பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு இதே மாதிரியான நவம்பர் 20 மாலை, சந்தோஷக் களைப்புடன் அன்று தான் அணிந்த புத்தம் புதிய இளம் பச்சை ஷேர்ட்டுடன், அதற்கு மட்சிங்காக என் முதல் கிடைத்த சம்பளத்தில் வாங்கிய டையையும் கழற்றாமல் 138ஆம் இலக்க பஸ்ஸில் வந்திறங்கி அப்போது நம் இருந்த வீட்டுக்கு வழியான மயூரா பிளேஸ் ஊடாக நடந்து வரும்போது மனதெல்லாம் ஒரு நிம்மதி, பெருமிதம்; அத்துடன் இன்னும் செல்லும் பாதை நீளமாக ஆனாலும் நல்லதாக இருக்கும் என்றொரு நம்பிக்கை.
வைரமுத்து சொன்னது போல "ஒரு காக்காய் கூட உன்னைக் கவனிக்காது; ஆனால் உலகமே உன்னைக் கவனிப்பதாக எண்ணிக்கொள்வே" என்ற வரிகள் அப்போது எனக்கும் பொருத்தம்.
ஆமாம் நான் ஐம்பது நாட்களாக வேலை செய்துகொண்டிருக்கும் வானொலி, ஐம்பது நாள் பரீட்சார்த்த ஒலிபரப்பு முடித்து உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சிகளுடன் சக்தி FM என்ற பெயருடன் மிக விமரிசையாக ஒலிபரப்பை ஆரம்பித்த நாள் அது 20-11-1998.
சக்தி FMக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அட... பதின்மூன்று ஆண்டுகள்.. எப்படி ஓடி முடிந்து விட்டன?
எத்தனை மாற்றங்கள்?
என் வாழ்க்கையிலும்.. இந்த வானொலியிலும்????
சக்தியில் ஆரம்பித்த என் வானொலிப் பயணம், சூரியனுக்குப் போய் அங்கே கழிந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின் வெற்றியில் வந்து நிற்கிறது.
DJ Special ஆக சக்தியில் நான் ஆரம்பித்த இந்த நெடும் பயணம், வானொலி தொலைக்காட்சி இரண்டினதும் பணிப்பாளராக என்னை உயர்த்தியிருக்கிறது.
சக்தி FM ஆரம்பிக்கக் காரணமாக அமைந்த எழில் அண்ணாவும் அங்கில்லை; பரீட்சார்த்த ஒலிபரப்புக் காலத்தில் அங்கே இருந்த யாருமே இப்போது அங்கே இல்லை.
ஒலிபரப்பு ஆரம்பித்த முதல் நாள் அங்கே இருந்த எந்தவொரு ஒலிபரப்பாளருமே இப்போது அங்கே இல்லை.(செய்தியாளர்கள் கூட)
வாழ்க்கை என்றால் இப்படித் தான்.
ஆனால் இன்றும் சக்தி FM வானொலிக்கு என்று ஒரு தனியான மதிப்பும், நிலைத்த தன்மையும் இருக்கிறது என்றல் நிச்சயம் அது மகிழ்ச்சிக்குரியதும் நானும் பெருமைப்படக் கூடியதும் தான்.
சக்தியின் முதல் மூன்று பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போதும் அங்கே இருந்தவன் என்ற பெருமை இன்று வரை மனதில் பசுமையாக உள்ளது.
சக்தி FM + சக்தி TV இனது முதலாவது பிறந்தநாள் கொண்டாடியபோது - 1999
(அப்போது இரண்டு பிறந்த நாட்களுமே ஒரே நாளில் - நவம்பர் 20)
அந்த அத்திவாரமும், சரியான வழிகாட்டலும், பயிற்சியும் தான் இன்றளவு வரை நேர்த்தியாக நான் நடக்கவும், இந்தளவு நான் முன்னேறவும், நான் பழக்கிய, பழக்கும், வழிநடத்தும் இளையவர்கள் சிறப்பாக மிளிரவும் காரணமாக உள்ளது என்பதை எப்போதுமே நன்றியுடன் நினைக்கிறேன்.
சக்தியின் என் ஆரம்பம் பற்றி சுருக்கமாக முன்னைய பதிவொன்றில் சொல்லி இருக்கின்றேன்.
10 ஆண்டுகள்... சாதனை? பகுதி 1
10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2
எழில் அண்ணா இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாக இராது.
இன்று வரை அவரது அன்பும் ஆசியும் இருப்பதை ஒரு வரமாகவே நினைக்கிறேன்.
வானொலிகளில் நாங்கள் ஒலிபரப்புக்காக வைத்துள்ள பதிவுப் புத்தகம் - Log Book என்பது மிக முக்கியமான ஒன்று.
சக்தி - பெயரில்லாமல் ஒரு புதிய பரீட்சார்த்த வானொலியாக ஆரம்பித்த முதல் நாளிலேயே எழில் அண்ணா இதை எங்களுக்குப் பழக்கப் படுத்தியிருந்தார்.
இன்றைய சக்தி வானொலி அறிவிப்பாளர்கள் பலருக்கே தெரியாத ஒரு விடயம் - சக்தியின் பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பித்தது 103.9 என்ற அலைவரிசையில்.. அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு முக்கோணக் கிரிக்கெட் தொடரின் (Carlton & United Series 1998) நேரலை வானொலி ஊடாக மும்மொழியிலும் ஒலிபரப்பானது.
அதன் பின்னர் தான் நிரந்தரமாக 105.1 என்ற அலைவரிசைக்கு மாற்றப்பட்டது.
சக்தியின் பரீட்சார்த்த ஒலிபரப்பின் Log Bookஇன் ஒரு சில முக்கிய பக்கங்களின் புகைப்படங்கள் இங்கே....
ஒக்டோபர் முதலாம் திகதி பரீட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்தாலும், முழுமையாக ஒரு அணியை உருவாக்கவேண்டும் என்பதிலும், செய்வன திருந்தச் செய்து பூரணமான பின்னரே ஒலிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த எழில் அண்ணா ஐம்பது நாட்கள் பரீட்சார்த்த ஒலிபரப்பில் எம்மை ஈடுபடுத்தினார்.
எழில்வேந்தன் அண்ணாவின் முத்து முத்தான கையெழுத்துக்களில் பரீட்சார்த்த ஒலிபரப்பின் முதல் தருணங்கள்..
ஒலிபரப்பை அவர் ஆரம்பித்து வைக்க, ரமணீதரன் அண்ணா (இவர் தொலைக்காட்சிப் பிரிவின் எல்லாமாக இருந்தவர்), ஜானகி ஆகியோர் இணைந்துகொண்டார்கள்.
சரியாக ஒரு மணிநேரத்தில் நான் இணைந்துகொண்டேன்.
என் எழுத்துக்களில் காலையில் பூக்கும் - காதலே நிம்மதி பாடல் முதல்..
எனினும் நானாக ஒலிபரப்பிய முதல் பாடல்
நீ காற்று நான் மரம் - நிலாவே வா
எனது முதலாவது அறிவிப்பு நேரடியாக வானொலியில் ஒலிபரப்பானது ஒரு பரவசமான உணர்வு .
"நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது 103.9 என்ற அலைவரிசையில் ஒரு புதிய தமிழ் வானொலியின் பரீட்சார்த்த ஒலிபரப்பு"
அப்போது சக்தி TVயில் செய்தி வாசிப்பில் ஈடுபட்டு வந்த சூரியப்பிரபா அக்கா (இப்போது திருமதி. சூரியப்பிரபா ஸ்ரீகஜன்), கனடாவில் இப்போது வானொலி பொறியியலாளராக இருக்கும் கௌரிஷங்கர் (ஷங்கர்) ஆகியோரும் அன்று பின் இணைந்து கொண்டார்கள்.
அன்றைய நாளின் ஒலிபரப்பு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவுக்கு வரும் நேரம் அறிவித்த வசனங்கள் என் எழுத்துக்களில் அந்த Log bookஇல்.
நவம்பர் 20 என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.
இலங்கையின் இரண்டாவது இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலி சேவையின் பிறப்பு.
காலையில் எனது அறிவிப்புடன் பக்திப் பாடல்கள்...
முழு நாளும் ஏராளமான பரிசுகள் வழங்கல்; துடிப்பான ஒரு புதிய குழுவுடன் புதிய இலக்குகளோடு எமது பயணம் ஆரம்பித்தது.
அன்று முதல் இன்று வரை சக்தி FMஇல் மாறாதிருக்கும் சில விடயங்களை மீண்டும் மீட்டிப் பார்த்தபோது,
அழகான தமிழும் இணைந்த இலச்சினை (Logo), வணக்கம் தாயகம் என்ற காலை நிகழ்ச்சிப் பெயர், 105.1 FM.
இந்த வேளையில் சக்திக்கும் எனக்கும் இருக்கும் ஒரு அற்புதத் தொடர்பு - நான் சூரியனில் இருந்தவேளையில் நான் பயிற்சியளித்து, எனக்குக் கீழே பணியாற்றிய துடிப்பான தம்பி காண்டீபன் இப்போது சக்தியின் பணிப்பாளர். பெருமையும் மகிழ்ச்சியும்.
அவருக்கும் அவர் தம் குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
சக்தி என்ற பெயரை அறிமுகப்படுத்திய வேளையில் எழில் அண்ணா அறிமுகப்படுத்திய நிலையக் குறியிசைகளில் ஒன்று இன்னும் மனதிலே ஒலிப்பது...
புதிய சிந்தனை
புதிய தகவல்கள்
புதிய ஒலிநயம்
சக்தி FM
அதே போல அந்தக் காலகட்டத்தில் வந்திருந்த திரைப்படம் ஒன்றில் பாரதியின் பாடல் ஒன்றும் சக்தி என்றே SPBயின் குரலில் ஒலித்திருக்கும்..
அதை அடிக்கடி ஒலிபரப்புவதில் ஒரு பரவசம்..
துன்ப மிலாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.
என் தொழிலுக்கும் வாழ்வுக்கும் சக்தி கொடுத்த சக்திக்கு என் இனிய வாழ்த்துக்கள்...
அந்த சக்தியின் சக்திகளுக்கும், சொந்தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்....