உலகக் கிரிக்கெட் ரசிகர்களை ஆவலுடன் காக்க வைத்திருந்த உலகக் கிண்ணம் நாளை பிற்பகல் ஆரம்பிக்கும் இந்திய - பங்களாதேஷ் போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
நேற்று பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற கோலாகல ஆரம்ப விழாவில் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவினால் பத்தாவது கிரிக்கெட் உலகக் கிண்ணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
(ஆனால் கொடுமை மூன்று நாடுகளினதும் கலை,கலாசார வெளிப்பாடுகளைக் காட்டும் கலை நிகழ்ச்சிகளில் கெட்ட ஒரே தமிழ்ப்பாடல் இந்தியா கொண்டுவந்த நாக்க முக்கா.. இலங்கை சார்பாக இராஜ் பாடிய Lion nationஇல் ஒரு தமிழ் வசனம் வந்தது. கண்டி நடனங்கள், முகமூடி ஆட்டங்களினிடையே மருந்துக்கேனும் தமிழ்ப் பாடல்களோ தமிழ் நடன வகையோ இலங்கை சார்பாக வராதது கவலை தந்த விடயம். அந்தவேளையில் நேர்முக வர்ணனையில் இணைந்துகொண்ட ரசல் ஆர்னல்ட் முகமூடி நடனத்துக்கு மட்டும் விளக்கம் கொடுத்தார்)
ஒவ்வொரு முன்னாள் வீரரும் (அநேகர் இந்நாள் விமர்சகர்கள்/வர்ணனையாளர்கள்) பத்திரிகையாளர்களும் தத்தம் பார்வையில் இவர்கள் தான் சாம்பியன்கள் என்றும் கறுப்புக் குதிரைகள் இவர்கள் என்றும் அறிவிக்கிறார்கள்.
இதில் வேடிக்கை சிலர் அடுத்த நாளே மாறிக் கொள்வது.
இவர்களுடன் பார்க்கையில் எம் வலைப்பதிவர்கள்,எமதே எமதான அனலிஸ்ட்கள் ஏன் விக்கிரமாதித்தர்கள் சொல்வதும் சான்று பகர்வதும் பரவாயில்லைப் போல் தெரிகிறது.
Arm chair critics are way better this time...
இந்தியா தான் இம்முறை சம்பியனாகும் என்று சொல்வதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
சொந்த மண்ணில் போட்டிகள் இடம்பெறுவதும் பழக்கமான காலநிலையும் முக்கிய காரணங்கள்.இவை தவிர உலகின் மிகப் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசை;அண்மைக்கால ஒருநாள் வெற்றிகள் என்று பல சேர்ந்து இந்தியாவில் இம்முறை சம்பியனாகக் கூடிய பெரும் வாய்ப்புள்ள அணிஎன்று சொல்ல வைக்கின்றன.
ஆனால் 1983இல் இந்தியா உலகக் கிண்ணம் வென்றது முதல் ஒவ்வொரு உலகக் கிண்ணத்தின் போதுமே இந்தியாவைத் தான் favorites என்று உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் முன்னர் சொல்வது வழக்கமாகிப் போனது. 99 முதல் ஆஸ்திரேலியா தொடர்ந்து வென்று வந்த நேரமும் பலருக்கு இந்தியா தான் favorites.
90 கள் முதல் இந்தியாவை மையப்படுத்தியே கவர்ச்சியும் பணமும் விளம்பரமும் நிறைந்த கிரிக்கெட் கட்டிஎழுப்பப்பட்டதே இந்தியா ஒரு கிரிக்கெட் வல்லரசாக ஊடகங்கள்+விமர்சகர்களால் இன்றுவரை அடையாளப் படுத்தப்படுவதற்கான காரணம்.
சச்சினும் தோனியும் (இவர்களாவது பரவாயில்லை யுவராஜும் ஹர்பஜனும் கூட) கிரிக்கெட் தெய்வங்களாக அதிகமாக இந்திய விளம்பரங்களாலேயே மாற்றப்பட்டார்கள்.
இதனாலேயே கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா கிண்ணம் பெறும் வாய்ப்பை இழந்த போதெல்லாம் இந்திய ரசிகர்கள் கோபமும் விரக்தியும் அடைந்ததும், தொலைக்காட்சி ஒளிபரப்பில் இந்தியாவை மையப்படுத்திய விளம்பரங்கள் குறைந்ததும், அதன் பின் உலகக் கிண்ணமே தொய்ந்து போனதுமான தோற்றம் ஏற்படுத்தப்பட்டதும் ஆகும்.
இந்தியாவின் ஆதிக்கம் கொண்ட சர்வதேச கிரிக்கெட் சபையின் கூர்மை மிகு குழுவும் உலகக் கிண்ண ஏற்பாட்டுக் குழுவும் கடந்த முறை பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு பெரும் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறிய ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்று தீர்க்கதரிசனமாக யோசித்து (அதுவும் ஆசியாவில் இடம்பெறும் இம்முறை தொடரில் நிகழ்ந்தால் அதைப் போல அனர்த்தம் ஒன்றிராது) முதல் சுற்றுப் போட்டிகளைத் தொடர்ந்து நேரடியாக knock out முறையிலான காலிறுதிகளைத் தேர்வு செய்தார்கள்.
(2007ஆம் ஆண்டுத் தொடர் போல நீண்ட நாட்கள் இழுபடாமல் இருக்கவும் இந்த யோசனை சிறந்ததே என்பதே பரவலாகப் பேசப்பட்டது)
படுமோசமாக விளையாடினால் ஒழிய எந்தவொரு 'பெரிய' அணியும் முதல் சுற்றோடு வெளியேற வாய்ப்பில்லை.
இன்னொரு கோலத்தையும் அவதானித்தேன்..
முதல் இரு முறை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியாளர்கள். 1975,1979.
அடுத்த இரு முறைகளும் மிகக் குறைவாக எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெற்றிக் கிண்ணத்தை ஏந்தின.
83இல் கபில் தேவின் இந்திய அணியோ, 87இல் அலன் போர்டரின் ஆஸ்திரேலியாவோ நட்சத்திர அணிகளாக இருக்கவில்லை.
தங்கள் தலைவர்களைத் தவிர பெரிய நட்சத்திரங்களோ,தனித்து நின்று போட்டிகளை வென்று கொடுக்கும் வீரர்களையோ கொண்டிராத அணிகள். ஆனால் தேவையான போட்டிகளில் அபாரமாக ஒரு அணியாக ஒற்றுமையாக விளையாடி வெள்ளக் கூடிய அணிகளாக விளங்கியதால் சம்பியனாகின.
அடுத்த இரு முறையும் போராடக் கூடிய ஆனால் எதிர்பார்க்கப்படாத அணிகள் தங்கள் ஆக்ரோஷமான தலைவர்களாலும் மதியூக உப தலைவர்களாலும் வெற்றி பெற்றுக் கொண்டன.
92இல் இம்ரான் + மியண்டாட் . 96இல் அர்ஜுன+அரவிந்த
இரு இடது கையர்கள் இந்த இரு கிண்ண வெற்றிகளிலும் தங்கள் அணிகளைத் தூக்கி நிறுத்தினார்கள்.
92இல் வசீம் அக்ரம். 96இல் சனத் ஜெயசூர்யா.
இந்த இரு உலகக் கிண்ண வெற்றிகளும் பாகிஸ்தானிலும் அதைவிட அதிகமாக பின் இலங்கையிலும் தந்த கிரிக்கெட் எழுச்சியும் வளர்ச்சியும் எழுத்துக்களால் இலகுவாக சொல்லிவிட முடியாதவை.
அடுத்த மூன்றும் ஆஸ்திரேலியாவுக்கென எழுதி வைத்தவை.1999,2003 & 2007
மூன்று உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும் ஒரு சுவாரஸ்ய ஒற்றுமை; மூன்றிலுமே தோற்றுப் போனவை ஆசிய அணிகள்.
இம்முறை மீண்டும் இதே வென்ற அணிகளில் ஒன்று வெல்வதற்கே சாத்தியங்கள் அதிகமாகத் தெரிகின்றன.
உலகக் கிண்ணம் வெல்லாத அணிகளான இங்கிலாந்தோ,நியூ சீலாந்தோ வெல்ல அறவே வாய்ப்பில்லை என்று இப்போதே பகிரங்கமாக சொல்லி வைத்துவிடலாம்.
தென் ஆபிரிக்க அணி சொல்ல முடியாத அணி.. ஆனாலும் எனக்கென்னவோ ஸ்மித்தின் இந்த அணியின் மீது சாம்பியன் என்ற முத்திரையைக் குத்திப் பார்க்க முடியவில்லை.
இங்கிலாந்து இன்னமும் தனது அணியைப் பரீட்சித்துக்கொண்டே இருப்பதால் உலகக் கிண்ணக் கனவு அவர்களுக்குக் கடந்த முறை வென்ற T 20 உலகக் கிண்ணத்துடனே கரைந்துவிடும் என்றே தோன்றுகிறது.
அடுத்து பங்களாதேஷ். ஆனால் இவர்கள் வென்றால் ஆச்சரியப்படவும் போவதில்லை; கவலைப்படவும் போவதில்லை.
முதல் இரு தடவை உலகக் கிண்ணம் வென்றாலும் 96இன் பின் அரையிறுதியையே எட்டிப் பார்க்காத மேற்கிந்தியத் தீவோக்ளுக்கும் இம்முறை வாய்ப்பில்லை.
எனினும் இம்முறை முன்னெப்போதும் இல்லாத மாதிரியாக இரு ஆசிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்புக்கள் ஆதிகமாகவே கானப்படுகின்றன.
ஆனாலும் அந்த இரு நாடுகளில் ஒன்று பாகிஸ்தானாக இராது என்றே நம்புகிறேன்.பாகிஸ்தானும் அண்மைக்கால இலங்கை மழை போல ஊகிக்க முடியாதவாறு இருந்தாலும் இறுதி வரை நடைபோடும் பலம் இல்லை என்றே ஊகிக்கிறேன்.
இந்திய - இலங்கை இறுதிப் போட்டி நடக்கவே அதிக வாய்ப்பு என்று பல பெரிய விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் சொல்வதைப் போலவே நானும் அபிப்பிராயப் படுகிறேன்.
காரணம் இந்த ஆஸ்திரேலிய அணி சம்பியனாகும் அணியாகத் தோன்றவில்லை. போராடி வெல்லக் கூடிய ஆற்றலோ, எந்த சூழ்நிலையிலும் வெல்லும் ஆற்றலோ இந்த ஆஸ்திரேலியாவிடம் தெரியவில்லை.
எனவே இப்போதே பிரகடனப்படுத்துகிறேன் இம்முறை உலகக் கிண்ணம் இரு நீல சீருடை அணிகளில் ஒன்றின் இரண்டாவது உலகக் கிண்ணம்.
இந்தியா வென்றால் சொந்த நாட்டில் வைத்து உலகக் கிண்ணம் வென்ற முதல் அணியாகும்.
இலங்கை வென்றால் போட்டிகளை நடத்தில் உலகக் கிண்ணத்தை வென்ற இரண்டாவது தடவை.
கடந்த வெற்றி போட்டிகளை இலங்கை நடத்திய போதும் பாகிஸ்தானிய மண்ணில் பெறப்பட்டது.
இன்னொரு அதிசயம் இதுவரை விக்கெட் காப்பாளராக இருந்த அணியொன்று உலகக் கிண்ணம் வென்றதில்லை.
தோனி, சங்கா இருவருமே சரித்திரங்களை மாற்றுவதில் விருப்புடையவர்கள்.
*** பதினான்கு அணிகளின் பலம் பலவீனங்களை அலசலாம் எனப் புறப்பட்டு பொதுவாகவே பதிவை இட்டுவிடவேண்டி வந்துவிட்டது.
அடுத்த பதிவாக அணிகளை சுருக்கமாகத் தனித் தனியாக அலசவுள்ளேன்.
இந்தப் பதிவில் அந்தந்த அணிகள் பற்றி சொல்லியுள்ள விஷயங்களை அங்கே முடியுமானவரை தவிர்க்கிறேன்.