April 04, 2012

ஐந்தாவது IPL ஐந்து அணிகள் பற்றி - IPL 2012 அலசல் 2


நானும் அரசியல்வாதியாகிப் போனேனே என்பது தான் கவலை.. சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியல.. (பதிவுலக வாழ்க்கையில் இதென்ன புதுசா? ) ஆனாலும் என்ன முதல் போட்டி முடியிற நேரம் இடுகை வருதில்ல ;)
இதோ IPL 2012 இன் அணிகளின் அலசல் பகுதி 2


முதல் பாகத்தை வாசிப்பதற்கு இங்கே சொடுக்குக..அல்லது கீழே உள்ள சுட்டி வழி செல்க..

ஆரம்பமாகிறது IPL 2012
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்
இல் எப்போதுமே பரபரப்பான அணியாக இருக்கும் அணி - இவர்களது உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக் கானே எப்படியும் அணி தோற்றுக் கொண்டிருந்தாலும் வெல்கின்ற அணிகளை விடப் பிரபலமாக்கிக் காட்டிவிடுவார்.

தொடர்ச்சியாக மண் கவ்விக் கொண்டிருந்த அணி, கடந்த வருடம் கௌதம் கம்பீரின் தலைமையில் உயர்வு கண்டது.
அதை இந்த வருடம் மேலும் தொடரக்கூடிய ஆற்றலும், வீரர்களும் தெரிகிறார்கள்.

உலகின் மிகச் சிறந்த இரு சகலதுறை வீரர்கள் & match winners ஆன ஜக்ஸ் கல்லிஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன், உலகில் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள அதிரடி வீரரான பிரெண்டன் மக்கலம், உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர் ப்ரெட் லீ, தனியாக நின்று போட்டியொன்றின் போக்கை மாற்றக் கூடிய யூசுப் பதான், நெதர்லாந்தின் ரயான் டென் டொச்கட், ஒயின் மோர்கன் ஆகிய மூன்று பெரும், ஆஸ்திரேலியாவின் பிரட் ஹடின், அண்மைக்காலத்தில் வேகமாக முன்னேறி வரும் ஜேம்ஸ் பட்டின்சன் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேனும் இருக்கிறார்கள்.
பலம் வாய்ந்த இந்த நட்சத்திர வரிசையில் இந்தியாவின் எதிர்கால நட்சத்திரங்களில் ஒருவரான மனோஜ் திவாரியும் இருக்கிறார்.

இன்னொரு கவனிக்கக் கூடிய வீரர் வளர்ந்துவரும் இந்திய சுழல் பந்துவீச்சாளரான இக்பால் அப்துல்லா.. அதேபோல தென் ஆபிரிக்காவுக்கான தன் அறிமுகப் போட்டியில் அசத்திய மெர்ச்சன்ட் டீ லங்கேயும் இம்முறை கவனிக்கப் படக் கூடியவர்.

இன்னொரு சுவாரஸ்யமான விடயம், முதலாவது IPL இல் கொல்கொத்தாவுக்காக முதல் போட்டியிலேயே பட்டை கிளப்பிய மக்கலம், கடந்த வருடம் கொச்சின் அணியால் வாங்கப்பட்டிருந்தாலும், இப்போது மீண்டும் தனது முதல் அணிக்கே திரும்புகிறார். கொல்கொத்தா எதிர்பார்த்துள்ள பெரிய மாற்றம் இவரால் கிடைக்குமா என்பது கேள்வியே..

கம்பீர் தனது தலைமைத்துவத்தைத் தேசிய தேர்வாளர்களுக்கும் நிரூபிக்கக் கூடிய வாய்ப்பு ஒன்று அமைகிறது.

அணியின் கட்டமைப்பைப் பார்த்தால் அரையிறுதி உறுதி; ஆனால் ஆடுகளத்தில் ஆடுவது தானே முடிவு சொல்லும்.


மும்பாய் இந்தியன்ஸ்சச்சினின் அணி.. இப்படி சொன்னால் தான் இந்த அணிக்கே அது மகுடம்.
அம்பானியின் அணி; பணக்கார அணி என்பதெல்லாம் அடுத்தவை தான்.
முதலாவது IPLஇல் இருந்து முன்னணி அணி, முக்கியமான அணி, பலமான அணி, நட்சத்திர அணி என்றெல்லாம் உசுப்பேற்றப்பட்டு வந்தாலும், இதுவரை அந்தப் பெயருக்கேற்ற மாதிரிக் கிண்ணம் கிடைக்கவில்லை.
கடந்தவருடம் கொஞ்சம் விஸ்வரூபம் எடுத்தாலும் இறுதியில் கவிழ்ந்துபோனது.
ஆனால் இம்முறை இவ்வளவுகாலமும் இருந்த ஓட்டைகள், ஓடிசல்களை எல்லாம் அடைத்து ஒரு உறுதியான அணியாகக் களம் காண்கிறது.

சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், லசித் மாலிங்க, கெய்ரோன் பொலர்ட், ரோஹித் ஷர்மா, ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகிய நிரந்தர (!!) மும்பாய் இந்தியர்களோடு, இம்முறை ஏலத்தில் மும்பாய் திட்டமிட்டு எடுத்த வீரர்கள் முக்கியமானவர்கள்.

தங்களது கடந்த காலப் பலவீனங்களை உணர்ந்து அவர்கள் தெரிவு செய்த வீரர்களைப் பாருங்கள்....
விக்கெட் காப்புக்கு - தினேஷ் கார்த்திக்
பந்துவீச்சு வரிசையை மேலும் பலப்படுத்த IPLஇன் கூடிய விக்கெட் சேகரிப்பாளர்களான R.P.சிங், பிரக்யான் ஓஜா மற்றும் ஆஸ்திரேலியரான மிட்செல் ஜோன்சன் & கிளின்ட் மக்கே
சகலதுறை வீரர்கள் திசர பெரேரா, ரொபின் பீட்டர்சன்
T20 சர்வதேசப் போட்டிகளில் வேகமான சதம் அடித்து சாதனை படைத்த தென் ஆபிரிக்காவின் ரிச்சர்ட் லெவி
அனுபவம் வாய்ந்த ஹெர்ஷேல் கிப்ஸ் உம் இருக்கிறார்.
இது தவிர கடந்த வருடங்களில் கலக்கிய முனாப் பட்டேல், அம்பாத்தி ராயுடு ஆகியோரும் உள்ளார்கள்.
இவர்களோடு நான் மிக ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் வயது இளைஞன் இருக்கிறார். சூர்யகுமார் யாதவ்.
சாம்பியன் ஆவதற்கு வேறு என்ன வேண்டும்.

ஆனால் சச்சின் ஆரம்பம் முதல் பிரகாசிக்க வேண்டும்; 'முன்னாள்' இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தன்னை எல்லோரும் பார்க்கும் அரங்கில் நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் இல்லாமல் இல்லை.
கடைசி நேரத்தில் சச்சின் தலைமைப் பதவியை ஹர்பஜனுக்குக் கை மாற்றியதும் கவனிக்கக்கூடியது.

ஆனால் சச்சின் இல்லாமல் கடந்த வருடத்தின் Champions Leagueஐ வென்றெடுத்த உற்சாகத்தோடு இருக்கும் மும்பாய் இந்தியன்ஸ் இம்முறை அம்பானியினதும் சச்சினினதும் கனவை நிறைவேற்றும் போலவே தெரிகிறது.

(இந்த இடுகையைத் தட்டிக்கொண்டே இன்றைய முதலாவது போட்டியைப் பார்க்கும் நேரம் நடப்பு சாம்பியன் சென்னை மும்பாயிடம் அடி வாங்கித் திணறுவதைப் பார்த்தாலே மும்பாய் இம்முறை ஏதோ சாதிக்கும் போலவே தெரிகிறது.
ஆனால் சென்னை கொஞ்சம் தாமதமாகத் தான் பிக் அப் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே..)பூனே வொரியர்ஸ்பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டுக் கடந்த ஆண்டில் யுவராஜின் தலைமையில் புஸ் ஆகிப் போன பூனே, இம்முறை யுவராஜ் இல்லாமல், கங்குலி என்ற கிழச் சிங்கத்தின் தலைமையில் தேடித் பொறுக்கி எடுத்த வீரர்களோடு, பெரிய நம்பிக்கையோடு களம் காண்கிறது.

இவ்வளவு நாளும் IPL பக்கம் வராமல் இருந்த ஆஸ்திரேலியத் தலைவர் கிளார்க் முதல் தடவையாக விளையாடுவதும், ஷகிப் அல் ஹசனுக்குப் பிறகு பங்களாதேஷில் இருந்து ஒரு வீரர் (தமீம் இக்பால்) IPLஇல் விளையாடுவதையும் வைத்துப் பார்த்தாலே கங்குலி தன் அணியை எப்படி சிரத்தையோடு தெரிவு செய்துள்ளார் என்பது தெரியும்.

யுவராஜ் இல்லை; காயம் காரணமாக தென் ஆபிரிக்காவின் கிரேம் ஸ்மித் இல்லை; டெல்லியிலிருந்து வாங்கிய சகலதுறை வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் உபாதை  என்ற பெரிய இழப்புக்களை ஈடு செய்ய, நேதன் மக்கலம், அஞ்சேலோ மத்தியூஸ், மார்லன் சாமுவேல்ஸ், முரளி கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா, ஜெசி ரைடர் (குடிகார, குழப்படிகாரன்), ரொபின் உத்தப்பா, வெய்ன் பார்நெல், ஆலோன்சோ தோமஸ், கலும் பெர்குசன் போன்ற தம்மால் முடிந்தளவு தமது உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை வைத்து போராட எண்ணியுள்ளது.

ரொபின் உத்தப்பா, தமீம் இக்பால் ஆரமாப் ஜோடியாக இறங்கினால் எப்படி இருக்கும் என்று இப்போதே ஆர்வம் வருகிறது.
அஷோக் டிண்டா அண்மைக்காலமாக சிறப்பாகப் பந்துவீசி வருவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

மேலே குறிப்பிட்ட முக்கிய வீரர்களுடன் சகலதுறை வீரர்கள் லூக் ரைட், மிட்செல் மார்ஷ், மிதுன் மன்ஹாஸ் (டெல்லியைச் சேர்ந்த இவர் எப்போதுமே தன் பங்களிப்பை உச்சபட்சம் வழங்கக் கூடிய ஒருவர்) இவர்களோடு ஸ்டீவ் 'சகலதுறை' ஸ்மித்தும் இருக்கிறார்.

கங்குலியின் போராட்ட குணமும், சோர்ந்துகிடக்கும் அணியை உத்வேகப்படுத்தி வெற்றிபெறச் செய்யும் குணமும் சரித்திரப்புகழ் பெற்றவையாக இருந்தாலும் இந்தக் குறுகிய ஓவர்கள் T20 போட்டியில் இது இந்த அணியுடன் எவ்வாறு சாத்தியப்படும் என்பது சந்தேகமே.

அரையிறுதி வாய்ப்பு மிக மிகக் குறைவு.ராஜஸ்தான் ரோயல்ஸ்

ஷேன் வோர்னின் மந்திரஜாலத்தால் முதலாவது IPLஇல் வெற்றி மாங்காய் பறித்த ராஜஸ்தான் அதற்குப் பிறகு அதேயளவு அதிர்ஷ்டங்களை அடைய முடியாவிட்டாலும், அதிர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடிய அணியாகவே இருந்துவந்துள்ளது.

முதல் தடவையாக ஷேன் வோர்ன் இல்லாமல் களமிறங்கும் ராஜஸ்தான், வோர்ன் இல்லாமல் பார்க்கையில் அடையாளம் தொலைத்த அணியாகவே தெரிகிறது.

ஆனால் ராகுல் டிராவிட் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கான ஒரு கௌரவமாக ராஜஸ்தான் தலைமைப் பதவியை இப்போது நாம் பார்க்கலாம்.

இந்த அணியின் துருப்புச் சீட்டாக இருக்கக்கூடிய ஷேன் வொட்சன் மே மாத ஆரம்பத்தில் தான் வருவார் என்பது ஒரு பெரிய இழப்பே. (ஆஸ்திரேலிய அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுலா முடிந்த பிறகே வொட்சன் வருவார்)

அனுபவம் நிறைந்த பிரட் ஹொட்ஜ், போல் கொல்லிங்க்வூட், பிரட் ஹொக், ஓவைஸ் ஷா, ஜொஹான் போதா என்ற இந்த வரிசையைப் பார்க்கும்போது ராகுல் டிராவிட் போன்றே ஓய்வே பெற்ற/ பெறும் வயதுடைய வீரர்களின் குழாம் (எழுத்தாளராக அதிகம் பிரகாசிக்கும் ஆகாஷ் சோப்ரா வேறு இந்தக் குழாமில் இருக்கிறார்)என்ற நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் வேகம், தாகம் உடைய இளம் வீரர் தினேஷ் சந்திமால், ஆஸ்திரேலிய மின்னல் வேக ஷோன் டெய்ட், மற்றும் ஷேன் வோர்னினால் பட்டை தீட்டப்பட்ட இளம் வீரர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.
அட மறந்திட்டேன்.. இவர்களோடு இந்தியாவின் அழுகுனிப் பையன் ஸ்ரீசாந்தும் இருக்கிறார்.

பாவம் டிராவிட்.. மிகப்பெரிய சிக்கலான பொறுப்பை சுமக்கப் போகிறார்.

யாரவது ஒருவர் நட்சத்திரமாக எழுந்தால் ஒழிய ராஜஸ்தான் ராஜநடை போடாது.


ரோயல் சல்லேஞ்சர்ஸ் பெங்களுர்பணக்கார, அதிர்ஷ்டக்காரம் அணி; விஜய் மல்லையா எப்பாடுபட்டாவது நட்சத்திர வீரர்களைத் தன் வசம் ஈர்த்து ஏதோ ஒப்பெற்றிவிட்டுக் கொண்டிருக்கிறார் என்ற நிலையை மாற்றி, கடந்த வருட ஏலத்தில் தேவையான வீரர்களை எடுத்து கிட்டத்தட்ட கிண்ணத்தை வென்றெடுக்கும் நிலை வரை வந்தது.
ஆனாலும் வழக்கமான தடுமாற்றம் கவிழ்த்தது. இதுவரை இரண்டு IPL இறுதிப்போட்டிகள், ஒரு Champions League இறுதிப்போட்டியில் வந்து தோற்றுப்போன துரதிர்ஷ்டசாலி அணி இது.
இம்முறையாவது மாற்றிக்காட்டுவார்களா என்பது தான் மல்லையாவினதும், RCBயின் ரசிகர்களினதும் எதிர்பார்ப்பு + ஏக்கம்.
டானியல் வேட்டோரியின் தலைமையில் கடந்த வருடம் பெங்களூரை வீறு நடை போட வைத்த விராட் கோஹ்லி, கிறிஸ் கெய்ல், சாகிர் கான், டேர்க் நன்னஸ், டீ வில்லியர்ஸ், டில்ஷான் ஆகியோரோடு இம்முறை ஏலத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட இலங்கையின் உலகசாதனை நட்சத்திரம் முரளிதரன், அன்றூ மக்டோனால்ட் இவர்களோடு மிலியன் டொலருக்கு வாங்கப்பட்ட இப்போதைய இந்தியாவின் முன்னணிப் பந்துவீச்சாளர் வினய்குமார் ஆகியோர் பலமான அணியொன்றை உருவாக்கி உள்ளார்கள்.

இவர்கள் தவிர தென் ஆபிரிக்காவின் அனுபவம் வாய்ந்த கார்ல் லங்காவேல்ட், இந்தியாவின் எதிர்கால நட்சத்திரம் செடேஷ்வர் புஜாரா, சௌரப் திவாரி, தென் ஆபிரிக்காவின் இளைய வீரர் ரிலீ ரொஸூ, அபிமன்யு மிதுன், அருண் கார்த்திக், மாயன்க் அகர்வால் என்று இன்னொரு நீண்ட இளம் வரிசையும் உள்ளது.

பார்க்கப்போனால் இந்தப் பணக்கார அணி மட்டுமே இப்போதைக்கு மும்பாய்க்கு சவால் விடுக்கக் கூடிய அணியாகத் தெரிகிறது.
(நம்ம முரளிக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கையில் பலம் பற்றி வேறு கேள்வி வேண்டுமா?)

-----------------

இன்றைய முதலாவது போட்டியே நடப்பு சம்பியனுக்கு ஆப்பு வைத்திருக்கையில் இனி நடப்பதை யார் அறிவார்?
ஆனாலும் எனது கணிப்புக்கள் சரியாகப் போனால் அத்தனை புகழும் விக்கிரமாதித்தனுக்கே....2 comments:

Nirosh said...

வணக்கம் அண்ணா... இன்றும் நான்தான் முதல் கருத்துரை இடுகிறேன் ஹாய் ஹுய்.....!!!

வழக்கம்போல பதிவு அருமை...!
இனி அடிக்கடி கிரிக்கெட் பதிவுகள் எனும் நம்பிக்கையுடன் வாழ்த்துகின்றேன்..!

யோ வொய்ஸ் (யோகா) said...

விக்கிரமாதித்தன் வாழ்க...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner