என்னைப் பி(பீ)டித்த கிரிக்கெட் - தொடர் பதிவு

ARV Loshan
25

அலுவலக வேலைகள் காரணமாகவும், எங்கள் வெற்றி வானொலியின் இரண்டாவது பிறந்தநாள் எதிர்வரும் ஞாயிறு வருவதன் காரணமாகவும் ஆறுதலாக இருந்து வலைப்பதிவு போட தாராளமாக நேரம் கிடைக்காததால் ஒன்றிரண்டு வலைப்பதிவுகள் வாசித்துக் கொண்டிருந்த என்னை சுவாரஸ்யமான கிரிக்கெட் தொடர் பதிவுக்கு ஒரே நேரத்தில் இரு நண்பர்கள் அழைத்துள்ளார்கள்.


கிரிக்கெட் பதிவு என்றால் அதுக்குப் பிறகு சொல்லவும் வேணுமா?
நிலவில் இருந்தாவது நேரத்தை எடுத்துப் பதிவு போட்டிட மாட்டேனா? ;)

அதுவும் வாசித்த பலரின் பதிவுகளும் அத்தனை சுவாரஸ்யம்..

தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர்கள் யோ(கா)வுக்கும், வரதராஜலுவுக்கும் நன்றிகள்..


இத்தொடர் பதிவின் விதிகள்
§ உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
§ தற்போது கிறிக்கற் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
§ குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

உண்மை சொல்ல வேண்டும் என்ற விதிமுறை இருந்ததனால் அநேகமான கேள்விகளுக்கு நான் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பிட்டுள்ளேன்.. :)

#######

1.பிடித்த கிறிக்கற் வீரர்?

அல்லன் போர்டர்..(Allan Border) முன்னாள் உலக சாதனையாளர் & ஆஸ்திரேலியா முன்னாள் அணித்தலைவர்..
அவரது போராட்ட குணம்,தன்னம்பிக்கை, சாதாரண,பலவீன அணியாக இருந்த ஆஸ்திரேலியாவை முதல் தர அணியாக மாற்றிய அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பு என்று அத்தனை விஷயங்களையும் பிரமிப்பு கலந்த மதிப்புடன் நோக்குகிறேன்.

அத்துடன் மேலதிகமாக எம்மிருவர் முதல் எழுத்துக்களும் A.R.

இப்போது விளையாடுவோரில் முரளிதரன், மஹேல ஜெயவர்த்தன, மைக் ஹசி..



2.பிடிக்காத கிறிக்கற் வீரர்?

ஹர்பஜன் சிங்
தனது நடத்தைகளால் எனக்கு எரிச்சலையும் கடுப்பையும் கிளப்புபவர்.அடிக்கடி இவர் பற்றி வசைபாடி எழுதியது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.

சலீம் மாலிக்,ஜெப்ப்ரி போய்கொட் (Geoffrey Boycott),இன்னும் சில இங்கிலாந்து வீரர்களையும் அவர்கள் சுயநலங்களால் பிடிப்பதில்லை.


3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர்?

எபோதும் வசீம் அக்ரம்,ரிச்சர்ட் ஹட்லி, க்ளென் மக்க்ரா,கோர்ட்னி வோல்ஷ் போன்றோரை அவர்களின் விடா முயற்சி மற்றும் அணிக்காக தம்மை அர்ப்பணிக்கும் பாங்குக்காகப் பிடிக்கும்..

புதியவர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜோன்சன், டக் போலின்ஜர்,தென் ஆபிரிக்காவின் வெய்ன் பார்நெல் ஆகியோரை ரசிக்கிறேன்..



4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்?

நடத்தைக்காக ஸ்ரீசாந்த்,சோயிப் அக்தார், அன்ட்ரே நெல்..
சோம்பேறித்தனத்துக்காக ப்ரமோடைய விக்ரமசிங்க,அபே குருவில்லா


5.பிடித்த சுழற்பந்துவீச்சாளர்?

முரளி மற்றும் வோர்ன், இறந்துகொண்டிருந்த சுழல் பந்துவீச்சுக் கலையை தத்தம் பாணிகளால் (Off spin & Leg spin)உயிர்ப்பூட்டி தாமும் உயர்ந்தவர்கள்..கிரிகெட் வரலாற்றின் தலைசிறந்த இரு சுழல் பந்துவீச்சாளர்கள்..



6.பிடிக்காத சுழல்ப்பந்துவீச்சாளர்?

வேறு யார் ஹர்பஜன் தான்..
இவருக்குப் பின் இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் என்ற பெயரில் பந்தை எறிந்த வர்ணவீர, பந்தை சும்மா வீசிய டொன் அனுரசிறி, இந்தியாவின் நிகில் சோப்ரா,நிலேஷ் குல்கர்னி, இங்கிலாந்தின் பின் கதவால் வந்த ரிச்சர்ட் இல்லிங்க்வோர்த்(Richard Illingworth)..

7.பிடித்த வலதுகைத்துடுப்பாட்டவீரர்?

அரவிந்த டீ சில்வா, சச்சின் டெண்டுல்கர், டீன் ஜோன்ஸ்(Dean Jones), மஹேல ஜெயவர்த்தன, ரிக்கி பொன்டிங்,


8.பிடிக்காத வலதுகைத்துடுப்பாட்டவீரர்?

அசிங்கமாக, பொறுப்பில்லாமல் ஆடுபவர்கள் என்பதனால் மைக் அர்தேர்டன் (முன்னாள் இங்கிலாந்தின் உம்மணாமூஞ்சி தலைவர்), பங்களாதேஷின் மொகமட் அஷ்ரபுல், பாகிஸ்தானின் சலீம் மாலிக்

9.பிடித்த இடதுகைத்துடுப்பாட்டவீரர்?

அல்லன் போர்டர், சயீத் அன்வர், இங்கிலாந்தின் க்ரஹம் தோர்ப்(Graham Thorpe), குமார் சங்கக்கார, மைக் ஹசி, மத்தியூ ஹெய்டன், அடம் கில்க்ரிஸ்ட்

10.பிடிக்காத இடதுகைத்துடுப்பாட்டவீரர்?

ஆஸ்திரேலியாவின் டரன் லீமன்(Darren Lehmann), இலங்கையின் அசங்க குருசிங்க,மேற்கிந்தியத் தலைவர் க்றிஸ் கெய்ல் (ஓவரான தலைக்கனம் என்று கருதுகிறேன்)


11.பிடித்த களத்தடுப்பாளர்?
ஜொன்டி ரோட்ஸ்,ரிக்கி பொண்டிங்,ரொஷான் மகாநாம, டில்ஷான், போல் கோல்லிங்க்வூட், ப்ரெட் லீ (எல்லைக் கோடுகளில் இவரது வேகமே தனி)



12.பிடிக்காத களத்தடுப்பாளர்?

இலங்கையில் அவிஷ்க குணவர்தன, நுவான் சொய்சா, டில்கார பெர்னாண்டோ,

13. பிடித்த ALL-ROUNDER?

எப்போதுமே ஸ்டீவ் வோவில் ஒரு தனியான மதிப்பு உள்ளது.
இவருக்குப் பின்னர் முன்னாள் வீரர்களான மல்கொம் மார்ஷல்,கபில் தேவ், கிறிஸ் கேயார்ன்ஸ்,வசீம் அக்ரம்..
ஷேன் வொட்சன், பாகிஸ்தானின் அப்துல் ரசாக், இந்தியாவின் அண்மைக்காலப் புது வரவு ரவீந்தர் ஜடேஜா, இலங்கையின் பார்வீஸ் மஹாரூப்,அன்ஜெலோ மத்தியூஸ், இங்கிலாந்தின் போல் கொள்ளிங்க்வூத், பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன், ட்வெய்ன் பிராவோ என்று பட்டியல் நீள்கிறது.. :)

14.பிடித்த நடுவர்?

காலம் சென்ற டேவிட் ஷேப்பெர்ட், டிக்கி பேர்ட், வெங்கட்ராகவன், டரில் ஹார்ப்பர், சைமன் டௌபல்,அலீம் டார்

15.பிடிக்காத நடுவர்?

இலங்கையின் B.C. கூரே, ஆனந்தப்பா, சமரசிங்க, இந்தியாவின் ப்ரொபசர் ஷர்மா, ஆஸ்திரேலியாவின் டரல் ஹெயார்


16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்?
ரிச்சி பேனோ, ஹர்ஷா போக்லே, ஹென்றி பலோபெள்ட்- Henry Blofeld(அருமையாக கலகலப்பாக நேர்முக வர்ணனை செய்யும் இவர் இப்போது எங்கே?), இயன் செப்பல், டோனி கிரெய்க், ரவி சாஸ்திரி, ரமீஸ் ராஜா, மைக்கல் ஹோல்டிங் (அந்த வித்தியாசமான ஆங்கில உச்சரிப்புக்காகவே ரசிக்கலாம்

16. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்?
ரஞ்சித் பொணான்டோ, மைக் அர்தேர்டன், சுனில் கவாஸ்கர்


18.பிடித்த அணி?
இலங்கை,ஆஸ்திரேலியா


18.பிடிக்காத அணி?
இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள்
படு மோசமாக விளையாடித் தோற்கும்போது சமயத்தில் இலங்கை அணியுமே பிடிக்காத அணியாக மாறி விடும்


20.விரும்பிப்பார்க்கும் அணிகளுக்கிடையிலான போட்டி?

ஆஸ்திரேலியா எதிர் இலங்கை
ஆஸ்திரேலியா எதிர் தென் ஆபிரிக்கா

21.பிடிக்காத அணிகளுக்கிடையிலான போட்டி?

அண்மைக்காலத்தில் இலங்கையும் இந்தியாவும் அடிக்கடி விளையாடி வருவது சலிப்பாக உள்ளது.
மற்றும்படி பலவீனமான ஒரு நோஞ்சான் அணியை இன்னொரு அணி துரத்தி வேட்டையாடும் எந்தவொரு போட்டியும் சகிக்காது

22.பிடித்த அணித்தலைவர்?

எப்போதுமே அல்லன் போர்டர்..
அர்ஜுன ரணதுங்க, சௌரவ் கங்குலியை தனிப்பட்ட முறையில் பிடிக்காவிட்டாலும் அவர்களின் தலைமைத்துவத்தை எப்போதுமே உயர்வாக மதிக்கிறேன்..

அண்மைக்காலத்தில் மஹேல ஜெயவர்த்தன, மார்க் டெய்லர்
எதிர்காலத்துக்கு ஷகிப் அல் ஹசன் & கமேரோன் வைட்

23.பிடிக்காத அணித்தலைவர்?

எபோதுமே தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ள விளையாடிய Defensive அணுகுமுறை கொண்ட எந்தவொரு தலைவரையும் பிடிக்காது என்பதால் வரிசை மிக நீளம்..

குறிப்பாக கவாஸ்கர், ஹஷான் திலகரத்ன, மைக் அர்தேர்டன், மற்றும் பாகிஸ்தானிய குழப்பத் தலைமைகள் பல..

24.உங்களுக்கு பிடித்த போட்டிவகை?

வீரர்களின் உண்மையான மனத்திடத்தை எப்போதுமே சோதிக்கும் டெஸ்ட் போட்டிகள்

25.பிடித்த ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி?

டெஸ்டில்
மத்தியூ ஹெய்டன்& ஜஸ்டின் லங்கர்
சனத் ஜெயசூரிய&மார்வன் அதபத்து

ஒருநாளில்
சனத் ஜெயசூரிய&ரொமேஷ் களுவிதாரண
ஹெய்டன்&கில்க்ரிஸ்ட்
சயீத் அன்வர்&அமீர் சொகைல்
சச்சின்&கங்குலி

26.பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி?

இலங்கை அடிக்கடி மாற்றிய பல ஜோடிகள்
சேவாக்& ஆகாஷ் சோப்ரா
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்தின் சொதப்பல்,சோம்பேறித்தனமான ஆரம்ப ஜோடிகள்

27.(உங்கள் பார்வையில்) சிறந்த டெஸ்ட் வீரர்?

முரளிதரன்,சச்சின்,ஸ்டீவ் வோ&ரிச்சர்ட் ஹட்லி..
இவர்களின் சாதனைகள் ஒவ்வொன்றின் பின்னாலும் கடும் அர்ப்பணிப்பும், அணிக்கான தேவையும் இருந்துள்ளன.
போராளிகள் இவர்கள்

28.கிறிக்கற் வாழ்நாள் சாதனையாளர் (உங்கள் பார்வையில்)?
முத்தையா முரளிதரன்
தோல்விகளை வாடிக்கையாகக் கொண்டிருந்த ஒரு அணியைத் தூக்கி நிறுத்தியவர்.
இப்போது வரை இவர் விளையாடினால் இலங்கை தோற்பதை விட வெல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம்..
தன்னம்பிக்கையும் ஆனால் அடக்கமும் நிறைந்த ஒரு மனிதர்.
தனித்துப் பல போட்டிகளை வென்றெடுத்த வீரர்கள் இவரோடு ஒப்பிடும்போது மிகக் குறைவே..


29. சிறந்த கனவான் வீரர் ?
கோட்னி வோல்ஷ்
நியாயமாகவும் ,கண்ணியமாகவும் நடந்துகொள்ளும் ஒரு நல்ல மனிதர்

ரொஷான் மகாநாம
சர்ச்சைகளில் சிக்காதவர்.பலருக்கு உதவிகள் செய்து உயர்த்திவிட்டவர்.
கண்ணியமான,பண்பானவர்.(நேரிலேயே கண்டுள்ளேன்)



30. நான் பார்த்து வியந்த வீரர்கள்?

சனத் ஜயசூரிய, முரளிதரன், சச்சின், விவ் ரிச்சர்ட்ஸ், ஜொண்டி ரோட்ஸ்,மத்தியூ ஹெய்டன் .. இப்போது டில்ஷான் & கம்பீர்..

தொடர்ச்சியான அசத்தும் ஆற்றல்&மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரியும் சுபாவம்


குறிப்பு - இது என் ரசனை. பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் கருத்து சொல்லிட்டுப் போங்க..
எனது சிறு வயது கிரிக்கெட் நினைவுகளை மீட்ட உதவிய இனிமையான தொடர் பதிவை தொடக்கிய பவன் மற்றும் அழைத்த நண்பர்கள் யோ(கா)வுக்கும், வரதராஜலுவுக்கும் மீண்டும் நன்றிகள்.


இத்தொடரை தொடர கிரிக்கெட் மற்றும் விளையாட்டுப் பதிவுகளை சுவாரஸ்யமாகவும் ஆர்வமாகவும் தரும் இருவரை அழைக்கிறேன்..



(நான் அழைப்பவர்களுக்கு ஒரு கருத்து. என் விருப்பங்கள் உங்களின் விருப்புக்களுக்க முற்றுமுழுதாக எதிராக இருந்தாலும் தொடருங்கள். விருப்புக்கள் வேறுபட்டன. தனிப்பட்ட விருப்புக்களுக்கு நான் தலைவணங்குகிறேன், நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்)

Post a Comment

25Comments

Please Select Embedded Mode To show the Comment System.*