December 11, 2011

பாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழமும்


இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்ததினம்...


தமிழை நேசிக்கும் எவருக்கும் பாரதியைப் பிடிக்காமல் போகாது.

தமிழின் சுவையையும், எளிமையையும், வீரியத்தையும், பல்வகைமையையும் எடுத்துக்காட்டும் கவிதைகள், பாடல்களை பாரதியை விட இந்த நவீன காலத்தில் தந்த 'ஏற்றுக்கொள்ளப்பட்ட' இன்னொரு கவிஞனைக் காண்பதும் அரிது.

அந்த மாபெரும் மகாகவிக்கு மீண்டும் ஒரு மரியாதை கலந்த வணக்கம்..

கவிதைகளில் ஈடுபாடும், தமிழில் விருப்பும் வர சிறுவயது முதல் வாசித்த இன்றும் வாசித்தும் நேசித்தும் வரும் பாரதி கவிதைகள் + பாடல்கள் தான் முக்கியமான காரணம்.

பாரதியை நினைவுபடுத்தும் இன்றைய நாளில், இன்னொரு பாரதிக் கவிஞனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவேண்டி இருக்கிறது...

யுகபாரதி..
திறமையும், தேடலும் நிறைந்த இளைய தலைமுறைக் கவிஞர் + பாடலாசிரியர்.

கண்ணாடி என்ற இவரது கவிதைத் தொகுப்பு நான் ரசித்தவொன்று..
அதே போல யுகபாரதி என்றவுடன் ஞாபகம் வரும் சில இனிய திரைப்பாடல்களும் இருக்கின்றன.

கனாக் கண்டேனடி - பார்த்திபன் கனவு
சித்திரையில் என்ன வரும் - சிவப்பதிகாரம்
இப்படி மழை அடித்தால் - வெடி
பேரூந்தில் - பொறி
யார் இந்த தேவதை - உன்னை நினைத்து

கவித்துவமான பாடல்கள் மட்டுமன்றி, கலகல, குத்துப் பாடல்களையும் தருகிறார் இவர்.

அண்மையில் வெளியான 'ஒஸ்தி' பாடல்களிலும் பட்டை கிளப்பி இருந்தார் யுகபாரதி.

இதைவிட இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள 'ராஜபாட்டை' திரைப்படத்தின் அத்தனை பாடல்களையும் யுகபாரதியே எழுதியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை..
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்.
நேற்று கேட்டேன்.. ம்ம்ம் ரசிக்கலாம்.

அவற்றுள் ஒன்று "பனியே... பனிப்பூவே.." என்று ஆரம்பிக்கும் காதல் பாடல்.

அண்மையில் ஒரு சில பாடல்களில் ரசிக்க வைத்த ஜாவேத் அலியும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ரேணு கண்ணனும் (ரேணுகா) பாடியுள்ளார்கள்.

இந்தப் பாடலில் கவிஞர் யுகபாரதியின் கவித்துவம் சும்மா அப்படிப் புகுந்து விளையாடி இருக்கிறது..

பாடலின் இரண்டாவது சரணத்தில் நாயகன் பாடுவதாக இரு வரிகள்...

"முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே.... 
அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே." 

நான் அறிந்தவரை தமிழ் ஈழம் என்ற சொல் ஒரு தென்னிந்தியத் திரைப்பாடலில் பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென நினைக்கிறேன்.

ஆனால்...
தமிழ் ஈழம் என்பது ஒரு வெறும் வார்த்தை அல்ல..
அது ஒரு உணர்வு, ஒரு நீண்ட காலக் கனவு என்பது அறியாத ஒரு தமிழ்க் கவிஞரா யுகபாரதி?

யுகபாரதி, 

உங்கள் காதல் போதைக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் உவமையா தமிழ் ஈழம்?

முள்வேலிக்குள் வாடும் மக்களின் வேதனையும் காதலில் உருகும் நாயகனின் இன்ப வேதனையும் ஒன்றா?

தனிநாட்டுக் கோரிக்கை பலியெடுத்த இத்தனை மக்களின் சோகங்களும் இன்றுவரை எம்மவர் பலர் அனுபவிக்கும் வேதனைகளும் நாயகன் காதலில் உருகுவதொடு ஒப்பிடப்படுவது அபத்தமாக இல்லையா?

காதலுக்கு என்று தான் காலாகாலமாக நிலா, காற்று, நதி, மேகம் என்று உயிரற்ற உவமைகள் இருக்கையில் எம் மக்கள் இரத்தத்தோடு தான் காதல் விளையாடக் கிடைத்ததா உங்களுக்கு?

அதுவும் தமிழ் ஈழம் என்ற சொல்....

இந்த தமிழ் ஈழம் என்பது கிடைக்காமலே போகட்டும்.. ஆனால் அது தந்த வடுக்களும், தமிழ் ஈழம் என்பதற்காக தம் உயிரை ஈந்த எம்மவரின் நினைவுகளும் மறந்துவிடக் கூடியவையா?

என்னை விட, எம்மவரில் சிலரை விட ஈழம், ஈழத் தமிழ் மக்களை, அவர் தம் சோகங்கள் + உணர்வுகளைப் புரிந்துகொள்வோர் வாழும் தமிழகத்தில் அண்மைக்காலத்தில் அரசியலுக்காகவும், சினிமாவுக்காகவும் எங்கள் தமிழ் உணர்வுகள் விற்கப்படுவது கண்டு கொதிப்பு வருகிறது.

ஏழாம் அறிவில் எனக்கு வந்த கோபத்துக்கான காரணமும் அதுவே...
"ஒருவனை ஒன்பது நாடுகள் சேர்ந்து கொன்றதே" வசனம் மட்டும் விளம்பரமாக எத்தனை தடவை தொலைக்காட்சித் திரைகளில் சென்றது என்று ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

இந்த இடத்தில் தான் எனது முன்னைய பதிவொன்றும் ஞாபகம் வருகிறது.

அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்!

எமக்காகக் குரல் கொடுப்பது, இரக்கப்படுவது வேறு.. அப்படியில்லாவிட்டாலும் பரவாயில்லை.
ஆனால் செத்த பிணங்களின் மேலும், சாகாத உணர்வுகளோடும் தங்கள் வர்த்தகக் கோட்டைகளை அமைப்பதை சகிக்க முடியாமல் உள்ளது. 

அதுசரி, மகாகவி பாரதியே "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று தானே பாடிவைத்தான்.
ம்ம்ம்ம்ம்ம்.....

தமிழ் ஈழம் என்ற வரிகளைத் தணிக்கை செய்து ஒலிபரப்பிய காலமும் உண்டு..
டைலாமோ பாடல் வந்த நேரம் என்ற வரிகளைத் தணிக்கை செய்யவேண்டுமா என்று யோசித்து பின் அப்படியே ஒலிபரப்பிய ஞாபகம். (அப்போது நான் சூரியன் FM இல்)
இப்போது தணிக்கை செய்யவேண்டி வருமோ (தகவல் திணைக்களம் உத்தரவிட்டால்)தெரியாது. ஆனால் அவ்வாறு தணிக்கை செய்தாலும் சந்தோஷமே..
காதலனின் சோகத்தைத் தமிழ் ஈழத்துடன் ஒப்பிட்டதனால்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...

ஏழாம் அறிவு எங்களைப் பற்றிப் பேசுது என்று உணர்ச்சிவசப்பட்டு காவடி தூக்கிய எம்மில் பலரைப் போல, தமிழ் ஈழம் பற்றி விக்ரமின் படத்தில் பாட்டு வந்திருக்கு என்று இந்தப் பாட்டை எங்களவர்கள் ஹிட் ஆக்கத தான்  போகிறார்கள்..
நானும் விடியலில் நேயர்கள் கேட்டதற்காக வேண்டாவெறுப்பாகப் போடத் தான் போறேன்....
(நீயும் சினிமாக்காரன் மாதிரித் தானே என்று உங்களில் சிலரும் திட்டத் தான் போகிறீர்கள். ஆனாலும் ஏழாம் அறிவின் எல்லோலமா பாடல் எவ்வளவு தான் ஹிட் ஆகியும் ஸ்ருதி ஹாசனின் உச்சரிப்புக் கொலையினால் இன்றுவரை நான் விடியலில் ஒலிபரப்பியதே இல்லை.)

ம்ம்ம்ம்ம்ம்

எல்லாம் எங்கள் தலைவிதி..


15 comments:

தர்ஷன் said...

தேவையான பதிவு,
அவர்களின் தமிழுணர்வு எல்லை மீறி செல்கிறது. கடுப்பேத்துறாங்க மை லார்ட்

Unknown said...

//அதுசரி, மகாகவி பாரதியே "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று தானே பாடிவைத்தான்.
ம்ம்ம்ம்ம்ம்.....//

அதே அதே காலையில் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தேன். ஏழாம் அறிவு பார்த்து உணர்ச்சி பொங்கியவர்களாக இருந்தால் இதிலும் அவர்களுக்கு அப்பிடியே இருக்கும். வியாபார உத்திகளுக்கு அவர்கள் கையாளும் சூட்சுமங்களை புரிந்து கொள்ள தெரியாத அப்பாவிகள்(?)

ம.தி.சுதா said...

அண்ணா எமது உணர்வு தான் பலருக்கு வர்த்தகப் பொருள்...

அண்மையில் இணையம் பார்த்திருந்தீர்களானால் அறிந்திருப்பீர்கள்..

எனது 7 ம“ அறிவுக்கான முகநூல் கருத்தையே இங்கு இடுகிறேன்....

ஃஃஃஃஃஃ 7ம் அறிவு விளம்பரம் - அடிக்கணும் திருப்பி அடிக்கணும் ஒருத்தனை 9 பேர் தாக்கினது வீரமில்ல துரோகம்... அடுத்து உதய நிதியின் பெயர் ஒட்டல்.. எப்படி இருக்கிறது விளம்பரம்.. பணத்துக்காக எதுவும் செய்வாங்களாம் நாங்க அதைத் தூக்கி வச்சு வீர வசனம் பேசி சாகணுமாம்.. திரு உதயநிதி அவர்களே அந்த 9 பேரில் உங்க தாத்தாக்கும் அப்பனுக்கும் பெரும் பங்கிருக்கிறதை மறந்திட்டிங்களா? அந்த நேரம் ஒருவர் முதல்வர், மற்றவர் மேயராம் இப்ப வந்துட்டாங்க பணம் உழைக்க... தயவு செய்து மற்றவங்க உணர்வை வித்துப் பிழைக்காமல் உங்க உழைப்பை விற்று பிழையுங்கள்.ஃஃஃஃஃ

Dilexson sk said...

//" எம் மக்கள் இரத்தத்தோடு தான் காதல் விளையாடக் கிடைத்ததா உங்களுக்கு?" //Good Question.. But they won't Change. This is only just business- i think.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

காலத்தே அவசியமான் பதிவு!

ஷஹன்ஷா said...

இலங்கை தமிழர் விவகாரம் பலருக்கு வியாபாரம் ஆகி விட்டது.. என்ன செய்ய..

ஃஃஃஃஎம் மக்கள் இரத்தத்தோடு தான் காதல் விளையாடக் கிடைத்ததா உங்களுக்கு?" ஃஃஃ

Gajen said...

என்ன கவலையான விஷயம் என்றால் இந்த "ஈழ ஆதரவு" தோற்றப்பாடு வர வர சினிமாவில் பரவலாகிக் கொண்டே வருகின்றது.

அடுத்தது விஷால் "பிரபாகரன்" என்ற பெயரில படம் எடுக்குறாராம், அனால் படத்தின் பெயருக்கும் பிரபாகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். பணமும், புகழும் வசூலிக்க எந்த குதிர கிடைச்சாலும் ஓட்டிருவினம்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும், சினிமாக்காரனையும் விமோசனத்துக்காக நம்பியிருந்த எங்கள செருப்பால அடிக்கொனும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

Pranavan G said...

சினிமாவில் மட்டும்மல்ல , தென் இந்திய பத்திரிக்கை , தொலைகாட்சிகளும் இதேபோன்று செயல்படுவதாகவே நான் கருதுகிறேன்... நல்ல பதிவு.. நன்றி .

கன்கொன் || Kangon said...

பதிவுக்கு நன்றி.
இந்தப் பாடலை நீங்கள் ஒலிபரப்பியபோது கலையகத்தில் இருந்தபோது கலவையான உணர்வுகள் இருந்தன.
அந்த வரிகள் பிடித்திருக்கவில்லை, ஆனால் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ என்று நினைத்து அந்த வரிகள் பற்றிய கலந்துரையாடலைத் தவிர்த்தேன்.
ஆனால் ஒரு கட்டத்தில் என்னை மீறி "ஆனால் அந்த வரிகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போலிருக்கின்றன" என்று நான் சொன்னபோது நீங்கள் "ஓம்" என்ற போது தான் உங்களுக்கும் அதே உணர்வு என்று புரிந்து கொண்டேன்.

அதற்குப் பின்னர் தான் அதைப் பற்றி கொஞ்சம் உங்களுடன் கதைத்தேன்.

தேவையான பதிவு.
சம்பந்தமே இல்லாத வரிகள் வெறுமனே பிழைப்பிற்காக மாத்திரம் எழுதப்பட்டிருக்கின்றன.
இந்தப் பாடலைத் தூக்கிப் பிடிக்காமல் வெறுமனே இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் இப்போதெல்லாம் தமிழ் சினிமா negative marketing இல் அதிகம் நாட்டம் செலுத்துகிறது போலுள்ளது.

மன்மதகுஞ்சு said...

கருத்து சுகந்திரம் அனைவருக்கும் உண்டு,உங்கள் உணர்வுபூர்வமான கருத்தில் நியாயம் இருக்கிறது ஆனால் இதில் என்ன முக்கியமான விடயம் என்றால் பாரதியின் பாடலும் வெளிவந்திருக்கு ஆனால் கொலைவெறியையும் ஜ லவ் யூ என் பொண்டாட்ட்டியையும் பிரபலமாக்கியதே நாங்கதானே,7 ம் அறிவு படத்தைப்பார்த்துவிட்டு எனது புலம் பெயர் நண்பர்கள் கூறியது மச்சான் சூப்பர் படம்டா நம்மளைப்பற்றி சொன்னது நெத்தியில அடிச்சது மாதிரி இருந்தது என்று..ஆனால் அவர்களை நினைந்து வருந்திக்கொண்டேன்..எனக்கு பயம்ன்னா என்னான்னே தெரியாது ஏன்னா என் பெயர் பிரபாகரன் என்று வெடி படத்தில் விஷால் சொன்னதே வேடிக்கையானது..பெயர் வைத்திருப்பவன் எல்லாம்... ஈழம் பற்றி யாரும் கருத்து சொன்னால் கொந்தளித்துபோகும் நாம் அந்த ஈழத்தை குழி தோண்டி புதைத்துக்கொண்டிருந்தபோது கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்துக்கொண்டிருந்தோம் என்பதே உண்மை..இலங்கை அரசாங்கம் கொடுத்த 100 % உண்மையான போர் சம்மந்தமான செய்திகளை நீங்கள் வாசிக்கும் போது நாங்கள் யாராச்சும் சொன்னோமா எமது உணர்வில் தார் ஊற்றாதீர்கள் உண்மைச்செய்திகளை மட்டும் சொல்லுங்கள் என்று ,அப்படி சொல்லியிருந்தால் மட்டும் நீங்கள் செய்திருக்கவா மொத்தத்தில் நாங்கள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்..ஒரே ஒரு கேள்வி உங்கள் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால் யுவனின் அல்லது யகபாரதியின் பாடல்களை உங்கள் வானொலியிலேயே ஒலிபரப்பாமல் இருக்கமுடியுமா, இல்லை முடியாது ஏனெனில் மனஉணர்ச்சி வேறு வியாபரம் வேறு..இந்த கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்

Riyas said...

உங்கள் ஆதங்கம் சரியானதே.. தமிழ் ஈழம் எனபது சினிமாக்காரங்களுக்கும் அரசியல்வியாதிங்களுக்கும் வியாபார பொருளாக மாறிவிட்டது!

உங்கள் கருத்து யுவன்சங்கர் ராஜா வரை போயிருக்கிறது..

//Raja_Yuvan Yuvan Shankar Raja @
@sathm @loshanarv will try my best to change it.//

parthipan said...

நானும் இதனை ஒரு முறை பதிவு செய்து இருந்தேன்.. தேவையான பதிவு...

http://twitter.com/#!/parthi_fun/status/145409678803869696

மேலே உள்ள இணைப்பில் பார்க்கவும்

suharman said...

இதற்கான யுகபாரதியின் பதிலினை இங்கே பார்க்கலாம் http://yugabharathi.wordpress.com/

Anonymous said...

sensitive issue like MULLAIPPERIYAR is on peak at one side.celebrating rajinikanth's birthday is on the other side.now u know y keralites are screwing tamils.these people r more interested abt the next movie of rajinikanth than the outcome of mullaiperiyar issue.we don't know where to keep cinema and hw to play politics.malayalis know better.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner