எங்களுக்கான உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வென்ற கதை - 1996 உலகக்கிண்ண நினைவுகள் - பகுதி 2 #cwc15

ARV Loshan
2
இலங்கைக்கு இதுவரை சொந்தமாகவுள்ள ஒரே உலகக்கிண்ணம் பற்றிய நினைவுகளை ஸ்ரீலங்கா விஸ்டனில் மீட்ட கட்டுரையின் இரண்டாவது பகுதி இது...

------------------

1996 உலகக்கிண்ணம் பற்றி நினைவுகளை மீட்கும்போது, ஏராளமான மறக்க முடியாத நினைவுகள் வரும்.
முக்கியமாக இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றிப்போட்ட ஒரு மைல் கல் தொடர் இது.
கிரிக்கெட்டையும் மாற்றிப்போட்டது என்று சொல்லலாம்.

முக்கியமாக ஆசிய அணிகள், அர்ஜுனவின் வழிமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தன.
ஆசிய அணிகளின் பலமான சுழல்பந்து வீச்சை, முக்கியமாக சுழல் பந்து வீசும் சகலதுறை வீரர்களை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தன.

பயிற்றுவிப்பாளருக்கான முக்கியத்துவம் உணரப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொழில்முறை வீரர்களாக மாறியதும் இதன் பின்னரே.

அத்துடன் இந்த 96 உலகக்கிண்ண வெற்றியின் பின்னர், ஒவ்வொரு உலகக்கிண்ணத்திலும் (1999 இன் படுமோசமான பெறுபேறுகளைத் தவிர), T20 உலகக்கிண்ணத்தையும் சேர்த்து இலங்கை அணி சிறந்த தடங்களைப் பதித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



டெல்லியில் இந்திய அணியை வெற்றிகொண்ட பின்னர், இலங்கை விளையாடிய அடுத்த போட்டி கண்டி, அஸ்கிரியவில் கென்ய அணிக்கு எதிரான சாதனைப் போட்டி.

1987இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகக் கொடுத்த சாதனை ஓட்டங்களை அழித்து, கென்யாவுக்கு எதிராக இலங்கை புதிய ஓட்டக்குவிப்பு சாதனையை நிலைநாட்டிய போட்டி இது.

398 ஓட்டங்களை இலங்கை அணி பெற்று, உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமல்லாமல், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே அணியொன்று பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களுக்கான புதிய சாதனையை நிலைநாட்டியது.

இதற்கான அடித்தளம், சனத் ஜெயசூரிய  - ரொமேஷ் களுவிதாரண ஆகியோரின் மற்றொரு அசுர வேக ஆரம்ப இணைப்பாட்டம் மூலமாக இடப்பட்டது.

3 ஓவர்களில் 50 ஓட்டங்களை பெற்ற இவர்கள் இருவரும் சேர்ந்து, 7 ஓவர்களில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
சனத் - 27 பந்துகளில் 44 - 3 சிக்சர்கள்.
களு - 18 பந்துகளில் 33 - 2 சிக்சர்கள்.

இதன் பின்னர் மீண்டும் ஒரு குருசிங்க, அரவிந்த நீண்ட, பெரிய இணைப்பாட்டம்.
வேகமாகவும் ஓட்டங்களைக் குவித்தனர்.
183 ஓட்டங்களை இருவரும் சேர்ந்து குவித்தனர்.

குருசிங்க ஆட்டமிழக்க தலைவர் அர்ஜுன ரணதுங்க தனது உபதலைவர் அரவிந்தவுடன் சேர்ந்த சத இணைப்பாட்டம் பெற்றார்.

ஓட்ட மழையுடன், சாதனைக்கு மேல் சாதனையாக அரவிந்த டீ சில்வா இலங்கை அணியின் தனிநபர் ஓட்ட சாதனையை நிறுவினார்.

115 பந்துகளில் 145 ஓட்டங்கள்.
5 அருமையான ஆறு ஓட்டங்களையும் 14 நான்கு ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

குருசிங்க ஓரளவு நிதானமான 103 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 84 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அர்ஜுன கடைசி நேரத்தில் வெளுத்தாடி 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

14 ஆறு ஓட்டங்கள், 43 நான்கு ஓட்டங்கள் - இலங்கை அந்த ஆட்டத்தில் பெற்ற எல்லாமே அன்று புதிய சாதனைகள்.

இலங்கை ரசிகனாக மிகப் பெரும் குதூகலம்.
இலங்கை சர்வதேச அளவில் புதிய சாதனைகளுடன் குறிப்பிடத்தக்க அணியாக வளர்ந்துவருகிறது என்று திருப்தியும் கூட.


இதற்கு முன்னதான மற்றும் இரு பிரிவு A போட்டிகளில் ரிக்கி பொன்டிங் அற்புதமான சதம் ஒன்றை அடித்தும், மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சனின் ஆட்டமிழக்காத 93 ஓட்டங்களின் உதவியுடன் வெற்றியொன்றைப் பெற்றது.

இந்த வெற்றி கென்யாவுக்கு எதிரான தோல்வியினால் சந்தேகமாகிப் போன காலிறுதி வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பெற்றுத் தந்தது.

அந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் 30 ஓட்டங்கள் மட்டுமே பெற்று பிரகாசிக்கத் தவறினாலும் மார்க் வோ, பந்துவீச்சில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இன்னொரு போட்டியில் இந்தியா, சிம்பாப்வே அணியை சந்தித்தது.
இலங்கையுடனான தோல்வியின் பின்னர், பிரபாகருக்குப் பதிலாக 87இன் ஹீரோ நவ்ஜோத் சிதுவை அணிக்குள் இணைத்தது.
80 ஓட்டங்களை அபாரமாக ஆடிப்பெற்றார்.

கம்ப்ளி சதம் பெற்றார்.
ஆரம்பப் போட்டிகளில் ஆரம்ப வீரராக வந்த ஜடேஜா மத்திய வரிசையில் வந்து அபாரமாக அடித்தாடியிருந்தார்.
இவர்களது இந்த பெறுபேறுகள் பின்னர் இந்தியாவுக்குக் காலிறுதியில் அவசியப்பட்டிருந்தன.

ஆனால் சச்சின் 3 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்.

சிம்பாப்வேக்கு எதிரான இந்த அபாரமான வெற்றியும் கூட இந்திய அணியை புள்ளிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்துக்குக் கொண்டு செல்லவில்லை.

இலங்கை, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளின் பின்னர் 3ஆம் இடத்தைத் தான் பெற்றது கிண்ணத்தை வெல்லும் என்று ஊகிக்கப்பட்ட அசாருதீனின் அணி.

இந்தப் பிரிவில் சிம்பாப்வேயின் சுழல் பந்துவீச்சாளர் போல் ஸ்ட்ராங் மிகச் சிறப்பாக பிரகாசித்ததையும் குறிப்பிடவேண்டும்.
அப்போது லெக் ஸ்பின் பந்து வீசுவதில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு ஷேன் வோர்னுக்கு அடுத்தபடியாக ஸ்ட்ராங்கின் பந்துவீச்சுப் பாணியிலும் ஒரு காதல்.
--------------------

பிரிவு Bயில் ஹன்சி க்ரோஞ்சேயின் தென் ஆபிரிக்க அணி, பாகிஸ்தானிய ஆடுகளங்களில் தூள் கிளப்பிக்கொண்டிருந்தது.
5 போட்டிகளிலும் வெற்றி.
பாகிஸ்தானையும் தோற்கடித்த தென் ஆபிரிக்கா நிச்சயம் சம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாக ஆரம்பித்தது.

இந்தியாவின் நம்பிக்கையற்ற தன்மையும், இலங்கை அணியை அப்போது முக்கிய போட்டிகளில் வெல்லக்கூடிய அணியாக யாரும் பெரிதாகக் கணிக்காத தன்மையும் சேர்த்து,
தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலிய இறுதிப்போட்டி ஒன்றை மனதில் தீர்மானித்து வைத்திருந்தனர் பலரும்.
(இலங்கை பற்றிய ஒரு சிறு நப்பாசை இருந்தும் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்)

பாகிஸ்தான் தென் ஆபிரிக்கா தவிர்ந்த ஏனைய அணிகளை வீழ்த்தியது.

ஐக்கிய அரபு ராஜ்ஜியம், நெதர்லாந்து ஆகியவையும் இருந்த பிரிவு என்பதனால், இங்கிலாந்து  நிச்சயம் கால் இறுதிக்கு தெரிவாகும் என்பது தெரிந்தே இருந்தது.

எனவே இலங்கைக்கு காலிறுதியில் இரையாகப் போகிறது என்று அப்போதே ஏக குஷி.
பிரிவு B போட்டிகளில் எந்தவொரு சுவாரஸ்யமும் இருக்கவில்லை.
எல்லாப் போட்டிகளுமே வென்ற அணிக்கு முழுக்க சார்பானதாகவே இருந்தன.

A பிரிவில் தனித்து நின்று கலக்கிய சச்சின் டெண்டுல்கர், மார்க் வோ, அரவிந்த டீ சில்வா, சனத் ஜெயசூரிய போன்ற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக B பிரிவுப் போட்டிகளில் கலக்கியவர் என்று யாரையும் குறிப்பாக சொல்ல முடியாவிட்டாலும், கரி கேர்ஸ்டனின் 188, அன்றூ ஹட்சன் UAEக்கு எதிராகப் பெற்ற 161, தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அமீர் சொஹைல் பெற்ற அபார சதம் என்பவையும், வக்கார் யூனுஸ், முஷ்டாக் அஹ்மத், அலன் டொனால்ட் ஆகியோரின் பந்துவீச்சுக்களும் ரசனையாக இருந்தன.

அத்துடன் பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய இரு அணிகளதும் அத்தனை வீரர்களுமே பொதுவாக அத்தனை போட்டிகளிலுமே பிரகாசித்த காரணத்தால் மிகுந்த நம்பிக்கையுடன் காலிறுதிக்குள் நுழைந்தன.

----------------

முதலாவது காலிறுதி...
இங்கிலாந்து பெற்ற சராசரி ஓட்ட எண்ணிக்கையை சனத் ஜெயசூரியவின் அசுரவேக அதிரடியின் மூலம் மிக இலகுவாகக் கடந்து, தமது முதலாவது உலகக்கிண்ண அரையிறுதியில் நுழைந்தது இலங்கை.

வெறும் 44 பந்துகளில் 82 ஓட்டங்களை அடித்து விளாசி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார் சனத்.

இங்கிலாந்தின் தோல்வி முதலிலேயே எதிர்பார்த்ததாயினும், இவ்வளவு இலகுவான வெற்றியும், எனக்குப் பிடித்த மகாநாம வெற்றிபெறும் நேரம் ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் நின்றதும் இன்னும் இந்த வெற்றியை சுவையாய் மாற்றியது.

அதுவரை பெரிதாகத் துடுப்பாட வாய்ப்புக் கிட்டாத ரொஷான் மகாநாம இந்தத் தொடரில் இனித்தான் பெரிய பங்களிப்பை வழங்கப்போகிறார் என்று மனம் சொல்லியது, பின்னர் பலித்தது.


பாகிஸ்தானில் பகல் போட்டியாக நடந்த இந்தப் போட்டி, சனத்தின் அதுவேக அடியால் குறித்த நேரத்துக்கு முன்னரேயே முடிவுக்கு வர, அதே தினம், அடுத்து இந்தியாவின் பெங்களூரில் பகல் இரவுப் போட்டியாக ஆரம்பித்த இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தத்தை சுவாரஸ்யமாகப் பார்க்க ஆரம்பித்தோம்.

(இன்றும் கூட, மீண்டும் மீண்டும் அதிக பில்ட் அப் கொடுத்து இந்திய ஊடகங்கள் காட்டும் போட்டிகளில் ஒன்று இது)

அந்தப் போட்டியின் ஆரம்பமே சர்ச்சையுடனும் சந்தேகத்துடனும் தான்.
பாகிஸ்தானுக்கு அந்த உலகக்கிண்ணத்தில் தலைமை தாங்கிக்கொண்டிருந்த வசீம் அக்ரம், தசைப்பிடிப்பு உபாதை என்று திடீரென்று அந்தப் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

இது இந்தியாவுக்கு சாதகமான விடயம் எனக் கருதப்பட்டது.

அமீர் சொஹைல் பாகிஸ்தானுக்கு தலைமை தாங்கினார்.

ஒரு இறுதிப்போட்டி போன்ற பரபரப்புடன் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டி ஒரு யுத்தம் தான்.

சச்சின் 30+ ஓடு ஆட்டமிழந்தாலும், அன்று சிது & ஜடேஜா நாள்..
வக்கார், முஷ்டாக், ஆக்கிப்  ஜாவேத் என்று உலகின் முன்னணிப் பந்துவீச்சாளர்களையும் விட்டுவைக்காமல் பதம் பார்த்தார்கள் இருவரும்.

சிதுவின் ஆக்ரோஷ ஆட்டம் 93 ஓட்டங்கள்.
ஜடேஜாவின் அதிரடியோ 25 பந்துகளில் 45 ஓட்டங்கள்.

அதிலும் வக்கார் யூனிஸின் ஒரு ஓவரில் ஜடேஜாவும், கும்ப்ளேயும் பெற்ற 22 ஓட்டங்கள் இப்போதும் ஞாபகம். குறிப்பாக கடைசிப் பந்தை ஜடேஜா மிட்விக்கட் திசையில் flick செய்து பெற்ற சிக்ஸர்க்கு நான் ரசிகன்.

கடைசி 8 ஓவர்களில் இந்தியா 80 ஓட்டங்களைப் பெற்றது போட்டியில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

வசீம் அக்ரமின் இன்மையை பாகிஸ்தான் வலியோடு உணர்ந்தது.

சயீட் அன்வர் - சொஹைல் ஆரம்ப இணைப்பாட்டம் அதிவேகமாக ஓட்டங்களைக் குவிக்க, பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த நேரத்தில் அன்வர் - 32 பந்துகளில் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இணைப்பாட்டம் 84.

சொஹைல் அரைச்சதமும் பெற்று, பாகிஸ்தானிய ஓட்ட வேகத்தை 7ஐ விட அதிகமாக வைத்திருந்த நேரம் தான், தலைமைப் பதவியின் அழுத்தம், முக்கிய கிரிக்கெட் யுத்தத்தின் அழுத்தம் எல்லாம் சேர்ந்து பந்துவீச்சாளர் பிரசாத்துடன் வார்த்தை யுத்தமாக வெடித்தது.

இதுவும் இந்தியாவுக்கே சாதகமாக முடிந்தது.
சொஹைல் வார்த்தைகளால் காட்டிய வீரத்தை, பிரசாத் அவரது விக்கெட்டைத் தகர்த்து செயலால் காட்ட பாகிஸ்தான் சரிய ஆரம்பித்தது.

மியன்டாட் மட்டும் தனியனாய் நின்றார் மைதானத்தில்.

மாமா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1987 உலகக்கிண்ணப் போட்டிகளின்போது சொன்னது ஞாபகம் வந்தது.
வென்று கொடுத்துவிடுவாரா என்று பார்க்க, 40 வயதாகும் மியண்டாடின் முன்னைய அதிரடிகள், ஷார்ஜா இறுதிப் பந்து சிக்ஸர் எல்லாம் இப்போது முடியாது என்பதைப் போல 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
மியண்டாடின் இறுதி சர்வதேச இன்னிங்க்ஸ் அது.

இந்தியா அரையிறுதியில்.

அன்றிரவே பாகிஸ்தானின் லாஹூரில் வசீம் அக்ரமின் வீடு ரசிகர்களால் கல்லெறிந்து உடைக்கப்பட்டது.


மூன்றாவது காலிறுதிப்போட்டி லாரா என்ற இளைய ஆற்றலின் வெளிப்பாடாகவும், chokers என்ற பட்டத்தை தென் ஆபிரிக்காவுக்கு உறுதிப்படுத்தும் முதலாவது சந்தர்ப்பமாகவும் அமைந்த போட்டி.

தென் ஆபிரிக்காவுக்கு உலகக்கிண்ணத்தில் துரதிர்ஷ்டம் தொடர்ந்தும் துரத்தப்போகிறது என்பதைக் காட்டிய இரண்டாவது சந்தர்ப்பமாக அமைந்த போட்டி.

மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டத்தை லாரா, சந்தர்போல் மட்டுமே நின்று காப்பாற்ற, தென் ஆபிரிக்காவின் பன்ம்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் 264 ஓட்டங்களை எடுத்தது.

லாரா மிக அபாரமாக 111 ஓட்டங்களைப் பெற்றார்.சந்தர்போல் அரைச்சதம்.

தென் ஆபிரிக்கா துடுப்பெடுத்தாடிய பொது, ஹட்சன், கலினன் ஆகியோரின் அரைச்சதங்களும், க்ரோஞ்சேயின் 40 ஓட்டங்களும் சேர்ந்து, 186 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள் என்ற நிலையில் இருந்தபோது இதோ வெல்கிறது என்றே நினைத்திருந்தோம்.

அந்த வேளையில் தான், அணித் தலைவர் க்ரோஞ்சேயின் ஆட்டமிழப்பு தென் ஆபிரிக்காவின் தொடர் விக்கெட் வீழ்ச்சியை தொடங்கி வைக்கிறது.

பெரிதாக அச்சுறுத்தல் இல்லாத ரொஜர் ஹார்ப்பரின் சுழல்பந்து வீச்சில் அதிர்ச்சி தரும் விதத்தில் சுருண்டது தென் ஆபிரிக்கா.
19 ஓட்டங்களால் நம்பமுடியாத தோல்வி.


 அதே தினம் சென்னையில் களைகட்டி, ஓட்ட மழையில் நனைத்த போட்டி, இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு தலைவர்களின் சாதுரியங்கள் ஆகியவற்றுக்கிடையிலான போட்டியாக அமைந்தது.

பக்கத்து நாடுகள் அவுஸ்திரேலியா - நியூ சீலாந்து மோதிய பகலிரவுப் போட்டி கிட்டத்தட்ட 600 மொத்த ஓட்டங்கள் குவித்த போட்டியாக அமைந்தது.

க்றிஸ் ஹரிஸின் அபாரமான 130 ஓட்டங்கள், அணித் தலைவர் லீ ஜெர்மன் அதிரடியாக தனது முத்திரையைப் பதித்த 89 ஓட்டங்களுடன் நியூ சீலாந்து அவுஸ்திரேலியாவுக்கு வைத்த 287 என்ற இலக்கு சவாலானதாக இருந்தது.

நான் அப்போது நினைத்தேன் இறுதிப்போட்டிக்கு வரும் என்று எண்ணியிருந்த தென் ஆபிரிக்கா வெளியேறிய அதே நாளில் இன்னொரு இறுதிக்கான அணியாகக் கருதப்பட்ட அவுஸ்திரேலியாவும் வெளியேறப்போகிறதோ என்று..

ஆனால் மீண்டும் மார்க் வோ.. 
அபார formஇல் இருந்த மார்க் வோ, இந்த உலகக்கிண்ணத் தொடரில் தன்னுடைய சாதனைக்குரிய 3வது சதத்தைப் பெற்று அவுஸ்திரேலிய அணியின் மறக்கமுடியாத வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஒரே உலகக்கிண்ணத் தொடரில் அதிக சதங்கள் பெற்ற சாதனை இன்று வரை மார்க் வோவிடம் தான் இருக்கிறது.


ஆனால், வெற்றி இலக்கு கொஞ்சம் சிக்கலான நேரத்தில், தலைவர் மார்க் டெய்லர், அதிரடியாக அடித்தாட ஷேன் வோர்னை முன் அனுப்பியிருந்தார்.

நம்ம ஹீரோ ஷேன் வோர்னின் இரண்டு சிக்ஸர்கள்  தந்த வேகத்தில் 14 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலியாவுக்கு வாய்ப்பை மாற்றினாலும், மார்க் வோவின் ஆட்டமிழப்பு தந்த தடுமாற்றத்தை இல்லாமல் செய்து, வெற்றியைப் பெற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வோ ஆடுகளம் வரவேண்டி இருந்தது, அவரும் ஸ்டுவர்ட் லோவும் சேர்ந்து பெற்ற 76 ஓட்ட இணைப்பாட்டம் ரசித்தற்குரியது.
(வோலோ இணைப்பாட்டம்.. தமிழகப் பாணியில் எழுதினால் என் பெயரின் சுருக்கம் - வாலோ - வரும்)

வோ அரைச்சதம், லோ 30 பந்துகளில் 42.

பெவான் துடுப்பாடாமலே அவுஸ்திரேலியா அரையிறுதியில் நுழைந்தது.

-------------------
ஆச்சரியமான விடயம், அரையிறுதிகளுக்கு தெரிவான நான்கு அணிகளுமே A பிரிவில் விளையாடிய அணிகள்.

பொதுவாகவே 13 ஆங்கிலேயருக்குத் தானே துரதிர்ஷ்ட இலக்கம்?
ஆனால் மார்ச் 13 இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றென்றும் மறக்காத ஒரு தோல்வி, மாறாத சோகத்தை வழங்கியது கொல்கொத்தாவில்.
இன்னமும் இந்த கிரிக்கெட்டின் கறுப்பு நாள் இது என்பார்கள் இந்தியக் கிரிக்கெட் விற்பன்னர்கள்.

உலகின் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றின் முழுமையாக பார்வையாளர்கள் நிறைந்திருக்க, சொந்த நாட்டின் வெற்றிக்காக ஓயாது குரல் எழுப்பிக் கொண்டிருக்கும், இந்தியாவை இறுதிப்போட்டியில் காணக் காத்திருந்த அந்த ரசிகர்கள் முன்னால், நம்பிக்கையுடன் இலங்கை அணி..

டெல்லி வெற்றி தந்த நம்பிக்கையுடன் இலங்கை..
பாகிஸ்தானை வென்ற உற்சாகத்துடன் டெல்லி தோல்விக்கு பதில் கொடுக்கும் முனைப்போடு இந்தியா.

இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடினால் எந்த ஓட்ட எண்ணிக்கை என்றாலும் இலங்கை துரத்தி அடிக்கும் என்ற நம்பிக்கை இந்திய அணிக்கும் ஏற்பட்டதனால், அசாருதீன் நாணய சுழற்சியில் வென்று இலங்கையைத் துடுப்பெடுத்தாட அனுப்பினார்.

ஆனால் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு சிரமமாக இருக்கலாம் என்று இந்திய அணிப் பக்கமே யோசித்து இருந்தாலும் கூட, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ராஜுவை நீக்கிவிட்டு, இலங்கையின் இடது கைத் துடுப்பாட்ட வீரர்களைக் குறிவைத்து புறச் சுழல் பந்துவீச்சாளரான ஆசிஷ் கபூரையும் அணிக்குள் கொண்டுவந்தது.

ஆரம்பமே இலங்கைக்கு அடிக்கு மேல் அடி.
ஒரேயொரு ஓட்டம் மட்டும் பெற்றிருந்த நிலையில் சனத், களு இருவருமே ஸ்ரீநாத்தின் பந்துவீச்சில் ஒரேமாதிரியாக ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த குருசிங்கவும் ஒரேயொரு ஓட்டம்.
இலங்கையின் தடுமாற்றத்தை தடாலடியாக மாற்றிய இணைப்பாட்டம் எனது இரு அபிமான வீரர்களால் முன்னெடுக்கப்பட்டது.

அரவிந்த டீ சில்வாவின் அதிரடி, நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர 5ஆம் இலக்கத்தில் அனுப்பப்பட்ட ரொஷான் மகாநாமாவின் நிதானமான ஓட்ட சேகரிப்பு என்று களைகட்டியது.
அதன் பின்னர் மகாநாமவுடன் ரணதுங்க.. 83 ஓட்ட இணைப்பாட்டம்.

அரவிந்தவின் அதிரடி ஒரு சூறாவளி.
14 நான்கு  ஓட்டங்களுடன் 47 பந்துகளில் 66.

இந்த அடி இந்தியாவின் திட்டங்களைத் தகர்த்தது.

இலங்கை அணி பெற்ற 251 ஓட்டங்கள் நல்ல formஇல் உள்ள சச்சின், சிது போன்றோர் அடங்கிய இந்திய அணிக்கு எதிராக போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எல்லோருக்குமே இருந்தது.

சிது குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாலும், சச்சின், சஞ்சய் மஞ்ச்ரேகர் ஆகியோரின் 90 ஓட்ட இணைப்பாட்டம் இலங்கையை அச்சுறுத்தியது.
ஆனால் ஜெயசூரியவின் பந்துவீச்சில் களுவிதாரணவின் அபார ஸ்டம்பிங் மூலமாக சச்சின் டெண்டுல்கர் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ஒரு ஊர்வலம் போல இந்திய விக்கெட்டுக்கள் வருவதும் போவதுமாக, 8 விக்கெட்டுக்கள் 120 ஓட்டங்களுக்கு என்றாகியது.

மிக எதிர்பார்க்கப்பட்ட அசார், ஜடேஜா ஆகியோர் பூஜ்ஜியம்.

சனத் ஜெயசூரிய மீண்டும் இந்தியாவின் சிம்ம சொப்பனமானார்.
ஆனால், இம்முறை  பந்துவீச்சில்.
7 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள்.

எங்களுக்கு அப்படியொரு ஆனந்தம்.
உலகக்கிண்ணம் இதோ எங்கள் கையில்  என்னும் அளவுக்கு குதூகலம்.

ஆனால், வெற்றியை எதிர்பார்த்து கொல்கொத்தா வந்த இந்திய ரசிகர்களுக்கு இப்படியொரு மோசமான துடுப்பாட்ட வீழ்ச்சியை சகிக்க முடியவில்லை.
கையில் கிடைத்ததை மைதானத்துக்குள்ளும், இலங்கை வீரர்கள் மீதும் வீசினர்.
ஆசனங்களுக்கு தீ வைத்தனர்.

அசாருதீனும் இந்திய வீரர்களும் ரசிகர்களைப் பொறுமை காக்க கோரிக்கை வைத்தாலும், கொந்தளித்துப் போன அந்த ரசிகர்கள் அடங்குவார்களா?

எனக்கென்றால், எப்படியாவது அந்தக் கடைசி மூன்று விக்கெட்டுக்களையும் எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலை.

பொலீசார் முயன்றும், மைதானத்தில் நிலைமை கட்டுக்குள் வராததால், போட்டித் தீர்ப்பாளர் கிளைவ் லொயிட் (ஆச்சரியமான விஷயம் - இவரது தலைமையிலேயே மேற்கிந்தியத் தீவுகள் முதல் இரு உலகக்கிண்ணங்களை வென்றிருந்தது) இலங்கை அணிக்கு வெற்றியை வழங்கினார்.

எனக்கு இன்னமும் சில இணையங்களும் சில கிரிக்கெட் விமர்சகர்களும் இலங்கை வென்ற அரையிறுதி என்று சொல்லாமல், won by default என்று சொல்வது அதிருப்தியாகவே இருக்கிறது.
இலங்கைக்கு வெற்றி வழங்கப்பட்டது.
அந்த வேளையில் Duckworth - Lewis விதி என்ன, எந்த விதியைப் பயன்படுத்தினாலும் இலங்கைக்கே வெற்றி. 

இதனாலேயே சில வேளைகளில் இந்திய ரசிகர்களிடமும், கொல்கொத்தா மைதானம் & ரசிகர் மீதும் எரிச்சல் பொங்குவதுண்டு.

வினோத் கம்ப்ளியின் அழுத்த முகமும், இடிந்து போன இந்திய ரசிகர்களின் முகங்களும் எப்போதும் மறக்காத பிம்பங்கள்.

-------------------

இரண்டாவது அரையிறுதி இந்த உலகக்கிண்ணத்தின் மிக விறுவிறுப்பான போட்டி.
இறுதிவரை போராடும் ஒரு அணியாக அவுஸ்திரேலியா எப்போதுமே இருந்துவருகிறது என்பதற்கு என்றுமே உதாரணம் காட்டக்கூடிய போட்டி.

இந்தப் போட்டியில் துடுப்பாடிய போதும் சரி, பின்னர் பந்துவீசியபோதும் சரி அவுஸ்திரேலியா தோல்வியின் விளிம்பு வரை சென்று, போராடித் தங்கள் வசம் வெற்றியைக் கொண்டு வந்த போட்டி.

அவுஸ்திரேலியா முன்னதாக முதற்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றிருந்தது.

மார்க் வோ, டெய்லர், பொன்டிங் , ஸ்டீவ் வோ ஆகிய நான்கு பேரையும் அம்ப்ரோஸ், பிஷப் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சு ஆட்டமிழக்கச் செய்த நேரம் அவுஸ்திரேலியா பெற்றிருந்த ஓட்டங்கள், வெறும் 15.

இதோ முடிந்தது அவுஸ்திரேலியாவின் கதை என்றிருக்க, சேர்ந்தார்கள் ஸ்டுவர்ட் லோவும், மைக்கேல் பெவானும்.
சிரமமான ஆடுகளத்தில் மிக நிதானமாக ஆடி 138 ஓட்ட இணைப்பாட்டம் மூலமாக அவுஸ்திரேலியாவை ஒருமாதிரியாக 200 ஓட்டங்களைக் கடக்க வைத்தனர்.

பெவானின் கூலான ஆட்டத்திறனும் இறுதிவரை கைவிடாத முயற்சியும் என்னையும் அவரது ரசிகராக மாற்றியிருந்தன.
இந்த ஆட்டம் அவரது மிகச்சிறந்தவற்றில் ஒன்று என்பேன்.

லோ தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் துரத்தல் மிகச் சிறப்பாக, வெற்றியை நோக்கி ஆரம்பித்தது.

165க்கு 2 விக்கெட்டுக்கள்.
இன்னும் 43 ஓட்டங்கள் தேவை.
ஓவர்களோ தாராளமாக இருந்தன.
அபாரமாக ஆடிக்கொண்டிருந்த சந்தர்போலோடு,அணித் தலைவர் ரிச்சர்ட்சன் நிற்கிறார்.

இலங்கைக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவைப் பிடித்த எனக்கு சே, இப்படியொரு தோல்வியா என்று மனம் சலித்த நேரம் தான் அந்த மாயாஜாலம் நிகழ ஆரம்பித்தது.

சந்தர்போலையும் ஹார்ப்பரையும் மக்க்றா ஆட்டமிழக்கச் செய்ய, ஷேன் வோர்ன் தன்னுடைய சுழல் வலையைப் பின்ன ஆரம்பித்தார்.
ஏதோ சுழலில் அகப்பட்ட மாதிரி மளமளவென்று விக்கெட்டுக்கள் ஒருபக்கமாக சரிய ஆரம்பித்தன.

செய்வதறியாமல்,எதையும் செய்ய முடியாமல் மறுமுனையில் அணித்தலைவர் ரிச்சர்ட்சன் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களுடன் நின்றுகொண்டிருக்க, 3 பந்துகள் மீதமிருக்க, 5 ஓட்டங்களால் அதிசய வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு.

இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை எடுப்பதற்கு என்னென்ன செய்யலாமோ அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார் மார்க் டெய்லர்.
வித்தியாசமான களத்தடுப்பு வியூகங்கள், 8 பந்துவீச்சாளர்கள்.

ஆனால் தானாக வீழ்ந்த மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட்டுக்கள் அவுஸ்திரேலியாவை அவர்களது மூன்றாவது உலகக்கிண்ண இறுதிக்கு அனுப்பிவைத்தன.

அது தான் மேற்கிந்தியத் தீவுகள் உலகக்கிண்ண அரையிறுதி ஒன்றில் தோல்வியடைந்த முதலாவது சந்தர்ப்பம்.
ஆனால், இதற்குப் பின்னர் இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதி வரை வரவேயில்லை.

-----------------------

முரளிதரனின் பந்துவீச்சு நோபோல் விவகாரம், அவுஸ்திரேலியத் தொடரில் இலங்கை வீரர்களுக்கு நிகழ்ந்த அவமானங்கள், அவுஸ்திரேலியா இலங்கைக்கு விளையாட வராதது எல்லாம் சேர்ந்து இலங்கை - அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை பரம வைரியாக வைத்திருந்த நேரத்தில் 'பழிவாங்கும்' ஒரு சந்தர்ப்பமாக லாகூர் இறுதிப்போட்டி அமைந்தது.

பாகிஸ்தான் ரசிகர்கள் இலங்கை அணியைத் தமது அணியாகவே கருதி ஆதரவு தெரிவித்தமை இன்றுவரை மிகப் பசுமையான நினைவுகள்.
இந்திய ரசிகர்களில் சிலருக்கு கொல்கொத்தா தோல்வி மாறா வடுவாக (இன்றும் கூட) இருந்தாலும், ஆசிய அணியாக இலங்கை வென்றால் நல்லது என்று கருதியிருந்தனர்.

இலங்கைக்கு இவ்வகையான முக்கிய போட்டியொன்றின் அனுபவங்கள் கிடையாது.
அந்தவகையில் அவுஸ்திரேலியா மனரீதியாக இலங்கையை விட உறுதியான அணியாகத் தெரிந்தது.
உயர்தர வகுப்பை அன்று நாம் எல்லோரும் சேர்ந்து ஒத்திவைத்திருந்தோம்.

லாகூர் நோக்கி விசேட விமான ஒழுங்குகள் கூட செய்யப்பட்டு விசேட கட்டணக் கழிவுகள் கூட வழங்கப்பட்டிருந்தன.
லங்காவான லாகூரில் மேலும் இலங்கையர் ஆயிரக்கணக்கில் போய்ச்சேர்ந்தனர்.

பகலிரவுப் போட்டி..
நாணய சுழற்சியின் முக்கியத்துவம் தெரிந்தே இருந்தது. வழமையாகவே இரண்டாவதாகத் துடுப்பாட விரும்பும் இலங்கை அணிக்கு நாணய சுழற்சியின் வெற்றியும் சாதகமாக அமைய, அவுஸ்திரேலியாவை துடுப்பாட அழைத்தார் அர்ஜுன.

அப்போதே, மனத்திரையில் அர்ஜுன தனது நீல நிற இலங்கைச் சீருடையில் உலகக்கிண்ணத்தை ஏந்தும் காட்சி வந்தாலும், 17ஆம் திகதி - 8 எண் எனக்கு அவ்வளவு ராசியில்லை என்பதும் மனதுக்குள் வந்துகொண்டிருந்தது.

தொடர் முழுவதும் கலக்கி வந்த மார்க் வோவை சீக்கிரமாகவே ஆட்டமிழக்கச் செய்தது, இலங்கைக்கு வாய்ப்பாக இருந்தாலும்,
மார்க் டெய்லர், பொன்டிங் ஆகியோரின் சத இணைப்பாட்டம் இலங்கைக்கு சிக்கல் கொடுக்க ஆரம்பித்தது.

அரையிறுதி நாயகன் அரவிந்த அப்போது தான் இலங்கையின் உலகக்கிண்ண இறுதி நாயகனாக கலக்க ஆரம்பித்தார்.

டெய்லரையும், பொன்டிங்கையும் ஆட்டமிழக்கச் செய்த அரவிந்த, இலங்கையின் பக்கம் போட்டியைத் திருப்பிவிட்டார்.

அதன் பின் இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்கள் நால்வரும் சேர்ந்து அவுஸ்திரேலியா ஓட்டங்களை அடித்துக் குவிக்காமல் பார்த்துக்கொண்டார்கள்.

டெய்லரின் 74,பொன்டிங்கின் 45ஐத் தவிர பெவான் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றார்.

242 என்ற இலக்கு இலங்கையால் இலகுவாக அடையப்படும் என்ற நம்பிக்கை இருந்தபோதும், இந்த அவுஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் இன்று என்ன மாயாஜாலம் செய்வார்களோ என்ற ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது.

நினைத்தது போலவே, அரையிறுதியைப் போலவே சனத்தும், களுவும் பெரியளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்காமலேயே ஆடுகளம் விட்டுத் திரும்ப, எங்கே அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை உருட்டியது போலவே இலங்கையையும் உருட்டிவிடுமோ என்ற எண்ணம் உருவாகாமல் தடுத்த இணைப்பாட்டம், மீண்டும் அசங்க குருசிங்க - அரவிந்த டீ சில்வாவிடமிருந்து.

இந்த உலகக்கிண்ணத் தொடரில் மூன்றாவது தடவையாக இலங்கையை இவ்விருவரும் திடப்படுத்தினார்கள்.
குருசிங்க ஓரளவு நிதானமாக ஆட, அரவிந்தவோ பந்துகளை ஒவ்வொரு பக்கமாக அடித்து விரட்டினார்.

125 ஓட்ட இணைப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
ஆனால் இணைப்பாட்டம் ஆதிக்கம் செலுத்த அவுஸ்திரேலிய களத்தடுப்பாளர்கள் தடுமாற ஆரம்பித்தார்கள்.
பிளெமிங் விட்ட இலகுவான பிடியும், அர்ஜுனவின் பிடியை பின் ஷேன் வோர்ன் விட்டதும் சான்றுகள்.

குருசிங்க 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தலைவர் அர்ஜுன அரவிந்தவுடன் இணைந்துகொண்டார்.

ஓட்டங்கள் வேகமாக வர ஆரம்பிக்க, கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது.
அர்ஜுன தனது வழமையான பாணியில் குறிப்பாக தனது 'விரோதி'யான வோர்னை துவம்சம் செய்ய ஆரம்பித்தார்.

அரவிந்த விட்டகுறை தொட்டகுறையின்றி அபாரமான சதம் ஒன்றைப் பூர்த்தி செய்தார்.
இந்த 96 உலகக்கிண்ணத்தில் அவர் பெற்ற இரண்டாவது சதம்.

உலகக்கிண்ண இறுதியொன்றில் பெறப்பட்ட மூன்றாவது சதம்.
சர்வ நிச்சயமாக உலகமே பார்த்திருக்க, உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் தானும் ஒருவர் என்று அவர் நிரூபித்த விதம் புல்லரிக்க வைத்த ஒன்று.

ஆதிக்கம் செலுத்திய 97 ஓட்ட இணைப்பாட்டத்தோடு, ரணதுங்கவின் துடுப்பினால் மக்க்ராவின் பந்து தேர்ட் மான் திசைக்கு தட்டிவிட்ட 4 ஓட்டத்தோடு இலங்கை உலகக்கிண்ணத்தை வசப்படுத்திக்கொண்டது.

மைதானமெங்கும் ஆரவாரம்.
அதை விஞ்சிய கொழும்பெங்கும் அதிர்ந்த பட்டாசுச் சத்தங்கள், வாண வேடிக்கைகள்.

அரவிந்த - அர்ஜுன ஆரத்தழுவிய அந்தக் காட்சி இன்றும் மனதில் ஈரம் காயாமல்.
மைதானத்தில் ஓடிவந்து உற்சாகமாகக் கொண்டாடிய இலங்கை வீரர்களின் மகிழ்ச்சியோடு மானசீகமாக நானும், நாமும் சேர்ந்துகொண்டோம்.

ஆனந்தத்தில் கலங்கிய கண்களுடன் அப்போதைய பாகிஸ்தானிய பிரதமர் பெனாசீர் பூட்டோவிடமிருந்து அர்ஜுன உலகக்கிண்ணம் பெற்றுக்கொண்ட போது ஏதோ நாங்களே மில்லியன் கணக்கான ரூபாய்கள் பெற்ற குதூகலம். 

சனத் ஜெயசூரியவின் சகலதுறைத் திறமைக்காக இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே தொடர் நாயகன் விருது (அப்போது இதன் பெயர் மிகப் பெறுமதி வாய்ந்த வீரர் - Most Valuable Player) வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இறுதிப்போட்டியையும் சேர்த்தே பார்த்திருந்தால் அரவிந்தவுக்கே இது கிடைத்திருக்கவேண்டும் என்றே நான் இன்றும் நினைக்கிறேன்.

இறுதிப்போட்டியில் எல்லாவற்றிலும் அரவிந்த தான்.
சதம், அதிகூடிய ஓட்டங்கள், கூடிய விக்கெட்டுக்கள், 2 பிடிகள்.
என்ன தான் செய்யவில்லை?

எந்தவொரு போட்டியிலும் தோற்காமல் உலகக்கிண்ணம் வென்ற இரண்டாவது அணியானது இலங்கை.
(பின்னர் அவுஸ்திரேலியா இதை நிகர்த்தது)

டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 15 ஆண்டுகளுக்குள்ளேயே உலக சாம்பியனாக இலங்கையை மாற்றியது அவுஸ்திரேலியா தான் என்றால் அது உண்மை தான்.

கொடுத்த காயங்களும், படுத்திய அவமானமும் தான் இலங்கையை உத்வேகம் கொள்ளச்செய்து ஒற்றுமையாக உலக சாம்பியனாக மாற்றியது.

அர்ஜுனவின் தலைமையில், வட்மோரின் புத்தாக்க எண்ணங்களினால், அரவிந்த,சனத் போன்றோரின் சாகசங்களால் இலங்கை சர்வதேச கிரிக்கெட்டில் பதித்த அந்த முத்திரை இலங்கை கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.

இது மட்டுமன்றி, இலங்கை கிரிக்கெட் ரசிகர் மனதிலும் நம்பிக்கையையும் இலங்கை கிரிக்கெட்டையும் வீரர்களையும் கொண்டாடும் மனநிலையையும் தோற்றுவித்தது.

இன்னொரு உலகக்கிண்ணம் இலங்கைக்கு கிடைக்கும் வரை (T 20 கிண்ணம் கிடைத்தாலும் கூட) இந்த 1996இன் வெற்றி இலங்கையின் மிக மகத்துவமான விளையாட்டு சாதனையாக என்றென்றும் நோக்கப்படும்.

Post a Comment

2Comments

Please Select Embedded Mode To show the Comment System.*