February 06, 2015

பாகிஸ்தானின் எழுச்சி - புதுமைகளும் அதிர்ச்சிகளும் நிறைந்த 1992 உலகக்கிண்ணம் #cwc15

11வது உலகக்கிண்ணத்தை வரவேற்க, தமிழ் விஸ்டனில் எழுத ஆரம்பித்துள்ள தொடரில், இரண்டாவது கட்டுரை....

1992 உலகக்கிண்ணம் - அவுஸ்திரேலியா & நியூ சீலாந்து இணைந்து நடத்திய முதலாவது உலகக்கிண்ணம்.

--------------------

1992 உலகக்கிண்ணம் தான் நான் 'பார்த்த' முதலாவது உலகக்கிண்ணம்.
பார்த்தேன் என்பதை விட பரவசப்பட்ட என்று சொல்வதே மேலும் பொருத்தமானது.
இன்று வரை ஏனைய எல்லா உலகக்கிண்ணங்களையும் விட 92 உலகக்கிண்ணம் தான் மிகவும் புதுமையானதும், நேர்த்தியானதும், வண்ணமயமானதும் என்பேன்.




வர்ண சீருடைகளின் அணி வகுப்பு, எல்லா அணிகளையும் ஒரு சேரப் பார்த்தது, இதுவரை பார்த்திராத அதிரடி துடுப்பாட்டங்கள் என்று அந்த பதின்ம வயதின் பரவசம் இன்றுவரை மனதிலே ஈரமாக.

1992...
கொழும்பு வாழ்க்கையின் மாற்றங்களுக்கு பழக்கமாகி இரண்டு வருடங்களாகும் நிலையில், தினமும் ஆங்கிலப் பத்திரிகைகளின் கடைசிப் பக்கங்களின் துணையோடு கிரிக்கெட்டைப் பற்றி தேடி வாசிக்க ஆரம்பித்திருந்த காலம்.

அப்பாவுடன் கிரிக்கெட் பற்றி பேச, விவாதிக்க, எனக்கும் கொஞ்சம் கிரிக்கெட் தெரியும் என்று பாடசாலை நண்பர்களுடன் கலர்ஸ் காட்ட ஆரம்பித்த காலம்.



​படிக்க கூட காலையில் 5மணிக்கு எழும்புவதற்கு கள்ளம் அடிக்கும் நானும் தம்பியும் நியூ சீலாந்தில் ஆரம்பிக்கும் போட்டி ​பார்க்கவென்று 3.30க்கு எல்லாம் அலாரம் வைத்து எழும்புவதோடு, எங்களையும் அப்பாவையும் தூங்காமல் வைத்திருக்க, தேநீர் ஊற்றித் தர அம்மாவையும் எழுப்பிவிட்டுவிடுவோம்.



அவுஸ்திரேலியா - நியூ சீலாந்து முதல் தடவையாக நடத்திய இந்த உலகக்கிண்ணம் பல புதுமைகளை கிரிக்கெட்டுக்கு பரிசளித்திருந்தது.


ஏற்கெனவே
​ அவுஸ்திரேலியாவில் நடக்கும் முக்கோண ஒருநாள் தொடர் போட்டிகளுக்காக ஒவ்வொரு வருடமும் வழங்கும் வண்ணமயமான, ஒன்றுக்கொன்று வித்தியாசமான சீருடைகளுக்காகவென்றே ஆர்வத்துடன் காத்திருக்கும் எங்களுக்கு 9 அணிகள், கண்ணைப் பறிக்கும் அழகான சீருடைகள்,பகலிரவுப் போட்டிகள் எல்லாம் பெரிய விருந்தாக அமைந்தன.



இன்றும் 92 உலகக்கிண்ணப் போட்டிகளை நான் நேர்த்தியான முறையில் நடத்தப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளாகக் கருதுவதற்கான காரணம்...
"இந்த உலகக்கிண்ணப் போட்டிகளைத் தவிர வேறு எந்தவொரு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் எல்லா அணிகளும் மற்ற அணிகளை ஒரு தடவை தானும் எதிர்த்து விளையாடியதில்லை." ​



பிரிவுகள் ரீதியாக முதற்சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பின்னர் knock out அல்லது சுப்பர் சிக்ஸ், சுப்பர் 8 போட்டிகள் என்று நடத்தப்படும்போது ஒரு அணி இன்னொரு அணியை சந்திக்காமலே போகலாம்.



இரண்டு வெள்ளை நிறப் பந்துகள் இருமுனைகளிலும் பயன்படுத்தப்பட்டன.



உலகக்கிண்ணப் போட்டிகள் முதன் முதலாக பகல் இரவுப் போட்டிகளாக நடைபெற்றன.



சர்ச்சைக்குரிய மழை விதிகள் முதலும், கடைசியுமாகப் பயன்படுத்தப்பட்டன.

அதிலும் தென் ஆபிரிக்காவுக்கு துரதிர்ஷ்டமாக அமைந்து, இன்று வரை ஒரு சாபமாக அமைந்த அரையிறுதி குழப்பத்தோடு - மேலும் திருத்தமான, இன்று வரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டக்வேர்த் - லூயிஸ் மழை விதியை அறிமுகப்படுத்த உதவியிருந்தது.



இந்த 92 உலகக்கிண்ண மழை விதி இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணிக்கு மிகவும் பாதகமாக அமைந்திருந்தது.



-------------------------


1992 உலகக்கிண்ணம் என்றவுடனே உடனே ஞாபகம் வரும் சில விடயங்கள்..

இன்றும் பார்க்க, போட்டுப் பார்க்க ஆசைப்படும் அழகான வண்ண சீருடைகள் 
நியூ சீலாந்தின் அழகான புற்றரை மைதானங்கள்.
ஜொண்டி ரோட்ஸ் போன்ற வீரர்களின் களத்தடுப்பு சாகசங்கள் 
(முக்கியமாக இன்சமாமை ரன் அவுட் ஆக்கிய பாய்ச்சல்)
மார்ட்டின் குரோவின் சாதுரியம் மிக்க தலைமைத்துவம் 
தென் ஆபிரிக்கா என்ற கிரிக்கெட்டின் புதிய வல்லரசின் எழுச்சிக்கான அடித்தளம்.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஒருநாள் அணியின் வீழ்ச்சியின் ஆரம்பம்.
பாகிஸ்தான் அணி இம்ரான் கானின் தலைமையில் போராடிய விதம்.
அப்போது அவுஸ்திரேலிய ஆதரவாளனாக இருந்த எனக்கு அவுஸ்திரேலிய அணி மயிரிழையில் அரையிறுதி வாய்ப்பைத் தவறவிட்டமை தந்த கவலை 
நியூ சீலாந்து அணியின் அழகான சாம்பல் வண்ண சீருடை 

1992 உலகக்கிண்ணப் போட்டிகளை என்னைப் போல பார்த்து ரசித்தவராக நீங்களும் இருந்தால் எந்தெந்த வீரர்களை மறக்காமல் ஞாபகம் வைத்திருப்பீர்கள் ??

என்னைப் பொறுத்தவரை ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது..
இவர்கள் என்றால் 1992 உலகக்கிண்ணம் தான்..

மார்ட்டின் க்ரோ 
முஷ்டாக் அஹ்மத் 
ஜொண்டிரோட்ஸ் - இவரது பாய்ச்சல்கள் சாகச பிடிகளும், குறிப்பாக இன்சமாமை ரன் அவுட் ஆக்கியதும் மறக்கமுடியாத 1992இன் பிம்பங்களாகவே மாறியுள்ளன.

பீட்டர் கேர்ஸ்டன் 
டீப்பாக் பட்டேல்
க்றிஸ் ஹரிஸ் 
இன்சமாம் உல் ஹக் - என்ன ஒரு அபரிதமான அறிமுகம் 
அன்டி ஃபிளவர் 
மார்க் கிரேட்பாட்ச்
அதுல சமரவீர 
அஜய் ஜடேஜா - மற்றொரு அபார அறிமுகம் 
ரொட் லேதம் 
கவின் லார்சன் 
ரொஷான் மகாநாம - கேர்ஸ்டன், க்ரோ, மியாண்டாட், டேவிட் பூன் போல தொடர்ச்சியாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இலங்கை வீரர்.


 இவர்கள் ஏனைய தொடர்கள், போட்டிகளில் பதித்த தடங்களை விட, இந்த உலகக்கிண்ணத்தில் பதித்த முத்திரைகள் மறக்க முடியாதவையும் முக்கியமானவையும்.
இது வெறுமனே என்னுடைய பார்வையில் தான்.

இதில் நியூசீலாந்து வீரர்கள் அதிகமாக வந்திருப்பதன் காரணம், 92 உலகக்கிண்ணத்தில் மற்றெந்த அணிகளையும் விட நியூசீலாந்து செலுத்திய ஆதிக்கமே.

முதலாவது போட்டியில் அப்போதைய நடப்புச் சம்பியனாக விளங்கிய அவுஸ்திரேலிய அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வியூகங்கள், யாருமே ஒருநாள் போட்டிகளில் அந்த நாட்களில் செய்யாத மாற்றங்களுடன் வீழ்த்திய நியூசீலாந்து அணித் தலைவர் மார்ட்டின் க்ரோ - துடுப்பாட்டத்திலும் தனது தொடர்ச்சியான செல்வாக்கை செலுத்தி தொடரின் உண்மையான நாயகனாக விளங்கினார்.

அரையிறுதியில் க்ரோ காயமடைய நியூ சீலாந்தின் பிரதித் தலைவர் ஜோன் ரைட் பாரம்பரிய வியூகங்களுக்குச் செல்ல, அதை பாகிஸ்தானின் இள ரத்தங்கள் இன்சமாமும் மொயின் கானும் உடைத்து நொறுக்கும் வரை, நியூ சீலாந்தை வேறு எந்த அணியினாலும் வெல்வதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியவில்லை.
தொடர்ச்சியாக 7 போட்டிகளை வென்று வந்த நியூ சீலாந்து அணி, இறுதியாக பரிதாபமாக இரு போட்டிகளிலும் பாகிஸ்தானிடம் தோற்று வெளியேறியது.

மற்ற அணிகளில் இருந்தது போல நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும், மார்ட்டின் க்ரோவின் சாமர்த்தியமும் சூழ்நிலைகளைப் பயன்படுத்திய தலைமைத்துவ அணுகல்களும் innovations இல் முக்கியமான புதுமைகளாக இருந்தது.

நடப்புச் சாம்பியனாகவும் வெற்றி பெறும் வாய்ப்பை சொந்த மைதான அனுகூலங்களுடன் அதிகமாகக் கொண்டிருந்த அணியாகவும் விளங்கிய அவுஸ்திரேலியா, விளையாடிய முதல் இரு போட்டிகளிலுமே தோற்ற அதிர்ச்சியுடன் தொடர் நம்ப முடியாத பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.

1987 உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விட்ட இடத்திலிருந்து தனது formஐக் கொண்டுவந்த டேவிட் பூன் முதல் போட்டியிலேயே சதம் பெற்றார்.
ஆனால் நியூ சீலாந்தின் மார்ட்டின் க்ரோவின் சதமும், மித வேகமும் கட்டுப்பாடும் நிறைந்த “Dibbly-Dobbly-Wibbly-Wobbly” என்று செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட நியூ சீலாந்தின் பந்துவீச்சும் அற்புதமான களத்தடுப்பும் அவுஸ்திரேலியாவின் பலம் வாய்ந்த துடுப்பாட்டத்தைக் கவிழ்த்தது.

அடுத்த போட்டியில் புதிய அணியான தென் ஆபிரிக்காவின் துல்லியமான டொனால்டின் வேகப்பந்துவீச்சும், ரோட்ஸின் பங்களிப்புடனான களத்தடுப்பும் சேர்ந்து அவுஸ்திரேலியாவிற்கு இரண்டாவது தோல்வியைப் பரிசளித்தது.
இதில் தென் ஆபிரிக்காவுக்கு தலைமை தாங்கியவர் முன்னைய அவுஸ்திரேலிய அணியின் வீரரான, தென் ஆபிரிக்காவில் பிறந்த கெப்லர் வெசல்ஸ் என்பது விதியின் விளையாட்டா?

உலகக்கிண்ண ஆரம்ப நாளின் மற்றொரு முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வெற்றிகொண்டது.

அடுத்த நாள் போட்டிகளில் எமக்கு ஒளிபரப்பான போட்டி விக்கெட்டுக்கள் குறைவாக வீழ்த்தப்பட்ட, ஆனால் விறுவிறுப்பு அற்ற ஒரு போட்டி..
பாகிஸ்தான் மிக நிதானமாக 2 விக்கெட் இழப்புக்குப் பெற்ற 220ஐ மேற்கிந்தியத் தீவுகள் எந்தவொரு விக்கெட்டையும் இழக்காமல், ஆனால் லாராவை உபாதை காரணமாக இழந்து கடந்தது.
லாரா என்ற புதிய நட்சத்திரம் வெளிச்சத்துக்கு வந்தார்.

ஆனால், ஒளிபரப்பாகாத இலங்கை - சிம்பாப்வே போட்டி மிக விறுவிறுப்பான ஒரு போட்டியாக அமைந்தது.
வானொலியில் நேர்முக வர்ணனை கேட்டு, கேட்டு நகங்களைத் தாண்டி, விரல்களையும் கடிக்கும் அளவுக்கு மிக சோதிக்க வைத்தது.

இரண்டாவதாக ஒரு அணி துடுப்பெடுத்தாடி துரத்திப் பெற்ற மிகப் பெரிய வெற்றி இலக்குக்கான சாதனையையும், ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கான சாதனையையும் படைத்த போட்டியில், இன்னொரு புதிய நட்சத்திரம் சதத்துடன் அறிமுகமாகினார்.
சிம்பாப்வேயின் அன்டி பிளவர்.


இது தவிர இந்தப் போட்டியில் தான் அப்போது ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் முதல்முறையாக இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணி 300 ஓட்டங்களைப் பெற்றது.

அர்ஜுன ரணதுங்க (அப்போது மிக சிக்கலான முறையில் தலைவராக இல்லாமல், தன் சகபாடி அரவிந்தவின் தலைமையின் கீழ் விளையாடியிருந்தார்) மிக பொறுப்பான துடுப்பாட்டம் மூலமாக துரத்தியடித்து பெற்ற அந்த வெற்றி இலங்கை ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத உலகக்கிண்ணப் போட்டியாக இன்றும் கூட இருக்கிறது.

எனினும் பிளவர், அர்ஜுன பேசப்பட்ட அளவுக்கு அந்தப் போட்டியில் அதிரடி விளாசல் வீசிய அன்டி வொலர் (45 பந்துகளில் 83), அதுல சமரசேகர (61 பந்துகளில் 75) பேசப்படவில்லை. ரொஷான் மகாநாம இத்தொடரில் பெற்ற 4 அரைச்சதங்களில் முதலாவது இந்தப் போட்டியில்.

இலங்கை அணி இந்த உலகக்கிண்ணத் தொடரில் பெற்ற இன்னொரு வெற்றியிலும் (தென் ஆபிரிக்காவுக்கு எதிராக) அர்ஜுன, மகாநாம அரைச் சதங்கள் பெற்றதும், ரணதுங்க ராமநாயக்க இணைப்பாட்டம் புரிந்த நேரமே வெற்றி பெறப்பட்டதும் நான் அவதானித்த சுவாரஸ்யங்கள்.


 இலங்கை இந்திய அணிகள் விளையாடிய போட்டி மழையினால் கழுவப்பட்டது.
இரண்டே இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட போட்டி, உலகக்கிண்ணத்தின் மிகக் குறுகிய போட்டியாக அமைந்துள்ளது.

மழை விதி மிக அகோரமாக 'விளையாடிய' முதல் போட்டியாக அவுஸ்திரேலியா - இந்தியா விளையாடிய போட்டியாக அமைந்தது. 

இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு மழை விதி காரணமாக அநீதி இழைக்கப்பட்டதாக நான் கருதும் இந்தப் போட்டியில் எனக்குப் பிடித்த அவுஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸும், பணப் பிசாசினால் ஆட்கொள்ளப்பட முன்னர் எனக்குப் பிடித்த இந்திய வீரர் மொஹம்ட் அசாருதீனும் 90களில் ஆட்டமிழந்தனர்.

ஒரேயொரு ஓட்டத்தினால் இந்தியா தோற்றது. மிக விறுவிறுப்பான போட்டி.

அதே தினத்தில் நடந்த மற்றொரு போட்டி, அவுஸ்திரேலியாவின் பாரம்பரிய வைரி இங்கிலாந்து, இந்தியாவின் பரமவைரி பாகிஸ்தானை சந்தித்த போட்டி.

இந்தப் போட்டியின் எதிர்பாராத முடிவு இந்த உலகக்கிண்ணத்தை மாற்றிப்போட்டது எனலாம்.

இதுவும் இயற்கையும் மழையும் சேர்ந்து நடத்திய நாடகமானது.

இங்கிலாந்தின் இறுக்கமான, துல்லியமான பந்துவீச்சில் பாகிஸ்தான் மிக மோசமாக 40 ஓவர்களில் 74 என்ற மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கைக்கு சுருண்டுபோக, இங்கிலாந்து 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் பெய்த அடைமழை ஆட்டத்தைக் கழுவியது.

மோசமான ஒரு தோல்வியை சந்தித்திருக்கவேண்டிய பாகிஸ்தான் மழையின் வரத்தால் ஒரு அதிர்ஷ்ட புள்ளியுடன் தப்பித்துக்கொண்டது.

அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகளை ஒரேயொரு புள்ளியினால் முந்தி பாகிஸ்தானை அரையிறுதிக்குள் நுழைய வைக்க இந்த அதிர்ஷ்டப் புள்ளி உதவியிருந்தது.

இந்த போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் விளையாடிய அடுத்த போட்டி ஒரு கிரிக்கெட் யுத்தம்.
இவ்விரு நாடுகளும் சேர்ந்து நடத்திய 1987 உலகக்கிண்ணத்தில் ஒன்றையொன்று சந்தித்திராத இந்த 'எதிரிகள்' சந்தித்த விறுவிறுப்பான போட்டி.

உலகக்கிண்ணத்தில் இவ்விரு அணிகளும் சந்தித்த முதலாவது போட்டி.
வழமை போலவே போட்டி சூடு பிடிக்க இந்திய விக்கெட் காப்பாளர் கிரன் மோரேயும் பாகிஸ்தானின் ஜாவெட் மியன்டாடும் வசைபாடி, மோதிக்கொண்டனர்.
மியண்டாடின் தவளைப் பாய்ச்சல் பரபரப்பான விடயமாகியது.

உலகக்கிண்ணம் ஆரம்பித்தது முதல் உபாதை காரணமாக விளையாடாமல் இருந்த தலைவர் இம்ரான் கான் விளையாடிய முதல் போட்டி. ஆனால் பூஜ்யத்தில் ஆட்டமிழந்தார்.

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் வெற்றி மனிதரான முதலாவது உலகக்கிண்ணப் போட்டி இது தான்.
அரைச்சதமும், கட்டுப்பாடான பந்துவீச்சும் சேர்ந்து போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

இதன் பின்னர் வந்தது விதியின் விளையாட்டு...

இந்திய இதற்கடுத்த போட்டியில் சிம்பாப்வேயை வென்றது.
மீண்டும் சச்சினின் அபாரமான ஆட்டம். 81 ஓட்டங்கள்.
போட்டியின் சிறப்பாட்டக்காரர்.

பாகிஸ்தானுக்கு அடுத்த போட்டியிலும் தோல்வி, தென் ஆபிரிக்காவுக்கு எதிராக.

அதற்கு பிறகு அப்படியே பாகிஸ்தானுக்கு ஏறுமுகம். 
3 போட்டியிலும் வெற்றி, அரையிறுதிக்கு தெரிவு.

இந்தியா மூன்றிலும் தோற்று வெளியேறியது.



தென் ஆபிரிக்காவின் எழுச்சிக்கு வித்திட்ட இன்னொரு முக்கியமான போட்டி, 201 என்ற தென் ஆபிரிக்கா வைத்த இலக்கை நோக்கித் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகளை தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய மெய்றிக் ப்ரிங்கில் என்ற வேகப்பந்து வீச்சாளர் உருட்டி எடுத்திருந்தார்.
8 ஓவர்களில் 4 ஓட்டமற்ற ஓவர்கள், 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள்.

இலங்கை தன்னுடைய கடைசி நான்கு போட்டிகளிலும், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தானிடம் பெரிய தோல்விகளைக் கண்டது.
இதில் 1987 உலகக்கிண்ணத்தில் தனது அறிமுகத் தொடரில் கலக்கிய பில் சிமன்ஸ் இலங்கைக்கு எதிராக அபார சதம் அடித்து வறுத்தெடுத்தார்.

முதல் இரு போட்டிகளின் பின் காயமுற்ற அதுல சமரசேகர மீண்டும் இலங்கை அணிக்குள் வந்து ஓட்டங்களை இந்தப் போட்டிகளில் பெற்றாலும், துரதிர்ஷ்டவசமாக மகாநாமவின் ஓட்டங்கள் வற்ற ஆரம்பித்திருந்தன.

தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவந்த இங்கிலாந்து திடீர் ப்ரேக் போட்டது போல, நியூ சீலாந்திடமும், அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் கடைநிலை அணியான சிம்பாப்வேயிடமும் தோற்று அதிர்ச்சியளித்தது.

134 ஓட்டங்களை மட்டுமே பெற்ற சிம்பாப்வேயிடம் இங்கிலாந்து 9 ஓட்டங்களால் தோற்றுப்போனது.
ஒரு கோழிப்பண்ணையாளரான எட்டோ பிராண்டஸ் குதூகலமாக தனது 4 விக்கெட்டுக்களையும் கொண்டாடியது ரசனையானது.

முதற்சுற்றின் இறுதிநாள் போட்டிகள் மூன்றில், இரண்டில் அதிர்ச்சி !!
நியூ சீலாந்தை பாகிஸ்தான் வதம் செய்தது.
சும்மா வெற்றியல்ல, 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி.
ரமீஸ் ராஜா தொடரில் தன்னுடைய இரண்டாவது சதத்தைப் பெற்றார்.

சிம்பாப்வே இங்கிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் தனக்கான டெஸ்ட் அந்தஸ்துக்கான கோரிக்கையை ஸ்திரமாக முன்வைத்தது.

அவுஸ்திரேலியா டேவிட் பூனின் இன்னொரு சதத்துடனும், மைக்கேல் விட்னியின் அபாரமான 4 விக்கெட்டுக்களுடனும் மேற்கிந்தியத் தீவுகளை பெரிய வெற்றிகொண்டது.
தொடரின் முதல் போட்டியில் பெற்ற அதேயளவான 100ஐ மீண்டும் இறுதிப் போட்டியிலும் பெற்று அசத்தினார் பூன்.
ஆனால் அது அவுஸ்திரேலியாவுக்கும் அவருக்கும் ஆறுதல் பரிசாகியது.


இந்த அவுஸ்திரேலிய வெற்றி பாகிஸ்தானுக்கு வாய்ப்பாக அமைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்தால் அரையிறுதிக்கு சென்றிருக்கும்.
பாகிஸ்தான் நியூ சீலாந்திடம் தோற்றிருந்தால் அவுஸ்திரேலியா அரையிறுதிக்குப் போயிருக்கும்.

எனவே நடப்பு சம்பியன் முதல் சுற்றோடு வெளியேற, முதல் தடவையாக உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு வந்த தென் ஆபிரிக்காவுடன், 
அதிக வாய்ப்புக்களை கொண்டிருப்பதாக நம்பப்பட்ட நியூ சீலாந்து, இங்கிலாந்து ஆகியவற்றுடன் இம்ரான் கான் மீண்டும் வந்த பிறகு தங்கள் மேல் நம்பிக்கை வைத்து துணிவோடும் ஆச்சரியப்படுத்தும் விதத்திலும் விளையாட ஆரம்பித்திருந்த பாகிஸ்தானும் அரையிறுதிக்குள் நுழைந்தன.

இந்த நான்கு அணிகளுமே இதுவரை உலகக்கிண்ணம் வென்றிராத அணிகள்.
எனவே புதிய சம்பியன் யார் என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுந்திருந்தது.

அநேகர் எதிர்பார்த்தது இங்கிலாந்து - நியூசீலாந்து இறுதி.

ஆனால்,முதலாவது அரையிறுதியில் மார்ட்டின் க்ரோ 91 ஓட்டங்களுடன் நியூ சீலாந்தை 262 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு எடுத்துச் சென்ற பிறகும், களத்தடுப்பில் தான் தன்னுடைய வேதனை கொடுத்த காலுடன் போராடிக்கொண்டு நிற்கும்வரை பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தபோதும், மார்ச் 25 மெல்பேர்னில் நடைபெறவிருந்த இறுதிப்போட்டி பற்றிய கனவில் இருந்திருப்பார்.


எனினும் உபாதை அதிகரித்தால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாது என்ற எண்ணத்தில் காலுக்கு ஒய்வு கொடுக்க, க்ரோ ஓய்வறைக்குச் செல்ல, ஜோன் ரைட் பொறுப்பு எடுத்த பின்னர் போட்டி மாறியது.

ரைட் தன்னிச்சைப்படி வகுத்த வியூகங்கள் போட்டியை பாகிஸ்தானுக்கு இலகுவாக்கியது. (அண்மையில் மார்ட்டின் க்ரோவின் வேதனையான பேட்டியில் இருந்து)

பொறுமையாக ஒரு பக்கம் மியன்டாட் ஆடிக்கொண்டிருக்க, மறுபக்கம் இளங்கன்று பயமறியாது என்பதைப்போல, இன்சமாம் 37 பந்துகளில் 60 ஓட்டங்கள், மொயின் கான் 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 என்று இறுதிக்கு அழைத்துச் செல்ல, பல ஆயிரக்கணக்கான கனத்த ரசிகர் மனதுகளோடு நியூ சீலாந்து விடைபெற்றது.

மார்ட்டின் க்ரோவுக்கு ஆறுதலாக, ஆனால் பொருத்தமாக போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான விருது கிடைத்தது.

அடுத்த அரையிறுதி இன்னொரு சோகமான, குரூரமான முடிவைத் தந்தது.


கிரேம் ஹிக்கின் 83 ஓட்டங்களோடு 252 என்ற சராசரி ஓட்ட எண்ணிக்கையை இங்கிலாந்து பெற, தென் ஆபிரிக்கா நம்பிக்கையோடு துரத்த ஆரம்பித்தது.
இடையிடையே விக்கெட்டுக்கள், சிறுசிறு மழை...
ஓவர்கள் குறைக்கப்பட்டு, கையிலே 4 விக்கெட்டுக்கள் இருக்க, முதலில் 7 பந்துகளில் 22 ஓட்டங்கள் தேவை என்றிருந்த நிலையில், மக்மிலன், ரிச்சர்ட்சன் இருவராலும் எதையாவது செய்யமுடியும் என்ற நிலையிருந்தது.

ஆனால், மீண்டும் ஒரு மழை குறுக்கீடு - இப்போது தென் ஆபிரிக்காவுக்கு ஒரேயொரு பந்தில் 21 ஓட்டங்கள் தேவையென்று மழை விதி விளையாட்டுக் காட்டியது. (மைதானத்தின் காட்சிப் பலகை அதை 22 ஓட்டங்கள் தேவையென்று தவறாகக் காட்டியிருந்தது)
என்ன கொடுமை !!!

க்றிஸ் லூயிஸ் சினேகபூர்வமாக வீசிய கடைசிப் பந்தை தட்டி ஒரு ஓட்டத்தை வேண்டா வெறுப்பாக எடுத்துவிட்டு, கலங்கிய கண்களோடு மக்மிலன் வெளியேற தென் ஆபிரிக்காவும் கிரிக்கெட்டின் சோகமான ஒரு நாளாக அந்நாளை பதித்துவிட்டு வெளியேறியது.
இந்த எதிர்பாராத தோல்வியின் வடு, தென் ஆபிரிக்காவை இன்னும் வாட்டிக்கொண்டே இருக்கிறது.
எவ்வளவு தான் பலம்பொருந்திய அணியாக இருந்தும் தென் ஆபிரிக்கா இன்னுமே உலகக்கிண்ணத்தின் இறுதிக்குச் செல்ல முடியவில்லை.
(இம்முறையாவது அந்த வரலாறு மாறுமா? அதே அவுஸ்திரேலியா - நியூ சீலாந்தில்)

92 அரையிறுதிகள் இரண்டுமே ஒருவித சோக முடிவை வழங்கியிருந்தன.


இறுதிப்போட்டி...

இம்ரான் கான் இறுதிப்போட்டிக்கு முன்னதாக தனது அணியை 'Cornered Tigers ' - மூலையில் ஒடுக்கப்பட்ட புலிகள் என்று உத்வேகப்படுத்தி உரமூட்டியது இப்போது வரலாறு.
தனது இறுதிப்போட்டி என்று உறுதியாக முடிவு செய்துகொண்ட (இதற்கு முதலும் இப்போதைய அப்ரிடி பாணியில் சில தடவை ஒய்வு பெற்று மீண்டும் வந்தவர் இம்ரான்) இம்ரான் தானே நின்று வழி காட்டியிருந்தார்.
துடுப்பாட மீண்டும் 3ஆம் இலக்கத்தில் வந்தவர் தன்னுடைய உப தலைவர் மியண்டாடுடன் சேர்ந்து 139 ஓட்ட இணைப்பாட்டம் புரிந்து அணியின் நிலையைத் திடப்படுத்திவிட்டு (இம்ரான் கான் 72, மியன்டாட் 58), ஓட்டங்களை ஏற்றவேண்டிய பொறுப்பை இன்சமாம், வசீம் அக்ரம் ஆகியோரிடம் கொடுக்கிறார்.


மீண்டும் ஒரு இன்சமாம் அதிரடி - 35 பந்துகளில் 42.
அக்ரம் 18 பந்துகளில் 33.
பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு வைத்த இலக்கு 250.

ஆரம்பத்திலிருந்தே இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டுக்கள் பிடுங்கி எடுக்கப்பட 4 முக்கியமான வீரர்களை இழந்து 69 ஓட்டங்களோடு இங்கிலாந்து நொண்டியது.
ஆக்கிப் ஜாவேத்தின் 10 ஓவர்கள் வெறும் 27 ஓட்டங்களை மட்டுமே கொடுத்தன.
முஷ்டாக் அஹ்மத் மறுபக்கம் விக்கெட்டுக்களை எடுக்க அச்சுறுத்திக்கொண்டிருந்தார் .

இங்கிலாந்து அணியில் அப்போது எனக்குப் பிடித்த ஒரு வீரர் நீல் பெயார்ப்ரொதர் (Neil Fairbrother). துறுதுறுவென்று களத்தடுப்பில் ஒரு மின்சாரம்.
துடுப்பாட்டத்தில் இப்போதைய ஒய்ன் மோர்கனை ஞாபகப்படுத்தும் அபார துடுப்பாட்ட வீரர், அற்புதமான ஓட்டக்காரர்.
மூக்கு கொஞ்சம் நீண்டு துருத்தி, எப்போதும் மனதில் நிற்கும் ஒரு முகம்.

பெயார்ப்ரொதர், அலன் லாம்ப் ஆகியோரின் இணைப்பாட்டம் இங்கிலாந்துக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுக்க ஆரம்பித்தது.

பெயார்ப்ரொதரின் துரித அரைச்சதம், லாம்பின் அனுபவம் சேர்ந்து 72 ஓட்டங்கள் இணைப்பாட்டம் பாகிஸ்தானுக்கு தொல்லையாக மாற ஆரம்பிக்க, அங்கே தான் வசீம் அக்ரம் தன்னுடைய மிகச்சிறந்த பந்துகளில் முதலாவது inswinger yorker மூலமாக லாம்பைத் தகர்க்கிறார்.
அடுத்த பந்தும் வேகமாக உள்ளே திரும்பி, வசீமின் சொல் கேட்டு ஓடுவது போல க்றிஸ் லூயிஸை ஆட்டமிழக்கச் செய்கிறது.
உலகக்கிண்ண வரலாற்றின் மிகச் சிறந்த இரு பந்துகள் என்று துணிச்சலாக இவற்றை பிரகடனம் செய்யலாம்.

அதன் பின் அப்படியே கிண்ணம் பாகிஸ்தானுக்கு செல்வதில் தடையேதும் இல்லை.

இம்ரான் கான் மெல்பேர்ன் மைதானத்தை கண்ணீர் மல்க முத்தமிடுகிறார்.

பாகிஸ்தான் உலகக்கிண்ணம் வென்ற இரண்டாவது ஆசிய அணியாகிறது.



இம்ரானின் உணர்ச்சி மிகுந்த உரை, மனதைத் தொடுகிறது.
ஓய்வை பெருமிதத்தோடு அறிவிக்கிறார்.
அவரது நீண்ட கனவான தாயின் ஞாபகார்த்தமாக அமைக்கவிருந்த புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி சேர்க்கிறது.


​வசீம் அக்ரம் இறுதிப் போட்டியின் ​சிறப்பாட்டக்காரர்.





அதிக ஓட்டங்கள் - மார்ட்டின் க்ரோ - 
456

​                                  ஜாவேத் மியன்டாட் - 
437
                                 பீட்டர் கேர்ஸ்டன் -410

அதிக விக்கெட்டுக்கள் - வசீம் அக்ரம்  - 18
                                            இயன் பொத்தம் -16
                                            க்றிஸ் ஹரிஸ் - 16
                                           முஷ்டாக் அஹ்மட்  -16 





இதில் ஒரு சுவாரஸ்யம் 1983இல் மேற்கிந்தியத் தீவுகளை இறுதிப் போட்டியில் சந்திக்க முதல் அடைபட்ட புலிகளை எழுமாறு உத்வேகம் ஊட்டியிருந்தார்.


பாகிஸ்தானின் இம்ரானும் மூலையில் அடைக்கப்பட்ட புலிகளை தட்டி எழுப்பி உறுமச் செய்திருந்தார்.


ஆக்ரோஷமும், அடக்கப்படும்போது கிளர்ந்தெழும் ஆசிய வீரம் மீண்டும் நிரூபிக்கப்பட்டது.


மீண்டும் ஒரு ஆசிய எழுச்சி மெல்பேர்னில் விதைக்கப்பட்டது.






No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner