CT 17 - இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் - பலப் பரீட்சையில் ஜெயிக்குமா பாகிஸ்தான்?

ARV Loshan
1

ஒரு இந்திய - பாகிஸ்தான் மோதல்..
எனினும் முன்னைய ஷார்ஜா, டொரொண்டோ, ஏன்  ஆசியக் கிண்ண மோதல் அளவுக்கு பரபரப்பும் எதிர்பார்ப்பும் இல்லை.
காரணம் அண்மைக்கால இந்தியாவின் எழுச்சி + ஆதிக்கம் & பாகிஸ்தானின் சரிவும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சரணாகதியாகும் அளவுக்கான தடுமாற்றம்.

எனினும் இந்தப் பாகிஸ்தான் அணி கொஞ்சமாவது எதிர்பார்க்க வைக்கிறது.
காரணம் கறுப்புப் பக்கங்களோடு சம்பந்தப்பட்ட ஒரு சில வீரர்கள் பாக்.அணியில் இருந்தும் அதை விட துடிப்பான இளைய இரத்தம் பாய்ச்சப்பட்டு சப்ராஸ் என்ற ஒரு போராளி தலைவராக இருப்பது.

இந்தியாவுக்கோ நிதானமும் அனுபவமும் சேர்ந்த தோனி  அணியைத் தேவையான போது திடப்படுத்த ஆக்ரோஷமும் மோதும் ஆற்றலும் கொண்ட கோலியின் தலைமையிலான இந்தியா முழுக்கவே புதியது.
எந்த அணியாக எதிரணி இருந்தாலும் வெல்ல முயற்சிக்கும்.

அமீர் மீண்டும் பாகிஸ்தான் அணியில்..

300+ ஆடுகளம் ஒன்றில் இரண்டு அணிகளுமே தங்களது உறுதியான பந்துவீச்சாளர்களின்  30 முக்கியமான ஓவர்களை இறுக்கமாக்கிக் கொள்ளவே பார்க்கின்றன.

பாகிஸ்தானுக்கு இமாத் வசீம் தன்னை ஒரு விக்கெட்டுக்கள் பறிக்கும் சகலதுறை வீரராகவும், இந்தியாவுக்கு அதே பாத்திரத்தை ஜடேஜா ஏற்பதிலுமே இன்றைய போட்டியின் சாதகத்தன்மை தங்கியுள்ளது என்பேன்.
அஷ்வினின் சுழலையும் இன்று இந்தியா அதிகமாக எதிர்பார்க்கும்.
பாகிஸ்தானுடன் முதலாவது போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய உமேஷ் யாதவ் அஷ்வினுக்குப் பதிலாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்த்தேன்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் கலக்கும் அணி என்றால் இந்தியா துடுப்பாட்ட அணி.
அதிகூடிய ஓட்டங்களைக் குவித்துள்ள முதலிருவரும் (தவான், ரோஹித் ஷர்மா) இந்தியரே. இவர்கள் இருவருடன் இலங்கையுடன் பூஜ்ஜியம் பெற்றாலும் மற்ற மூன்று போட்டியிலும் அரைச்சதங்கள் பெற்ற அணித்தலைவர் விராட் கோலியும் அசுர ஓட்டக்குவிப்பில் இருக்கிறார்கள்.
Dhawan, Rohit & Kohli vs Junaid, Amir & Hasan Ali

அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள ஹசன் அலி 15 - 40 வரையான ஓவர்களைத் தீர்மானிக்கப்போகும் சூத்திரதாரி.
இந்த ஓவர்களில் தக்கவைக்கும் விக்கெட்டுக்களும், சேகரிக்கப்போகும் ஓட்டங்களும் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும்.

300 ஓட்ட ஆடுகளம் என்பதால் பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள் குறிவைக்கப்படுவார்கள்.
அதிலே இந்தியாவின் பலம் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் அடிக்கடி Panickstan ஆவதால்..
இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை நீண்டதும் நம்பிக்கையானதுமாகத் தன்னை நிரூபித்திருப்பது.

சப்ராஸ் இலங்கைக்கு எதிரான போட்டியில் காட்டியது போன்ற பொறுமையையும், அசார் அலி அரையிறுதியில் காட்டிய நிதானத்தையும் இன்று காட்டவேண்டும்.
புதியவர் ஃபக்கார் சமான் பாகிஸ்தானின் ஆரம்பத் தலைவலியைப் போக்க வந்திருக்கும் வரம்.
அதே போல இந்தியாவின் ஆரம்ப ஜோடியும் பாகிஸ்தானின் அமீர்- ஜுனைத்த்தை தாண்டுவதில் இன்றைய போட்டியின் போக்கு இருக்கும்.

களத்தடுப்பு என்னும் பலவீனம் இரு அணிகளிடம் இருந்தாலும் ஜடேஜா, பாண்டியா போன்றோரால் இந்தியா மேவி நிற்கிறது.

தலைவர்களில் கோலியை விட சப்ராஸ் உணர்ச்சிவயப்படுத்தலைக் கட்டுப்படுத்தி நிதானமாக நிலைமையைக் கையாளக் கூடியவர். எனினும் கோலியின் ஆக்ரோஷமான, கவனம் சிதறாத துடுப்பாட்டம் மூலம் இந்தக் குறையை கோலி நிவர்த்தி செய்துவிடுகிறார்.
விக்கெட் எடுத்தால் கொண்டாடும், தனது சாதுரியப் பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரர்களைத் தடுமாற வைக்கும் ஹசன் அலி- கோலி  மோதல் இடைப்பட்ட ஓவர்களில் சுவாரஸ்யமாக இருக்கும்.

இப்படியான முக்கிய போட்டிகளின் அனுபவத்தில் இந்தியா முந்தி நிற்பதும், இந்தியாவுடனான போட்டிகள் என்றவுடனேயே பாகிஸ்தான் பயந்து நடுங்கியோ, காரணமின்றிய ஒரு அழுத்தத்தில் சிக்கி சின்னாபின்னமாவதை அடிக்கடி கண்டபிறகு இந்தியாவுக்கே இன்று அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கிறேன் :)

அத்துடன் நாணய சுழற்சி வெற்றியும், இந்தியாவின் அண்மைக்கால பலமான துரத்தியடித்தலும் சேர்ந்துகொள்கிறது இன்று. பாகிஸ்தான் இந்தியாவின் அதிரடி விளாசலில் இருந்து தப்பிக்கவேண்டுமாக இருந்தால் 300+ ஓட்டங்களைப் பெறுவதோடு ஆரம்ப விக்கெட்டுக்களை உடைக்கவேண்டும்.
பாகிஸ்தானின் ஓட்டக் குவிப்பைத் தடுக்க இந்தியாவின் ஆரம்ப ஓவர்களில் இன்று உமேஷ் யாதவ் இன்மை இந்தியாவைப் பாதிக்கும்.
எனினும் இந்தியாவின் வாய்ப்பே இன்று அதிகம்.

பி.கு - வரலாறும் அவ்வாறே சொல்கிறது ;)

இவ்விரு அணிகளும் தம்மிடையே மோதிய 128 போட்டிகளில் 72 தடவை பாகிஸ்தானும் 52 தடவை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. (4 போட்டிகள் முடிவில்லை)

எனினும் ICC தொடர்களில் 8 க்கு 2 என்னும் கணக்கில் இந்தியா முன்னிலை பெறுகிறது.
(T 20 போட்டிகளையும் சேர்க்கையில் அது 13 -2 என மாறுகிறது)
ஆனால் (ஷார்ஜா போட்டிகளின் கைங்கர்யத்தில்) ஒரு நாள் போட்டிகளின் இறுதிப்போட்டிகளில் பாகிஸ்தான் 7 போட்டிகளையும் இந்தியா 3 போட்டிகளையும் வென்றுள்ளன.

மேலதிகமாக இந்தியாவின் அரையிறுதி வெற்றி போலவே, Michael Vaughanஉம் இன்று இந்தியாவே வெல்லும் என்று சொல்லியிருக்கிறார்.
இன்றைய இறுதிப் போட்டி பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை, தரவுகள் + விளக்கங்களுடன் ஒரு புதிய இணையத் தளத்துக்காக இங்கே எழுதியுள்ளேன்.
வாசித்துப் பகிருங்கள்..
உங்கள் விமர்சனங்களையும் வழங்குங்கள்.


Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*