November 30, 2011

புதிய ஆஸ்திரேலியா, புதிய இந்தியா - சச்சின் 99 not out ?? + கலக்கும் அஷ்வின்


டெஸ்ட் போட்டிகள் வர வர மந்தமாகின்றன; ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் வெறுத்து விட்டன; டெஸ்ட் போட்டிகளை நேரடியாப் பார்க்க வரும் ரசிகர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் பார்ப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று சொல்பவர்களில் ஒருவரா நீங்கள்?

நடந்து முடிந்த ஆஸ்திரேலிய - தென் ஆபிரிக்க கிரிக்கெட் டெஸ்ட் தொடர் பார்த்தால் நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொண்டிருப்பீர்கள் உடனடியாக.
ஆனால் இரண்டே போட்டிகளுடன் முடிந்துபோனது தான் கவலை.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எவை இல்லை?

சிரேஷ்ட வீரர்களின் இட இருப்புக்கான போராட்டம், அறிமுக வீரர்களின் அமர்க்களம், வேகப் பந்துவீச்சு மிரட்டல், துடுப்பாட்ட வீரர்களின் துணிச்சலான பதிலடி, தலைமைத்துவங்களுக்கான சவால்கள், மாறி மாறி அசைந்த வாய்ப்புக்கள் என்று ஒரு சுவையான முழு உணவை கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ட உணர்வைத் தந்தது இந்த டெஸ்ட் தொடர்.

முதல் போட்டியில் 47க்கு படுமோசமாக சுருண்டு தோற்றுப் போன அணி, தனது மனவுறுதி எல்லாம் குலைந்து போகும் என்று பார்த்தால், அடுத்த போட்டியில் தமது முக்கியமான வேகப் பந்துவீச்சாளரும் இல்லாமல் (ரயன் ஹரிஸ்), முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர் ஷோன் மார்ஷும் இல்லாமல் அறிமுக வீரர் + தள்ளாடும் அணியொன்றுடன் நம்பிக்கையாக மோதி வெற்றியீட்டியது டெஸ்ட் போட்டிகளுக்கே உரிய ஒரு சுவாரஸ்யம்.

பதினெட்டு வயதே ஆன பட் கமின்ஸ் அறிமுகப் போட்டியில் என்ன ஒரு அற்புதமான பக்குவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்தவர்களைப் பின் தள்ளி தனது அணிக்கு ஆதிக்கத்தைப் பெற்றுத் தந்ததாக இருக்கட்டும்; பின் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் பக்குவமாக ஆடி வெற்றி இலக்கை நின்று அடைய உதவியதாகட்டும் கமின்ஸ் ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் தான்.

இதே போல தென் ஆபிரிக்க அணியின் கண்டுபிடிப்பாக அமைந்தவர் வேகப் பந்துவீச்சாளர் வேர்னன் பிலாண்டர். இவர் முன்பு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சகலதுறை வீரராக அறிமுகமானபோது எனக்கு நீண்ட காலம் இவர் நிற்பார் எனத் தோன்றியது.. ஆனாலும் காணாமல் போய் இப்போது மீண்டும் புயலாக வந்துள்ளார்.

தென் ஆபிரிக்காவின் நீண்டகாலத் தேடலாக இருந்த மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக பிலாண்டர் கிடைத்திருப்பது இலங்கைக்குத் தான் பெரிய இடியாக அடுத்து அமையப் போகிறது.

தென் ஆபிரிக்கத் தொடரை வெற்றி தோல்வியின்றி வெற்றிகரமாக முடித்துக் கொண்டதன் மூலம் மைக்கேல் கிளார்க் இதுவரை தொடர் ஒன்றையும் தோல்வி காணவில்லை என்று பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.
அடுத்து நியூ சீலாந்தும், இந்தியாவும் அதை விட அதிகமாக அச்சுறுத்தும் காயம் + உபாதைகளும் சைமன் கட்டிச்சின் குடைச்சலை விட மைக்கேல் கிளார்க்கை வதைக்கலாம்.

இதேவேளை இந்தத் தொடர் தான் இறுதி என்ற நிலையில் ஒரு மயிரிழையில் தொங்கிக்கொண்டிருந்த ரிக்கி பொன்டிங் , பிரட் ஹடின் ஆகியோரின் கிரிக்கெட் நாட்கள் இறுதி டெஸ்டின் வெற்றியும் அந்த வெற்றியில் இவர்களின் போராட்டமான பங்களிப்பினூடாகவும் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அந்த வெற்றியில் நின்று ஆடி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மிட்செல் ஜோன்சனின் பந்துவீச்சு மீண்டும் தறி கேட்டு அலைகிறது. அணியை விட்டுத் தூக்குப்படு முன்னர் காயம் அவருக்கு கௌரவமான விலகலை வழங்கியுள்ளது எனலாம்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு இது மாற்றங்களுக்கான காலம். முதலில் அணி, பின் தலைவர், அதன் பின் தேர்வாளர்கள்; இப்போது இறுதியாக புதிய பயிற்றுவிப்பாளரும் தேர்வாகியுள்ளார்.

தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்.
தோற்றுக் கொண்டிருந்த தென் ஆபிரிக்காவை கிரேம் ஸ்மித்தோடு இணைந்து இளம் வீரர்களை தேடிஎடுத்துக் கட்டமைத்து உருவாக்கிய பெருமைக்குரியவர்.
இப்போது ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து அதே போன்று ஒரு வரலாற்று மாற்றத்தை செய்யவேண்டியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அணிகளுக்கு தம் முன்னாள் வீரர்களைப் பயிற்றுவிப்பாளர்களாக ஏற்றுமதி செய்துகொண்டிருந்த காலம் மாறி வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை நாடி நிற்கிறது பரிதாப ஆஸ்திரேலியா.
மிக்கி ஆர்தர் தான் ஆஸ்திரேலியாவில் பிறக்காத முதலாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராம்.

ஆனால் ஆர்தரின் தாத்தா ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்று பரம்பரை ஆராய்ச்சி செய்து (அட ஏழாம் அறிவு மேனியாவோ? ;))பெருமைப்படுகிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia).

மிக்கி ஆர்தர் இந்தப் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக மேற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து அனுபவத்தைக் கற்றுள்ளார்.
நியூ சீலாந்துக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள தொடர் ஆர்தருக்கு (மைக்கேல் கிளார்க்குக்கும் தான்) முதலாவது சோதனை.

23 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அனுபவமற்ற ஒரு பந்துவீச்சு வரிசையுடன் களம் புகும் ஆஸ்திரேலிய அணியின் பீட்டர் சிடில் தான் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் -  25 டெஸ்ட் போட்டிகள். அடுத்தபடியாக நேதன் லயன் - 5 டெஸ்ட் போட்டிகள்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னருடன் மொத்தமாக மூன்று அறிமுக வீரர்களுடன் நியூ சீலாந்தை பிரிஸ்பேனில் சந்திக்கப் போகிறது ஆஸ்திரேலியா.

டேவிட் வோர்னர் - இந்த இடது கை சேவாக்கை நான் மிக்க ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். தனியே Twenty 20 Specialistஆக ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் முன்னர் இவரை ஒதுக்கி வைத்தாலும் படிப்படியான வாய்ப்புக்கள், பயிற்சிகள் மூலமாக டெஸ்ட் போட்டிகளுக்கான நல்ல முதலீடாக மாற்றியுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவின் மற்றொரு மத்தியூ ஹெய்டனாக வரட்டும். வாழ்த்துக்கள்.
நாவு ஊறக் காத்திருப்பது நியூ ஸீலாந்து மட்டுமல்ல; மேற்கிந்தியத் தீவுகளை நார் நாராக உரித்துப் போட்டுள்ள இந்தியாவும் தான்.

-------------

சச்சின் அதிர்ஷ்டசாலி தான். மேற்கிந்தியத் தீவுகளின் பலமில்லாத பந்துவீச்சு, பழகிய மும்பாய் ஆடுகளம் என்று இலகுவான சந்தர்ப்பங்கள் தவறிப்போனாலும் இலகுவான ஆஸ்திரேலிய பந்துவீச்சு வரிசை காத்திருக்கிறது.

படையலை ஆஸ்திரேலியாவில் கடவுள் படைக்கப் போகிறார் போலும்.
(சச்சின் ரசிகர்கள் 'விக்கிரமாதித்தன்' எனக் கோபிக்க வேண்டாம்; மனதில் வந்ததை சொன்னேன்)
சச்சின் மீண்டும் ஒரு தடவை சதம் தவறவிட்டது பலருக்கு அல்வா :) 99 சதங்கள் பெற்ற அந்த சிங்கத்தால் இன்னொன்று பெறவா முடியாது? அவரை ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அதிகளவில் அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
பாவம் சச்சின்.

அந்த மும்பாய் டெஸ்ட் போட்டி மற்றொரு மகத்தான, விறுவிறுப்பான போட்டி..
T20, ஒருநாள் போட்டிகளில் இப்படியான விறு விறுப்புக்களைப் பார்ப்பதை விட டெஸ்ட் போட்டிகளில் பந்துகளும், விக்கெட்டுக்களும், ஓட்டங்களும் இறுக்கமாகப் போட்டி போடும்போது அது ஒரு தனியான டென்ஷன் தான்..
இறுதிக் கட்டத்தில் டெஸ்ட் போட்டியொன்றில் பெறப்படக் கூடிய நான்கு விதமான முடிவுகளுமே பெறக் கூடிய வாய்ப்பு இருந்தது கூடுதல் சுவாரஸ்யம்.மேற்கிந்தியத் தீவுகளை white wash செய்யமுடியவில்லை என்பதைத் தாண்டி கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் நூறாவது சர்வதேச சதத்தை மீண்டும் ஒரு தடவை எதிர்பார்த்து ஏமாந்ததை எண்ணி எண்ணி இந்திய ரசிகர்கள் மனம் நொந்தாலும், நான்கு எதிர்கால முதலீடுகள் இந்தத் தொடர் மூலம் கிடைத்திருப்பதை எண்ணி நிச்சயம் பெருமைப்படவேண்டும்.


ரவிச்சந்திரன் அஷ்வின் - அணில் கும்ப்ளேக்குப் பிறகு, ஹர்பஜன் ஒரு சில தொடர்களைத் தனியாக வென்று கொடுத்த அந்தப் பொற்காலத்துக்குப் பிறகு இந்தியாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு அற்புதமான சுழல் பந்துவீச்சாளர் கிடைத்துள்ளார்.

முரளிக்குப் பிறகு (கிரேம் ஸ்வான், சயீத் அஜ்மல் ஆகியோரும் முப்பதின் நடுப்பராயத்தில் இருப்பதால்) இன்னொரு மிக நம்பிக்கை தரும் off spin பந்துவீச்சாளர் என்று அஷ்வினை இப்போதே கருதுகிறேன்.
இந்த மாதம் அஷ்வின் "என்னடா வாழ்க்கை இது?" என்று ஜாலியாக சொல்லலாம்.

கொல்கத்தா டெஸ்ட்டுக்கு முதல் நாள் திருமணம், அறிமுகத் தொடரிலேயே இரு போட்டிகளில் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது, தொடர் நாயகன் விருது, கன்னி சதம், அதே போட்டியில் ஒன்பது விக்கெட்டுக்கள், அதே போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு அனுபவமின்மை+ பதட்டத்தினால் சறுக்கியது.

சச்சினின் சதத்துக்கு எல்லோரும் தவம் கிடந்த நேரம் அனாயசமாக சதம் அடித்து, 'கொலைவெறி' மோகத்தில் கிடந்த உலகத்தை சில மணித்தியாலங்களாவது தன் பெயரை உச்சரிக்க வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார் இந்தத் தமிழர்.

ஒரு real masala mixture.

பிரக்யான் ஓஜா (கவாஸ்கருக்கு மட்டும் ஓசா) - நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு இரட்டை சுழல் இணைப்பு உருவாகிறது. சில நேரம் அஷ்வின் ஆதிக்கம் ; சில நேரம் ஓஜா ஆதிக்கம் என்று கலக்கலாக இருக்கிறது.ஆனால் எல்லா ஆடுகளங்களிலும் இந்தியா இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களோடு விளையாடுவது நிச்சயம் இல்லை என்கையில் யாருக்கு அணியில் இடம் என்ற கேள்வி தான் சுவாரஸ்யமானது.

உமேஷ் யாதவ் - மணிக்கு 140 km வேகத்தில் பந்துவீசுகிறார். தேவையான கட்டுப்பாடு,நிதானம், விக்கெட்டுக்களை எடுக்கும் ஆற்றல் எல்லாம் இருக்கிறது.
இந்தியா கொஞ்ச நாளாகத் தேடிக் கொண்டிருந்த ஒரு 'வேகமான' பந்துவீச்சாளர். நேற்றைய ஒரு நாள் சர்வதேசப் போட்டியிலும் மிக வேகமாகவும் அதேவேளையில் சீராகவும் பந்துவீசி இருந்தார்.
முன்னைய ஆஸ்திரேலிய தொடர்களில் இர்பான் பதான், சஹீர் கான், அஜித் அகர்கார், இஷாந்த் ஷர்மா பிரகாசித்தது போல இம்முறை உமேஷ் யாதவின் முறையா என்று கேள்வி எழுகிறது.

விராட் கோஹ்லி - யுவராஜ், சுரேஷ் ரெய்னா போன்றோருக்கு தற்காலிக bye சொல்லிவிடலாம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து. எதிர்காலத்துக்கான டிராவிட் + சச்சின் கலந்ததொரு அற்புத கலவை கோஹ்லி. ஒரு நாள் போட்டிகளில் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்த இந்த 'எதிர்கால இந்திய அணித் தலைவர்' டெஸ்ட் போட்டிகளில் தனக்கான இடத்தை நீண்ட காலம் தேடியும் இப்போது தான் கிடைத்துள்ளது.

மும்பாய் டெஸ்டின் இரட்டை அரைச் சதங்கள் கோஹ்லியின் பொறுமையையும் எதிர்காலத்தில் அவர் தர இருப்பவையையும் காட்டுகின்றன.


இன்னும் சில கிரிக்கெட் விஷயங்கள் இன்னும் சில மணிநேரத்தில்...
அண்மைக்காலத்தில் கிரிக்கெட்டில் வடிவேலு போல ஒரு பதினோரு பேர் திரியிறான்களே.. அங்கே வாங்கோ சேர்ந்து அவங்களைக் கும்மி எடுப்போம்...

4 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

உங்களை போன்றே தென்னாபிரிக்க ஆஸ்திரேலியா தொடரை மிகவும் ரசித்தேன்

சச்சின் 100வது சதம் ஆஸ்திரேலியாவிலா? விக்கிக்கு வை திஸ் கொலவெறி?

anuthinan said...

//பதினெட்டு வயதே ஆன பட் கமின்ஸ் அறிமுகப் போட்டியில் என்ன ஒரு அற்புதமான பக்குவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.//

என்னை விட இரண்டு வயதுதான்...! :(

//டேவிட் வோர்னர் - இந்த இடது கை சேவாக்கை நான் மிக்க ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். //

நானும் அண்ணா! அதிரடிகாரர் எப்படி பொறுமையாக ஆடுவார் என்று பார்க்க ஆவல்

//சச்சின் மீண்டும் ஒரு தடவை சதம் தவறவிட்டது பலருக்கு அல்வா :)//

யாருக்கு இல்லாட்டியும் எனக்கு :)

//இன்னும் சில கிரிக்கெட் விஷயங்கள் இன்னும் சில மணிநேரத்தில்...
அண்மைக்காலத்தில் கிரிக்கெட்டில் வடிவேலு போல ஒரு பதினோரு பேர் திரியிறா//

வருவோம்ல.............! கும்முவம்ல! எங்க அணியையும் பத்தி கொஞ்சம் பெருமையா போடுறது.........!

anuthinan said...

//பதினெட்டு வயதே ஆன பட் கமின்ஸ் அறிமுகப் போட்டியில் என்ன ஒரு அற்புதமான பக்குவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.//

என்னை விட இரண்டு வயதுதான்...! :(

//டேவிட் வோர்னர் - இந்த இடது கை சேவாக்கை நான் மிக்க ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். //

நானும் அண்ணா! அதிரடிகாரர் எப்படி பொறுமையாக ஆடுவார் என்று பார்க்க ஆவல்

//சச்சின் மீண்டும் ஒரு தடவை சதம் தவறவிட்டது பலருக்கு அல்வா :)//

யாருக்கு இல்லாட்டியும் எனக்கு :)

//இன்னும் சில கிரிக்கெட் விஷயங்கள் இன்னும் சில மணிநேரத்தில்...
அண்மைக்காலத்தில் கிரிக்கெட்டில் வடிவேலு போல ஒரு பதினோரு பேர் திரியிறா//

வருவோம்ல.............! கும்முவம்ல! எங்க அணியையும் பத்தி கொஞ்சம் பெருமையா போடுறது.........!

sinmajan said...

நீண்டகாலத்திற்குப் பின் இந்திய மேற்கிந்திய அணிகளிடையான டெஸ்ட் போட்டியைப் பொறுமையாகப் பார்த்தேன்..
சுவாரஸ்யத்தின் உச்சம் :-)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner