மப்பிள், 'மப்'பில் & மப்பில்

ARV Loshan
6

ஹர்ஷுவுக்கு அப்பிள் சாப்பிட விருப்பம், ஆனால்  அப்பிள் என்று தெரிந்தால் சாப்பிட மாட்டான்...

ஒரு நாள் விருந்தகம் ஒன்றுக்கு சாப்பிடப் போயிருந்தோம்..
சாப்பாட்டுக்குப் பின்னர் ஒவ்வொருவரும் வேறு வேறு dessert order பண்ணி சாப்பிடும் நேரம், இவன் தனக்குப் பிடித்த ஏதோ ஒன்றை உண்டு முடித்துவிட்டு, தன்னுடைய தாயாரின் Fruit salad ஐயும் பதம் பார்க்க ஆரம்பித்த நேரத்தில் அவன் குறிவைத்து பப்பாளி மற்றும் மாம்பழத் துண்டுகளையே எடுத்துக் கொண்டிருந்தான்.

மனைவி ஒரு அப்பிள் துண்டத்தை எடுத்து வாயில் வைத்தவுடன் இது என்ன என்று கேட்டான் ஹர்ஷு.

மனைவி அப்பிள் என்று சொல்ல முதல் நம்ம ஐடியா மூளை மின்னல் வேகத்தில் செயற்பட்டு "மப்பிள்" என்று ஒரு வார்த்தையை விட்டது.

"அது என்னப்பா புது Fruit?" என்று அவன் உடனேயே துருவிக் கேட்க, (நான் Mango + Apple = Mapple என்று தான் உடனே அப்பிடி சொன்னது) சமாளித்து அது ஒரு வித்தியாசமான பழம் என்று சொல்லிட்டேன்.

"அப்பா எங்கட ஆர்ப்பிக்கோல அது கிடைக்கும் தானே? ஓகே.. அம்மா எனக்கு அடிக்கடி மப்பிள் வாங்கித் தாங்க" என்று ஹர்ஷு தனக்குப்  பிடித்த புதிய பழத்தைத் தொடர்ந்து சுவைக்கத் தொடங்கிட்டான்.

இப்போதும் எங்கள் வீட்டில் அப்பிள் வாங்கினாலும் அவனுக்குக் காட்டாமல் தோலை சீவித் தள்ளி மப்பிள் ஆக மாற்றி அவன் வாய்க்கு சுவைக்கக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் கொடுமை என்னவென்றால், அண்மையில் பாடசாலைக்கும் இவனுக்கு சிற்றுண்டியாக மனைவியார் மப்பிள் கொடுத்துவிட்டிருக்கிறார்.
ஹர்ஷுவின் மிகப் பிரியமான கொள்கையான Sharing is the best thing in the world என்பதற்கிணங்க நண்பர்களுக்கும் கொடுத்திருக்கிறார்.

இப்போ அவர்கள் வீடுகளிலும் அந்த நண்பர்கள் தங்கள் அப்பா, அம்மாமாருக்கு மப்பிள் கேட்டு தொல்லையாம் ;)

நம்ம ஐடியாவுக்கு காப்புரிமை எடுக்கணும் போல இருக்கே.

--------------------

மடிக் கணினியும் ஐபோனும் தண்ணி பட்ட பாடு நம்ம ஹர்ஷுவுக்கு.
சில Apps பற்றி அவனிடம் கேட்டுக் கற்கும் அளவுக்கு நம் நிலைமை.

மடிக் கணினியைத் திறந்து கூகிள் பண்ணியே சகல விடயங்களையும் தேடி அறிகிறான். நானும் மிக அவதானமாக Safe search On போட்டே வைத்துள்ளேன்.
ஏதாவது ஒரு விஷயம் பற்றிப் பேசினால் உடனேயே அதைப் பற்றித் தேடி அசத்தியும் விடுகிறான்.

பிரான்சின் ஈபில் கோபுரம், உலக நாடுகளின் எண்ணிக்கை, Samsung Galaxy, iPhone 5, கடல் படம் பற்றி, A.R.ரஹ்மான், சில கார்ட்டூன்களின் தயாரிப்பு நிறுவனங்கள் இவை பற்றி கூகிளிலும், கிரிக்கெட்டில் இந்த SLPL, Player Profiles, IPL முதல் எனக்கே இன்னும் சரியாகத் தெரியாத Big Bash League இவ்வளவு ஏன்  Carribean T20 League பற்றியும் அதில் விளையாடும் அணி வீரர்கள் பற்றியும் Cricinfo மற்றும் இன்னும் சில தளங்களிலும் தேடி அசத்தி விடுகிறான்.

அதிலும் உலக வரைபடம், நாடுகள், நகரங்கள், கொடிகள் பற்றித் தேடுவது இவனுக்கு மிகப்பிடித்தது.

வயதுக்கு மீறிய செயல் என்றோ கெட்டுவிடுவான் என்றோ நான் நினைத்து இதைத் தடுப்பதில்லை.

எங்கள் காலத்தில் நாங்கள் புத்தகங்கள் தேடி வாசித்தது இப்போது என் மகன் காலத்தில் கணினியும் தேடியந்திரமும்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர்  நான் வியாழன் விடியலுக்காக அழிந்துபோன 'லெமூரியா' கண்டம் பற்றித் தேடிக் கொண்டிருந்தேன்...
இவன் வந்து எட்டிப் பார்த்தான் , ஒரு சில வினாடிகள் தான்.

அதற்குப் பிறகு கொஞ்ச நேரத்துக்குப் பிறகு "அப்பா The lost land எங்கேயப்பா இருக்கு? மப்பில் காணேல்லையே ?"  என்ற ஹர்ஷுவிடம் "The lost land ?? எங்கேடா பார்த்தாய்? " என்று கேட்டேன்.

"அதானப்பா நீங்கள் கூகிள் பண்ணித் தேடிக் கொண்டிருன்தீன்களே.. The lost land  Lemuria அதான் "
கொஞ்சம் ஆச்சரியப்பட்டுப் போனாலும், அவனுக்குப் புரிகிற மாதிரி குமரிக்கண்டம் ஆழிப் பேரலையால் அழிந்த கதை பற்றி சொல்லித் தூங்கச் செய்தேன்.

அடுத்த நாள் இது பற்றிய காணொளி ஒன்றை அனுப்புகிறேன் என்று நம்பிக்கையும் கொடுத்தேன்.
மறுநாள் வேலை மும்முரத்தில் மறந்தே போனேன்.

மாலையில் வீடு திரும்புகிறேன்; வாசல் வரை வந்து வரவேற்ற ஹர்ஷு " என்னாப்பா நீங்க மறந்திட்டீங்களே.. வாங்கோ நான் லப்பில் The lost land Lemuria Video வச்சிருக்கிறேன்"

ஆடை மாற்றி அலுப்புத் தீர்க்க முன்னர் அவன் காட்டி, தன் மழலையில் வழங்கிய விரிவுரையில் ஆழிப்பேரலை, குமரிக்கண்ட அழிவு எல்லாமே புதுசாய்த் தெரிந்தன...

--------

வியாழக்கிழமை இரவு,

Sports week நிகழ்ச்சி ஒளிப்பதிவு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பத்தரமுல்லை சந்திக்குக் கொஞ்சம் முன்னதாக திடீரென குறுக்கு வீதியொன்றின் வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அப்படியே என் வாகனத்தை உராஞ்சுகிற மாதிரி வந்து வீதியின் மறுபக்கப் புற்றரையுடன் மோதி நின்றது.
சடுதியாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து விழுந்தவருக்கு என்னாச்சு என்று பார்க்க ஓடினேன்.

கிட்டப் போகின்ற நேரமே அப்படியொரு நெடி. சாராயம்.
அண்ணன் புல் மப்பில் என்று புரிந்துபோனது.

சரி பாவம் என்று மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தி, சற்று சிராய்ப்புக் காயங்களுடன் கிடந்த அவரை எழுப்பினால் மனிதர் தள்ளாடும் நிலையில். காயங்கள் + வலியுடன் தாறுமாறாக என்னை ஏச ஆரம்பித்துவிட்டார்.

முதலில் நானே தான் தன்னை ஊற்றித் தந்து புல்லா மப்பு ஏற்றியதாக சொன்னவர், பிறகு சத்தம் கேட்டு வந்த அண்டை அயலாரைப் பார்த்தவுடன் நான் தன்னை மோதித் தள்ளி விட்டதாக உளற ஆரம்பித்தார்.

இதெல்லாம் உனக்குத் தேவையாடா லோஷா என்று என்னை நானே நொந்து கொள்ள ஆரம்பித்தபோது தான் போலீசார் வந்தார்கள். அப்பாடா என்று அவர்களுக்கு நடந்த கதையைச் சொல்லி இந்தக் குடிகாரனாச்சு நீங்களாச்சு என்று கிளம்பிய நேரம், அந்த மப்புக் கேஸ் எனக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தது.

தலையை சுற்ற ஆரம்பித்தது..
ஒருவாறு கிளம்பி வந்துவிட்டேன்.

என்னடா கேஸ் இது... ஒரு வேளை நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் + கஜினி கலந்த கலவையோ?

-----

மப்பு பற்றிச் சொல்லும்போது தான் இன்னொரு சம்பவம்...
நேற்றிரவு தூங்குகிற நேரம்,

ஹர்ஷு " அப்பா, சிகரட் குடிக்கிறதால என்னென்ன வருத்தம் வரும்?"
அவனுக்குப் புரிகிற மாதிரி எல்லா நோய்களையும் சொன்னேன்.

"அவ்வளவு Bad disease எல்லாம் வருதெண்டு தெரிஞ்சும் ஏனப்பா Arpicoல சிகரெட் விக்குறாங்க?"

பதில் சொல்ல முடியவில்லை.



Smoking and Non smoking







Post a Comment

6Comments

Please Select Embedded Mode To show the Comment System.*