December 05, 2011

மயக்கம் என்ன


தனுஷை ஒரு நடிகராக நிறுத்துவதற்கும், அவரை ஒரு ஆற்றலுள்ளவர் என்று ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கும் இயக்குனர் செல்வராகவன் பட்ட பாடு மிக முக்கியமானது. செல்வா இல்லாவிட்டால் இன்றைய தனுஷ் இல்லை.
தனுஷின் மார்க்கெட் எழுவதற்கு செல்வா அவசியப்பட்டார். ஆனால் மயக்கம் என்ன வரும்போது நிலை வேறு.

தனுஷ் தேசிய விருது பெற்ற நடிகர். செல்வாவுக்கு மீண்டும் தன் மார்க்கெட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

வழமையான செல்வா பாணியில், செல்வா ரகக் காட்சிகளுடன், செல்வாத் தனமான (செல்வா = செல்வராகவன்)  படம் இந்த மயக்கம் என்ன.செல்வராகவன் படங்களில் தனுஷ் எப்படியான பாத்திரங்களை ஏற்பாரோ அப்படியே கொஞ்சமும் மாறாத தனுஷ்.

அண்ணனும் தம்பியும் சேர்ந்து எழுதிய பாடல்கள் G.V.பிரகாஷின் இசையில் இளைஞர்களைக் குறிவைத்து இலக்கை அடைந்த ஒரு வெற்றியுடன் படம் சரியான நேரத்தில் வந்திருக்கிறது.

ஆனாலும் கொலைவெறி பாடல் வெளிவந்த பரபரப்பு கொஞ்சம் மயக்கம் என்ன பாடல்களைப் பின் தள்ளிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

படத்தின் அறிமுகக் காட்சியே கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிறது. குடி, வெறி கும்மாளம் என்று இருக்கும் இளவட்டங்களில் தனுஷும் அவரது தங்கையும்.. இவர்களுக்கு அப்பா, அம்மா இல்லை. நண்பர்களின் வீட்டிலே வளர்கிறார்கள். அண்ணனும் தங்கையும் நண்பர்களும் நண்பனின் அப்பாவும் சேர்ந்தே தண்ணி அடிக்கிறார்கள். தண்ணி அடித்து மட்டையாகும் பயல்களையும், பெண்களையும் ஒரே அறையில் ஒரே கட்டிலில் கிடத்தும் இந்த அப்பரைத் தான் teenage பசங்களின் dream அப்பான்னு செல்வராகன் அறிமுகம் செய்துவைக்கிறார்.
என்ன கொடுமைடா..

இப்படி சமூகத்தில் எங்காவது ஒரு சில விதிவிலக்காக நடக்கும் இடங்களை எடுத்து இதைத் தான் இன்றைய இளைஞரின் கனவு என்று கட்ட செல்வா எடுக்கும் முயற்சி இன்றைய அப்பாவி இளைஞருக்கு தவறான பாதையைக் காட்டும்..

ஏற்கெனவே துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7G ரெயின் போ கொலனியில் காட்டிய இளசுகள் போதும்..

இடைவேளை வரை முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள், வசனங்களுக்குக் குறைவேயில்லை.. (இடைவேளைக்குப் பின்னர் இல்லையா என்று கேட்பவர்களுக்கு, கதையுடன் ஒட்டிச் செல்லும் வன்முறைகள் சகிக்கலாம் இல்லையா?)

கதை - படம் பார்த்தவர்களுக்கு மீண்டும் சொல்லத் தேவையில்லையே..
பார்க்காதவர்களுக்கு - சொன்னால் சுவாரஸ்யம் இல்லையே..

தனக்குத் தெரிந்த தான் நேசிக்கும் தொழிலில் வெற்றி பெற்று சாதித்துக் காட்ட என்னும் ஒருவன் வாழ்க்கையில் எத்தனை தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது என்ற ஒற்றை வரிக் கதை ஒரு உணர்ச்சிப் படையலாக செல்வராகவன் + தனுஷ் கூட்டணியில் என்னென்ன அம்சங்களை நீங்கள் எதிர்பார்ப்பீர்களோ அத்தனை அம்சங்களுடன் வந்துள்ளது.

கார்த்திக் சுவாமிநாதன் என்ற நிழற்படப் பிடிப்பாளன், வாழ்க்கையில் அள்ளுண்டு போகும் அலையில் சிக்குண்டு திணறிக்கொண்டிருக்கும் நிலையில் பொல்லாத காதலும் வந்து சேர்ந்துவிடுகிறது.

அவனுக்குப் பார்த்தவுடன் எரிச்சலூட்டிய நண்பனின் காதலியே (டேட்டிங்குக்கு மட்டும் ஒத்துக் கொள்ளும் பெண்ணை எப்படி சொல்வது??) பின் மனதில் ஈர்ப்பை ஏற்படுத்தி மனைவியாவதும், நவநாகரிகப் பெண்ணாக, திமிர் பிடித்தவளாக அவள் காட்டப்பட்டு இருந்தும், கணவனே தெய்வம் என்று தாங்கு தாங்கு என்று தாங்குவதும், கணவன் எப்படிப்பட்ட ஒருவனாக இருந்தாலும் மனைவி அவனிடம் அடியோ, உதையோ பட்டு அவனைநம்பி, நல்வழிப்படுத்தி கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழவேண்டும் என்று செல்வராகவன் தருகின்ற செய்தி ஆணாதிக்கத் திமிர் என்று எடுத்துக்கொள்ளலாமா?

கணவனின் இலட்சியம் எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் மனைவி அவன் தரும் கஷ்டங்களையும் பொறுக்கவேண்டும் என்று மயக்கம் என்ன மூலமாக செல்வா சோனியா அகர்வாலுக்கு எதோ சொல்கிறாரோ?
செல்வாவின் தற்போதைய மனைவி கீதாஞ்சலி வேறு இத்திரைப்படத்தில் அவரது உதவி இயக்குனர்.. ஹ்ம்ம்

ஆனால் விடா முயற்சியும், தக்க தூண்டுகோலும் இருந்தால் எட்டமுடியாது என்று இருக்கும் இலட்சியங்களும் இலகுவாக எட்டக் கூடியவை என்று சொல்லி இருக்கும் கரு பிடித்திருக்கிறது.

படத்தில் ரசித்த நல்ல விஷயங்கள்....

செல்வராகவன் திரைக்கதையைக் கொண்டு செல்லும் விதம் .. ஓரிருவர் இதை மிக மெதுவான ஓட்டம் என்று சொல்லக் கேட்டேன். ஆனால் இப்படியான திரைப்படங்கள் மனதில் ஒட்ட இந்தவேகம் தான் தேவை.

யாமினி (ரிச்சா) மீது கார்த்திக்குக்கு (தனுஷ்) காதல் வரும் தருணங்கள், இருவரும் தனியாக சந்திக்கும் காட்சிகள், சில முக்கியமான காட்சிகளில் அளவான வசனங்கள், பாத்திரங்களின் தன்மைக்கேற்ற நறுக் வசனங்கள் கலக்கல்..

செல்வராகவனின் படங்கள் என்றால் காதல் காட்சிகளில் ஒரு வித்தியாசமும், சில நேரங்களில் பளார் என்று அறையும் யதார்த்தமும் இருக்கும்..

அதேபோல வாழ்க்கையின் மீதான ஒரு மறுவாசிப்பும் நண்பர்கள் வாழ்க்கையில் வகிக்கும் பாகம் பற்றிய பார்வையும் இருக்கும்.
நண்பர்களிடம் எடுத்துக்கொள்ளும் உரிமை (அது அவனின் காதலி வரை போவது கொடுமை), நண்பர்கள் மீதான நம்பிக்கையும், பிழை விட்டு மீண்டும் திருந்திவருகையில் அவனை ஏற்றுக்கொள்ளும் இடங்களும், திருமணத்தின் பின்னதான நட்பின் தொடர்ச்சியும் காட்டப்படும் விதத்தில் ஜொலிக்கிறார் இயக்குனர்.

 திருமணத்தின் பின்னதான காட்சிகளில், முட்டல், முறுகல், மோதல்கள் உணர்ச்சிகளாலேயே காட்டப்படுவதும், அதிலும் அந்த கார் காட்சியும், ரிச்சாவை தனுஷ் எட்டி உதைக்கும் காட்சியின் பின்னதான காட்சிகளும், கடைசிக் காட்சியில் தொலைபேசி மூலமாகக் காட்டப்படும் உணர்வுகளும் செல்வாவின் தனி முத்திரைகள்.

தனுஷ் - வாவ்.. இந்த சுள்ளான் இப்போது எந்தவொரு பெரிய நடிகன் !!!!
எத்தனை உணர்ச்சிகளை எத்தனை விதமாகக் கொட்டி நடிக்க முடிகிறது? இதைவிட வேறு யாராலுமே இந்த கார்த்திக் ஸ்வாமினாதனாக நடித்துவிட முடியாது.

ரிச்சாவை வெறுத்து எடுத்தெறிந்து பேசும் இடங்கள், காதலித்து, நண்பனுக்கு துரிகம் இழைத்துவிடுவோமா என்று தயங்கும் இடங்கள், காதலில் மருகும் இடங்கள், தன் படைப்புக்கான அங்கீகாரத்தை உரியவரிடம் எதிர்பார்த்து ஏங்கும் இடங்கள், தன் படைப்பை இன்னொருவர் உரித்தாக்கியதைப் பார்த்து மனம் வெம்புவது, விரக்தியுடன் ஒரு மண நோயாளியாக குமுறும் இடங்கள் என்று கிடைக்கும் இடங்களிலெல்லாம் தனுஷின் தர்பார் தான்.

கவலையிலும் இயலாமையிலும் கண்ணோரம் துளிர்க்கும் சிறுதுளிக் கண்ணீர், கோபத்தில் விடைக்கும் மூக்கு, "என் படத்தை ஆய்னு சொல்லிட்டான்" என்று உதடு துடிக்க குரல் உடைந்து பேசும் இடமாகட்டும், "அவர் இரும்பு மனுஷி சார்" என்று உருகுகிற இடமாகட்டும் தேசிய விருதுக்கு பெருமை சேர்த்துள்ளார் தனுஷ்.

எத்தனையோ மசாலா மொக்கைகளில் நடித்தாலும் இந்த மாதிரியான படங்கள் வரும்போது தனுஷ், தனுஷ் தான்.

புதுப்பேட்டை, பொல்லாதவன் திரைப்படங்களுக்குப் பிறகு தனுஷை அதிகம் ரசித்தது மயக்கம் என்ன வில் தான்.

(ஆனாலும் இளைஞராக ஓகே.. திருமணம் முடித்து சில ஆண்டுகளில் எனும்போது மற்றவர்களில் இருக்கும் எந்தவொரு மாற்றத்தையும் தனுஷ் உடலில் ஏற்படுத்திக் காட்ட முடியாதது தான் தனுஷின் பெரிய வீக்பொயின்ட். தனுஷின் உடல்வாகே அவருக்கான பலவீனமாகவும் இருக்கிறது)

ரிச்சா - புதுமுகமாம்.. நம்ப முடியவில்லை.

முறைப்போடு ஆரம்பித்து, அளவோடு சிரித்து, அளந்து அளந்து பேசி, ஆழமாகப் பார்த்து யாமினியாக வாழ்ந்துவிட்டுப் போகிறார் ரிச்சா கங்கோபத்யாய். முறைப்பதால் வீங்கியதாய்த் தோன்றும் முகமும் தனுஷுடன் ஒப்பிடுகையில் பருமனாகத் தெரியும் உடல்வாகும் உறுத்தாமல் இருப்பதற்கான காரணம் ரிச்சாவின் அற்புதமான நடிப்பு.
ஒரு தேர்ந்த நடிகையாக மின்னுகிறார்.

செல்வராகவனின் திரைப்பட நாயகிகளிடம் வழமையாகவே தெரியும் ஒரு மிதப்பும், பக்குவத் தன்மையும் இவரிடமும். கண்களாலேயே பல வசனங்களை அழுத்தமாகப் பேசுகிறார்.
அடுத்த படம் சிம்புவுடன் ஒஸ்தியாம்.. ம்ம்ம்ம்

ஒளிப்பதிவாளர் ராம்ஜி - இவரது முன்னைய படங்களின் ஒளிப்பதிவுகள் பார்த்து வியந்து ரசித்திருக்கிறேன். டும் டும் டும், மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம், ஆயிரத்தில் ஒருவன்..

ஆனால் இந்தப் படத்தில் தான் ராம்ஜி 'தேவை'ப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகிறது.
ஒரு நிழற்படப்பிடிப்பாளனைப் பற்றிய கதை என்பதால், அந்தப் படப்பிடிப்பாளனாகவும் மாறி ஈர்த்துள்ளார் ராம்ஜி.

பறவைகளைப் படம் பிடிக்க தனுஷ் காட்டுக்குள் செல்லும் காட்சியில் வரும்  ஒரு லயிக்கும் காட்சியும், சில இரவுக் காட்சிகளும் ராம்ஜியின் master pieces of this movie.

G.V.பிரகாஷ்குமார் - பின்னணி இசையில் ஒரு இசைஞானியிசத்தை இந்தப்படத்தில் ஜீ.வி காட்டி இருக்கிறார். அதாவது தேவையான இடங்களில் மௌனத்தைப் பேச விட்டு ஏனைய இடங்களில் மெல்லிய பின்னணி இசையைத் தவழ விட்டும் ரசிக்க வைத்துள்ளார்.

புதிய நடிகர்கள்....
குறிப்பாக சுந்தராக வந்திருப்பவர். சிம்பிளாகக் கலக்கிறார்.

முக்கியமான காட்சிகள் மூன்றை சொல்லியே ஆகவேண்டும்...
தரையில் படிந்திருக்கும் ரத்தக் கறையைத் துடைக்கும் காட்சி - வசனங்களே இல்லாத ஒரு கவிதை
நாய் போல வேலை செய்வதாக தனுஷ் நடித்துக் காட்டும் காட்சி
இறுதிக் காட்சியில் தனுஷும், ரவி பிரகாஷும் சந்திக்கும் காட்சிபிடிக்காத/சகிக்காத விஷயங்கள்

வழமையான செல்வா ரகக் காட்சிகள்...
கிடைக்கும் சாக்கிலெல்லாம் பெண்களை நேரடிக் கெட்ட வார்த்தைகளில், அல்லது தணிக்கையிடம் இருந்து தப்புகிற மாதிரியாக இளசுகளுக்கு மட்டும் புரியும் "பழைய கோழி" போன்ற வார்த்தைகளால் வசைபாடுவது.
(ஆயிரத்தில் ஒருவனில் செல்வராகவனை நான் பாராட்டி இருந்தாலும் எதோ ஒரு மனப் பிறழ்வு இவரிடம் இருப்பதை மற்ற எல்லாப் படங்களிலும் கண்டிருக்கிறேன்)

மது, புகைப் பிடித்தலை நண்பர்கள் மத்தியிலான, திரைப்படத்தில் காட்டப்படும் நண்பனின் குடும்பம் மத்தியிலான முக்கியமான இணைப்பு ஊடகமாக வைத்திருப்பது.

திரைப்படம் முழுவதும் ஓவரான மது சம்பந்தப்பட்ட காட்சிகள்..
சிரித்தாலும் தண்ணி.. அழுதாலும் தண்ணி.. ஓவரா இல்லையா?
(இறுதியாக மதுவால் தான் இத்தனையும் என்று போதனை செய்கிற மாதிரி ஒரு காட்சி வைத்தால் சரியாகிவிடுமா?)

பாடல் ஒன்றுக்குள்ளே வரும் அந்த குசு விடும் காட்சி.. உவ்வே...

அத்தனை பாடல் காட்சிகளும் தனித் தனியாகப் பார்க்கும்போது அற்புதம்.. எனினும் படத்தில் அனைத்துமே செருகல் போல உறுத்தல்..

அதிலும் காதல் என் காதல், நான் சொன்னதும் மழை வந்துச்சா என்ற நான் ரசித்த இரு பாடல்களும் செம சொதப்பலாக நுழைக்கப்பட்டிருக்கின்றன.

Plagiarism பற்றிப் பேசியிருக்கும் படத்தில் தனுஷ் எடுத்ததாகக் காட்டப்பட்டுள்ள அந்தப் புகைப்படங்கள் - இறுதியாக தனுஷ் துருவ, காட்டுப் பகுதிகளில் எடுத்த படங்களுக்கு யார் உரியவர் என்று சொன்னார்களா?
அந்தக் காட்சிகள் ஒட்டியது போல வந்திருப்பதும் உறுத்தல்.

ஒரே பாடலில் ஓகோ என்றாகும் மசாலா தமிழ்ப்படங்கள் போல இறுதிக் காட்சிகள் செல்வராகவன் படங்களில் எதிர்பாராதது.
ஆனாலும் வழமையான சோக முடிவாக இல்லாமல் சுபம் ஆக்கியிருப்பது மனதுக்கு ஆறுதல்.

சில பல குறைகள் இருந்தாலும் படம் பார்த்து முடிகையில் மனதில் ஒரு சின்னத் தாக்கமும் படம் பிடித்ததாக உணர்வும் இருந்தது.

மயக்கம் என்ன - கொஞ்சம் மயக்கம், கொஞ்சம் கலக்கம் இருந்தாலும் படம் அநேகருக்குப் பிடிக்கும்


பிற்குறிப்புக்கள் -
1.புகைப்படங்கள் எடுப்பதில் எப்போதுமே தனியான விருப்பம். அதிலும் அண்மைக்காலத்தில் iPhone இன்னூடாக Instagramஇன் மூலம் புகைப்படங்களில் தனியான விருப்பம் வந்திருக்கும் நிலையில் உயர் ரக புகைப்படக் கருவி ஒன்றை வாங்கியே ஆகவேண்டும் என்ற தாகத்தைக் கிளப்பிவிட்டது மயக்கம் என்ன.

2.மாதேஷ் (ரவி பிரகாஷ்) தன்னை துரோணராகக் கருதி வாய்ப்புக்காக, அங்கீகாரத்துக்காக வரும் தனுஷைக் கேவலப்படுத்தி , சந்திக்கவே மறுப்பதைப் பார்த்த பிறகு மனதில் சின்னதொரு நெருடல்.
நேர்முகத் தேர்வுகள், குரல் தேர்வுகளுக்கு வரும் ஆர்வமுள்ள பலரை நான் போருத்தமற்றவர்கள் என்று கருதி வேலைக்கு எடுக்காமல் அனுப்பி இருக்கிறேன்.

இவர்களில் எத்தனை பேர் தனுஷ் மாதிரி என்னைத் திட்டி சாபம் இட்டு கறுவி இருப்பார்களோ?
ஆனால் அவர்கள் நிச்சயம் ஏதோ ஒரு விதத்தில் பொருத்தமற்றவர்களாக இருந்திருப்பார்கள்; தகுதியானவர்களை நான் எக்காரணம் கொண்டும் தள்ளி வைத்ததில்லை.

ஒரு முறை நேர்முகத் தேர்வில் சறுக்கிய பலருக்கு மீண்டும் தங்களை நிரூபிக்க பல வாய்ப்புக்களை வழங்கியும் இருக்கிறேன்.
திறமையான, தகுதியான, தேடல் உடையவர்களை இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

***** இதற்கு முந்தைய பதிவுடன் எனது இடுகைகளின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியதை ஞாபகப்படுத்திய பதிவுலக, பஸ் புக் நண்பர்கள் + வாசகர்களுக்கு நன்றிகள் :) ******


9 comments:

நிரூஜா said...

:)

Unknown said...

//அடுத்த படம் சிம்புவுடன் ஒஸ்தியாம்.. ம்ம்ம்ம்//

சிம்பு எண்டா விளையாட்டா போச்சு என்ன?
விமர்சனம் அருமை

கார்த்தி said...

நல்ல பக்கச்சார்ப்பில்லாத விமர்சனம்! ரிச்சாவின்முதிர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது!
காதல் என் காதலை எதிர்பார்த்து சென்றேன். தேவையே இல்லாமல் புகுத்தி விசர் காட்டசியமைப்பு செய்து கெடுத்துவிட்டார்கள்!

AH said...

விமர்சனம் சுப்பர்......... ரிச்சா - புதுமுகமாம்.. நம்ப முடியவில்லை.
தனுஷ் சுப்பர்.எனக்கு படத்தின் பிற்பகுதி பல இடங்களில் A Beautiful Mind (2001)யின் தாக்கம் இருக்கிற மாதிரி உணர்ந்தன்.

Nirosh said...

முதலில் வாழ்த்துக்கள் அண்ணா... !!!
அளவான விமர்சனம் அழகாய்...!!!
நானும் அப்படித்தான் படம் பார்த்த பின்பு உயர்ரக கமெர ஒன்று வாங்கிவிட்டேன்...!!! இப்பொழுதெல்லாம் அதனுடனே போழுதுகழிகின்றது விரைவில் வலைத்தளம் ஏறும....!!!

Buஸூly said...

ஆரம்பத்தில் நானும் திரை அரங்கில் கத்தி ஆர்பாட்டம் செய்த ஒரு சராசரி ரசிகனே.... இருப்பினும் பின்னர் வந்த காட்ச்சிகள் முதற்பாதியில் எதற்காய் அப்படியொரு காட்சி என்பதை தெளிவாய் எனக்கு உணர்த்தியது அதன் தாக்கமே படம் பிடிக்கவில்லை என்று எவர் சொன்னாலும் எதற்காய் எந்த காட்சி எடுக்கப்படிருகிறது என்று எனக்கு அவர்களிற்கு விளக்கிவிட தோன்றியது.இன்னொரு முறை பார்க்க விரும்பும் படம் ( முதற்காட்சியில் கத்தி ஆர்பாட்டம் செய்ததிற்கு பரிகாரம்)

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

வந்தியத்தேவன் said...

இசைஞானியுடன் ஜீவிபிரகாசை ஒப்பிட்டமைக்கு கண்டனங்கள்.

Manimegalai Veerasingham said...

நீங்கள் மாதவி விமர்சனம் படித்தீர்களா?
http://www.moviecrow.com/News/380/selva-should-be-slapped

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner