தமிழ்நாட்டில் தடை நீங்கியது..
எத்தனை திருப்பங்கள், குழப்பங்கள், திடுக் திடுக் கணங்களைத் தாண்டி இந்தத் தீர்ப்பு?
ஒரு மாநில அரசின் முட்டாள் தனமான வாதங்களை எதிர்த்து கமலின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வைத்த நியாயமான வாதங்கள் வென்றிருக்கின்றன.
மதவாதிகளைத் (அடிப்படை இல்லாமல் படம் பார்க்காமலே, இதிலே ஆபத்துள்ளது என்று முதலில் இருந்து கடைசிவரை குரல் எழுப்பிய சிலரை மட்டும்) தூண்டி விட்டு அப்பாவிகளை மனம் நோகச் செய்து அரசியல் நாடகம் ஒன்றைத் திரைப்பட உரிமைகளுக்காக தமிழ்நாட்டு அரசாங்கம் நடத்தியிருக்கிறது என்று பெரும்பாலானவர்கள் நம்ப நியாயம் இருக்கிறது.
ஆனால் கமல் என்ற ஒரு பெரிய நடிகனால். படைப்பாளியால் தனக்குக் குவிந்த அனுதாபம், ஆதரவு, தன்னிடம் பக்கபலமாக இருந்த பணபலம், புத்திஜீவிகளின் ஆதரவு , நுணுக்கமான ஆளுமையும் அணுகுமுறையும் என்று பல காரணிகளை வைத்துப் போராடி இந்தத் தடையை நீக்கி விஸ்வரூப வெற்றியை அடைய முடிந்தது.
இது அவருக்கும் அவரது விஸ்வரூபம் திரைப்படத்துக்கும் பெரிய இலவச விளம்பரமாகவே இனி அமைந்துவிடப் போகிறது.
படம் என்ன தான் மரண மொக்கையாகவே இருந்தாலும் கூட, இனி கமலின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, கருத்து வெளிப்பாட்டின் ஆதரவாளரும் கூட தங்களுக்கு ஏற்பட்ட ஒரு அவமானமாக, ஒரு சவாலாகக் கருதி விஸ்வரூபத்தை வெற்றியடைய வைப்பார்கள் என்பது நிச்சயம்.
ஆனால் இதே மாதிரியான தடை, போராட்டம், எதிர்ப்பு விளையாட்டுக்கள் இனியும் இளைய, புதிய படைப்பாளிகளையும் பதம் பார்க்கையில் அவர்களால் இவ்வாறு உத்வேகத்துடன் போராட முடியுமா?
அவர்களின் முடக்கங்கள் நல்ல படைப்புக்களை முடக்கி விடும் அபாயமும் இருக்கிறது.
இதற்கெல்லாம் ஒரே வழி துப்பாக்கி படம் பற்றிய சர்ச்சைகளுக்கு தமிழக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - திரைப்படத்தின் கருத்துக்கள் சொல்லப்படும் விடயங்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்கு தணிக்கை சபையில் மேன்முறையீடு செய்வதே சிறந்த வழி என்பதே இனித் தொடரப்படவேண்டும்.
விஸ்வரூபம் பற்றிய வழக்கு தமிழகத்தில் கமல் தரப்புக்கு, திரைப்பட வெளியீட்டுக்கு சாதகமாக வந்தவுடன் நான் பதிந்த Facebook status -
கலை+கருத்து வெளிப்பாடு வென்றது; அரசியலும் அவதூறும் தோற்றது.
மதமும் மார்க்கமும் இங்கே அரசியலுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு.
இதை முன்பிருந்தே நான் நண்பர்களிடம் மறக்காமல் சொல்லிவந்தேன்.
இனியும் தேவையற்ற சீண்டல்கள் வேண்டாம்.
இலங்கையிலும் சிக்கல்கள் இருக்காது என்று நம்பியிருப்போம்.
காரணம் தணிக்கை சபைத் தலைவர் தன்னைப் பொறுத்தவரை விஸ்வரூபத்தில் எந்தவொரு சர்ச்சையும் இல்லை என்றிருக்கிறார்.
நல்ல முயற்சிகளும் நம்பிக்கையும் உண்மையும் என்றும் தோற்பதில்லை.
இலங்கைத் திரைப்படத் தணிக்கை சபை ஏற்கெனவே பச்சைக் கொடி காட்டி இருந்தாலும் இங்கேயும் எழுந்த முஸ்லிம் தரப்பு எதிர்ப்புக்களால் சற்று ஒத்தி வைத்துள்ளார்கள்.
தமிழகத் தீர்ப்புக்காக இவர்களும் காத்திருந்ததாகப் பட்சிகள் கூறியிருக்கின்றன.
