November 02, 2011

ஏழாம் அறிவு / 7ஆம் அறிவு



படத்துக்கான கதையை முடிவு செய்தபோது ஆரம்பித்த பரபரப்பு, விளம்பரங்கள், ஏக பில்ட் அப்புகள் வெளிவந்த பின்னரும் இந்தப் பதிவை எழுதும் வரைய தொடர்கின்றன.

A.R.முருகதாஸ் என்ற அற்புதமான திரைக்கதை சிற்பியை, ரசிக்கக் கூடியதாக மசாலாக் கதைகளை விறுவிறுப்பாக த் தந்த திறமையான இயக்குனர் என்று A.R.முருகதாஸ் மீது ஒரு தனி விருப்பம் + நம்பிக்கை இருந்தது.
தமிழில் இருந்து அகில இந்தியாவுக்கு அவர் செல்லக் காரணமாக அமைந்த 'கஜினி' சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார் என்றவுடன் 'நிறைய' எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

பாடல்கள் ஏமாற்றினாலும் படத்தில் திருப்தி கிடைக்கும் என நம்பியிருந்தேன்.
கதைக்களம் என்று தொலைகாட்சி, இணைய, சஞ்சிகைப் பேட்டிகளில் இயக்குனரும், நடிகரும் அவ்வாறே மாறி மாறி சொல்லி நம்ப வைத்திருந்தார்கள்.

ஆனாலும் முருகதாஸ் உலகத்தரம், வெளிநாடுகளுக்கு சவால், தமிழனின் பெருமை, ஈழத் தமிழருக்கு அர்ப்பணிப்பு என்று மீண்டும் மீண்டும் சொல்லி (விளம்பரப்படுத்தி) வந்தது 'அட என்னடா இது' என்ற சலிப்பையும் ஏற்படுத்தியது உண்மை.

வேலாயுதம் - ஏழாம் அறிவு இரண்டுக்கும் ஒரே நேரத்தில் முதல் காட்சி டிக்கெட் தந்து எதற்குப் போயிருப்பேன் என்றால் நிச்சயம் ஏழாம் அறிவு தான் என் தெரிவாக இருந்திருக்கும்.
ஆனால் வேலாயுதம் தான் எனக்கு வாய்த்தது. அந்த நாள் மறக்க முடியாத நாள் ஆகிவிட்டது.
ஏழாம் அறிவு பார்க்க வெள்ளிக்கிழமை தான் அமைந்தது.

அதற்குள் இலங்கையில் கடுமையாக ஏழாம் அறிவுடன் தணிக்கையும் இன்னும் பல விஷயங்களும் விளையாடிவிட்டன.

பௌத்த மதம், சீனா, இந்தியா, தமிழின் தொன்மை, தமிழன் பற்றிய வசனங்கள் என்று பல விடயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிந்தவுடன் தணிக்கைக் குழு உஷாராகி வெட்டிக் கொத்தி விட்டார்கள்.
அப்படியும் இந்தியத் தொலைக்காட்சிகளில் வரும் Trailerகளால் பயந்து போன ஏழாம் அறிவின் இலங்கை இறக்குமதியாளரான தமிழர் ஏன் வம்பு என்று படத்தை EAP நிறுவனத்துக்கு (பெரும்பான்மை உரிமையாளர்) விற்றுவிட்டார்.

நான் போன நேரம் மருதானை சினிசிட்டி திரையரங்கின் நான்கு திரைகளிலும் ஏழாம் அறிவே ஓடிக் கொண்டிருந்தது. (மறுபக்கம் கொட்டாஞ்சேனை சிநிவொர்ல்டில் மூன்று அரங்கிலும் வேலாயுதமாம்) அதில் நாம் இருந்த மண்டபமும் இன்னொன்றும் வெள்ளி இரவுக் காட்சி ஹவுஸ் புல்.

ஏழாம் அறிவு படத்தைப் பற்றி Twitter ஸ்டைலில் சொல்வதானால்

ஏழாம் அறிவு = Genetics + Gymnastics + Gimmicks 

1600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் தமிழ் வீரன் ஒருவனால் சீனருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட தற்பாதுகாப்புக் கலையும், மருத்துவமும் இந்தியாவுக்கு எதிராகத் திரும்புகிறது எனும்போது பரம்பரைகள் கடந்தும் மரபணுக்கள் மூலமாகக் கடத்தப்படும் மரபியல் ஆற்றல்களை மீள எழுப்பி பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த வீரனை மீண்டும் எழுப்பும் ஒரு நவீன புனை கதை??/விஞ்ஞான கதை.

கதையாக இதை சுருக்கமாக சுவை பட எழுதியிருந்தால்.. அதுவும் எழுதியவர் சுஜாதாவாக இருந்தால்?? நினைக்கவே சுகமாக இல்லை?
அதே தான் படம் முடியும்போது என் எண்ணமும்....
முருகதாஸின் பட விவாதங்களில் கலந்துகொள்ளும் ஆரோக்கியமான குழு எடுத்த கதை சுவாரஸ்யமானது தான். திரைக்கதையிலும் இதே குழு செயற்பட்டுள்ளதா என்பதே கேள்வி.

தீனா, ரமணா, கஜினி மூன்று A.R.முருகதாஸின் முன்னைய படங்களிலும் கதைவிடை தெரிந்த, முக்கியமான திருப்பங்கள் சில மட்டும் உள்ளதாக இருந்தாலும், திரைக்கதை அமைக்கப்பட்ட விதம், விறுவிறுப்பையும் எதிர்பார்ப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியிருக்கும்.

ஏழாம் அறிவுக்காக இத்தனை காலம் ஒதுக்கியும்.....
சூர்யாவின் உடலுக்கான உழைப்பு, கதைக்களத்தின் பிரதான கருவான போதி தர்மனின் வரலாறு, அது பற்றிய தகவல்கள், மரபியல் பற்றிய விடயங்கள் என்று பாராட்டக் கூடிய விடயங்கள் படத்தில் நிறைந்திருந்தாலும் நிறைவான விடயங்களை விடக் குறைகள் காணக்கூடிய விடயங்கள் அதிகமாக இருக்கின்றன என்பதை இதுவரை பார்த்தவர்களும், விமர்சனங்கள் பல வாசித்தோரும் உணர்ந்திருப்பீர்கள்.

முதலில்,
வித்தியாசமான முயற்சி, தமிழனின் பெருமை, தமிழனுக்கான படம் இப்படியான படங்களை வெல்ல வையுங்கள் என்று கொடி பிடிப்போருக்கு -

வித்தியாசமான முயற்சி என்றால் இந்த சன் பிக்சர்ஸ் தயாரித்து பாரிய விளம்பரத்தோடு, பெரிய விளம்பர உத்திகள், எங்கே திறந்தாலும் உலகத் தரத்தில் ஒரு முயற்சி என்று பீத்திக்கொள்ளும் இந்த ஏழாம் அறிவுக்கு அல்ல, ஏழைகளின் தயாரிப்பாக வந்து விளம்பரம் இல்லாமல், மக்களை சென்று சேராமல் பெட்டிக்குள்ளே சுருண்டு போய் விலை போகாமல் கிடக்கும் நல்ல, சிறந்த, யதார்த்த படங்களுக்கு ஆதரவைக் கொடுங்கள்..

அழகர் சாமியின் குதிரைக் குட்டி, பூ, அங்காடித் தெரு, மைனா, நந்தலாலா,ஒன்பது ரூபா நோட்டு , தென் மேற்குப் பருவக்காற்று இப்படியான படங்களை நீங்கள் ஆதரித்தால் நானும் உங்கள் கட்சி..
குறைந்தது ஆயிரத்தில் ஒருவன்..
இன்று வரை இயக்குனர் செல்வராகவன் அது ஈழத் தமிழருக்கு சமர்ப்பணம் என்று உருகி பேட்டி கொடுத்து ஆலவட்டம் பிடித்து இலங்கையிலும்,லண்டனிலும், கனடாவிலும், ஜெர்மனியிலும் படத்தை ஓட்ட செய்யவில்லை.

தமிழனின் பெருமை, வீரம் எல்லாம் இப்படி சூர்யாவின் Six pack பார்த்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் ..........................

ஒருவன் இருக்கும் வரை அவன் பற்றிப் பேசாதார், எட்டியும் பாராதார் எல்லாம் இறந்த பின் (இறக்கவில்லை இன்னும் என்று இன்னமும் சொல்வோரும் நிறையவே உண்டு.. எனக்கு ஏன் வம்பு) வீரமா, துரோகமா என்று வசனம் வைப்பதை நாம் கரகோஷம் செய்து உருக வேண்டுமா?

போதி தர்மன் என்ற தமிழர் மூலமாகத் தான் இப்போது சீனர் உலகத்துக்கு வழங்கியதாகக் கூறப்படும் குங் பூ (Kung Fu) சீனருக்கே கற்பிக்கப் பட்டதாக ஏழாம் அறிவு மூலமாகத் தான் நான், இன்னும் பலரும் அறிந்துகொண்டோம் என்பது உண்மை.
ஏழாம் அறிவு பார்த்து வந்து, நள்ளிரவு தாண்டி இரு மணி நேரமாவது அது பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தேன்..
(உண்மையா அல்லது ஏதாவது ஒரு சிறு தகவல்/ எடுகோளை வைத்து இட்டுக் கட்டி விட்டார்களா என்று தேடி அறியும் ஆர்வம் தான்)

http://www.buddhanet.net/e-learning/buddhistworld/chan.htm






தமிழனின் வீரத்தைத் தான் காட்ட இந்தப் படம் என்று முருகதாஸும், சூரியாவும், தயாரிப்பாளர் உதயநிதியும் சொல்வதை நாம் நம்பினால் தெலுங்கில் போதி தர்மன் ஆந்திராவிலே பிறந்ததாகக் காட்டி தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறார்களாம்.
(அவ்வாறு குறிப்பிடப் படவில்லை என்றும் இன்னும் சிலர் சொல்கிறார்கள்.. தெலுங்குப் பதிப்புப் பார்த்தவர்கள் ஆதாரப் படுத்துக)

போதி தர்மர் தமிழர்தானே? காஞ்சிபுரத்தில் தானே பிறந்தார்.?அப்புறம் ஏன் தெலுங்கு படத்துல அவர் குண்டூர்ல பிறந்ததாகவும் ..ஹிந்தி படத்துல தாரவில பிறந்ததாகவும் சொல்கிறார்கள்.இரண்டு மொழிகளிலும் அவர் தமிழர்ன்னு பெருமையா சொல்லி இருக்கலாமே ? 
- இன்று Facebookஇல் பார்த்த ஒரு கருத்துப் பகிர்வு 

அத்துடன் தமிழன் என்று வந்த வசனங்கள் எல்லாமே தமிழனுக்குப் பதிலாக அங்கே இந்தியன் பிரதியீடு..

இது எல்லாம் வியாபார தந்திரம், மொழி மாறும் சினிமாவில் இது சகஜம் என்று சொல்வோருக்கு..

படத்திலேயே பல இடங்களில் குழப்பம் வரவில்லையா?

இந்தியருக்காக இந்தியாவுக்காக கதாநாயகனும் நாயகியும் நண்பர்களும் போராடுகிறார்கள்.
ஆனால் எங்கே போனாலும் தமிழர் என்றால் அடிக்கிறார்கள்; இந்தியாவிலும் தமிழரை மதிக்கிறார்கள் இல்லை என்ற புலம்பல்..
"வெளிநாடுகளில் இந்தியன் என்றால் ஒதுக்குகிறார்கள்; இந்தியாவில் தமிழன் என்றால் ஒதுக்குகிறார்கள்"

இறுதியாகவும் ஆரியர் அழித்த திராவிடம் பற்றி கதாநாயகனின் பிரசங்கம்.
இந்தியர்களின் கவனத்துக்கு இது..



சரி பிற விஷயங்கள் கடந்து படத்துக்குள் 'கொஞ்சம்' நுழைவோமானால்,

படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள் -
இயக்குனரின் தேடல் - தகவல் சேகரிப்பும், அதை நுணுக்கமாக ஒரு விவரணம் போல அல்லாமல் கொடுக்க முயன்ற விதமும். (ஆனாலும் போதி தர்மரின் காட்சிகளில் ஒலிக்கும் பின்னணிக் குரலும், போதி தர்மரைத் தெரியுமா என்று மக்களிடம் கேட்கும் காட்சிகளும் கொஞ்சம் Documentary உணர்வைக் கொடுத்துள்ளன என்பதை ஏற்கத் தான் வேண்டும்.
முதல் இருபது நிமிடங்கள் - சூர்யாவின் அமைதி தவழும் முகமும், பின்னணி இசையும், அந்தக் குளிரான சீனப் பகுதிகளை ரவி K சந்திரனின் ஒளிப்பதிவு தந்துள்ள விதமும் அருமை

சூர்யாவின் உழைப்பு - இரு வேடங்களிலும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைத்துள்ளார்.

ஒளிப்பதிவு - பாடல் காட்சிகள் + வீதியில் நடக்கும் ஒரு சண்டைக் காட்சி தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் ரவி K சந்திரன் கலக்கி இருக்கிறார்.
ஆனாலும் ரவி K சந்திரனின் தனித்துவ முத்திரைகளை ஏழாம் அறிவில் காணமுடியவில்லை

வில்லனாக வரும் Johnny Tri Nguyen - இந்த வியட்நாமிய வில்லன், அதிகமாகப் பேசாமலே கண்களாலும் அக்ஷனாலும் மிரட்டி இருக்கிறார்.  பல இடங்களில் சூர்யாவை விடக் கரகோஷங்கள் இவருக்கு..

படம் முழுக்க பரவி இருக்கும் பல தகவல்கள் - சில இடங்களில் இது சாதாரண ரசிகர்களுக்கு Over dose ஆக இருக்கலாம். எனக்குப் பிடித்திருந்தது.
 ஆனால் மரபியல் கற்கைகளை ஒரு கல்லூரி மாணவி சும்மா ஏதோ வீட்டுப் பாடம் செய்வது மாதிரி, வெகு சாதாரணமாக வீட்டிலேயே ஆய்வு கூடம் வைத்து செய்வதெல்லாம் சாத்தியமா? (அப்பா கமல் வைத்துக் கொடுத்திருப்பாரோ?)
கற்றவர் பார்த்துக்குங்கப்பா

அன்டனியின் editing -  காக்க காக்கவில் ஆரம்பித்தவர் இன்றுவரை எந்தப் படத்திலும் சொதப்பியதாக இல்லை.


பிடிக்காத/கடுப்பேற்றிய/உறுத்திய விஷயங்கள்

ஷ்ருதி ஹாசன் - பாடல் காட்சிகள் தவிர வேறு எதிலுமே இவர் அழகாகவும் இல்லை; பொருத்தமாகவும் இல்லை. வெள்ளை வெளேரென்று ஒரு குச்சியாக பல இடங்களில் நின்று விட்டுப் போகிறார். முக பாவத்தைப் பார்த்தால் சும்மாவே அழுதுவிடுவார் போல..
தமிழின் பெருமை பற்றி சொல்கிற படம் என்று விட்டு தமிழை டமிலாகப் பேசும் இவரிடம் தமிழின் பெருமையைப் பேசச் சொல்கிற இடங்கள் இயக்குனருக்கே உறுத்தலாக இருக்கவில்லையோ?

உன்னைப் போல் ஒருவனில் இசையமைப்பாளராகத் தேறியதை ஏனைய எல்லா இடங்களிலும் கோட்டை விட்டுவிட்டார்.
முதலில் ரஹ்மானின் செம்மொழி பாடலைக் குதறியவர், எல்லேலோமமா பாடலில் ளகர, லகரங்களைக் கொன்றார்; படத்தில் அனேக வசனங்களையும்...
தந்தையார் த்ரிஷாவுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க முதல் மகளுக்கு சொல்லிக் கொடுத்தால் புண்ணியம்.

