February 17, 2011

பயிற்சிப் போட்டிகள் + பலம்&பலவீனங்கள் + பிரேமதாச - உலகக் கிண்ண அலசல் - 3


இதோ வந்துவிட்டன உலகக் கிண்ணப் போட்டிகள்..நாளை மறுதினம் முதலாவது போட்டி.. எப்படி வேகமாக ஓடுகின்றன நாட்கள்.

நாளை மறுதினம் இந்த கிரிக்கெட் கோலாகலத் திருவிழா ஆரம்பம்.
இன்று மாலை டாக்காவில் மாபெரும் ஆடம்பர ஆரம்ப விழா வேறு..

ஆரம்ப விழாவுக்கான அரங்கம் 

அணிகளை உறுதிப்படுத்தி தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளும் பயிற்சிப் போட்டிகளில் நாளை இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் ஒரே ஒரு பயிற்சிப் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.

நடந்து முடிந்த பயிற்சிப் போட்டிகளில் (ஒவ்வொரு அணிக்கும் தலா இரு போட்டிகள்) பெரிய அதிர்ச்சிகள் என்று எவையும் இல்லாவிட்டாலும் சிறு எலிகள் பெரும் புலிகளை வீழ்த்திய, தடுமாற வைத்த ஆச்சரியங்கள் நடந்தே இருக்கின்றன.

Minnows என்று சொல்லப்படுகின்ற வலிமை குறைந்த நாடுகள் பெப்ரவரி ஆறாம் திகதி முதல் ஆப்கானிஸ்தானையும் அழைத்து மத்திய கிழக்கில் சில பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வந்திருந்தன.

இதில் ஆப்கானிஸ்தான் கனடாவை வீழ்த்திய ஒரே ஒரு போட்டியைத் தவிர ஏனைய போட்டிகள் எல்லாம் எதிர்பார்த்த அணிகள்  வெற்றியீட்டியதாக அமைந்திருந்தன.

ஆப்கானிஸ்தான் இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் முழுமை அந்தஸ்து பெறாத நான்கு அணிகளை விட சமயங்களில் பலம் வாய்ந்தது என்பது எனது திடமான எண்ணம்.

இம்மாதம் 12 ஆம் திகதிக்கு பிறகு ஆரம்பித்த ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சிப் போட்டிகளில் (இவை எவற்றுக்குமே ஒருநாள் அந்தஸ்து இல்லை என்பது முக்கியமானது) இரண்டே இரண்டு அதிர்ச்சிகள்.

தற்போது டெஸ்ட் விளையாடும் பத்து அணிகளும் தப்பித்துக்கொள்ள நெதர்லாந்து அணியிடம் கென்யாவும், ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தைக் காட்டி எதிரணிகளை அசத்திவரும் அயர்லாந்து அணியிடம் சிம்பாப்வேயும் சிக்கித் தோற்றுப் போயின.

ஏனைய பெரிய அணிகளில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையிலிருந்து இந்தியாவிடம் படுமோசமாக சுருண்டதையும்0 பார்க்கையில் அரையிறுதி வரை இந்த அணி வருமா என்ற சந்தேகம் வருகிறது.
ஆனால் பொன்டிங் & கிளார்க்கின் அரைச் சதங்கள் தூங்கிக் கொண்டிருந்த ராட்சர்கள் விழிப்புக்கு வந்துவிட்டார்கள் என்ற சிறு நம்பிக்கையை ஆஸ்திரேலியாவுக்கும் ரசிகர்களுக்கும் வழங்குகிறது.

நேற்று கனடாவிடம் இறுதி வரை திக்கித் திணறி 16 ஓட்டங்களால் தப்பித்துக் கொண்ட இங்கிலாந்தும் இன்னும் தங்கள் அணிக்கட்டமைப்பை உறுதி செய்யவில்லை என்பது அவர்களின் தடுமாற்றத்தைக் காட்டுகிறது.இப்போது பீட்டர்சன் ஆரம்ப வீரராகக் களம் இறங்குவாராம்.மத்திய வரிசையில் ட்ரொட்டின் formஐ நம்பி எடுக்கப்பட்ட முடிவு இது போல் தெரிகிறது.
நேற்று கனடாவின் துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் தடுமாறியபோதும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஸ்டுவர்ட் ப்ரோட் கைப்பற்றிய ஐந்து விக்கெட்டுக்கள் இங்கிலாந்துக்கு கொஞ்சம் உற்சாகம் கொடுத்திருக்கும்.
கொஞ்சம் நம்பிக்கை !?

பாகிஸ்தான் ஆரம்பத்தில் பங்களாதேஷிடம் தடுமாறி,பின் ஷேசாத்,மிஸ்பாவின் சதங்களின் உதவியால் அபாரமாக வென்றது. வழமையான நம்ப முடியாத,எதிர்வு கூறமுடியாத பாகிஸ்தான்.

தென் ஆபிரிக்க அணி தனது இரு போட்டிகளிலும் லாவகமாக வெற்றிஈட்டிக் கொண்டது.பலவீனம் என்று எந்தவொரு அம்சத்தையும் அவதானிக்க முடியவில்லை.ஆனால் அவர்கள் தடுமாறும் நெருக்கடியான தருணங்கள் வரும்போதே பலவீனங்களைத் தெரிந்துகொள்ளலாம்.இப்போதைக்கு அரையிறுதிக்கு நிச்சயமான வாய்ப்புக்கள் தெரிகின்றன.

இலங்கை, இந்திய அணிகள் தத்தம் பயிற்சிப் போட்டிகளில் பெற்ற அபார வெற்றிகள் மீண்டும் இவ்விரு அணிகளும் தான் இம்முறை Favorites என்பதை உறுதிப் படுத்தி இருக்கின்றன.
     சொந்த மண்ணில் கிண்ணம் கிட்டுமா?

துடுப்பாட்ட வரிசைகளை உறுதிப் படுத்தி இருப்பதோடு,பந்துவீச்சாளர்களின் சமநிலையையும் இந்த இரு போட்டிகளில் இவை சரியாக அடையாளம் கண்டிருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் நான்.

இவ்விரண்டு அணிகளுக்குமே முதல் சுற்றின் எல்லாப் போட்டிகளும் பகல்-இரவுப் போட்டிகளாக அமைந்திருக்கின்ற நிலையில் இலங்கை இரண்டாவது போட்டியில் மின் விளக்குகளின் ஒளியில் துடுப்பெடுத்தாடி இலகுவாக வென்றிருந்தது.
ஆனால் இந்தியா இரு போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வென்றும் இரவில் துடுப்பெடுத்தாடிப் பயிற்சி பெற விழையாதது ஆச்சரியமாக இருக்கிறது.

அனேக மைதானங்களில் இரவு மின்னொளியில் பனி ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று எதிர்வுகூறல்கள் இருக்கும் நிலையில் இந்திய,இலங்கை சுழல்பந்து வீச்சாளர்களின் கையாள்கை குறித்து அறிய ஆவலாக இருக்கிறது.
இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சிப் போட்டிக்குப் போயிருந்த வேளையில் இரவு எட்டு மணிக்குப் பிறகு மைதானத்தின் புற்கள் ஈரமடைவதை அவதானித்தேன்.ஆனாலும் இலங்கையில் கண்டி - பள்ளேகளை மைதானம் தவிர்ந்த ஏனைய இரு மைதானங்களிலும் பனி+ஈரலிப்பு அவ்வளவு பாரதூரப் பிரச்சினையாக இராது என்றே நினைக்கிறேன்.

சுழல் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் போட்டியாக இந்த உலகக் கிண்ணம் அமையும் பட்சத்தில் பங்களாதேஷ் அணியிடமும் ஒரு பார்வை வைத்துக் கொள்ளுங்கள்.கால் இறுதிக்குள் நிச்சயம் வரப் போகிறவர்கள் (தங்கள் சொந்த நாட்டிலேயே அத்தனை போட்டிகளையும் விளையாடவுள்ளதால் தம பிரிவில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துவார்கள் என நம்புகிறேன்.. சிலவேளைகளில் இங்கிலாந்தையும் கவிழ்க்கலாம்) அந்த நாள் அவர்கள் நாளாக அமையும் பட்சத்தில் அரையிறுதிக்குள் அதிரடியாக நுழையக் கூடும்.

சுழல் பந்துவீச்சாளர்களை அடுக்கி வைத்துள்ள சிம்பாப்வேயும் கவனிக்கக் கூடியதே.ஆனால் கால் இறுதிக்குள் நுழைவதாயின் அவர்கள் இலங்கை,ஆஸ்திரேலியா,பாகிஸ்தான்,நியூ ஸீலாந்து ஆகிய அணிகளில் ஒன்றையாவது வீழ்த்தவேண்டி இருக்கும்.

பிரேமதாச மைதானத்துக்கு சென்றவேளையில் அவதானித்தவை -
கிட்டத்தட்ட இரு வருடங்களுக்குப் பிறகு இந்த மைதானத்துக்குப் போட்டியோன்றைப் பார்க்கப் போயிருந்தேன்.

அன்றைய பயிற்சிப் போட்டியில் நான் க்ளிக்கிய சில படங்களின் தொகுப்பு இங்கே...

Warm Up Clicks - கிரிக்கெட் க்ளிக்குகள்உலகக் கிண்ணத்துக்காக மீள நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மைதானம் மேலும் வசதிகளை உள்ளடக்கி இருக்கிறது.வெளிப்புற வலைப் பயிற்சித் திடல்கள், அதிக வசதிகள் கொண்ட ஊடகவியலாளர் மண்டபங்கள்,அதிக பாதுகாப்பு, மேலும் வசதியான மல,சல கூடங்கள், பெரிய வாகனம் நிறுத்தும் இடங்கள்..
பார்வையாளருக்கான அரங்கங்கள் மேலும் பெரிது படுத்தப்பட்டிருப்பது இலங்கையின் முன்னணி ஒரு நாள் அரங்கம் என்ற பெயரை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தின் புற்றரைகளில் இன்னும் கொஞ்சம் புற்கள் இருந்தால் மேலும் பொலிவாக இருக்கும் என்ற ஒரேயொரு ஆதங்கம் தான்.
ஆடுகளம் முன்பைப் போல தட்டை இல்லை என்பதும் அறிந்த உறுதியான தகவல்.

உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் மைதானம் ஒன்றுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசிய வசதிகளை ICC வலியுறுத்தி இருந்த அடிப்படையில் அரங்கத்தின் உள்ளேயும் சூழவுள்ள இடங்களிலும் சில விதிமுறைகள் காவல்துறையினரால் விதிக்கப்பட்டுள்ளன.

சூழவுள்ள பிரதேசங்களில் சுத்தம் பேணப்படல்
மைதானத்தை சூழ வெளியேறும் ஐந்து பிரதான வீதிப் பாதைகள்
வாகனங்கள் வீதிகளுக்கு அருகாமையில் நிறுத்தப்பட முடியாது
அருகேயுள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்களிலும் அண்மையில் உள்ள புற்றரைகள், வெட்டவெளிகளிலும் துணிகள் காயப்போட முடியாது
வீதிகளில் மேற்சட்டை இல்லாமல் ஆண்கள் நடமாட முடியாது
திருத்தப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் காலில் செருப்பாவது அணியவேண்டும்
அரங்கத்தின் உள்ளே உள்ள சகல பணியாளர்களுக்கும் அடையாள அட்டைகள். + இறுக்கமான பாதுகாப்பு
பிரதான வீதியிலிருந்து உள்ளே பிரவேசிக்கையிலேயே தெளிவான தகவல்களை அறிவிக்கும் வழிகாட்டிப் பலகைகள் சிரமங்களைக் குறைக்கின்றன.

எமக்கென ஒதுக்கப்பட்ட ஊடகவியலாளர் பகுதிக்கு செல்ல எந்தவொரு சிக்கலும் இருக்கவில்லை.வாகனத்தில் நான் இருக்கையிலேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடகப் பொறுப்பு அதிகாரி நலம் விசாரித்து,என் அனுமதி அடையாள அட்டையை சரிபார்த்து அன்றைய நாளுக்கான இலவச அனுமதியையும் வாகன நிறுத்துமிட நுழைவுச் சீட்டையும் வழங்கி அனுமதிக்கிறார்.(உலகம் முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இலவச உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கி இருந்தாலும் ஏகப்பட்ட விண்ணப்பங்கள் காரணமாக ஒவ்வொரு போட்டியாகத் தான் பார்த்துப் பார்த்து மூன்று நாட்களுக்கு முன்னர் தொடர்புகொண்டு அனுமதிக்கிறார்கள். உதாரணமாக நாளை மறுதினம் இடம்பெறும் முதல் போட்டிக்கு இலங்கையின் அனேக ஊடகவியலாளருக்கு அனுமதியில்லை)

எமது பகுதிக்குள்ளே நுழைந்தவுடன் யின் ஊடக முகாமையாளர் பிரையன் மேகற்றோயிட் வசதிகள் பற்றிக் கேட்டறிகிறார்.ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உதவியாளர்கள் சகல தகவல்கள்+உதவிகளுக்கும் கையருகே நிற்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய போது இந்த வசதிகளை சிலாகித்தார். Best in Asia என்றார்.

மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்றுவிப்பாளர் ஒட்டிஸ் ஜிப்சன் இப்போதிருக்கும் formஇல் இலங்கையின் மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக ரங்கன ஹெரத்தைக் குறிப்பிடுகிறார்.

எமது வெற்றி FM வானொலி மூலமாக இலவச உலகக் கிண்ண டிக்கெட்டுக்களை வழங்கிக் கொண்டிருப்பதால் இப்போது தினமும் எக்கச் சக்க தொலைபேசி அழைப்புக்கள் மூலமான டிக்கெட் வேண்டுகோள்கள். ஆனால் எல்லோருக்கும் கொடுக்க முடியாதே.

எம்மிடம் இருக்கும் டிக்கெட்டுகள் நேயர்களுக்கு மட்டுமே.. இருப்பவற்றில் வரும் வரிசையில் அதிர்ஷ்ட அடிப்படையில் நேயர்களுக்கு போட்டி டிக்கெட்டுக்களை வழங்குகிறோம்.இலங்கை - பாகிஸ்தான் போட்டி டிக்கெட்டுக்களுக்கு ஏக வரவேற்பு.
காரணம் இலங்கை - ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டிக்கெட்டுகள் எங்கேயும் கிடைக்காது. ஊடகவியலாளனாக இருப்பது இந்த வகையிலும் அதிர்ஷ்டமே.

மீண்டும் உலகக் கிண்ணம் நம் நாடுகளுக்கு வர எப்படியும் பத்து,பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்பதால் கிடைக்கும் வாய்ப்பில் இம்முறை ஒரு போட்டியையாவது பார்த்துவிடுங்கள்.

இன்று மாலை டாக்காவில் இடம்பெறும் ஆரம்ப விழாவில் ஷங்கர் மகாதேவன் - எஹ்சான்- லாய் குழுவினருடன் , எனக்கு மிகப் பிடித்த ஆங்கிலப் பாடகர் பிரையன் அடம்சும் கலக்கப் போகிறார்கள். பார்க்கப் போகிறேன்.. தொலைக்காட்சியில் தான்.

இன்றைய ஆரம்ப விழாவில் ஒவ்வொரு அணிகளின் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் மட்டுமே கலந்துகொள்வர் என்று கூறப்படுகிறது.

***
நாளை நேரம் கிடைத்தால் ஊகங்கள்,எதிர்வு கூறல்களுடன் அணிகள் பதின்னான்கையும் பார்க்கவுள்ளேன்.
10 comments:

கன்கொன் || Kangon said...

சுடு பிட்சா...

Unknown said...

//மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்றுவிப்பாளர் ஒட்டிஸ் ஜிப்சன் இப்போதிருக்கும் formஇல் இலங்கையின் மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக ரங்கன ஹெரத்தைக் குறிப்பிடுகிறார்./
உண்மை தான்..
பார்க்க அப்படித்தான் தெரிகிறது..
முரளி பவர் பிளே ஓவர்களில் பந்து வீசுவதால் ஓட்டங்கள் அதிகம் போகின்றன..

கன்கொன் || Kangon said...

// நாளை நேரம் கிடைத்தால் ஊகங்கள்,எதிர்வு கூறல்களுடன் அணிகள் பதின்னான்கையும் பார்க்கவுள்ளேன். //

நாளை அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துவிட்டு அதை முதலில் செய்யவும். ;-))))


இரவு வீட்டில் சென்று விரிவாக பின்னூட்டுகிறேன். :-)

Unknown said...

படங்களை பார்க்கும் போது ஒரு ஒற்றுமை தெரிகிறது..
மைதானம் போலவே அண்ணாவின் "தொப்பையும்" மெருகேறி இருக்குது ...ஹிஹி

Subankan said...

// நாளை நேரம் கிடைத்தால் ஊகங்கள்,எதிர்வு கூறல்களுடன் அணிகள் பதின்னான்கையும் பார்க்கவுள்ளேன். //

அதுக்குத்தானே வெயிட்டிங் :)

வந்தியத்தேவன் said...

மைந்தன் சிவாவை வழிமொழிகின்றேன்

விக்கிரமாதித்தரே சும்மா வாய்கொடுக்காதீர்கள் அடிக்கடி கிண்ணம் இலங்கைக்குத் தான் என்கின்றீர்கள் உங்கள் எதிர்வுகூறல்கள் எப்படி என்பது உலகுக்கே தெரியும் ஹிஹிஹி.

தொப்பை ரசிகை said...

தொப்பை தான் ஆண்களுக்கு அழகு

கன்கொன் || Kangon said...

// ஆப்கானிஸ்தான் இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் முழுமை அந்தஸ்து பெறாத நான்கு அணிகளை விட சமயங்களில் பலம் வாய்ந்தது என்பது எனது திடமான எண்ணம். //

நிச்சயமாக.


// ஏனைய பெரிய அணிகளில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையிலிருந்து இந்தியாவிடம் படுமோசமாக சுருண்டதையும்0 பார்க்கையில் அரையிறுதி வரை இந்த அணி வருமா என்ற சந்தேகம் வருகிறது. //

மிக்க நன்றி. ;-)))


// ஏனைய பெரிய அணிகளில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையிலிருந்து இந்தியாவிடம் படுமோசமாக சுருண்டதையும்0 பார்க்கையில் அரையிறுதி வரை இந்த அணி வருமா என்ற சந்தேகம் வருகிறது. //

Better to try Bell out at opening position rather than their match winner. :-)


// ஆனால் இந்தியா இரு போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வென்றும் இரவில் துடுப்பெடுத்தாடிப் பயிற்சி பெற விழையாதது ஆச்சரியமாக இருக்கிறது. //

பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோணத்தொடரில் இறுதிப்போட்டிக்கு தெரிவான நிலையில் அத்தொடுர் முழுவதும் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணி பனி காரணமாக இலகுவாக வெற்றிபெற்றுக் கொண்டிருக்க இந்தியாவுடனான போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று சங்கா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது ஞாபகம் வருகிறது.

அப்படியான அணித்தலைமைப் பண்புகள் அருகிவருகின்றன...

Vathees Varunan said...

கிண்ணம் இலங்கைக்குத்தான்

Bavan said...

//// நாளை நேரம் கிடைத்தால் ஊகங்கள்,எதிர்வு கூறல்களுடன் அணிகள் பதின்னான்கையும் பார்க்கவுள்ளேன். ////

நீங்கள் இலங்கை சப்போர்ட்டர் எண்டால் நான் பயப்படுற மாதிரி ஒண்டும் நடக்காது எண்டு நம்பிறன்..:P

யார் யாருக்கு ஆப்பு அடிக்கப்போறீங்களோ..:P #விக்கி

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner