August 06, 2010

லோஷன்+ சரா+ ரசல் ஆர்னல்ட் - வாழ்க்கை!!!

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொழும்பு P.சரவணமுத்து மைதானத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
நாளை விறுவிறுப்பான இறுதிநாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.


கொழும்பு வாழ் தமிழருக்கு இந்த மைதானமும் R .பிரேமதாச மைதானமும்,மலையகத் தமிழருக்கு கண்டி அஸ்கிரியவும் தங்கள் சொந்த மைதானங்களில் போட்டிபார்ப்பது என்ற உணர்வு தருபவை.


இலங்கையின் மிகப் பழைய மைதானங்களில் ஒன்றான P.சரவணமுத்து மைதானம், இலங்கையில் கொழும்பு ஓவல் மைதானம் என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவது. சிலோன் என்ற பெயரிலேயே இலங்கை பிரிட்டனிடமிருந்து பெற்ற சுதந்திரத்துக்கு முன்னர் பல போட்டிகளை இந்த மைதானம் நடத்திய சிறப்புள்ளது.


இப்போது ஸ்டைலிஷ் ஆக P.Sara Stadium என்றும் அழைக்கிறார்கள்.




Sir .டொனால்ட் பிராட்மன், சோபர்ஸ் போன்ற கிரிக்கெட் பிதாமகர்களும் இங்கு களம் கண்டுள்ளார்கள்.
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் மாறாத முக்கியத்துவமான ஒரு இடத்தை இந்த மைதானத்தின் பெயருக்குரியவரான சரவணமுத்து வகித்துள்ளார்.


இலங்கை கிரிக்கெட்டின் பிதாமகர்களில் ஒருவர்.பிரபல கழகமான தமிழ் யூனியன் கழகத்தை உருவாக்குவதிலும் முன்னேற்றுவதிலும் இந்த ஓவல் மைதானத்தை மேம்படுத்துவதிலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்தியவர்.


இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றதும் (1982)இதே மைதானத்தில் தான்.
1994ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்று வந்த இந்த மைதானம் அதன் பின் எட்டு ஆண்டுகள் கவனிப்பாரற்றுப் போனது.'தமிழ்' யூனியன் மைதானம் என்பது தான் காரணம் எனக் கருதப்பட்டது.
முரளிதரன்,ஹத்துருசிங்க,ராமநாயக்க தவிர ஏனைய பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கழகங்கள் மாறிக் கொண்டதும் இந்தக் கால கட்டத்திலே தான்.


அதற்குள் அனுசரணையாளர்கள்,தமிழ் யூனியன் கழகத்தின் அங்கத்தவர்களின் தீவிர முயற்சியில் மைதானமும் பார்வையாளர் அரங்கங்களும் மெருகு பெற்று இப்போது மீண்டும் இலங்கையின் முன்னணி மைதானங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


ஆனால் இந்தப் பதிவு சரவணமுத்து மைதானம் பற்றிய வரலாறு அல்ல..
எனக்கு மனம் மறக்காத சில நிகழ்வுகள் இந்த மைதானத்தோடு இருக்கின்றன..


இப்போது இடம்பெற்று வரும் மூன்றாவது போட்டி நிச்சயம் முடிவொன்றைத் தரும் நிலையில் இறுதிநாள் போட்டிபார்க்கப் போகலாம் என்று நினைத்தபோது தான் 17 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.


1993ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கைக்கெதிராக P.சரவணமுத்து மைதானத்தில் அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தது. 
அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த குலசிங்கம் அங்கிள் (இப்போது காலமாகிவிட்டார்) நோமாட்ஸ் கழகத்தின் செயலாளராக இருந்தார். எனவே தனக்குக் கிடைக்கும் Complementary Ticketsஐ எனக்கும் அப்பாவுக்கும் தந்து விடுவார்.


அலுவலகம் காரணமாக அப்பா என்னுடன் பகல் இரவுப் போட்டிகளுக்கு மட்டும் வருவார்.
மற்றும்படி நான் தனியாகவே கொழும்பில் உள்ள மைதானங்களுக்குப் போய் வருவதுண்டு.


இந்த மைதானத்துக்கு(P.சரவணமுத்து) முன்பே அப்பாவுடன் போயிருக்கிறேன்.. அப்பாவின் நண்பர் ஸ்கந்தகுமார் தமிழ் யூனியன் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவர்.அப்போது வளர்ந்து வந்துகொண்டிருந்த முரளிதரன்,உபுல் சந்தன போன்றோருடனும் பேசியிருக்கிறேன்.
பயிற்சிக்கென்று கொஞ்ச நாள் போய் பஞ்சி,அலுப்பால் நின்றிருக்கிறேன்.


அந்த நேரம் பாடசாலை விடுமுறைக் காலமாக இருந்ததால்,இந்தப் போட்டியின் முதல் நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் சென்று வந்தேன்.மதியபோசன இடைவேளை நேரத்தில் வீட்டுக்கு வந்து உணவு உண்டுவிட்டு மீண்டும் போவேன்.


முதல் நாளே சுவாரஸ்யமான சில அனுபவங்கள்..
அப்போது எப்பவாவது இடையிடையே போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்படும் முரளிக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பு.
போட்டி ஆரம்பிக்க முன்பு பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு அணி வீரர்களிடமும் கையொப்பங்களை (Autograph) எடுத்துக் கொண்டு கொண்டு சென்ற கமெராவினால் அவர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டிருந்தநேரம்,முரளியுடன் கொஞ்சம் பேசினேன்.


"இன்று விளையாடுறீங்களா?" என்று கேட்க,"அப்பிடித்தான் நினைக்கிறேன்.நம்ம ஆட்கள்(தமிழ் யூனியன்) மூன்று பேர் விளையாடுறோம் என்று அர்ஜுன ஐயா சொன்னார்"என்றார்.

பின்னர் களுவிதாரனவுக்கு கொஞ்ச நேரம் அவர் துடுப்பாட பந்துகளை வீசிக் கொண்டிருந்தேன்(கைகளை சுழற்றிப் போடவா என்று கேட்க, காயப்படுத்தாமல் என்று சொன்னார்)
முரளிக்கு இது ஆறாவது போட்டி,களுவுக்கு மூன்றாவது.


இவர்கள் பலரிடம் ஏற்கெனவே Autograph வாங்கியிருந்ததால் இந்திய அணியின் பக்கம் சென்றேன்.
அப்போது ராஜு எனக்கு மிகப் பிடித்த வீரர்.
இவர் இடது கையிலே சும்மா லாவகமாக வீசும் பாணி என்னைக் கவர்ந்தது.
பக்கத்திலேயே நின்று அவர் பந்துவீசும் அழகைப் பார்த்து ரசிக்க ஒரு வாய்ப்பு.
ராஜுவுடன் எனக்கு அப்போது தெரிந்த ஆங்கிலம்+தமிழில் பேசினேன்..


பின்னர் அனில் கும்ப்ளே தான் துடுப்பெடுத்தாட தனக்குப் பந்துவீச முடியுமா என்று கேட்டார்.
மகிழ்ச்சியோடு வாய்ப்பை ஏற்றேன்.


சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அளவில்லாப் பெருமை எனக்கு.


இந்திய வீரர்கள் பலரிடம் கையொப்பம் வாங்கிவிட்டேன்.


கபில்தேவ்,பிரபாகர்,டெண்டுல்கர் ஆகியோரிடம் அடுத்த நாள் வாங்கலாம் என்று விட்டுவிட்டேன்.. இந்தியா அன்று களத்தடுப்பு.


மூன்றாவது நாள் தான் இந்திய வீரர்கள் பலருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பும் கையொப்பங்களை எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


மனோஜ் பிரபாகர் மட்டும் பந்தா காட்டினார். நானும் இன்னும் சிலரும் அவரிடம் கையொப்பம் கேட்டபோது ஆங்கிலத்தில் சேர் என்று சொன்னாலே கையொப்பம் இடுவேன் என்றார்..
நான் திரும்பி விட்டேன்.


அவரது பெயரை வைத்து சிங்கள ரசிகர்கள் சிலர் முதல் இரு நாட்கள் சீண்டியது (பிரபா - கொட்டியா)தான் அவர் பந்தாவுக்குக் காரணம் எனப் பின்னர் தான் புரிந்தது.


ஸ்ரீநாத் நான் தமிழ் என்று தெரிந்த பின்னர் கொஞ்சம் தமிழில் பேசினார்.. தக்காளி என்று வேடிக்கையாக கும்ப்ளேயை சீண்டினார்.


வழமை போல மதியபோசன இடைவேளை நேரம் வீட்டுக்குப் போகலாம் என்று புறப்பட்டேன்.  


மைதானத்திலிருந்து பிரதான வீதியான பேஸ்லைன் வீதிக்கு செல்லும் வனாத்தமுல்லைப் பகுதி வீதியான லெஸ்லி ரணகல வீதி  இன்றும் கூடப் பயங்கரமானது.தனியாக யாரும் பயணிக்கப் பயப்படுவது(வாகனமாக இருந்தாலும்).
சண்டியர்கள்,வழிப்பறிகாரர்க்குப் பெயர்போன சேரிகள்,குப்பங்கள் நிறைந்த இடம்.


இன்றும் சண்டைகள்,கோஷ்டி மோதல்கள் என்றால் சண்டியர்களை அழைக்க நாம் வனாத்தமுல்லைப் பகுதியை மேற்கோள் காட்டுவதுண்டு.


இது பாடசாலைக் காலத்திலே தெரியும் என்றாலும் பகல் நேரம் தானே என்னும் அசட்டுத் துணிச்சலும் முதல் இரு நாட்களும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதாலும் வீதியால் ஜாலியாக நடக்கத் தொடங்கினேன்.
ஒரு கையில் கமெரா,மறுகையில் autograph புத்தகம்.
காற்றிலே பந்து வீசிக் கொண்டும், துடுப்பாடிக் கொண்டும் கனவுலகில் நடந்து கொண்டிருந்தேன்.


ஒரு கொஞ்சத் தூரம் நடந்து போகின்றேன்.. பின்னால் ஆளரவம் இல்லை. திடீரென முன்னாள் ஒரு கரிய நெடிய மனிதன்.
சிங்களத்திலே "கிரிக்கெட் மச்சுக்குப் போயிட்டு வாரியா?" எனக் கேட்டான்.
கொஞ்சம் பயந்து போய் ஆமெனத் தலையாட்டினேன்.


"வீட்டுக்குப் போகிறாய் தானே டிக்கெட்டைத் தா .." எனக் கொஞ்சம் அதட்டினான்.
சாப்பிட்டிட்டு மீண்டும் வருவேன்;தரமாட்டேன் என்றேன்.
சடக்கென்று என் கையிலிருந்த autographஐப் பறித்துவிட்டான்.


பயந்துபோனதால் கத்தக் குரலும் வரவில்லை. ஆனாலும் கமெராவை இறுகப் பிடித்துக் கொண்டேன்.அவன் கமெராவையும் இழுக்க ஆரம்பித்தான்.
அப்போது தான் "ஹொரா ஹொரா(திருடன் திருடன்) மாவ பேரகன்ன(என்னைக் காப்பாத்துங்கோ)" எனக் கத்த ஆரம்பித்தேன்.


அந்த நேரம் தான் பின்னால் வந்து கொண்டிருந்த இரு அண்ணாமார் (என்னை விடக் கொஞ்சம் பெரியவர்கள்) ஓடிவந்து என்னை மிரட்டிக் கொண்டிருந்த முரடனை தள்ளி விழுத்தி என்னுடைய autographஐயும் பறித்து என்னிடம் தந்து விட்டு அடித்துத் துரத்தினர்.


அதன் பின்னர் அதிலே நெடு நெடுவென உயரமாக இருந்தவர் "என்ன தம்பி இப்பிடியான இடங்களுக்கு தனியவா வாறது?அதிலயும் கமெரா வேற.. சரி சரி வாங்க.. அவன் யாரையும் கூட்டி வாரதுக்குள்ள மெயின் ரோடுக்குப் போவம்" என்று அவசரபடுத்தினார்.


பயம்,பதற்றத்தோடு  பார்த்தால்,சனி ஞாயிறுகளில் எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் கூரே பார்க் மைதானத்தில் எம்முடன் கிரிக்கெட் விளையாடும் அண்ணன் அவர்.


அவர் தெகிவளையில் இருந்ததால் நான் பயணித்த பஸ்சிலேயே வந்தார்.எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார்.அவருடன் வந்த மற்றவரையும் அறிமுகபடுத்தி வைத்தார்.


அந்த நெடு நெடு அண்ணன் வேறு யாருமல்ல.. NCC அணிக்காக அப்போது விளையாட ஆரம்பித்திருந்த ரசல் ஆர்னல்ட்.


முன்பு சென்ட்.பீட்டர்ஸ் கல்லூரி அணிக்காக தலைவராக ஆர்னல்ட் விளையாடும் போதே எம்முடன் விளையாட வருவார்.
பாடசாலைக் கிரிக்கெட் வீரர்களுக்கே கொம்பு முளைத்த நேரத்தில் ரொம்ப சாதாரணமாக எம்முடன் பேசிப் பழகும் அண்ணன் அவர்.


