இலங்கை அணி இந்திய அணியை உருட்டி எடுத்த போட்டியில்(ஞாயிறு) ஐந்து விக்கெட்டுக்களை எடுத்த திசர பெரேராவை விட அதிகமாகப் பேசப்பட்ட ஒருவராக மாறிப்போனார் இப்போது விளையாடாத,ஓய்வு பெற்ற குமார் தர்மசேன.
(இந்தியாவுக்கு எப்போதும் இலங்கை OFF SPINNERS தான் தொல்லையா? முரளி,மென்டிஸ்,ரண்டீவ்.. இப்போது ஓய்வு பெற்ற ஒரு OFF SPINNER தர்மசேன)
தர்மசேன - இந்தியாவில் இருக்கு தர்ம அடி
ஒரு ஆட்டமிழப்பு அல்ல.. சுளையாக ஐந்து தீர்ப்புக்கள் தவறாக அமைந்து போயின.(மூன்று - தர்மசேன,இரண்டு - அசத் ரௌப்)
இதெல்லாம் கிரிக்கெட்டில் சகஜமே என்றாலும் இந்தியாவுக்கெதிராக இவற்றுள் நான்கு அமைந்துபோனது தான் சிக்கலே.
(சேவாகுக்கு ஆட்டமிழப்பு கொடுத்ததில் தப்பில்லை என்று தளமே சொன்னதாக கிரிக்கெட் அனலிஸ்ட் கண்கோன் ஆதாரம் காட்டி இருந்தார். ஆனாலும் எனக்கென்னவோ அது தவறான தீர்ப்பு என்றே தோன்றியது.)
போட்டியின் முடிவை மாற்றியதிலும் இந்த தீர்ப்புக்கள் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்.
அண்மைக்காலம் வரை சராசரி நல்ல நடுவராக இருந்துவந்த தர்மசேன இவ்வளவு மோசமாக தீர்ப்புக்கள் வழங்கியதை நான் கண்டதே இல்லை.
எவ்வளவு தான் ஒரு அணியின் ஆதரவாளராக இருந்தபோதும் தவறான தீர்ப்புக்களால் தனது அணி வெற்றிபெறுவதை எந்தவொரு உண்மையான கிரிக்கெட் ரசிகனும் விரும்பமாட்டான்.
நானும் அவ்வாறே...
அன்றைய போட்டியில் இலங்கையின் அபாரமான வெற்றி, திசர பெரேராவின் மிக சிறப்பான பந்துவீச்சு, மஹேல மீண்டும் ஆரம்ப வீரராக மாறி ஆடிய அதிரடியும், இந்தியாவின் படுமோசமான துடுப்பாட்டமும் குமார் தர்மசேனவின் கோல்மால் தீர்ப்புக்களால் மறைக்கப்பட்டதை நினைத்து அடுத்த நாள் வரை கொதிப்புடன் இருந்தேன்.
ஆனாலும் பதிவு போடக் கொஞ்ச நேரம் கூடக் கிடைக்கவில்லை.
இன்று கொட்டித் தீர்த்தாச்சு.
வீரர்கள் தவறிழைத்தால் போட்டி மத்தியஸ்தர் தலையிடாவிட்டாலும் பாய்ந்து விழுந்து தண்டனை கொடுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் குமார் தர்மசேனவுக்கு இன்னும் எந்தத் தண்டனையும் கொடுக்காதது ஆச்சரியமாக உள்ளது.
இரண்டு,மூன்று போட்டித் தடைகளோ அல்லது இனிமேலும் கையையே மேலே தூக்கக் கூடாது என்ற தண்டனைகளோ கொடுத்ததாக அறியிலேன்..
கன்னி ஐந்து விக்கட் பெறுதி - திசர பெரேரா
இன்று இந்தியாவுக்கும் நியூ சீலாந்துக்கும் இடையிலான போட்டி அரை இறுதி போல அமைகிறது.
மழை பெய்தாலும் நியூ சீலாந்து உள்ளே.. தர்மசேன இன்று நடுவராக வந்தாலும் நியூ சீலாந்து உள்ளே என்று இந்தியா நடுங்கிக் கொண்டிருக்கிறது.
