
நேற்று அலுவலகத்திலிருந்து புறப்படும் நேரம் 4மணி.
பாகிஸ்தானுக்கெதிரான T 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 127 ஓட்டங்களுக்குள் சுருண்டிருந்தது. பாகிஸ்தான் தொடர்ச்சியான தோல்விகளின் பின்னர் ஆறுதல் வெற்றியை பெற்றுவிடுமோ என்ற நிலை!
பாகிஸ்தானின் இன்னிங்ஸ் ஆரம்பித்து முதலாவது விக்கெட்டும் போக – மகிழ்ச்சியாக நான் சொன்னேன் 'பாகிஸ்தான் இன்றும் தோற்கப்போகிறது' உடனேயே நண்பர் ஹிஷாம் 'இல்லை... இன்று பாகிஸ்தான் எப்படியும் வெல்லும்' என்று உறுதியாக சொன்னார்.
கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் நாங்கள் வழமையாகவே வேடிக்கையாக எதிர்வுகூறிப் பந்தயம் பிடிப்பது போல, (எங்கள் பந்தயப்பொருட்கள் பணமல்ல, யோகர்ட், ஐஸ்கிறீம் அல்லது மதிய உணவாக இருக்கும்) நேற்றுப் பாகிஸ்தான் வென்றால் ஹிஷாமுக்கு நானும், பிரதீப்பும் தலா 3 யோகட் வாங்கித்தருவதாகவும், நாம் கூறியது போல அவுஸ்திரேலியா வென்றால் ஹிஷாம் எங்கள் இருவருக்கும் தலா 3 யோகர்ட் வாங்கித் தருவதாகவும் முடிவாயிற்று.
பெட்டு கட்டி முடிந்து வெளியே வந்து நான் வாகனத்தை எடுக்க, பாகிஸ்தானின் இரண்டாவது விக்கெட் போனது.
'அவுஸ்திரேலியா வெல்லும் என்ற நம்பிக்கையை விட பாகிஸ்தான் சொதப்பும் என்பதாலேயே பெட் பிடித்தேன்' என்றார் பிரதீப்.
128 என்ற இலகுவான இலக்கையே எட்ட முடியாமல் பாகிஸ்தான் சுருண்டது பரிதாபம். அக்மல் சகோதரர்கள் மட்டுமே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தார்கள். அணியிலிருந்து நிரந்தரமாகத் தூக்கப்படக்கூடிய அபாயத்திலுள்ள கம்ரன் அக்மல் எல்லோர் மீதுள்ள கோபத்தையும் பந்தின் மேல் காட்டியது போல அப்படியொரு விளாசல்.
ஆனால் அவுஸ்திரேலிய அணியின் மனம் தளராத போராட்டமும், தொடர்ந்து கொடுத்த அழுத்தமும் கம்ரன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் தடுமாறி - இலகுவாக இருந்து வந்த வெற்றியைப் பத்திரமாக நோகாமல் அவுஸ்திரேலியாவிடம் கையளித்தது.
பாகிஸ்தானியப் பந்துவீச்சாளர்களின் பிரயத்தனத்தையும், களத்தடுப்பாளர்கள் முதற்தடவையாகக் காட்டிய உற்சாகத்தையும் துடுப்பாட்ட வீரர்களின் அசட்டை வீணாக்கிவிட்டது.
மீண்டும் அணிக்குள் வந்த ஷோன் டெய்ட்டின் வேகமும், துல்லியமும் அபாரம்... 4 ஓவர்களில் 13 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
ஓய்வு அவரை மேலும் உற்சாகமாக்கியிருக்கிறது. ஷொய்ப் அக்தாரின் வேக சாதனையை முறியடித்து மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைப்பதாக சொல்லியிருக்கிறார்.
நேற்று அவர் வீசிய முதல் இரு பந்துகளும் மணிக்கு 156 கி.மீ..மூன்றாவது பந்து 160 .6 கி.மீ..
ஹிஷாம் தான் பாவம்... திங்கட்கிழமை 6 யோகர்ட் எமக்கு அழுதாக வேண்டும்.
நேற்று அவருக்கு இன்னொரு கவலை!
அது...
---------------------
எனது 'அசல்' விமர்சனப்பதிவு செம ஹிட்டாகியுள்ளது.
எனது முன்னைய பிரபல பதிவுகளெல்லாம் ஒரு நாளில் பெற்றுத்தந்த ஹிட் சாதனையெல்லாவற்றையும் உடைத்துவிட்டது அசல்.

நேற்று முழுவதும் மொத்தமாக 4000 ஹிட்ஸ். (என்னுடைய முந்திய அதிகூடிய ஹிட்ஸ் 3424)
இதுமட்டுமல்லாமல் தமிழிஷ்இல் 41 வாக்குகளுடன் முன்னணி இடுகையாக இன்று காலை வரை இருந்தது.
தமிழ் 10இல் சிறப்பு இடுகையாக இட்டிருந்தார்கள்.
தமிழ் மணத்தில் மட்டும் + க்கு சரிசமனாக –
பழனியிலிருந்து சுரேஷ் - கனவுகளே பதிவையும் "தேவன் மாயம் பதிவு: அம்பலமாகும் தமிழ்மணத்தின் ரகசிய...": கொஞ்சம் பாருங்க மகாஜனங்களே.
வருகை தந்தோர், வாக்களித்தோருக்கு நன்றிகள்.
என்னுடைய நேற்றைய 4000 ஹிட்ஸ் - ஹிஷாமிற்கும் இடையில் இருந்த சுவாரஸ்யமான ஹிட்ஸ் போட்டியில் அவருடைய முன்னைய சாதனையான 3697ஐ முறியடித்துள்ளது.
வாழ்த்துக்கள் சொல்லிய ஹிஷாம் 'எனக்கும் ஒரு அஜித் கிடைக்காமலா போகப்போகுது' எனக்கேட்டு SMS அனுப்பியுள்ளார்.
இந்த நம்பிக்கையும் போட்டியும் தான் ரொம்பவே பிடிக்குது! ஆனால் சோம்பல் பிடிச்ச ஹிஷாம் நேரம் கிடைச்சும் பதிவு போடுறாரில்லையே...
மூட் வருவதில்லையாம்...
என்ன மூடோ... எல்லாம் வயசு (போன) கோளாறு...
பல நாட்களாகவே எழுத ஆசைப்பட்டுக்கொண்டிருந்த ஆயிரத்திலொருவன் பற்றியும் நேற்று ஒருவாறாகப் பதிவிட்டுவிட்டேன் என்பது திருப்தி!
மனதிலுள்ள எல்லாவற்றையும் (முன்பு எழுத முடியாதிருந்த சிலவற்றையும் கூட) கொட்டிய திருப்தி.
அதற்கும் நல்ல வரவேற்பு.. இதற்காகக் காத்திருந்து எனக்கு தகவல் அனுப்பியோருக்கு இப்போ திருப்தியா?
-----------------
டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரப்படுத்தலில் முதலாம் இடம்பெறும் அணியை நிர்ணயிக்கின்ற டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்திய அணி பாவம்... பங்களாதேஷில் வைத்து காயத்தின் காரணமாக இழந்த டிராவிட், யுவராஜ் சிங்கைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய வீரர் லக்ஸ்மனையும் இழந்துள்ளது.
லக்ஸ்மன் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக அவசரமாக நேற்று அழைக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவுக்கும் இன்று காலையில் காயம். என்ன கொடுமை இது? யாரின் சாபம்?
இரண்டாவது விக்கெட் காப்பாளராக குழுவுக்குள் இருந்த ரித்திமான் சஹா ஒரு துடுப்பாட்ட வீரராக இன்று அறிமுகமாகிறார்.
அதெல்லாம் கிடக்கட்டும்... எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.
நீண்ட காலம் எதிர்பார்த்த எனக்குப்பிடித்த பத்ரிநாத் இன்று அறிமுகமாகியுள்ளார்.

தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் பற்றிப் பலதடவை பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். எப்போதோ அறிமுகமாகியிருக்க வேண்டிய நம்பகமான, 55க்கு மேற்பட்ட முதற்தரப் போட்டி சராசரி கொண்ட வீரர், இந்திய அணியின் பலம் வாய்ந்த மத்திய வரிசை காரணமாக இன்று தான் அறிமுகமாகியுள்ளார்.
STYLISHஆன, கூலான, சிறப்பாக சிந்தித்து, பதறாமல் விளையாடக்கூடிய ஒரு வீரர். சச்சின், டிராவிட், லக்ஸ்மன் ஓய்வுக்குப் பின்னர் பத்ரிநாத் தான் இந்திய மத்திய வரிசையை சுமக்கக்கூடியவர்.
பிரகாசிப்பார்.. பிரகாசிக்க வேண்டும்!
தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல formஇல் உள்ளார்கள். பார்த்து பத்ரி – பத்திரமாக, பக்குவமாக விளையாடுங்கள்.
ஜாக்ஸ் கல்லிஸ் இன்று ஒரு மைல் கல்லைத் தொட்டார்.. இன்று அவரும் அம்லாவும் இணைந்து தென் ஆபிரிக்க அணியைக் காப்பாற்றி,பின் இந்தியாவை இன்று முழுவதும் காயப்போட்ட இரட்டை சத இணைப்பாட்டம்(285 ) ஆடிய போது, கலிஸ் பெற்ற சதம் அவரது 34 ஆவது சதம்.
இதன் மூலம் கவஸ்கரையும்,பிரையன் லாராவையும் சமப்படுத்தியுள்ளார்.
பொன்டிங்கும் சச்சினும் மட்டுமே இவர்களை விட அதிகம் பெற்றுள்ளவர்கள்.
---------------------
இலங்கையில் மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பித்துள்ளன. 5 மாகாண அணிகளும், இளையோரை உள்ளடக்கிய ஒரு அழைப்பு அணியும்.
IPL - 3 போட்டிகள் மார்ச் மாதம் ஆரம்பிக்கும் வரை அத்தனை முன்னணி இலங்கை வீரர்களும் இந்தப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.
5 மாகாண அணிகளுக்கும் franchiseஅடிப்படையில் மாகாணங்களின் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. (வடக்கு, கிழக்கு அடுத்த வருடம் வருமாம் என்கிறது SLC)
தலைவர்கள்
குமார் சங்கக்கார, (மத்திய மாகாணம் - கந்துரட்ட), உபுல் தரங்க (தென் - ருகுணு), T.M.டில்ஷான் (மேல் மாகாணம் தெற்கு – பஸ்னாகிர தகுண), திலின கண்டம்பி (மேல் மாகாணம் - வடக்கு – பஸ்னாகிர உதுர), ஜெஹான் முபாரக் (வடமேல் - வயம்ப)
உள்ளூரில் பிரகாசிக்கும் புதிய, இளம் வீரர்களையும் அவதானிப்போம்.
7 comments:
ஆரம்பத்தில் அவுஸ்ரேலியா 2 விக்கற்றுக்களை எடுத்ததும் அவுஸ்ரேலியா வெல்லும் என்பதை உறுதி செய்தாலும் கம்ரன் அக்மால் என் வயிற்றில் அசிற்றைக் கரைத்துக் கொண்டிருந்தார். இறுதிப் பந்துப் பரிமாற்றம்வரை வெற்றி பாகிஸ்தான் பக்கமே இருந்தது. இறுதிப் பந்துப் பரிமாற்றத்தின் முதற்பந்தில் உமல் அக்மல் ஆட்டமிழந்தது தான் ஆப்பாக அமைந்தது.
// ஷொய்ப் அக்தாரின் வேக சாதனையை முறியடித்து மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைப்பதாக சொல்லியிருக்கிறார் //
?????
அக்தரின் வேகம் 161 சொச்சம் என்று நம்புகிறேன்.
பதிவு ஹிட்டா?
இதையெல்லாம் இப்போதும் பார்க்கிறீர்களா?
ஓ! அதுதான் இப்போதும் பழைய உற்சாகத்துடன் எழுதுகிறீர்களோ... ம்... ம்...
3 யோகர்ட்டயும் நீங்களா குடிக்கப் போறியள்? உதவிக்கு ஆள் வேணுமா?
கிறிக்கின்போவில் இன்று ஒரு இரசிகர் தெரிவித்த கருத்து இரசிக்கத்தக்கது.
பல வருடங்களாக அணிக்குள் இந்தா வருகிறேன் என்று கதவைத் தட்டிக்கொண்டிருந்த பத்ரிநாத் தனது அறிமுகத்தை மேற்கொள்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த சாகாவும் அறிமுகத்தை மேற்கொள்கிறார். வாழ்க்கை வித்தியாசமானது.
உள்ளூர் போட்டிகளில் ஒரு கண் உண்டு... பார்ப்போம்... :)
அது சரி நமக்கு 100 hits வாரத்துக்கே
பெரும் பாடாய் இருக்கு
ஆமா கிசாம் என் இப்படி இருக்கார்
3 யோகட் சாப்பிட கஷ்டமாக இருந்தால் என்னை கூப்பிடவும்.
பந்தயக்காரர்கள் பிரச்சினை முடிந்தது என பார்த்தால் இன்னும் தொடர்கிறீர்களே
ஒரு மாதிரி அஜித் ரசிகர்களை கவர் பண்ணிட்டீங்க..இப்பிடியே நம்ம சுறாவரும் போது சுறா ஒரு சிறா எண்டு ஒரு பதிவை போடுமாறு வேண்டிக்கேட்கிறோம்.. சுறா ஒரு நெத்தலி எண்டு இப்போதே எழுதி வைத்துவிட்டதாக கேள்வி? :P
ஹிட் சாதனைக்கு வாழ்த்துக்கள்.. அசல் பார்த்தபின் உங்கள் விமர்சனங்களுக்கு பின்னூட்டுகிறேன்..
லோஷனும் ஹிசாமும் தான் இலங்கையின் முக்கிய கிரிக்கட் பந்தயக்காரர். சப்ளைக்கு பிரதீப் ...
:P
ஹிட்ஸ் தந்த அசலுக்கு வாழ்த்துக்கள்.
(இப்போது, காரணங்கள் ஐந்தல்ல... ஆறு. புரியும் என எண்ணுகின்றேன். :) )
லோஷன்..,
தினமும் உங்கள் இடுகைகளை வாசிப்பவன் நான்.(புதிதாக ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று தினமும் வருபவன் நான்) ரசித்து படிக்க தெரிந்த அளவுக்கு ரசிக்கும்படி எழுத வராது எனக்கு. உங்களது கிரிக்கெட் பதிவுகளை படிக்கும்போது இத்தனை தகவல்களை எடுத்து எப்படி எழுதுகிறார் என்று ஆச்சரியப்படும் உங்களின் சாதாரண(சேவாக் கூறிய பங்களாதேஷ் அல்ல)ரசிகன் நான்.பிளாக்கை படித்தால் மட்டும் போதாது,அதில் உள்ள பிடித்தவை,பிடிக்காதவை,நக்கல்,நையாண்டி மற்றும் பலவற்றை எழுதிய உங்களுக்கு சேர வேண்டும் என்பதற்காக படித்த(உங்களின் இடுகைகளை) என் பதில் இது.நன்றி.
S.Ramesh
Post a Comment