A.R.ரஹ்மான் 16

ARV Loshan
5

இசைப்புயலுக்கு எனதும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

(ஒன்பதாம் திகதி இன்றைத் தலைகீழாக ஆறாக எண்ணிவிட்டேன் என்று எண்ணிக்கொள்ளுங்கள்)

எங்களோடு சேர்ந்து வளர்ந்த ஒருவர் இப்போது உலகத்தின் உச்சங்களில் ஒருவராக இருக்கும்போது வரும் ஒரு உரிமை கலந்த பெருமை எனக்கு எப்போதும் A.R.ரஹ்மானில் உள்ளது. அவர் இன்னும் எம்மவராகவே இருப்பதாலும்....அவரது முதல் பாடல் வெளிவந்த நாளில் இருந்து படிப்படியான வளர்ச்சியும், அசுர எழுச்சியும் எதிலும் மாறாத அந்தப் பணிவும், கனதி ஏறாத அந்தத் தலையும் புதுமை தேடுகிற அவர் இசையும் மனதுக்குப் பிடித்த பல விடயங்களில் சில...

46 வயதாகும் ரஹ்மானிடம் ரசிக்கின்ற, கவனித்த 16 விடயங்கள்...
(46 க்கு 46 என்று தேடி எடுத்தால் ரசனைகள் நீர்த்துவிடும் என்பதால் இசைப்புயலின் இசையும் இளமையும் என்றும் பதினாறாகவே இருக்கட்டும் என்பதற்காக இந்த  A.R.ரஹ்மான்  16)

(எனது ரசனைகள் உங்களுக்குப் பிடித்திருக்க வேண்டியதில்லை நண்பர்ஸ்)


1. ரஹ்மானின் இசையில் இதுவரை ஒரு முழுத் திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் பிடித்தது - ஜீன்ஸ், டூயட், என் சுவாசக்காற்றே, காதலன், காதல் தேசம், அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா, Slumdog Millionaire

2. ரஹ்மானின் அறிமுகங்கள் பலவற்றில் மனதில் நீங்காத சில குரல்கள் - ஹரிஹரன், கார்த்திக், ஹரிணி, ஸ்ரீனிவாஸ், பென்னி தயால்

3.ரஹ்மானின் இசையில் ரசித்த சில இசைக்கருவிகள்....
புல்லாங்குழல் - அலைபாயுதே
சக்சபோன் - டூயட்
மெக்சிக்கன் கிட்டார் - ஆய்த எழுத்து & வி.தா.வ

4.ரஹ்மானின் வந்தே மாதரம் நேரம் இருந்த சிகையலங்காரம் மனதை மிகக் கவர்ந்திருந்தது. சிறிது காலத்தின் பின்னர் அப்படி ஒரு நீண்ட அடர் முடி அலங்காரத்தை என்னால் எடுக்க முடிந்தது வேறு கதை.

5. ரஹ்மான் பாடிய பாடல்களில் எப்போதும் மனதில் ஒட்டி இருக்கும் ஒரு பாடல் - சந்தோஷக் கண்ணீரே - உயிரே

6. ரஹ்மானின் இசையில் ஒரு முழுமையான பாரதியார் பாடல் ஒன்றைக் கேட்டு ரசிக்கும் தீராத ஆசை உள்ளது.

7. இதுவரைக்கும் தமிழ்த் திரையிசையுலகில் அதிகமான புதிய குரல்களைத் தந்தவரும் இசைப்புயல்.
இதைப் பற்றி நான் உங்களுக்கு சொன்னால் அது செட்டியார் தெருவில் போய் நகை விற்ற கதை தான்...

8.தனக்கு முன்னோடிகளாக விளங்கிய பல பாடகர்களையும் மீள அழைத்து வந்து எங்கள் மனதில் ரீவைண்ட் செய்தவரும் A.R.ரஹ்மான் தான்.
ரஹ்மான் மீண்டும் கூட்டிவந்த முன்னைய பாடக, பாடகியரில் மனம் கவர்ந்தவர்கள்...

P.சுசீலா - கண்ணுக்கு மை அழகு
ஜெயச்சந்திரன் - என் மேல் விழுந்த, சித்திரை நிலவு

எனக்கு மிகப்பிடித்த அருண்மொழிக்கும் அழகான ஒரு பொருத்தமான பாடலையும் கொடுக்கலாமே ரஹ்மான்?

8.A.R.ரஹ்மானின் இசையில் SPB பாடிய பல பாடல்கள் இன்றுவரை எனது All time favorites.. இன்னும் எப்போதுமே...
காதல் ரோஜாவே - ரோஜா
என் காதலே - டூயட்
என்னைக் காணவில்லையே - காதல் தேசம்
அஞ்சலி - டூயட்
மின்னலே - மே மாதம்
கம்பன் ஷெல்லி - ரங்கீலா
தொடத் தொட - இந்திரா
பெண்ணல்ல பெண்ணல்ல - உழவன்
ஒருவன் ஒருவன் - முத்து
புதிய மனிதா - எந்திரன்
எங்கே என் புன்னகை - தாளம்


9. A.R என்ற இந்த பெயரின் முதல் எழுத்துக்கள் எனது அப்பா தனது நீளமான பெயரிலிருந்து சுருக்கித் தான் பயன்படுத்திக்கொண்டவை. அப்படியே நானும் என் தம்பிமாரும் அந்த முதல் எழுத்துக்களை சிறுவயது முதல் எமதாக்கிக் கொண்டோம்...
பாடசாலைக் காலத்தில் எனது பெயர் கொஞ்சம் பிரபலம் ஆகத் தொடங்க, இந்த முதல் எழுத்துக்களும் என் பெயரோடு சேர்ந்தே அறியப்படும் நேரத்தில் தான் 'ரோஜா' வெளியானது.
அதற்கு முதலே எனக்குப் பிடித்த இதே இனிஷல்கள் உடைய அலன் போர்டர், அர்ஜுன ரணதுங்க ஆகியோரோடு A.R.ரஹ்மானும் சேர்ந்து கொண்டார்.

ஆனால் இப்ப நான் எங்கே.. ரஹ்மான் எங்கே?

10. கோரஸ் குரல்களை எல்லாம் உச்சத்துக்கு உயர்த்தியவர் ரஹ்மான் தான்..
பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாசைப் பேட்டி கண்ட வேளையில் அவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்ட விடயங்கள் ரஹ்மானைப் பற்றி மிக உயர்வான செய்திகளைத் தந்தன.

11. அத்தோடு சேர்ந்ததாக பின்னணியில் இருந்த எத்தனை தொழிநுட்பக் கலைஞர்கள் ரஹ்மானின் இசையின் பின்னர் எங்களுக்குத் தெரியவந்திருந்தார்கள்?
டிரம்ஸ் சிவமணி, சுரேஷ் பீட்டர்ஸ், பின்னர் தெரியவந்த தொழிநுட்பக் கலைஞர் காலம் சென்ற ஸ்ரீதர்.
எத்தனை பெரிய இசையமைப்பாளருக்கு இத்தகைய பெருந்தன்மை வரும்?

அத்துடன் பஞ்சதன் தானே ஒலிப்பதிவுக் கூடங்கள் பற்றி எங்களுக்கு அதிகமாக சொல்லித் தர ஆரம்பம்?

12.எந்த ஒரு ARR இசைத்துளியைக் கேட்டாலும் உடனே எம்மால்/ என்னால் உணர்ந்துவிட முடிகிறது பாருங்கள்... இது தான் ரஹ்மானின் மற்றொரு ஸ்பெஷல் என நம்புகிறேன்.

13. A.R.ரஹ்மானின் Bit songs (சிறிய பாடல்கள்) அத்தனையையும் என்னை விட இன்னொருவர் தேடிஎடுத்து ரசித்திருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

கொல்லையில - காதலன் தொடக்கம் ராவணன் கலிங்கத்துப்பரணி வரை ஒவ்வொரு சிறு பாடல்களையும், சில நேரங்களில் மிக ரசிக்கின்ற சிறு ஓசை நயவடிவங்களையும் கூட..
(இதிலே மாங்கல்யம் தந்துனானே என்று ஆரம்பிக்கும் அலைபாயுதேவின் 'என்றென்றும் புன்னகை' எனது காதலுக்குரிய பாடல்)

இவர் அளவுக்கு இத்தனை நுணுக்கமாக வேறெந்த இசையமைப்பாளரும் முனைவதில்லை அல்லது முனைந்தாலும் முடிவதில்லை என்பது எனது தீர்மானமான நம்பிக்கை.
வேறு எவரிடமிருந்தும் இப்படியான Bit songs பொதுவாக (ரசிக்கின்ற அளவுக்கு) வருவதும் கிடையாது.14. A.R.ரஹ்மான் + கவிஞர் வைரமுத்து - இந்த இணைப்பு இனி எந்த ஒரு இசையமைப்பாளர்  + கவிஞராலும் நிகர்க்கப்படும் என்று நான் நம்பவில்லை. (இதற்கு முதல் மெல்லிசை மன்னர் + கவியரசர் & இசைஞானி + கவிப்பேரரசு)
எத்தனை எத்தனை பாடல்கள்.. அந்தப் பாடல்களில் வார்த்தைகளை உடைக்காமல் ரஹ்மான் போடும் இசைக் கோலங்களையும், இசைக் கட்டை உடைக்காமல் கவிஞர் போட்ட வார்த்தைகளையும் ரசித்து ரசித்து மாய்ந்து போயிருக்கிறேன்.
ஒரு வேளை தந்தையை மகன் மிஞ்சினாலும்....

15. இசைப்புயலை தவிர்த்து வேறு யார் இசையமைத்தாலும் ஒட்டாது இவர்களின் படங்களுக்கு என்னும் சில இயக்குனர்களும் உள்ளார்கள்.
ஷங்கர், மணி ரத்னம்.. வேறு யாராவது இவர்களின் படங்களுக்கு இசையமைத்தாலும் எங்களுக்கு சகிக்காது. மணி அண்மைக்காலமாக ரஹ்மானின் இசையையும் பாடல்களையும் சேர்த்தே சொதப்பியது வேறுகதை.

16. ரஹ்மானின் வடக்குப் பிரவேசமும், மேலைத்தேயம் நோக்கிய நகர்வும் அவரில் ஏற்படுத்திய மாற்றத்தின் (தர மேம்பாடு?) பின்னர் அவரிடமிருந்து கொஞ்சம் விலகியவனாக என்னை உணர்ந்தாலும், ரஹ்மான் அறிமுகப்படுத்தும் புதிய குரல்களும், புதிய வகை இசைகளும், புதிய பரிமாணங்களும் அவர் மீது மேலும் வியப்புக் கலந்த விருப்பையும், ஆச்சரியம் கலந்த அதிசய உணர்வையும் ஏற்படுத்துகின்றன.

'கடல்' பாடல்கள் தந்த ஆச்சரியமும், அந்தப் பாடல்கள் மீதான அலாதிக் காதலும் அப்படித் தான்.
வைரமுத்து + ரஹ்மான் கூட்டணி ஒரு பக்கம் 'மூங்கில் தோட்டத்தை' தானாக ரசிக்கச் செய்தாலும்,
ரஹ்மானின் இசைக்கோலத்தொடு போட்டிபோடும் கார்க்கியின் 'அடியே' தான் இப்போதைக்கு எனது மனதும், உதடுகளும் அடிக்கடி ஸ்பரிசிக்கும் பாடல்....
(ஆனால் கடலின் ஏனைய பாடல்களை ஒலிபரப்புகிற அளவுக்கு வானொலிகள் 'அடியே' வை ஒலிபரப்புவதில்லை.. ஏனோ??)

(ரசனைகள் வித்தியாசப்படலாம்; வித்தியாசப்படும். இதில் ஒத்தவற்றை சேர்ந்து அனுபவியுங்கள்...  நீங்கள் ரசிக்கும் சில இதை விட நல்லனவற்றை என்னோடு பகிர்ந்திடுங்கள்)


Post a Comment

5Comments

Please Select Embedded Mode To show the Comment System.*