(ஆனாலும் கொஞ்சம் ஆறுதல்.. தர்மசேன இன்று துணை வில்லனாகத் தான் வரமுடியும் - இன்று மூன்றாவது நடுவர்)
தோனி,ரோகித், கார்த்திக் என்று தடுமாறும் துடுப்பாட்ட வரிசையுடன் எகிறிக் குதிக்கும் பந்துகளுக்கு துணைபோகும் தம்புள்ளை ஆடுகளமும் இன்று பலவீனமான அணி என்று கருதப்பட்ட நியூ சீலாந்து அணிக்கு சாதகமான நாளாக இருக்கும் என நம்புகிறேன்.
இன்னும் கிரவுண்டில் உள்ள காண்டு போகலையா மிஸ்டர்.தோனி?
மைதான ஊழியர்களுடன் இந்தியத் தலைவர்
Spongy Bounce என்று இந்தியாவினால் வெறுக்கப்படும் ஆடுகளத்தில் நியூ சீலாந்தின் சாதுரியமான,ஸ்விங்கைப் பக்குவமாகக் கையாளும் வித்தை தெரிந்த நியூ சீலாந்தர்கள் இன்று செவாக்கைக் கைப்பற்றுவதிலும் யுவராஜ்,ரெய்னாவை அடக்குவதிலும் அவர்கள் இறுதிப் போட்டி வாய்ப்புக்கள் இருக்கின்றன.
என்னைய்யா இது? இப்பவே கன்னத்தில் கை வச்சா எப்பிடி?
பயிற்றுவிப்பாளர் கிரேட்பட்ச்சுடன், தலைவர் ரோஸ் டெய்லர்&குப்டில்
(சேவாக்கும்,பிரவீன் குமாரும் கூடக் கை விட்டால்.. விராட் கோஹ்லி இன்று அணிக்குள் வந்தால் ஏதாவது மாற்றம் நிகழலாம்)
இலங்கை அணியில் சில மாற்றங்கள் தெம்பையும் மகிழ்ச்சியையும் தருகின்றன.
இளையவர்களுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்பு+நம்பிக்கை.
திசர பெரேராவை இந்தியாவுக்கெதிராக (மட்டுமே) பயன்படுத்தி நட்சத்திரமாக மாற்றும் உத்தி..
சங்கக்கார அண்மையில் ஜீவன் மென்டிஸ்,தினேஷ் சந்திமால் ஆகியோர் உலகக் கிண்ண அணியில் வேண்டும் என்று வழங்கிய பேட்டி.
சந்திமால் அண்மையில் தென் ஆபிரிக்க A அணிக்கெதிராக அபார இரட்டை சதமடித்தது முக்கியமானது.
இதே போல மஹெலவை இப்போதாவது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்ப முடிவெடுத்ததும்,சாமர சில்வாவின் ஓட்டங்களுடனான மீள் வருகையும் இலங்கை அணியை மேலும் ஸ்திரப்படுத்துகின்றன.
முரளிதரனும் மீண்டும் ஒருநாள் அணிக்குள் வருமிடத்து(வருவார் தானே?) உபகண்ட ஆடுகளங்களில் இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டிகளில் (பவுன்சி ஆடுகளம் தம்புள்ளையில் போட்டிகள் இல்லை :)) இலங்கை அசைக்க முடியாத பலத்துடன் திகழும்.
அதற்கு முதலில் 28 ஆம் திகதி இறுதிப் போட்டியிலும் இலங்கை வெல்லுமா பார்க்கலாம்.
முக்கியமான விடயம் - இதுவரை தோனியின் தலைமையில் இந்தியா இலங்கையில் வைத்து எந்தவொரு கிண்ணத்தையும் தோற்கவில்லை.
இறுதியாக ஆசியக் கிண்ணத்தையும் எடுத்து சென்றது ஞாபகமிருக்குத் தானே?
இம்முறை பார்க்கலாம்..
தர்மம்(தர்மசேன அல்ல) தலை காக்கும் என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க..