிலப் படங்களில் இருந்து சுட்டுத் தந்த படங்களும், வெளிநாடுகளில் இருந்து எமக்குப் பெற்றுத் தந்த தொழினுட்பங்களும் அதற்கான சான்றுகள்..
மற்றவர்கள் ஆங்கிலப்படங்களை scene by scene ஆக சுடும்போதும்,பாத்திரப் படைப்புக்களை அப்படியே எடுக்கும்போதும் உறுத்துவதால் தானே பாய்கிறோம்.

ஆனால் கமல் சுட்டவை, உருவியவை அப்படியே கமலோடும் கதையோடும் பொருந்திப் போவதும், எத்தனை காலத்துக்குப் பின் எமக்குத் தெரியவருவதும் கமலின் தேடலுக்கும் அந்த தேடலின் பின்னதான தமிழோடு இணைத்து மறுவாசிப்புக்கு உட்படுத்தித் தருவதற்குமான வெற்றி என்றே நான் நினைக்கிறன்.

கமலின் அந்த அதீத ஆற்றல் அதிகமாக வெளிப்படும் சகலதுறைத் தன்மை, அறிவு ஜீவித்தனம் - இது தான் கமலை அடிமட்ட ரசிகர்கள், ஒரே கோணத்தில் மட்டும் சிந்திக்கும் பலரிடமிருந்து வேறுபடுத்தி தனிமைப்படுத்துகிறது.
சிலர் கமலை ஒரு வேற்றுக் கிரகவாசியாக நோக்கவும் இது தான் காரணம் என்றும் நான் ஊகிக்கிறேன்.
ஆனால் இந்த விடயம் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

ஒரு கலைஞன் பூரணமானவனாக இருக்கவேண்டும் என்று பூரணமாக நம்பும் நான் கமலை ஒரு நடிகனாக மட்டும் அன்றி கவிஞனாக, பாடகனாக, எழுத்தாளனாக, நடனக் கலைஞனாக, இயக்குனராக என்று பல வடிவில் காணும்போது, அத்தனையிலும் வெற்றி பெற்றும் நிறைவு பெற்றும் சாதித்தும் நிற்கும்போது நான் ரசித்த ஒருவர் சரியான தெரிவு தான் என்று ஒரு கர்வம் வருகிறதே அது அது தான் எனக்கும் நிறைவு.

குணாவில் கமல் சொன்னதைக் கொஞ்சம் உல்டா செய்தால் -
 கமலை நினைக்கும்போது எவ்வளவோ அருவியாக வருது.. ஆனால் அதை எழுத்தாக, பதிவாக வடிக்க நினைக்கும்போது தான் வேறு வேலை வந்து வாழ்க்கையை வெறுக்கப் பண்ணிடுது..

அதனால் இப்போதைக்கு கமலின் பிறந்த நாளுக்கு இதுபோதும்.
அடுத்த பாகம் (இன்னும் மனதில் இருக்கும் கொஞ்சம்) நாளை/நாளை மறுதினம்..

மீண்டும்

கமல்ஹாசனுக்கு - என் கனவு நாயகனுக்கு - என் மனதில் ரசனையில் வெள்ளிவிழாக் கொண்டாடிய உள்ள நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

குறிப்பு - படங்கள் இணையத்தில் எடுத்து நான் மெருகேற்றியவை

15 comments:

கோகுல் said...

பலர் சிலாகிக்கும் அபிமானம். வாழ்த்துக்கள்!

Anonymous said...

Superb anna

Anonymous said...

Superb anna

Anonymous said...

Superb anna

ரைட்டர் நட்சத்திரா said...

நன்றாக சொல்லியிருக்கிறிர்கள்

Unknown said...

எனதும் அபிமான நாயகன் :-) உங்களது அடுத்த தலைமுறை நடிகர்களும் அதே தெரிவே எனதும் ஆனால் விஜய்காந்த்?

ஷஹன்ஷா said...

கமல்.. காலத்தை வென்றவர்களில் ஒருவர்..

ஃஃஃஆனாலும் நானாக சுயமாக கற்க வேண்டியவை என்று நான் நினைக்கும் எல்லாவற்றையும் கற்கிறேன். நிறைய வாசிக்கிறேன். அப்போது தான் இந்த உலகையும் மனிதரையும் வாசிக்கக் கூடியதாக இருக்கும்".ஃஃ

மிகவும் பிடித்துப்போனது.
நான் விஜய் ரசிகனாக இருந்தபோதும்(காரணம் ஓரளவு சமகாலத்தவன் என்பதால்) கமலை நான் கதாநாயகன் என்பதை கடந்தும் ரசிப்பவன். கமலின் குரலுக்கு நான் அடிமை என்றால் பாருங்களேன்.

அத்துடன் “நானும் என் ரசிகன்தான்... கடுமையான விமர்சகனும் கூட..”
இன்று பிறந்தநாள் செய்தியில் கமல் சொன்னது..


இறுதியாக அகில இலங்கை கமல் ரசிகர்களின் மிரட்டல்களுக்கு இணங்கி வேலை பழுக்களுக்கு மத்தியில் கமல் ஸ்பெஷல் பதிவு தந்த அண்ணாவுக்கு நன்றிகள்..

Anonymous said...

தன் பின் வந்த ஆண்டுகளில் ஆனந்தபாபு, விஜய்காந்த், அரவிந்தசாமி, மாதவன், அஜித், மம்மூட்டி, ஷாருக் கான், அமீர் கான், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என்று விருப்பங்கள் நீண்டாலும் நிரந்தரமாக நேசிக்கும் ஒரு திரை நாயகன் என்றால் கமல் மட்டும் தான்.

i am very sad , y u missed Vijay ...
i hate u...

VANJOOR said...

இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.

****
**** ஆதாமின்டே மகன் அபு *****
*****

மாயா ஜாலங்களோ சென்டிமென்டுகளை நியாயப்படுத்தும் ஃப்ளாஷ்பேக்குகளோ எதுவும் தேவைப்படாத, கதையை அதன் போக்கில் மெதுவாக நகர்த்தும் திரைக்கதை. அதற்கு யானை பலம் சேர்க்கும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. .

அதை விட முக்கியமாக , காஸ்டிங். நெடுமுடி வேணு, கலாபவன் மணி என ஓரிரு காட்சிகள் வந்தாலும் எங்குமே நடிப்பது தெரியவில்லை

மற்றும் உறுத்தாத பிண்ணனி இசை. அவார்டு வாங்கும் படம் என்றாலே காத தூரம் ஓடிவிடும் நம் ரசிக கண்மனிகள் தமிழிலும் இது போன்ற சின்ன பட்ஜெட் ஆச்சர்யங்களை ஆதரித்தால் நமக்கு இன்னும் வெரைட்டியான படங்கள் கிடைக்கும்.

இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும். சமீப காலங்களில் ஒரு மெலோடிராமவுக்கு தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு சினிமாட்டொக்ராஃபியை பார்க்க முடிந்ததே இல்லை.

மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு. பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சியில் நடுங்கும் சலீம், தேசிய விருதுக்கு நிச்சயம் வொர்த் தான். மொத்தத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சினிமா "ஆதாமின்டே மகன் அபு"

உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை. அது இங்குதான் நம் லைப்ரரிகளில் தூங்கிகொண்டிருக்கிறது. அதை யார் எழுப்பி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது தான் கேள்வி!

MANO நாஞ்சில் மனோ said...

கமல் ஒரு கலையின் சகாப்தம்னு சொன்னால் அது மிகையாகாது...!!!

தனிமரம் said...

கமல் எப்படி உங்கள் நினைவுகளோடும் தொழில் துறையோடும் கலந்து போனார் என்பதை ஆழமாக அழகாகச் சொல்லியிருக்கும் உங்கள் பார்வைக்கு வாழ்த்துக்கள். கமல் ஒரு பன்முகவித்தகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை !

Anonymous said...

simply a super hero..

Anonymous said...

Stop reading it when vijay was not there!
I'm sorry.

Anonymous said...

கமலை எனக்கும் பிடித்த ஒரு காலம் இருந்தது. ஆனால் "மன்மதன் அம்பு" எனும் தனது படத்தில் ஈழத்தமிழர்களை குறிவைத்து தனது "அம்புகளை" எய்ததை தன்மானம் உள்ள எந்த ஈழத்தமிழரும் மறந்திருக்க முடியாது.

உங்களுக்கு எப்படியோ???

-பஸ்பன்

காளிதாஸ் said...

சூப்பர்....
கமல் சார யாரும் அடுசுக்க முடியாது...!!!
ஒரு சூரியன்...ஒரு நிலவு மாதிரி...ஒரே ஒரு உன்னத நடிகன் கமல்ஹாசன்...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner