சிதறிப்போனாயே ஸ்ரீதர் அண்ணா.. நினைவுப் பகிர்வு

ARV Loshan
27



பல்கலைத் தென்றல் ஸ்ரீதர் பிச்சையப்பா -

உலகில் ஒரு சில கலைஞருக்கே இவர் போல எல்லா ஆற்றல்களும் பொருந்தி இருக்கும்..இவருக்கு என்ன தெரியாது என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. அனைத்துக் கலைகளும் அறிந்த ஒரு அரிய மனிதர்..

சின்னவயதில் தொலைக்காட்சியில் இவர் பாடவும்,நடிக்கவும் பார்த்து ரசித்திருந்தேன்.. பின்னர் மேடை நிகழ்ச்சிகளில் ஒரு நாடக நடிகராக, எந்தப் பாடலையும் லாவகமாகப் பாடி ரசிகர்களின் மனதை இலகுவாக வென்றுவிடும் ஒரு ஸ்டாராக பார்த்து வியந்த காலம் ஒரு காலம்.

பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நேரங்களில் நாடகங்களில் நடிக்க ஸ்ரீதர் அண்ணா வரும் நேரங்களில் அவரது அந்தக்கால ஹிப்பி ஸ்டைல்கள் பார்த்து நம்ம நாட்டிலும் ஸ்டார் ஒருவர் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

கொஞ்சம் வளர்ந்து தெரிவு செய்யப்பட்ட நாடக நடிகனாக ஒரு சில நாடகங்கள்,கதம்பம் நிகழ்ச்சியில் நகைச்சுவை நாடகங்களில் நடிக்கின்ற வாய்ப்புக் கிடைத்த நேரங்களில் அவருடன் கொஞ்சம் பேசிப் பழகக் கிடைத்தது.

இதற்கிடையில் அவருக்கு காரைதீவில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் அவரது ஒற்றைக்கண் பாதிக்கப்பட்ட செய்தியும் அதிலிருந்து மீண்டு அவர் வழக்கம் போலவே இசை நிகழ்ச்சிகள்,கலை நிகழ்ச்சிகளில் அசத்துவதும் கண்ட போது மேலும் மதிப்பு அவர்மேல் ஏற்பட்டது.
ஆனால் இத்தனை காலமும் அவரை ஒரு இசை,நாடக,நகைச்சுவைக் கலைஞராகவே அறிந்திருந்தேன்..

சக்தி வானொலியில் எனது ஒலிபரப்பு வாழ்க்கை ஆரம்பித்த நேரம் எழில்வேந்தன் அவர்களால் (எழில் அண்ணா) பாடிக் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சியை அப்போதைய அறிவிப்பாளர் ஜானு(ஜானகி) உடன் சேர்ந்து சுவாரஸ்யமாகவும் விஷயஞானத்துடனும் தொகுத்து வழங்க ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஸ்ரீதர் அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் தான் ஸ்ரீ அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அவரது சகலதுறைத் திறமைகளையும் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பமும் எனக்குக் கிட்டியது.
இசை,திரை இசை,கவிதை, கவிஞர்கள்,வானொலி நிகழ்ச்சிகள்,நூல்கள் ,அரசியல்,நாடகங்கள்,சமூகம் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரோடு உரையாடாத,விவாதிக்காத விஷயமே கிடையாது.
இத்தனைக்கும் என்னை "இவன் யாரு பொடியன் தானே" என்று நினைக்காமல் மன சுத்தியோடும் உண்மை நட்போடும் பழகுவார்.

சந்தோஷமாக மனநிறைவாக சிரிக்க வைப்பார்.. எல்லாவித நகைச்சுவைகளும் இவருக்கே உரிய கடி,நக்கலுடன் வெளிவரும்..

பின்னர் சக்தி டிவியில் நான் தொகுத்து வழங்கிய உள்நாட்டுப் பாடல்களின் இசையணித்தேர்வு நிகழ்ச்சியான இசைக் கோலங்களில் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களை ஒரு அருமையான பாடலாசிரியராக இனங்கண்டுகொண்டேன்.
அப்போது தான் முதல் தடவையாக என் மனதிலே ஒரு கேள்வி தோன்றியது..
இந்த மனுஷன் என் தன்னை முழுமையாக இந்தத் துறையில் வெளிப்படுத்துகிறாரில்லை.. தனக்குள் இருக்கும் பல்வேறுபட்ட திறமைகளை இவராலேயே அடையாளம் கண்டு தனது எல்லைகளை விஸ்தரிக்க முடியவில்லையா?

இடையிடையே எழில் அண்ணாவுடன், அப்துல் ஹமீத் அண்ணாவுடன், தயானந்தா அண்ணாவுடன் பேசிக்கொண்டிருந்த சிலநேரங்களில் பல்வேருபட்டோர் பற்றிய பேச்சுக்கள் வரும் வேளையிலே எல்லோராலும் சிலாகித்துப் பெசப்பட்டவராக ஸ்ரீதர் அண்ணா இருப்பார்.

காலங்கள் மாறின.. நான் சூரியனில் இணைந்தேன்.. இணைந்து ஒரு சில மாதங்களில் சூரியனின் ஏற்பாட்டில் (வியாசாவின் பெரும் பங்களிப்போடு) பத்து வெவ்வேறு நகரங்களில் மிக பிரமாண்டமான தொடர் இசை நிகழ்ச்சிகள் (பாபா பூம்பா) நடத்தி இருந்தோம்.

பிரபல தென் இந்தியப் பாடகர் மலேசியா வாசுதேவனை அழைத்திருந்தோம்.. அவரோடு இலங்கையின் பல பாடக பாடகியரையும் இணைத்துக்கொள்வோம் என்றவுடனேயே எங்களின் ஒட்டுமொத்த முதல் தெரிவு ஸ்ரீதர் பிச்சையப்பா (தம்பதி).
(இன்னும் பொப்பிசை சக்கரவர்த்தி எ.ஈ.மனோகரன்,முபாரிஸ்,பிரேமானந்,மொரீன் ஜனெட், செல்லத்துரை)


பாபா பூம்பா நிகழ்ச்சியொன்றில் ஏ.ஈ.மனோகரன் அவர்களுடனும் ,காலம் சென்ற ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களுடனும்..
2002

அந்தப் பதினாறு நாட்களும் எங்களுக்கு வாழ்க்கையின் பல்வேறு பாடங்கள் சொல்லித் தந்த நாட்கள்.
மலேசியா வாசுதேவன் என்ற மாபெரும் இசை சிகரத்தை ஒரு அப்பாவிக் குழந்தையாகவும்,நல்ல மனிதராகவும் நாம் கண்டோம்..

ஸ்ரீதர் பிச்சையப்பா என்ற எமது கலைஞனை ஒரு ஞானியாக, ஒரு பூரணமான கலைஞனாக,நல்ல மனிதனாக, (நான் அப்போது கண்டவரை) நல்ல ஒரு கணவனாக,எந்தவொரு பாடலையும் பாடி கல் போல அசையாதிருக்கும் மக்களையும் கரகொஷங்களோடு ரசிக்க செய்யும் ஒரு மாயாஜாலப் பாடகனாக.. இன்னும் பல்வேறு வடிவங்களில் கண்டுகொண்டேன்..

வவுனியாவில் நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியாக எமது நிகழ்ச்சி இருந்த வேளையில் ஸ்ரீ அண்ணாவுக்கு அங்கிருந்த ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் அதற்கு இவர் கொடுத்த நன்றியரிவித்தலுடனான பாடலும் எப்போதும் எனக்கு மறக்காது.

பாபா பூம்பா நிகழ்ச்சியின் ஒன்பதாவது நிகழ்ச்சியை கண்டியில் முடித்துவிட்டு பத்தாவது நிகழ்ச்சிக்காக கொழும்பு நோக்கி வரும்வேளையில் எங்கள் வாகனத்திலேயே ஸ்ரீ அண்ணாவும் வந்துகொண்டிருந்தார்.
பல்வேறு விஷயங்களையும் பேசிக் கொண்டுவரும் வேளையில் வழக்கமாகவே அவரோடு நான் வாக்குவாதப்படும் குடி,புகை பிடித்தல் சம்பந்தமான விவகாரமும் வந்தது.

அவர் அன்று குதர்க்கமாக சொல்லி என் வாயை அடைத்த ஒரு வாசகம் இப்போதும் மனதிலே நிற்கிறது...
"டேய் தம்பி.. என்னைத் தான் நீங்கள் எல்லோரும் சகலதுறைக் கலைஞன் என்கிறீர்களே..அப்பிடியென்றால் இவையும் இருக்கத் தானே வேண்டும்.. எல்லாவற்றையும் இருக்கின்ற கொஞ்சக் காலத்தில் அனுபவித்துப் பார்க்கிறேனே"

அந்த அதிகாலை வேளையிலும் அப்போது அவர் இருந்த வத்தளை வீட்டுக்கு வற்புறுத்தி அழைத்து சுட சுட தேநீரும் தந்து உபசரித்து தனது கலைக் களஞ்சிய அறையைக் காட்டினார்..

ஆனந்த அதிர்ச்சியில் நானும் என்னுடன் வந்திருந்த மப்ரூக்,விமலும் ஒருகணம் உறைந்துபோனோம்..
பின்னே ஒரு அறை முழுவதும் வைக்க இடமில்லாமல் நூல்கள்,இசைத் தட்டுக்கள்,ஓவியங்கள் என்றால்....

அந்த ஓவியங்கள் எல்லாமே அவரே வரைந்ததாம்.. மலைத்துப் போனோம்.. அவர் என்னைப் பொறுத்தவரையில் அந்தக் கணத்தில் இமயமலையளவு உயரத்துக்குப் போயிருந்தார்.

இருந்த இரு மணிநேரத்தில் அங்கிருந்த அவரது ஓவியங்கள் பற்றி அவருடன் பேசினோம்;பல அரிய நூல்களைத் தட்டிப் பார்த்து வியந்தோம்;சில நூல்களை இரவல் பெற்றுக்கொண்டோம்(நான் வாங்கியதை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டேன்);அவரது இன்னுமொரு ஆற்றலான புகைப்படக் கலை பற்றியும் கூட அறிந்த ஆச்சரியப்பட்டோம்..

அதற்குப் பிறகும் பல தடவை ஸ்ரீ அண்ணாவை சூரியனின் பல நிகழ்ச்சிகள்,நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோதும், மேலும் பல்வேறு போது நிகழ்ச்சிகளில் சந்தித்தபோதும், நான் அவதானித்த விடயம்..
ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் முதல் இருந்ததை விட அவரது உடல் வாடி,வயக்கெட்டிருக்கும்.

இதைப்பற்றிக் கண்டித்துக் கொஞ்சம் கோபமாக சொன்னாலும் கூட,என் தாடையைத் தடவி ஏதாவது சமாளித்துவிட்டு சென்றுவிடுவார்.

உள்ளூர் சஞ்சிகையில் அவர் தொடர்ந்து எழுதிவந்த இலக்கியம்,கவிதை போன்ற விஷயங்கள்.. அப்பப்பா என்னவ்பொரு தரம்,இலக்கிய நயம்.. எனது வேண்டுகோளை ஏற்று இடையிடையே தனது ஓவியங்களையும் பிரசுரித்து வந்திருந்தார்.

எனது நிகழ்ச்சிகள் பற்றி இறுதிக் காலத்தில் அவர் நோய்வாய்ப்படும் வரை விமர்சிப்பார்;பாராட்டுவார்..

ஸ்ரீதர் அண்ணாவினால் எனக்குக் கிடைத்த மிக சிறந்த விஷயங்களில் ஒன்றாக நான் கருதுவது, சூரியனில் நான் தேர்வு செய்து பின்னர் என்னுடன் வெற்றி வானொலிக்கும் அழைக்கப்பட்டு இப்போது கட்டார் நாட்டில் வேறு துறையில் பணிபுரியும் சுபாஷ்..
எப்போதுமே யாரையும் சிபாரிசு செய்யாத ஸ்ரீ அண்ணா சுபாஷை என்னிடம் அனுப்பிவைத்தபோது தொலைபேசியில் சொன்ன விஷயம் "லோஷன், இவன் கெட்டிக்காரன்..வாய்ப்பு ஒன்று கொடு.உனக்கு நல்ல பெயர் எடுத்து தருவான்"

சுபாஷ் இறுதிவரை அப்படியே நடந்துகொண்டிருந்தான்.. ஸ்ரீ அண்ணாவுக்கும் நன்றியுடன் இருக்கிறான்.

அவருக்கே உரிய வித்தியாசமான சிகை அலங்காரம்,ஆடை அலங்காரம், பேச்சு என்று நண்பர்கள்,நட்போடு திரிந்துகொண்டிருந்தாலும்,பாவம் அவரைத் தனிப்பட்ட வாழ்க்கையின் தனிமையும்,வெறுமையும் உள்ளேயே உருக்கி இருக்கிறது.
அத்தோடு இந்தக் கேடுகெட்ட குடியும்..

ஐம்பது வயது கூட எட்டாமல் இவர் இறப்பார் என்று யார் தான் நினைத்தோம்..
அண்மையில் கூட ஒரு பாடல் சம்பந்தமாக் செல்பேசியில் என்னை அழைத்து கேட்டிருந்தார்.

எப்படிப்பட்ட ஒரு அருமையான கலைஞன்..
இவரை நாம் இன்னும் முழுமயாகப் பயன்படுத்தவில்லை என்ற வருத்தமும், அவர் தன்னை முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்தவில்லை என்று அவர் மீது கோபமும் எனக்கு துக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.

அன்புக்குரிய ஸ்ரீதர் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைவதாக..

கொழும்பு 7 இல் உள்ள கலாபவனத்தில் இன்று காலை 11 மணிமுதல் ரசிகர்கள்,மக்களின் அஞ்சலிக்காக இவரது பூதவுடல் வைக்கப்பட்டு மாலை 3.30க்கு தகனக்கிரியைக்காக பொரளை மயானத்துக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

பல்கலைத் தென்றல் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சி எங்கள் வெற்றி வானொலியில் இன்றிரவு ஒன்பது மணி செய்தி அறிக்கையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
அவருடன் இணைந்து பணியாற்றிய பலர்,இன்னும் பல முக்கிய கலைஞர்கள் ஸ்ரீதர் அண்ணாவைப் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிரவும் உள்ளார்கள்.




Post a Comment

27Comments

Please Select Embedded Mode To show the Comment System.*