எனவே நாளை படம் இலங்கையில் திரையிட ஓகே சொல்லப்படலாம் என நம்பப்படுகிறது.
காரணம் வீரகேசரிக்கு இலங்கை தணிக்கை சபையின் தலைவர் காமினி சுமனசேகர வழங்கிய பேட்டியில் சில விடயங்களைத் தெளிவாக சொல்லியுள்ளார்.
கேள்வி: இலங்கை தணிக்கை சபை என்ற வகையில் விஸ்வரூபம் தொடர்பில் உங்களுடைய கருத்தினை கூற முடியுமா?
பதில்: என்னைப் பொறுத்தவரையில், திரைத்துறையைச் சார்ந்தவன் என்ற ரீதியில் விஸ்வரூபம் திரைப்படத்தில் பிழை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் இல்லை.
இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்படுமா? தணிக்கை சபை விளக்கம்
காத்திருப்போம்....
ஆனால் எதிர்ப்புத் தெரிவிக்கும் தரப்பானது மேலிடம் வரை அழுத்தம் கொடுக்குமோ என்ற நிலை தான் யோசிக்க வைக்கிறது.
இப்போது இருக்கும் நிலையில் இலங்கையின் முஸ்லிம் சமூகமானது எல்லாப் பக்கமிருந்தும் அழுத்தங்களை பெரும்பான்மையிடமிருந்து அடைந்துகொண்டிருக்கும் நிலையில் (ஹலால், பள்ளிகள் உடைப்பு, பொது பலசென விவகாரங்கள் என்று பலப்பல) அவர்கள் இந்த விடயத்திலாவது வென்று காட்ட, அல்லது தங்கள் உணர்வுகளைக் கொட்ட நினைப்பார்கள்.
ஆனால் இந்த விஸ்வரூப விவகாரமானது சாதாரண மக்கள் மத்தியில் பெரிதாக ஆழமாகப் பேசப்படாவிட்டாலும் இணைய வெளியில், சமூக வலைத்தளங்களில் பெரும் மோதலையும், அமைதியற்ற சூழ்நிலையையும் கசப்புணர்வுகளையும் ஏற்படுத்துவிட்டிருக்கிறது.
இது மாறா வடுக்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றிய சில கேள்விகள், தெளிவாக்கங்கள், மற்றும் புரிதல்களைப் பதியவேண்டிய அவசியம் ஒரு ஊடகவியலாளனாகவும், கருத்து சுதந்திரத்தை மதிப்பவனாகவும், நண்பர்களாகப் பலருடனும் பல மட்டத்தில் பழகுபவனாகவும், ஒரு மனிதனாகவும் பதியவேண்டி இருக்கிறது.
அதை நாளை (இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்பட்டால் எப்படியும் மாலையாகும் தானே?) விரிவாகப் பதிகிறேன்.
அதுவரை... ஒரேயொரு விடயம்...
விஸ்வரூபம் திரைப்படம் மற்றும் கமலுக்கான எனது ஆதரவு வெளிப்படையாகவே இருந்தது. காரணத்தையும் நான் மிகத் தெளிவாக சொல்லி இருந்தேன்.
ஒரு கருத்து, கலை வெளிப்பாட்டுக்கான சுதந்திரமாக இதை நான் பார்த்தேன்.
ஒரு படைப்பு வெளியான பின்னரே அதைப் பற்றிய விமர்சனங்கள், எதிர்வினைகளால் அதை எதிர்க்கலாம் அல்லது ஆதரிக்கலாம்.
மற்றும்படி எந்த நல்ல உள்ளம் கொண்டவரையும் எதிர்க்கக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தேன்.
ஆனால் குதர்க்கம் பேசுவோர் மற்றும் வேண்டுமென்றே பிரிவினைவாதம் பேசியும் பேதம் பார்த்தும் தடி என்று கோஷம் இட்டோரையும் நான் பகிரங்கமாகவே எதிர்த்திருந்தேன்.
என் நண்பர்கள் யாராயினும் புரிந்துகொண்டார்கள்; புரிந்துகொள்ளாதவர் என்னையும் சரியாக அறிந்து கொள்ளாதோரே.
இனியும் மோதல்கள், குத்தல்கள், விஷமப் பிரிவினைகள் மற்றும் விதண்டாவாதப் பிளவுகள் வேண்டாம்.
நாளை 'விஸ்வரூபம்; தமிழகத்தில் பார்த்து விமர்சனங்கள் வரட்டும்... இங்கே ஆறுதலாகத் தெரிந்து, தெளிந்து கொள்வோம்.