June 15, 2017

இந்தியாவுக்கு இலகுவா? பழி தீர்க்குமா பங்களாதேஷ்? #CT17 - நேற்று பாகிஸ்தான்.. இன்று?

நேற்று பாகிஸ்தான்.. இன்று?
ஒரு மாதிரி ஆனானப்பட்ட இங்கிலாந்தையே வீட்டுக்கு அனுப்பீட்டிங்கள்ள என்று தகவல் அனுப்பி, கருத்திட்ட அன்புள்ளங்களுக்கு நன்றிகள் 
நம்ம விக்கி - (அச்சச்சோ விக்கிரமாதித்தன் என்று சொல்வதே இந்தக் காலகட்டத்தில் நல்லது. ) யின் ஆற்றல் இப்படித்தான் சில நேரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.
பாகிஸ்தானின் அசத்தல் அப்படி.. வாழ்த்துக்கள்.
அவர்களால் எதுவும் முடியும்.. அவர்களே நினைத்து, விரும்பினால் என்பதை நேற்று(ம்) நிரூபித்திருந்தார்கள்.

இங்கிலாந்துக்குத் தான் கிண்ணம் என்று நான் உட்பட எண்ணி வைத்திருந்த அத்தனை பேர் முகத்திலும் கிலோக்கணக்கில் கரியை அப்பிப் பூசி விட்டனர் பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்கள்.

இங்கிலாந்து அணியைத் தடுமாற வைத்தது பாகிஸ்தானின் மத்திய நேர ஓவர்கள் தான்.
குறிப்பாக நேற்றைய நாயகன் ஹசன் அலி தான். இலங்கை அணியையும் சிதறடித்த ஒரு முக்கிய பந்துவீச்சாளர். துல்லியமான குறியுடன் அபரிதமான வேகமும் கொஞ்சம் reverse swing உம்  சேர்ந்தால் இந்த ஹசன் அலி.
விக்கெட் எடுத்த பிறகு இவர் எடுக்கும் திருவிழா தான் கொஞ்சம் கடுப்பேற்றும் விடயம்.


தவிர, அமீரின் உபாதை காரணமாக நேற்று அறிமுகமான ருமான் ரயீஸின் துல்லியமும் கவனிக்கக்கூடியது.
ஜுனைத் கான் இன்னொரு பக்கம் திடமாக, தூணாக.
இங்கிலாந்து அணியின் தடுமாற்றம் எந்தவொரு கட்டத்திலும் நேற்று அவர்களை தலை நிமிர விடவில்லை.
எந்தவொரு துடுப்பாட்டவீரரும் அரைச்சதம் பெற முடியாமல் போன அளவுக்கு பாகிஸ்தான் மிகத்துல்லியம்.

எனினும் பாகிஸ்தான் வழமையாக செய்வது போல துடுப்பாட்டத்தில் சிறிய இலக்காக இருந்தாலும் தடுமாறி தாமாகவே விக்கெட்டுக்களைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தது நேற்று நடக்காமல் போனது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் அதிர்ஷ்டமும் சப்ராசும் காப்பாற்றியது போல தேவையின்றி இலகுவான வெற்றி.
இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களால் எந்தவொரு சிறு அழுத்தத்தையும் கொடுக்க முடியவில்லை.

அடித்தளம் போட்டுக்கொடுத்த ஆரம்ப ஜோடி பாகிஸ்தானின் நீண்ட தலைவலிக்கு மிகப்பெரிய நிவாரணி.
ஃபக்கார் சமான்  பாகிஸ்தானுக்கு ஒரு வரம் தான். நிதானமான அசார் அலிக்கு பொருத்தமான ஒரு ஜோடி.
1999க்குப் பிறகு முக்கியமான ஒரு தொடரின் இறுதியை எட்டியுள்ளது பாகிஸ்தான்.

அத்துடன் Champions Trophy வரலாற்றில் இரண்டாவது தடவையாக இரு ஆசிய அணிகள் மோதும் இறுதிப்போட்டி இது.
2002இல் இதற்கு முதல் இந்தியாவும் இலங்கையும் சந்தித்த இறுதிப்போட்டி மழையினால் கழுவப்பட்டு இரு அணிகளும் கிண்ணம் பகிரப்பட்டது.

எல்லாம் சரி..
பாகிஸ்தானின் ஆற்றல், அபாரமான ஆட்டத்தை வாழ்த்தாமல், ஆடுகளத்தன்மை தமக்கு சாதகமாக அமையவில்லை என்று குறைப்பட்டுக்கொண்ட இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கனை என்னவென்பது?
அவர் மீதான மதிப்பு அப்படியே சரேலென இறங்கிட்டது.

இங்கிலாந்து ஆடுகளம் ஒன்றிலேயே அவர்களது வீரர்களால் பிரகாசிக்க முடியவில்லை என்று தாங்கள் முன்பு ஆடிய ஆடுகளங்கள் போல அமையவில்லை என்று குறைப்பட்டு நொண்டிச் சாக்கு சொல்லி இவர் மீது நாம் அனைவருமே வைத்திருந்த மிகப்பெரிய பிம்பத்தை சிதைத்துக்கொண்டார்.

உண்மை தான் எமக்கே இங்கிலாந்தின் தோல்வி அதிர்ச்சியைத் தந்தது என்றால் ஒரு இலட்சிய அணியை 2019 உலகக்கிண்ணம் நோக்கி உருவாக்கி வரும் மோர்கனுக்கு அடித்து மிகப்பெரிய தாக்கமாக தான் இருந்திருக்கும்.
ஆனால் நேற்று மோசமாக விளையாடியதை ஆடுகளத்தை இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஏற்றுக்கொள்வதே சரியானதாகும்.

பாகிஸ்தானின் நேற்றைய வெற்றியும்  இந்த உத்வேகமும் கிண்ணம் மீதான அவர்களது ஒரு குறி இறுகியிருப்பதைக் காட்டுகிறது. ஆனால் இன்னமும் இவர்கள் அடுத்த போட்டியில் எப்படி சொதப்புவார்களோ என்ற ஒரு அவநம்பிக்கையைத் தராமல் இல்லை.
அதிலும் இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்தித்தால் பேய். பிசாசைக் கண்டது போல பதறித் துடித்து தாமாகவே வீழ்ந்து போவது எப்போது மாறும்?

-------------------------

 இன்றைய அரையிறுதி பங்களாதேஷ் அணியைப் பொறுத்தவரையில் முதலாவது. ICC தொடர்களில் அவர்கள் இதுவரை எட்டிப் பார்க்காத ஒரு கட்டம் இது.
இரு தடவைகள் வங்கப் புலிகள் இப்படியான கட்டத்தை எட்ட நினைத்தவேளையில் அவர்களது கனவைக் கருக்கிய, கிட்ட வந்த வாய்ப்பை இல்லாமல் செய்த அதே எதிரியை இன்று அரையிறுதியில் சந்திக்கிறார்கள்.
இறுதியாக இவ்விரு அணிகளும் ICC தொடர் ஒன்றின் முக்கிய போட்டியில் மோதியபோது நடந்தது சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கும் ஞாபகமுள்ள ஒரு விடயமே..
அவசரப்பட்டு கொண்டாடி ஒரே ஒரு ஓட்டத்தினால் பங்களாதேஷ் தோற்றுப் போனது.

http://www.espncricinfo.com/…/eng…/current/match/951353.html
அதற்கு முதல் 2015 உலகக்கிண்ணக் காலிறுதி..
ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பு சர்ச்சை, பின்னர் இரு அணிகளின் ரசிகர்களின் சமூக வலைத்தள மோதல்கள் என்று இன்று வரை கசப்பு தொடர்கிறது.
எனினும் இப்போது பங்களாதேஷ் அடைந்துள்ள முன்னேற்றம், 2015 உலகக்கிண்ணத்துக்குப் பின்னர் படிப்படியாகக் கண்ட முன்னேற்றங்களின் காரணகர்த்தாவாக ஒரு இலங்கையர் - பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க காரணமாக இருந்தாலும், இந்த மாற்றத்தின் விதை இன்று சந்திக்கவுள்ள இந்தியாவுடனேயே விதைக்கப்பட்டது என்பது பலரும் அவதானிக்காத ஒரு விடயம்.


2015இல் இந்தியா பங்களாதேஷுக்கு விஜயம் செய்து விளையாடிய ஒருநாள் தொடர் தான் அது.
தோனியின் தலைமையிலான முழுப்பலம் வாய்ந்த இந்திய அணியைத் துவம்சம் செய்ய பங்களாதேஷ் எடுத்த ஆயுதம் தான் நான்கு முனை வேகப்பந்துவீச்சு.
முஸ்டபிசூர் ரஹ்மான் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் முறையே 5,6 என்று விக்கெட்டுக்களை அள்ளியெடுத்து இந்தியாவை சுருட்டியிருந்தார்.
அதன் பின்னர் தான் வங்கப் புலிகள் சொந்த மண்ணில் வந்த அணிகளையெல்லாம் வேட்டையாடி மகிழ்ந்து பலம் பெற்று, பின் இலங்கையில் வைத்தே சிங்கங்களை சிதறடித்துவிட்டு தங்கள் பலம் அப்படியொன்றும் திடீரெனக் கிடைத்த மாயாஜால வரம் அல்ல என்று நிரூபித்துள்ளார்கள்.
படிப்படியாகக் கட்டமைக்கப்பட்ட பங்களாதேஷ் அணிக்கு இந்த Champions Trophy இல் தங்கள் எழுச்சியை அடையாளப்படுத்திக்கொள்ள நியூசீலாந்து அணிக்கெதிரான வெற்றி உதவியிருக்கிறது. இன்றைய போட்டி பங்களாதேஷின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை எழுத உதவலாம்.

எனினும் கோலி தலைமையிலான இந்தியா இலங்கை அணியுடன் கண்ட சறுக்கல், கொஞ்சம் மிதப்பில் இருந்த நடப்புச் சாம்பியன்களுக்கு விழிப்பைக் கொடுத்துள்ளது போல தெரிகிறது.
ஏற்கெனவே துடுப்பாட்டத்தில் தனது வலிமையை நம்பியுள்ள இந்தியா அண்மைக்காலமாகஆடுகளங்களுக்கு ஏற்ப பந்துவீச்சின் வியூகங்களை மாற்றும் திடத்தைக் கொண்டுள்ளது.

இந்திய, ஆசிய ஆடுகளங்கள் என்றால் (பகுதி நேரப் பந்துவீச்சாளரையும் சேர்த்து) சமயத்தில் நான்கு சுழலையும் பயன்படுத்துவதும், வெளிநாடுகளில் புவனேஷ்குமார், பும்ரா, யாதவ், பாண்டியா என்று வரிசையாக அடுக்கக்கூடிய நம்பிக்கையும் வளர்ந்திருக்கிறது.
இன்றும் இந்திய அணிக்கான வாய்ப்புக்களே மிக அதிகம் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.
தமீம் இக்பாலின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டமும், கடைசியாக நடந்த போட்டியில் ஷகிப், மஹ்மதுல்லாவின் சதங்கள் என்று பங்களாதேஷ் ஓட்டங்களோடு உலா வர, தவானின் உச்சபட்ச உற்சாக ஓட்டங்களும், மீண்டும் எழுந்துள்ள கோலியின்துடுப்பாட்ட அதிரடியும் இந்தியாவுக்கு திடம் அளித்துள்ளது. இது தவிர தோனியின் அனுபவம் ஒரு பக்கம், இன்று முன்னூறாவது போட்டியில் ஆடும் யுவராஜ் சிங்கின் அடித்து நொறுக்கும் அதிரடி form என்பன மேலும் பெரிய பலங்கள்.
முக்கியமாக இப்படியான அழுத்தம் நிறைந்த போட்டிகளை சமாளிக்கும் அனுபவத்திறன் இந்திய அணிக்கு அதிக சாதகத் தன்மையை இன்றைய நாளில் வழங்கலாம்.
எனினும் இதைக் குறித்துக்கொள்ளுங்கள்...
ஆரம்ப ஓவர்களில் பறிக்கப்படும் விக்கெட்டுகளும், 20 - 40 ஓவர்களில் சேர்க்கப்படும் ஓட்டங்களும் தான் போட்டியின் போக்கை தீர்மானிக்கும்.
இதற்கு களத்தடுப்பு முக்கியமாக அமையும்.
முக்கியமான பிடிகளைத் தவறவிடும் அணி (இலங்கையைப் போல), ரன் அவுட் வாய்ப்புக்களை நழுவவிடும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பது உறுதி.

கால்பந்து உலகக்கிண்ணத்தில் ஒக்டோபஸ் போல இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வோன் வேறு இன்று இந்தியா வெற்றிபெறும் என்று ஆரூடம் சொல்லி இந்திய ரசிகர்களின் சாபத்தை வாங்கிக் கட்டியுள்ளார் 

நான் அப்படியெல்லாம் இல்லாமல் - நேற்று சொன்ன மாதிரியே பலத்தை அடிப்படையாக வைத்தே ஏன் கணிப்பை முன்வைத்துள்ளேன். (நம்புங்கப்பா..
டீல் பேசலாம் என்று சொல்லியும் யாரும் சீரியசாக அணுகவில்லை என்பது பயங்கர ஏமாற்றமே)
நாணய சுழற்சி வெற்றி மூலம் இந்தியா முதலாவது வாய்ப்பைத் தனதாக்கியுள்ளது.
ஆடுகளத்தின் சாதகத்தை தனது பந்துவீச்சாளருக்கு முதலில் விக்கெட்டுக்களை எடுக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
பங்களாதேஷ் 320 ஓட்டங்களையாவது குவித்துக்கொண்டாலே தங்கள் நான்கு வேகப்பந்துவீச்சாளரோடு இந்த உலகக்கிண்ணத்தின் மற்றொரு upsetஐ நிகழ்த்தலாம்.
(இந்தியாவோடு எப்போதுமே சிறப்பாக செய்யும் ருபெல் + முஸ்டாபிசூர் ஆகியோரைக் கவனியுங்கள்)
இல்லாவிடில் இந்தியா வெறியோடு துரத்தி அடிக்கும்.
(பதிவு அடித்து ஏற்றும் இந்த நேரம் ஷகிப் அல் ஹஸனின் விக்கெட்டும் போயிருப்பது போட்டியை இந்தியாவின் பக்கம் நகர்த்தியுள்ளது என நம்புகிறேன். 280 வரை ஓட்ட எண்ணிக்கையைக் கொண்டுபோனால் மேக  மூட்டமான சூழ்நிலையில் மின்விளக்குகளும் ஒளிரும் நிலையில் பங்களா பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் அழுத்தங்களை ஏற்படுத்தலாம்)

இன்று அது நடந்தால்... Champions Trophy இன் சரித்திரத்தின் மிகப்பெரிய தலைகீழ் முடிவாக அமையும்.
இந்தியா வென்றால் இந்தோ - பாக் மோதலுக்கு கிரிக்கெட் உலகமும் சமூக வலைத்தளங்களும் தயாராகிவிடும் 
இன்றைய மழை கலந்த காலநிலை போட்டியின் முடிவில் Duckworth Lewis ஐ அழைக்கும் வாய்ப்பும் நிறையவே இருப்பதாகவே தெரிகிறது.
இன்றைய நாள் இனிதாகட்டும் 

No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner