June 14, 2017

CT 17 யாருக்கு? யார் கிண்ணத்தை வெல்லவேண்டும்?


இலங்கையின் கிண்ணக் கனவு கலைந்தது..
(மெல்லிய கோடாக மட்டுமே இருந்த நம்பிக்கைக்கு இந்தியாவுக்கு எதிரான வெற்றியும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சில கட்டங்களும் சின்னதொரு ஆசையை ஊட்டியது காலத்தின் கோலம் தான் )
*இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம், குறிப்பாக தடுமாறும் பந்துவீச்சு பற்றி விரிவான ஒரு இடுகையை Champions Trophy தொடர் முடியும் நேரம் தரலாம் என்று நம்பியிருக்கிறேன்.

ஆனால் மூன்று ஆசிய அணிகளோடும் போட்டிகளை நடத்தும் நாடும் அதிக வாய்ப்புடைய நாடும், இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோற்காத ஒரே அணியுமான இங்கிலாந்தோடும் இன்றும் நாளையும் அரையிறுதிகள்.
நிறையப்பேருக்கு இப்போதிருக்கும் ஆர்வம், என்னைப்போன்ற இலங்கை ரசிகர்கள் எந்த அணிக்கு ஆதரவு என்று..
அநேகரின் ஊகம் இந்தியாவுக்கு கிடைக்கக் கூடாது என்று எல்லா இலங்கை ரசிகர்களும்வேண்டிக்கொள்வார்கள் என்பதே,,
காரணம் கலாய்த்தல்கள், கேலிகளாக ஆரம்பித்து துவேசம் கக்கி, தூசன மோதலாக தனிப்பட்ட பகைத் தாக்குதல்களாக மாறி நிற்கிறது இலங்கை - இந்திய ரசிகர் மோதல்கள்.
ஆனால், நான் முன்னரே சொன்னது போல இம்முறை அதிக வாய்ப்புடைய இரு அணிகளாக Champions Trophy ஆரம்பிக்க முதலே நான் சொல்லி வைத்த இரு அணிகளான இந்தியா - இங்கிலாந்து (2013 இறுதி போல) சந்திக்கத் தான் அதிக வாய்ப்புத் தெரிகிறது.

எனினும் இதுவரை கிண்ணம் வெல்லாத அணிகளில் ஒன்று - பாகிஸ்தான் தவிர்த்து வெல்வதே எனக்கு இப்போது விருப்பம்.
(பாகிஸ்தான் அந்த அணியின் நிறைந்து கிடக்கும் திறமை, உத்வேகம் தாண்டி ஊழல், சந்தேகம் ஆகியவற்றின் நிழல் இன்னும் படிந்து கிடப்பதாலும் முக்கியமான போட்டிகளில் நம்பமுடியாமல் சொதப்பிவிடுவதாலும் வேண்டாம்)
இந்தியாவுக்கும் வேண்டாம்..
போன முறை வென்றார்களே..
இப்போது இந்திய ரசிகர்கள் - Indian hater இடம் இதைத் தானே எதிர்பார்க்கலாம் என்று சிரிப்பது தெரிகிறது.
இருக்கட்டும்..
நடப்புச் சம்பியன்கள் மீண்டும் வெல்வதை விட, புதிய அணி ஒன்று வெல்வது கிரிக்கெட்டுக்கும் நல்லது இல்லையா?


2015 உலகக்கிண்ணம் முதல் படிப்படியாக முன்னேற்றம் கண்டு, அனேக அணிகளை சொந்த மண்ணிலும், வெளி மண்ணிலும் வீழ்த்தி,எழுச்சி கண்டு வரும் பங்களாதேஷுக்கு இந்த வெற்றிக்கிண்ணம் 1996 உலகக்கிண்ணம் இலங்கைக்குக் கொடுத்த உத்வேகத்தையும் புத்தெழுச்சியையும் கொடுக்கும்.
ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்குர் ரஹீம், தமீம் இக்பால் போன்ற இப்போது அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்களோடு, அணித் தலைவர் மோர்ட்டசாவுக்கும் இத்தனை காலம் பட்ட கஷ்டங்களுக்கும் இட்ட முயற்சி விதைகளுக்கும் நல்ல அறுவடையாக அமையும்.

பலருக்கு பங்களாதேஷ் அணியைப் பிடிப்பதில்லை - அவர்களது ரசிகர்களின் அளவுகடந்த அலப்பறை காரணமாக.
அந்த ஆர்வக்கோளாற்றுக்கு காரணம் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்.
சகல துறையிலும் நேர்த்தி பெற்ற அணியாக சர்வதேசத் தரம் வாய்ந்த இளம் வீரர்களோடு பங்களாதேஷ் எழுந்து வருகிறது.
இது புலிகள் அவர்களுக்கான நேரம்.

ஆனால், பங்களாதேஷை விட இந்த CT 2017 ஐ வெல்ல மிகப் பொருத்தமான அணி இங்கிலாந்து.

2010இல் இதுவரை இங்கிலாந்து வென்றுள்ள ஒரேயொரு உலகக்கிண்ணமான World T20 வென்ற Collingwood இன் தலைமையிலான அணியை விட உறுதியான அணி.
பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என்று சகலதுறையிலும் பலம் பொருந்திய அணி.
அடுத்த உலகக்கிண்ணத்தைக் குறி வைத்து பொறுக்கி எடுத்து உருவாக்கப்பட்ட அணி.
கடந்த ஒன்றரை வருடகாலமாக எல்லா அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் அணி.
ஒருநாள் துடுப்பாட்டத்தில் உலகின் மிகச்சிறந்தவரிசை இங்கிலாந்தினுடையது என்று அடித்துச் சொல்வேன்.
மற்ற அணிகளில் இப்படியொரு அதிரடி ஆட்டம் ஆடும் Bairstow போன்ற வீரரை இன்று வரை அணிக்கு வெளியே வைத்திருக்க மாட்டோம்.
முதற்தர தெரிவான சகலதுறை வீரர் வோக்ஸ் காயமடைந்து இரண்டு ஓவர்களோடு முதல் போட்டியிலேயே வெளியேற தடுமாறாமல் அவரது பிரதியீடு ஜேக் போல் அள்ளிஎடுக்கிறார் விக்கெட்டுக்களை.
இம்முறை வெல்லாவிட்டால் வேறு எப்போது என்னும் அளவுக்கு சொந்த மண்ணில் வாய்ப்புக் காத்துக் கிடக்கிறது.
வெல்லட்டும் மோர்கனின் அணி.

(CT17 தொடர் ஆரம்பிக்க முதலே இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் மீதான நம்பிக்கையீனமும் சேர்ந்துகொள்ள நமக்கு நெருக்கமான நண்பர்களிடம் "இங்கிலாந்து அணிக்குக் கிண்ணம் கிடைப்பதே பொருத்தமானதும் அந்த அணி அண்மைக்காலமாகக் காட்டிவரும் அதீத ஈடுபாடு + அர்ப்பணிப்புக்கும் பரிசுமாகும்" என்று சொல்லி வைத்திருந்தேன்)

இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் இறுதிப்போட்டி ஒரு சுவாரஸ்யமானதாக அமையும்.
இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக பங்களாதேஷ் தான் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை நம்பி இந்த ஆடுகளங்களில் பயன்படுத்தும் ஒரே அணி.
ஆசிய அணி ஒன்று இப்படி உறுதியான முடிவோடு விளையாடுவது அந்த அணியின் மீதும் ஹத்துருசிங்க, மோர்ட்டசா மீதும் மதிப்பை ஏற்றி வைக்கிறது.

ஆனால், கணிப்புக்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தாண்டி கிரிக்கெட்டில் எதிர்பாராதவை நடைபெறுவதும் உண்டு.
இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியை விரும்பும் 'போர்' விரும்பிகளும் இருக்கிறார்கள்.

இந்தியாவின் ஆதிக்கமும் அசுர பலமும் எல்லோரும் அறிந்தவை.

கோலி என்ற ஆக்ரோஷம் மிக்க தலைவரே போதும், தரையோடு தரையாக வீழ்ந்து கிடக்கும் அணியைத் துள்ளிப்பாயும் வேங்கைகளாக மாற்றிவிட.
தோனியின் சாதுரியமும் அனுபவமும் சேர்ந்துகொள்ள அவர்களது துடுப்பாட்டப் லமும் துணையாக இருக்கிறது. கூடவே பந்துவீச்சு - இலங்கை அணி துரத்தி அடித்த அந்தப் போட்டி தவிர இதுவரை காலமும் ஒருநாள் போட்டிகளின் ஸ்திரமான பந்துவீச்சாகத் தெரிந்ததும் தெரிவதும் இதுவே. எந்த அணியையும் தடுமாற வைக்கக்கூடியது.

2013 இறுதிப்போட்டி போல இந்தியாவின் வெற்றி அலை தொடரலாம்.

அல்லது தோல்விகளிலிருந்து மீண்டு 1992இல் கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தியது போல பாகிஸ்தான் சப்ராசின் தலைமையில் எழுந்தாலும் அதிசயமில்லை.

நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு அதிரடியும் ஓட்டக்குவிப்பும் கலந்த ஆரம்ப ஜோடி கிடைத்துள்ளது. ஹபீஸ், ஷோயிபின்  அனுபவம், அசார் அலியின் நிதானம், இளைய வீரர்களின் அதிரடி, சப்ராஸின் கூலான அணுகுமுறை, பலமும் பயங்கரமும் நிறைந்த வேகப்பந்துவீச்சு.
இதை விட ஒரு பாகிஸ்தான் அணி எப்படியிருக்கவேண்டும்?
ஆனால் எதிராணிகளால் சுருட்டப்படுவதை விட பாகிஸ்தான் தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்வது தான் அதிகம். சப்ராஸ் + அமீரினால்  இலங்கைக்கு எதிராக அப்படியொரு  தோல்வியடையாமல் தப்பித்துக்கொண்டது. ஆனால் கடந்த போட்டியின் நாயகர்களில் ஒருவரான மொஹமட் அமீர் உபாதை காரணமாக இன்று விளையாடவில்லை.

சுருக்கமாக - திறமையை அந்தந்த நாளில் காட்டும் அணிகளில் ஒன்று வெல்வதில் நாம் என்ன சொல்ல முடியும் 
கொள்ளுப்பிட்டி பிலாவூஸ் மட்டன் கொத்து மொரட்டுவையில் உள்ள திசர பெரேரா (இது வேற திசர) வீட்டு நாய்க்குத் தான் கிடைக்கும் என்றால் அதை யாராவது மாற்ற முடியுமா? 

*எனது Facebook நிலைத்தகவலாக இன்று பகிர்ந்ததை மேலும் விரித்து இங்கே பதிவிட்டுள்ளேன்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner