February 05, 2015

ஆசியாவில் முதலாவது உலகக்கிண்ணம் - அவுஸ்திரேலியாவின் எழுச்சி - 1987 உலகக்கிண்ணம் #cwc15

இதுவரை நடைபெற்ற 10 உலகக்கிண்ணங்களில் நான் பார்த்த, அனுபவரீதியாக கேட்டு, அறிந்த உலகக்கிண்ணத் தொடர்கள் பற்றி நான் தமிழ் விஸ்டன் இணையத்துக்காக எழுதும் தொடர் கட்டுரையின் முதல் பாகம்...
----------------
உலகக்கிண்ணங்கள் என்றவுடனேயே முன்னோட்டங்கள், ஊகங்கள் எப்படியும் எழுதுவதுண்டு.
தமிழ் விஸ்டனில் கொஞ்சம் வித்தியாசமாக இம்முறை முயலலாம் என்று எண்ணியபோது ஊக்கம் தந்த நண்பர் - தமிழ் விஸ்டன் ஆசிரியர் மதனுக்கு நன்றி.

நேரம் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் எனினும் எப்படியாவது முயன்று 87 முதல் 2011 வரை எழுதவேண்டும் என்று சங்கல்பம் (பெரிய வார்த்தையோ?) பூண்டுள்ளேன்.
இந்த முதலாவது பாகத்துக்கு தமிழ் விஸ்டன் மூலம் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியையும் தொடரலாம் என்ற உற்சாகத்தையும் தந்துள்ளது.

எனவே தொடர்வேன்... :)

இவை முடிய, 2015 உலகக்கிண்ணப் போட்டிக்கான முன்னோட்டத்தையும் தரும் எண்ணமும் உள்ளது.
(விக்கிரமாதித்தன் நாக்கிலும், விரலிலும் வராமல் இருப்பாராக)
------------------

இணையத்தளங்களும், தேடி தகவல் அறிய விக்கிப்பீடியாக்களும், ஏன் எல்லா போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்ப தொலைக்காட்சிகளும் இல்லாத அந்த 80களின் கடைக்கூறுகளில் என்னுடைய கிரிக்கெட் களஞ்சியம், எனக்கான கிரிக்கெட் அகராதி என்னுடைய அப்பா தான்.

வானொலியில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்டு வளர்ந்த காலம், ஆங்கிலப் பத்திரிகைகள் மூலம் கிரிக்கெட் போட்டிகள் பற்றி அறிந்த காலம், முன்னைய டெட் டெக்ஸ்டர், ரிச்சி பெனொட், சோபர்ஸ், வொரல், லில்லீ, தோம்சன், கவாஸ்கர், விஸ்வநாத் கதைகளையெல்லாம் வரலாறு தப்பாமல் சுவாரஸ்யமாக சொல்லிச் சொல்லியே கிரிக்கெட்டின் மீது காதலை அப்போதே ஊட்டி வளர்த்த அப்பாவினால், அப்போது டெஸ்ட் கிரிக்கெட் மீதான அபிமானம் எனக்குத் தொற்றிக்கொண்டது.

நினைவு தெரிந்து அப்போதைய தென்னிந்திய தூரதர்ஷனில் அப்பாவுடன் சேர்ந்து பார்த்த முதலாவது கிரிக்கெட் போட்டியே இந்தியாவுக்கு அப்போது விஜயம் செய்திருந்த இலங்கை அணி விளையாடிய கான்பூர் டெஸ்ட் போட்டி..

அப்போது அப்பா வழியில் இந்திய அணியின் ரசிகனாக இருந்த எனக்கு அசாருதீன் 199 ஓட்டங்களுடன் LBW முறையில் ஆட்டமிழந்த அந்த இன்னிங்க்ஸ் இப்போதும் கவலையுடன் மனதில் நிற்கும்.

அப்பா அடிக்கடி சொல்வார் "கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் தான் நிஜமான மகுடம், Test matches are the ultimate form of Cricket"

அடுத்து வந்த அவுஸ்திரேலிய - இந்திய டெஸ்ட் தொடர் - அதிலும் நானும் அப்பாவும் விடாமல் பார்த்த அப்போதைய மெட்ராஸ் - சேப்பாக்கம் Tied டெஸ்ட் போட்டியும் டெஸ்ட் போட்டிகளின் மீது தீராத வெறி ஒன்றையே தந்திருந்தன.

ஆனால், 1987 வந்தது...
இலங்கையில் யாருக்குமே குறிப்பாக வடக்கில் வாழ்ந்த தமிழருக்கு மறக்கமுடியாத ஆண்டு..

இந்திய அமைதி காக்கும் படை யாழ் குடா நாட்டில் வந்திறங்கியது, திலீபனின் உண்ணாவிரதம், செப்டம்பர் 26இல் திலீபனின் மரணம், தொடர்ந்த புலிகள் - இந்தியப் படை மோதல் என்று அப்போதிருந்த சூழ்நிலையில் நாம் கிரிக்கெட்டை தொடர்வதோ, இல்லாவிட்டால் எந்தெந்தப் போட்டிகள் எங்கே நடக்கிறது என்பது பற்றி அறியவோ வாய்ப்போ, விருப்பமோ இல்லாத சூழ்நிலை..

நான்காவது உலகக்கிண்ணம் 1987 ஒக்டோபரில் ஆரம்பிக்கும் நேரம் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி இணுவில் கந்தசுவாமி கோவிலில் - சொந்த ஊரிலேயே அகதிகளாக.

வெளியே தலைகாட்ட என்ன கால் வைக்கக் கூட முடியாத அகோர யுத்தம்..
எங்களுக்குப் பாடசாலைகளும் இல்லை; அப்பாவுக்கு வேலையும் இல்லை.
கூடவே அப்போதைய கொக்குவில் இந்துக்கல்லூரி உப அதிபராக இருந்த எங்கள் மாமாவும்..
அவரும் ஒரு கிரிக்கெட் பிரியர்.
அப்பாவுக்கு அடுத்தபடியாக எனக்கான கிரிக்கெட் ஆர்வத்தை, வாசிப்பதில் தூண்டிவிட்ட ஒரு நடமாடும் ஆங்கில கலாசாலை.
அவரது வீட்டு நூலகத்தில் இருந்த Sports Star, Cricketer, இன்னும் ஆங்கில விளையாட்டு நூல்கள் தான் எனக்கு தீனி போட்டவை.

ஆனால் அப்பா இந்திய ரசிகர் என்பதாலோ என்னவோ மாமா பாகிஸ்தானிய தீவிர ரசிகர்.
ஜாவிட் மியன்டாட் தான் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பார்.

----------------

மாமாவின் சின்ன பொக்கெட் ரேடியோவின் உதவியுடன் இந்திய ஆங்கில வானொலியின் நேர்முக வர்ணனை மூலம் 1987 உலகக்கிண்ணப் போட்டிகளோடு இந்த 9 வயதுப் பையன் கிரிக்கெட்டின் உயர் பரவசங்களைப் பெற ஆரம்பிக்கிறான்..

நாசகார குண்டுவீச்சுக்களின் பின்னணியுடன்.



(சிறுவனாக அப்போது ரசித்த போட்டிகளை மீண்டும் மீட்டிப் பார்ப்பதோடு, பின்னர் வளர்ந்து தெரிந்துகொண்ட விபரங்களையும் இங்கே சேர்த்து தருகிறேன்)



நாலாபுறம் வந்து வீழ்ந்துகொண்டிருந்த குண்டுகளின் மத்தியில், கந்தசுவாமி கோவிலின் பிள்ளையார் பிரகாரத்துக்கு நேரே எங்களுக்கான தற்காலிக இருப்பிடத்தில், மாமாவுடன் சேர்ந்து 'கேட்ட' முதல் போட்டியே இன்றுவரை மறக்கமுடியாத நினைவுகளை தரும் ஒரு போட்டி...


அவுஸ்திரேலியா ஒரேயொரு ஓட்டத்தால் இந்தியாவை வென்ற அந்தப் போட்டியில் தான், டொம்  மூடி, நவ்ஜோத் சிது ஆகிய இருவரும் அறிமுகமாகினர்.



சிதுவின் சிக்ஸர் அடிக்கும் அபாரமான ஆற்றல் 'கேட்டு' வியக்கிறேன்.


​ஸ்டீவ் வோ என்னும் கூலான மனிதர், அவரது அணியைப் போலவே எதிர்கால கிரிக்கெட்டை ஆளப்போவதை அப்போது உணரவில்லை நான்.


கேட்டு ரசிக்கின்ற போட்டிகளைப் பற்றி இடையிடையே அப்பா, மாமாவுடன் பேசி, தெரியாத வீரர்கள், விஷயங்களை அறிந்துகொள்வேன்.
அப்போது ஹிந்தி தெரிந்த மாமா, ஹிந்தி நேர்முக வர்ணனைகளின் விபரங்கள் சொல்லித் தருவார்.
அப்பா ஒவ்வொரு வீரர்களின் பின்னணி, அணிகளின் முன்னைய உலகக்கிண்ண வரலாறுகள், பெறுபேறுகள் பற்றியெல்லாம் தனக்குத் தெரிந்ததை சொல்வார்.

இணையம் உள்ள இன்றைய நாட்களில் அப்பா அன்று சொல்லித் தந்த விடயங்களை தேடி வாசிக்கும்போது அவர் அச்சொட்டாக சொன்ன விஷயங்களின் துல்லியம் ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனாலும், இப்போதும் இந்த கணித கோலங்கள், எண், இலக்க சுவாரஸ்யங்களில் ஆர்வமுள்ள எனக்கு ஒலிம்பிக் போட்டிகள் லீப் வருடங்களில் நடக்கின்றன, கால்பந்து உலகக்கிண்ண போட்டிகள் கூட அழகாக, இரண்டால் வகுபடும் வருடங்களில் நடக்கின்றன.

அப்படியிருக்க கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகள் மட்டும் ஒரு ஒழுங்கில்லாத 75, 79, 83, 87 என்ற இலக்கங்களில் நடைபெறுவது மனதுக்கு ஒவ்வாதிருந்தது.
அப்பாவிடம் கேட்டபோது, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் ஆரம்பித்ததே தற்செயலாகத் தான் (மெல்பேர்னில் மழையினால் டெஸ்ட் போட்டி ஒருநாள் போட்டியாக மாறியது), இதனால் உலகக்கிண்ணப் போட்டியும் திட்டமிட்டு ஆரம்பிக்கவில்லை என்றார்.

---------------

தொடர்ந்து வந்த போட்டிகளின் பல முக்கிய திருப்பங்கள், சம்பவங்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் மனதில் அப்படியே நேரில் பார்த்தது போலவே இருக்கிறது.

முக்கியமாக 
சிம்பாப்வேயின் டேவ் ஹௌட்டனின் அபார சதம், நியூ சீலாந்து அணிக்கெதிராக தோல்வியில் முடிந்தது.
நியூ சீலாந்துக்கு எதிராக மீண்டும் சிதுவின் சிக்ஸர்  தாண்டவங்கள்.
இலங்கை அணிக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸ் பெற்ற 181.
அப்போதிருந்த உலகக்கிண்ண சாதனையான கபில் தேவின் 175ஐ முறியடித்த அபார ஆட்டம் அது.
பாகிஸ்தானின் கடைசி துடுப்பாட்ட வீரர் சலீம் ஜஃபரை 'மன்கட்' முறை மூலம் ஆட்டமிழக்கச் செய்யாமல் கனவான் தன்மையோடு மேற்கிந்தியத் தீவுகளின் கோர்ட்னி வோல்ஷ் விட்டுக்கொடுக்க, ஒரேயொரு விக்கெட்டால் பாகிஸ்தான் வெற்றிபெற்ற போட்டி.
மனதில் வோல்ஷை மிக உயரத்தில் தூக்கி வைத்த ஒரு சம்பவம்.

ஆனால் பாவம் இந்த தோல்வியானது மேற்கிந்தியத் தீவுகளை உலகக்கிண்ண அரையிறுதிக்கு தெரிவாகாமல் செய்துவிட்டது.

அப்போது இலங்கை அணியை பெரிதாகப் பிடிக்காது..
ஆனாலும் எல்லா அணிகளையும் உருட்டிக் கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை விளையாடிய இரண்டாவது போட்டியில் அர்ஜுன ரணதுங்க அடித்தாடி பெற்ற 86 ஓட்டங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.
இதே போல பாகிஸ்தானுக்கு எதிராகவும் அர்ஜுன மற்றொரு அரைச்சதம் பெற்றிருந்தார்.

அறிமுக வீரர்கள் கலக்கிய இந்தத் தொடரில் சிது போல கலக்கிய இன்னொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மேற்கிந்தியத் தீவுகளின் பில் சிமன்ஸ்.

அப்போதே மாமா பாகிஸ்தானின் சலீம் மலிக்  பற்றி புகழ்ந்துகொண்டிருப்பார். 1987 உலகக்கிண்ணப் போட்டிகளில் சலீம் மலிக் ஒரு அபாரமான சதமும்,இரண்டு அரைச்சதங்களும் எடுத்திருந்தார்.

ஆனால் ஓட்டங்களை மலையாகக் குவித்து தொடரின் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் க்ரஹாம் கூச் - 471 ஓட்டங்கள்.
தொடர்ச்சியாக ஓட்டங்களை சராசரியாக பெற்று, 5 அரைச்சதங்களுடன் 447 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் அவுஸ்திரேலியாவின் டேவிட் பூன்.

இந்த உலகக்கிண்ணத்தில் இரண்டு சதங்களைப் பெற்ற ஒரேயொரு வீரர் அவுஸ்திரேலிய அணியின் அப்போதைய உப தலைவர் ஜெப் மார்ஷ்.

இந்தத் தொடரில் மிக முக்கியமானதொரு சம்பவம், சுனில் கவாஸ்கர் தன்னுடைய இறுதி ஒருநாள் தொடரில் நியூ சீலாந்துக்கு எதிராக இடம்பெற்ற முதற்சுற்றின் இறுதிப் போட்டியில், பெற்ற அவருடைய முதலாவதும் கடைசியுமான ஒருநாள் சதம்.

85 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் கவாஸ்கர் பெற்ற, வழமையான கவாஸ்கர் பாணியில்லாத அந்த சதம் பற்றி அப்போதிருந்து இன்று வரை சிலாகிக்கப்பட்டது.

அந்த வேகமான சதமும், இந்தியா நியூ சீலாந்தை வேகமாக அந்தப்போட்டியில் வென்ற விதமும் 1987 உலகக்கிண்ணத்தை மாற்றியமைத்தன என்று சொன்னால் அதுவும் உண்மையே.

காரணம், இந்தியாவின் அந்த வேகமான வெற்றி, அவுஸ்திரேலியாவின் ஓட்ட சராசரி வீதத்தை முந்தி (அப்போது நிகர, ஓட்ட சராசரி வீதம் இல்லையே) பிரிவு A யில் முதலாம் இடத்தைப் பெறச் செய்தது.
இதனால் பாகிஸ்தான் சென்று அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கும் வாய்ப்பைத் தவிர்த்து இந்தியா இங்கிலாந்தை மும்பையில் சந்தித்தது.

அவுஸ்திரேலியா பாகிஸ்தானை மற்ற அரையிறுதியில் சந்தித்தது.

இந்திய - பாகிஸ்தான் இறுதியை அனைவரும் எதிர்பார்த்திருக்க,
எனக்கு மிக ஆச்சரியமாக அமைந்தது ரிச்சர்ட்சின் மேற்கிந்தியத் தீவுகள், அப்பா,மாமா எல்லோரும் ஆகா, ஓகோ என்று போற்றிப் புகழ்ந்த அப்போதைய முடிசூடா மன்னர்கள் அரையிறுதிக்கும் தகுதி பெறாமல் போனது.

இந்த உலககிண்ணத்தில் காயம் காரணமாக நியூ சீலாந்து அவர்களின் நட்சத்திர சகலதுறை வீரர் ரிச்சர்ட் ஹட்லீயின் சேவைகளை இழந்தது.
அதேபோல, இங்கிலாந்தின் சகலதுறை நட்சத்திரம் இயான் பொத்தம், மிக நேர்த்தியான,stylish ஆன துடுப்பாட்ட வீரர் டேவிட் கவர் ஆகியோர் இந்த உலகக்கிண்ணம் தங்களுக்குப் பெரிய சுவாரஸ்யம் இல்லை என்று சொல்லி விலகிவிட்டனராம்.
முட்டாள்கள் என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

அப்போதே இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் மோதலின் சுவாரஸ்யத்தை அப்பா - மாமாவை பார்த்து அறிந்துகொண்ட எனக்கு, அகதி வாழ்க்கையும், வெளியே கண்ட, அறிந்துகொண்ட இந்தியப் படைகளின் அட்டூழியங்கள் இந்தியாவின் மீதான விருப்பை அகற்றி அவுஸ்திரேலியா என்ற 'வளர்ந்துவரும்' அணி மீதான பிரியத்தை வளர்த்துக்கொண்டிருந்தன.

அதிலும் அலன் போர்டர் பற்றியும் அவர் கட்டியெழுப்பும் போராட்ட குணம் கொண்ட அணி பற்றியும் அறிந்துகொண்ட விபரங்கள் மனதில் பெரிய மதிப்பை ஏற்படுத்தி வைத்திருந்தன.

பாகிஸ்தானை ஒரு அரையிறுதியில் மக்டெர்மொட் தனது வேகப்பந்துவீச்சில் சரிக்க, மாமா என்னைப் பார்த்து சொன்னது இன்னமும் ஞாபகமிருக்கிறது..
"இவன் மியாண்டாட் இருக்கிற வரைக்கும் பாகிஸ்தான் கப் வெல்லுவதை யாராலும் தடுக்கமுடியாது" என்று சொல்லிவிட்டு என்னிடம் பொக்கெட் ரேடியோவை தந்துவிட்டு சிறு வேலை விடயமாக வெளியே போய்விட்டு வந்தவர், பாகிஸ்தானின் அதிர்ச்சியான தோல்வியையே அறிந்துகொண்டார்.

மியன்டாட் 70 ஓட்டங்கள், இம்ரான் கான் 58. ஆனால் இதே இருவரது இணைப்பாட்டம் ஐந்து வருடங்களின் பின்னர் மெல்பேர்னில் பாகிஸ்தானுக்கு உலகக்கிண்ணத்தை வென்றுகொடுத்தது .

அடுத்த அரையிறுதியில் கூச்சின் சதமும், ஹெம்மிங்க்சின் 4 விக்கேட்டுக்களும் இந்தியாவை சொந்த மண்ணில் வைத்து தோல்வியுறச் செய்ய, மனதுள் அப்போது நினைத்துக்கொண்டேன் 
"இவங்களுக்குத் தேவை தான்"
ஆனால் கொஞ்சம் உள்ளூரக் கவலை தான்.
என்ன இருந்தாலும் நினைவு தெரிந்த காலம் முதல் கொஞ்சக் காலம் ரசித்த அணி இல்லையா?

இறுதிப் போட்டி - ஈடன் கார்டன்ஸ் - கொல்கொத்தாவில்.


5 முக்கிய தருணங்கள் இன்னமும் இணையம் செல்லாமலே ஞாபகம் இருக்கு.

1. டேவிட் பூனின் 75 ஓட்டங்கள்.
2.மைக் வேலேட்டா இறுதி நேரத்தில் வந்து வேகமாக அடித்த 31 பந்துகளில் 45 ஓட்டங்கள்.
3. இங்கிலாந்து துடுப்பெடுத்தாடிய போது மிக அபாரமாக ஆடிக்கொண்டிருந்த அணித்தலைவர் மைக் கட்டிங்க்கின் விக்கெட்டை அவுஸ்திரேலிய அணித் தலைவர் அலன் போர்டர் கைப்பற்றிய விதம்.
அந்த ரிவேர்ஸ் ஸ்வீப் அடியை யார் இப்போது துடுப்பெடுத்தாடினாலும், 1987 உலகக்கிண்ணமும் வானொலி நேர்முக வர்ணனையும் நினைவில் வரும்.

4. அலன் லாம்பின் இறுதி வரையான போராட்டம்.
5. Ice Man என்று போர்டரினால் போற்றப்பட்ட ஸ்டீவ் வோவினால் வீசப்பட்ட மிகக் கூலான கடைசி ஓவர்.
இதுவரை காலமும் உலகக்கிண்ண வரலாற்றில் பெறப்பட்டுள்ள மிக நெருக்கமான இறுதிப்போட்டி வெற்றி - 7 ஓட்டங்களால்.
அவுஸ்திரேலியா முதல் தடவையாக சம்பியனானது.

அலன் போர்டரின் தலைமையில் அவுஸ்திரேலியா உலகக் கிரிக்கெட்டை ஆளும் அணியாகத் தனது அடித்தளத்தை இட்டது இந்த கொல்கொத்தாவில் தான்.


இந்த அணியில் விளையாடிய ஸ்டீவ் வோ, டொம் மூடி ஆகியோர் மீண்டும் 1999இல் உலகக்கிண்ணத்தை காவிக்கொண்டனர்.
அதுவும் Ice Man ஸ்டீவ் வோவின் தலைமையில்.

1999, 2003,2007 ஆகிய மூன்று கிண்ணங்களையும் ஹட் ட்ரிக் மூலம் பெற்று சாதனை படைத்தது அவுஸ்திரேலியா.
டெஸ்ட் சாம்பியனாகவும் மாறியது. 
அனைத்தும் ஆரம்பம் இங்கே தான்...


அந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை அப்போது பார்க்க முடியாவிட்டாலும் கூட, பின்னாளில் பார்த்த கறுப்பு - வெள்ளை புகைப்படங்கள், காணொளிகளை இப்போது பார்த்தாலும் ஒரு பரவசம்.

1987 உலகக்கிண்ணம் இன்னும் பல வகைகளில் கிரிக்கெட்டில் புரட்சிகளை ஏற்படுத்தியிருந்தது.


  • இங்கிலாந்தைத் தாண்டி ஆசியாவுக்குள் உலகக்கிண்ணமும் கிரிக்கெட்டும் மையம் கொள்ள ஆரம்பித்தது.
  • 60 ஓவர்கள் போட்டிகள் கால, நேர சூழ்நிலைக்கு ஏற்ப 50 ஓவர்களாக மாறின.
  • ஆசியாவில் ரசிகர்களின் வரவேற்பு  கிரிக்கெட் உலகத்தை யோசிக்க வைத்தது.
  • ஒருநாள் போட்டிகளுக்கான பிரத்தியேக வீரர்களின் முக்கியத்துவம், விசேடத்துவம் போர்டரினால் வெற்றிகரமாகப் புரியவைக்கப்பட்டது.

1987 உலகக்கிண்ணம் 

அதிக ஓட்டங்கள் - க்ரஹாம் கூச்  471
                                 டேவிட் பூன்  447
                                 ஜெப் மார்ஷ் 428

அதிக விக்கெட்டுக்கள் - க்ரெய்க் மக்டெர்மொட் - 18
                                          இம்ரான் கான் - 17
                                          பற்றிக் பட்டர்சன் -14
                                         மனிந்தர் சிங் - 14 



No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner