விஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை

ARV Loshan
12

விஸ்வரூபம்...

என்னதான் இந்தப் பெயரில் இருக்கோ தெரியவில்லை ஆரம்பம் முதலே சிக்கல்.. இழுபறி...

நேற்று நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றி மீண்டும் தடையாக இழுபறி.
கமல் என்ற கலைஞன் முடக்கப்படுகிறான்.. ஒடுக்கப்படுகிறான்..
அரசியல் விளையாட்டுக்களால் பந்தாடப்படுகிறான் என்பது தெரிகிறது.
அவர் வழங்கியுள்ள ஊடகவியலாளர் சந்திப்புப் பேச்சு எவ்வளவு தூரம் காயப்பட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் அவருக்கு ஒரு நல்ல படைப்பாளியாக, ஒரு மிகச் சிறந்த கலைஞனாக முக்கியமான அடையாளம் எப்போதும் வழங்கப்பட்டது கிடையாது.
தரத்தால் உயர்ந்திருந்தாலும் மசாலாத் தனங்கள் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு இந்த மகோன்னத கலைஞன்  அங்கீகரிகப்பட்டதில்லை.
இப்போது இந்த விஸ்வரூபம் தடை விவகாரமும் இதையே உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை விட்டே செல்லத் தயார் எனும் அளவுக்கு கமலின் கூற்று மிக ஆழமான வருத்தத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Kamal Haasan Speaks his heart out.



விஸ்வரூபம் தடை, இலங்கையிலும் இந்தியாவிலும், இது பற்றிய எதிர்ப்பு வாதங்கள் ஆகியன வரத் தொடங்கியதிலிருந்து நான் அவதானித்த விடயங்கள், சில விளக்கங்கள் மற்றும் நான் சிலரிடம் கேட்க இருக்கும் வினாக்களுக்கான இடுகையே இது.

நான் மனதில் தோன்றும் எண்ணங்களை என் மனது சொல்கின்றபடி (ஆனால் பொதுவாக மற்றவர் மனதுகள் நோகாதவண்ணம்) எனது Twitter, Facebook பக்கங்கள் வாயிலாக பதிவு செய்தே வருகிறேன்.

கமல்ஹாசன் எனக்குப் பிடித்த நடிகர், படைப்பாளி என்பதையும் தாண்டி விஸ்வரூபம் படம் வெளியாக முன்னமே எழுந்த எதிர்ப்புக்களின் பின்னணி தான் எனையும் யோசிக்க வைத்தது.
ஒரு படைப்பு வெளியான பிறகு வருகின்ற எதிர்ப்புக்கள் சாதாரணமானவை; விமர்சன ரீதியாக ஏற்கக் கூடியவை.
பொதுவெளியில் ஒரு படைப்பு வந்துவிட்டால் விமர்சனங்கள் வரும்.
ஆனால் வெளிவராத ஒரு படைப்புக்கு எதிர்ப்பும் தடையும் எனும்போதும், அது நாடு கடந்து இங்கேயும் பார்க்காதோர் எல்லாம் எதிர்க்கின்றபோது, அதிலும் பிரிவு ரீதியாக அந்த எதிர்ப்புக்கள் இருக்கையில் எல்லாப் பின்னணிகள் மற்றும் நோக்கங்கள் பற்றியும் யோசிக்க வேண்டி இருந்தது.

இணையப் பொதுவெளியில் கமலின் திரைப்படத்துக்கு எதிராக முதலில் வந்து விழுந்த கருத்துக்களை வாசித்த பின்னர் + விஸ்வரூபத்துக்கு எதிராக வந்த கருத்துக்களுக்குக் காட்டப்பட்ட எதிர்ப்புக்களை வாசித்த பின்னர் - எனது வார்த்தைகளை மிகத் தெளிவாகவே முன்வைத்திருந்தேன்.
அத்துடன் நான் எப்போதும் சமய சந்தர்ப்பவாதங்களையும், மதவாதிகளையும், மூட நம்பிக்கைகளையும் கடுமையாக வெளிப்படையாக எதிர்த்துவந்தமையையும் என்னை அவதானித்தவர்களும் என் நண்பர்களும் அறிவர்.
எந்த சமய அடையாளமும் இல்லாமல் இருப்பதால் நான் இந்த விடயத்தில் போலி மதச் சாயத்துடன் வெறுப்பை உமிழ்ந்தவர்களை நான் பக்குவமாகச் சாடியிருந்தேன்.
ஆனால் இணைய வாதப் பிரதிவாதங்கள் இரு இனங்களுக்கிடையிலான முறுகலாக, நிரந்தரப் பிரிவாக மாறக் கூடிய ஆபத்து இருந்ததை (இன்னும் இருப்பதை) மறுப்பதற்கில்லை.

இதில் திருந்தவேண்டியவர்களாக இரு தரப்பினருமே இருக்கிறோம்.

நான் சொல்வது தமிழர் - முஸ்லிம்களாக அல்ல.

விஸ்வரூபம் படம் வெளிவருவதை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போராக.

கருத்து சுதந்திரம் எப்போது சுதந்திரமாகவே இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.
(எங்கள் உயிர்களை பறிக்கும் அளவுக்கு இல்லாதவிடத்தில் என்ற விடயத்தையும் இங்கே பதியவேண்டும்..)
வெளிவரவே கூடாது என்று வாதங்களை வைப்பவர்கள் சொல்கின்ற விடயங்கள், இஸ்லாம் சமயம் பற்றியும் முஸ்லிம் மக்கள் பற்றியும் படத்தில் மிகத் தவறாக சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இலங்கையில் இது பற்றி வாதிட்டவர்கள் பலர் இதுவரை இதைப் பார்க்கவில்லை.
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்பது போல.
ஆனால் பார்த்தவர்கள் சொல்வது ஆப்கன் தலிபான்கள் பற்றித் தான் இதில் சொல்லப்பட்டுள்ளது; இஸ்லாமிய மக்கள் பற்றித் தப்பாக சித்தரிக்கப்படவில்லை.
சமயம் என்ற ஒரே அடிப்படையில் இதைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது சரியாகுமா?

அடுத்து இதில் அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்?

இவ்வளவு காலமும் இத்தனை விவகாரங்கள், சலசலப்புக்கள், பிரித்தாளும் சதிகளால் வராத பிளவா இதனால் வந்துவிடப் போகிறது?
பாருங்கள், இந்த விவகாரத்தில் நான் விஸ்வரூபத்தை, கமலின் படைப்புரிமை ஆற்றலை வெளிப்படையாக ஆதரித்தும் என்னைப் பற்றி அறிந்த என் முஸ்லிம் நண்பர்கள் என்னுடன் இன்னும் பழகுவதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
அவர்களின் கருத்துக்கள் வேறுபட்டதாக இருக்கலாம்.
எதற்காக ஆதரவு என்பது சரியாகப் புத்தியில் ஏறினால் போதும்.

அடுத்தது தவ்ஹீத் ஜமாஅத் என்ற இந்த அமைப்பு.
இந்த அமைப்பும் அந்த ஜெய்னுலாப்தீன் என்ற கண்ணியமற்ற ஒரு பேச்சாளனும் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது, பல முஸ்லிம் நண்பர்கள் சொன்ன விடயம் இவர்கள் இஸ்லாமிய வட்டாரத்தில் அங்கீகரிக்கப்பட்டவர்களோ அல்லது மார்க்க ரீதியாகத் தலைமை தாங்குமளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களோ அல்ல என்பது தான்.

அப்படி இருக்கையில் இந்தப் பிரிவு எப்படி எல்லா இடங்களிலும் (இலங்கையிலும் கூட) ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சார்பாகத் தன் கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படலாம்?
இது இந்து மத மக்கள் மத்தியில் எப்போதுமே முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படாத விஸ்வ ஹிந்து பரிஷத், சங்க பரிவார், RSS போன்ற அமைப்புக்களை இந்து மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் அபத்தம் போன்றதல்லவா?
(மீண்டும் நான் எந்த மதமும் சாராதவன் என்பதை அழுத்தமாக இங்கே பதிகிறேன்)

இந்து சமய சூழலில் வளர்க்கப்பட்டவனாக இருந்ததால் நன்கு அறிந்த சமயமான அதில் காணப்படும் மூட நம்பிக்கைகளை முதலில் எதிர்த்தாலும், நான் தெரிவு செய்து சமய நம்பிக்கைகளை எதிர்த்துவந்திருக்கவில்லை.
எங்கே பிழை இருந்தாலும் அதைப் பகிரங்கமாக எதிர்க்கும் துணிச்சல் இங்கேயும் என்னை நேரடியாகப் பேச வைத்தது.
ஆனால், இதனால் எனது நண்பர்களை இழந்துவிடக் கூடாது என்பதால் தான் சில இடங்களில் அமைதி காத்தேன்.

இதில் தமிழர் எதிர் முஸ்லிம், கமல் எதிர் முஸ்லிம் என்ற வாதங்கள் எல்லாம் அபத்தம்.

கருத்து சுதந்திரம் எதிர் அரசியல் + போலி மதவாத சூழ்ச்சி என்பதே எனதும் நிலைப்பாடு.

தலிபான் தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று காட்டுவதில் என்ன தப்பு?
இதுவரை காலமும் அர்ஜுன், விஜயகாந்த் படங்களில் காட்டவில்லையா என்ற கேள்விக்கு சியர் தந்த எதிர்ப்பதில், இதில் அமெரிக்கர்களை நல்லவர்களாகக் காட்டியுள்ளார்கள் என்பதே.

சரி அந்தக் கோணத்தில் வரட்டுமே?
வந்து, பார்த்து எதிர்க்கலாமே? விமர்சன ரீதியாகத் தோற்கடிக்கலாம் தானே?
எத்தனை வேற்று மொழிப்படங்களில், தமிழர்களையே அல்லது இஸ்லாமியர்களையே தீயவர்களாக, தீவிரவாதிகளாகக் காட்டவில்லை?

இதற்குள் ஒருவர் நந்திக்கடல் - தமிழர் ஒப்பீடு வேறு...
இதுவரை அப்படி வராத மாதிரி.. சிரிப்பாக இல்லை?
அரச இயந்திரம் இதுகாறும் அப்படித்தானே செய்திகளைத் தருகிறது? பொறுத்துக்கொள்ள வில்லையா நாம்?
இந்த ஒப்பீட்டின் அடிப்படையே அபத்தம் என்று இதை ஆதரிப்பவர்களின் அறிவீனம் உணரவில்லையா?
இதை மேற்கோள் காட்டி ஒருவர் அனுப்பிய மடலை மறுதலித்தேன்.



ஒரு படைப்பு என்று வருகையில் எதிர்ப்பைக் காட்டலாம்; விமர்சன ரீதியாக சவால் விடலாம்.
ஆனால் வெளிவரவே கூடாது என்ற விதண்டாவாதமும் வெறுப்பும் ஏனோ?

முஸ்லிம் - தமிழர் என்ற பிரிவினையும் சண்டையும் எழுவதில் வேதனை தான்.. ஆனால் இதன் பின்னணி அரசியலில் உள்ள உண்மைப் பூதங்களை இனம் கானல் முக்கியம்.

நேற்றைய புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஞானி கேட்ட ஒரு கேள்வி கொஞ்சம் நியாயமாகப் பட்டது - தலிபான் மற்றும் ஏனைய தீவிரவாதிகள் உங்கள் சமயத்தை தமது அடையாளமாக, காவலாகப் பயன்படுத்துகிறார்களே? இதை முதலில் தடுக்கவேண்டியது நீங்கள் தானே?
இதனால் தானே அந்தத் தீவிரவாதிகளைப் படங்களிலோ செய்திகளில் காட்டும் போது இஸ்லாமிய சமயமும் அப்பாவி ம்சுலிம் சமூகமும் பாதிக்கப்படுகிறது?
இதைத் தடுக்க உலகளாவிய இஸ்லாமிய சமூகம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
இது எனக்கும் நியாயமான கேள்வியாகவே படுவதால் வினாவாகவே விடுகிறேன்.

அடுத்து, இலங்கை இஸ்லாமிய சமூகம் இன்றைய காலகட்டத்தில்  பெரும்பான்மையின் சில தீயசக்திகளால் எதிர்கொள்ளும் இன்னல்கள் மத்தியில் ஒன்றாய் வாழும் தமிழ் சமூகத்துடனும் ஒரு திரைப்பட விவகாரத்துக்காக மோதவேண்டுமா?
இதை விட மிக முக்கியமான விடயங்கள் பல இருக்கையில் அதற்கான போராட்டங்கள் எல்லாம இல்லாமல் இதற்காக மட்டும் அனைவரும் வரிந்துகட்டி இறங்கி இருப்பது, பெரும்பான்மையை விட சிறுபான்மையுடன் மோதுதல் இலகு என்பதாலா?

தமிழ் என்ற மொழியால் நாம் ஓரினம் தானே? சமயம் தானே அடையாளங்களை வேறுபடுத்துகிறது?
இதிலேயும் பிரிந்து நின்று தனித்துவம் என்று தனிமைப்படவேண்டுமா?

விஷ வித்துக்களைக் கக்குகின்ற தமிழ் சகோதரர்களும் உணரவேண்டிய ஒரு விடயம், சிறுபான்மைகள் மேலும் சிதறிவிடக் கூடாது என்பதையே.

மதங்கள் மனிதருக்காகவே தவிர, மனிதரைப் பிரித்து விடுவதற்காக அல்ல என்பதை நாம் இன்னும் உணரவில்லையோ என்று நினைப்பு மேலும் மனிதனாக என்னை தலைகுனிய வைக்கிறது.

இன்னமும் உரத்து சொல்கிறேன்...
கமல் என்ற கலைஞனின் கலைப்படைப்பான விஸ்வரூபத்தை ஆதரிக்கிறேன்.
அதன் வெளியீட்டை விரும்புகிறேன்.
அதேவேளை அதில் இஸ்லாமிய நண்பர்கள் சொல்வது போல, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டிருந்தால், அவர்களது அடையாளங்கள், சமயம் அவமரியாதை செய்யப்பட்டிருந்தால் (குறியீடாகக் கூட) அவர்களது எதிர்ப்பு நியாயமானதே என்பதயும் ஏற்றுக்கொள்வேன்.

-எண்ணத்தில் வந்துவிழுந்த வேகத்தில் வினாக்களையும் விளக்கங்களையும் பதிந்துளேன்.

கமல் ரசிகனாக அல்லாமல் ஒரு கலைஞன் தனது படைப்புக்களை எம்மொழியில் தருவதற்கு இனித் தயங்குவானே என்ற நினைப்பில் ஒரு கலை ரசிகனாக மிக கவலையுடனும் கோபத்துடனும் எதிர்பார்த்திருக்கிறேன்.

Post a Comment

12Comments

Please Select Embedded Mode To show the Comment System.*