கோ கா கூ - ஞாயிறு ஸ்பெஷல்

ARV Loshan
19

கோவா

கடந்த வாரம் கோவா பார்த்தேன்..
பலர் பலவிதமாக கோவா பற்றிப் பேசிவிட்டார்கள்.. சிலர் ஹோமோ செக்சுவல் படம்,, குடும்பத்தோடு போகாதீர்கள் என்று பயமுறுத்தி வேறு இருந்தார்கள்.எல்லோரும் வயதுவந்தவர்களாக (என் குட்டி மகன் தவிர) இருக்கையில் இதென்ன பெரிய விஷயம்?அதுவும் படுக்கையறை அசைவுகளையே நடனமாக சின்னத்திரை வழியே கூட வீட்டுக்குள் கொண்டுவந்த பிறகு கோவா என்ன பெரிய விஷயம் என்று மனைவியுடனேயே போயிருந்தேன்.

கதை எனப் பெரிதாக எதுவுமில்லை.வழமையான தனது நட்சத்திரப் பவர் இல்லாத நடிகர் பட்டால நகைச்சுவைக் கடிகளுடன் சிரிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.ஆனால் சென்னை 28 ,சரோஜா ஆகியன தந்த ரசனை சிறப்போ,சிரிப்பின் தரமோ இதில் இல்லை எனத் தான் சொல்லவேண்டும்.

யுவன் ஷங்கர் ராஜாவும் முன்னைய இரு படங்களின் அளவுக்கு இதில் முன்னின்று உழைக்கவில்லை.

பிரேம்ஜி அண்ணனின் ஆசீர்வாதத்தோடு படத்தின் ஹீரோவாக முன்னிறுத்தப்படுகிறார்.குழப்பமாக ஆங்கிலம் பேசும் ஜெய்யும்,ப்ளே போயாக தன்னைக் காட்டிக்கொள்ளப் பார்க்கும் வைபவ்வும் பல காட்சிகளில் ரசிக்கவே வைக்கிறார்கள்.
இவர்களுக்குப் பிறகு தான் சின்ன வயதில் அணிந்த அதே ஆடைகளோடு தூக்கலான கவர்ச்சியோடும், கதை பேசும் கண்களோடும் வரும் பியாவும், ஜெசிக்கா அல்பாவாக வரும் அந்த வெள்ளைக்காரப் பெண்ணும், சிக்ஸ் பக் காட்டுகின்ற அரவிந்தும் மனதில் நிற்கிறார்கள்.

கோவா என்றாலே பீச் என எங்களுக்கு ஞாபகம் வருவது போய், வெங்கட் பிரபு புண்ணியத்தினால் இனிமேலும் பிகினி பெண்களும், குடியும் கும்மாளமும் தான் ஞாபகம் வரப் போகின்றது..
ஆனாலும் பார்க்கும்போது நல்லாத் தான் இருக்கு..

ஜாக்-டானியல் உறவு படு சீரியசாக அவர்கள் நடித்தாலும் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள்.எனினும் அவர்களுக்கிடையிலும் காணப்படும் உறவு பற்றிய பொறாமை,possesivness ஆகியனவற்றை இயக்குனர் காட்டியிருக்கிறார்.

பிரேம்ஜி இன்னும் எவ்வளவு காலம் தான் முன்னணி ஹீரோக்களின் பஞ்ச வசனங்களை வைத்து தன் பிழைப்பை ஓட்டப் போகிறார்?
வெங்கட் பிரபுவின் துளி ஐடியாவை வைத்து தமிழ்ப்படம் என்ற கோட்டையே கட்டிவிட்டார்கள்.
ச்நேஹாவும் சில காட்சிகளில் கிறங்கடிக்கிறார்.ஆனால் அருமையான நடிகை இப்படி அரைகுறை சரக்கானது தான் விதியோ?இவர் திறமையை வெங்கட் பிரபு நல்லாவே 'பயன்படுத்தி' உள்ளார் எனத் தெரிகிறது.
படத்தின் இறுதிக்காட்சி உண்மையில் அசத்தல்.அதிலும் சிம்புவின் ஐடியா கலக்கல்.

பார்க்கப் பரவாயில்லை.. ரசிக்க ஓகே என்று சொல்லலாமே தவிர இதை உலக தரப்படம் என்று சொல்ல நான் என்ன சாருவா?




காப்பாத்துங்கோ..

இப்போது எனது இரண்டு வயதுக் குழப்படி செல்ல மகன் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று இது.
நாம் பேசும் வார்த்தைகள் பலவற்றை டக்கென்று எடுத்துக் கொள்ளும் இவன் நிறையப் பேச முயல்கிறான்.
சாப்பாடு,குளி,பேனா, புக்,டோய்ஸ்,வேணாம் போன்ற சின்ன சின்ன முக்கியமான வார்த்தைகளோடு இந்த 'காப்பாத்துங்கோ'வும் அடிக்கடி வருகிறது.

துறு துறுவென்று எல்லா இடமும் ஓடிப் போய் ஒளிந்துகொண்டும், எங்கேயாவது மேசை,கட்டில்,ஜன்னல் என்று உயரமான இடங்களில் ஏறி நின்றும் விளையாட்டுக் காட்டும் அவன் தன்னால் இறங்கவோ,சமாளிக்கவோ முடியாவிட்டால் "அப்பா காப்பாத்துங்கோ" அல்லது "அம்மா காப்பாத்துங்கோ" என்று கூப்பிடுகிறான்.

நாங்கள் அதிகம் வீட்டில் பயன்படுத்தாத வார்த்தையான இதை எங்கிருந்து பொறுக்கி எடுத்தான் என்று தேடினால்...
சுட்டி டிவி யில் ஒளிபரப்பாகும் ஜி பூம் பாய் என்ற தமிழ் கார்ட்டூனிலிருந்து..

இன்னும் என்னென்ன சொல்லி எம்மை ஆச்சரியப்படுத்தப் போகிறானோ?





கூட்டணி,கூட்டு & கூத்து

தேர்தல் பரபரப்பு ஓவொரு நாளும் தீப்பிடித்தது போல பரவுகிறது..

கொள்கைகள் எப்படி இருந்தாலென்ன, கோட்பாடுகள் என எவை இருந்தாலென்ன.. அதெல்லாம் கிடக்கட்டும் போ என்று கூட்டணிகள் பலப்பல பெயர்களில் உருவாகியுள்ளன.சின்னங்கள்,பெயர்கள் பற்றி வாக்காளர்கள் மட்டும்மல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே குழப்பம் வந்துவிடும்.


பின்னே, கொழும்பு மாவட்டத்தில் 19 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 22 அரசியல் கட்சிகளும்,16 சுயேச்சைக் குழுக்களும் மொத்தம் 836 வேட்பாளர்களைக் களமிறக்குகின்றன.

ஒரு சில உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ள அம்பாறை(திகாமடுல்ல) மாவட்டத்தில் கட்சிகளும்,குழுக்களுமாக 66 போட்டியிடுகின்றன.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 15 கட்சிகள்&12 சுயேச்சைக் குழுக்கள்..
திருகோணமலையில் 17 கட்சிகள்&14 சு.குழுக்கள்..

வாக்குகள் பிரிந்து,பிரதிநிதித்துவம் குறைந்து போனால் எல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை.
போகிறபோக்கில் வாக்காளர்களை விடப் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கூடிவிடும் போல.

கூட்டுக்கள்,குத்து வெட்டுக்கள் எல்லாம் கடைசி நேரம் வரை மாறிக்கொண்டே இருக்கும்.

இம்முறை அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் குழப்பங்கள் சிறுபான்மை தமிழ்க் கட்சிகளிடத்திலேயே ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு.. கடந்த தேர்தலில் வடக்கு-கிழக்கில் மொத்தமாக 22 உறுப்பினர்களைப்பெற்று மிகப்பலமாக நின்ற இந்தக் கட்சி காலவோட்டத்திலும், கால மாற்றத்திலும் இப்போது சின்னாபின்னமாகிப் பல வடிவங்களிலும் தேர்தல் காண்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கடந்த முறை அதிக வாக்குகள் பெற்றும் வாய்ஜாலம் மட்டும் நிகழ்த்தியவர்கள் அகற்றப்பட அவர்கள் தனி அணியாகக் களம் காண்கிறார்கள்.
ஆனால் இத்தனை சுயேச்சைகள் ஏன்?
அதுவும் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த 20 சதவீத வாக்குப் பதிவு கண்ட பிறகும்.

காசு கூடிப்போனால் கட்டுப்பணம் இழப்பது பொழுதுபோக்கோ?

வாக்குப் பிரிப்பான்கள்,செயலற்றவர்கள்,கடந்த முறை எதுவும் செய்யாதொரின் கூத்துக்களை அறியாதோர் அல்ல மக்கள்.போலிகளா இனங்கண்டு கொள்ள்ளலே காலத்தின் தேவை.

கொழும்பிலும் தமிழர் வாக்குகள் உடைபடவே போகின்றன. ஆனால் இங்கே ஓரளவு சுலபம்.ஆளும் கட்சிக்கு வாக்காக இருந்தால் தமிழ் தெரிவுகள் அளவோடு இருக்கின்றன.எதிரணியாக இருந்தாலும் மூன்று தெரிவுகள் உள்ளன.
முஸ்லிம் வாக்காளர்களுக்கும் கொழும்பைப் பொறுத்தவரை குழப்பம் இருக்காது.

ஆனால் அம்பாறை,மட்டக்காளப்பில் தமிழ் பேசும் இனத்தவர் இருவருக்குமே வாக்குப் பிரிப்பின் மூலம் சர்வநாசம் நிச்சயம்.
இப்போது சொலுங்கள் எமக்கு நாமே ஆப்பு வைக்கின்றோம் என்பது சரி தானே?

அவசரப்பட்டு அரசியல் எதிர்வு கூறாததும் நல்லதாவே போச்சு..
நாளையோ,இல்லை செவ்வாயோ ஒரு விரிவான தேர்தல் அலசல் பதிவிடலாம் என எண்ணியுள்ளேன்.. எதோ என்னால் முடிந்த அரசியல் கடமை.

இன்னொரு கூத்து இரண்டாவது நாளாக இன்று பார்த்து முடித்தேன்..
பாசத்தலைவனுக்கு ஒரு பாராட்டு விழா..
அய்யோ அம்மா.. பாசமோ பாசம்.. அப்படியொரு பாசம்..
அது பற்றி தனியொரு பதிவே இடவேண்டும் எனுமளவுக்கு பார்த்து உருகிப் போன பாசம்..


இனிவரும் நாட்களில் வரப்போகும் பதிவுகள்..

விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனம்
பொது தேர்தல் பார்வை
பாசத்தலைவா.. ;)

Post a Comment

19Comments

Please Select Embedded Mode To show the Comment System.*