உலகக் கிண்ண அலசல்களின் முக்கியமான கட்டம் இது..
பதினான்கு அணிகளில் பல்வேறு விற்பன்னரும் நான்கு அல்லது ஆறு அணிகளை இலகுவாகத் தட்டி விட்டு எட்டு அணிகளோடு தங்கள் ஊகங்களை வெளியிட்டு வந்தாலும் விளையாட்டில் எதிர்வுகூறல்களை வெளியிடும் ஒவ்வொருவரும் Upsets என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் எதிர்மாறான முடிவுகளுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்ற பொது விதிக்கமைய நான் இரு பிரிவுகளிலும் உள்ள பதினான்கு அணிகளையுமே சுருக்கமாகப் பார்க்கவுள்ளேன்.
அதற்கு முதல் ஆசிய ஆடுகளங்களில் இந்த உலகக் கிண்ணம் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ள அணியாகப் பந்தயக்காரர்களால் (உத்தியோக பூர்வ/அங்கீகரிக்கப்பட்ட) தற்போது வரிசைப்படுத்தப்பட்டுள் ள அணிகள்..
Outright World Cup 2011 Odds -
India | 3 | 11/4 | 11/4 | 11/4 | - | 5/2 |
Sri Lanka | 7/2 | 9/2 | 9/2 | 4 | - | 9/2 |
South Africa | 11/2 | 5 | 5 | 11/2 | - | 11/2 |
Australia | 11/2 | 11/2 | 5 | 5 | - | 5 |
England | 11/2 | 8 | 7 | 7 | - | 8 |
Pakistan | 8 | 8 | 8 | 7 | - | 8 |
New Zealand | 20 | 20 | 20 | 20 | - | 20 |
West Indies | 20 | 16 | 20 | 20 | - | 22 |
Bangladesh | 33 | 40 | 40 | 33 | - | 40 |
Zimbabwe | 200 | 250 | 250 | 200 | - | 200 |
Ireland | 500 | 500 | 500 | 500 | - | 1000 |
Canada | 1000 | 1000 | 2000 | 1000 | - | 2000 |
Holland | 750 | 1000 | 2000 | 1000 | - | 2000 |
Kenya | 1000 | 1000 | 2000 | 1000 | - | 2000 |
பிரிவு A
ஆஸ்திரேலியா
நடப்பு உலக சாம்பியன். நான்காவது தொடர்ச்சியான உலகக் கிண்ணம் வெல்லும் கனவு அண்மைக்காலத் தடுமாற்றங்களால் கலைந்து கொண்டுள்ளது. மொத்தமாக நான்கு உலகக் கின்னங்களைத் தம் வசம் வைத்துள்ள அசுர அணி.
பலம் - இந்நாள் சாம்பியன் என்ற பட்டம். வெற்றிகளை எப்படியாவது பெற்றுத் தருவார்கள் என்று நம்பியிருக்கக் கூடிய நட்சத்திர வீரர்கள்.
எந்த ஆடுகளத்திலும் எதிரணிகளைத் திணறடிக்கும் வேகப் பந்துவீச்சு
பலவீனம் - அண்மைக்கால form இழப்பும்,தோல்விகளும் தந்துள்ள நம்பிக்கையீனமும்
பல போட்டிகளை தனித்து வென்று கொடுத்த அனுபவம் வாய்ந்த மைக் ஹசி இல்லாமை
நம்பகமான சுழல் பந்துவீச்சாளர் இன்மை
நட்சத்திர வீரர் - ஷேன் வொட்சன் - அதிரடி formஇல் இருக்கிறார். அண்மைக்காலமாக ஆஸ்திரேலிய Run machine இவர் தான். பந்துவீச்சும் உபயோகப்படும்.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - டேவிட் ஹசி - தமையனின் இழப்பை வேறு விதமாக நிரப்பக் கூடியவர். இவரது சாதுரியமான சுழல் பந்துவீச்சும் ஆசியக் களங்களில் கலக்கும்.
மறு பிரிவில் இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் காலிறுதியில் எதிர்கொள்ளாவிட்டால் எப்படியும் அரையிறுதி நிச்சயம்.
கனடா
தகுதிகாண் சுற்றின் மூலமாக வாய்ப்புப் பெற்ற அணி.
பல புலம்பெயர்,ஆசிய வம்சாவளி வீரர்கள் மூலமாகக் கட்டமைக்கப்பட்ட அணி.
பலம் - ரிஸ்வான் சீமா,ஆசிஷ் பகாய், குராம் சொஹான் போன்ற வெகு சில நட்சத்திரங்கள்.
பலவீனம் - பெரிய அணிகளை வெல்ல முடியாத நிலை; அணி இன்னும் சர்வதேச தரத்தில் இல்லை.
நட்சத்திர வீரர் - ரிஸ்வான் சீமா - ஓரளவு குறிப்பிடத்தக்க சகலதுறை வீரர். பாகிஸ்தானிய வம்சாவளி வீரரான இவரிடம் அசுர அடிகளையும் போராட்ட குணத்தையும் பார்க்கிறேன்.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - நிதின் குமார் - கனடாவின் சச்சின் என்று இவரை அழைக்கிறார்களாம். இது கொஞ்சம் ஓவர் என்றாலும்,கனடாவிலேயே பிறந்து அணிக்குள் இளவயதில் நுழைந்துள்ள இவர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
எந்தவொரு அணியையும் வெல்ல முடியாது.கொஞ்சமாவது போராடினால் அவமானத்தையும் எதிரணிகளுக்கு புதிய உலக சாதனைகளை வழங்குவதையும் தவிர்க்கலாம்.
கென்யா
தகுதிகாண் சுற்றினூடு வந்துள்ள மற்றொரு அணி. முழுமையான ICC அந்தஸ்தை இன்னும் பெற உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யக் காத்துள்ள திறமையுள்ள அணி. ஐந்தாவது தொடர்ச்சியான உலகக் கிண்ணம்.
பலம் - எதிரணிகளை எதிர்பாராத நேரங்களில் கவிழ்த்து விடக்கூடிய அணி.
டிகொலோ, ஓடோயோ போன்ற சர்வதேசத் தரமான சகலதுறை வீரர்கள்
பலவீனம் - தொடர்ச்சியாகப் பெறுபேறுகளைக் காட்ட முடியாதுள்ளமை.
ஆரம்பப் பந்துவீச்சும் ஆரம்பத் துடுப்பாட்டமும் பலவீனமானவை
நட்சத்திர வீரர் - ஸ்டீவ் டிகொலோ - ஐந்தாவது உலகக் கிண்ணத்திலும் இவரையே நம்புகின்றது கென்யா. தற்காலிக ஓயவிளிருந்து மீண்டும் விளையாட வந்துள்ளது இந்தக் கிழட்டு சிங்கம். நேர்த்தியான துடுப்பாட்டமும், நம்பகமான சுழல் பந்துவீச்சும் இவரது சொத்துக்கள்.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - ஸ்ரேன் வோடேர்ஸ் - லாவகமான துடுப்பாட்டப் பிரயோகங்கள் கொண்ட இளம் துடுப்பாட்ட வீரர்.கொஞ்சம் நம்பிக்கை தரும் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.
கனடாவை வீழ்த்தினாலும் சிலவேளை சிம்பாப்வேயை வீழ்த்தினாலும் அதற்கு மேல் 'பெரிய' அணிகளை வீழ்த்த முடியாது.
எனவே முதல் சுற்றோடு விடை பெறும்.
நியூ ஸீலாந்து
இதுவரை உலகக் கிண்ண இறுதியையும் எட்டாத அணி. ஆனால் கடைசி மூன்று உலகக் கிண்ணத் தொடர்களிலும் அரையிறுதிப் போட்டிகளுக்கு வந்துள்ள சகலதுறை அணி.
பலம் - அணியில் நிறைந்துள்ள சகலதுறை வீரர்கள்
இறுதிவரை போராடக் கூடிய துடுப்பாட்ட அணி.
பலவீனம் - பந்துவீச்சினால் வென்றுகொடுக்கும் ஆற்றல் கொண்ட சுழல் பந்துவீச்சாளர் இன்மை.
வெட்டோரியின் அண்மைக்கால சறுக்கல்கள்
பெரிய இணைப்பாட்டங்களைத் தொடர்ந்து அமைக்க முடியாத மத்திய வரிசை.
நட்சத்திரம் - பலரும் வெட்டோரியைக் குறிப்பிட்டாலும் எனக்கென்னவோ இம்முறை ரைடர்,டெய்லர் இருவரது துடுப்புக்களில் தான் நியூ சீலாந்தின் முன்னேற்றம் தங்கியுள்ளதாகத் தோன்றுகிறது.
இருவரதும் துடுப்பாட்டப் பாணிகள் வெவ்வேறானவை.
ரைடர் - அதிரடி
டெய்லர் - நிதானம் பின்னர் அடித்தாடல்
நம்பி இருக்கக் கூடியவர்கள்
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - டிம் சௌதீ
மிக இளவயதில் அணிக்குள் வந்தாலும் கொஞ்சம் சொதப்பி இப்போது தான் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். வேகம், கட்டுப்பாடான பந்துவீச்சு அத்துடன் பந்துகளை மாற்றக் கூடிய சாதுரியம் என்று கலக்குவார். கொஞ்சம் துடுப்பெடுத்தாடிப் போட்டிகளை மாற்றக் கூடியவரும் கூட.
கால் இறுதி நிச்சயம்.அதற்கப்பால் முன்னேறினால் அனைவரும் பிரகாசித்துள்ளார்கள் என்று அர்த்தம். பெரும்பாலும் நான்காவது தொடர்ச்சியான அரையிறுதி வாய்ப்பு இல்லை என்றே சொல்வேன்.
பாகிஸ்தான்
ஒரு தடவை உலக சாம்பியன். ஒரு தடவை ஆஸ்திரேலியாவிடம் இறுதியில் தோற்ற அனுபவம்.
கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றோடு வெளியேறிய கசப்பான அனுபவத்தைக் கழுவ வேண்டிய கடப்பாட்டோடு,அண்மைக்கால சூதாட்ட சர்ச்சைகள், உல் வீட்டுச் சண்டைகளைத் துடைத்தெறியவும் பாகிஸ்தானுக்கு இன்னொரு கிண்ணம் தேவைப்படுகிறது.
பலம் - இறுதிவரை போராடி போட்டிகளின் போக்கை மாற்றக் கூடிய வெகு சில அணிகளில் ஒன்று.
அதிரடித் துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட நீண்ட துடுப்பாட்ட வரிசை.
கலக்கக் கூடிய மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள்.
அப்ரிடி+ரசாக் என்ற அசுர பலங்கள்.
பலவீனம் - உள்வீட்டில் ஒற்றுமையின்மை.
நம்ப முடியாத் தன்மை. சில நேரங்களில் எப்படித் தோற்க முடியாதோ அப்படியெல்லாம் தோற்பார்கள்.
இப்போதைய பலவீனமான வேகப் பந்துவீச்சு.
நட்சத்திரம் - பூம் பூம் ஷஹிட் அப்ரிடி - சகலதுறைத் திறமையும் துணிச்சலான தலைமைத்துவமும் கொண்ட பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம்.நம்பி இருக்க முடியாமை தான் இவரில் உள்ள சொற்ப ஐயம். இவர் ஜொலித்தால் இன்னொரு பாகிஸ்தான் சரித்திரம் உருவாகலாம்.
இன்னொருவரையும் குறிப்பிடலாம்..
அப்துர் ரசாக் - எந்தப் போட்டியையும் எட்டாம் இலக்கத்தில் வந்தாலும் நின்று அதிரடித்து மாற்றக் கூடிய பலம். நம்பகமான மித வேகப் பந்துவீச்சு.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - அஹ்மத் ஷேசாத் - அண்மைக்காலத்தில் அதிரடிக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.யாரை எடுப்பது என்று அண்மைக் காலத்தில் தடுமாறி வந்த பாகிஸ்தான் தேர்வாளருக்கு ஆறுதல் அளித்துள்ளவர்.
கால் இறுதி உறுதி.எதிரணியின் நேரம் கெட்ட நேரமாகவும் அன்று பாகிஸ்தான் வீரர்களின் மன நிலையைப் பொறுத்தும் அரையிறுதியைப் பற்றி யோசிக்கலாம்.
என் ஊகப்படி தென் ஆபிரிக்கா தான் பாகிஸ்தானுடன் அரையிறுதியில் அநேகமாக மோதும்.அப்படியாயின் இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தான் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடினால் அரையிறுதி செல்கிறது.
இலங்கை
96இல் உலகக் கிண்ணம் வென்று, கடந்த உலகக் கிண்ண இறுதியில் கில்க்ரிஸ்ட்டினாலும் மோசமான காலநிலையினாலும் கிண்ணத்தை இழந்த பிறகு இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ள அணி.
சொந்த நாட்டில் முதல் சுற்றின் ஐந்து போட்டிகள் என்பது மிக வாய்ப்பான விடயமே.
பலம் - சரியாக செட்டாகியுள்ள அணி
பலமான முதல் நான்கு அல்லது (சமரவீரவுடன்) ஐந்து துடுப்பாட்ட வீரர்கள்.
மிக சாதகமான உல் நாட்டு ஆடுகளங்கள் +பழக்கமான இந்திய ஆடுகளங்கள் + காலநிலை
முரளி+மாலிங்க
சிறந்த களத்தடுப்பு
பலவீனம் - கடைசி நேரத்தில் வேகமாக ஓட்டங்கள் குவித்துத் தரக்கூடிய அதிரடி வீரர் ஒருவர் இன்மை.
நம்பி இருக்க முடியாத கீழ்,மத்திய வரிசைத் துடுப்பாட்டம்.
ஐந்தாவது பந்துவீச்சாளர் யார் என்ற சிறு குழப்பம்.
நட்சத்திரம் - சங்கக்கார,மஹேல,தில்ஷான் ஆகிய மூவரில் ஒருவர் தொடர்ந்து ஜொலித்தால் ஜெயிக்கலாம் என்பது என் ஊகம்.
எனினும் இம்முறை ஆடுகளத் தன்மைகளைப் பொறுத்தவரை டில்ஷானின் ஆரம்பத் துடுப்பாட்ட அதிரடியும் பின்னர் பகுதி நேரப் பந்துவீச்சின் மூலம் கிடைக்க இருக்கும் விக்கெட்டுகளும் பெறுமதியானவை என நம்புகிறேன்.
அத்துடன் அவரது மின்னல் வேகக் களத்தடுப்பு.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - இருவர் இம்முறை எழுச்சி பெறக கூடியவர்கள் என நம்புகிறேன்.
திலான் சமரவீர - அமைதியாக நிதானமாக டெஸ்ட் விளையாடிக் கொண்டிருந்தவர்,கிடைத்த அண்மைய ஒரு நாள் வாய்ப்புக்களை அதிரடியாகப் பயன்படுத்தி ஐந்தாம் இலக்கத்தில் நிரந்தரமாகியுள்ளார்.
ஆனால் அதே நிதானமும் அழகான துடுப்பாட்டப் பிரயோகங்களும் கண்கவர்ந்தவை.
ரங்கன ஹேரத் - இடது கை மந்திரவாதியாக அமைதியாகத் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கி வருகிறார்.எந்த ஆடுகளத்திலும் விக்கெட் எடுக்கக் கூடியதான பந்துவீச்சு இவருடையது. பல துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆபத்துக் காத்துள்ளது.
கிண்ணம் வெல்லக் கூடிய வலிமையான அணி.
அரையிறுதி,இறுதிகளில் நாணய சுழற்சியும் வாய்ப்பாக அமைந்தால் இரண்டாவது உலகக் கிண்ணம் நிச்சயம்.
83ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி வரும் நாடு. கடந்த முறைகளைப் போலவே இம்முறையும் அரையிறுதி வாய்ப்புக் கிடைக்காது போலவே தெரிகிறது. உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளால் அழிந்து போன கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்ப முனைந்து கொண்டுள்ளார்கள்.
பலம் - கட்டுப்பாடாகப் பந்துவீசக்கூடிய சுழல் பந்துவீச்சாளர்கள்.
சிறந்த களத்தடுப்பு
பலவீனம் - ஓரிருவர் தவிர நம்ப முடியாத துடுப்பாட்ட வரிசை.
அச்சுறுத்தக் கூடிய வேகப் பந்துவீச்சாளர் என்று யாரும் இல்லை.
நட்சத்திரம் - பிரெண்டன் டெய்லர் - நம்பி இருக்கக் கூடிய ஒரு துடுப்பாட்ட வீரர். சர்வதேசத் தரமுடையவர் என்ற சொல்லக் கூடிய ஒருவர். அண்மைக்காலமாக ஓட்டங்களை மலைபோல குவித்து வருகிறார்.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - ஷோன் எர்வின் - இடது கையரான இவர் நம்பிக்கையான சகலதுறை வீரர். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஜொலிப்பார் என நம்புகிறேன்.
முதல் சுற்றைத் தாண்டாது.
-------------------
A பிரிவின் ஏழு அணிகளைப் பார்த்துவிட்டால் மூச்சு முட்டுகிறது.. கண்களும் ஓய்வு கேட்கின்றன. இன்று நேரம் கிடைத்தது அவ்வளவு தான்.
நாளை இந்திய - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இம்முறை உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டம் ஆரம்பிக்கும் பிற்பகல் நேரத்துக்கிடையில் B பிரிவு அணிகள் ஏழையும் பார்க்கலாம்.
இவை என் ஊகங்கள், கணிப்புக்கள் மட்டுமே.. கால நிலை,கள நிலை, குறித்த நாளின் வீரர்களின் பெறுபேறுகள் முடிவுகளை மாற்றி மூக்குடைக்கலாம்.