லொஜிக் - விஜய், அஜித், ரஜினி படங்களில் பார்க்கத் தேவையில்லை. ஆனால் சரித்திரத்தையும் தற்காலத்தையும் விஞ்ஞானத்தின் மூலமாக இணைக்கும் படத்தில் இதை A.R.முருகதாஸ் பல இடங்களில் கோட்டை விடுகிறார்.
சில முக்கிய கோட்டைகள்...

இந்தியாவின் முன்னணி விஞ்ஞானி சீனர்களுடன் நடத்தும் ரகசியக் கொடுக்கல் வாங்கலுக்கு சாதாரண மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறாராம். அதுவும் சர்வசாதாரணமாக அவரது மின்னஞ்சலில் இருந்து தகவல்களைப் பிறர் எடுக்கிறார்களாம்.

போலீஸ் நிலையத்தில் வந்து அந்த டொங் லீ அத்தனை பேரைத் தாக்கி வெறியாட்டம் ஆடிய பின்னரும் இப்படி வெளிப்படையாக அவன் நடமாட முடிகிறது. போலீசு என்னாச்சுய்யா?

அதுசரி இலங்கையர் நாம் இந்தியாவுக்குள் நுழையத் தான் இத்தனை கெடுபிடியா? சீனர்கள் அவ்வளவு இலகுவாக நுழைய முடிகிறதா?
இது தான் உண்மை நிலவரமா?

நுணுக்கு காட்டியில் ஷ்ருதி பார்க்கும் மரபியல் அணுக்கள் - முருகதாசின் படத்தில் இப்படி?? நம்ப முடியவில்லை

அந்த வீதியில் நடக்கும் சண்டை + Hypnotism மூலமாக வில்லன் வாகனங்களை வைத்து சூர்யா+ஸ்ருதியைக் கொல்ல எத்தனிக்கும் இடம்..

(கிராபிக்ஸ் சொதப்பலும் அப்படியே உறுத்தித் தெரிகிறது)

சீனாவில் காலமான போதி தர்மரது DNA மூலக் கூறுகள் இந்தியாவில் இருக்கும் சாதாரண கல்லூரி மாணவிக்கு எப்படிக் கிடைக்கிறது?

பாராட்டக் கூடிய பாரிய முயற்சி ஒன்றில் இறங்கிய இயக்குனர் + குழு இப்படியான விடயங்களையும் சரியாகத் திட்டமிட்டிருக்கலாமே..



பாடல்கள் எல்லாமே இடைச் செருகல் போலவும், ஒளிப்பதிவு சீரில்லாததாகவும் தெரிகிறது.
இன்னும் என்ன தோழா பாடல் கதை சொல்லிப் போவதாக இருப்பதாலோ என்னவோ மனதில் நிற்பதாக இல்லை.
(நக்கீரன் You tubeஇல் ஏற்றியுள்ள வீடியோ இதை விட உசுப்பேற்றும்.. ஆனால் இறுதி யுத்தத்தில் வதை பட்ட எங்கள் மக்களைக் காட்சிப் பொருளாக்கி இருப்பது கொடுமை + கண்டிக்கத் தக்கது)

இடைவேளைக்குப் பிறகு எல்லாக் காட்சிகளுமே திருப்பங்களை ஏற்படுத்தாமல், அடுத்தது என்ன என்று இலகுவாக ஊகிக்குமாறு அமைத்திருப்பது வழமையான முருகதாஸின் புத்திசாதுரியத் தனம் எங்கே போனது என்று கேட்க வைக்கிறது.

நோக்கு வர்மம் தான் hyptonizeஇன் ஆரம்பம் என்று காட்டியுள்ள முருகதாஸ் சில கணங்களில் ஒருவரை வசப்படுத்துவது முடியுமா என்ற சாத்தியத்தையும் ஆராய்ந்திருக்கலாமே.
http://www.wikihow.com/Hypnotize-Someone

அடுத்து நோக்கு வர்மம், வசியப் படுத்தல் போன்றவை இலிருந்து வேறுபடுவதையும் அவை பற்றி ஓரளவாவது அறிந்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

http://en.wikipedia.org/wiki/Hypnotherapy

இக்கால சர்க்கஸ் சாகச வீரன் சூர்யாவின் பாத்திர உருவாக்கம் கொஞ்சம் சறுக்கி இருக்கிறது.
ரிங்கா ரிங்கா பாடல்களில் ஆரம்பிக்கும் பாத்திரம் அதற்குப் பின் இன்னும் ஒரே ஒரு பாடலின் சில இடங்களில் சாகசம் செய்வதோடு சரி..

இலங்கையில் தணிக்கை செய்யப்பட காட்சியை Facebook, You tube இல் நானும் பார்த்திருந்தேன்.
போதி தர்மனின் மரபணுக்கள் தட்டி எழுப்பப்படாமலே வீராவேசம் பொங்க ஸ்ருதிக்கு அவர் வீரம் பற்றி சொல்வது கொஞ்சம் திணிக்கப்பட்ட உறுத்தலாக இருக்கிறது.

கஜினி படத்தில் எனக்கு அலுக்கப் பண்ணிய ஒரே விடயம் சூர்யா இரட்டை வில்லன்களுடன் போடும் அந்தக் கடைசி சண்டை..
அதே போலத் தான் ஏழாம் அறிவிலும் இறுதி சண்டை. வில்லனை சூர்யா வீழ்த்துவார் எனத் தெரியும்.
ஆனால் ஏராளம் கிராபிக்ஸ் சொதப்பல்களுடன் இழுத்து நடக்கும் சண்டை சலிக்க செய்கிறது.

அதுசரி முக்கியமான கேள்வி.. நோக்கு வர்மம் போதி தர்மரின் பரம்பரையில் வந்த சூர்யாவைத் தானே பாதிக்காது? ஸ்ருதியைக் கொள்ள வில்லன் அவரையே பயன்படுத்தியிருக்கலாமே? ஏன் பயன்படுத்தவில்லை ?
இயக்குனர் Johnnyக்கு சொல்லவில்லையோ?

எக்கச் சக்க சொதப்பல்களுடன் இந்தப் படத்தை எனக்கு ஏற்கவும் முடியவில்லை; ரசிக்கவும் முடியவில்லை.

சொல்ல வந்த விஷயம்/ஆதங்கம் எல்லாமே சரி என்று வைத்தாலும் ... சொன்னவிதம்...?????????!!!!!!! இதுக்கு ஏன் இவ்வளவு Build-Up????

அதிலும் எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பதாக சூரியா இறுதியில் மஞ்சளையும் மாக்கோலத்தையும் வைத்து தமிழருக்கு சொல்லும் அறிவுரை சின்னப் பிள்ளைத் தனம். (சொல்லி முடிக்க திரையரங்கிலிருந்து கேட்ட ஒரு குரல் -இதெல்லாம் தெரியும்டா.. போடா ---)
தமிழரைக் கேவலப்படுத்த இதை விட வேறு ஒன்றுமே வேண்டாம்.
அதில் முருகதாசும் பெருமையோடு கமேராவுக்குப் பின்னால் அமர்ந்திருக்கிறாராம்.

சீன இந்திய யுத்தம் என்பதை தமிழ், தமிழர் என்ற உசுப்பேற்றலுடன் + DNA, Bio war விஞ்ஞானப் புதுமையுடன் தரப் பார்த்திருக்கிறார்...
ஆனால் தயாரிப்பு மச மச கொச கொச..

இன்னும் எத்தனை நாள் தான் தமிழ்,தமிழர் என்று எங்களை நாமே உசுப்பேற்றி, ஏமாற்றப் போகிறோம்? ஏமாறப் போகிறோம்....??

ஏழாம் அறிவில் தான் பாடலே வருதே..

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளாய்....

ஏழாம் அறிவு - ஏமாற்றம் 



முக்கிய குறிப்பு - சூர்யா ரசிகர் என்று வராமல் அர்த்தமுள்ள, ஆக்க பூர்வ வாதங்களுடன் வரும் பின்னூட்டங்கள் என்றால் அனானிகளாக வந்தாலும் தாராளமாக வரவேற்கிறேன். :)


54 comments:

anand said...

palarukkum yematrame :(

Jay said...

//இன்னும் எத்தனை நாள் தான் தமிழ்,தமிழர் என்று எங்களை நாமே உசுப்பேற்றி, ஏமாற்றப் போகிறோம்? ஏமாறப் போகிறோம்....??//
நூறு வீதம் உண்மை.

தமிழன் தான் புத்திசாலி மற்றவன் மோட்டு சீனா என்றெல்லாம் சொல்லி சொல்லி கடைசியில் மோடனானது தமிழன்தான்.

பத்திரிகை முதல் இணையத் தளங்கள் வரை தமிழரை உசுப்பேற்றி வியாபாரம் நடத்துகின்றார்கள். இணையத்தளங்களை வாசித்தால் தெரியும் இதோ இன்றே எல்லாரையும் போர் குற்றத்தில் கைது செய்துவிடப் போகின்றார்கள் அது இது என்று உசுப் பேத்துவார்கள். இது போதாதென்று ஆய்வுக்கட்டுரைகளில் கூட வீழ்ச்சி எழுச்சியின் அடுத்த படி என்று எழுதுவார்கள். யதார்த்தம் என்ன என்று எமக்கெல்லாம் தெரிகின்றது.

தொலை நோக்குடன் கூடிய தெளிவான சிந்தனையுடன் பழைய பாடங்களை துணைக்கு எடுத்துக் கொண்டு தமிழன் அடுத்தகட்டத்திற்குச் செல்ல வேண்டும்.

இல்லாவிட்டால் ஆப்புத்தான். இப்போ இருக்கின்றது இல்லாமல் போய் விடும்.

Sanjay said...

அர்த்தமுள்ள, ஆக்க பூர்வ வாதங்களுடன் வரும் பின்னூட்டங்கள் என்றால் அனானிகளாக வந்தாலும் தாராளமாக வரவேற்கிறேன். :)//

இதுல விவாதிக்க ஒண்ணுமே இல்ல பாஸ்....!! எல்லாம் நெத்தியடி..!!
இப்போ எல்லா தமிழனும் பார்க்கணும்னு தூக்கி பிடிக்கிறவன் கிட்ட ஆறு மாசம் கழிச்சு கேட்டு பாருங்க போதிதர்மன் யார்னு...அர்ஜுனனுக்கு அண்ணனானு கேப்பாங்க....!!! :D :D

AH said...

உண்மைதான்..இணையத்தில் படித்ததில் பிடித்த விமர்சனம்
”ஏழாம் அறிவு - ஏமாற்றம்”
/உறுத்திய விஷயங்கள்
மின்னஞ்சல்.....
போலீசு என்னாச்சுய்யா?...
கிராபிக்ஸ்.....
கதையை திரைகதை ஆக்குறதுதான் இயக்குனர் திறமையிருக்கு போல...
இந்த படத்த சங்கர் எடுத்திருந்தா???

சூர்யா தனது பங்க நல்லா செய்து இருக்காரு.

வில்லன். சுப்பர் ..
.
குறிப்பு...கமல்மேல இன்னும் பழைய கோபம் எதுவும் மிச்சம் இருக்கா?

ilango said...

ellarume emmanthutoom.........

ilango said...

ellarum emmanthutoom........

Yalini Thivaharan said...

The movie wasn't worth the wait... But, your review was!!!

HajasreeN said...

I AGREE WITH U

amirthan said...

Simply said.....
இன்னும் எத்தனை நாள் தான் தமிழ்,தமிழர் என்று எங்களை நாமே உசுப்பேற்றி, ஏமாற்றப் போகிறோம்? ஏமாறப் போகிறோம்...

நான் நினைச்ச மாதிரியான ஒரு பதிவு...... இது தான் உண்மை தமிழன் தமிழன் என சொல்லி படத்தை விளம்பரபடுத்துவதை விட, எடுக்க நினைத்த கதையில் கவனம் செலுதியில்ருந்தால் ஒரு சிறந்த படத்தை தந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு பொய்க்கு தமிழை வைத்து வியாபாரம் செய்யாமல் இருந்தாலே கோடி புண்ணியம்....படத்தை பக்கச்சார்பற்று பார்ப்பவர்களுக்கு அது கட்டாயம் புரியும்......நன்றி

amirthan said...

Simply said.....
இன்னும் எத்தனை நாள் தான் தமிழ்,தமிழர் என்று எங்களை நாமே உசுப்பேற்றி, ஏமாற்றப் போகிறோம்? ஏமாறப் போகிறோம்...

நான் நினைச்ச மாதிரியான ஒரு பதிவு...... இது தான் உண்மை தமிழன் தமிழன் என சொல்லி படத்தை விளம்பரபடுத்துவதை விட, எடுக்க நினைத்த கதையில் கவனம் செலுதியில்ருந்தால் ஒரு சிறந்த படத்தை தந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு பொய்க்கு தமிழை வைத்து வியாபாரம் செய்யாமல் இருந்தாலே கோடி புண்ணியம்....படத்தை பக்கச்சார்பற்று பார்ப்பவர்களுக்கு அது கட்டாயம் புரியும்......நன்றி

Anonymous said...

http://www.usashaolintemple.org/chanbuddhism-history/

Jega said...

//தெலுங்கில் போதி தர்மன் ஆந்திராவிலே பிறந்ததாகக் காட்டி தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறார்களாம்.//
லோசனின் கூற்று முற்றிலும் தவறு! தெலுங்கில், "போதித ர்மன்" பல்லவ சாம்ராஜ்யத்தில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தமிழனாகவே காண்பிக்கப்படுகிறார். இலங்கைப் பிரச்சனையும் கூட மொழிபெயர்த்து விபரிக்கப் பட்டுள்ளது.
தகவல் உபயம்: தெலுங்கு தேச நண்பர் ராகேஷ் சடலவாடா
http://telugu.oneindia.in/movies/chennaichat/2011/10/7th-sense-face-ban-at-sri-lanka-aid0071.html

அஜுவத் said...

சூப்பர் பதிவு அண்ணா; கிளைமெக்ஸ் ல சூர்யாவின் திடீர் அவதாரம் ரொம்ப உறுத்துகிறது......... ஒரு சமையல் காரனின் மகன் சமயக்கட்டு பக்கமே போகாம expert சமையல் காரணாவது எப்படி???

நிராதன் said...

நானும் யோசிச்சனான் அவன் ஏன் நோக்குவர்மத்தை ஸ்ருதிக்கே பாவிச்சிருக்கலமே , நோக்குவர்மம் என்ன அவ்வளவு சிம்பிளா எண்டுற ரெண்டு விசயமும்?
ஆனாலும் தமிழன், தமிழ் எண்டுற ரெண்டு உணர்வையும் வியாபார யுக்தியாகவே முருகதாஸ் கையாண்டிருக்கிறாரே தவிர வேற ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.
இத பாத்து எங்கட சனமும் ஏமார்ந்து ரோஷம் அது இது எண்டு கதைக்கிறாங்க.

Buஸூly said...

7 ஆம் அறிவு ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளிற்கு எதுவுமே இல்லாத ஒருபடமாக ஆகி விட்டது... குறிப்பாக கண் வித்தை சண்டை காட்சிகள் கிராபிக்ஸ் என்று படம் ஒரு கோமாலி கூத்தாய் மாறி போனது ஆரம்பத்தில் ஏதோ ஒரு விறு விறுப்பு இருப்பதாய் தோன்றி அது நம்மை ஆக்கிரமிப்பதற்குள் சொதப்பல் ஆரம்பம். ஷ்ருதி ஹாசன் எதற்கு இவரை இந்திய ஊடகங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறதோ தெரிய வில்லை இவரின் அப்பா தானே கமல் இவர் இல்லையே..... படம் முழுக்க வந்தாலும் எங்கயுமே இவர் காட்சிக்கு பொருந்தினமாதிரி தோணவே இல்ல. சுருக்கமா சொல்லனும்னா இவர் கதாநாயகி என்ற அந்த விடயத்தில இருந்து இனி வார படத்தில இருந்து நீங்கினா நல்லா இருக்கும்.

7 ஆம் அறிவு=5 ஆம் அறிவு

Anonymous said...

சினிமாகாரர்களுக்கு தமிழன் என்பது ஒரு BRAND மட்டுமே... அது புரியாமல் தமிழ் நாட்டில் எல்லோரும் தமிழன் (அ) தமிழ் என்றெல்லாம் ஜல்லியடித்து சந்தோசபட்டுகொள்ளலாம்..

இன்னும் சிறிது நாள் கழித்து கொஞ்சம் மலத்தை பாக்கெட் செய்து தமிழனின் மலம் என்று விற்றாலும் அதையும் வாங்கி நக்கி பார்பான் "தமிழன்"

shrek said...

i watched telugu version. they don't say bodhidharma is telugu in that. they still say he is a Pallava prince from kancheepuram only.

instead of 'tamilan', they say "our" "south indian", proud to be south indian/indian/culture/tradition...etc.

சுதர்ஷன் said...

// தயாரிப்பாளர் உதயநிதியும் சொல்வதை நாம் நம்பினால் தெலுங்கில் போதி தர்மன் ஆந்திராவிலே பிறந்ததாகக் காட்டி தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறார்களாம்.// அப்படியெல்லாம் வரவே இல்லை . நானே உதயநிதியிடம் டுவிட்டேரில் கேட்டு உருதிபப்டுத்தி கொண்டேன் . நீங்க விசாரிக்காமலே,சரியென தெரிந்துகொள்ளாமலே இடுகிறீர்ர்களே !!!

tfabian12 said...

Great Review . ! I think they followed Wrong advertising strategies, that's the big mistake they did , it comes automatically i guess when you Join with Sun Pictures or Red Giant movies.Still We should welcome the some new Concept We have never seen, which differs from the masala fever thamil cinema is undergoing . Anna i think you have something against women who are fair .. I can remmber once you dint like Tapsee as well :D in one of your post. For Shruthi's acting was not artficial as Shreya or Thamana or even Asin . Thats what i liked about her

Anonymous said...

http://kalaiy.blogspot.com/2011/10/blog-post_30.html

Nirosh said...

மிகச் சரியான விமர்சனம் அண்ணா..!

i'm said...

any way get pleasure that even the Tamil film introducing at least scientific concept among the people apart from the formal films, making people to thing some thing scientifically.....

Suresh said...

Rightly said in the last line.They have used tamilar/tamil to earn money.I have sent tweet to Udayanidhi the same but he did not replied.
It is a normal no boring movie but the Hype that Suriya/ARM and Uday given and giving is non tolerable

anu said...

அண்ணா உங்களது திரைப்பட விமர்சனம் என்பதற்கு அப்பால் கூறியுள்ள வரலாறு, விஞ்ஞானம்,பழமை சம்பந்தமான கருத்தின் சாரம் மிக பிழையானது. இது தொடர்பான "ஆதார பூர்வமான" விவாதத்துக்கு நீங்கள் தயாரா? இது நான் விடுக்கும் ஆக்கபூர்வமான சவால்......!!!

அமரேஷ் said...

7ஆம் அறிவு திரைப்படத்தை ஊடக விளம்பர படுத்தல்களினூடாக பார்க்கிற போது உங்களின் ஆதங்கம் ஓரளவுக்கு சரியென கொள்ளலாம்...இந்த திரைப்படம் உன்மைச்சம்வம் பற்றியது என நினைத்து பார்த்ததற்கு இத்துணைவருசம் திரைப்படங்களை (என்னை விட எத்தனையோ மடங்கு அலசி ஆராய்ந்து பார்த்த நீங்களும்) எதிர்பார்ப்புக்களுடன் போனது எனக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது...தவிர நீங்கள் எனக்கு நேரில குறிப்பிட்டது போல படத்தில் வந்த மசாலாவை என்னால் பார்த்து ரசிக்க முடியாமல் போனது உன்மை தான்...தேவையற்றது...ஆனால் முருகதாஸ் சமுக சேவையாளன் அல்ல...அல்லது கருணாநிதி போல தமிழருக்காய் உசிர் விடுபவரும் அல்ல..அவர் ஒரு இயக்குநர்...லாப நோக்கங்களை அடிப்படையாக கொண்டவரே...அந்த வகையில் பல ரகத்தவர்களையும் கவரும் வகையில் மசாலாவை உட்புகுத்தியிருக்கிறார் என்ற அடிப்படையில் அதை விட்டிடுவம்..போதிதர்மன் கதை எனக்கு/தமிழனுக்கு முக்கியம் எண்டதை விட முக்கியமானது சூர்யா கடைசியில கதச்சது...எனக்கு அதை கேவலப்படுத்தியது மிகவும் மனவேதனையாயுள்ளது என்பதை உங்கள் பதிவின் சுமாரான ரசிகனாக சொல்லிக்கொள்ள விரும்புகிரேன்..உங்களுக்கு அல்லது உங்களோடு பழகுபவர்களுக்கு அதெல்லாம் தெரிந்திருக்கலாம்..ஆனால் கோயில் போய் சாமி குபிடுற 90%ற்கு இது இன்று தெரியாது என்பது தான் உன்மை...அது மிக அவசியமான கருத்து...”இதெல்லாம் தெரியும் போடா” எண்டு சொன்ன எத்தின பிக்காலிகள் அவற்றை இன்று கடைப்பிடிக்கிறார்கள் என்றால் எந்த கொம்பனும் இல்லை...நீங்களும் இல்லை நானும் இல்லை...ஏனென்றால் பசன் இல்லை.அதை சொல்வதை கேவலப்படுத்தியவர்கள் பரிதாபத்திற்குரீயவர்கள்...இன்றும் சாமி என்று சொல்லி எவ்வளவோ விசயத்தை சரியாக பின்பற்றாத எம்மவர் நிறைய பேர் இருக்கின்றனர்..அவர்களுக்கு சினிமா பாத்து விசயம் விளங்காது...சினிமாவை வைத்து அவர்களுக்கு எவனாச்சும் விளங்கப்படுத்த முடியும் என்பது ஒரு பக்கம்..நல்லதை தானே சொன்னான் அதுக்கு ஏனய்யா இந்த எதிர்ப்பு.....போஒதிவர்மன் கதை கதையாகவே புனைகதையாகவே (வழமை போல இத்திரைப்படத்தில் வரும் கதை கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜத்தில் வாழ்ந்தவர்களையோ வாழ்பவர்களையோஒ சித்தரிக்கவில்லை எண்டு முருகதாஸ் சொன்னதாகவே கருதலாமே...விளம்பரப்படுத்தல் என்பது அவர்களுடைய உத்தி..அதை பார்த்து வாயை பிளப்பது நம்ம புத்தியாயிருக்கலாமா?...விளம்பரத்தை நம்பிய எங்களுக்கு ஏமாற்றம் என நீங்கள் கருத்து பகிர்ந்தால் நான் உங்கள் கட்சி (ஆயிரத்தில் ஒருவனாக).....தமிழன் எண்டு சொல்லி தமிழ்நாடு, இந்தியா,உலகம் ஏன் இலங்கைத்தமிழன் கூட இன்று வியாபாரம் தானே செய்கிறார்கள்..இது ஒன்றும் எனக்கு புதுசு இல்லை..பள்ளிக்கூடமோ, சனசமுக நிலையமோ,பல்கலைக்கழகமோ, அல்லது தமிழ் வளர்க்கும் சங்கமோ தமிழ் சார்ந்து பேசுவதற்காக ஒரு சமுகத்தில இங்காணப்பட்ட ஒரு தமிழனை கூப்பிட்டால், பிளைற் ரிக்கட் தருவியா? ஸ்ரார் ஹோட்டல்ல தங்கவைப்பியா? எவ்வளவு பீஸ் தருவாய்? போக்குவரத்து செலவு தாறியா? சிலது வெள்ளக்காறிய கூட்டித்தாறியா எண்டு கூட கேக்குதுகள்...இந்த லட்சணத்தில இந்த படத்தில இலங்கைத்தமிழன கெடுத்திட்டான் எண்ட ரேஞ்சில கொந்தளிக்கிரது கொஞ்சம் ஓவர் தான்..மேலும் சூர்யா விக்ரம் ரசிகன் எண்டு சொல்லி என்ர வட்டாரத்துக்குள்ள யாரயும் நான் கண்டதில்ல..அவர்களின்ர நடிப்புக்கு நாம ரசிகரா இருந்து தான் ரசிக்கணும் எண்டு அவசியம் இல்லை..சில பொம்ம்புளப்பிள்ளையள் சூர்யாவுக்கு விசிறிகளா இருக்கிறத கண்டிருக்கன்.நானும் சூர்யா ரசிகன் இல்லை...அஜித் ரசிகனும் இல்லை..

Anonymous said...

படம் பார்த்துவிட்டு வரும் ஒவ்வொருவருக்கும் "நான் தமிழன்டா" என்ற உணர்வு வந்தால் அதுவே படக் குழுவினருக்கு கிடைத்த வெற்றி தான்.... எதிர் மறையான விமர்சனங்கள் தமிழ் உணர்வை அவமதிக்கின்றன... குறைகளை கூறி பெயர் தேடுவதை விட்டுவிட்டு தமிழுக்காக உங்களால் முடிந்ததை செய்யுங்கள்... முடியாவிடில் முனைபவர்களையாவது ஊக்கபடுத்துங்கள்.......

கார்த்தி said...

7ம் அறிவு பற்றி நீங்கள் சொல்லியிருக்கிற கதை எடுக்கப்பட்ட விதம், படம் சம்பந்தமான விமர்சனத்தில் எனக்கு 95% உடன்பாடு பெரும்பாலனவர்களுக்கு அப்பிடிதான்!! Ar.Murugadas சொதப்பிவிட்டார்.

அனால் மற்றய கருத்துக்களில் எனக்கு பலவற்றில் உடன்பாடு இல்லை. என்னதான் அவர்கள் பிசினசுக்காக செய்திருந்தாலும் எங்களின் சில பிரச்சனைகளை தெரியாத தமிழருக்கும் கொண்டு சேர்த்ததில் நான் மகிழ்வடைகிறேன். இன்னும் எம்மவர்களின் விடயங்கள் தெரியாம தமிழ் நாட்டில ஏன் இங்கயே கனக்க பேர் இருக்கினம். மேலும் தமிழர்களாலும் புதிய முயற்சிகள் செய்ய முடியும் என்று உத்வேகத்தை இந்தபடம் பலருக்கு கொடுத்திருக்கிறது.

ஏன் பதிவர்கள் நாங்களும் பல எம்தமிழ் மக்களின் பிரச்சனைகளை பதிவுகள் மூலமாக எழுதிவருகிறோம். ஒருத்தன் ”நீ சும்மா பேமஸ் ஆகதான் எழுதுறாய்” எண்டு சொன்ன எங்களுக்கு எப்பிடியிருக்கும்.
So அவர்கள் என்னத்துக்கு செய்தார்களோ தமிழர்களை பற்றி சொன்னார்கள் எண்டு நினைச்சு எதிர்த்து அப்பிடி செய்யேலா எண்டு சொல்றதிலயும் விட எதிர்ப்புக்குரல் எழுப்பாம விடுறது நல்லது எண்டுறதுதான் என்ர கருத்து. இதுவரை பல தமிழ்சினிமாவில கூடி பிழையான விதமாக காட்டப்பட்ட எங்களை இப்பவாவது கொஞ்சம் நல்ல மாதிரி கதைக்க வெளிக்கிடுறாங்க என்று சொல்லி கவலையாவது படாம இருக்க வேண்டியதுதான்!!!
இதில சிலர் 7ம் அறிவை ஏன் புறக்கணிக்கோணும் எண்டு வேற காரணங்கள் சொல்லுறாங்க. அத தாங்கவே முடியல..
என்னதான் உள்நோக்கங்கள் இருந்தாலும் சாதாரண தமிழனாக என்ர கருத்து இதுதான்!

kathering said...

fantastic review...just murugadass failed to make d perfect mixture of midline- story....7th Sense - Compile Error!!!

kathering said...

fantastic review loshan...but 7th sense having worth infos,just murugadass failed to make d perfect mixture of midline- story....7th Sense - Compile Error!!!

கார்த்தி said...

சார் மினக்கெட்டு நான் அடிச்ச காமெண்ட காணல சார்!!!

Hee hee. I'm paavam said...

Btw, big hole in the film.


A person cannot be forced to do evil things that he/she doesn't want to do if he's under hypnotism.
So, strangers attacking Surya and Shruti is NOT possible.
And police killing themselves and shooting within themselves isn't possible.

Read more:
http://factoidz.com/can-people-be-hypnotized-and-forced-to-do-evil/


// Though people under the spell of hypnosis are in a heightened state of mind, they are not unconscious. Thus they cannot be forced to do evil or harmful activities against their will. Also, the effects of hypnosis do not last for days or weeks. Thus people cannot be forced to steal or commit murder under hypnosis. That people can be hypnotized to do evil and harmful activities is a myth that has spread among people through fiction, and it is indeed a fictitious idea. People can be made to do only those things that they consciously wish to do. Only thing, under hypnosis they tend to lose their inhibitions and fears for some time, which helps them in the long run for good activities.

Further, a person cannot be hypnotized against his/her will. As to whether a person should subject himself to hypnosis by another person, there are varied opinions. I would personally caution you against it. //

May be MurugaDOSS should've googled a bit more.

கன்கொன் || Kangon said...

இலங்கை தணிக்கைக்குழுவினருக்கு நன்றி.
குறித்த காட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட பின் ஓரளவாவது பார்க்க முடிந்தது.
குறித்த காட்சிகள் இருந்திருந்தால் சிலவேளை படத்தை வெறுத்திருப்பேன். ;-)

ஹி ஹி... நான் பாவம். ;-)

Sen said...

உங்களை போல நானும் சுஜாதா 7m அறிவு படத்தில் பணியாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்தேன் !!!

Unknown said...

ஹாய் அண்ணா,என்னை பொறுத்தவரையில் இந்த படம் எல்லா தமிழனுக்கும் நன்றாக பிடிக்கும் என்றே சொல்ல வேண்டும். இப்படியான விஞ்ஞானம் + வரலாறு கலந்த படத்தை நாம் வரவேற்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லோரும் பிழை விட்டு தான் திருத்தி கொள்வது வழமை இது ஒரு மைல் கல்லாக இருக்கும் முருகதாஸ்ற்கு. இதையே ஆங்கில படமாக யாரும் எடுத்திருந்தால் மொழி தெரியாமல் வாயை பிளந்து பார்த்துவிட்டு வருவாங்க .... என்ன செய்வது இது ஒரு தமிழ் படமாக போச்சே அதான். இப்படி விமர்சனம் எழுதுவதால் இதை படித்து விட்டு இந்த படத்தை பார்க்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர். நல்ல சாதாரண படைப்புகளுக்கு விளம்பரம் செய்யுங்கள் என்று சொல்லுரிங்கள் இப்படி விமர்சனம் எழுதினால் எப்படி படம் பார்க்க எண்ணம் வரும்.லோசன் அண்ணா சொல்லி இருப்பது சரியாக இருக்கலாம் அனால் படம் திரை அரங்குகளில் ஓடும் போது இப்படியான கட்டுரைகளை வெளிவிடுவது சரியில்லை. இந்த விமர்சனத்தை காலம் தாழ்த்தி வெளியிட்டால் கட்டாயம் நான் வரவேற்பேன்.

jay said...

அண்ணா நீங்கள் ஒன்றை கவனிக்க மறந்து விட்டீர்கள் போல உள்ளது
dong லீ police ஸ்டேஷன் இல் இருந்து வெளியே வரும் பொது ஒரு கணணியை உடைத்து அதன் ஒரு பகுதியை கழற்றியதை அவதானிக்க வில்லையா?
அதுதான் அவன் போலீஸ் ச்டடிஒனில் செய்த அட்டூழியத்தின் வீடியோ காட்சி அது இல்லாமல் யாராலும் அவனை அடையாளம் காட்ட முடியாது தானே?
அண்ணா படம் முடிந்து வெளியே வந்ததும் நாமும் தமிழர் என்ற எண்ணம் தான் மேலோங்கியது.நமக்கும் வரலாறு இருக்கிறது என புரிந்தது

Unknown said...

7 ஆம் அறிவு படம் ஹிந்தில் ரீமிக் பண்ணவே இல்லை தெரியுமா .... இந்த செய்தி ஒரு வதந்தி இதை நம்பாதீர்கள். அதாரம் http://www.indiaglitz.com/channels/tamil/article/73442.html

Unknown said...

//தமிழனின் வீரத்தைத் தான் காட்ட இந்தப் படம் என்று முருகதாஸும், சூரியாவும், தயாரிப்பாளர் உதயநிதியும் சொல்வதை நாம் நம்பினால் தெலுங்கில் போதி தர்மன் ஆந்திராவிலே பிறந்ததாகக் காட்டி தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறார்களாம்.
(அவ்வாறு குறிப்பிடப் படவில்லை என்றும் இன்னும் சிலர் சொல்கிறார்கள்.. தெலுங்குப் பதிப்புப் பார்த்தவர்கள் ஆதாரப் படுத்துக)//

ஆதாரம் : http://www.indiaglitz.com/channels/tamil/article/73442.html


A rumour sparked off on networking sites (read facebook and twitter) that '7aum Arivu's dubbed version in Telugu and Hindi (although there is no version in Hindi!) portrays the story as if Bodhidharma were from Guntur in Andhra Pradesh and Dharavi in Mumbai in the respective versions, and that this, is putting down the pride of Tamilians.

Ridiculed by such irrelevant and baseless rumours, Udhayanidhi Stalin, producer of '7aum Arivu' expressed, "People who cannot deal with 7aum Arivu's enormous success are spreading unnecessary rumours! Even in our Telugu version Bodhidharman is from Kanchipuram".

Reportedly, '7aum Arivu' that opened a day prior to 'Velayudham' and thanks to the five day festival weekend and five shows permitted by the government, the film has grossed a little over than 'Velayudham'.

Having released on October 25, Suriya's biggie, '7aum Arivu' has opened to mixed reviews.

சுதாகரன் said...

எனக்கு வேலாயுதம் பார்த்த பிறகு 7ம் அறிவு பார்த்தபடியால் 7ம் அறிவு பரவாயில்லை அல்லது நல்லதாக பட்டது.எல்லாரும் தமிழரை/எங்களை பற்றி சும்மா கதைப்பதால் சில நல்ல உணர்வுகளும் கொச்சைப்படுத்த படுகின்றன.இதுவும் அதுவாக இருக்கலாம்.ஒரு வீரபாண்டிக்கட்டபொம்மன் எப்படி இருந்திருப்பார் என்று எங்களுக்கு அந்த படம் மூலம் தெரிந்த மாதிரி இந்த போதிதர்மனை பற்றி இப்படம் மூலம் தெரிந்திருக்கின்றது..அது நல்ல முயற்சியே..

J.P Josephine Baba said...

நானும் படம் பார்த்தேன். சிறப்பாக என் மனதில் எழுந்த பல கேள்விகளும் கேட்டுள்ளீர்கள். போதி தர்மர் பற்றி உங்களை போன்றே இணையத்தில் தேடும் அறியும் வாய்ப்பை தந்தது. மேலும் DNA, Biological war போன்றவை பற்றி சாதாரண மக்களுக்கும் ஒரு புரிதல் கிடைத்திருக்கு. ஹிப்நோட்டிசம் தான் அவர் சொல்ல வந்த கருத்தையே முழுங்கி விட்டது. பரவா இல்லை. வித்தியாசமான கதை பாராட்டுவோம்!

ARM said...

mokka Vijay paddamtha vida ethu paravaiyillai.

Anonymous said...

எனது தளத்தில் நான் சோம்பலாக எழுதிய பதிவு இலங்கையில் GCE O-L, GCE A-L, University மாணவர்களுக்கு உதவ ஒரு தளம்-பரீட்சை வழிகாட்டி

nrtharsan said...

முருகதாஸ் கூறியதுபோல் உலகதரத்துக்கு இல்லாவிட்டாலும் அதற்க்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்
அதிக எதிர்பார்ப்பு எப்பொழுதும் ஏமாற்றத்தை தரும் என்பார்கள் அதற்கு விதிவிலக்கல்ல ஏழாம் அறிவு!
நீங்கள் கூறியதுபோல்
முதல் இருபது நிமிடங்கள் - சூர்யாவின் அமைதி தவழும் முகமும், பின்னணி இசையும், தவிர மிகுதி எல்லாமே ஏமாற்றம் தான் ! நிறைகளைவிட குறைகளே அதிகம்.

uthaya said...

I did not see the film .but i never accept your post.bcos mankaatha vitku neenkal kodutha build up parththu emanthavarkalil nanum oruvar. so i never trust in your 7th sense post..

Anonymous said...

SURYA worshipping idiots

http://www.indiaglitz.com/channels/telugu/review/13909.html

Puvisuthesh Sri said...

தமிழ் பெருமை பெற்றது.
நன்றி முருகதாஸ்

http://www.indiaglitz.com/channels/telugu/review/13909.html

A scene where Shuba is supposed to present her thesis idea ends up being a badly-written lecture on the antiquity and greatness of Telugu.

Anonymous said...

Anna plesae write about latest hottes pakistan spot fixing and we are waiting for that blog

Niros said...

விஜய் அஜித் மசாலா படங்களை லாஜிக்கே பார்க்காமல் ரசிக்கிறோம்... அனால் இப்படி கொஞ்சம் கதையோட யாராவது படம் எடுத்தால் தான் முட்டையில மயிர் புடுங்குரம்.
உங்களுக்கு படத்த விளம்பர படுத்திய விதம் தான் பிடிக்கல.... அதால தான் படத்த பிடிக்கல...
செல்வா மாரி இதையும் சத்தம் இல்லாமல் விட்டால் படத்து ஆஹா ஒஹோ எண்டு எழுதி இருப்பீங்கள்...
முருகதாஸ் விட்ட ஒரே பிழை படத்தை சண் டிவியிடம் கொடுத்தது தான்...

Anonymous said...

திரைப்படத்தின் கடைசிப்பகுதி முக்கியமானமது. ஒரு இனம் அழிக்கப்படுவதென்பதன் உச்சக்கட்டம் அதன் மொழி கலாச்சாரம் என்பன சிதைக்கப்படுவது. இனத்தின் ஆவணங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதை தடுத்தால் அந்த இனம் வீரியம் குறைக்கபடும் என்பது அரசியல் விஞ்ஞானம். தமிழகத்தில் இருந்த ஆவணங்கள் படை எடுப்புகளால் அழிக்கப்ட்டது போல் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் திருடிக் கொண்டு சென்றது போல் ஒரு வரலாற்று அழிப்பு நவீன 20ம் நூற்றாண்டில் ஈழத்தில் தமிழினத்தின் மீது நாடாத்தப்ட்டது, மிச்சமிருந்த தமிழின ஆவணங்களையும் திட்டமிட்டு சிறிலங்கா அரசு அழித்தது என்ற வரலாற்று கடமை மிக்க செய்தி ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் சொல்லப்ட்டிருக்கிறது.

AUM - The Unique said...

லோஷன் உங்களது பல திரைப்பட விமர்சனகளை படித்து சில படங்களை மாத்திரம் பார்த்து உள்ளேன். ஏன் எனில் உங்கள் விமர்சனம் 70% கதையை தெள்ள தெளிவாக சொல்லிவிடும், வழமையான சினிமா போர்முல விற்ற்க்குள் அடங்கியும் விடும். நீங்கள் மன்மத அம்புவிட்க்கு கொடுத்த விமர்சனம் ஆஹா ஓஹோ... ஆனால் படமோ சொதப்பலோ சொதப்பல்.... இலகுவில் எந்த திரைப்படத்தையும் தவறாக கூற மாட்டார் என்கின்ற அபிப்ராயமே உங்கள் விமர்சனம் எப்போதும் தந்தது. முதல் முறையாக ஒரு திரைப்படத்துக்கு எதிர்மறையான விமர்சனம் தந்து உள்ளீர்கள். அது எனக்கு திரைபடத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்கின்ற உத்வேகத்தை அதிகரித்தது. ஒருவாறு பார்த்து முடித்ததும் உங்களுக்கு எழுதுகிறேன்.

7ஆம் அறிவு வரலாற்று பதிப்பு . எப்படி சிவாஜியின் கட்டபொம்மன் தமிழ் வரலாற்று பதிப்போ , நாளைய உலகத்துக்கு போதிதர்மன் என்ற அற்புத மனிதரை அறிய கிடைத்த வைப்பு.

தமிழின் முதல் அர்த்தமுள்ள scifi movie. ஐயா சாமி, இது எந்திரனை விட பன்மடங்கு திருப்தி தருகிறது.

நிறைய நாட்களுக்கு பிறகு கதாநாயகி திரைப்படம் முழுதும் நிறைந்து உள்ளார்... உடலை காட்டுவதை விட அறிவை வெளிப்படுத்தி இருகிறார்கள். அதற்க்கு ஒல்லியான பெண் ok பா....

முருகதாஸ் தனது தமிழ் உணர்வை வெளிபடுத்த களத்தை பயன் படுத்தி கருத்து சொல்லியது தவறாக தெரிய வில்லை. இது பல வெட்டி punch dialog விட ஆறுதலாக இருக்கு

6ம் நூற்றாண்டு போதிதர்ம பற்றி தெரியாவிட்டாலும் பரவாயில்லை , இந்த நூற்றாண்டில் வாழும் எத்தனை தமிழனுக்கு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட விடயம் தெரியும்? அதை தெளிவுபட உரைத்தது அருமை.

சாதாரண மசாலா படத்துக்கு பாவிக்கின்ற அளவு graphics தான் உபயோகித்து உள்ளார்கள். உங்களுக்கு எல்லாம் AVATAR போன்ற ஆங்கில படத்தை வரவேற்ற்க முடியும் என்றல், நம் ஆதி அறிவு, வீரம் பற்றி காடும் படத்தை ஆதரிக்க ஏன் இத்தனை எதிர்ப்பு?

என்னை பொறுத்த வரை, ௭ஆம் அறிவு ஒரு ஆவணம் !

Rifnaz.A.M said...

http://www.youtube.com/watch?v=IJTDwnellTM&feature=related

நமக்கு ஆறறிவு மட்டுமே போதுங்க்னா said...

ஏழாம் அறிவு தரத்தில் உசத்தி, தமிழனின் பெருமையைத் தலையை சுத்தி நிமிர்த்தி இருக்கு அப்பிடில்லாம் வெட்டிப் பேச்சும் வீராப்பும் பேசும் மரத்த தமிழன்களே, தமிழச்சிகளே -

இதையும் கொஞ்சம் கவனிங்க.லாஜிக்க்குன்னு ஒரு மேட்டர் இருக்கே.


போதி தருமரைப் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களில் எது உண்மை எது புனைவு என்று உறுதியாக எதுவும் சொல்லிவிடமுடியாது. அந்தவகையில் ஒருவர் தனக்கு உகந்த ஒரு கதையை உருவாக்கி முன் வைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அந்தக் கதையானது நம்பும்படி இருக்க வேண்டும்.
உதாரணமாக, போதி தர்மர் தமிழகத்தில் இருந்து சுமார் 17 வயதில் புறப்பட்டுப் போயிருக்கிறார். அப்போது அவர் எந்தப் புத்தகத்தையும் எழுதியிருக்கவில்லை. ஆனால், படத்தில் 17 வயதில் சீனாவுக்கு அவர் புறப்படும்போதே ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வதாகக் காட்டப்படுகிறது. அதிலும் அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த அரிய புத்தகத்தை ஏதோ லெண்டிங் லைப்ரரியில் இருந்து எடுத்துச் செல்வதுபோல் கதாநாயகி ஜோல்னா பையில் போட்டு எடுத்துச் சென்று படித்துவிட்டுத் திருப்பிக் கொடுக்கிறார். அதில் ஜெனட்டிக் மெமரி பற்றியெல்லாம் எழுதப்பட்டிருப்பதாக அடித்துவிடுகிறார். சீனாவில் கொடிய நோய் ஏற்பட்டது போதிதருமருடைய குருவுக்குத் தெரிந்திருந்ததாகவும் அதைக் குணபடுத்தத்தான் அங்கு போனதாகவும் இஷ்டத்துக்கு ஒரு கதை புனைகிறார்.
அடுத்ததாக, போதி தருமர் போடும் சண்டை இருக்கிறதே… சந்திரமுகி படத்தின் அறிமுகக் காட்சியில் சூப்பர் ஸ்டார் காலாலேயே புயலை வரவைத்ததுபோல் போதிதருமர் இரண்டு கைகளிலும் தலா இரண்டு விரல்களால் ஒரு சுழற்று சுழற்றி மினி புயலை உருவாக்கி அதைக் குறிபார்த்து எதிரிகள் மீது ஏவியும்விடுகிறார். போதிதருமரை தமிழ்ப்பட ஹீரோ ரேஞ்சுக்கு கீழிறக்கியதைத்தான் உலகத் தமிழர்கள் நெஞ்சு நிமிர்த்திப் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டுமா? கைக்குக் கிடைக்கற கதாபாத்திரம் யாரா இருந்தா என்ன… கயிற்றைக் கட்டி சண்டை போட வைக்கத்தான் தெரியும் என்பதை ஊரறிய உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதை எப்படி ஒரு தமிழன் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும்?

நமக்கு ஆறறிவு மட்டுமே போதுங்க்னா said...

அட சுத்த சூரியா மன்னிக்க சூனியப் புத்திங்களா ஒண்ணா ரெண்டா லாஜிக் ஓட்டைகள்.
ஆயிரக் கணக்கில் இருக்கே.
ஒன்னொன்னா எடுத்துப் போட்டா உசிர் போயிடும்.
மக்களா தயவு செஞ்சு வாசிச்சு ஏழாம் அறிவா இது ஏழரை சனியான்னு பாத்துத் தெரிஞ்சுக்கோங்க.
லோஷன் அண்ணாச்சி முன்னாடி அனுப்பின கமேண்டைக் குப்பைக் கூடைக்கு அனுப்பின மாதிரி இதையும் செய்யாம பப்ளிஷ் பண்ணுங்க.
உங்க வாதத்துக்கு ச்ப்போர்ட்டாத் தானே பேசிட்டிருக்கேன்.

http://www.tamilpaper.net/?p=4628

Anonymous said...

Though this movie is not up to the expectation, this I feel is a watchable movie. First of all you had great expectation on the movie, and then the way murugadoss was exaggerating made you feel that these guys are trying to fill their box office by using tamils / srilankan tamils. Then it came with SUN banner which you dont like. All these had a negative approach on the way you saw this movie. If you leave all these things and watch this movie, i think you wont regret. Its a good attempt rather than a normal masala entertainer.

Anonymous said...

போதி தர்மன் ஒரு தமிழன் என்று இப்படத்தை பார்த்து தான் அறிந்து கொண்டேன். குங் பு கலை எங்களிடம் இருந்து தான் போனந்து என்று நினைக்க பெருமையாக இருக்கிறந்து. கடைசியில் சொன்ன செய்திகளும் எனக்கு புதிதே. மஞ்சள் , கோலம் எல்லாம் எதற்கு பயன்பட்டது என்று இப்போ தெரிகின்றது. மற்ற படி பார்த்தல் பாடல்களும் தங்க்லீஷ் தமிழும் மொக்கை கிராபிக்ஸ் எல்லாம் தாங்க முடியவில்லை.....

நானும் சூர்யாவின் ரசிகை தான் ஆனால் எல்லா பாடல்களுக்கும் காட்ட வேணுமா ?

இந்த படம் ஈழ தமிழர் எங்களுக்கு சமர்பனாமா? எங்கள் உணர்வுகளை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம்.... அது என்ன பக்கத்துக்கு நாடு எண்டு மறைமுகமா சொல்லி இருக்கு ? முருகதாஸ் அவர்கள் நேரடியாகவே சொல்லி இருக்கலாம் தானே.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner