Showing posts with label அவுஸ்திரேலியா. Show all posts
Showing posts with label அவுஸ்திரேலியா. Show all posts

March 06, 2022

Shane Warne - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - இறந்த பின்பும் !

 Shane Warne !

1990களில் அவுஸ்திரேலியா அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை சுழல்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தி வந்திருந்த காலத்தில், ‘யார்ரா இது ?’ என்று ஆச்சரியப்படுத்திய ஒருவர்.
கொழும்பு SSC மைதானத்தில் 1992 டெஸ்ட் போட்டி - 16 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு இறுதி இன்னிங்ஸில் வோர்னின் மூன்று விக்கெட்டுகள் மிக முக்கியமானவையாக அமைந்தன.
மைதானம் சென்று பார்த்த அந்தப் போட்டியில் வோர்ன் என்ற இந்தப் புதியவரின் சுழல், எனக்கு மிகப்பிடித்த அலன் போர்டர் இவரைக் கையாண்டு, தட்டிக்கொடுத்த விதம் ஆகியவற்றோடு ஈர்ப்பொன்று ஏற்பட்டது.


அத்தனை காலமும் அதிகமாக off spin வீசிய நான் leg spin ஐ டென்னிஸ் பந்து கிரிக்கெட்டிலும் - எத்தனை அடி விழுந்தாலும் - போட ஆரம்பித்தது வோர்னின் தாக்கத்தில்.
அப்துல் காதிருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலும் சில காலமாக அருகி வந்திருந்த லெக் ஸ்பின் பந்துவீச்சை மீண்டும் உயிர்ப்பித்த மூவர் வோர்ன், கும்ப்ளே, முஷ்டாக் அஹ்மட்.
இதில் வோர்னுக்கு வாய்த்தது ‘சுழல் பந்து’ என்று துண்டுக் காகிதத்திலேயே எழுதிப்போட்டாலும் சுருண்டுவிடக்கூடிய இங்கிலாந்து அதிகமான போட்டிகளில் வோர்னிடம் மாட்டியது.
ஆனாலும் வோர்ன் Gatting க்கு போட்ட ball of the century, Straussஐ மிரட்டிய sharp turner, 1994 Ashes Boxing Day hat trick இதெல்லாம் King special கள்.
நாக்கைக் கடித்து பந்தை அசாதாரண திருப்புகோணத்தில் மணிக்கட்டினால் சுழற்றுவது, வோர்ன் special wrong un, பல வேகப்பந்துவீச்சாளரின் stockballs ஐ விட வேகமான flipper என்று வோர்ன் எந்த formatஇல் பந்துவீச வந்தாலும் ஒரு பரபர தான். (Warne க்காகவே YouTube இல்லாத காலத்தில் எத்தனை போட்டிகளின் highlights உட்கார்ந்து இருந்து ஒவ்வொரு பந்தாகப் பார்த்திருப்பேன்)
கும்ப்ளேயும் முஷ்டாக்கும் ஒருநாள் போட்டிகளில் கலக்கியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்கு பிரம்மாஸ்திரமாக லெக் ஸ்பின்னை பயன்படுத்த நிரூபணம் ஆனவர் ஷேன் வோர்ன் தான்.
அவர் உருவாக்கிய ஒரு legacy, பல அணிகளுக்கும் ஒரு blue print ஆனது.
708 டெஸ்ட் விக்கெட்டுகள், 300ஐ அண்மித்த ஒருநாள் விக்கெட்டுகள் - தேவையான போது அதிரடி துடுப்பாட்டம், slip மற்றும் close in சிறப்பு களத்தடுப்பு, தலைமைத்துவத்துக்கு தேவையான கூர்மதி & ஆராயும் ஆழமான விளையாட்டு ஞானம்.
சாதனைகளோடு சேர்த்து சர்ச்சைகளையும் சம்பாதித்துக்கொண்டதனால் வோர்னுக்கு அவுஸி டெஸ்ட் தலைமை கிடைக்காமலே போனது.
அவுஸ்திரேலிய அணிக்கு கிடைக்காமல் போன மிகச்சிறந்த ஒரு தலைவர்.
பின்னாளில் franchise அணிகளுக்குத் தலைமை தாங்கியபோது இளையோரை ஊக்குவித்தும் புதுமைகளையும் வெற்றிக்கான உத்வேகத்தையும் புகுத்தி தன்னை நிரூபித்திருந்தார்.
Healy - Warne “bowling Warnie” இணைப்பு, வோர்னின் பந்துவீச்சில் டெய்லரின் பிடிகள், மக்ராவுடனான deadly combination,
Lara, Sachin ஆகியோரோடு வோர்னின் மோதல்கள், முரளியோடு இருந்த போட்டி, அர்ஜுன, இலங்கை ரசிகரோடு இருந்த விரோதமும் வசவுகளும் மறக்கமுடியாதவை.
52 வயதில் கிரிக்கெட்டில் தொடவேண்டிய சிகரங்களையும் தொட்டு, எவன் என்ன சொன்னாலும் வாழ்க்கையை தன் இஷ்டப்படி வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்று ‘வாழ்ந்து’ போயிருக்கிறார் King Warne.
இன்னும் கொஞ்சம் தன்னை சீர்ப்படுத்தி, தனக்கும் கிரிக்கெட்டுக்கும் இன்னும் அதிகம் வழங்கியிருக்கலாம்.
ஆனால் அவரது ஆரம்பம் முதல் இறுதிவரை - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - பாணி வாழ்க்கையில் யார் என்ன சொல்ல ?
இனியும் கிரிக்கெட்டில் பலர் வரலாம், சாதனையாளராகவும் மாறலாம். ஷேனின் 708ஐயும் முந்தலாம்.
ஆனால் மெல்பேர்ன் மைதானத்தில் ஓங்கி நிற்கப்போகும் King S.K.Warne stand போல Warne legacy என்றும் நிலையானது.
போய் வா சுழல் மன்னனே.
#ShaneWarne YouTube இல் நேரலையாக ஷேன் வோர்ன் பற்றி பகிர்ந்தது : https://www.youtube.com/watch?v=8e-g9siqV4I

January 11, 2021

சிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி !

 தோல்வியைத் தவிர்ப்பதே சில நேரங்களில் வெற்றி தான் !

அதை இன்று இந்தியா போராடிச் செய்திருக்கிறது.மூன்று வீரர்கள் காயம்.
அவுஸ்திரேலியாவின் படுபயங்கர பந்து வீச்சு வரிசை, இறுதிநாள் சிட்னி ஆடுகளம், பொல்லாத அவுஸ்திரேலிய வீரர்களின் வாய்கள்..

இதையெல்லாம் தாண்டி மூன்று விக்கெட்டுக்களை மட்டுமே இறுதி நாளில் இழந்து, இன்று சமநிலையில் முடித்தது சரித்திரத்தில் ஒரு பெரிய சாதனை தான் !

Rishabh Pant ஆடுகளத்தில் இருந்தபோது நான் நினைத்தேன், இந்தியா ஒரு சரித்திரபூர்வ வெற்றியைப் பெறப்போகிறது என்று.

Adversity brings out the best in man
இக்கட்டான சூழ்நிலைகள் தான் சரித்திர நாயகர்களை உருவாக்குகிறது.
Pant இன்று அவ்வாறு தான் தெரிந்தார்.

எதற்கும் அஞ்சாமல் ஆடிய விதம் அவுஸ்திரேலிய வீரர்களை நிச்சயம் பயமுறுத்தியிருக்கும்.

Pant விக்கெட் காப்பில் தான் விட்ட பிடிகளை, தனது ஓட்டைக் கைகளை எல்லாம் இன்றைய அதிரடித் துடுப்பாட்டம் மூலமாக முழுதுமாக அழித்துவிட்டார்.

புஜாராவின் வழமையான பொறுமையான ஒட்டல் பாணி இந்திய ரசிகர்களாலேயே நக்கல் செய்யப்படுவதுண்டு. ஆனால் இன்று பாண்டுக்கு ஏற்ற அற்புதமான இணையை வழங்கியிருந்தார்.

ஜடேஜாவும் முழுமையாக ஆரோக்கியமாக இருந்திருந்தால் பாண்டின் அதிரடியோடு இந்தியா வெற்றிக்கு கொஞ்சமாவது முயன்றிருக்கும் என நம்புகிறேன்.

இதே போல 406 என்ற இலக்கை இந்தியா 44 ஆண்டுகளுக்கு முன்னர் Port of Spainஇல் துரத்தி வென்றது இரண்டு தசாப்தகாலமாக டெஸ்ட் சாதனையாக இருந்ததும் நினைவுபடுத்தவேண்டியது.
(அந்தப் போட்டி கிரிக்கெட்டின் போக்கையே முற்றுமுழுதாக மாற்றியது வேறு கதை என்று அப்பா அடிக்கடி சொல்வார்.
அந்தத் தோல்வி தான், அந்தப் போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளரைக் கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் Fast bowlingஐத் தமது ஆயுதமாக தெரிந்தெடுக்கக் காரணமாக அமைந்ததாம்

ஆனால் ஐந்து விக்கெட் இழக்கப்பட்ட பிறகு 250+ பந்துகள் விஹாரியும் அஷ்வினும் போராடியது இந்தியாவுக்குப் புதிய அனுபவம் தான். (அதுவும் அவுஸ்திரேலியாவின் படுபயங்கர sledgingஐயும் தாண்டி)
விஹாரி தனது தெரிவை நியாயப்படுத்தியிருக்கிறார்.
அஷ்வின், தான் ஏன் இந்தியாவின் முதலாவது Test தெரிவாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் துடுப்பின் மூலமாகவும் காட்டியிருக்கிறார்.

நான் வழமையான அவுஸ்திரேலியாவின் ரசிகன் தான்.
ஆனால் இன்று மிக முக்கியமாக அணித்தலைவர் பெய்னின் மோசமான நடத்தைகள், அணுகுமுறைகளுக்காகவே இந்தியா (வெல்லாது என்று தெரியும்) தோல்வியைத் தவிர்க்கவேண்டும் என்று விரும்பினேன்.
அதிலும் பேயன் (ஊப்ஸ் பெயின்) விட்ட பிடிகளே இந்தப் போட்டியை அவுஸ்திரேலியா வெல்லாமல் போக பிரதானமான காரணங்கள் என்பேன்.
ஸ்மித் பாண்டின் Guard தடங்களை வேண்டுமென்றே அழித்ததாக இந்திய ரசிகர்கள் பகிர்ந்து வரும் படங்களை பார்த்தேன். Smith cheater என்று மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்.

ஸ்மித் அதை வேன்றுமென்றே செய்திருந்தால், அதன் மூலம் போட்டியின் முடிவை மாற்ற எத்தனித்திருந்தால் அதையும் கண்டிக்கவே வேண்டும்.

சுவர் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாளை இன்னொரு டிராவிட்டினால் இப்போது வழிநடத்தப்படும் இந்தியா இதை விடச் சிறப்பாகக் கொண்டாடியிருக்க முடியாது.

அவுஸ்திரேலியாவுக்கு நிச்சயமாக இது ஒரு தோல்வியே தான் !

என்ன, சின்னக் கவலை ஸ்மித் மீண்டும் க்குத் திரும்பிக் காட்டிய இரண்டு இன்னிங்ஸ் சாகசங்கள், Labuschagne, Greenஇன் ஆட்டங்கள், கமின்ஸின் முதல் இன்னிங்ஸ் நெருப்புப் பந்துவீச்சு எல்லாம் வீணானதே என்பது தான்.

ஆனால் அது தான் டெஸ்ட் !
Tests your perseverance.

தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் கோட்டை என்று அழைக்கப்படும் Gabba, பிரிஸ்பேனில்.

இந்தியாவின் காயம் + உபாதை லிஸ்ட் பெரிசு என்பதால் இதே போராட்டத்தைக் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தாலும், ரஹானேயினால் உந்தப்படும் இந்த அணி இறுதிவரை போராடும் என்றே தெரிகிறது.

ரஹானேயின் தலைமையில் இன்னமும் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோற்கவில்லை.
Ajinkya Rahane, still undefeated as a captain in Test cricket
#AUSvIND

இதே நெருப்பில் பாதியையாவது நம்ம அணி எமது கோட்டை காலியில் காட்டுமாக இருந்தால்....
பொங்கல் சும்மா பொங்கி களைகட்டும் எமக்கு.
#SLvENG 1st Test - 14th

March 25, 2018

கிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி

உலகின் முதல் நிலை டெஸ்ட் அணிகளில் ஒன்று. கனவான் தன்மை பற்றியும் கிரிக்கெட்டின் உயர்தரம் பற்றியும் மற்றைய உலக நாடுகளுக்கெல்லாம் பாடம் எடுக்கும் நாடு. ஆனால் sledging - எதிரணி வீரர்களை வசைபாடி கவனத்தை சீர்குலைத்து, அல்லது மனதளவில் சிதைவை ஏற்படுத்தி வெல்லும் யுக்திகளை நீண்ட காலமாகப் பயன்படுத்திவரும் அவுஸ்திரேலியா மீது அவ்வப்போது மோசடி/ஏமாற்றுப் புகார்கள் வந்தாலும் நிரூபிக்கப்பட்டதாக இல்லை.

அண்மையில் கூட இந்தியாவுக்கு அவுஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுலா சென்றிருந்த சமயம், தொலைக்காட்சி நடுவர் மூலமான ஆட்டமிழப்பு சம்பந்தமான சர்ச்சையொன்றில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் சிக்கியிருந்தார்.
Brain fade case என்று இன்று வரை கிரிக்கெட் ரசிகர்கள் வேடிக்கை செய்கின்ற விடயமாக அது இருக்கிறது.

அச்சமயம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி "அவுஸ்திரேலிய வீரர்கள் இப்படியான கிரிக்கெட் ஏமாற்று வேலை செய்து வெல்ல முயல்வது வழமையான விடயம் தான்" என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியபோதும், ஸ்மித் மற்றும் அவுஸ்திரேலியர்கள் இவையெல்லாம் ஆதாரமில்லாத அபாண்டங்கள் என்று பூசி மெழுகிவிட்டார்கள்.

எனினும் பல நாள் திருடன் கதையாக நேற்று கமெரொன் பான்க்ரொஃப்ட் கையில் இருந்த மஞ்சள் துண்டு 'கனவான் தன்மை'யின் கிழிவை உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.


கிரிக்கெட் பந்துகளை, குறிப்பாக சிவப்புக் கடின பந்துகளை அதிக ஸ்விங் செய்யச் செய்யவும், அல்லது ரிவேர்ஸ் ஸ்விங் எடுக்கவும் ஏதாவது உருமாற்றங்கள் அல்லது சேதங்கள் செய்து ( ball tampering) செய்வது 1970கள் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பித்து வைத்த நடைமுறை.
எனினும் ICC இதை அங்கீகரிக்கவில்லை. சட்டவிரோத நடைமுறையான ball tampering செய்தால் நடுவர்கள் தண்டிப்பதும், கடும் நடவடிக்கைகள் எடுப்பதும் நடைமுறையில் இருக்கிறது.

எனினும் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தி அகப்பட்டுக்கொண்ட பிரபல வீரர்கள் வரிசையில் இந்தியர்களால் கிரிக்கெட் கடவுளாகக் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் மைக் அர்த்தேர்ட்டன், பாகிஸ்தானின் முன்னாள் தலைவர், இடது கை வேக மன்னன் வசீம் அக்ரம், பாகிஸ்தான் அணியின் பல வீரர்கள், பந்தைக் கடித்த ஷஹிட் அஃப்ரிடி, ஏன் இப்போதைய தென் ஆபிரிக்காவின் தலைவர் பஃப் டூ ப்ளெசிஸ் (இரண்டு தடவை) - அதில் mint gate விவகாரத்தில் போட்டித் தடைக்கும் உள்ளானார். - என்று நீளும்.

எனினும் அவுஸ்திரேலிய வீரர்கள் இப்படியான விவகாரங்களில் சிக்கியது இல்லை.

நேற்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் சிக்கிக்கொண்ட பிறகு எந்தவொரு காரணமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாத நிலையில் ஸ்மித் ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாக இதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்தார்.

பான்க்ரொஃப்ட் செய்த இச்செயல் தமக்கும் அவுஸ்திரேலிய 'தலைமைத்துவக் குழு'வுக்குத் தெரிந்தே இடம்பெற்றது என்று குறிப்பிட்ட அவர், ஏதாவது செய்து போட்டியில் ஜெயிக்கவேண்டும் என்ற கையறு நிலையே இந்த மோசடிச் செயலைச் செய்யத் தூண்டியதாகக் குறிப்பிட்டுத் தலை குனிந்து நின்றார்.

மிகக் கேவலமான இந்த விடயத்தைச் செய்ய முனைந்த அவுஸ்திரேலிய அணி இதற்குக் கருவியாக அணியின் மிக இள வயது வீரரைப் பயன்படுத்தியது இன்னும் இழிய செயல்.

முன்னாள், இந்நாள் வீரர்கள் ( அவுஸ்திரேலிய முன்னாள் பிரபல வீரர்கள், தலைவர்கள் உட்பட) , விமர்சகர்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ICC நடவடிக்கை எடுக்கிறது ஒரு பக்கம், கிரிக்கெட் அவுஸ்திரேலியா உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரதும் எண்ணம். அவுஸ்திரேலிய அரசாங்கமும் சர்வதேசக் கண்டனங்களை அடுத்து Cricket Australiaவுக்கு இந்தத் தகவலை அனுப்பியுள்ளது.

அவுஸ்திரேலிய விளையாட்டு ஆணைக்குழுவும் தலைவர் ஸ்மித், பான்க்ரொஃப்ட் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக அணியை விட்டு நீக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.


பல விடயங்களில் முன்னோடியாக விளங்கும் ஸ்மித் தானாகத் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம்.

நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகே ICC இது பற்றிய உறுதியான முடிவொன்றை அறிவிக்கும் என நம்பப்படுகிறது.

எனினும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா இப்போது இந்த டெஸ்ட் போட்டியில் இந்த இறுதி நாட்களும் ஸ்மித் மற்றும் வோர்னர் ஆகிய இருவரும் தத்தம் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவர் என்று அறிவித்துள்ளது. விக்கெட் காப்பாளர் டிம் பெயின் உடனடியாகவே தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஒரு நெருக்கடியான நிலையில் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் அணியைப் பொறுப்பெடுத்து நடாத்துவது மிகப்பெரிய சிக்கலே. பாவம் பெயின். அதுவும் அருகே ஸ்லிப்பில் ஸ்மித் களத்தடுப்பில் நிற்கும்போது..

இவர்கள் மீது இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கருத இடமுண்டு.

இது http://tamilnews.com/tamil-sports-news/cricket/க்காக எழுதியிருந்த கட்டுரை.
எனினும் பிந்திய தகவலாக ஸ்மித் மற்றும் பான்க்ரொஃப்ட் ஆகியோருக்கு ICCயினால் விதிக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய விபரங்களும் கிடைத்திருந்தன.

"அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டித் தடை + முழுமையாக போட்டி ஊதியம் அபராதம்.
கமெரொன் பான்க்ரொஃப்ட்டுக்கு 75% போட்டி ஊதியம் அபராதம் + நன்னடத்தைப் புள்ளிக் குறைப்பு."
எனினும் நிரூபிக்கப்பட்ட இப்படியான மோசடித்தனத்துக்கு இதைவிடக் கடினமான தண்டனை வழங்கப்பட்டிருக்கவேண்டும். 
(இலங்கை அணிக்குப் பின்னராக) அவுஸ்திரேலிய அணியின் ரசிகனாக இருந்தாலும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா தோற்கவேண்டும் என்றே விரும்புகிறேன். மோசடிக்கு அது ஒரு கர்மாவின் பதிலாக இருக்கும். 
வோர்னர் சற்று முன்னர் ஆட்டமிழந்தபோதும், பின்னர் ஸ்மித் ஆடுகளம் வந்தபோதும் ரசிகர்கள் அளித்த கூச்சலுடன் கூடிய பழித்தல் 'வழியனுப்புதலும்' 'வரவேற்பும்' இதைப்  பதிவிடும் இந்த நிமிடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டமிழப்பும் உடன் வினை தான்.
அடுத்த போட்டியில் தடைக்குள்ளாகும் ஸ்மித்துக்கு எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கும் IPLஇல் ராஜஸ்தான் ரோயல்ஸ் தலைமைப் பதவியும் பறிபோகும் என்றே நம்புகிறேன்.
கீழே சில அவுஸ்திரேலிய பத்திரிகைகளின் முதற்பக்கங்கள்.:
கேவலமாகிப்போன அவுஸ்திரேலியா...
March 30, 2015

அசைக்க முடியாத அவுஸ்திரேலியா - 5வது தடவை உலக சாம்பியனாக !!! #cwc15

அசைக்க முடியாத அவுஸ்திரேலியா - 5வது தடவை உலக சாம்பியனாக என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு எழுதிய கட்டுரையின் விரிவான வடிவத்தை, புதிய படங்கள் & சிற்சில சேர்க்கைகளுடன் இங்கே பதிகிறேன்.

-------------------------
"பல காரணிகளால், நாளைய இறுதிப்போட்டி, ஒரு மிக நெருக்கமான போட்டியாக, இறுதி ஓவர் வரை செல்லாது  அவுஸ்திரேலியா இலகுவான வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்."
என்று உலகக்கிண்ண இறுதிக்கு முன்னதான எனது முன்னோட்ட இடுகையில் சொல்லி இருந்ததை முதலாவது ஓவரில் மக்கலமை சாய்த்து மிட்ச்செல் ஸ்டார்க் ஆரம்பித்து வைக்க, அவுஸ்திரேலியா வெற்றிக்கிண்ணம் வென்று கொடுத்து வெற்றியுடன் விடைபெறும் மைக்கேல் கிளார்க், இனி அணியைப் பொறுப்பு எடுக்கும் புதிய தலைமுறைத் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின் இணைப்பில் நிரூபித்தது.


இதுவரை பார்த்த உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் மிக உப்புச்சப்பற்ற, வெற்றிபெற்ற அணி மிக இலகுவாக வென்ற மூன்றாவது போட்டி இது என்பேன்.
மற்றைய இரண்டும் கூட, அவுஸ்திரேலியா வென்றவை தான்.
1999 - எதிர் பாகிஸ்தான்
2003 - எதிர் இந்தியா.

பலர் இன்று நியூசிலாந்து கடுமையான போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்தாலும், நேற்று நான் பதிந்திருந்த விடயம்...
//
பல காரணிகளால், நாளைய இறுதிப்போட்டி, ஒரு மிக நெருக்கமான போட்டியாக, இறுதி ஓவர் வரை செல்லாது அவுஸ்திரேலியா இலகுவான வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
//
என்ன தான் தொடர்ச்சியாக வென்று வந்தாலும், பலமான அணியாகத் தெரிந்தாலும், உண்மையான பலமும், எந்த சூழ்நிலையிலும் வெல்வதும் இந்த அவுஸ்திரேலியா போன்ற அணிகளால் மட்டுமே முடிந்தது.
------------------------------------------------
அசைக்க முடியாத அவுஸ்திரேலியா - 5வது தடவை உலக சாம்பியனாக


5 கண்டங்களிலும் ஒவ்வொரு உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றி, 5வது தடவையாக உலகக்கிண்ணம் வென்று உலகக் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத அசத்தல் சம்பியனாக அவுஸ்திரேலியா தன்னை அற்புதமாக வெளிக்காட்டியுள்ளது.

உலகக்கிண்ணம் இம்முறை மிகப் பொருத்தமான அணிக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.
மிகச் சிறந்த அணி, சிறப்பாக விளையாடிய அணிக்கு உலகக்கிண்ணம் கிடைத்தது.
எல்லாவிதமான சூழ்நிலையிலும் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்திய அணிக்கு கிண்ணம் கிடைத்துள்ளது.

கிரிக்கெட் ஆடுகளத்திலேயே பலியான தங்கள் சக வீரனை சகோதரனாக, அவனுக்காக அர்ப்பணிக்க, தங்கள் நாட்டுக்கான ஐந்தாவது உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது அவுஸ்திரேலியா.
தடுமாறாமல், கொண்ட குறி மாறாமல், வெல்வதற்குத் தேவையான அணி, வியூகம், ஆற்றலைக் கொண்ட அவுஸ்திரேலியாவின் வெற்றி மிகப் பொருத்தமானதும், எதிர்பார்த்ததுமே.
எந்த அணியையும் வீழ்த்தும் பலமும், பெற்ற வெற்றிகள் எல்லாவற்றையுமே அசத்தலாகவும், ஆதிக்கம் செலுத்திப் பெற்றது அவுஸ்திரேலியா.
ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் ஹேஸில்வூட் என்று எதிர்காலத்துக்கான வீரர்கள் தங்கள் தடங்களை அழுத்தமாக இந்த வெற்றித்தொடரில் பதித்துள்ளனர்.
தங்களை சிறப்பாக வழிநடத்திய தலைவன், தன்னை உணர்ந்து விடைபெறும் நேரம், அவனுக்காக வழங்க ஒரு கிண்ணம் இந்த உலகக்கிண்ணம்.
33வயதில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் கிளார்க், உலகை வென்ற, இன்னும் உலகை வெல்லும் ஒரு அணியையும் விட்டுச் செல்கிறார்.
அடுத்த உலகக்கிண்ணத்தை வெல்லும் அவுஸ்திரேலிய அணியை இப்போதிருந்தே புதிய தலைவரின் கீழ் கட்டியெழுப்பும் வாய்ப்பையும் வழங்கி செல்லும் கிளார்க்குக்கு வாழ்த்துக்கள்.


இந்த வெற்றி கிரிக்கெட் உலகத்துக்கு வழங்கியுள்ள பல்வேறு தகவல்களில் மிக முக்கியமானது, இந்த பெரும்பான்மையாக இளம் வீரர்களைக் கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி இன்னும் 10 வருடங்களுக்காவது உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தப்போகிறது.

நேற்றைய இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முதலாவது பந்து முதல் காட்டிய ஆதிக்கமும் நியூ சீலாந்தை தலையெடுக்க விடாமல் மடக்கிப் போட்டதும், உண்மையான அவுஸ்திரேலியாவின் பலத்தை உலகுக்கு உணர்த்தியது.

இறுதிப் போட்டிக்கு முன்னதான அத்தனை போட்டிகளையும் சொந்த நாட்டில் விளையாடிவிட்டு, மாபெரும் இறுதிப் போட்டியை மெல்பேர்ன் போன்ற பெரிய மைதானத்தில் அசுர பலமும், ஆற்றலும், சொந்த நாட்டின் ரசிகர்களின் பலமும் சேர்ந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது இலகுவான காரியம் அல்ல.

பிரம்மாண்டமான மைதானம், திரண்டு வந்திருந்த 93000க்கும் அதிகமான ரசிகர்கள் (உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் உலக சாதனை ரசிகர் எண்ணிக்கை இதுவாகும்), முதற்சுற்றில் தோற்றதற்கு பழி வாங்கக் காத்திருந்த அவுஸ்திரேலியாவின் வேகம் என்று அத்தனை விஷயமும் சேர்ந்துகொள்ள நியூ சீலாந்து சந்தித்தது மிகப்பெரிய அழுத்தம்.

நாணய சுழற்சி அதிர்ஷ்டம் சேர்ந்தாலும், அவுஸ்திரேலிய அணி ஒரு திட்டத்தோடேயே களமிறங்கி இருந்தது.

அத்தனை பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கி பதம் பார்த்திருந்த நியூ சீலாந்து அணித் தலைவர் மிட்செல் ஸ்டார்க்கின் முதல் இரு பந்துகளில் தடுமாறி மூன்றாவது பந்தில் விக்கெட் தகர்க்கப்பட்டதோடு அவுஸ்திரேலிய அணி போட்டியைத் தங்கள் வசப்படுத்திவிட்டது.

மக்கலமிடம் காணப்பட்ட ஒரு வகைப் பதற்றம், நியூ சீலாந்து அணியின் ஏனைய வீரர்களுக்கும் தொற்றியதுபோல ஒரு போராட்டம் இல்லாமலேயே சரணடைந்தது போல ஆனது நியூ சீலாந்தின் துடுப்பாட்டம். க்ராண்ட் எலியட் தவிர்த்து.
ஆபத்தில்லாத ஒரு மக்ஸ்வெல்லின் பந்துக்கு தொடரின் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவராக, குமார் சங்கக்காராவை முந்திய மார்ட்டின் கப்டில் ஆட்டமிழந்தது இதற்கு நல்ல உதாரணம்.

ரொஸ் டெய்லர் - எலியட் ஆகியோரின் சத இணைப்பாட்டம் நியூ சீலாந்தைக் காப்பாற்றியிருந்தாலும் கூட, போராட்டத்தை வெளிப்படுத்தும் அளவுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கு சவால் விடும் அளவுக்கோ இல்லை.

அரையிறுதியில் நியூ சீலாந்து அணி தடைதாண்டி, இறுதிப் போட்டிக்கு வர உதவிய ஹீரோவான எலியட், அந்தப் போட்டியில் இருந்த அதே மன நிலை & அதேவிதமான அடித்தாடும் ஆற்றலைத் தொடர்ந்தார்.
மிகத் துல்லியமாக பந்துவீசிக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அவ்வாறு எதிர்கொண்டு நிதானமாகவும் வேகமாகவும் ஆடுவது என்பது இலகுவான காரியமல்ல. 

இந்த இணைப்பாட்டத்தை உடைத்தவர் முக்கியமான விக்கெட்டுக்களை தொடர் முழுவதும் எடுத்த ஜேம்ஸ் போல்க்னர். 
ரொஸ் டெய்லர் ஹடினின் அபார பிடிஎடுப்பு ஒன்றுக்கு ஆட்டமிழக்க, அடுத்த இரு பந்துகளில் போல்க்னர் வீசிய அருமையான பந்து ஒன்று, பயங்கரமான அதிரடி வீரர் அன்டர்சனை ஆட்டமிழக்கச் செய்தது.

மக்கலம் போலவே அன்டர்சனும் பூஜ்ஜியம்.

இந்த ஆட்டமிழப்புக்கள், அதுவும் இடது கை வேகப்பந்து வீச்சாளரால் கைப்பற்றப்பட்ட சடுதியான இரு விக்கெட்டுக்கள் 1992இல் இதே மெல்பேர்னில் வசீம் அக்ரம் அடுத்தடுத்து வீழ்த்திய இங்கிலாந்து விக்கெட்டுக்களை ஞாபகப்படுத்தியது.

மிக எதிர்பார்க்கப்பட்ட 'முன்னாள் ' அவுஸ்திரேலியரான ரொங்கியும் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு நியூ சீலாந்து அணியை வாரிச் சுருட்டியது.

அவுஸ்திரேலிய பந்துவீச்சும், அதற்குத் துணை நின்ற களத்தடுப்பும்,சமயோசிதமாகவும், அதேவேளையில் எதிரணியை கூடுமான விரைவில் ஆட்டமிழக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கிலும் அணியை வழிநடத்திய தலைவர் கிளார்க்கும் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால், பொதுவாகவே கண்ணியமான, பழகுதற்கினிய நியூ சீலாந்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறும்போது தகாத வார்த்தைகள், மற்றும் கோபப்பட்டுத்தும் வசைகளுடன் வழியனுப்பியது வேண்டாத செயலாகவே தெரிந்தது.
அதிலும் சிறப்பாக ஆடிவிட்டு களம் விட்டு நீங்கிய எலியட், நேற்றைய போட்டியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்த அமைதியான மனிதர் வெட்டோரி ஆகியோரையும் திட்டி அனுப்பியது அவுஸ்திரேலிய அணியின் மற்றொரு குரூர முகத்தைக் காட்டிய செயல்கள் ; அவுஸ்திரேலிய ரசிகர்களுக்கே இந்த செயல் மகிழ்ச்சியளித்திராது.

நியூ சீலாந்து  பெற்ற 183 ஓட்டங்கள், 1983 உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி பெற்ற ஓட்ட எண்ணிக்கையை ஞாபகப்படுத்தியது. அந்தப் போட்டியில் இந்தியா தன்னுடைய மிதவேகப் பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சினால் பலமான மேற்கிந்தியத் தீவுகள் அணியையே சுருட்டி 40 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்றதும் பலருக்கு ஞாபகம் வந்திருக்கும்.
ஆனால், இந்த அவுஸ்திரேலிய அணி தமக்குக் கிடைத்த வாய்ப்பை விடுகின்ற அளவுக்கு தடுமாறக்கூடிய அணி அல்ல.

மீண்டும் ஒரு தடவை அவுஸ்திரேலிய ஆரம்ப இணைப்பு சறுக்கியது.
நியூ சீலாந்தின் ஐவர் பெற்ற பூஜ்ஜியங்களுக்கு அடுத்தபடியாக ஏரொன் ஃபிஞ்ச் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
நியூ சீலாந்து மகிழ்ச்சியடையக் கூடியதாக இருந்த ஒரே சந்தர்ப்பம் இது தான்.

முதலில் வோர்னரின் அதிரடி,பின்னர் தனக்கேயான நாளாக நேற்றைய நாளை - தன்னுடைய ஒருநாள் சர்வதேசப் போட்டியின் இறுதி நாளை மாற்றிய தலைவர் கிளார்க்கின் அற்புத ஆட்டம், இவை இரண்டையும் சரியாக செலுத்தும் நிதானமான மற்றொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியாவின் எதிர்கால நாயகன் ஸ்டீவ் ஸ்மித் இவற்றோடு அவுஸ்திரேலிய வெற்றி இலகுவானது.

ஸ்டீவ் ஸ்மித் 5வது தொடர்ச்சியான 50க்கு மேற்பட்ட ஓட்டப்பெறுதியை நேற்றுப் பதிவு செய்து உலகக்கிண்ண சாதனையை ஏற்படுத்தினார்.
ஸ்மித் 3ஆம் இலக்கத்தில் வந்த பிறகு அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் உறுதியுடன், வலிமைப்பட்டுள்ளது.
வழமையாக வந்தவுடன் வேகமாக அடித்தாடி தான் ஆதிக்கம் செலுத்தும் ஸ்மித், நேற்றைய சத இணைப்பாட்டத்தில் தனது தலைவர் கிளார்க்கை அடித்தாட விட்டு அழகு பார்த்தார்.

ஸ்மித்தின் அழகான, நிதானமான ஆட்டம் கண்டு ஒரு தடவை ஹென்றி வீசிய பந்து விக்கெட்டில் படும், பெயில் கீழே விழாமல் மரியாதை செய்திருந்தது.

72 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த கிளார்க், ஒரு லட்சத்தை அண்மித்த ரசிகரின் கரகோஷத்துடனும் மரியாதையுடனும் நியூ சீலாந்து வீரர்களின் வாழ்த்துக்களோடும் விடைபெற்றார்.

அதன்பின் வொட்சன் உள்ளே வர, ஸ்மித்தின் துடுப்பினால் பெறப்பட்ட 4 ஓட்டம் ஒன்றுடன் மீண்டும் ஒரு உலகக்கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது.

உலகக்கிண்ண அணியில் இடம்பெறுவாரா என்பதுவும், பின்னர் பதினொருவரில் இடம்பிடிப்பாரா என்பதும் கேள்விக்குறியாகவிருந்த வொட்சன் ஆடுகளத்திலே நிற்க,எதிர்கால அவுஸ்திரேலியா நம்பியிருக்கும் அடுத்த தலைவரும்,நம்பிக்கை நட்சத்திரமுமான ஸ்மித்தின் துடுப்பின் மூலம் வெற்றி ஓட்டம் பெறப்பட்டது சிறப்பு.

1992இல் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு கூட வர முடியாமல் போன ஏமாற்றம், இம்முறை தங்கள் மைதாந்திளித்தனை மக்களுக்கு முன்னால் பெறப்பட்டது வரலாறில் இடம்பிடிக்கும் ஒரு மாபெரும் பெற்றி.
இப்போது அவுஸ்திரேலிய அணி மட்டுமே அத்தனை கண்டங்களிலும் உலகக்கிண்ணம் வென்றுள்ள ஒரே அணி.

101 பந்துகள் மீதம் இருக்க இலகுவான வெற்றியைப் பெற்ற அணி, இந்த வெற்றியை தங்கள் தலைவர் மைக்கேல் கிளார்க் சொன்னதன் படி, தங்கள் மரித்துப்போன வீரன் பிலிப் ஹியூசுக்கு அர்ப்பணித்தது.

கோலாகலமான கொண்டாட்டங்களின் மத்தியில், தனது ஓய்வை உலகக்கிண்ண வெற்றியுடன் பெருமையுடன் அறிவித்த கிளார்க் (இன்று அவருடன் விக்கெட் காப்பாளர் பிரட் ஹடினும் சேர்ந்துகொண்டார்), தங்களது பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், தங்களது வீரர்கள் அத்தனை பேரையும் பூரண உடற்தகுதியோடு வைத்திருக்கும் அணியின் உதவியாளர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்களையும் நட்ரியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

ஒரு தலைவனாக முன்னின்று சரியான பாதையில் செலுத்தி,அணியாக அத்தனை பேரையும் ஒற்றுமைப்படுத்தி, இறுதிப் போட்டியில் தானே ஓட்டங்களைக் குவித்து, தன்னைப் பற்றியிருந்த அவநம்பிக்கைகளையும் போக்கி பெருமிதமாக கிளார்க் விடைபெற்றிருக்கிறார்.

மறுபக்கம் 8 போட்டிகளைத் தொடர்ந்து வென்று வந்து, இறுதிப்போட்டியில் தோற்றுப்போன நியூ சீலாந்து ரசிகர்களின் அன்பை வென்றுகொண்டது.
இந்த அவுஸ்திரேலிய அசுரப் புயல் முன் எந்த அணியும் நின்றிருக்க முடியாது என்பதே உண்மை.
ஆனால், இப்படியொரு வாய்ப்பு இனியொரு தடவை நியூ சீலாந்துக்கு கிட்டுமா என்பதும் சந்தேகமே.
பெரிய இறுதிப்போட்டிகள் வந்திராத அனுபவக் குறைவும், அழுத்தமும் மக்கலமின் திறமையான அணியை சறுக்கிவிட்டது நேற்று.
2011இல் நம்மவர் முத்தையா முரளிதரன் போல, நேற்றைய தோல்வியுடன் நியூ சீலாந்தின் டானியல் வெட்டோரி ஒய்வு பெறுகிறார்.

முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களை உடைத்த போல்க்னர் போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
38 சதங்கள் குவிக்கப்பட்ட (இவற்றில் இரண்டு இரட்டைச் சதங்கள்), போட்டியொன்றுக்கு கிட்டத்தட்ட 10 சிக்சர்கள் வீதம் பெறப்பட்ட, துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்த உலகக்கிண்ணத் தொடரின் , தொடர் நாயகன் விருது 22 விக்கெட்டுக்களை 10க்கு அண்மித்த சராசரியில் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் இடது கை இளமைப் புயல் மிட்செல் ஸ்டார்க்குக்குக் கிடைத்தத, மிகப்பொருத்தமும், அவரது முயற்சிக்கும் ஆற்றலுக்குமான பரிசேயாகும்.

இந்தியாவின் கிரிக்கெட் 'கடவுள்' சச்சின் டெண்டுல்கரைக் கொண்டு இந்த விருதுகளை வழங்க வைத்தது கிரிக்கெட்டுக்கும் பெருமையாகும்.

அவுஸ்திரேலியா கைப்பற்றிய உலகக்கிண்ணம் மற்ற அணிகளை விட 1987 முதல், இந்த 30 ஆண்டுகளில் கிரிக்கெட்டின் ஆதிக்கம் என்தாநியிடம் இருக்கிறது என்பதை மீண்டும் அறுதியிட்டு சொல்லியிருப்பதோடு, மைக்கேல் கிளார்க்கையும் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தலைவராக உறுதியாக காட்டிவிட்டு செல்கிறது.

ஆனால், மற்ற அணிகளின் தலைவர்கள் விடைபெறும்போது விட்டுச் செல்லும் பாரிய வெற்றிடம் போல இல்லாமல்,கிளார்க் அடுத்த தாசப்த காலத்துக்காவது உலகை ஆட்டிப்படைக்கப் போகும் ஒரு கிரிக்கெட் அணியையும், அந்த அணியை வழி நடத்தப்போகும் தற்காலிகத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி, மற்றும் நீண்டகாலத்துக்கான இளமைத் தெரிவு ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரையும் அடையாளம் காட்டிவ்ட்டு விடைபெற்றுள்ளார்.

இலங்கையின் கிரிக்கெட் சிகரங்கள், உலக கிரிக்கெட்டில் உன்னத இடம்பிடித்த மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார மற்றும், பாகிஸ்தானின் ஷஹிட் அப்ரிடி, மிஸ்பா உல் ஹக், சிம்பாப்வேயின் நம்பிக்கை நாயகன் பிரெண்டன் டெய்லர் ஆகியோரின் ஓய்வுகளை நெகிழ்ச்சியோடு பார்த்த எமக்கு,இன்னும் முக்கிய மூன்று முத்துக்களின் ஓய்வையும் தந்து அவுஸ்திரேலியா என்ற பொருத்தமான இடத்தை தெரிவு செய்து உலகக்கிண்ணம் விடைபெற்றுள்ளது.

தனது 'இளைய சகோதரன்' பிலிப் ஹியூசுக்கான அர்ப்பணமாக உலகக்கிண்ணத்தை தானே வென்று, அணிக்கும் நாட்டுக்கும் ரசிகருக்கும் பெருமை தேடி, தான் உப தலைவர் ஆக இருந்தபோது இந்தியாவிடம் இழந்த கிரீடத்தை, சொந்த மண்ணில் வென்று கொடுத்துப் பெருமையுடன் விடைகொள்கிறார் கப்டன் கிளார்க்.

இந்த அவுஸ்திரேலிய அணி இனி பொறுப்பான கைகளில் என்பது உறுதி.
கிளார்க் சேர்த்த பெருமைகளுடன் தனது பாணியிலான புதுமைகளோடு ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியை வழிநடத்துவார் என்பது உறுதி.

March 28, 2015

கங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா? அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா?

48 போட்டிகள், 42 நாட்கள்..
என்ன வேகமாக ஓடி முடிந்திருக்கின்றன..

எப்போது ஆரம்பிக்கும் என்று பார்த்துக் காத்து, பின்னர் ஒவ்வொரு போட்டியாக பார்த்து பார்த்து, திடீரென பார்த்தால், நாளை உலகக்கிண்ண இறுதிப்போட்டி.

இந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய, மற்ற அணிகளை விட சமபலமும் கொண்ட இரண்டு அணிகள், அதிலும் பக்கத்து பக்கத்து நாடுகள், போட்டிகளை நடத்துகின்ற இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் நாளை இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.

இந்த உலகக்கிண்ணப் போட்டியில் இதற்கு முன் சந்தித்த அணிகள் மீண்டும் சந்திக்கும் முதன்முறை, அதுவும் இறுதிப் போட்டியில்.

11வது தடவையாக நடைபெறும் உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா விளையாடும் 7வது உலகக்கிண்ண இறுதிப் போட்டி இது.
இதுவரை அவுஸ்திரேலியா விளையாடியுள்ள 6 உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் 4இல் கிண்ணம் வென்றுள்ளது.

நியூ சீலாந்துக்கு இது 6 அரையிறுதி மனவுடைவுகளுக்குப் பிறகு முதலாவது இறுதிப் போட்டி.

உலகக்கிண்ண வரலாற்றில் இவ்விரு அணிகளுமே கூடுதலான வெற்றிகளைப் பெற்றுள்ள அணிகள்.
அவுஸ்திரேலியா 61 வெற்றிகள்.
நியூ சீலாந்து 48 வெற்றிகள்.

இதுவரை இந்த உலகக்கிண்ணப் போட்டியில் எந்தவொரு போட்டியிலும் தோற்காத ஒரே அணி நியூ சீலாந்து.
அவுஸ்திரேலியா இந்த நியூ சீலாந்திடம் மட்டும் முதற்சுற்றில் ஒரு தோல்வியைக் கண்டுள்ளது.
அதுவும் கடைசி விக்கெட்டில், மிக விறுவிறுப்பான ஒரு போட்டியில்.

இதுவரை உலகக்கிண்ண வரலாற்றில், எந்தவொரு போட்டியிலும் தோற்காமல் இறுதிப் போட்டிக்கு வந்த அணிகளில்,
மேற்கிந்தியத் தீவுகள் (1975,1979), இலங்கை (1996), அவுஸ்திரேலியா (2003, 2007) ஆகிய அணிகள் கிண்ணம் வென்றவை.

இங்கிலாந்து அணி 1979இல் எந்தவொரு போட்டியிலும் தோற்காமல் இறுதிப் போட்டிக்கு சென்று மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றிருந்தது.

அவுஸ்திரேலிய - நியூ சீலாந்து அணிகள் டாஸ்மன் நீரினையினால் பிரிக்கப்பட்ட, நெருக்கமான உறவுகள் கொண்ட அயல் நட்டுகலாக இருந்தாலும், கிரிக்கெட் ரீதியில் இவை இரண்டுமே பரம வைரிகள் போல மோதிக்கொள்வதுண்டு.

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் மேலாதிக்கமும், மற்ற அணிகளைக் கணக்கெடுக்காத தன்மையுமே அதற்கான முக்கியமான காரணம்.
நீண்ட காலம் அவுஸ்திரேலியா நியூ சீலாந்துடன் விளையாடாத ஒரு காலமும் இருந்தது ; தற்போதும் BIG3 களில் ஒன்றாக இருக்கும் அவுஸ்திரேலியா, நியூ சீலாந்தை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.
(அவுஸ்திரேலியாவில் இறுதியாக நியூ சீலாந்து ஒரு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியது 2009இல்)
இதனால் தான் நியூ சீலாந்து அணிக்கு உலகம் முழுவதும் ஏனைய நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது.

இதுவரைக்கும் உலகக்கிண்ண முதற்சுற்றுப் போட்டி தவிர்ந்த knock out போட்டியொன்றில் ஒரேயொரு தடவை சந்தித்த நேரம் ஏராளமான ஓட்டக்குவிப்பில் அவுஸ்திரேலியா வெற்றி ஈட்டியது.
(1996 உலகக்கிண்ணத்தின் காலிறுதிப் போட்டி)

மொத்தமாக 9 உலகக்கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலியா 6 போட்டிகளில் வென்றுள்ளது, நியூ சீலாந்து 3 போட்டிகளில் வென்றுள்ளது, இதில் இரண்டு போட்டிகள் நியூ சீலாந்தில் விளையாடப்பட்டவை.

இதேபோல இரண்டுக்கு மேற்பட்ட நாடுகள் பங்குபற்றும் கிண்ணத்தொடர் ஒன்றில் இறுதிப்போட்டி ஒன்றில் நியூ சீலாந்து அவுஸ்திரேலியாவை ஒரே ஒரு தடவை தான் வென்றுள்ளது.
அது 34 ஆண்டுகளுக்கு முதல்.
அதற்குப் பின் 12 தடவைகளும் அவுஸ்திரேலியாவுக்கே வெற்றி.
இறுதியாக 2009 சம்பியன்ஸ் கிண்ணம்.


ஆடுகளத் தன்மைகள், அவுஸ்திரேலியாவில் போட்டி இடம்பெறுவது, மெல்பேர்ன் மைதானம்...
இப்படி சகல சாதகத் தன்மைகளும் நியூ சீலாந்துக்கு எதிராகவே நாளைய போட்டியில் இருக்கின்றன.


மிக முக்கியமாக இதுவரை தனது அத்தனை போட்டிகளையும் சொந்த நாட்டிலேயே விளையாடிவிட்டு, முதன்முறையாக ஒரு ஆவேசமான, பழிவாங்கும் வெறியோடு காத்திருக்கும் ராட்சதனை அவனது பாசறையிலேயே சந்திக்கும் நடுக்க நிலையில் நியூ சீலாந்து.

(கிட்டத்தட்ட 2011இல் இலங்கையின் நிலை. ஆனால் 2011 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி இடையில் ஒரு முதற்சுற்றுப் போட்டியில் நியூ சீலாந்தை இறுதிப் போட்டியை விளையாடிய அதே வன்கடெ மைதானத்தில் சந்தித்திருந்தது)

இதுவரைக்கும் பொதுவாகவே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான பெறுபேறுகளைக் காட்டியிராத நியூ சீலாந்து, 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் விளையாடவுள்ள ஒருநாள் போட்டி என்னும்போது, இறுதிப்போட்டியின் அழுத்தமும் சேர்ந்துகொள்ளப் போகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நியூ சீலாந்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டி பெறுபேறுகள்.


எனினும் மெல்பேர்ன் மைதானத்தில் இவ்விரு அணிகளும் இறுதியாக சந்தித்த 5 போட்டிகளில் நியூ சீலாந்து 3இல் வென்றுள்ளது.

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் மைதானத்தில் விளையாடியுள்ள 10 போட்டிகளில் 8இல் வென்றுள்ளது. அதிலும் கடைசி 6 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றி.
இறுதியாக 2012இல் இலங்கை அணியிடம் மட்டுமே தோற்று இருக்கிறது.

------------

அவுஸ்திரேலியர்கள் தங்களது வழமையான மனோவியல் தாக்குதல்களை நியூ சீலாந்து அரையிறுதியில் வென்று அவுஸ்திரேலியாவுக்குள் கால் பதித்த உடனேயே ஆரம்பித்துவிட்டார்கள்.

நியூ சீலாந்தின் சிறிய மைதானங்களில் விளையாடிய மக்கலம் குழுவினர், மெல்பேர்ன் என்ற பிரம்மாண்டமான மைதானத்தில் தடுமாறுவார்கள் என்று கேலி செய்யும், #MCGsoBIG hashtag ட்விட்டரில் உலா வருகிறது.

முதற்சுற்றில் தோற்றதற்கு பழிவாங்கவும், தங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் நியூ சீலாந்தை வீழ்த்தவேண்டும் என்ற மனோநிலையிலும் அவுஸ்திரேலியர்கள் காத்துள்ளனர்.

இன்னும் 4 விடயங்கள் நியூ சீலாந்துக்கு பாதகமாக உள்ளன.

1.நியூ சீலாந்து ஆடுகளங்கள் போல மெல்பேர்ன் ஸ்விங் ஆகாது 
2.மைதானத்தின் பிரம்மாண்டம், நியூ சீலாந்து வழமையாக ஆடுவது போல இலகுவாக 6, 4 வராது 
3.இவ்வாறான 'பெரிய' போட்டிகளின் அனுபவக் குறைவு 
4. முன்பு நியூ சீலாந்தில் வைத்து வீழ்த்திய அவுஸ்திரேலியாவை விட இப்போது பலமாக உள்ள அவுஸ்திரேலியக் கட்டமைப்பு.

-------------

துடுப்பாட்ட வரிசைகள் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று நிகரானவை எனினும் பிரெண்டன் மக்கலமின் அதிரடி ஆரம்பமும், கோரி அன்டர்சனின் நிறைவு செய்யும் தன்மையும் நியூ சீலாந்தை இப்போது பலமானதாக காட்டுகிறது.
மக்கலம் நீண்ட நேரம் நின்றால் அது தரும் பாதிப்பு அதிகம் தான். ஆனால் அவரது ஆவேச அதிரடி சில ஓவர்களுக்கு நிற்பது நியூ சீலாந்துக்கு பலவீனமானது.

அண்மைய இரட்டைச் சதா ஹீரோ கப்டில் தொடரில் கூடுதல் ஓட்டங்கள் குவித்த சங்கக்காரவுக்கு சவால் விடும் அளவுக்கு முன்னேறி வந்துள்ள, நிதானமான துடுப்பாட்ட வீரர்.
(நாளை 9 ஓட்டங்களுக்குள் அவரை அவுஸ்திரேலியா வீழ்த்தி இலங்கை அணிக்கு இந்த ஒரேயொரு பெருமையையாவது வழங்கும் என எதிர்பார்க்கிறேன்)

இதுவரை தொடரில் கூடுதல் ஓட்டங்கள் குவித்தோர் கேன் வில்லியம்சன் இந்தத் தொடரில் தன்னுடைய மிகப்பெரிய பங்களிப்பை முக்கியமான நாளைய போட்டியில் வழங்குவார் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
ரொஸ் டெய்லர் என்ன தான் இந்தத் தொடரில் சற்றுத் தடுமாறி வந்தாலும், உலகத் தரமான துடுப்பாட்ட வீரர்.

க்ராண்ட் எலியட் தான் யார் என்பதை அரையிறுதிப் போட்டியில் காட்டியதால் அவுஸ்திரேலியர்கள் அவரையும் குறித்து வைக்கவேண்டியிருக்கும்.

தான் அறிமுகமான அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவே உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ள லூக் ரொங்கி இன்னொரு ஆபத்தான அதிரடி வீரர். தனது முன்னைய அணிக்கு எதிராக நாளை சிறப்பாக செய்துகாட்ட ஆசைப்படுவார்.

மறுபக்கம் அவுஸ்திரேலியாவுக்கு வோர்னர் - பிஞ்ச் நாளையாவது சிறப்பான ஒரு ஆரம்ப இணைப்பாட்டம் தரவேண்டும் என்பதே அவுஸ்திரேலியர்களின் எதிர்பார்ப்பு.
தனித்தனியாக இருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளுத்துவாங்கினாலும் சேர்ந்து உறுதியான ஆரம்பம் ஒன்று தந்தால் உலகக்கிண்ணம் கைகளில்.

ஸ்டீவ் ஸ்மித் - அவுஸ்திரேலியாவின் தற்போதைய துடுப்பாட்ட முதுகெலும்பு. இவரைச் சுற்றியே அவுஸ்திரேலிய அணியின் பெரிய ஓட்ட எண்ணிக்கைகள் பின்னப்படுவதால், நாளை நியூ சீலாந்தின் முழுக்கவனமும் இவரை ஆட்டமிழக்கச் செய்வதில் இருக்கும்.

இவரைப்போலவே மக்ஸ்வெல். ஆனால், மக்கலம் போலவே அடித்தாடுவதில் தீவிர ஆவேசம் காட்டும் மக்சி நீண்ட நேரம் நிற்காமல் குறுகிய நேரத்திலேயே வெளுத்துவாங்கிவிட்டுப் போவது கொஞ்சம் ஏமாற்றமே.

தலைவர் கிளார்க் நாளை தன்னுடைய இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டி என்று அறிவித்திருப்பது நாளைய போட்டியில் அவரது பெறுபேற்றையும், கிண்ணத்தின் வெற்றியையும் இன்னும் அதிகமாக்கி இருக்கிறது.

இன்னும் 93 ஓட்டங்களை (நாளைக்கு கிளார்க் சதத்துடன் விடைபெறவேண்டும் என்பது ரசிகனாக என் ஆசை) பெற்றால் 8000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்கள் பூர்த்தியாகும்.

கிளார்க் இந்த உலகக்கிண்ணத்தை வென்ற பிறகு தனது ஓய்வை அறிவிப்பார் என்று பார்த்தால், போட்டிக்கு முன்னதாகவே சொல்லி ஆச்சரியமூட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியர்கள் பொதுவாக இப்படி இருப்பதில்லை.

தடுமாற்றத்திலிருந்து இன்னமும் விடைபெறவேண்டிய வொட்சன், பெரிதாக துடுப்பாட வாய்ப்புக் கிடைக்காத ஹடின், கிடைத்தபோதெல்லாம் வேகமாக வெளுத்து வாங்கிய ஜோன்சன், போல்க்னர் என்று அவுஸ்திரேலிய வரிசை நீண்டதே.

--------------

பந்துவீச்சில் தான் பயங்கரப் போட்டி..

உலகக்கிண்ணத்தில் அதிக விக்கெட் எடுத்தோரைப் பார்த்தாலே இந்தப் போட்டி புரியும்.போல்ட் மற்றும் ஸ்டார்க் ஆகிய இரு இடது கை வேகப்பந்து வீச்சாளர்க்கிடையிலான நேரடிப் போட்டி.
இரண்டுபேருமே இந்த உலகக்கிண்ணத்தில் துடுப்பாட்ட வீரர்களை பயமுறுத்தி விக்கெட்டுக்களை அள்ளி வருகின்றனர்.
இவர்களுக்குத் துணையாக டிம் சௌதீ, அண்டர்சன் ஆகியோர் இருந்தாலும், நியூ சீலாந்துக்கு மில்ன் காயமுற்றது பெரும் பாதிப்பே.
ஆனால் சுழல்பந்து வீச்சாளர் டானியேல் வெட்டோரி நாளை ஒரு முக்கிய துரும்புச் சீட்டாக விளங்கக்கூடும்.
அவரது அனுபவமும், ஆடுகள சாதகத் தன்மையும் அவுஸ்திரேலிய அதிரடி வீரர்களையும் திணறடிக்கலாம்.

வெட்டொரிக்கு நிகராக அவுஸ்திரேலியாவில் சுழல்பந்துவீச்சாளர் இல்லாத குறையை மைக்கேல் கிளார்க்கின் பல சமயங்களில் எதிரணிகளை உருட்டி எடுக்கும் இடது கை நாளை மாயாஜாலம் காட்டுமா?

ஆனால், நாளைய தினம் ஜோன்சன் நிச்சயம் அவுஸ்திரேலிய அணியின் பலத்துக்கு ஒரு அடையாளாமாக திகழ்வார் என நம்புகிறேன். முக்கியமான போட்டிகளில் அசுர பலம் பெறும் ஜோன்சன் அரையிறுதியில் சகலதுறை திறமை காட்டிய form மேலும் தெம்பு தரும்.

அதேபோல விக்கெட்டுக்களை சரிக்கும், நிதானமான ஜோஷ் ஹேசில்வூட்டும், தனது திறமையினால் சேர்த்த ரசிகர்களை விட,வாய் சவடால்கள் மற்றும் வம்புச் சண்டைகளால் எதிரிகளை சேர்த்துள்ள ஜேம்ஸ் போல்க்னரும் முக்கிய விக்கெட்டுக்களை உடைக்கக் கூடியவர்கள்.

சில,பல ஓவர்களுக்கு மக்ஸ்வெல் மற்றும் வொட்சன் இருக்கிறார்கள்.

-----------------
களத்தடுப்பில் இரண்டு அணிகளுமே உலகின் இரண்டு மிகச்சிறந்த அணிகள்.
சாகசக் களத்தடுப்பு பலவற்றை நாளை காணலாம்.
---------
1996 முதல் இலங்கை இல்லாமல் உலகக்கிண்ணம் இல்லை என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடும், இன்றேல் ரஞ்சன் மடுகல்ல போட்டித் தீர்ப்பாளராக இருந்துவந்துள்ளார்.

இம்முறை இலங்கை அணி காலிறுதியோடு போனாலும், நாளைய இறுதிப் போட்டியில் நடுவர் குமார் தர்மசேன.
இப்போதைய நடுவர்களில் மிகச் சிறந்தவராகக் கணிக்கப்படுகிறார் தர்மசேன.
விளையாடும் வீரர்களால் மிகக் குறைந்தளவு விமர்சிக்கப்படுபவரும், தவறான தீர்ப்புக்களை மிகக் குறைந்தளவில் வழங்குபவரும் இவர் என்று பாராட்டப்படுகிறார்.

அவருடன் போட்டித் தீர்ப்பாளராக மீண்டும் ரஞ்சன்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ரஞ்சன் மடுகல்ல கனவான் தன்மையான, மிக நேர்மையான ஒருவர் என பெயர் எடுத்தவர்.

தர்மசேன இதன் மூலம் உலகக்கிண்ணப் போட்டி ஒன்றின் இறுதிப் போட்டியில் விளையாடியவராகவும் (1996இல் கிண்ணம் வென்ற வீரர்), நடுவராகவும் கடமையாற்றியவராகவும் பெருமை பெரும் ஒரே ஒருவர் தர்மசேன மட்டுமே.

-----------------------------------


பல காரணிகளால், நாளைய இறுதிப்போட்டி, ஒரு மிக நெருக்கமான போட்டியாக, இறுதி ஓவர் வரை செல்லாது  அவுஸ்திரேலியா இலகுவான வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நான் இலங்கை அணிக்குப் பிறகு எப்போதுமே அவுஸ்திரேலிய ரசிகனாக இருந்தாலும், நியூ சீலாந்து போன்ற ஒரு அணியை வெறுப்பது கடினம்,
அவர்கள் விளையாடுவதும், இறுதிவரை போராடுவதும், எதிரணிகளை கௌரவப்படுத்துவதும் அவ்வளவு அழகும் ரசனையும்.

வழமையாக என்றால், அவர்கள் வென்றாலும் கவலையுறப்போவதில்லை.
ஆனால், நாளை சில முக்கிய காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்.

அவற்றில் முதலாவது நான் முதலாவது போட்டி முதல் ரசித்து வரும் ஒரு ஹீரோ மைக்கேல் கிளார்க்.
ஒரு உலகக்கிண்ண வெற்றியுடன் இவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கலக்கவேண்டும்.
எனக்கு பிடித்த இரு ஹீரோக்கள் மஹேல, சங்கா இருவரும் உலகக்கிண்ணம் ஒன்று இல்லாமல் விடைபெற்றது போல கிளார்க்கும் ஆகிவிடக்கூடாது என்று விரும்புகிறேன்.
(கிளார்க் பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்- "இப்பிடி நீங்க சொன்னவை ஏராளமாக இருக்கு" என்று எவனடா முணுமுணுக்கிறது ?)

அடுத்து ஒரு அணியாக இந்தத் தொடரில் பூரண பலத்துடன் தெரிந்த இரு அணிகளில் அவுஸ்திரேலியா மட்டுமே சகல சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளது.
(நியூ சீலாந்துடன் தோல்வியுற்ற போட்டியிலும் அந்த இறுதி வரையான போராட்டம் எல்லா அணிகளாலும் முடியாது)

பிலிப் ஹியூசின் கிரிக்கெட்டோடு கலந்த ஆன்மாவுக்காக 

மிட்செல் ஜோன்சனுக்கு உலகக்கிண்ணம் விளையாடும் இறுதி வாய்ப்பு.

எல்லாவற்றையும் விட, இலங்கைக்கு கிடைக்காவிட்டால் அது அவுஸ்திரேலியாவுக்கு, அவர்களது திறமைக்குக் கிடைக்கட்டும்.

ஆனால்,இதையெல்லாம் கடந்து நியூ சீலாந்து சிறப்பாக விளையாடி வென்றால், அவர்களை மதிக்கத் தான் வேண்டும்; பாராட்டத் தான் வேண்டும்.
மக்கலமின் தலைமையில் மிக சிறப்பாக, தகுதியான, சிறப்புத் தேர்ச்சி பெற்ற, பார்த்து ரசிக்கவைக்கின்ற வீரர்களோடு விளையாடி வரும் அந்த அணி கிரிக்கெட்டுக்கு தேவை.

(என்ன, மக்கலம் இன்றைய இந்தியாவில் வாழும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான கடிதம் என்று விளம்பரத்துக்காக ஒரு முட்டாள்தனம் செய்திருக்கிறார். இதற்காக எல்லாம் நியூ சீலாந்து தோற்கவேண்டும் என்று யோசிப்பவன் நான் அல்ல. ஆனாலும் இதெல்லாம் மக்கலம் போன்ற ஒரு அற்புதமான வீரனுக்குத் தேவையா?)

ஆனால், மக்கலமின் வியாபார, விளம்பர யுக்திக் கடிதத்தை விட, 1992இல் இறுதிப்போட்டிக்கு வந்து கிண்ணத்தை வெல்லக் கூடிய வாய்ப்புடையவராக இருந்த முன்னாள் நியூ சீலாந்து அணித் தலைவர் மார்ட்டின் க்ரோ எழுதியுள்ள உருக்கமான கடிதம்/கட்டுரை மனதைத் தொடுவது.
புற்றுநோயோடு போராடும் க்ரோ, தனது உடல்நிலையோடு இனி எந்தவொரு போட்டியையும் (நேரடியாக, மைதானத்தில்) பார்ப்பாரோ என்பது உறுதி இல்லாத நிலையில், இந்த போட்டியும், இதிலே நியூ சீலாந்து அடைகிற வெற்றியோடும் இறுதி சில நாட்களில் இருந்துவிட்டுப் போகிறேன் என்று குறிப்பிட்டிருப்பது யாருக்குமே மனதை நெகிழவைக்கக் கூடியது.

நாளை நல்ல போட்டியொன்றை எதிர்பார்க்கிறேன்.
கிரிக்கெட்டின் மகத்துவதொடு போட்டி இடம்பெற்று தகுந்த அணி, சிறந்த அணி வெல்லட்டும்.
அவுஸ்திரேலியாவின் 5வது உலகக்கிண்ணம் எனக்கு பூரிப்பைத் தரட்டும்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner