February 09, 2015

உலகை வென்ற இலங்கை !!! - 1996 உலகக்கிண்ணத்தின் பெருமை பொங்கும் நினைவுகள். #cwc15

உலகக்கிண்ண நினைவுகளைப் பகிர்கிற நேரம், இரண்டு உலகக்கிண்ணங்கள் பற்றி மட்டும் நீண்ட, நினைவுகள் இருக்கு.

1996 & 2011.
இரண்டும் இலங்கையில் நடந்த உலகக்கிண்ணப் போட்டிகள்.

இலங்கை வென்றது ஒன்று, வெல்வதற்குக் கிட்ட வந்து இன்றும் மனம் கொள்ளா சோகம் தரும் 2011 மற்றது.

1996ஆம் ஆண்டின் உலகக்கிண்ணத்தின் பெருமித நினைவுகளைப் பகிர்ந்த தமிழ் விஸ்டன் கட்டுரை இது.


1996 !!!

எந்தவொரு இலங்கை கிரிக்கெட் ரசிகனுக்கும் எப்போதுமே மறக்க முடியாத ஒரு அற்புத ஆண்டு.
இப்படியொரு உலகக்கிண்ணம் மீண்டும் வராதா, அப்படியொரு இலங்கை அணி எமக்கு மீண்டும் உருவாகாதா என்று இலங்கை ரசிகர்கள் ஏங்காத உலகக்கிண்ண காலங்கள் கிடையாது.

அர்ஜுன ரணதுங்கவின் தலைமையிலான அந்தக்கால உலக சம்பியன் அணியை விட, சிறப்பான, தேர்ச்சி பெற்ற அணிகள் பல பின்னாட்களில் இலங்கை அணிக்காக விளையாடினாலும் கூட, இன்னமும் உலகக்கிண்ணம் வென்ற அணியே எங்கள் அபிமான அணியாக இன்னமும் இருக்கிறது என்பது உலகக்கிண்ணம் என்ற மிகப்பெரிய மாயஜாலம் மட்டுமே காரணம்.

அந்த 1996 ஆம் ஆண்டு காலத்தில் எல்லா இலங்கை வீரர்களும் தங்கள் உச்சபட்ச சக்தி வெளிப்பாட்டோடு இருந்ததும், வென்றே ஆகவேண்டும் என்ற ஒரே எண்ணம் அனைத்து வீரர்களையும் ஒன்றாக இணைத்ததும், டேவ் வட்மோர், அர்ஜுன ரணதுங்க ஆகியோரின் புதுமையை அணுகும் பாங்கு இவற்றை சரியாக வழிநடத்த, அப்போதிருந்த 'பெரிய' அணிகளையெல்லாம் துவம்சம் செய்து ஆச்சரியப்படுத்தியது இலங்கை அணி.

1992இல் நியூ சீலாந்து எவ்வாறு தங்கள் ஆடுகள சாதகத் தன்மைகளையும், விதிமுறைகளின் தன்மைகளையும் புத்தாக்கத்துடன் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
அதில் 15 ஓவர்களின் விதிமுறைகளின்படி, முதல் 15 ஓவர்களுக்கு இரண்டே இரண்டு களத்தடுப்பு வீரர்கள் மாத்திரமே 30 யார் வட்டத்துக்கு வெளியே நிறுத்தப்படுவார்கள் என்பதும் முக்கியமானது.
நியூ சீலாந்து மார்க் கிரேட்பட்ச்சை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்பி ஓரளவு வெற்றியை சுவைத்தாலும், இலங்கை அணி 1996 உலகக்கிண்ணத்தின் போது, சனத் ஜெயசூரிய - ரொமேஷ் களுவிதாரண மூலம் பெற்ற அளவு தாக்கத்தைப் பெறவில்லை என்பது உண்மையாகும்.

இதேபோல இந்த உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியா மார்க் வோ மூலமாகவும், இந்தியா டெண்டுல்கர் மூலமாகவும் இதே போல முதல் 15 ஓவர்களில் அனுகூலங்களை அடைந்தாலும் இவர்கள் இருவரும் pinch hitters வகைகளில் உள்ளடங்கப்பட மாட்டார்கள் என்பது உறுதி.

அதேபோல இந்திய, இலங்கை, பாகிஸ்தான் ஆடுகளங்களின் தன்மை அறிந்து இலங்கை அணி சமிந்த வாஸ், ப்ரமோத்யா விக்ரமசிங்க ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களையும் பெயரளவில் சில ஓவர்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு 4  சுழல் பந்துவீச்சாளர்களோடு எதிரணிகளைக் கட்டுப்படுத்தி வந்தது இலங்கையின் மற்றொரு வியூகம்.
அடுத்தது எப்போதுமே உயர்தரத்தைப் பேணி வந்த இலங்கையின் களத்தடுப்பு.

----------------------------------

92 இலிருந்து 96 வரையிலான நான்கு ஆண்டுகளில்  மாறிய விஷயங்கள் ஏராளம்.
வாசித்த கிரிக்கெட்டை விளையாட, அதிகமாக பார்க்க,அதிகமாக உள்ளே நுழைந்து ஆராய்ந்து பார்க்க, பலரோடு விவாதிக்க கிடைத்த வாய்ப்புக்கள், மாறிக்கொண்டு வரும் கிரிக்கெட்டை அப்பாவுடன் இன்னும் கலந்தாலோசிக்க மட்டுமன்றி வளர்ந்துவந்துகொண்டிருந்த என் தம்பிமாரோடு சேர்ந்து விளையாடவும் பார்க்கவும் இன்னும் கற்றுக்கொள்ளவும் கூட வாய்ப்புக்களைத் தந்து ஒரு முழு கிரிக்கெட் வெறியனாகவே மாற்றியிருந்தது.

 மெல்ல மெல்ல வளர்ந்து வந்துகொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியுடன், அணி அர்ஜுனவின் கீழ் ஒன்று பட்டு விளையாட நாரம்பித்தமை,முரளிதரனின் வருகை, சர்வதேச கிரிக்கெட் தரத்துக்கு ஒப்பிடக்கூடிய பெருமையுடன் வலம் வர ஆரம்பித்திருந்த அரவிந்த டீ சில்வா, ரொஷான் மகாநாம போன்றோர் மீதான அபிமானமும் சேர்ந்து, 92-93களில் இலங்கையில் நடந்த போட்டிகளை நேரடியாக மைதானங்களுக்குப் பார்க்க சென்ற அமர்க்களமான அனுபவங்களோடு இலங்கை அணி தான் பிடித்த முதலாவது  அணியாக மாறிப்போனது.

தம்பிமாரும் கூட... அடுத்த விருப்பத்திற்குரிய அணிகளாக அவர்களுக்கு மேற்கிந்தியத் தீவுகள், நியூ சீலாந்து ஆகியவை இருந்தாலும் வீட்டில் அத்தனை பேருமே இலங்கை ரசிகர்கள்.

அப்பா கூட இலங்கை அணி ரசிகராக மாறியிருந்தார். ஆனால், இந்தியாவுடன் விளையாடும்போது மட்டும் அசாருதீன், கும்ப்ளே, சச்சின் என்று தனக்குப் பிடித்தவர்களுக்கு மட்டும் கொஞ்சம் ஆதரவு கொடுப்பார்.

எனது நண்பர்கள் வட்டத்தில் அநேகர் இலங்கை அணி ரசிகராக இருந்தாலும், இந்திய ரசிகர்களும்,இலங்கை எதிர்ப்பாளர்களும் கூட கொஞ்சப் பேர் இருக்கத்தான் செய்தார்கள். எனவே வாதங்கள், விவாதங்கள், புள்ளி விபர ஒப்பீடுகளுக்குக் குறைவிருக்காது.
இதற்காகவே கொஞ்சம் அதிகமாக கிரிக்கெட் பார்ப்பதும், தேடி வாசிப்பதும் இருந்தது.

அப்போதும் இணையம் எங்களுக்கு வசப்படவில்லை.
தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள் விளையாட்டிலிருந்து அநேகமாக விலகியே இருந்தன.
அப்பாவின் கருணையால் வீட்டில் Sports  Star ஆங்கில சஞ்சிகையும், பிற கிரிக்கெட் நூல்கள், கிரிக்கெட்  வீரர்களின் சுயசரிதைகள் என்று கிரிக்கெட் பசிக்குத் தீனி போட்டிருந்தன.

இந்த வாசிப்புத் தேடலும் தமிழில் கிரிக்கெட்டின் வறுமையும் தான் பின்னாளில் நான் ஒலிபரப்பில் இணைந்த பிறகு, கிரிக்கெட்டையும் ஏனைய விளையாட்டுக்களையும் எனது நிகழ்ச்சிகளில் அதிகமாக செர்துக்கொண்டதும், அதற்கென்று நிகழ்ச்சிகளைப் படைக்க ஆர்வப்பட்டதற்கும் தூண்டுகோல்களாக அமைந்தன.

---------------------------------


1996 உலகக்கிண்ணப் போட்டிகள் பற்றி ஒரு குதூகலமான எதிர்பார்ப்பு எமக்கு இருந்தது.
இலங்கையிலும் 4 போட்டிகள்.
முதல் தடவையாக ஒரு உலக அளவிலான போட்டி இலங்கையில் நடைபெறப்போகுது என்பதே பெரிய உற்சாகமான விடயம் தானே?

ஆனால் உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்க சில வாரங்களுக்கு முதல் இடம்பெற்ற மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் இலங்கையில் போட்டிகள் நடப்பதையே சந்தேகத்திற்கு இடமானதாக மாற்றியிருந்தன.

அவுஸ்திரேலியாவும், மேற்கிந்தியத் தீவுகளும் தங்களது அணிகளின் பாதுகாப்பைக் காரணமாகக் காட்டி இலங்கைக்கு விளையாட வருவதை மறுத்திருந்தன.

எனினும் இந்தியாவும் பாகிஸ்தானும் அளித்த முழுமையான ஆதரவும், ஏனைய இரு நாடுகளான கென்யாவும் சிம்பாப்வேயும் இலங்கைக்கு விஜயம் செய்ய சம்மதித்தமையும், கூடவே இலங்கை அரசாங்கம் பலத்த பாதுகாப்புக்கு உறுதி வழங்கியிருந்தமையும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு இவ்விரு நாடுகளும் வராதவிடத்து, இலங்கை அணிக்கு அந்தப் போட்டிகள் விளையாடாமலே வெற்றி கிடைத்ததாக புள்ளிகள் வழங்கப்படும் என அறிவித்தது.

எனவே ஒரு போட்டியிலும் விளையாடாமலே இலங்கை அணி காலிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியிருந்தது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு தமது உறுதியான நட்பையும் ஆதரவையும் காண்பிப்பதற்காக இந்திய, பாகிஸ்தானிய கிரிக்கெட் சபைகள் சேர்ந்து தங்களது ஒன்றிணைந்த நட்பு அணியொன்றை இலங்கைக்கு அனுப்பி ஒரு கண்காட்சிப் போட்டியொன்றில் விளையாடச் செய்திருந்தன.

மொஹம்மத் அசாருதீன், வசீம் அக்ரம் இருவரும் தலைமை தாங்கி வந்த இந்த அணி பிரேமதாச மைதானத்தில் இலங்கை அணியுடன் விளையாடிய போட்டியைக் கண்டுகளித்த மைதானம்  நிறைந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

ஆசிய அணிகளின்,ஆசிய நாடுகளின் கிரிக்கெட் சபைகளின் அந்த ஒற்றுமை இப்போது பணம், ஒரு சில நாடுகளின் சுயநலத் தன்மை, ஆதிக்க மேம்பாடுகளின் அரசியல் காரணமாகத் தொலைந்து போனதன் காரணமாக பல சுவாரஸ்யமான கிரிக்கெட் தொடர்கள் இல்லாமல் போயுள்ளன.

இந்த சிநேகபூர்வ போட்டியில் விளையாடிய இந்திய, பாகிஸ்தானிய வீரர்களுக்கு இலங்கை ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்கியிருந்தனர்.
இந்தப் போட்டியில் நடந்த இன்னொரு சுவாரஸ்யம், 
இந்திய விமான நிலையத்தில் தன்னுடைய பயணப்பொதியைத் தவறவிட்ட வசீம் அக்ரம், அசாருதீனின் ஆடைகளை அணிந்து விளையாடியிருந்தார்.

இந்த நன்றியை மறக்காமலேயே இலங்கை அணி உலகக்கிண்ணம் வென்ற பிறகு மறக்காமல் அர்ஜுன ரணதுங்க, இந்தியா, பாகிஸ்தானை மட்டுமன்றி, அசார், வசீம் ஆகியோரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டதாக இருந்து வருகிறது.

Sri Lanka Cricket தலைமையகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள இலங்கை வென்ற உலகக்கிண்ணம் 

A photo posted by @loshan on
---------------------

சர்வதேச ரீதியாகக் கிரிக்கெட்டை பரப்பும் நோக்கில் அதிக அணிகள் இந்த 6வது உலகக்கிண்ணத்தில் உள்வாங்கப்பட்டன.
முன்னைய உலகக்கிண்ணப் போட்டிகளின் பின்னர் சிம்பாப்வே டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றதனால், 9 டெஸ்ட் விளையாடும் நாடுகளோடு,

ஐக்கிய அரபு ராஜ்ஜியம், கென்யா, நெதர்லாந்து ஆகிய மூன்று அணிகளும் தகுதிகாண் போட்டிகள் மூலம் தெரிவாகின.

இரு பிரிவுகள் ஆறு அணிகள்.

இலங்கையின் பிரிவில் பலம் வாய்ந்த, சொந்த மண் வாய்ப்பையும் சேர்த்துப் பெற்றிருந்த இந்தியாவுடன், முன்னைய சாம்பியனும் மற்றொரு வாய்ப்புள்ள அணியுமான அவுஸ்திரேலியாவும் இருந்தது.

B பிரிவில் தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையில் முக்கியமான பலப்பரீட்சை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கூடுதலான வாய்ப்புடைய அணிகளாக இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை விமர்சகர்கள் கணித்திருந்தனர்.
இலங்கை அணி ஆபத்தான அணி (Dark Horses) என்று இயன் சப்பெல் சொல்லியிருந்தார்.
ஆனால் எல்லோரும் ஆச்சரியப்படும் விதத்தில் முன்னாள் நியூ சீலந்தின் வேகப்பந்து வீச்சாளர் சேர்.ரிச்சர்ட் ஹட்லி மட்டும் இலங்கை அணியே உலகக்கிண்ணத்தை வெல்லும் என்று அடித்துச் சொல்லியிருந்தார்.


பாகிஸ்தானின் ஜாவேத் மியன்டாட் 40 வயதாகும் நிலையிலும் தன்னுடைய 6வது உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட எண்ணியிருந்தார்.
இதற்காக ஓய்விலிருந்து மீண்டும் விளையாட வந்திருந்தார்.
இது பாகிஸ்தான் அணிக்கு வரத்தைவிட சாபமாகவே இருந்திருக்கவேண்டும்.
சில போட்டிகளிலேயே துடுப்பெடுத்தாடிய மியன்டாட் பெரிதாக சோபிக்கவில்லை.

முதல் தடவையாக மூன்றாம் நடுவர் ரன் அவுட் தீர்ப்புக்களுக்காக இந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டார்.
இந்தியா தான் நடத்திய 17 போட்டிகளையும் 17 வெவ்வேறு மைதானங்களில் நடத்தியது சிறப்பு.
இலங்கைக்கு நடத்தக் கிடைத்த முதற்சுற்றுப் போட்டிகளிலும் இரண்டு நடக்கவில்லை என்பது ரசிகர்களின் சோகம்.


இம்முறை போலவே காதலர் தினத்தன்று போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.
முதலாவது போட்டியிலேயே அழகான நேதன் அஸ்ட்டிலின் சதத்துடன் நியூ சீலாந்து இங்கிலாந்தை வென்றது.

தொடர்ந்து வந்த இரண்டாவது நாள் போட்டியில் பலவீனமான ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணியை தென் ஆபிரிக்கா வதம் செய்த வேளையில், கரி கேர்ஸ்டன் உலகக்கிண்ணப் போட்டிகளில் ஒரு போட்டியில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கைக்கான புதிய சாதனையை நிலை நாட்டினார்.
ஆட்டமிழக்காமல் 188.

மிக லாவகமாக ஆடிய கேர்ஸ்டன் முன்னைய உலகக்கிண்ண சாதனையான சேர்.விவியன் ரிச்சர்ட்சின் 181 என்ற சாதனையை முறியடித்திருந்தார்.

பாடசாலை, தனியார் வகுப்புக்கள் மத்தியிலும் எப்படியாவது அநேகமான போட்டிகளைத் தவறவிடாமல் பார்த்த நான், இந்தப் போட்டியையும் பார்த்திருந்தேன்.

கேர்ஸ்டன் துடுப்பெடுத்தாடிய விதத்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அப்போது ரிச்சர்ட்ஸ் வைத்திருந்த சாதனையான ஆட்டமிழக்காத 189 ஐயும் முறியடித்து, முதலாவது இரட்டைச் சதமும் பெறுவார் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் ஒரு ஓட்டம் குறைவாக முடித்துக்கொண்டார்.

இத்தொடரில் ஓட்டக்குவிப்பில் சச்சின், மார்க் வோ, லாரா, அரவிந்த டீ சில்வா ஆகியோருக்கு இடையில் ஓட்டக்குவிப்பில் போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சச்சின் இதில் முந்திக்கொண்டு கென்யாவுக்கு எதிராக சதம் பெற்றிருந்தார்.

பிரிவு Aயில் சச்சினும், மார்க் வோவும் துடுப்பாட்டத்தில் கலக்கிக்கொண்டிருக்க, இலங்கை அணிக்கான முதலாவது போட்டி சிம்பாப்வே இலங்கை வர கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றது.

அப்பாவுடன் போட்டி பார்க்கப் போயிருந்தோம்..
நாணய சுழற்சியில் இலங்கை வெல்லவேண்டும், முதலில் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை மலைபோல குவிக்கவேண்டும் என்று எண்ணியதெல்லாம், சிம்பாப்வே நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட புஸ் ஆகிப்போனது.

சாதாரண இலக்கு ஒன்றை அரவிந்த டீ சில்வாவும், அசங்க குருசிங்கவும் இலகுவாகத் துரத்தியடித்தனர்.
இருவருமே கிடைத்திருக்கவேண்டிய சதங்களைத் தவறவிட்டனர்.

அரவிந்த -91, குருசிங்க -87.
மிக எதிர்பார்க்கப்பட்ட சனத் - களு இருவருமே குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆனால் விளையாடிக் கிடைத்த முதல் வெற்றி, சுவைத்தது.


 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் இந்தியாவுக்கு இலகுவான வெற்றி கிட்ட, சச்சினுக்கு மீண்டும் ஒரு போட்டி சிறப்பாட்டக்காரர் விருது.

மார்க் வோவின் சத வேட்டையும் கென்யாவுக்கு எதிராக ஆரம்பமானது.
130 ஓட்டங்களை மிக லாவகமாகப் பெற்றார்.

மார்க் வோவின் அடுத்த சதம் இன்னும் அபாரமானதாக இந்திய அணிக்கு எதிராக சில நாட்களின் பின் அமைந்தது.
இந்தியாவை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அவுஸ்திரேலியா 16 ஓட்டங்களால் வெற்றிகொண்ட மும்பாய் போட்டி அது.

சச்சின் டெண்டுல்கரில் மட்டுமே இந்தியா தங்கியுள்ளது என்பதை அவுஸ்திரேலியாவின் பலம் வாய்ந்த பந்துவீச்சு வெளிக்காட்டியது.

டேமியன் பிளெமிங் 5 விக்கெட்டுக்கள்.
ஷேன் வோர்னின் மிக சிறப்பான பந்துவீச்சில் பத்து ஓவர்களில் 28 ஓட்டங்கள் மட்டுமே பெறப்பட்டன.

சச்சின் 90 ஓட்டங்களையும், மஞ்ச்ரேகர் 62 ஓட்டங்களையும் எடுத்தனர்.
எனினும் ஆரம்பத் துடுப்பாட்ட இணையான ஜடேஜா முதல் போட்டியில் பெற்ற 1 ஓட்டத்தின் பின்னர், இந்தப் போட்டியில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலியாவின் இந்த வெற்றிக்குப் பிறகு இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சித் தோல்வி காத்திருக்கிறது என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

ஆனால் இரண்டு நாட்களிலேயே உலகக்கிண்ணப் போட்டிகளில் மிகப்பெரிய அதிர்ச்சியாக, அப்போது தான் தங்களது 4வது ஒருநாள் போட்டியில் விளையாடிய கென்யா, இரு தடவைகள் உலகக்கிண்ணம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியை 73 ஓட்டங்களால் மண்கவ்வச் செய்த அதிர்ச்சி இடம்பெற்றது.

வெறும் 166 ஓட்டங்களை மட்டுமே பெற்ற கென்யா அணி, தன்னுடைய சாதாரண பந்துவீச்சின் மூலமாகவும்,களத்தடுப்பு விரைவின் காரணமாக வழங்கிய அழுத்தம் காரணமாகவும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளைக் குப்புற வீழ்த்தியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதலபாதாள வீழ்ச்சி ஆரம்பம் என்பதை காட்டிய இன்னொரு அபாய சகுனம் இது.

சிம்பாப்வே அணிக்கு எதிராக ஷேன் வோர்னின் சுழல் வலையில் 4 விக்கெட்டுக்கள் விழ, மீண்டும் மார்க் வோவின் அபாரமான ஓட்டக்குவிப்பில் ஆட்டமிழக்காத 76.

டெல்லியில் இலங்கை அணிக்கு மறக்கமுடியாத ஒரு போட்டி...
அதிலும் இந்தியாவின் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தோல்விகளில் ஒன்று.
சனத் ஜெயசூரியவின்துடுப்பினாலும், இலங்கையினாலும் இந்தியா சில ஆண்டுகளுக்கு வதைபட  ஆரம்பித்த போட்டி இது எனலாம்.

அதுபோல இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடினால் எந்தவொரு இலக்கையும் இலங்கை வெற்றிகரமாக துரத்திப் பெறும் - Best Chasing Team - என்ற முத்திரை அழுத்தமாகப் பதிந்த போட்டியும் இது எனலாம்.

சச்சின் டெண்டுல்கரின் சதத்துடன் இந்தியா பெற்ற 271 ஓட்டங்கள் துரத்துவதற்கு (அசாருதீனும் அபாரமாக ஆடி 72 ஓட்டங்களைப் பெற்றார்) இலங்கைக்கு கஷ்டம் என்று பலரும் நினைத்திருக்க, சனத் - களு  அதிரடி ஆரம்பம் களைகட்டியது.

5 ஓவர்களில் 50 ஓட்டங்களை வெளுத்தார்கள். 
களுவிதாரண ஆட்டமிழந்த பிறகும் சனத் இந்தியாவை வெளுத்து வாங்கினார்.
முதல் 15 ஓவர்களில் 117 ஓட்டங்கள்.

குறிப்பாக சனத் ஜெயசூரியவின் துடுப்பாட்டத்தில் சிக்கி சின்னாபின்னமானாவர் இந்தியாவின் சகலதுறை வீரர் மனோஜ் பிரபாகர்.
சொந்த ஊர் மைதானத்தில் வைத்து தான் வீசிய 4 ஓவர்களில் 43 ஓட்டங்களைக் கொடுத்த பிரபாகர், இறுதியாக வீசிய இரண்டு ஓவர்களையும் சுழல் பந்துகளாக வீசவேண்டி ஏற்பட்டது.

இதுவே அவரது இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியானது மிகப் பெரிய கொடுமை.



சனத்தின் துடுப்பாட்டப் பிரயோகம் 76 பந்துகளில் 79 ஓட்டங்களோடு முடிவுற, அதன் பிறகு 5வது விக்கெட்டுக்கான மிக முக்கியமான இணைப்பாட்டம் ஒன்று அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் ஹஷான் திலகரட்ன ஆகியோரால் பகிரப்பட்டது.

இருவரும் ஆட்டமிழக்காது 131 ஓட்டங்களை வேகமாகவே பெற்று இலகுவான வெற்றியை ஏற்படுத்தினர்.

இதில் விசேடம் வழமையாக நின்று, நிதானமாக ஆடி ஆமை வேகத்தில் ஓட்டங்கள் சேர்க்கும் ஹஷான், அர்ஜுனவை விட வேகமாக ஆடி அசத்தியது.

அர்ஜுன 63 பந்துகளில் 46
ஹஷான் 98 பந்துகளில் 70.

இந்த வெற்றி தான் இலங்கைக்கு மிகப் பெரிய உற்சாகத்தை வழங்கியிருக்கவேண்டும்.
இந்தியாவில் வைத்து இந்தியாவை வென்றது ஒரு பக்கம், துரத்தியடித்த பெரிய ஓட்ட எண்ணிக்கை இன்னொன்று, 

இந்தியாவுக்கு அணித் தெரிவு சிக்கல்களை மறுபடி ஏற்படுத்தியது..
சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த சுழல்பந்துவீச்சாளர் வெங்கடாபதி ராஜுவை (எனக்கு இவரது மிக ரசிக்கக்கூடிய பந்துவீசும் பாணி மிகவும் பிடிக்கும்) நீக்கிவிட்டு, வேகப்பந்து வீச்சாளர் சலீல் அங்கோலாவைக் கொண்டுவந்தனர். பலனில்லை. (இதே போல அரையிறுதியில் இலங்கையின் இடது கைத் துடுப்பாட்ட வீரர்களை சமாளிக்க புறச் சுழல் பந்து வீசும் ஆஷிஷ் கபூரைக் கொண்டுவந்திருந்தனர்.)
இந்தப் போட்டிக்குப் பின்னர் தான் சிதுவை அணிக்குள் கொண்டுவரவேண்டி ஏற்பட்டது.
ஆனால் அது பலன் கொடுத்தது வேறு கதை...


இலங்கை இந்த வெற்றியின் உற்சாகத்தோடு அடுத்து படைத்த சாதனையையும், பிரிவு B போட்டிகளின் கதைகளையும், தொடர்ந்த 96இன் வரலாற்றுத் தொடர்ச்சியையும் அடுத்த பகுதியில் தருகிறேன்.

No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner