இரண்டரை மணித்தியாலம் இடைவிடாமல் சிரித்து (எதையும் பற்றி யோசிக்காமல்) படம் ஒன்றை ரசித்து எவ்வளவு காலம் ஆச்சு.. அந்தக் குறையைத் தீர்த்து வைத்தது இந்த OKOK .
இயக்குனர் ராஜேஷ் + சந்தானம்.. இவர்களின் இணைப்பில் ஹட் ட்ரிக் இது. சிவா மனசுல சக்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை.. ஆனால் கதையும் நகைச்சுவையும் சேர்ந்து கலக்கியது. அந்த வெற்றியையும் பெற்ற நல்ல பெயரையும் தக்கவைத்துக்கொள்ள கொஞ்சமே கொஞ்சம் கதையைத் தொட்டு ஆர்யா + நயன்தாராவின் நட்சத்திர அந்தஸ்தோடு சந்தானத்தின் நகைச்சுவை சேர்த்துக் கலக்கி மீண்டும் வென்றார் ராஜேஷ்.
இம்முறை கதாநாயகன் புதுசு.. அவரே தயாரிப்பாளர்; நடிப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது. முதல் இரு படங்களிலும் ஹிட் பாடல்களில் கை கொடுத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இல்லை.
இதையெல்லாம் யோசித்த கெட்டிக்காரர் ராஜேஷ் OKOKயில் முழுக்க முழுக்க சந்தானத்தை ஆட, ஆள,அதிகாரம் செலுத்த விட்டிருக்கிறார்.
கதை என்று எதையும் எதிர்பார்க்காமல், லொஜிக், யதார்த்தம், இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் கேள்வி கேட்காமல் பார்த்தோமானால் கொடுத்த காசுக்கு குதூகலமாக சிரித்துவிட்டு வரலாம்.
உதயநிதி கதாநாயகனாக முன்னிறுத்தப்பட்டாலும் சந்தானம் திரையில் வரும்போது தான் படத்துக்கே ஒரு கிக்கு.. சந்தானமே சரணம் என்று விழுந்த இயக்குனர் & தயாரிப்பாளர் கம் கதாநாயகனுக்குக் கை கொடுத்து கை தூக்கி விடுகிறார் சந்தானம்.
ஊர் சுற்றி அலையும் நாயகனுக்கு ஹன்சிகாவை வீதியில் சந்தித்த உடனேயே காதல் பற்றிக்கொள்ள, எதற்கும் துணிந்த எப்போதும் பலிக்கடா ஆக்கப்படுகிற நண்பன் இருக்கையில் என்ன கவலை?
ஆனால் படம் எப்படிப் போகப் போகிறது என்று கதைப் போக்கு தெரிந்தபிறகும் தொய்வில்லாமல், சலிப்பில்லாமல் கொண்டு செல்ல இயக்குனருக்கு நிறைய மசாலாவும் இன்னும் நிறைய தில்லும் வேண்டும்..
ராஜேஷ் அதிலும் ஜெயித்திருக்கிறார்.
உதயநிதி ஒரு மாதிரியாக ஒப்பேற்றிவிட்டார். பவர் ஸ்டாரும் ரித்தீஷும் நம்ம விமர்சக, பதிவுலக சகாக்களிடம் பட்ட பாட்டை இவரும் படுவாரோ என்று பார்த்தால், பாடல் காட்சிகளைத் தவிரவும் ஒரு சில சீரியஸ் காட்சிகள் தவிரவும் உதயநிதி நன்றாகவே செய்திருக்கிறார். கண்கள் தடுமாறுவதைத் தவிர்க்க முக்கால்வாசிக் காட்சிகளில் கூலிங் க்ளாஸ் உதவுகிறது.
நகைச்சுவைக் காட்சிகளில் உதயநிதியை சந்தானம் overtake / dominate செய்து பாஸ் பண்ண வைக்கிறார். தொடர்ந்தும் தானே தயாரித்து நடிக்கப் போகிறாரா என்று தான் தெரியவில்லை.
ஹன்சிகா - சின்னத்தம்பி குஷ்பு என்று ஐஸ் வைக்கிறார்கள்; கிடைக்கிற நேரத்தில் எல்லாம் குண்டு, பூசணிக்கா, ஆடை சரியில்லை என்று வசனங்களில் வாரி விடுகிறார்கள். வேலாயுதத்தில் பார்த்ததை விடக் கொஞ்சம் ஊதிப் பெருத்திருக்கிறார் போல. தமிழ் ரசிகர்களுக்கு இப்படி ஊதிப்பெருத்த உப்பு மூட்டைகளைத் தான் பிடிக்கும் என்று ஏதாவது இலக்கணம் ஏதாவது இருக்கா ஏன்னா?
வழமை போலவே ஹன்சிகாவிடம் நடிப்பைத் தேடவேண்டியே இருக்கிறது. கவர்ச்சியும் அவரிடம் ஹூம்.. அதை ஆபாசம் என்றே சொல்லவேண்டி இருக்கிறது.
அதனாலோ என்னவோ சில காட்சிகளில் பார்க்கப் பாவமாக இருக்கிறது.
சந்தானம் - இவர் தானே படத்தின் 'ரியல்' ஹீரோ.. இவரது டைமிங் கொமெடிகளும் சரமாரியான பஞ்சுகளும் திரையரங்கில் பயங்கரமாக ரசிக்கப்படுகின்றன.
நண்பனுக்கு உதவப்போய் ஒவ்வொருமுறையும் அகப்பட்டு ஆப்படிக்கப்படும்போதும் அப்பாவியாக நிற்கும் சந்தானத்தின் முகம் கலக்கல்..
அதிலும் ஹீரோ, ஹீரோயின் அணிந்துள்ள ஆடைகளை விட, சந்தானம் அணிந்து வரும் கண்ணைக்குத்தும் கலர் கலர் ஆடைகளும் அதைவிட கலர் கலர் பெல்ட்டும் அலாதி. சந்தானமே தெரிவு செய்ததா என்று அறிந்துகொள்ள ஆசை. Santhanam, I liked your belts, :)
காதல் பற்றியும் காதலர் பற்றியும் நண்பர்கள் பற்றியும் சந்தானம் அடிக்கும் தத்துவங்கள் இனி Twitter, Facebook முழுக்கப் பரவிக் கிடக்கப் போகும் பாருங்கள்.
அதிலும் 'தண்ணி'யையும் தண்ணீரையும் வைத்து நண்பனின் காதலையும் நட்பையும் விளக்கும் இடம் கலக்கல்.
கடைசிக் காட்சிகளில் ஹீரோ பேசும் அரைகுறை ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் இடமும் நச்.
இந்த மூன்று முக்கியமானவருக்குப் பிறகு முக்கியமான இடம் சரண்யாவுக்கு..
எம் மகனுக்குப் பிறகு இன்னொரு அப்பாவி அம்மா பாத்திரம். பரிதாபத்தைத் தேடிக்கொள்கிறார்.அழகம்பெருமாளுக்கும் இவருக்கும் இடையிலான கணவன்-மனைவிப் பாசப் போராட்டம் தான் படத்தின் நெகிழ்வுக்கான வெகு சில இடங்களில் முக்கியமானது. ஆனால் அது இல்லாமல் இருந்தாலும் தெரிந்திருக்காது. ராஜேஷ் இதைக் கவனிக்கவில்லையா?
தாயும் மகனும் சேர்ந்து ஹன்சிகாவைக் கலாய்க்கும் இடம் படத்தின் கலகல இடங்களில் முக்கியமான ஒன்று.
அழகம்பெருமாளும், ஷாயாஜி ஷிண்டேயும் கவனிக்கக் கூடிய இன்னும் இரு பாத்திரங்கள்.
சினேகா, ஆன்ட்ரியா ஆகியோர் நட்புக்காக ஒவ்வொரு காட்சிகளில் வருகிறார்கள்.
சினேகா கொஞ்சம் மனசில் நிற்கிறார்.
சந்தானத்தின் "புன்னகை அரசி - புழுங்கல் அரிசி " நக்கல் இருக்கிறது.
ராஜேஷின் முன்னைய படத்தின் ராசி போலவே - பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜீவா வந்தது போல - இந்தப்படத்தின் கடைசிக் காட்சியில் ஏன் என்று தெரியாமலே ஆர்யா வருகிறார்.
(அட அதான் லொஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு ஆரம்பத்திலேயே லோஷன் சொல்லிட்டாரில்லா)
ஒளிப்பதிவு - வழமை போல பாலசுப்பிரமணியெம். அருமையாக செய்துள்ளார். குறிப்பாக அழகே அழகே பாடல் காட்சியில் வரும் அந்தப் பாலைவன, மலைப் பிரதேசங்களை காட்டியுள்ள விதம அருமை. மற்றும்படி பெரிதாகக் கமெரா வித்தை காட்டக் கூடிய காட்சிகள் அமையாதது இவர் குற்றம் இல்லையே.
நடனம் - தினேஷ். பாராட்டியே ஆகவேண்டும். தினேஷ் குழுவோடு ஆடும் நடனம் கலக்கல்; அதை விட உதயநிதி பற்றித் தெரிந்து அவரையும் கஷ்டப்படுத்தாமல், எங்களையும் எரிச்சல் படுத்தாமல் நடனம் அமைத்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்.
'வேணாம் மச்சான் வேணாம்' பாடல் காட்சி பாராட்டுக்களை அள்ளிக் கொள்கிறது.
ஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் மூலமாக வென்ற பாராட்டுக்களைப் பின்னணி இசையில் சமாளித்து தக்க வைத்துக்கொள்கிறார். பெரிதாக வேலை இல்லை. பாடல்களின் இசையை வைத்த ரீ ரேக்கொர்டிங் செய்திருக்கிறார்.
ராஜேஷின் அடுத்த படம், ஆல் இன் ஆல் அழகு ராஜாவாம்.. வெயிட்டிங்.
ஒரு கல் ஒரு கண்ணாடி - எல்லாம் ஓகே :))))