April 02, 2012

முட்டாள்கள் தினம் - முட்டாள்தனமா? முற்றுப்புள்ளியா? முக்கியமா?


நேற்றைய ஏப்ரல் முட்டாள் தினத்தன்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது மனதில் தோன்றிய விஷயங்கள்..

ஆனால் நேற்றைய விடுமுறை நாள் வீட்டில் ஒரு குடும்ப ஒன்றுகூடல் நாளாக மாறிப்போனதால் ஒரு நாள் தாமதமாக இந்த இடுகை..
அதனால் என்ன.. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி எனது இந்த இடுகை உங்களுக்கு ஞாபகம் வரட்டும்..

அதேபோல எனது வழமையான இடுகைகளை விட இந்த இடுகையில் ஒரு விசேடமும் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமும் உள்ளது. கால,நேரம் வருகையில் உங்களோடும் பகிர்கிறேன்..

ஏப்ரல் முட்டாள் தினம் இல்லாமல் போகிறதா?

வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் நவீன உலகில் நாங்கள் முன்னைய முட்டாள் தினக் குறும்புகள், மற்றவர்களை முட்டாளாக்கும் முயற்சிகளில் இருந்து மாறி/ விலகி ஊடக வழி, இணைய வழிக் குறும்புகள், இணைய வழியாக ஏமாற்றும் முயற்சிகளிலேயே (media driven jokes & Internet tomfoolery) அதிகமாக இறங்கிவிட்டோம் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

காலம் அப்படி இருக்கே.. நாங்கள் என்ன செய்யலாம் என்று நாமே சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால் சின்ன வயதிலிருந்து ஒருவரை ஏப்ரல் பூல் ஆக்கி நாம் மகிழ்ந்து சிரித்த அந்த சின்ன, சின்ன சந்தோஷங்கள், சுவாரஸ்யங்கள் இனி முடிந்துவிடுமோ என்றொரு சிறு கவலை வரவில்லையா?
வாழ்க்கை முழுவதும் முட்டாள்களாகவே வாழ்ந்துவரும் எமக்கு மற்றவர்களை முட்டாளாக்க ஒரு தினம் இருப்பதால் ஒரு சந்தோசம் தானே?
இது எங்கே எப்படி ஆரம்பித்தது என்றெல்லாம் அறியாமலே சுவாரஸ்யத்துக்காக உலகம் முழுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்..என்னைப் பொறுத்தவரை இந்த மற்றவரை முட்டாளாக்குவதற்கு ஒரு நாள் தனியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எப்போதும் கலகல என்று இருக்கவேண்டும்.. முடியுமானவரை சிரித்து, மற்றவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் எனக்கு ஒவ்வொரு நாளும் தான் மற்றவரை முட்டாளாக்க முடிகிறது ; நானும் முட்டாளாக முடிகிறது. (போதாக்குறைக்கு விடியலும் இருக்கே)

முட்டாள்கள் தினம் பற்றி முன்பொரு முட்டாள் தினத்தில் எழுதிய எனது இடுகை..

முட்டாள்களே நில்லுங்கள்! - http://www.arvloshan.com/2009/04/blog-post.html
ஆனாலும் ஆண்டாண்டு காலம் இருந்த ஒரு வழக்கம் வழக்கொழிந்து போகின்றது என உணரும்போது கொஞ்சம் மனதில் ஏதோ போல இல்லை?
இந்த முறை கூட எங்களை சுற்றி அவதானித்துப் பாருங்கள்..

முன்பைப் போல செயல்களால் ஏமாற்றும் practical jokes இம்முறை பெரிதாக எம்மைச் சுற்றி நிகழவில்லை; சின்னச் சின்ன வாய் வழிப் பொய்களால் ஏமாற்றிக் குதூகலிக்கும் அந்த சிறுபிள்ளைத்தனம் இல்லை.
இதற்கான காரணங்கள் என்ன?

ஒன்றில் நாம் (எமது ஒட்டுமொத்த சமூகமே) முதிர்ச்சியடைந்துவிட்டது அல்லது நகைச்சுவையுணர்வை நாம் இழந்துவருகிறோம்.. அல்லது இதற்கான நேரம் இல்லை எனும் அளவுக்கு எங்கள் வாழ்க்கை வேகமாக இருக்கிறது.

உலகின் அத்தனை சமூகங்களுக்குமே இந்த நகைச்சுவை உணர்வு முக்கியமானது. அதிலும் எம்மவர்கள் ஆதிகாலம் தொட்டு இந்த நகைச்சுவையுணர்வில் திளைத்திருக்கிறார்கள்.

இதனால் தான் ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ள ஒரு விடயத்தை இங்கே கொஞ்சம் அழுத்தி சொல்லலாம் என்று இருக்கிறேன்..

முட்டாள்கள் தினம் மன அழுத்தத்திற்கு நல்லது... 

முட்டாள்கள் தினம் மன அழுத்தத்திற்கு நல்லதா? அது எப்படி? என்று வினவத் தோன்றுகிறதா? அதாவது, நாம் முட்டாள்கள் தினத்தைக் கொண்டாட வேண்டும். நகைச்சுவை என்பது நம்முடைய கலாசாரத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றது. காரணம், இதுவே மனிதர்களுக்கிடையேயான பரஸ்பரத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.

நகைச்சுவை உணர்வானது, எங்களுடைய பதற்றத்தைக் குறைத்து ஆற்றலை வளர்க்கக்கூடிய ஒரு அருமையான கலை. நகைச்சுவை என்பது மட்டும் இல்லாமல் போயிருந்தால் நமது சமுதாயம், வன்முறைகள் பலமடங்கில், அதிகரித்ததோர் சமுதாயமாக இருந்திருக்கும். காரணம், நகைச்சுவை உணர்வு, சமுதாயத்தோடு நாம் கொண்டுள்ள அழுத்தங்களை இலகுவாக்கும்.

சமுதாயத்தோடு மட்டுமல்ல, உங்கள் உடன்பிறப்புகளுடனும், குறும்புத்தனமாக இருப்பது கூட உங்களுக்கிடையிலான உறவை, பிணைப்பை மேம்படுத்தி வலுப்படுத்தும். நகைச்சுவை உணர்வென்பது, எம்மையும் உற்சாகமாக வைத்திருப்பதோடு, நம்மை சுற்றி இருப்பவர்களைக்கூட சந்தோஷமாகவே வைத்திருக்கும். ஏற்கனவே நம்முடன் உள்ள நபர்களை மேலும் நெருக்கமாக்குவதோடு, புதிய நண்பர்களையும் சேர்க்கும்.

நகைச்சுவை உணர்வால் ஏற்படக்கூடிய சிறு புன்னகை, மற்றவரை வரவேற்பதாகவும், மற்றவர்களுக்கு எம்மிடத்தில் ஒரு அங்கீகாரம் இருப்பதாக வெளிக்காட்டுவதுமாக அமையும், இந்தப் புன்னைகையால் ஏற்படக்கூடிய சந்தோஷமான உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மற்றவருக்கு வழங்குவதற்கு மிக இலகுவான, இலவசமான விடயம் இந்த நகைச்சுவை தானே?

முட்டாள்கள் தினமன்று, ஒவ்வொருவரும் தங்களது நண்பர்கள், அலுவலகத்தின் சக ஊழியர்கள், பாடசாலையில் நண்பர்கள் என்று பலரையும் முட்டாளாக்குவது தான் சிறப்பு. இம்மாதிரியான கேலிகள், நக்கல் என்பன பரஸ்பரம் ஒரு நல்லுறவையும் அன்னியோன்னியத்தையும் ஏற்படுத்தும்; நம்முடைய வளர்ச்சியையும் உறுதிப் படுத்தும்.
ஆனாலும் இம்மாதிரியான நக்கல்களும் கேலிகளும், அதைப்பெரிதாக எடுத்துக் கொள்ளாத நபர்களிடம் காட்டுவது முக்கியமாகும். அளவு கடந்த, பொருத்தமில்லாத நகைச்சுவை உணர்வுகள், உறவுக்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும்.


நகைச்சுவை உணர்வுகள், நக்கலுடன் நிற்பாட்டப்பட வேண்டுமே தவிர யாரையும் ஏமாற்றுவதாகவோ, புண்படுத்துவதாகவோ அமையக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும் அதேவேளை, நாமும் ஏமாற்றப்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆனாலும் இந்த விடயத்தில் சிறுபிள்ளைகள் இலகுவில் ஏமாந்துவிடுவார்கள். காரணம், பெரியவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என நம்பிவிடுவார்கள்.
நகைச்சுவை உணர்வுக்காக மற்றவர்கள் சொல்லும் சிறு சிறு பொய்களை இலகுவில் நம்பிவிடாது, பகுத்தறியும் திறன் நமக்கு வேண்டும் என்பது தான் இங்கு மிக முக்கியமானது.

முட்டாள்கள் தினத்தில், நாம் வலிந்து ஏற்படுத்தும் நகைச்சுவை உணர்வு கூட நமது ஆன்மாவிற்கு நன்மையானதாகவே அமைகின்றது. சிறுபிள்ளைகள் போல சிரித்தும், மற்றவர்களை ஏமாற்றியும் நாம் விளையாடும் போது, நமது கவலைகள், கஷ்டங்களை ஒருநாளேனும் மறந்து நாம் சிறுபிள்ளைகளாக மாறி விடுவதே இதற்குக் காரணமாகும்.நீங்கள் பண்ணுவது குறும்பா அல்லது கொடுமையா?
இது கட்டாயமாக நாங்கள் எமக்குள்ளே எழுப்பிக்கொள்ளவேண்டிய ஒரு கேள்வியாகும்.

சிலசமயங்களில் நம்முடைய குறும்புத்தனம் எல்லை மீறுவதால் அது அபாயமானதாக மாறிவிடுகின்றது.
சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய குறும்புத்தனங்கள் மட்டுபடுத்தப்பட வேண்டும் / வரம்பிற்குட்டபட்டதாய் அமையவேண்டும். அல்லது இம்மாதிரியான எல்லை மீறிய குறும்புத்தனங்களால் நகைச்சுவை உணர்வு கூட வெறுக்கப்பட்டு விடும். சில சந்தர்ப்பங்களில், நாம் செய்யும் குறும்புத்தனம் கொடுமைப்படுத்துவதை போன்று அமைந்து விடக்கூடும். ஆகவே, கொடுமைப்படுத்துவற்கும், குறும்புத்தனத்திற்கும் இடையுள்ள மெல்லிய கோட்டினை அறிந்தே குறும்புத்தனங்களை நாம் செய்யவேண்டும். இருந்தாலுமே இந்த மயிரிழை போன்ற கோட்டினைக் கண்டுபிடித்து நடப்பதே சாமர்த்தியமாக இருந்தாலும், சமூகத்தில் பலபேருக்கு அது கடினமானதாக அமைந்து விடுகின்றது.


சில சமயங்களில் குழுவினருடன் சேர்ந்து செய்யப்படும்  குறும்புத்தனங்களும் எல்லையுடன் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு விடயங்களும் தனித்துவம் வாய்ந்தாகக் கருதுவதன் மூலம்  இந்த பிரச்சினையைத் தவிர்க்க முடியும். ஆனாலும், குறிப்பிட்ட குறும்புத்தனத்தை ஒருவர் செய்ததுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது சரியானது. ஆனாலுமே, சமுதாயம் என்ற வகையில் இவ்வாறான தனித்துவமான நோக்கு அவ்வளவு தூரம் சாத்தியமாகாது. அப்படியாயின் சமூகத்தின் மீதான எல்லாருக்கும் பொருந்தும் விதிகளை எவ்வாறு கண்டறிவது? இதற்கான இலகுவான வழிமுறை, முட்டாள்கள் தினத்தன்று கண்டறியப்பட முடியும்.

முட்டாள்கள் தினம் ஒரு தவறான அல்லது கண்டுகொள்ளப்படாமல் விடக்கூடிய நாளல்ல. நகைச்சுவை / குறும்புகள் இல்லாத உலகமே இருக்காது. இருந்தாலுமே இவ்வாறான தினங்களில் மட்டும் அதிகளவான நகைச்சுவை உணர்வுகளோடு இருந்தால் கூட உலகம் ஓரளவு நல்லதாக இருக்க முடியும். மாறாக, கட்டுப்பாடுகளை மக்களில் விதித்தாலும் மக்கள் இயல்பாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியாது.


என்னதான், தனிப்பட்ட ஒவ்வொருத்தருக்கும் இருக்ககூடிய நகைச்சுவை உணர்வுகள் மறைந்து / இறந்து கிடந்தாலுமே, முட்டாள்கள் தினத்தின் சிறப்பு / முக்கியத்துவம், இன்னமும் நகைச்சுவைக்கதைகளினூடாகவும், இணைய வலைத்தளங்களினூடாகவும் வாழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.

இன்னும், விளம்பரதாரர்கள் நிறுவனங்கள் மூலமாகக் கூட இந்த முட்டாள்கள் தினம் இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.  இந்த முட்டாள்கள் தினம், மேற்பட்டவாறான நிறுவனங்களுக்கு பெரியதொரு இலாபத்தை உழைத்துத் தரும் ஓர் சந்தை வாய்ப்பாகக் கூடக் காணப்பவதுதான் காரணமாக இருக்கலாம். - Corporate pranking

முட்டாள்கள் தினத்தன்று பிரபலமான நகைச்சுவைகளை தங்களது நிறுவனங்கள் வலைத்தளங்களினூடாக வழங்குவதன் மூலம் மறைமுகமாக தங்களது நிறுவனம் மற்றும் வலைத்தளங்களையும் இலவசமாக பிரபலமடையச் செய்கின்றனர்.

எல்லாத் தினங்களுமே இப்போது வர்த்தக மயப்படுத்தப்பட்டு, வியாபாரம் மையப்பட்டு நிற்கும் காலத்தில் April Fool's day மட்டும் தப்பி விடுமா?

முட்டாள்களாகவே வாழ்வதைப் பெருமையாக நினைக்கும் ஒரு உலகில் வாழும் எங்கள் அனைவருக்குமே இந்த இடுகை வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறது.

இந்த இடுகையுடன் ஆரம்பிக்கும் நான் மேலே சொல்லியுள்ள 'சிறப்பம்சம்' உங்கள் ஆசிகளுடனும், எனது ஆசையுடனும் தொடரும் என நம்புகிறேன். :)))6 comments:

Nirosh said...

நல்ல விளக்கம்.... நானும் முட்டாளாய் இருப்பதில் பெருமைகொள்கிறேன் : இல்லாட்டி மட்டும், சரி சரி விடுங்கப்பா...!
அருமை அண்ணா.. வாழ்த்துக்கள்...
தல இந்தமுறை கொச்சி அணி இல்லை தாங்கள் எதற்கு ஆதரவோ...???

anuthinan said...

//சில சமயங்களில் குழுவினருடன் சேர்ந்து செய்யப்படும் குறும்புத்தனங்களும் எல்லையுடன் இருக்கவேண்டும்.//

:)

உண்மைதான் அண்ணா! நல்ல ஒரு சிந்திக்க கூடிய முட்டாள்களுக்கான பதிவு! :P

Shafna said...

இந்த இடுகையில் ஒரு விசேடமும் வித்தியாசமான அனுபவமும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள் அது என்னவென்றறிய ஆவலாயுள்ளது. சார் நீங்க ரொம்பப் பெரிய ஆள்தான். இப்பிடி முட்டாள்களையும் போரடிக்க வைக்கிறிங்களே...ரொம்ப போரடிக்குது சார் டெம்பர கொஞ்சம் குறைங்க சார்... தூக்கம் வருது சார்...உங்களுக்கு பிந்திய முட்டாள் தின வாழ்த்துக்கள் சார்...என்னாது same to you வா? ஓகே சார்..தேங்ஸ் சார்..குட் நைட் சார்.!

Unknown said...

nice enaku pidichathu group sernthu seiyum kalaaddavilum ellai vhendum.

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

ம.தி.சுதா said...

நியாயமான தாக்குதல் தான் அண்ணா...

இம்முறை பல இணையத்தளங்கள் தாம் ஏமாற்றுகிறோம் என தாமே எமாந்து கொண்டன..

பொதுவா சொல்வதென்றால் மல்லாக்கப்படுத்துக் கொண்டு முகட்டுக்குத் துப்பிக் கொண்டன...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner