சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண் ஆரியவதிக்கு நடந்த கொடூரம்.
பதினெட்டு ஊசிகள்,ஆணிகள் அவரது உடலுக்குள் அவர் வேலை செய்த எஜமானர் குடும்பத்தினரால் ஏற்றப்பட்டிருக்கின்றன.
இதுவரை சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்டு எடுக்கப்பட்டவை இததனை.
இன்னும் எத்தனை ஆரியவதி என்ற அப்பாவியின் உடலுக்குள் இருக்கின்றனவோ தெரியாது..
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுவேலை,தொழிற்சாலை வேலைகளுக்கு செல்லும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து நாடு திரும்பி இருக்கிறார்கள்.
பிணமாகத் திரும்பிய பலரைப் பற்றி அறிந்திருக்கிறோம்.
பிணமாகியும் அங்கேயே மறைக்கப்பட்ட பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்..
இப்போது ஆரியவதிக்கு நடந்த ஆணியேற்றிய கோரம்..
அந்த மத்திய கிழக்கு எஜமானர்கள் மனிதர்களா?
ஏன் இப்படி ஒரு கோர வெறி?
சக மனிதர்களைத் துன்புறுத்துவதில் குடும்பமாக ஏன் இப்படி ஒரு இன்ப வெறி அவர்களுக்கு?
பணிப்பெண்கள்,வேலையாட்கள் என்றால் அவர்களுக்கேயான அடிமைகளாக நினைத்துவிட்டார்களா?
அரபு நாடுகளில் மட்டும் இவ்வகையான செயல்கள் பணியாளர்களுக்கு எதிராக நடைபெறுவது ஏன் என்று புரியவில்லை.
அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?
வெளிவந்த சில உண்மைகள் இப்படியிருக்க இன்னும் வெளியே வராமல் என்னென்ன நடந்திருக்கிறதோ?நடந்துகொண்டிருக்கிறதோ?
இவர்களுக்கான தண்டனையை வழங்குமா சவூதி அரசு?
இலங்கை அரசு இப்படியான சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுக்க தனது நட்பு நாடுகளுள் ஒன்றான சவூதி அரேபியாவை நேருக்க வேண்டும். அல்லது பணிப்பெண்களை ஜோர்டானுக்கு அனுப்பாமல் நிறுத்தியது போல சவூதிக்கும் அனுப்புவதை தடுக்க வேண்டும்.
இதனால் அரேபியர்கள் நிறுத்திக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்தும் இந்தியா,பிலிப்பைன்ஸ்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து தங்களுக்கான 'வதைபடக்கூடிய அடிமைகளை' அழைத்துக் கொள்வார்கள்.
சிலாபம் காளி கோவிலில் நடந்த மிருக பலி..
என்ன தான் சிறு தெய்வ வழிபாடு, முன்பிருந்தே வந்தது என்று சப்பைக் கட்டு சாட்டுக்கள் சொன்னாலும் நானூறுக்கு மேற்பட்ட உயிர்கள் ஒரு ஆலயத்தில் வைத்து பக்தி என்ற பெயரில் பலி கொடுக்கப்பட்டது தவறே.
இதை நியாயப்படுத்தி ஒரு சிலர் கருத்து சொல்லி வருவது பெரும் வேடிக்கை மட்டுமல்ல வெட்கமும் கூட..
அவர்கள் இந்த பலியை வேள்வியாக,முன்பிருந்தே இருந்துவரும் வழிபாட்டு முறையாக நியாயப்படுத்துவதன் காரணம், இந்த மிருகபலியை முன்னின்று தடுக்க முனைந்தவர்கள் பௌத்த பிக்குகள் என்பதே.
எங்கள் சமய விவகாரம்.. நாம் பார்த்துக் கொள்வோம் என்ற குறுகிய நோக்கமே இது.
யார் தடுத்தாலென்ன.. நியாயம் என்றால் நியாயம் தான்.
ஒரு பக்கம் வடக்கு-கிழக்கில் போர் என்ற பெயரில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது இவர்களின் நியாயம் எங்கே போனது என்ற கேள்வியில் இருக்கும் நியாயம் மிகச் சரியானதே.
ஆனால் அதற்காக இது சரி என்று ஆகிவிடாது.
உயிர்கள் என்றால் உயிர் தான்.
சமயம்-வழிபடும் இடம் என்றால் அதற்குரிய புனிதம் வேண்டியதே.
அசைவ உண்ணி நீ யார் இது பற்றிப் பேச என்று கேட்டால், வெள்ளி-செவ்வாய் தாவர உன்னிகளாக அப்படியானால் ஏன் விரதமிருந்து கோவில் போகிறீர்கள் என்று நானும் கேட்கத் தயார்.
பௌத்த பிக்குகள் செய்ததை ஏன் இந்த சைவ உண்ணிகள், அகிம்சாவாதிகள்,அன்பைப் போதிப்பவர்கள் செய்யவில்லை?
அவர்கள் செய்யும் போது ஏன் கடுக்கிறது?
இதற்குள் வழிபடுவது எப்படியும் செய்யப்படலாமாம்..இறைவனை நாம் அறிந்த முறையில் வழிபடுவதை இறைவன் ஏற்பாராம்.. கண்ணப்ப நாயனாரை உதாரணமாக அழைத்து வருகிறார்கள்.
இந்தக் காலம் மனிதர்கள் நாகரிகமடைந்த காலம். இன்னும் உயிர்ப்பலி தேவையா?
இன்னும் சிலர் அகிம்சை+உயிர்ப்பலியை மூடநம்பிக்கைஎன்று வகைப்படுத்துகிறார்கள்.
ஒரு சில உயர்சாதிப் பிரிவினர் உருவாக்கிக் கொண்ட விதியாம் இது.. எனவே கோவில்களில் ஆடு,மாடு,கோழி அடிக்கலாமாம்.
எங்கே போய் என் தலையை முட்டுவேன்..
இப்போது சொல்லுங்கள் சமயங்கள் எம்மை நல்வழிப்படுத்தும் என இளைஞர்கள் நம்புவீர்களா?
பாகிஸ்தானும் கிரிக்கெட் சூதாட்டமும்..
மீண்டும் ஒரு தடவை பாகிஸ்தான் கிரிக்கெட் சூதாட்டப் புயல் சந்தேகத்தில் சிக்கி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி தோற்ற சர்ச்சையால் பலபேருக்குத் தண்டனை வழங்கப்பட்டு(அதில் ஒரு சிலர் மன்னிப்புப் பெற்று இப்போது தான் மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளார்கள்) காயம் ஆறி மீண்டும் அடித்தளத்திலிருந்து அணி கட்டமைக்கப்படும் நேரம் மறுபடி ஒரு பெரிய சர்ச்சை.
இம்முறை பணம் கொடுத்து வீரர்களை தன் கைப்பாவையாக ஆட்டிவைத்த பந்தயக்கார சகோதரர்கள் கையும்களவுமாக அகப்பட்டு அதில் ஒருவர் கைதாகியும் இருக்கிறார்.
பாகிஸ்தான் வீரர்களின் முகவராக இருந்து அவர்களுக்கு இங்கிலாந்தில் வாய்ப்பை,அனுசரணைகளை பெற்றுத் தரும் ஒரு முகவராக நீண்ட காலம் செயல்பட்டு பாகிஸ்தானிய முன்னணி வீரர்களோடு நெருங்கிப் பழகிய மசார் மஜீத் இப்போது Scotland Yardஇன் பிடியில்.
இப்போதைக்கு இந்தப் பாகிஸ்தானிய அணியில் நால்வர் தன்னிடம் 'வேலை' செய்ததாக மசார் கூறியுள்ளார்.
அதில் உறுதி செய்யப்பட்டுள்ள இருவர் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் பிரகாசித்த மொஹம்மத் ஆமீர்,மொஹம்மத் ஆசிப்.
அடுத்த இருவரில் ஒருவர் பாகிஸ்தானிய அணியினாலேயே சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்ட குள்ளநரி கம்ரன் அக்மல்.
அடுத்தவரின் பெயர் சாதாரண ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை..
தற்போதைய டெஸ்ட் அணியின் தலைவர் சல்மான் பட்.
இப்போது இவர்களில் மூவரின் செல்லிடப் பேசிகளும் பறிமுதலாகி இருக்கின்றன.
ஏற்கெனவே ICCயின் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் சந்தேகப் பட்டியலில் கைது செய்யப்பட்ட மசாரும் பாகிஸ்தானிய வீரர்கள் பலரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு முன்பே ஆசிப்,பட் ஆகியோரைக் கண்ணில் காட்டமுடியாது.
சோம்பேறித் தனமும்,கள்ளத் தனமும் கலந்த கலவையாகவே இவர்களைப் பார்த்தால் எனக்குத் தோன்றியது..தோன்றுகிறது.
ஆனால் சிறப்பாக விளையாடி வந்தவரும்,உயிரைக் கொடுத்துப் பந்துவீசி வந்தவருமான ஆமிரைப் பிடித்திருந்தது.
ஆனால் இப்போது?
வழமையான பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரராகி விட்டார். :(
இந்த Spot betting எனப்படும் கிரிக்கெட் சூதாட்டமானது போட்டிகளின் முடிவுகளை பேரம் தாக்கத்தை ஏற்படுத்தாது எனினும் இதுவும் கிரிக்கெட்டுக்கு ஏற்படுத்தும் துரோகம் தான்.
போட்டியின் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்கெனவே பேசி வைத்தது போல பணம் வாங்கிக் கொண்டு செயற்பட இந்தப் புதிய பையன் ஆமிரினால் மட்டுமல்ல,உலக சாதனையாளர் சச்சின் டெண்டுல்கரினாலும் முடியும்.
யாரின் சந்தேகப் பார்வையும் படாது..
இது பற்றி விரிவாக,ஆதங்கத்துடன் சக பதிவர் கங்கோன் கோபி பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள்....
திருடனாய்ப் பார்த்து திருந்தவேண்டும்.
மனசாட்சியின் படி ஒவ்வொருவரும் விளையாடினால் மட்டுமே இதனை தடுக்கமுடியும்.
காரணம் நானும் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் பணம் வாங்கியிருப்பேன் எனவே நினைக்கிறேன்.. யாரும் இங்கே மகான்கள் அல்ல.
சந்தேகப் பார்வை பாகிஸ்தானின் மேல் படிந்துள்ளமையானது அதனுடன் விளையாடும் சகல அணிகளுக்கும் சங்கடத்தையும் பாகிஸ்தானுக்கேதிராகப் பெற்ற வெற்றிகளின் மீதான சந்தேகத்தையும் தரப்போகின்றன.
நேற்றைய படுதோல்வியும் இங்கிலாந்தின் திறமையாக அல்லாமல்,பாகிஸ்தானின் மோசடியாகவே நோக்கப் படுகிறது.
இதற்கெல்லாம் முக்கிய முடிவு ஒன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்தே ஆகவேண்டியுள்ளது.
உடனடியாக முழு விசாரணை ஒன்றை நடத்தாமல் போட்டிகளைத் தொடரக் கூடாது.
சம்பந்தப்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட அத்தனை பாகிஸ்தானிய வீரர்களையும் தடை செய்யவேண்டும்.
சீ.. கிரிக்கெட்டில் ஏமாளிகள் ரசிகர்கள் நாமா?
சீ - சீரழிவு சீ - சீர்கேடு சீ- சீப்பான(cheap) விஷயங்கள்
#*# இப்போது மனப் பாரம் கொஞ்சம் இறங்கி இருக்கிறது.
நேரமிருந்தால் கிரிக்கெட் மற்றும் திரைப்பட பதிவுகள் இரண்டு இன்றும் நாளையும் வரும்.