இலங்கையும் இந்தியாவும் சம பலமா? ஒரு அலசல்

ARV Loshan
26
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இவ்விரு அரசுகளுக்கிடையிலான ராஜதந்திர உறவு போலவே அமைந்துபோனது.
இரு தரப்புக்கும் சேதமில்லாமல் ஷேப்பாக முடித்துக் கொண்டார்கள்.
நீ பாதி நான் பாதி 


ஒன்றில் நீ வெற்றி,இன்னொன்றில் நான் வெற்றி,இன்னொன்றை சமநிலையாக்கி சதங்களடித்து சாதனை படைத்து தொடரை சந்தோஷமாக நிறைவு செய்துகொண்டார்கள்.
வெளிப்பார்வையில் இந்தத் தொடர் சம பலம் பொருத்திய இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற தொடராகவே தெரிந்தாலும் (Cricinfo கூட அவ்வாறு தான் சொல்கிறது) உண்மை அப்படியல்ல..


சாகீர் கான் இல்லாமல் (இரண்டாவது வேகப் பந்துவீச்சாளர் யார்? தேர்வாளர்களுக்கே இனிக் குழப்பமாக இருக்கும்) இந்தியா அரைகுறை அணியாகவே தெரிந்தது.
முதலாவது போட்டியில் முரளிதரனும் இருந்ததால் இந்திய அணியின் பலவீனம் அப்படியே தெரிந்தது.
ஹர்பஜன் தன்னை மீள் நிறுத்திக் கொள்ள அவசரமாக ஏதாவது செய்தாகவேண்டும்.
இல்லாவிட்டால் மூன்றாவது டெஸ்டில் பிரகாசித்த மிஸ்ரா,ஓஜா, ஏன் பேடியின் பார்வையில் இந்தியாவின் தற்போதைய சிறந்த சுழல் பந்துவீச்சாளரான சேவாகும் (இதை ஒரளவு சேவாக் தொடரில் நிரூபித்தார்.. பலமுறை முன்னணிப் பந்துவீச்சாளரை விட இவரே விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்) ஹர்பஜனைப் பின் தள்ளிவிடக் கூடும்.


ஆனால் இந்தியாவின் அசுர பலம் துடுப்பாட்டம்.
அடித்து நொறுக்குவது மட்டுமல்லாமல் ஆணியடித்தது போல நின்றாடியும் இலங்கையின் வெற்றி வாய்ப்புக்களை இந்தியா இரு தடவை இல்லாமல் செய்திருந்தது.


டிராவிட்,தோனி,கம்பீர் ஆகியோர் தொடரில் சொதப்பினாலும் கூட சேவாக்,சச்சின் டெண்டுல்கர்,லக்ஸ்மன் ஆகியோரின் தொடர் கலக்கலும், விஜய்,ரெய்னா ஆகியோரின் இரண்டு டெஸ்ட் அதிரடிகளும் இந்தியாவைக் கரை சேர்த்தன.


சச்சின் தனது நிரந்தர நிதானமான,ஓட்டக் குவிப்பின் நேர்த்தியை மீண்டும் அழகாக நிரூபித்தார்.
பத்து ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் சதம் பெற்றவேளையில் அழகாக இரட்டை சதமாக மாற்றி அழகுபார்த்தார்.


சேவாகின் அதிரடிகளும்,இடையிடையே கலக்கலாக அவர் வீழ்த்திய விக்கேட்டுக்கலுமே இந்தியாவின் உற்சாக டொனிக்.
பந்துவீச்சாலர்களைப் பதறவைக்கும் சேவாக் தனது ரசிகர்களையும் அடிக்கடி பதறவைக்கிறார்.முக்கியமான தருணங்களில் அவசரப்பட்டு ஆட்டமிழந்து.
ஆனால் சேவாக் சொல்வது போல "இந்த வகையான அடிகளால் தான் அதிக ஓட்டங்களையும் பெற்றேன்.. ஆட்டமிழப்பதும் அதே வகையால் என்றால் என்ன செய்ய முடியும்?"


லக்ஸ்மன் - உண்மையான ஹீரோ.முதலாவது டெஸ்டில் இறுதிவரை போராடியதும்,முதுகுப் பிடிப்போடும் மூன்றாவது போட்டியை வென்றதும் முக்கியமானவை.ஆனால் இவர் எடுத்த சில அபார பிடிகள்?
வயது ஏறினாலும் சிங்கம் தான் என்பதை மீண்டும் இன்னொருவர் நிரூபித்திருக்கிறார்.  


இந்திய டெஸ்ட் அணியில் துண்டு விரித்து இடம் போட்டிருந்த யுவராஜைத் தள்ளி அமர செய்துள்ளார் ரெய்னா. ஒரு நாள் போட்டிகளில் நூறை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர் அந்த அனுபவத்தை தனது அறிமுகப் போட்டியின் பக்குவமான ஆட்டத்தின் மூலமாகக் காட்டினார். அறிமுக சதம்.கொஞ்சம் ஆக்ரோஷமான அணுகுமுறையும் அதேவேளை தேவையான நிதானமும் ரெய்னாவை இந்தியாவுக்குத் தேவையான ஒரு வீரராக மாற்றும் என நம்புகிறேன்.


போதாக்குறைக்கு அபிமன்யு மிதுன் கிடைத்தபோதெல்லாம் இலகுவில் கழற்றப்பட முடியாதவராக ஆடியிருந்தார்.


இலங்கையின் துடுப்பாட்டமும் ஈடுகொடுத்திருந்தாலும் முக்கியமான ஒரு வேளையில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் படுமோசமாக சொதப்பியது (மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸ்) தொடரை வெல்கின்ற வாய்ப்பை இழக்கச் செய்தது.

தொடரில் இரண்டு சதங்கள் பெற்ற மூவரில் இருவர் இலங்கையர். 
சங்கக்கார,பரணவிதான(மூன்றாமவர் சேவாக்).
சங்கக்கார தான் கூடிய ஓட்டங்களைத் தொடரில் குவித்திருந்தார். இரட்டை சதமும் இதுக்குள்ளே அடங்கும்.


சமரவீர மீண்டும் உள்நாட்டில் இந்திய அணிக்கெதிராக மலைபோல ஓட்டங்களைக் குவித்தார்.
முதல் இரு போட்டிகளில் சமரவீரவின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. ஆனால் போட்டியைக் காப்பாற்றத் தேவைப்பட்ட முக்கியமான வேளையில் மூன்றாம் டெஸ்ட் போட்டியில் சமரவீர போட்டி முழுவதும் நின்று விஸ்வரூபம் எடுத்திருந்தார்.
சதமும்,அரைச் சதமும் மட்டுமல்ல.. அஜந்த மென்டிசுடன் இணைந்து பெற்ற சாதனை இணைப்பாட்டமும் மிக முக்கியமானது.




பரணவிதான நீண்ட காலம் இலங்கை தேடிக் கொண்டிருந்த உறுதியான ஒரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் கிடைத்துள்ளார். இரு சதங்களும் அபாரம்.
தொடர்ந்து இவரை சரியாக நெறிப்படுத்துவது சிரேஷ்டவீரர்களின் கைகளில் உள்ளது.
 மஹேல ஜெயவர்த்தன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.




மத்தியூஸ் மற்றும் டில்ஷான் ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கான பொறுமையை இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும்.அதற்கான குருவாக நான் இலங்கையின் சமரவீரவையும் இந்தியாவின் லக்ஸ்மனையும் சிபாரிசு செய்கிறேன்.


இந்தத் தொடர் பல பந்துவீச்சாளர்களை சகலதுறை வீரர்களாக மாற்றியுள்ளது...


ரங்கன ஹேரத்,லசித் மாலிங்க,அஜந்த மென்டிஸ் ஆகிய இலங்கை பந்துவீச்சாளர்கள் தம் கன்னி அரை சதங்களைப் பெற்றதோடு, இந்தியாவின் மிதுன்,மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரும் தமது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கைகளைப் பதிவு செய்துகொண்டார்கள்.
துடுப்பாட்ட வீரராக மென்டிஸ்!!!... 
இந்தத் துடுப்பிலும் அனுசரணை ஸ்டிக்கர்கள் ஏறும் விரைவில் 


இதுவும் இரு தரப்பு அணிகளினதும் பந்துவீச்சின் பலத்தைப் பற்றிப் பல் இளித்த விடயம். 


பல மைல்கல்கள் இந்தத் தொடரில் ஈட்டப்பட்டன..


சங்கக்காரவின் 8000ஓட்டங்கள்.
சேவாகின் 7000ஓட்டங்கள்
சமரவீர 4000ஓட்டங்கள்


முரளிதரன் 800 விக்கெட்டுக்கள் 
லசித் மாலிங்க 100 விக்கெட்டுக்கள்
அஜந்த மென்டிஸ் 50 விக்கெட்டுக்கள்.


சுரேஷ் ரெய்னாவின் கன்னி சதம்


சச்சின் டெண்டுல்கரின் அதிகூடிய டெஸ்ட் போட்டிகள் விளையாடிய சாதனை


மஹேல உடைத்த பிராட்மனின் சாதனை.. (ஒரு மைதானத்தில் கூடுதல் சதங்கள்)


சங்கக்காரவின் ஏழாவது இரட்டை சதம்- அதுவும் SSCமைதானத்தில் மூன்றாவது


சுராஜ் ரண்டிவ் அறிமுகப் போட்டியில் கொடுத்த அதிக ஓட்டங்கள்(இதற்கு முதல் ஆஸ்திரேலியாவின் ஜேசன் கிரேசா)


இலங்கையின் சார்பாக பத்தாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை - மென்டிஸ் 78  


லக்ஸ்மன் டெஸ்ட் போட்டியொன்றின் நான்காவது இன்னிங்க்சில் பெற்ற முதலாவது சதம்.


ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் வைத்து நாணய சுழற்சியில் வென்றும் இலங்கை தோற்றது இதுவே முதல் முறை.


16 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணி சரவணமுத்து மைதானத்தில் தோற்றுள்ளது.


இப்படி நிறைய நிறைய..


ஒரு சாதனைத் தொடர் என்று சொன்னால் பொருத்தம்.


முரளி - விட்டு சென்ற வெற்றிடம் பெரியது 


முரளியின் டெஸ்ட்டோடு (காலி டெஸ்ட்டை சொன்னேன்) ஆரம்பித்த தொடர் நிறைவில் சேவாக்கின் தொடரானது.
முதல் போட்டியில் முரளியின் மாயம் இலங்கையை வெல்ல வைத்தது.
இந்திய அணியை ஒரேயடியாக ஓரங்கட்டிய அந்த வெற்றியின் தாக்கத்தை இலங்கை சாதகமாக மாற்றாததும், இந்தியா அதிலிருந்து மீண்டதுமே இங்கே தொடரின் முடிவில் தாக்கம் செலுத்தியது.


இரண்டாவது போட்டி ஓட்டங்கள் குவிக்கவென்றே நடந்த பந்துவீச்சாளர்களுக்கான பலி.. 
ஆனால் இப்போது ஹர்பஜன் புலம்புவது போல SSC ஆடுகளம் ஒன்றும் அவ்வளவு மோசமான தட்டையான ஆடுகளமல்ல..
சச்சின்+ரெய்னா மட்டும் இல்லையெனில் போட்டி இலங்கை வசமாகி இருக்கும்.. இலங்கை சச்சினின் பிடியைத் தவறவிட்டதும் இங்கே முக்கியமானது.


மூன்றாவது போட்டி இலங்கை தானாகத் தாரைவார்த்த ஒரு போட்டி.. 
நாணய சுழற்சியில் வென்று 425 ஓட்டங்களை முதல் இன்னிங்க்சில் பெறும் அணி தன் சொந்த மைதானத்தில் பரிதாபமாகத் தோற்பதை வேறு என்னவென்று சொல்வது?


இந்தியாவின் மிதுனையும் மிஸ்ராவையும் என்பதுக்கு மேற்பட்ட இணைப்பாட்டத்தைப் புரியவிட்டதோடு இரண்டாவது இன்னிங்க்சில் வருவதும் போவதுமாக ஆட்டமிழந்த விதம் என்று இலங்கை பணம் வாங்கிக் கொண்டு தோற்பது போல இருந்ததை என்ன கொடுமை என்பேன்?


பின்னர் சமரவீர+மென்டிசின் இணைப்பாட்டத்தினால் இந்திய அணிக்கு சிரமம் கொடுக்கக்கூடிய இலக்கொன்றை வைத்த பிறகும் பந்துவீச்சை சரியான முறையில் மாற்றியமைக்காத சங்காவும் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
அரவிந்த+சங்கா - இருக்கிறதை வச்சுத் தானே ஏதாவது பண்ணலாம்.. 

தொடர் முழுவதுமே சங்காவும் தோனியும் காத்திருந்தார்களே தவிர விக்கெட்டுக்களை எடுக்கப் பந்துவீச்சாளர்கள்+களத்தடுப்பாளர்களை வியூகம் அமைத்து முடிவுகளைத் தம் வசப்படுத்த முயன்றது குறைவு.
தோனியாவது இடையிடையே சேவாக்கை பயன்படுத்தி விக்கெட்டுக்களை உடைத்தார்.


சங்கா மத்தியூஸ் என்ற பந்துவீச்சாளர் இருப்பதையே மறந்துவிட்டார் போலும்.தொடர் முழுக்க வெறும் 27 ஓவர்கள் மட்டுமே. தீர்மானமிக்க இறுதி டெஸ்ட்டில் ஆறே ஆறு ஓவர்கள்.


முரளி சென்ற பின்னர் இலங்கையின் பந்துவீச்சின் வலிமை எப்படிக் குறைந்துள்ளது என்பதை மூன்றாவது போட்டி தெளிவாகவே உணர்த்தியுள்ளது.
தேவையான விக்கெட்டுக்களை தேவையான நேரங்களில் எடுப்பது சிரமமாகப் போயுள்ளது.
எனினும் ரண்டிவ் முரளியின் இடத்தை ஓரளவாவது நிரப்ப அல்லது 
நிரப்புவதற்கு முயற்சி செய்ய முடியும் என நம்புகிறேன்.அவரது உயரமும் வித்தியாசமான பந்துகளை வீசுவதற்கு எடுக்கின்ற பிரயத்தனங்களும் ரண்டிவின் மேல் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.


அஜந்த மென்டிஸ் கடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை உருட்டி எடுத்திருந்தாலும் அண்மைக்காலத்தில் இந்திய அணியினரால் குறிவைத்து தாக்கப் பட்டிருந்தார்.இம்முறை இவர் விளையாடுவார் என்ற நம்பிக்கையே இல்லாதிருந்தவேளையில் முரளியின் ஓய்வால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொலவேண்டும்.
ஆனால் சங்கா இவரை இன்னும் சாதுரியமாக இடையிடையே பயன்படுத்தி இருக்கலாம் எனத் தோன்றியது.


லசித் மாலிங்க காலியில் கலக்கல்.. SSCயில் விளையாடவில்லை. மூன்றாவது போட்டியில் எதிர்பார்த்த அளவு இல்லை.
தேர்வாளர்கள் இன்னும் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கலாம்.


ஆனால் ஹேரத்தை ஒரே போட்டியோடு நிறுத்தியமை,குலசெகரவை குழாமில் சேர்த்துக் கொள்ளாமை போன்றன கேள்விகளை எழுப்புகின்றன.


இன்னொரு முக்கிய கேள்வி இலங்கை அணியின் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார்?
டில்ஹார பெர்னாண்டோ,வெலகெதர,தம்மிக்க பிரசாத் ஆகிய மூவருமே இன்னும் முழுமையாகத் தயாரில்லைப் போலே தெரிகிறது.



முரளி இல்லாத இலங்கை டெஸ்ட் அணி கொஞ்ச நாளைக்காவது வெற்றிக்காக வானத்திலிருந்து ஒரு தேவ தூதனுக்காக காத்திருக்கும் என்றே தோன்றுகிறது.




இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் நிலை படு மோசம்..
என்னைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் முதலாவது போட்டியில் அறிமுகமான அபிமன்யு மிதுன் தான்.
மிதுன் - இப்படியே முயற்சி செய்தால் எல்லா உயரமும் எட்டலாம்.. 


உயிரைக் கொடுத்துப் பந்துவீசியிருந்தார்.
அனுபவமின்மையும் இந்தியக் களத்தடுப்பும் அவரை பாதிக்காவிடில் அவர் வீழ்த்திய ஆறு விக்கெட்டுக்கள் மேலும் அதிகரித்திருக்கும்.
டெஸ்ட் தொடரில் சிறப்பாக முயற்சித்த மிதுனுக்குப் பரிசாக ஒருநாள் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
ஆனால் மிதுன் எதிர்காலத்தில் நல்லதொரு சகலதுறை வீரராக வரலாம் என நான் நம்புகிறேன்.


இத்தொடரில் கூடுதல் விக்கெட்டுக்களை வீழ்த்திய ரண்டிவ்(11),மாலிங்க(10 ),முரளி(8௦) ஆகியோருக்குப் பிறகு ஓஜா 8 விக்கெட்டுக்கள்,சேவாக்&இஷாந்த் 7 விக்கெட்டுக்கள்..


இந்தியா தனது பந்துவீச்சின் பலம் பற்றி மீண்டும் ஆராய வேண்டும்.
இலங்கை வேகப்பந்துவீச்சாலர்களே மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் பொது இந்திய வீரர்கள் மணிக்கு 130 கி,.மீ வேகத்தில் வீசவே களைத்துப் போகிறார்கள்.
ஹர்பஜனின் உம் தீர்ந்து போயுள்ள நிலையில் அடுத்து ஓஜா,மிஸ்ரா இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா? 
டோனி மூன்றாவது போட்டியில் இவ்விருவரையுமே நம்பியிருக்கவேண்டியிருந்த நிலையில் இருவரும் சிறப்பாகவே பந்துவீசினார்கள். ஆனாலும் மென்டிஸ்-சமர இணைப்பாட்டம் உடைக்க பட்ட சிரமம் இன்னும் இவர்களும் தேறவில்லை என்றே என்ன வைக்கிறது.
இஷாந்த் ஷர்மா - இன்னும் முன்னேற இடமுண்டு :)


மூன்று டெஸ்ட்டிலுமே நாணய சுழற்சியில் வென்றவர் சங்கா. 
இரு அணிகளின் தலைவர்களும் இன்னும் அக்கறையுடன் களத்தடுப்பு வியூகங்களை அடிக்கடி மாற்றி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால்,சமயோசிதமாக செயற்பட்டிருந்தால் இன்னும் விறுவிறுப்பான தொடர் ஒன்றைப் பார்த்திருக்கலாம்.


இப்படி ஆசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்குமா?

தலா இரு உதாரணங்கள் -


லக்ஸ்மன் இறுதி டெஸ்ட் போட்டியில் முதுகில் ஏற்பட்ட உபாதையோடு ஆடிக் கொண்டிருக்கிறார்.
குனிய முடியாமல்,காலை முன்னகர்த்தி ஆட முடியாமல் இருக்கும் அவருக்கு Flighted பந்துகளை வீசாமல் இலகுவாக நின்ற இடத்திலேயே தடுத்தாடக் கூடிய flat off spin பந்துகளை மென்டிசும்,ரன்டிவும் வீசுகிறார்கள்.
சங்கக்கார நெருங்கிய களத்தடுப்பாளர்களை(close in fielders) மேலும் இட்டு பந்துவீச்சாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டாமா?


மேலெழும் பந்துகளுக்கு (short pitched) தடுமாறுபவர் என அறியப்படும் சுரேஷ் ரெய்னாவை அவரது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் அழுத்தங்களுக்கு உட்படுத்த தவறியமை.

மூன்றாவது டெஸ்ட்டில் சமரவீரவும் மென்டிசும் ஆடும் நேரத்தில் இணைப்பாட்டத்தை உடைக்க தோனி எடுத்த முயற்சிகள்.
இந்தியா இலங்கையின் எட்டு விக்கெட்டுக்களை எடுத்த பின்னர் இன்னும் ஆக்ரோஷமாக இருந்திருக்க வேண்டாமா?


விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட வேண்டிய நேரத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியில் யுவராஜ் சிங் பயன்படுத்தப்படவே இல்லை.சச்சின் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பந்து வீச அழைக்கப்படவில்லை.சுரேஷ் ரெய்னாவுக்கு இரு டெஸ்ட்களில் வழங்கப்பட்டது வெறும் ஐந்தே ஓவர்கள்.


வை சங்கா? வை தோனி?


ஒரு மாதிரியாக தொடர் முடிந்தது.
இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்து முதலிடம்.. இலங்கை ஆஸ்திரேலியாவை முந்தி மூன்றாம் இடத்தில்.. 
இரண்டுமே வேடிக்கையாக உள்ளது எனக்கு !!! 




கொசுறு - நேற்று இந்தியா நியூ சீலாந்திடம் வாங்கிய மரண அடி யாரும் எதிர்பாராதது.. நான்கு முக்கியமான வீரர்கள் இல்லை என்பதனால் 200 ஓட்டங்களால் தோற்பது நியாயமாகாது.
நியூ சீலாந்திலும் எல்லாமாகி நிற்கும் இரு பெரும் தலைகள் (வெட்டோரி,மக்கலம்) இல்லைத் தானே?


வழமையாக உருட்டப்படும் தம்புள்ளை மைதானத்தின் நாணய சுழற்சி+மின் விளக்குகள் கொஞ்சம் பங்கு வகித்தாலும்,நேற்றைய 200 ஓட்டத் தோல்விக்கு முக்கிய காரணம் வழமையான இந்திய அணியின் ஸ்விங்+பவுன்ஸ் போபியா தான்..


ஒரு நாள் தரப்படுத்தலில் இந்தியா தனது இரண்டாம் இடத்தை நியூ சீலாந்திடம் பறிகொடுத்துள்ளது.
ஆனால் மூன்று அணிகளுக்குமே இரண்டாம் இடத்தைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது.


இலங்கை என்ன செய்யும் பார்க்கலாம்.. 

Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*