இறுதியாக இரண்டு + எனது மூன்று - உலகக் கிண்ணப் பார்வை 1

ARV Loshan
28


நேற்று உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்பதான இறுதி இரு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவின் பேர்த்திலும் இலங்கையின் கொழும்பிலும் இடம்பெற்ற இந்த இரு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பல்வேறு ஒத்த விடயங்கள்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இரு அணிகளே வென்றிருந்தன;இவ்விரு அணிகளும் பெற்றுக் கொண்ட ஒட்ட எண்ணிக்கைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.

ஆஸ்திரேலியா தனது ஐம்பது ஓவர்களில் 7 விக்கெட்டுக்களுக்கு 279 ஓட்டங்கள்; இலங்கை 9 விக்கெட்டுக்களுக்கு 277 ஓட்டங்கள்.

தங்கள் சொந்த நாட்டில் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துகொண்ட இவ்விரு அணிகளுமே எதிரணிகளை உருட்டி சகல விக்கெட்டுக்களையும் இழக்க செய்திருந்தன.

பேர்த்தில் இங்கிலாந்தும் கொழும்பில் மேற்கிந்தியத் தீவுகளும் தத்தமது இன்னிங்சை ஆரம்பிக்கையிலேயே முதல் இரு துடுப்பாட்ட வீரரையும் ஓட்டங்கள் பெறாமல் இழந்ததும் மற்றொரு சுவாரஸ்ய ஒற்றுமை.

ஆஸ்திரேலியா இங்கிலாந்தை ஓட்டங்களால் முதலில் வெல்ல, இலங்கை கொஞ்சம் தாமதித்து ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது.

எனது பார்வையில் உலகக் கிணத்துக்கு முன்னதாக இடம்பெற்ற இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இம்முறை உலக சம்பியனாகப் போகும் அணி வென்றுள்ளது.
அதற்கு முந்தைய போட்டியில் நடப்பு உலக சாம்பியன் வென்றுள்ளது.

இன்று வெற்றி கண்ட இரு அணிகளுமே தத்தமது முழுப் பலத்தை முழு அணி இல்லாமலேயே காட்டியுள்ளன.

 தலைவன் இல்லாவிட்டாலும் வெற்றிகள் குவிகின்றன.. 

ஆஸ்திரேலியா அணியில் உலகக் கிணத்தில் அவர்களின் முதல் போட்டியில் விளையாடும் சாத்தியம் கொண்ட வழமையான அணித்தலைவர் பொன்டிங், உப தலைவர் கிளார்க், மைக்கேல் ஹசி,ஷேன் வொட்சன்,ஸ்டீவ் ஸ்மித், ப்ரெட் லீ, நேதன் ஹோரிட்ஸ் என்று ஏழு முக்கிய வீரர்கள் இல்லை.

(இதில் ஹசி+ஹோரிட்சின் நிலை பெரிய கேள்விக்குறி தான்)
ஆனால் கமேரோன் வைட்டின் தலைமையில் முதல் போட்டியிலேயே வெற்றி. பொன்டிங்,கிளார்க்குக்குப் பின்னதான எதிர்காலத்துக்கு ஆஸ்திரேலியா தயாராகிறது. வைட் ஆஸ்திரேலியாவின் T 20 அணியின் தலைவராக அண்மையில் அறிவிக்கப்பட்டதும் இங்கே முக்கியமானது.

இன்றைய போட்டியில் தலைமை தான்கியதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 19வது ஒருநாள் சர்வதேசத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.ஷேன் வோர்னுக்குப் பிறகு அதே விக்டோரியப் பிராந்திய வீரர் தலைவராகியுள்ளார்.பொன்டிங்குக்குப் பிறகு கிளார்க் தொடர்ந்து சொதப்பினால் வைட்டிடம் டெஸ்ட் தலைமையும் கொடுக்கலாம் என்று நான் சிபாரிசு செய்கிறேன்.

காரணம் விக்டோரியப் பிராந்தியத்தை ஆக்ரோஷமாக (aggressive) வழிநடத்தி வெற்றிகள் பெற்றுள்ளார் வைட்.

உள்ளூர் மட்டங்களில் சிறப்பாக செய்தும் வாய்ப்புக்கள் கிடைக்காமல் காத்திருந்த டேவிட் ஹசி இம்முறை கலக்கியதும் உலகக் கிண்ணத்தில் விளையாடப் போவதும் மகிழ்ச்சி.
அதே போல சகலதுறை வீரர் ஹேஸ்டிங்ஸ் கலக்குவார் பாருங்கள்.

உலகக் கிண்ண வாய்ப்புத் தவறிப் போனாலும் தாம் இருக்கிறோம் அடுத்து என்று காட்டிக் கலக்கிய ஷோன் மார்ஷ், கலும் பெர்குசன் ஆகியோரும் ஒரு வருடத்தின் பின்னர் இன்று சொந்த நகர மைதானத்தில் கிடைத்த வாய்ப்பை எதிர்காலத்துக்கான முதலீடாகப் பயன்படுத்திய அடம் வோஜெசும் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் வளத்துக்கான எடுத்துக்காட்டுக்கள்.

அதிலும் இன்றைய வோஜெசின் ஆட்டம் கண்கொள்ளா விருந்து.

இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரும் எதிர்பார்ப்பான ஷேன் வொட்சன் இத்தொடரில் கலக்கிய கலக்கல் அவருக்கு தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதை வழங்கியுள்ளது.
இவர் போலவே டேவிட் ஹசியும் ஒவ்வொரு போட்டியிலுமே தன் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு ஆசிய ஆடுகளங்களில் தேவைப்படும் சுழல் பந்துவீசும் சகலதுறை வீரருக்கான இடத்தை மிகச் சிறப்பாக நிரப்பப் போகிறார் இவர்.

உலகக் கிண்ணத்துடன் போஸ் கொடுக்க இப்போதே ஒத்திகை 

இலங்கை அணியும் தமது பிரதான பதினொருவரில் மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமலேயே இன்று களம் இறங்கியது குறிப்பிடத் தக்கது.

டில்ஹார பெர்னாண்டோ, அஜந்த மென்டிஸ்,திசர பெரேரா ஆகியோரின் பந்துவீச்சுக்கள் இன்று சிறப்பாக அமைந்தது இலங்கைக்குக் கொஞ்சம் ஆறுதலான விடயம்.

அதிலும் நோ போல் வீசாத டில்ஹார இலங்கை அணிக்குப் பெரும் நிம்மதியை அளித்திருப்பார். திசர பெரேராவின் மூன்று விக்கெட்டுகளும் அவர் பந்துவீசிய Line & Length பாராட்டக் கூடியதாக இருந்தது. மெண்டிசின் இடம் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் அவரை இலகுவாக அடையாளம் கண்டு தாக்கிய பிறகு ஹெரத்திடம் செல்வதாகத் தோன்றினாலும் இன்று மெண்டிசின் நான்கு விக்கெட்டுக்கள் அவருக்கு நம்பிக்கையை அளித்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

அடுத்து தரங்க கடந்த போட்டியில் பெற்ற சதமும், டில்ஷானின் இன்றைய சிறு அதிரடியும், சந்காவின் இன்றைய அரைச் சதத்துடனான அபார ஆட்டமும் மகேலவின் சிறப்பான ஆட்டமும் தந்த நிறைவுகளுடன் உள்ளூர்ப் போட்டிகளில் பெரிதாக ஓட்டங்கள் குவிக்காத என்ஜெலோ மத்தியூஸ் இன்று ஒரு Finisherஆக ஓட்டங்களை வேகமாக இறுதியில் குவித்ததும் முக்கியமாக மகிழ்ச்சியான விடயங்கள்.

மகேலவுக்குப் பிறகு கபுகேதர,சமரவீர ஆகியோரின் இடங்கள் கொஞ்சம் தடுமாற்றமளித்தாலும் போகப் போக சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.சமரவீர உள்ளூர்ப் போட்டிகளில் தொடர்ச்சியாக அரைச் சதங்கள் குவித்துக் கலக்கியுள்ளார்.

முரளி,மாலிங்க,குலசேகர இல்லாமல் இன்று கெய்ல்,சர்வான்,சந்தர்போல்,ப்ராவோக்கள் அடங்கிய துடுப்பாட்ட வரிசையை சரித்துத் தொடரைக் கைப்பற்றியுள்ள இலங்கை தான் இம்முறை Hot Favorites என நான் நம்புகிறேன். காரணம் அநேகரால் Favorites என்று சொல்லப்படும் இந்தியாவை விடக் கூடுதலான சமநிலையும் உபகண்ட ஆடுகளங்களில் ஜெயிக்கத் தேவையான கூடுதலான வியூகங்களுக்கு வாய்ப்பும் உள்ள அணி.அத்துடன் இந்தியா போல உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவினால் பதற்றமும் அடையாமல் விளையாடக் கூடிய அணி.
96 க்குப் பின்னர் மீண்டும் எமக்கு என்ற நம்பிக்'கை'கள்  


இந்தியாவை ஊடகங்களும் விளம்பரங்களும் உசுப்பேற்றியே பதறி சிதற வைத்துவிடுவது வழமை.

மேற்கிந்தியத் தீவுகள் எதிர்பார்த்ததை விட ஓரளவு சிறப்பாகவே போராடினார்கள்;ஆனாலும் உலகக் கிண்ணம் ஜெயிக்க இது போதாது. கெய்ல்,பிராவோ அல்லது சர்வான் சூப்பர் ஸ்டாராக மாறவேண்டும்.போலார்ட் புஸ் ஆகிப்போனார்.இவரைஎல்லாம் ஓரிரு T 20 அடிகளுடன் உச்சாணிக் கொம்பில் வைத்தவர்களுக்கு இன்னமும் வேண்டும்.

இன்று எனது ட்விட்டரில் சொன்னது போல டரன் சமி தன்னை வெளியேற்றிவிட்டு இன்னொரு நல்ல சுழல் பந்துவீச்சாலரை சேர்த்துக்கொண்டால் அது மேற்கிந்தியத் தீவுகளுக்கு நல்லது.
அல்லது கமர் ரோச் அணிக்குள் வந்து சமி வெளியேறினால் கொஞ்சமாவது வாய்ப்புக்கள் உருவாகும்.

இங்கிலாந்து - வீரர்களின் காயங்கள் படுத்தி எடுக்கும் பரிதாபகர அணி.
ப்ரோட்,ஸ்வான்,ப்ரெஸ்னன் வரிசையில் இப்போது மத்திய வரிசையின் முதுகெலும்பு ஒயின் மோர்கனும் சேர்ந்துள்ளார்.மோர்கன் சிலவேளை உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாதவாறு பாரதூரமானதாக இந்த உபாதை மாறலாம் என்று அஞ்சவும் படுகிறதாம். பாவம்.

ஓய்வு வேண்டும்;அலைச்சல் அதிகம் என்று புலம்பி வந்த பீட்டர்சனுக்கும் சிறு உபாதைகள் போட்டு வதைத்தேடுக்கும் நிலையில் நூறு நாட்கள் நீடித்த ஆஸ்திரேலியத் தொடரில் 6-1 என்ற ஒருநாள் தோல்வியும் சேர்ந்து ஸ்ட்ரோசின் இங்கிலாந்தின் உற்சாகங்களை வடிய வைத்துள்ளது.
(ஆஷசின் அபார வெற்றி எல்லாம் இனி பழம் பெருமைக்குத் தான் நண்பர்காள்)

வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இருந்த இங்கிலாந்து இப்போது வழமையான இங்கிலாந்தாகத் தான் தோன்றுகிறது.
ஒரே ஒரு பிரகாச நட்சத்திரம் என நான் கருதுவது மூன்றாம் இலக்கத்தில் அடி பின்னிவரும் ஜோனதன் ட்ரோட். ஆனால் ஆசிய ஆடுகளங்களில் இவரது ஆட்டம் எப்படி இருக்குமோ?
இயன் பெல், ஜிம்மி அன்டர்சன்,மைக்கேல் யார்டி ஆகியோரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரகாசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் அரையிறுதி வரை செல்ல வாய்ப்புள்ள நான்காவது அணி என்று இங்கிலாந்தை இனி நான் எண்ணப் போவதில்லை.

இப்போதைய நிலையில் என் கணிப்பில் உலகக் கிண்ணத்தின் புதிய உரிமையாளராக வாய்ப்புள்ள அணிகள்..
1. இலங்கை
2. இந்தியா
3. ஆஸ்திரேலியா
(எவ்வளவு தான் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அடக்கி வைக்க முடியவில்லை ;) விளைவுகளை ஏப்ரல் 2ஆம் திகதி பார்ப்போம்)

நான்கு அணிகளின் கடைசி ஆட்டங்களை மட்டும் பார்த்தேன்.
எல்லா அணிகளையும் பலம் பலவீனங்களோடு விரிவாக உலகக் கிண்ணம் தொடங்கு முன் அலச உள்ளேன்.

** பாகிஸ்தானின் எழுச்சி கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
ஆனால் சூதாட்டக் காரர் மூவருக்குமான தண்டனைகள் ஓரளவு திருப்தியாக உள்ளது.
இவர்களுக்கு எக்காலத்திலும் மன்னிப்பு வழங்கப்படவே கூடாது என்று மனது விரும்புகிறது.அத்துடன் ICC இவர்களது தண்டனையில் இனி மாற்றங்கள் கொண்டு வந்து தளர்த்தக் கூடாது.

 *படங்கள் எல்லாம் வழமைபோல் cricinfoஇல் பொறுக்கியவை 

Post a Comment

28Comments

Please Select Embedded Mode To show the Comment System.*