ஆயிரத்தில் ஒருவன் - ஆழமாக ஒரு அலசல்

ARV Loshan
48



படம் வெளிவந்து மிகத் தாமதமாக விமர்சனம் வழங்குவது எனக்கொன்றும் புதிதல்ல என்பதானாலும், இது பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பதனாலும் ஆயிரத்தில் ஒருவன் பற்றி எனது பார்வையை கொஞ்சம் ஓய்வு கிடைத்த இன்று பதிகிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் வெளிவந்த போதே, அது மனதில் ஏற்படுத்திய பல எதிர்பார்ப்புக்கள் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன்.

எந்த ஒரு விமர்சனமும் வாசிக்காமல்,படம் பார்த்த யாரொருவரின் கருத்தும் கேட்காமல் படம் பார்க்க செல்லும் எனது வழக்கத்தை இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது நல்லதாவே போயிற்று.இல்லாவிடில் வேறொருவரின் பார்வை கொஞ்சமாவது தாக்கம் செலுத்தியிருக்கும்.

அநேகர் பார்த்திருப்பீர்கள் என்பதனால் பார்த்தவர்கள் படித்தால் அதிகளவில் புரியும் விதத்திலேயே எனது இந்தப் பதிவு.

தமிழில் ஒரு வித்தியாசமான முயற்சி எனப் பட வேலைகள் தொடங்கும்போதும், பாடல்கள் வெளியிடப்பட்ட போதும் சொன்னதை படம் வெளிவந்து நிரூபித்திருக்கிறது.

சோழர் காலத்தில் ஆரம்பித்து கதை நிகழ்காலத்திலும் பயணித்து சோழரையும் நிகழ்காலத்தையும் சங்கமித்து முடிக்கிறது.

இப்படியான கனவு,கற்பனைத் தன்மையான படங்கள் தமிழில் வருவதில்லையே என்ற எனது ஏக்கத்தை கந்தசாமி விமர்சனத்தின் போது சொல்லி இருந்தேன். செல்வராகவன் படைத்து தமிழில் இன்னொரு புதுவழி காட்டி இருக்கிறார்.
இதை கண்ட லொஜிக்,லொட்டை,லொசுக்கு சொல்லாமல் சிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் இது போன்ற இனி வரும் படங்களுக்கு வரவேற்பை நாம் அளிக்கவேண்டும்.

எனினும் மிகப் பெரிய நிதித் தொகையுடன் எடுக்கப்பட்ட படம் என்பதை அறிந்தும் நீண்ட நாட்கள் எடுத்த படப்பிடிப்பும்,கடைசி நேர அவசரமும் சில கிராபிக்ஸ் காட்சிகளின் சொதப்பலில் தெரிகிறது.
பல இடங்களில் செல்வராகவன் குழுவினர் காட்டிய சிரத்தை,நேர்த்தி சில இடங்களின் ஓட்டைகளால் அடிபட்டு விட்டிருக்கிறது.


படத்தில் என்னை மிக லயிக்க செய்த,ஆச்சரியப்படுத்திய இருவர் ஒளிப்பதிவாளர் ராம்ஜியும், கலை இயக்குனரும் தான்.செல்வா கற்பனையில் கொண்டுவந்த பிரமாண்டம்+பிரமிப்பை எமக்குள் ஏற்படுத்துவோர் அவர்கள் தான்.

மூன்று ஆண்டுகள் ஏன் எடுத்தது என்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியாது எனினும், படம் சொல்கின்ற சில வரலாற்றுப் பின்னணிகள், இறுதிக் கட்டத்திலே உருவகமாக உணர்த்தப்படுகின்ற சில விஷயங்கள் பற்றிய தகவல் திரட்டுக்கள், சோழர் கால மொழிவழக்கு போன்ற தேடலுக்கு இத்தனை நாட்கள் முன்பே எடுக்கப்பட்டிருந்தால் தகும் எனவே தோன்றுகின்றது.

சோழர் காலத் தமிழும், அந்த மொழி உச்சரிப்புக்களும், கொற்கை அருங்காட்சியகம் காப்பாளராக (curator) இருந்து ஓய்வு பெற்றவரும், பேராசிரியர்.நா.வானமாமலையின் 'ஆராய்ச்சி' குழுவில் முக்கிய உறுப்பினருமான ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரனின் பின்னணி உழைப்பின் பலன் என அறிந்தேன்.

சோழரின் சில நடத்தைகள், அவர்கள் காட்டப்படும் விதம் குறித்து சொல்லப்படும் கருத்துக்கள் பற்றிப் பின்னர் வருகிறேன்..

நடிக,நடிகையர் பற்றி...

படத்தின் ஹீரோவாக பெயரிடப்பட்டுள்ள கார்த்தி, தனக்கு வழங்கப்பட்ட சில இடங்களில் சிக்சர் அடிக்கிறார்.கையில் MGR என்ற பச்சை ஒருபக்கம்.. முதல் காட்சியிலேயே அதோ அந்தப் பறவை பாடலுக்கு MGR பாணியில் ஒரு கலக்கல் நடனம் என்று அசத்தலாக ஆரம்பிப்பவர், தொடர்ந்து வரும் ஒரு சில காட்சிகளில் ஜொலித்தாலும் பிரதான பாத்திரம் என்ற பெருமை ரீமாவுக்கு சென்று விடுகிறது.

இரண்டு பேரிடமும் வழிவதும்,பரிதாபமாக சில இடங்களில் தெரிவதும், கடைசிக் கட்ட ஹீரோயிசக் காட்சிகளும் கார்த்தியைக் காட்டினாலும், அந்தத் தாடியும் முரட்டுத் தோற்றமும் பருத்திவீரனையே கண் முன் கொண்டு வருகிறது.

ரீமா சென்.. இவர் தான் படத்தின் அச்சாணி. தமிழில் ஒரு LARA CROFT மாதிரி கம்பீரமாக, பல நேரங்களில் பயமுறுத்தும் கவர்ச்சியோடு வலம் வருகிறார்.

கச்சிதமான தெரிவு.கண்ணில் கொஞ்சம் கோபம்,கொஞ்சம் வெறி,கொஞ்சம் காமம் என அதகளப்படுத்துகிறார்.
சோழ மன்னனைக் கவிழ்க்க ஆடும் காம ஆட்டம் இருக்கிறதே.. அப்பப்பா.. என்ன ஒரு துடிப்பு.உடல் முழுவதும் நடிக்கிறது.வனமும்,காமும் இணைந்து அவர் காட்டும் பாவங்கள் சரசத்தின் பட்டப்படிப்புகள்.

சண்டைக் காட்சிகளிலும் அவரது உடல்வாகு கை கொடுக்கிறது.கண்கள் இவருக்கு சாதாரணமாகவே வில்லத் தனமானது.இதிலே கை கொடுக்கிறது.
அண்ட்ரியா பற்றி விசேடமாக சொல்ல ஏதுமில்லை. சோழத் தமிழ் பாசுரங்களை வைத்து வழி சொல்கிறார்.அழகாக பல இடங்களில் சோ ஸ்வீட் என்று கிள்ளும் ஆசை வரும் அளவுக்கு அழகாக இருக்கிறார். செல்வா - சோனியா எப்படிப் பிரிந்தார்கள் என்று இவரை சில ஆடைகளில் பார்த்தால் தெரிகிறது.

பார்த்திபன் - சோழ மன்னனாக கம்பீரமாக இருக்கிறார்.சில இடங்களில் அருவருக்கவும் வைக்கிறார்.நடனமாடும் இடங்கள் எங்களை சோதிக்கின்றன.கண்களால் பேசும் இடங்களும்,அழுத்தமான தமிழ் உச்சரிப்பும் அருமை.

கம்பீரமும், கண்கள் பேசும்,உடலசைவு காட்டும் பாவனைகளும் லயிக்கவைக்கின்றன.கடைசிக் காட்சிகளில் இந்த அம்சங்களால் அனைவரையும் பின் தள்ளி முக்கிய பாத்திரமாகிறார் பார்த்திபன்.
இறுதிக்காட்சியில் "முன்னமே சொன்னால் பயந்திடுவோம் என நினைத்தனையோ" என்று கேட்கும் இடத்திலும், உயிரை விடும் இடத்திலும் எம்மையும் உருக வைக்கிறார்.

இவர்களைவிட அழகம்பெருமாள் மட்டுமே குறிப்பிடத்தக்க மற்றும் ஒரு பாத்திரம்.பிரதான பாத்திரங்களே முழுக்க முழுக்க கதையுடன் பயணிப்பதும்,சோழர் வாழும் கற் குகையும்,அவர்கள் வாழ்க்கை அவலங்களும் இன்னும் பாத்திரங்களாவதும் செல்வாவின் இயக்குனர் முத்திரை.


படத்தை உயிடோட்டமாக்குகின்ற இன்னொரு அம்சம் ஜி.வீ.பிரகாஷின் இசை..மூன்று பாடல்கள் மட்டும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது படத்தை செறிவாக்குகிறது.
அதிலும் தாய் தின்ற மண்ணே, எப்படி எடுப்பார்கள் என நினைத்தேனோ அப்படியே படமாகியிருக்கிறது.. படத்தில் உணர்ச்சியை ஊற்றும் இடம் அது.

பின்னணி இசையிலும் பின்னி எடுத்திருக்கிறார் ஜி.வீ.பயணத்தில் எம்மையும் அழைத்து செல்கிறது இசை.தேவையான இடங்களில் தேவையான இசைக்கருவிகளின் ஓசைகள் சூழ்நிலையை உணர்த்தும் குறிகாட்டிகள்.
சோழர் வருமிடமேல்லாம் மெல்லிய சோக யாழும்,யுத்தத்தினதும்,அவலத்தினதும் சோகத்தைக் காட்ட பறை என்று இசை படத்தின் உயிர்நாடி.
பெம்மானே பாடல் முழுமையாக இல்லாமல், போய் வா ஏந்தலே வரிகள் மட்டும் வரும் இடம் மனதைப் பிசைகிறது.

யுவன் கூட இவ்வளவு நன்றாக இந்தப் படத்தைப் புரிந்து இசையமைத்திருப்பாரா என்பது சந்தேகம் தான்.

சில இடங்களில் குழப்பத்தையும் எரிச்சலையும் தந்தவை..
அண்ட்ரியா ஓலை சுவடிகளை வாசிக்கும் நேரத்தில் அந்த வாசகங்கள் காதில் தெளிவாக விளங்க விடாமல் இரைச்சல்..
சோழ மக்கள் வாழும் இடத்திலும் குகை சூழல் என்று காட்டுவதற்கோ என்னவோ சில பல வசனங்கள் தெளிவாகக் கேட்க முடியாமல் உள்ளது.
ஏற்கெனவே சோழர்காலத் தமிழ் பாதி புரியாத நிலையில் இது வேறா?

குறைகள் தவிர்ப்போம் என நினைத்தாலும், பல இடங்களில் இரட்டை அர்த்தம் எல்லாம் இல்லாத நேரடி பாலியல் சம்பாஷனைகள்,கொடூரமான வன்முறைகள் என்பன தணிக்கையில் அகப்படாமல் தப்பியது பெரும் ஆச்சரியமே.
இந்த ரத்தம் தெறிக்கும் வன்முறைகள் கொஞ்சமாவது குறைந்திருந்தால் குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் அளவுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஓடி இருப்பான்.

ஆங்கிலப் படங்கள் பலவற்றிலிருந்து ஏராளமான ஐடியாக்களை சுட்டுப் பயன்படுத்தி இருக்கிறார் செல்வா.
Apocalypto, Mummy returns,300.. இப்படி பல.. ஆனாலும் அவற்றில் கிராபிக்ஸ் நேர்த்தி இருந்திருக்குமானால் விமர்சிக்கப்பட்டிருக்கா..

படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பு இருந்தாலும் இந்தக் குறைகள் இடைவேளைக்கு முன் தான் அதிகம் இருக்கின்றன.இடைவேளை விடப்படும் இடம் உண்மையில் எம்மைப் பைத்தியமாக்கும் இடம் தான்.
அதன் பின் கார்த்தி,ரீமா,அன்றியா சோழர் வாழும் இடம் சென்ற பிறகு தான் என்னைப் பொறுத்தவரை சூடு பிடிக்கிறது.

லொஜிக் மீறல்கள் இப்படியான படங்களில் ஏற்றுக் கொள்ளப்படவேண்டியவை என்பதால் நான் அதுபற்றி அக்கறை கொள்ளமாட்டேன். சாரு போன்ற சகலமும் அறிந்தவர்களே இதில் முட்டையில் மயிர் பிடுங்குவது ஆச்சரியமே..

பாண்டிய-சோழப் பகையை இவ்வளவு கோரமாகவும்,பழிவாங்கும் உணர்வை இத்தனை மோசமாகவும் காட்டி இருக்கக்கூடாது என்று எல்லோர் போல நான் யோசித்தாலும், தமிழர்களின் வரலாறு அப்படி சொல்லுதில்லையே.. தமக்குள்ள எப்பொதும் மோதிக்கொண்டும், ஒருவரை ஒருவர் எந்த விதத்தில் மோசமாக அழிக்கலாம் என்பதிலுமே வரலாறுகள் சென்றுள்ளதே.. பரிதாபம் இன்னமும் எம்மினம் திருந்தவில்லை.

படத்தின் கடைசிக் கட்டங்களின் விஷயங்கள்,விளக்கங்களுக்கு வருகிறேன்..

ஈழப்போரின் கடைசிக் கட்டங்களில் நடந்த அவலங்களைத் தான் இயக்குனர் சோழர்கள் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் நடக்கும் அழிவுகளும் அழிப்புக்களும் காட்டப்படுவதாக ஒரு சாரார் சொல்லிவருகின்றனர்.
எனினும் இயக்குனர் செல்வராகவன் ஒரு பேட்டியில் ஈழப்போரின் இறுதிக்கட்டத்துக்கு முன்னதாகவே தான் இந்தக் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டதாகக் கூறியதை ஆதாரமாக வைத்துக் கொண்டு இல்லை இது தற்செயல் தான்.இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று இன்னும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

செல்வராகவன் பொய் சொல்கிறார் எனபதை விட சிக்கல்,சர்ச்சைகளை தவிர்த்துக்கொள்ள விரும்புகிறார் என்ற கோணத்தில் நோக்கலாமே..

எனினும் ஆழமாகவும்,அனுபவ ரீதியாகவும் பார்த்தால்...
இதை ஒருவகை உருவக,எடுத்துக்காட்டு விமர்சனப் படமாக்கலாகவே நான் காண்கிறேன்.

புலிக்கொடி உடைய சோழர்கள் இலங்கையின் வடபால் தமிழராகக் காட்டப்பட்டால்.. மன்னர் யார் என்ற கேள்விக்கு இடமில்லை.
சோழர்கள் குகையில் அவலவாழ்வு வாழ்வது,மன்னரைப் பலர் விமர்சிக்கவும்,அவருடன் மோதிக்கொள்ளவும் முனைவது,தங்கள் பஞ்சம்,வறுமை பற்றி மன்னர் அறியாதுள்ளாரே எனப் புலம்புவது எல்லாம் உள்ளக விமர்சனங்கள்.
கடைசிக்கால ஈழப் போர் பற்றி எழுந்த விமர்சனங்கள் அனைவரும் அறிந்தவையே..

ரத்தம்,பலி,சித்திரவதைகள்,எதிரிகள்,ஒற்றர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்படல்,சொந்த மக்கள் காட்டும் பயத்துடன் கூடிய மரியாதை,க்ளாடியேட்டர் பாணியிலான வீர விளையாட்டுடன் கூடிய வதை என்று குரூரமாக காட்டப்படும் அனைத்துமே ஒருவிதமான மாற்றுக்கருத்துடனான உருவக விமர்சனங்கள் என்றே எடுத்துக் கொள்ளவேண்டியதாயுள்ளது.

அது சோழர்களுக்கு என எடுத்துக் கொண்டாலும் சரி, ஈழப்பக்கம் என்றாலும் சரி,அடக்குமுறைகளுக்குள்ளான,ஒடுங்கிவாழும் ஒரு சமூகத்தின் வன்மம் கலந்த குரூர உணர்வுகள் என எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

ராஜகுரு நோய்வாய்ப்பட்ட பின்னர் மன்னர் ஏமாந்துபோவது
சோழ மக்கள் விரைவில் தஞ்சை புறப்படுவதாக மன்னர் அறிவிக்கும் நேரத்தில், 'இத்தனை நாளாக என்னைப் பார்த்து நீங்களும்,உங்களைப் பார்த்து நானும் மிரண்டு கிடந்த காலம் போகட்டும்' என்னும் இடம்,
யுத்தத்தில் பாரம்பரிய முறையில் சோழர்களும், இந்தியப் படை துப்பாக்கிகள்,குண்டுகளோடு மோதுவதும்..
நீரில் விஷம் கலந்து சோழர்களை சாகடிப்பது.. (விஷ வாயு தாக்குதலை யாரும் மறந்திருக்க மாட்டோம் தானே)
படத்தில் வரும் இந்தியபடைகள் தாக்குதலுக்கு முன்பதாக ஆகாய மார்க்கமாக 'இந்தியாவிலிருந்து' மேலதிக துருப்புக்களை அழைப்பது..

இந்த இடங்கள் மூலமாக இயக்குனர் காட்டுவது என்ன?

சோழர் படை தோற்கடிக்கப்பட்டு மன்னர்,தூதுவனாக மாறிப்போன கார்த்தி, சோழ மக்கள்,பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்படும் இடத்தைப் பாருங்கள்.. இட அமைப்பு..
ஆறு,கடல்,தீவு சேர்ந்தது போன்ற ஒரு நில அமைப்பு..

முள்ளிவாய்க்கால்,நந்திக்கடல் ஞாபகம் யாருக்கும் வருமே..

பாலியல் வன்முறைகள்,கொத்துக் கொத்தாய் உயிர்ப்பலி நிகழ்தல்..
சோழ மன்னன்/தலைவன் அடித்துக் கொள்ளப்படும் இடத்தில் கூட,அவன் கடல் பக்கமாக நகர்ந்து சென்று மரிக்கும் அந்தக் கணங்கள்..கடலிலே தங்களை ஏற்றிக் செல்ல வரும் கப்பல்கள் அவன் மனக்கண்ணில் விரிகின்றன.. நம்ப வைக்கப்பட்டு எமாற்றப்பட்டோமே என்ற வலியுடன்,இயலாமையுடன் அவன் வீழ்ந்து மடிகின்றான்..

அப்போதும் அவன் தலையிலும்,கண்ணுக்கு மேலே நெற்றியிலும் இரத்தக் காயங்கள்.. ஏதோ ஒரு ஞாபகம் உங்களில் ஒரு சிலருக்காவது வரவில்லையா?

எனக்கு மிக வலித்தது..

இடைவேளைக்குப் பிறகு கையில் வைத்திருந்த மிக்சர்,கொரிப்பான்கள் கூட உண்ண முடியாமல் அருகில் வைத்துவிட்டேன்..

இறந்த தங்கள் மன்னன் உடல் தாங்கி வீரர்கள் அணியணியாய் நீருக்குள்ளே இறங்கும்போது பின்னணியில் ஒலிக்கும் பெம்மானே பாடலின் "போய் வா ஏந்தலே" வரிகள் ஓலமாய் நெஞ்சுக்குள்ளே இன்னும் எதிரொலிக்கின்றன..

மன்னன் மகன் ஒருவனும், தூதுவனாய் வந்தவனும் அல்லது தளபதி எனக் கருதப்படக் கூடியவனும் மட்டும் தப்புவதாக இயக்குனர் காட்டுவது நம்பிக்கைக்கான ஒரு தூண்டுதாலா?
சோழன் பயணம் தொடரும் என்பது பலரின் மனதில் இன்னும் இருக்கும் விழுந்துவிடா நம்பிக்கை.அதை ஏமாற்றிவிடாமல் இருக்க செல்வா முனைந்துள்ளாரா?
மன்னன் முடிந்தாலும் மண்ணுக்கான தேடல் முடியா என்பதா அவர் சொல்லும் கருத்து?


இது உண்மையிலேயே ஈழத்துப் போரின் மீதான இயக்குனரின் வாசிப்பாக இருக்குமேயானால்,அவர் இத்தனை விஷயங்களை ஆழமாகப் பார்க்க அவருடன் இணைந்து பணியாற்றிய ஒருவரோ சிலரோ இந்த விஷயங்களில் ஆழ்ந்த அனுபவம்,அறிவு உடையவராக இருந்திருக்க வேண்டும்.

இயக்குனர் இதை வர்த்தக நோக்கோடு கபடமாக அணுகவில்லை.அப்படி அவர் விரும்பியிருந்தால் முழு மசாலாக் குப்பையாக்கி,மன்னரைக் கூட உயிரோடு தப்ப விட்டோ,சோழ நாட்டை வென்றெடுத்து புலிக்கொடி பறக்கிறது எனக் காட்டி உசுப்பேற்றி இருக்கலாம்.
எனவே செல்வராகவனின் நேர்மை பிடித்திருக்கிறது.

செல்வராகவனின் இந்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு புதிய முயற்சிக்கான ஒரு சில முதல் அடிகளில் ஒன்று.இதை கொஞ்சமாவது நாம் ஊக்குவித்தாலே அடுத்தகட்ட நல்ல முயற்சிகள் வெளிவரும்.
தயாரிப்பாளர்களும் ஒரே மாதிரியான கலவைக்குள் கிடந்தது உழலாமல் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க முன்வருவர்.

குறைகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து நிறைகளை நிறைவாகப் பார்க்குமிடத்தில் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் சொல்லவந்த விடயம் பிடித்திருக்கிறது.

புதுப்பேட்டைக்கு அடுத்தபடியாக செல்வராகவனை ஓரளவாவது இயக்குனராக வியந்தேன்.


Post a Comment

48Comments

Please Select Embedded Mode To show the Comment System.*