February 02, 2011

இந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....


ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற இந்துவின் சொல்லாடற் களரி நடாத்திய விவாத வேள்வி 2011 இல் வெளியிடப்பட்ட 'அக்கினி' இதழுக்காக எழுதிய கட்டுரை..
    

நான் கற்ற கல்லூரி கொழும்பு இந்துக்கல்லூரி என்று நினைவுகளைப் பின்னோக்கித் திருப்புகிற வேளையில் மனதின் இனிமையான தருணங்கள் பலப்பல. படித்த காலங்கள்.. பழகிய நட்புக்கள்.. கற்பித்த ஆசிரியர்கள்..கல்லூரி மைதானம்... இப்படியாக எத்தனை எத்தனை இனிய நினைவுகள்..

இவற்றுள்ளே இன்று வரை பூரிப்போடும் பெருமையோடும் மனம் அசைபோடும் முக்கியமான ஒரு விடயம் எமது விவாத காலங்கள்.
நான்கு ஆண்டுகால விவாத நாட்கள் வாழ்வு நிறையும் அளவுக்குத் தந்த மறக்கமுடியாத அனுபவங்கள்..

பெருமையும் வெற்றி வரலாறும் கொண்ட இந்துவின் விவாத அணியில் அங்கம் வகித்த ஒருவன்; இந்துவின் விவாத அணியை இருவருடங்கள் தலைமை தாங்கியவன் என்ற நினைவுகள் தரும் இறுமாப்பும் இனிய போதையும் வேறெதிலும் கிடைக்காதவை.

நீண்டகால வரலாறு கொண்ட கொழும்பு இந்துவின் விவாத அணி கொழும்பு பாடசாலை அணிகளில் அசைக்க முடியாத அசுர பலம் பெற்ற அணியாக வலம் வந்த காலம் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது.

சுபாஷ், ஜெயப்ரகாஷ் சகோதரர்கள், தயாபதி, தமிழழகன்  ஆகியோர் அடங்கி இருந்த இந்துவின் 90களின் ஆரம்ப விவாத அணி பெற்ற தொடர் வெற்றிகள் பற்றி திடீர் விவாதியாக நான் மாறிய பிறகே செவி வழி அறியக் கிடைத்தது.
94ஆம் ஆண்டில் ஓர் நாள் வெஸ்லிக் கல்லூரியின் தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்த விவாதப் போட்டியொன்றுக்காக எனது சிரேஷ்டராக இருந்த சுந்தரலிங்கம் முகுந்தன்  அவசர அவசரமாக அழைத்திருந்த இருவரில் ஒருவராக நானும் இடம்பெற்றுக் கொண்டேன்.

பாடசாலைக் காலத்தில் அந்த நேரம் பேச்சுப் போட்டிகளில் நானும் முகுந்தனும் மூன்றாமவரான எஸ்.பிரகாஷும் தான் அதிக ஈடுபாட்டோடு போட்டியிட்டு வெற்றிகளையும் பெற்று வந்திருந்தோம்.

ஆனால் முகுந்தன் எம்மை விவாதப் போட்டி இருக்கிறது என்று அவசரமாக அழைத்த நேரம் மூவர் + இன்னொரு மாணவரோடு நாம் வெஸ்லிக் கல்லூரிக்குப் பயணித்த நேரம் 'விவாதம்' என்றால் என்னவென்றே சத்தியமாகத் தெரிந்திருக்கவில்லை. அப்போது பொறுப்பாசிரியர் என்றும் ஒருவர் இல்லாமல் அனாதைகள் போலப் பயணித்த எமக்கு அந்த அரை மணிநேர பஸ் பயணமே விவாதப் பயிற்சிப் பட்டறையாக அமைந்தது.

சுபாஷ் அவர்களின் விவாதங்களைப் பார்த்துப் பழகியிருந்த முகுந்தன் எமக்கு விவாதம் என்றால் என்ன,எப்படி செய்யவேண்டும் என சொல்லித் தந்தார்.

வெஸ்லியின் தமிழ் விழா விவாதப் போட்டிகள் எமக்கு அனுபவரீதியாக அடித்தளம் தந்தன.
முதல் போட்டியிலேயே அனுபவமற்ற நாம் இசிப்பத்தான கல்லூரியிடம் தோற்றுப் போனோம்.
ஆனால் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலமாக இன்னொரு வாய்ப்புக் கிடைக்க அடுத்தடுத்து மூன்று வெற்றிகளைப் பெற்று,விவாதம் என்றால் எப்படி செய்வது எனக் கொஞ்சம் கற்று,அனுபவம் பெற்று இறுதிப் போட்டி வரை சென்றோம்..
அப்போதைய ஹீரோக்கள் புனித பேதுரு கல்லூரியிடம் தோற்றாலும் முதலாவது போட்டித் தொடரிலேயே இரண்டாம் இடம் பிடித்த மகிழ்ச்சியோடு தன்னம்பிக்கையும் கிடைத்தது. 

அந்தத் தொடரில் மட்டும் தோல்வியுடன் வெளியேறி இருந்தால் இந்தளவு ஆர்வம் இருந்திருக்குமோ தெரியாது.
ஆனால் தொடர்ந்து வந்த மிக முக்கியமான புனித பேதுரு கல்லூரியின் விவாத விழாவில் நால்வர் கொண்ட அணியாக நாம் பங்குபற்றவேண்டி வந்தபோது நாம் சிற்சில விவாதப் பயிற்சி போட்டிகள் வைத்து தேர்ந்தெடுத்த ஒருவர் ரபீந்திரநாத்.
கொஞ்சக் காலமே கல்லூரியில் இருந்தாலும் அந்தத் தொடரில் கலக்கியவர் இவர்.

பல பிரபல பாடசாலைகளை வீழ்த்தி அனைவரும் வியக்கும் வண்ணம் எம் இளைய அணி இறுதிப் போட்டிக்கு வந்தபோது உண்மையில் கொஞ்சம் கர்வம் வந்தது தான். ஆனால் ஒரு ஆசிரியரை எம்முடன் அழைத்து செல்ல நாம் பட்டபாடு எமக்குத் தான் தெரியும்.
ஆனால் இந்தத் தொடரின் பின் தான் ஆசிரியைகள் திருமதி.சிவக்குமாரன், திருமதி.பாலகுமாரன், திருமதி.கௌரி,திருமதி.மாணிக்கராஜா ஆகியோரும் ஆசிரியர் திரு.கலாகரனும் எமக்கு பின்புலமாக ஆலோசனைகள் தந்தும் தயார்ப்படுத்தலில் துணை வந்தும் எம்மைப் பலப்படுத்த ஆரம்பித்தார்கள்.

அதிர்ச்சியாக யாரும் பெரிதாக எதிர்பாராத ஹமீத் அல் ஹுசெய்னியாக் கல்லூரியிடம் இறுதிப் போட்டியில் தோற்றுப் போனோம்.
ஆனால் எனக்கு தொடரின் சிறந்த விவாதி விருது கிடைத்தது.

இதன் பின்னர் எமது கல்லூரி விவாத அணி சுபாஷ் கால அணிக்குப் பிறகு சிறந்த அணிஎனப் பெயர் பெற ஆரம்பித்தது.
இசிபத்தன கல்லூரி வெற்றி, இசைவ மங்கையர் கழக வெற்றி, லயன்ஸ் கழக சுற்றுப் போட்டி வெற்றி எனத் தொடர்ந்தன வெற்றிகள். 
தமிழ்த்தினப்போட்டியில் மாவட்ட மட்டம் வரை வந்து தடுமாறிப் போனோம்.
அப்போது மட்டுமல்ல இப்போதும் அந்த நடுவர்களின் தீர்ப்பில் உடன்பாடில்லை.

விவாதங்கள் தந்த சில இப்படியான கசப்பான சம்பவங்கள் இன்றுவரை மனதில் நீங்கா வடுக்கள் தாம்.

ஆசிரியர் கலாகரன் தானாக எம் விவாதக் குழுவின் பொறுப்பாசிரியராக வர விருப்பம் தெரிவித்த பின்னர் மிக ஈடுபாட்டோடு விவாதக் களத்தில் இறங்கிய நாம்,ஆசிரியரின் ஆலோசனைப் படி தலைப்பை அது எவ்வாறானதாயினும் எமக்கு சாதகப்படுத்தி எதிரணியைக் குழப்பும் நுட்பம் ஒன்றையும் ஆரம்பித்தோம்.

அவ்வாறாக ஆரம்பித்த முதல் விவாதமே பிரம்மாண்ட வெற்றி.
சர்வாதிகாரி ஹிட்லர் நல்லவன் என நாம் நிரூபித்து வென்றோம்.

இந்த வெற்றி அலை தொடரும் நேரத்தில் தலைமைப் பதவி முகுந்தனிடம் இருந்து எனக்குக் கை மாறியது.
மூன்றாம் விவாதியாக இருந்த எனக்கு தலைமைப் பதவி சிக்கலாக இருக்கவில்லை. 
முகுந்தன் குழுவில் இருந்து விலக ஏற்கெனவே இருந்த பிரகாஷ் நான்காம் விவாதியாகத் தொடர்ந்திருக்க, ரஞ்சிதலிங்கம், தமிழமுதன் என்று பலமான மேலும் இருவருடன் எம் வெற்றிகள் தொடர்ந்தன.

நான் தலைமை தங்கிய முதல் மூன்று சுற்றுக்களிலுமே நாம் சாம்பியன் ஆனோம்.
பரி தோமாவின் விவாத சுற்றுப் போட்டி, இசிப்பத்தான, வெஸ்லி என்று மற்றக் கல்லூரி அணிகள் நடுங்கும் வகையில் எம் அணி பலமானதாக அமைந்தது.

விவாத அணியின் தலைவன் என்ற பெருமை அப்போது (இப்போது இந்த விவாத மோகம்,தாகம் கொஞ்சம் குறைந்திருப்பதாக உணர்கிறேன்.. ஏன்??? தம்பி தங்கையர் தான் சொல்லவேண்டும்) ஒரு மிக உயர்வான தகுதி போல.
தலைமைத்துவப் பண்புகளைக் கற்றுக்கொள்ள எனக்கு கல்லூரி மாணவத் தலைவர் பதவி உதவியதைப் போலவே விவாத அணியும் விவாத அணியின் தலைவர் பதவியும் உதவி இருக்கின்றன.

தலைவராக இருக்கையில் நான் வென்ற சிறந்த விவாதி பட்டங்களை விட அணியின் வெற்றிகளையே கூடுதலாக நேசித்திருக்கிறேன்.
தொடரின் சிறப்பு விவாதி பட்டங்கள் வென்ற நேரங்களில் மிக உற்சாகமாக இருக்கும்.
காரணம் இந்து அணியும் வென்றிருக்கும்.

விவாத அணியின் தலைவராக இருந்த காலத்தில் நாம் நால்வரும் எம்முடன் ஒரு இரண்டாவது உறுதியான அணியையும் உருவாக்கும் விதத்தில் பாடசாலைக்குள்ளே பல பயிற்சி விவாதங்களை ஏற்பாடு செய்திருந்தோம்.
பல ஆர்வமுள்ள இளைய விவாதிகள் உருவாகிக் கொண்டே இருந்தார்கள்.

விவாத மன்றம் என்ற ஒன்று கல்லூரியில் இல்லாத அந்தக் காலத்திலேயே நாம் ஆரம்பித்த அறிவிப்பாளர் மன்றம் இரு விவாதப் போட்டிகளை மிகப் பெரியளவில் நடத்திப் பெரிய பரிசுகளையும் வழங்கி இந்துவின் மைந்தர் எம்மாலும் முடியும் என்பதை நிரூபித்தோம்.

மற்றக் கல்லூரிகளில் சென்று நாம் வெற்றிஈட்டியதைப் போல நாமும் வழங்கவேண்டாமோ? 

நான் இன்னும் பெருமைப்படும் விடயம் நான் தலைவனாக இருந்த காலத்தில் எம் இந்துவின் விவாத அணி மிக சொற்பமான போட்டிகளிலேயே தோற்றிருந்தது.
அத்துடன் தமிழ்த்தினபோட்டிகளின் மாகாண மட்டம் வரை சென்றோம்.
மாணவர்கள் பலர் விவாதப் போட்டிகளின் ரசிகர்களாக ஈர்க்கப்பட ஆரம்பித்தனர்.

உயர்தரப் பரீட்சைக் காலத்திலும் விவாத வெறி என்னை விடவில்லையாயினும் தலைமைப் பதவியைத் தமிழமுதனிடம் ஒப்படைத்து நான்காம் விவாதி ஆகினேன்.
ஆனாலும் வெற்றிகளுக்கு நாம் குறைவைக்கவில்லை.
மீண்டும் பரி தோமாவில் வென்ற நாம்,புனித சூசையப்பர் கல்லூரியிலும் வென்றோம்.

வெற்றியுடனேயே அடுத்த தலைமுறையிடம் நாம் நாம் விவாத அணியை ஒப்படைக்க என் தம்பி திருச்செந்தூரனும் உமாசுதன்,ராஜீவ், உதயஷங்கர்,மீனிளங்கோ ஆகியோர் அடங்கிய அணியும் எம்மை விட அதிக உச்சங்கள் தொட்ட வெற்றிகளை தொடர்ந்து சுவீகரித்தனர்.

எப்போதும் இல்லாத பொற்காலம் அது.. 
நாம் பயிற்சிக் களங்களால் விதைத்த விதைகள் தந்தவை பொற் கதிர்கள் என்ற பெருமை எமக்கும் எனக்கும்.
 விவாதியாக இருந்த அனுபவத்தினைப் பின்னர் பல இடங்களில் அடுத்த தலைமுறையினரிடம் பகிர்ந்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடுவராக எந்தப் பாடசாலை அழைத்தாலும் போய் வருகிறேன். இந்தக் கால இளைய விவாதிகள் கேட்கும்,எனக்குத் தெரிந்த விஷயங்கள்,நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கிறேன்.

விவாதிகள் என்ற இந்த அனுபவத்தால் நாம் வாழ்க்கையின் பல விடயங்களைக் கற்றுள்ளோம்..
குறிப்பாக எதையும் தர்க்கித்து இருபக்கம் பார்த்து அணுகும் முறையை எமக்குக் கற்றுத் தந்தது விவாதமே.
எனது வானொலித் துறையிலும் விவாதத்துக்காகக் கற்ற பல விடயங்கள் ஆழமாக சிந்தித்து நிகழ்ச்சிகள் தர உதவுகின்றன.
பல விவாதிகளும் தாம் எடுத்துக் கொண்ட துறைகளில் உயரம் பெற்றதைக் கண்டுள்ளேன்.

இந்துவின் மைந்தனாக விவாதம் புரிந்து பதின் மூன்று ஆண்டுகள் ஆகி, அதன் பின் பல மேடைகள் ஏறி இறங்கினாலும் இன்னும் அந்த வெள்ளை சீருடையில் எம் இந்துவின் மண்ணிற கழுத்துப் பட்டி அணிந்து நிமிர்ந்த நெஞ்சோடு துணிந்து பேசிய அந்த விவாதக் காலம் மனதில் இருந்து மறையவில்லை....


22 comments:

நிரூஜா said...

ஐ சுடுசோறு

என்.கே.அஷோக்பரன் said...

விவாதம் ஒரு தனி அனுபவம் தான்!
:-)

Unknown said...

அவ்வாறாக ஆரம்பித்த முதல் விவாதமே பிரம்மாண்ட வெற்றி.
சர்வாதிகாரி ஹிட்லர் நல்லவன் என நாம் நிரூபித்து வென்றோம்//
அடேங்கப்பா!!

Unknown said...

அடடா நானா சுடுசோறு?வேணாம் நான் காலைல சோறு சாப்புடுறேல!!

Unknown said...

அய்யோயோ எனக்கில்லையா?சரி விடுங்க பாவம் தானே நீருசா

Vathees Varunan said...

:))))

ஒருவனுடைய வாழ்கையின் உயர்வுக்கு பாடசாலை மற்றும் கலை இலக்கிய விழாக்களே அடிப்படை அத்திவாரமாக இருக்கின்றது.

Shafna said...

இருங்க வாசிச்சிட்டு வாரன்

Shafna said...

நீங்க நல்ல Debater! அந்த நாளில் மட்டுமல்லவே எமக்குத் தெரிந்த இந்த நாளிலுமல்லவா கலக்குறீங்க..இவ்வுலக மாந்தர் தம் பெருமை உரைத்தே பொழுது பகிர்கின்றனராம்.. ஆகட்டும் ஆகட்டும்..அகிலத்தில் அனைத்துமே சொற்ப காலமே.

சக்தி கல்வி மையம் said...

nice.,

maruthamooran said...

விவாதம் ஒரு இனிய அனுபவம்தான். ஆனாலும், பள்ளிக்காலங்களில் அவற்றில் நான் ஆர்வம் காட்டியதில்லை.

விவாதங்கள் நல்ல கருத்தியல்களின் மோதலாக இருக்கின்ற சமயத்தில் ஆரோக்கியமான சமூகம் சாத்தியப்படுகின்றது.

தர்ஷன் said...

எனக்கு நீங்கள் வானொலியில் பௌர்ணமி நாளில் செய்யும் விவாதம் ஞாபகம் வருகிறது

MANO நாஞ்சில் மனோ said...

அருமை....

Ramesh said...

அருமை. வதீஸின் கருத்தை இரட்டிப்புச்செய்கிறேன்.

கன்கொன் || Kangon said...

வெற்றிகளை திரும்ப ஒருதடவை பின்னோக்கிப் பார்ப்பதில் மகிழ்ச்சிதான்.

இன்றைய அறிவிப்பாளர் லோஷன் அண்ணாவை மெருகேற்றியதில் இவ் விவாதப் போட்டிகளுக்கு கணிசமானளவு பங்கு இருக்கும் என்று நம்புகிறேன்....

:-)))


// அவ்வாறாக ஆரம்பித்த முதல் விவாதமே பிரம்மாண்ட வெற்றி.
சர்வாதிகாரி ஹிட்லர் நல்லவன் என நாம் நிரூபித்து வென்றோம். //

ஆங்....!

யோ வொய்ஸ் (யோகா) said...

நீங்களும் மப்ரூக்கும் சூரியனில் ராஜாவா? ரகுமானா? என விவாத்தது நினைவுக்கு வருகிறது. அது போன்று முயற்சிக்கலாமே...

கார்த்தி said...

எங்களுடைய பாடசாலையில் விவாத அணிஇருந்தாலும் அப்போது அதை ரசித்ததைவிட மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் வாணிவிழாக்களில் நடக்கும் விவாதஅரங்குகளில் இடம்பெற்ற சுவாரஸ்யமான விவாதங்களையே கூடுதலாக ரசித்துள்ளேன் நான். உங்களுடைய காலத்தில் தலைவராக இருந்து தோணி கலக்கியதவிட நீங்கள் கூடுதலாக கலக்கியுள்ளீர்கள் போலிருக்கே!

வந்தியத்தேவன் said...

இந்தக் காலத்தில் தான் எனக்கு உங்களை அறிய வந்தது பின்னர் தான் பழகமுடிந்தது,

எங்கள் காலத்தில் ஹாட்லியில் விவாதங்கள் நடந்தது குறைவு ஏன் பாடசாலை நடந்ததே குறைவு, போர்க்காலம் அது. ஆனாலும் ஓரிருமுறை விவாதத்திலும் பல முறை தமிழ்த் தினப் பேச்சுபோட்டிகளிகும் பங்குபற்றியமை இப்போ ஜாவா சி விட வாழ்க்கையை அனுபவிக்க கற்றுத்தந்துள்ளது.

அசோக்பரன் நீங்கள் என சில விவாதிகள் இருக்கும் போது ஏன் இலங்கைப் பதிவர்கள் ஒரு பட்டிமன்றம் ஒழுங்கு செய்யக்கூடாது? அடுத்த சந்திப்பில் கட்டாயம் பட்டிமன்றம் வைக்கவேண்டும் என ஆணையிடுகின்றேன்.

ஏ.எ.வாலிபன் said...

லோஷன் அண்ணா வணக்கம் ,
எங்கள் விவாதங்களின் போதும் , விழாக்களின் போதும் பழைய விவாதிகள் என்றளவினையும் தாண்டி எங்களுக்கு நீங்கள் விலகிய ஆதரவு மறக்க முடியாது . குறிப்பாக முகுந்தன் அண்ணைக்கு தான் தான் விவாத விழாவை (இந்துவில்)தொடங்கினனான் என்ற பெருமையின் விளைவாக ஒரு அதீத அன்பு. நீங்கள் தொடாத எல்லைகளை நாங்கள் தொட்டதாக சொன்னது உங்கள் பெருந்தன்மை. முதன் முதலில் மண் தரை அமைப்பதுதான் கடினம் , அதன் மேல் தார் போட்டுத் தார் ரோடு ஆக்குவது சுலபம்.

நான் விவாதிப்பதற்கு நீங்கள் கற்றுக் கொடுத்ததை சிலாகிப்பதை விட நீங்கள் விட்டு சென்றதையே அதிகம் மதிக்கிறேன். விவாத உலகில் நான் காலடி எடுத்து வைத்த போதே, இந்துக் கல்லூரிக்காரன் என்ற பெருமையை சுமந்து கொண்டேன். ஆனால் அதற்காக உங்களைப் போன்ற மூத்த விவாதிகள் எடுத்த முயற்சிகள் கல்லூரி வரலாற்றில் குறிப்பானவை.

ஏ.எ.வாலிபன் said...

மன்னிக்கவும் *விலகிய அல்ல வழங்கிய
-இ. த. உதயசங்கர்

ஷஹன்ஷா said...

வணக்கம் அண்ணா....

என் இம்மாதத்தின் முதல் கருத்து பகிர்வு இது..

ஒரு மனிதனின் திறமையை மெருகேற்றி அவனுக்குள் ஆளுமையை கொண்டு வருவது பாடசாலைகளில் இடம் பெறும் இதர பாடவிதான செயற்பாடுகள்தான்.குறிப்பாக தமிழ் மன்றம்,கலை மன்றம், விவாத மன்றம். இவை தமிழ் மாணவர்களை ஆளுமையுள்ள திறனாளிகளாக சமுகத்திற்கு அழைத்து செல்கின்றன. நான் என் கடந்த 2 வருடங்களுக்கு முன் இவற்றை அறிந்து கொண்டேன்-உணர்ந்து கொண்டேன்..

ஆரம்பத்தில் விவாதங்களில் பங்கு பெறாவிட்டாலும் என் பாடசாலை காலத்தில் இறுதி காலத்தில் ஒரு சில விவாதங்களில் யாழ் இந்து அன்னையை பிரதிநிதித்துவம் செய்த மகிழ்ச்சி-பெருமிதம் எனக்குண்டு..(இன்றும் யாழின் பலமான விவாத அணிகளில் முக்கிய இடம் வகிப்பதில் யாழ் இந்துக் கல்லுாரி விவாத அணி முதலிடம் எனலாம்)

நீங்கள் கூறியது போலவே விவாத அனுபவம் பல நேரங்களில் பல இக்கட்டான இடங்களில் உதவி செய்யும்.தர்க்கித்தல்,சிந்தித்தல்,தவறின்றி தெளிவாக முன்வைத்தல்,கிரகித்தல் இவை விவாத அரங்குக்கு வெளியேயும் எமக்கு உதவுவனவாக இருக்கின்றது.

////(இப்போது இந்த விவாத மோகம்,தாகம் கொஞ்சம் குறைந்திருப்பதாக உணர்கிறேன்.. ஏன்??? தம்பி தங்கையர் தான் சொல்லவேண்டும்///
அதுவா அண்ணா...அப்போது பாடசாலை வட்டம் எம்மை பாதுகாத்து நின்றது ஒன்று. இரண்டாவது பாடசாலைக்கு வெளியே விவாதம் பலரால் ஆதரிக்கபடாமை...
அடுத்தது வானொலி பணி..இருப்பினும் பல விவாதங்களை வானொலியில் நடாத்துவது பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது.
விடுமுறை நாட்களில் விவாத நிகழ்வை வெற்றியில் தொடர்ந்தால் சிறப்பு என நினைக்கின்றேன்!.

Vijayakanth said...

FOOTBALL ஒரு காலத்தில இந்துவின் பெயரை பறை சாற்றியது....விவாதம் இன்னொரு பரிணாமத்தை தந்தது..... நான் படிக்கும் காலத்தில் அகில இலங்கை ரீதியில் விவாதப்போட்டி நடாத்தியது ஞாபகம் இருக்கிறது...

Unknown said...

என் பாடசாலைக் காலத்து முதல் விவாதமும், முடிவு விவாதமும் இந்துக் கல்லூரியிலேயே அமைந்தது மகிழ்ச்சி.
இறுதி விவாத சுற்றில் வேத்திய (ரோயல் கல்லூரி) அணி சார்பில் இந்துவின் பொன் விழாக் கிண்ணத்தை வென்றது பெருமை. பங்குபற்றிய அனைத்து போட்டிகளின் சிறந்த விவாதியாகவும், தொடரின் சிறந்த விவாதியாகவும் தெரிவுசெய்து, எம் பருவ காலத்தின் தலை சிறந்த விவாதி என பெருமைப்படுத்திய இந்துக் கல்லூரிக்கும் என் தோழர்கள் உதயசங்கர், மீநிலங்கோ, சகோதரர் லோஷன், பொறுப்பாசிரியர் கலாஹரன் ஆகியோருக்கும் நன்றிகள் என்றென்றும்...
"வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!"

- பாலேந்திரன் காண்டீபன்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner