இந்தூர் மைதானத்தில் விரேந்தர் செவாக் படைத்த 219 ஓட்ட ஒருநாள் சர்வதேச சாதனை பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்..
3223 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் விளையாடப்பட்டுள்ள நிலையில் இதுவே இரண்டாவது இரட்டை சதம். (ஆண்களுக்கான போட்டிகளில்.. ஆஸ்திரேலியா வீராங்கனை பெலிண்டா கிளார்க் 1997ஆம் ஆண்டு டென்மார்க் மகளிர் அணிக்கு எதிராகப் பெற்ற ஆட்டம் இழக்காத 229 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாக இன்னும் இருக்கிறது.)
List A என்று சொல்லப்படும் சர்வதேச அங்கீகாரம் பெறாத (முதல் தர ஒருநாள் போட்டிகள் - கழக மட்ட, முதல் தர அணிகளின் போட்டிகள்) போட்டிகளில் சேவாக்குக்கு முதல் பத்துப் பேர் இரட்டை சதங்களை எடுத்துள்ளார்கள்.
செவாக் பெற்ற 219 ஓட்டங்கள் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் ஆகியுள்ளன.
முழு விபரங்கள்...
http://stats.espncricinfo.com/ci/content/records/117935.html
சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச ஒருநாள் இரட்டை சதம் பெறுவதற்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முதலே தென் ஆபிரிக்காவின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் கிரேம் பொல்லொக் (ஷோன் பொல்லொக்கின் பெரியப்பனார்) ஒருநாள் போட்டிகளின் முதலாவது இரட்டை சதத்தைப் பெற்றிருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த சாதனை நிலைத்து நின்றது 21 மாதங்கள்.
பொதுவாகவே கிரிக்கெட்டில் ஒரு சாதனை ஏற்படுத்தப்படும் போதே அதை முறியடிப்பது யார் என்ற ஆய்வுகளும் ஆரம்பித்துவிடுவது வழமை.
இந்த சாதனையை முறியடிக்கக் கூடியவராக செவாக்கே இருப்பார் என்பது அநேகரின் கருத்தாக இருந்தது.
ஷேன் வொட்சன் பங்களாதேஷ் அணிக்கெதிராக முறியடிக்கக் கூடியளவுக்கு நெருங்கி வந்தார். ஆனால் இலக்கு சிறிது; தப்பி விட்டது.
டாக்காவில் 96 பந்துகளில் வொட்சன் மரண அடி அடித்துப் பெற்றது ஆட்டமிழக்காத 185 ஓட்டங்கள்.
செவாக் செய்து காட்டிவிட்டார்.
சச்சின், செவாக் இருவரதும் இரட்டை சதங்கள் ஒரே மாநிலத்திலேயே பெறப்பட்டுள்ளன. - மத்தியப் பிரதேசம்.
இரண்டு ஆடுகளங்களையும் ஒரே ஆடுகளப் பரமரிப்பாளரே தயார்படுத்தியிருந்தார்.
சமந்தர் சிங் சௌஹான்.
இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி ஒரேயளவான ஓட்ட எண்ணிக்கையினாலேயே வெற்றியீட்டி இருக்கிறது. 153.
சச்சின் தனது 200 ஓட்டங்களைப் பெற சந்தித்தது 147 பந்துகளை; செவாக் சச்சினை விட இரு பந்துகள் அதிகமாக சந்தித்திருந்தார். ஆனால் 19 ஓட்டங்களை மேலதிகமாகப் பெற்றுக்கொண்டார்.
இருவருமே ஒரே எண்ணிக்கையான நான்கு ஓட்டங்களையே (fours) பெற்றிருந்தார்கள். 25
ஒரு நாள் சர்வதேசப் போட்டியொன்றில் பெறப்பட்ட கூடுதலான நான்கு ஓட்ட எண்ணிக்கை இதுவே.
ஆனால் செவாக் ஏழு ஆறு ஓட்டப் பெறுதிகளையும் (sixer) பெற்று மொத்தமாக 32 பவுண்டரிகளைப் பெற்றது புதிய சாதனை.
(சேவாக் ஒரு இன்னிங்சில் அதிகமாக ஆறு ஓட்டங்கள் பெற்றதும் இந்தப் போட்டியில் தான்)
இதற்கு முன்னர் ஷேன் வொட்சன் முப்பது பவுண்டரிகளைப் பெற்றிருந்தார். (15 4s + 15 6s)
ஆனாலும் பவுண்டரிகளில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனை இன்னமும் ஷேன் வொட்சன் வசமே.
வொட்சன் - 150 ஓட்டங்கள்
செவாக் - 142 ஓட்டங்கள்
செவாக்கின் கொலைவெறி இன்னிங்க்ஸ் - பந்துகள் மைதானத்தின் அத்தனை முனைகளையும் தொட்டுள்ளதைப் பாருங்கள்.
நன்றி - cricinfo
செவாக் தனது இரட்டை சதத்தைப் பெற எடுத்துக்கொண்ட பந்துகள்.. 140.
இது சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்டதை விட ஏழு பந்துகள் குறைவாகும்.
இந்தியர் ஒருவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கேதிராகப் பெற்ற வேகமான சதமும் இதுவே.. 69 பந்துகளில்.
இதற்கு முதலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தான் குறைந்தளவு பந்துகளில் செவாக் சதமடித்திருந்தார். 2002ஆம் ஆண்டு 75 பந்துகளில்.
பாவம் மேற்கிந்தியத் தீவுகள். சேவாகிடம் ஒவ்வொருமுறையும் மாட்டித் தவிக்கிறது.
சச்சினிடம் இருந்த சாதனைகள் மட்டுமன்றி நம்ம மாண்புமிகு சனத் ஜெயசூரியவிடமிருந்த ஒரு அரிய சாதனையும் செவாக்கிடம் போய்ச் சேர்ந்துள்ளது.
அணித் தலைவராக ஒருவர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை -
சனத் ஜெயசூரிய ஷார்ஜாவில் 2000ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராகப் பெற்ற 189 ஓட்டங்களே இதுவரை சாதனையாக இருந்தன.
இப்போது செவாக்கின் 219.
செவாக் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்ததும் இந்தூரில் தான்.
149 பந்துகள். இதற்கு முதல் இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் பங்களாதேஷைத் துவம்சம் செய்தபோது செவாக் 140 பந்துகளை சந்தித்து 175 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அந்த ஆட்டத்தில் இடை நடுவே செவாக் சற்று சோர்ந்து காணப்பட்டார்; அத்துடன் அவருடன் இணைப்பாட்டங்களைப் புரிந்திருந்த ஏனைய வீரர்கள் செவாக்கின் அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக வேகமாக அடித்தாடவும் இல்லை.
இந்தூரிலோ நிலை வேறு. முதலில் கம்பீர், பின்னர் ரெய்னா என்று சேவாக்கை அழுத்தத்துக்கு உட்படுத்தாமல் தங்கள் பங்கிற்கு மேற்கிந்தியப் பந்துவீச்சாளர்களைப் பந்தாடிக் கொண்டிருந்தார்கள்.
(ஆனால் செவாக் அவ்விருவரையும் ரன் அவுட்டாக்கியது வேறு கதை ;))
இந்த சாதனை நிகழ்த்திய இன்னிங்சின் இடையே செவாக் எட்டாயிரம் ஒருநாள் சர்வதேச ஓட்டங்கள் என்ற மைல் கல்லையும் கடந்திருந்தார்.
8000 ஓட்டங்கள் பெற்ற ஆறாவது இந்திய வீரர் ஆகியுள்ளார் செவாக்.
முன்னர் ஒரு காலகட்டத்தில் அணியாக இருநூறு அடிப்பதே கஷ்டமாக இருந்த காலம் போய், சச்சின், செவாக் ஆகியோர் தனி நபர் இருநூறுகளை ஆரம்பித்துள்ளார்கள்.
யார் அடுத்து இதை எட்டப் போவது? யாரால் செவாக்கின் இந்த சாதனையை முறியடிக்க முடியும்?
என்னைப் பொறுத்தவரை இப்போதிருக்கும் சர்வதேச வீரர்களில் வெகு சிலருக்கே நீண்ட நேரம் நின்று ஆடி இந்த சாதனையை உடைக்கும் வலிமையையும் பொறுமையும் இருக்கிறது..
ஷேன் வொட்சன், டேவிட் வோர்னர் உடனடியாக ஞாபகம் வருகிறார்கள்.
வேகமாக அடித்து ஆடினாலும் பிரெண்டன் மக்கலம், திலகரட்ன டில்ஷான், தமிம் இக்பால் போன்றோர் நீண்ட நேரம் நின்றாடும் பொறுமை இல்லாதவர்கள்.
விராட் கோஹ்லி, டீ வில்லியர்ஸ், சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர், கெவின் பீட்டர்சன் போன்றோருக்கு நின்று ஆடி ஓட்டங்களைக் குவிக்கும் வல்லமை இருந்தாலும் ஆரம்ப விக்கெட் விரைவாக வீழ்ந்தாலே இவர்களுக்கு இந்த சாதனையைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.
எனவே செவாக்கின் சாதனை அவ்வளவு இலகுவில் முறியடிக்கப்பட முடியாது. மீண்டும் செவாக் முயன்றால் அல்லது வோர்னர், வொட்சன், சச்சின் போன்றோருக்கு குவாலியர், இந்தூர் போன்ற ஆடுகளங்கள் மாதிரியான இலகு ஆடுகளங்களோ, சௌஹான் போன்ற ஆடுகள அமைப்பாளரோ வைத்தால் ஒழிய எனும் முடிவுக்கு வரலாம்.
ஆனாலும் செவாக் தட்டை ஆடுகளத்தில் அடித்தார்; இலகுவான மைதானம்.. பந்துவீச்சு பலமில்லை என்றெல்லாம் சொல்வோருக்கு...
என்ன தான் எல்லாம் இலகுவாகக் கிடைத்தாலும் நின்று அடிக்க ஒரு தில்லும், பொறுமையும் வேண்டுமே.. செவாக்கால் மட்டும் தானே முடிந்துள்ளது?
எனவே அந்த சாதனையைப் பாராட்டுவோம்.
Sehwag 219 உடன் இன்னும் சில இந்திய சாதனைகளும் நிகழ்ந்துள்ளன.
இந்திய அணியால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கையும் இதுவே (418/5). முன்னதாக இலங்கை அணிக்கெதிராக 2009ஆம் ஆண்டு இதே டிசெம்பர் மாதம் ராஜ்கோட்டில் இந்தியா 7 விக்கெட்டுக்களுக்கு 414 ஓட்டங்களை எடுத்திருந்தது.
ஒருநாள் சர்வதேச வரலாற்றில் இதுவரை பத்து தடவைகள் 400 + ஓட்டங்கள் அணிகளால் பெறப்பட்டுள்ளன.
இந்தியாவே அதிக தடவைகள் (4) நானூறு ஓட்டங்களைக் கடந்திருக்கிறது.
இனி ஒருவர் தனிநபராக 200 ஓட்டங்களைக் கடந்தால் நெதர்லாந்து அணிக்கெதிராக இலங்கை அணி படைத்த சாதனை ஓட்ட எண்ணிக்கையான 443/9 ஐ முறியடிக்கலாம்.
இப்போ சுவாரஸ்யமான மற்றொரு விடயம் என்னவென்றால் உறங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை மேற்கிந்தியத் தீவுகள் தட்டி எழுப்பி விட்டது. அந்த சிங்கம் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்து என்னென்ன சாதனைகளை உடைக்கப் போகுதோ?
நியூ சீலாந்திடமே முக்கித் திணறிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா செவாக்கின் கொலைவெறியைத் தாங்குமா?