அதற்குப் பிறகு சில மாதங்களில் இலங்கையின் பல்வேறுமட்ட அணிகளுக்காக ஆட ஆரம்பித்த ஆர்னல்ட் மைதானப்பக்கம் வருவது குறைந்துவிட்டது.


மீண்டும் ஆர்னல்டுடன் பேசக் கிடைத்தது 99 ஆம் ஆண்டில்..
ஷக்தி FM இல் நான் பணியாற்றியபோது விளையாட்டு நிகழ்ச்சிக்காக ஆர்னல்டிடம் தமிழில் ஒரு குரல் பதிவுக்காக தொடர்பை ஏற்படுத்தினேன்.


குரே பார்க்,வனாத்தமுல்லை ஆகிய சம்பவங்களை ஞாபகப்படுத்தினேன்..
"அட கமெராத் தம்பியா?" என்று அதே சிநேகத்துடன் மகிழ்ச்சியாகக் கேட்டார்.


இப்போது ரசல் ஆர்னல்ட் ஆங்கிலத்தில் நேர்முகவர்ணனையாளர்.நான் தமிழில் விளையாட்டுத் தொகுப்பாளர்/பதிவர்.
17 ஆண்டுகள் ஓடிவிட்டன.. ம்ம்ம்ம்..




வாழ்க்கையும் கிரிக்கெட் போலத் தான்..
இன்றைய நாள் ஆட்டம் பார்த்திருப்பீர்கள் தானே?


இலங்கை ஆறு விக்கெட்டுக்களை சடுதியாக இழந்த வினோதம்..
சமரவீர+மென்டிஸ் இணைப்பாட்டம்..
மென்டிஸ் ஒரு துடுப்பாட்ட வீரராக மாறியது..
இந்தியாவின் முக்கிய மூன்று விக்கெட்டுக்கள் சரிந்தது..
அதிலும் சேவாக் பூச்சியம்..


இப்படித் தான் வாழ்க்கையும்?


நாளை இறுதிநாள் ஆட்டம் இன்னும் விறுவிறு?




25 comments:

கன்கொன் || Kangon said...

பதிவை வாசித்தபோது என்ன பின்னூட்டுவது என்று யோசித்துக் கொண்டே வாசித்தேன்.
ம்ஹ்ம்...

சில உணர்வுகளை விபரிக்கமுடியாது, என்னிடமிருந்து தப்பிய விடயங்கள் இவை... :(
அண்மையில் தான் முதன்முதலில் சர்வதேசப் போட்டி ஒன்றைப் பார்த்தேன்.... :))

ஒற்றை வார்த்தையில் சொன்னால் 'வாழ்வு முழுவதும் மறக்காமல் எம் நெஞ்சில் நிற்கக்கூடிய நினைவுகள்'.

balu said...

hmmm...life story nalla than eruku anna.
SL will win anna...

யோ வொய்ஸ் (யோகா) said...

me the first....

யோ வொய்ஸ் (யோகா) said...

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......... கன்கொன் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கன்கொன் || Kangon said...

@யோகா அண்ணா:
ஹி ஹி...
நானே பிந்தித்தான் பின்னூட்டினேன்.

நீங்கள் ஆகப் பிந்திவிட்டீர்கள்.... ;)
அடுத்தமுறை முயற்சிக்கவும்.
கேட்டுக் கொண்டால் விட்டுத்தரத் தயாராக இருக்கிறேன்.

anuthinan said...

சூப்பர் அனுபவம் அண்ணா!! அழகாக கொடுத்து இருக்கீங்க!!! பட் ஒரே விசயம் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருக்கு...!!

//கூரே பார்க் மைதானத்தில் எம்முடன் கிரிக்கெட் விளையாடும் அண்ணன் அவர்.//

நாங்களும் உங்க கூட விளையாடுறோம்!! இடம் கிடைக்கும் எமது சொல்லுரிங்க!!! பார்க்கலாம்!! :P (என்ன எனக்கு ரொம்ப வயசு குறைவு)

/குரே பார்க்,வனாத்தமுல்லை ஆகிய சம்பவங்களை ஞாபகப்படுத்தினேன்..
"அட கமெராத் தம்பியா?" என்று அதே சிநேகத்துடன் மகிழ்ச்சியாகக் கேட்டார்.//

அண்ணே நான் மாடும் பெரிய கிரிக்கெட் வீரனா வந்துட்டா!!! இப்படி கூட பேசமாட்டான்!! எடுத்ததுமே, லோஷன் அண்ணா எண்டு சொல்லிடுவன்!!! (அழைப்பை எடுக்க முன்பு குரும்தகவல் அனுப்பிவிட்டு எடுக்கவும்)


அண்ணே ஆகிருவோம்ல!!! ஆர்னோல்ட் மாறி இல்லாட்டிக்கும், ஒரு....



//சூப்பர் பதிவு அண்ணா!!!// #நான் சொன்னது எல்லாம் நகச்சுவைக்குத்தான்

அஹமட் சுஹைல் said...

உங்களுக்கு இப்படிப்பட்ட பிண்ணணிகளும் இருக்கா அண்ணா?
ரொம்ப ஆச்சரியமாவும், பொறாமையாவும் இருக்கு.
அப்போ எடுத்திருந்த ஃபோட்டோகளையும் போட்டிருக்கலாம். இன்னும் அழகா இருந்திருக்கும். அந்த ஃபோட்டோஸ் இருக்கா இல்லையா?

கிரிக்கட் பிரபலங்கள் கூடயெல்லாம் இழமை கழிந்திருக்கிறது... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

balavasakan said...

இப்படித் தான் வாழ்க்கையும்?


ம்..ம்.. அப்படியேதான்

யோ வொய்ஸ் (யோகா) said...

அருமையான பதிவு லோஷன், சந்தோஷம், சோகம், வாழ்க்கை தத்துவம், பள்ளி பருவம் என பல உணர்வுகளை தொட்டு சென்றது உங்களது பதிவு.

எனக்கு சரவணமுத்து மைதானமென்றால் நினைவுக்குவருவது 1992ல் என நினைக்கிறேன். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் பெற்ற ஒரு நாள் போட்டி வெற்றி. அரவிந்த சதமடித்து பின்னர் அர்ஜுன 20 ஓட்டங்ளை மக்டமர்ட் வீசிய ஓவரில் பெற்று இலங்கையை வெற்றி பெற வைத்த போட்டி. அப்போட்டியின் பின்னர் நான் அடைந்த சந்தோஷம் அளவிடயியலாதது. இவ்வளவுக்கும் கிரிக்கட் பற்றி அந்த காலத்தில் அதிகம் தெரியாத வயது..

Unknown said...

hmm,,, i think russel is the first tamil speaking commentrator( i dnt know aboutluxman sivaramakrishnan),,, tomorrow morning session will decide the game,,i hope lions will dominate on it.

Unknown said...

Tommorrow muthaiah muralitharan international cricket stadium opens for new zeland vs srilanka XI game,,i am willing to go & it will be a gud memory in ma career

கன்கொன் || Kangon said...

சொல்ல மறந்துவிட்டேன்,
எனக்குப் பிடித்த மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் ஆர்னல்ட்.

மஹேல ஒருமுறை (டில்ஷான் மத்தியவரிசையில் இருந்தபோது) சொன்னது.
'நீங்கள் டில்ஷானையோ, ஆர்னல்டையோ பார்த்தால் அவர்களின் தரவுகள் அவர்களின் உண்மையான பெறுமதியைத் தராது.
நாங்கள் (முன்வரிசை) விரைவாக ஆட்டமிழந்தால் அணியைக் காப்பாற்ற வேண்டும், நாங்கள் நன்றாக ஆடினால் தொடர்ந்து வேகமாக ஆடவேண்டும். மிகக்கடினமான வேலை, இருவரும் அதை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்' என்றார்.

மைக்கல் பெவன், மைக் ஹசி, ரசல் ஆர்னல்ட் மூவரும் நான் இரசித்த இடதுகை, மத்தியவரிசை வீரர்கள்.
அற்புதமான வீரர்கள்.


@யோகா அண்ணா:
ஆகா....
என்னே ஞாபகத்திறன்.
http://www.cricinfo.com/ci/engine/match/64392.html

Unknown said...

The P Sara track is turning and bouncing at the moment, If murrali plays this game,,He could have finished this game game in favour of us.

Unknown said...

///நீங்கள் டில்ஷானையோ, ஆர்னல்டையோ பார்த்தால் அவர்களின் தரவுகள் அவர்களின் உண்மையான பெறுமதியைத் தராது/// sanga also mensioned this in the recent interwiew with daily mirror,,he told kandamby is now at the same case that arnold had.

Mohamed Faaique said...

கடைசியில் சொன்னது உலக மகா surprise 'ங்க....... சூப்பர்..

தர்ஷன் said...

அருமையான அனுபவங்கள் லோஷன் அண்ணா,
ரசல் அர்னோல்ட் பற்றி மகெளவின் கூற்று உண்மையே தனியாக போராடி வென்ற அந்த ஜிம்பாப்வே போட்டியையும் நேவ்சிலாந்தில் நடந்த அந்த ஒருநாள் தொடரிலும் அவரது ஆட்டத்தை மறக்க முடியுமா?
அப்போது அவரது சராசரியும் 40 ஐ நெருங்கியிருந்தது என நினைக்கிறேன்.

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

இறுதி நாளை நோக்கிய எம் பயணமும் விறுவிறுப்பாகவே அமையும்...நம்பிக்கை இருந்தா நம்புங்க அண்ணா...கடைசி நேரம் யோசிக்க நேரமே இருக்காது...காரணம் இல்லாமல் காட்சி மாற்றப்படும்...

அண்ணா அந்த புகைப் படங்களை எதிர்பார்த்தேன்...privacy காரணமாக போடவில்லையோ!!!...

வான்நிலவன் said...

hi anna.
அந்த புகைப்படங்களை இணைத்திருக்கலாமே!!!!

வந்தியத்தேவன் said...

இலங்கையிலுள்ள சகல கிரிக்கெட் மைதானங்களிலும் போட்டி பார்த்துவிட்டேன். எஸ் எஸ் சி தான் என் மனம் கவர்ந்த மைதானம்.நான் வேலை செய்த இடத்திற்க்கு அருகில் இருந்தமையால் எஸ் எஸ் சியில் பல சரித்திர முக்கியம் வாய்ந்த போட்டிகள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசல் ஆர்னோல்ட் பிரேசர் அவனியூ மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியவர். தமிழில் உரையாடும் இலங்கை அணி வீரர் அவரின் ஓய்வு எதிர்பாராதது.

தினமும் ஓவல் மைதானத்தின் அருகால் செல்கின்றேன். ஒருமுறை மட்டும் கிரிக்கெட்டின் மெக்காவைத் தரிசித்தேன் ஆனாலும் இன்னும் உள்ளே செல்லவில்லை, நல்லதொரு போட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன். லோர்ட்ஸின் அருகால் செல்லும்போது ஏனோ புல்லரித்தது.

வனாத்தமுல்லை சண்டியன் என்ற சொல்லடையும் இருக்கு, ஆனால் இப்போ வனாத்தமுல்லையில் அவ்வளவு சண்டியர்கள் இல்லை.

Subankan said...

சுவையான தொகுப்பு. இவ்வ‍ளவு ரசித்துப்ப‍டித்த கிரிக்கெட் பதிவு இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன் (நாங்களும் ப்ளேயர் ஆனதும் காரணமாக இருக்க‍லாம் :P)

அப்புறம் வேதாளம் றிட்டன்ஸ்சா? சொன்ன‍மில்ல‍ ;)

Vijayakanth said...

ungakitta ippudiyum oru flashback ah.....!

Riyas said...

லோசன் அண்ணா.. நேரம் கிடைத்தால் கொஞ்சம் வாசித்துப்பாருங்கள்...

உங்களின் ரசிகன்.. இப்போது அபுதாபியிலிருந்து
http://riyasdreams.blogspot.com/2010/08/50.html

sinmajan said...

MOU காலத்தில் யாழ் மத்திய கல்லூரிக்குப் வந்த முரளி தான் எனக்கு முதல் சர்வதேச வீரர் ஒருவரைப் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பமாயிருக்கும்..

அஜுவத் said...

Super anna.........

ம.தி.சுதா said...

அண்ணா எனக்கு அர்னோல்ட்ன் மறக்க முடியாத போட்டி என்றால் அது சனத் 189 அடிக்கும் போது இவர் வழங்கிய உதவிதான் அன்று உண்மையில் இவரில்லாவிடில் சனத் அப்படி அடிப்பது சந்தேகம் தான் வாழ்த்துக்கள் அண்ணா. சரி எப்ப நம்ம தளத்திற்கு உங்க tab நீளும். எதிர் பார்க்காத புது நண்பர் எல்லாம் வந்து போகையில் நான் எதிர் பார்த்தவர்களில் நீங்க மட்டுமே வரல.
mathisutha.blogspot.com

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner