January 21, 2013

ஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா?


அகில உலக சுப்பர் ஸ்டார் ஒபாமா தனது இரண்டாவது பதவிக்காலத்துக்காக நேற்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவில் எது மாறினாலும் சில விஷயங்கள் மாறவே மாறா...
குறிப்பாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டங்கள், பதவியேற்பு முறைகள், ஆட்சிக்கான வரம்புகளில் எந்தக் கொம்பன் வந்தாலும் மாற்றங்களைத் தன் இஷ்டப்படி செய்ய முடியாது.

மூன்றில் இரண்டு என்ன மூன்றில் மூன்று வந்தாலும் இப்படி யாப்பு, சட்டவாக்கங்களில் மாற்றம் செய்வதாக இருந்தால் நிறையப் படிகள் தாண்டி, கொங்கிரஸ், நீதிமன்றம் என்று நிறையப் பேரிடம் முறையான அனுமதி பெற்றேயாக வேண்டும்.

பாருங்கள், புதிய பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதி இடம்பெற்றேயாகவேண்டும் என்று விதிமுறைகள் இருப்பதால், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆன போதும் அமெரிக்க அதிபராக பராக் ஒபாமாவும், துணை அதிபராக ஜோ பைடனும் நேற்றுத் தமது பதவிகளை வெள்ளை மாளிகையில் ஏற்றுக் கொண்டார்கள்.

இன்று மீண்டும் மக்கள் முன்னிலையில் வைபவ ரீதியாகப் பதவி ஏற்கவுள்ளார்கள்.

அமெரிக்க வரலாற்றில் இரு தடவை பதவியேற்பது இது ஏழாவது தடவை.
இருபதாம் திகதி ராசியில்லை, எட்டாம் நம்பர் தான் ராசி, எனவே இருபத்தாறாம் திகதி பதவி ஏற்கிறேன் என்று ஒபாமா சொல்லவுமில்லை; அப்படி சொன்னாலும் அங்கே அது நடக்காது.

அதேபோல, இரண்டு தடவைகளுக்கு மேலே பதவியில் இருக்கப் போகிறேன் என்று ஒபாமா ஆசைப்பட்டாலும், அவருக்குக் குடும்பப் பலம், பெரும்பான்மைப் பலம், கொங்கிரசிலும் ஏக அங்கீகாரம் இருந்தாலும்... ம்ஹூம்...

இந்த இரண்டாம் தடவையுடன் அவர் மதிப்புக்குரிய முன்னாள் ஜனாதிபதியாக, விரும்பினால் ராஜதந்திரியாக வலம் வரலாம் அவ்வளவு தான்.

எவ்வளவு தான் உலகின் மிகப் பலம் வாய்ந்த பதவியாக, சகல அதிகாரங்களும் கொண்ட பதவியாக அமெரிக்க ஜனாதிபதிப்பதவி கருதப்பட்டாலும், அமெரிக்க அரசியலின் வரையறுக்கப்பட்ட மூன்று கட்ட அரசியல் அமைப்பில் ஜனாதிபதி என்ற பதவி ஒன்று. அவ்வளவு தான்.

நிறைவேற்றதிகாரம்
சட்டவாக்கம்
நீதித்துறை
The three branches of the Federal Government are the Executive Branch, which is the leader or president and his cabinet. The legislative Branch, which is congress. And the Judicial Branch which is the Supreme Court.

இந்த மூன்றும் சரியான அதிகார வரம்புகளுக்குட்பட்டு இயங்குவதால் தான், என்ன தான் சிக்கல்கள் வருமிடத்திலும், அமெரிக்காவின் ஆட்சி, அதிகாரம் மட்டும் உலகில் நிலையாக நடந்துகொண்டிருக்கிறது.

பார்க்கப்போனால் இந்த உறுதியான + சரியாக நடைமுறைப்படுத்தப்படும் யாப்பு அமைப்பினால் அமெரிக்காவை ஜனநாயகத்தை உறுதியாகப் பின்பற்றும் உண்மை நாடாக நாம் கருதலாம்.

(கடந்த வருட எங்கள் அமெரிக்க சுற்றுலாவின்போது, இந்த நடைமுறைகள், இவற்றுள் அடங்கியுள்ள சிறு சிறு பொறிமுறைகள், பிணக்குகள் தீர்த்துக்கொள்ளும் அணுகுமுறைகள் பற்றியெல்லாம் இரு நாட்கள் முழு விளக்கம் அளிக்கப்பட்டபோது அமெரிக்க ஜனநாயகத்தின் மீது உண்மையில் பிரமிப்பு ஏற்பட்டது)

ஜனநாயகக் கட்டமைப்புக்குத் தேவையான இந்த மூன்று பொறிமுறைகளும் சரியான முறையில் எங்கெங்கு அங்கீகரிக்கப்படுகிறதோ, அங்கே மக்களின் உணர்வுகளும் மதிக்கப்படும், நீதி, நியாயமும் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்...

இதுபற்றியெல்லாம் இலங்கையில் இவன் பேசுகிறானே என்று யாரும் ஆச்சரியப்படாதீர்கள்...

அமெரிக்க ஒபாமாவுக்கும், நம் இலங்கையின் கௌரவ மகிந்த மாமாவுக்கும் (என் போன்ற சின்னக் குழந்தைகளுக்கு மாமா) சமாந்தரக் கோடு வரைந்து ஒப்பிடுவது அண்மைக்காலமாக அரசியல் ஞானிகளின் பொழுதுபோக்காக இருந்துவருகின்றது.

இது ஏன் என நேற்று கொஞ்சம் மண்டையைக் கிளறி ஆராய்ந்து பார்த்தால்... உலகின் மிக சக்திவாய்ந்த பதவி இப்போது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நம்ம ஜனாதிபதிப் பதவி தான்...
பின்னே....

நிறைவேற்றதிகாரம்
சட்டவாக்கம்
நீதித்துறை
ஆகிய மூன்றுமே இப்போது ஒரே இடத்தில்...

அதுவும் ஜனநாயக முறைப்படியே அந்த சக்தி வரம்புகளையும் தன் வசப்படுத்திய சாதனை வேறு யாருக்குக் கைவரும்?

J.R.ஜெயவர்த்தன உருவாக்கிய 'ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மட்டுமே மாற்ற முடியாத' மற்றெல்லாம் செய்ய முடிந்த நிறைவேற்றதிகார ஜனாதிப் பதவியை சரி நேர்த்தியாகப் பாவிக்கத் தெரிந்த ஒருவராக ஜனாதிபதி மகிந்தவை நான் காண்கிறேன்.

யார் யாரை எப்படி, எந்த இடங்களில் பயன்படுத்தாலம் என்ற Master Mind இந்த MR க்கு நன்றாகவே தெரிந்திருகிறது.
அண்மையில் கூட நான் ஒரு நிலைத் தகவலைப் பகிர்ந்திருந்தேன்..

"கருணாநிதியை எல்லாம் அரசியல் சாணக்கியர் என்று சொன்னவங்க நம்ம ராஜாவை பார்த்தா என்ன சொல்லுவாங்க?சாம,தான,தண்ட,பேதம் நான்கையும் சரியாகப் பயன்படுத்தும் ஒரே அரசியல் ஞானி.மூன்றில் ரெண்டு எல்லாம் எந்த மூலைக்கு...திவிநெகும என்ன நீதிமன்றம் என்ன.. இன்னும் வரும் பாருங்கோ....
கொற்றவ நின் நாமம் நீண்டு வாழ்க."

அதே போல பெரிய பெரும்பான்மை இல்லாமல் தேர்தலில் வென்ற பின்னர், மூன்றில் இரண்டாக நாடாளுமன்றில் பெரும்பான்மையை மாற்றிக் காட்டக் கூடிய ஆற்றல் எத்தனை பேருக்கு வரும்?
சிலர் பதவிக்கு, சிலர் பணத்துக்கு, சிலர் பயத்துக்கு, இன்னும் சிலர் எதுவும் இல்லாமலே... சில அரசியலில் ஆதரவு கொடுத்தால் தான் ஆதரவு என்பதல்ல.. எதிர்க்காமல் இருந்தாலே ஆதரவு தான்.

இது ஜனாதிபதிக்கும் அவர் தம் ஆலோசகர், ஆதரவு வட்டத்துக்கும் நன்கு தெரிந்துள்ளது.
இது அரசியல் ரீதியான , ராஜதந்திர வெற்றி.

சிறுபான்மைக் கட்சிகள் அத்தனையும் சின்னச் சின்னத் துண்டுகளாக உடைத்ததில் ஆரம்பித்த வெற்றி, எல்லாக் கட்சிகளையும், தனது கூட்டணியில் உள்ள கட்சிகளையும் கூட விட்டுவைக்காமல் தொடர்கிறது.

தனியாக நின்றால் தோல்வி என்ற நிலையிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது தனிப் பெரும் கட்சியாக நிற்கிறது. ஏனைய கட்சிகள் எல்லாவற்றிலும் நான்கைந்து குழுக்கள் அல்லது கோஷ்டிகள்.

எதிரணியில் எதிர்ப்பதற்கு தோதான ஒருவர் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாகத் தொடரும் ஜனாதிபதிக்கு , எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை இவருக்கு எந்தவொரு தொல்லையுமில்லை.
இவர் ஆட்டிவைக்கும் தாளம்+ராகத்துக்கு அவர் ஆடுகிறாரோ என்ற சந்தேகம் எல்லோருக்குமே எப்போதுமே இருந்து வருகிறது.

மறுபக்கம் ஆளும் அணியிலும் அடுத்த இடத்தில் ஒருவர் இல்லை என்பது இன்னொரு முக்கியமான விடயம்.
யாரையும் இவர் வளர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டைத் தாண்டி, யாரும் வளரவும் இல்லை; வளர முனையவுமில்லை துணியவுமில்லை என்பதே மிகப் பொருத்தமானது.

இப்போது போகிறபோக்கில், அண்மையில் நடந்த நிகழ்வுகள் (நீக்கங்கள், மாற்றங்கள், விலக்கல்கள், விளக்கங்கள்) எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் மன்னர் இன்னும் மன்னராகவே, இன்னும் ஒரு தசாப்தத்துக்குத் தொடர சிக்கல்கள் (சட்டத்தினால் கூட) இருக்காது என்றே தோன்றுகிறது.

அதற்குப் பிறகு என்ன, தசரதருக்குப் பிறகு ராமரும், ராஜராஜருக்குப் பிறகு ராஜேந்திரரும் வருவதில் ஆச்சரியம் இருக்காதே? அதற்கான திட்டமிடல்கள் இப்போது மாற்ற எண்ணப்பட்டுள்ள புதிய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாம் என்கின்றன பட்சிகள்..

மூன்றாவதாக நீதித்துறை...
இது பற்றி நானும் சொல்லத் தான் வேண்டுமா? அண்மையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க (இந்தக் குடும்பப் பெயர் யாருக்கு இருந்தாலும் நம்ம MRக்குப் பிடிக்காதோ?) பதவி அகற்றப்பட்டதன் மூலம், இலங்கையின் தற்போதைய ஆட்சியில் நேரடியாக ஜனாதிபதியினால் வசப்படுத்தப்படாமல் இருந்த நீதித்துறையும் நேரடியாகக் கட்டுப்பாட்டுக்குள்.

நீதிமன்றம் vs நாடாளுமன்றம் மோதலில் ஜனாதிபதியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே எனினும், உள்நாட்டு, சர்வதேச எதிர்ப்புக்களை அவர் புறந்தள்ளிய விதமும், எந்த ஒரு எதிர்ப்பையும் கணக்கில் எடுக்காமல் புதிய பிரதம நீதியரசராக அவருக்கு வேண்டப்பட்ட மொஹான் பீரிசை உடனடியாக நியமித்த விதமும் வேறு எந்த ஒரு அரச தலைவராலும், எந்த ஒரு நாட்டிலும் சாத்தியப்படக்கூடிய விடயமல்ல.

இப்போது சொல்லுங்கள்...

யாரை யாருடன் ஒப்பிடுவது?

சுகாதார சீர்திருத்தம், சமூக நடைமுறை சீர்திருத்தங்கள், ஓய்வூதிய சிக்கல்கள், ஏன் ஆப்கானிலிருந்து படை வெளியேற்றத்துக்கே கொங்கிரஸ் அவையின் ஆதரவையும், நீதிமன்ற அனுமதியையும் எதிர்பார்த்திருக்கும் ஒபாமா நம்ம தலைவருக்கு ஈடா?

மகிந்தரை ஆசிய ஒபாமா என்பதை விட, முடிந்தால் ஒபாமா - முடிந்தால், அமெரிக்க மகிந்த ஆகட்டும்...

யாரு கிட்ட... ;)

பிற்சேர்க்கை - ஒபாமா சமூக வலைத்தளங்களை சரியான நுட்பத்தோடும் சாதுரியத்தோடும் தன் அரசியல் வெற்றிகளுக்குப் பயன்படுத்தியிருந்தார்.

ஆனால் எங்கள் அரசியல் மேதை எல்லாவற்றிலும் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு தான் சமூக வலைத்தளங்கள் பக்கம் இளையவரோடு இணைகிறார்.
வெற்றிகள் தானாகத் தேடி வரவேண்டும், தான் தேடிப் போகக்கூடாது என்பதை சிம்போலிக்காக இவரது ட்விட்டர் வருகையும் பேஸ்புக் பிரவேசமும் உணர்த்துகிறதோ?
Twitter.com/PresRajapaksa
மன்னர் யாரையும் இதுவரை தொடரவில்லை; ஒபாமாவைக் கூட, ஆனால் இவரைத் தொடர்வோர் 642.

எப்பூடி ;)

2 comments:

Komalan Erampamoorthy said...

கஞசிபாய்: இவரு வாழ்த்துரார அல்லது கால வாருரார !!!!!!! அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்

Anonymous said...

////ஒபாமா - முடிந்தால், அமெரிக்க மகிந்த ஆகட்டும்...////
////எப்பூடி ;) /////

அடியிலிருந்து நுனி வரை இப்படியும் சொல்லிவிடலாமென்று உணர்த்தி விட்டீர்கள் அண்ணா!!!!
சூப்பர்.........

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner