December 20, 2012

இலங்கை - நம்பிக்கை & இந்தியா - புதியதா?


உலகம் நாளைக்கு அழியப்போகுதாம்... இன்று தான் இறுதியாக ஒரு முழு நாளும் என்று வரும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை.

தற்செயலாக அழிந்தாலும், அதற்கு முன்னதாக இறுதியாக ஒரு கிரிக்கெட் இடுகை போடலாமே னு தான்..... ;)

கடந்த வாரம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடுத்தடுத்த நாட்களில் முடிவுக்கு வந்திருந்தன.

நாக்பூரில் இந்தியா வென்றால் தொடர் சமப்படும் என்ற நிலையில் ஆரம்பித்த இந்திய-இங்கிலாந்து  டெஸ்ட் போட்டி , முதல் நாளிலிருந்தே ஆமை வேக ஓட்ட வேகத்துடன் நகர்ந்து, மிகப் பரிதாபகரமான சமநிலை முடிவும், இந்தியாவுக்கு எட்டு வருடங்களில் சொந்த மண்ணில் கிடைத்த முதலாவது டெஸ்ட் தொடர் தோல்வியையும், இந்தியாவுக்குத் தமது அணி, தலைமை, சொந்த மண் அனுகூலங்கள் ஆகியவற்றை சுய பரிசோதனை செய்துகொள்ளும் தேவையையும் வழங்கி இருக்கிறது.

இதன் பின் எழுந்த சில முக்கிய கேள்விகள் / குழப்பங்கள்....

தோனியின் தலைமைத்துவம் மாற்றப்படுமா? (குறைந்தது டெஸ்ட் போட்டிகளிலாவது)
சச்சின் எப்போது ஓய்வை அறிவிப்பார்?
அல்லது தேர்வாளர்கள் அவருடன் 'பேசுவார்களா'?
சேவாக்கின் நிலை?
இந்தியப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆடுகளங்கள்....

இவை பற்றித் தேவையான அளவு விரிவாக 'தமிழ் மிரரில்' ஒரு நீளமான கட்டுரை எழுதியுள்ளேன்..
வாசியுங்கள்.. கருத்திடுங்கள். (இங்கே அல்லது அங்கே)


இந்தியா இனி: தோல்வியும் டோணியும் & சச்சின் இனியும்???மாறுபட்ட கருத்துக்களை நீங்கள் கொண்டிருந்தால் அது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழி சமைக்கும்.

இன்று ஆரம்பிக்கும் Twenty 20 தொடர் இன்னும் இந்தியாவின் இளம் வீரர்களுக்கான மேடையாக அமையவுள்ளதுடன், தோனிக்கான தனிப்பட்ட தலைமைத்துவப் பரீட்சையாகவும் உள்ளது.
ஆர்வத்துடன் அவதானிக்கக் காத்திருக்கிறேன்.

-------------

ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் டெஸ்ட் போட்டி இலங்கை அணிக்கு பெரியதொரு சவாலை வழங்கி இருந்தது.

இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் எந்தவொரு டெஸ்ட் வெற்றியும் பெறாத இலங்கை அணிக்கு (இதுவரை ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் வைத்து மட்டுமே இலங்கையால் எந்த ஒரு டெஸ்ட் வெற்றியையும் பெற முடியவில்லை) , அதற்கான அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த முரளிதரனுக்குப் பிறகு, அந்த பொற்கால அணியில் இருந்த நான்கு முக்கிய வீரர்களான மஹேல, சங்கக்கார, டில்ஷான், சமரவீர ஆகியோரின் இறுதி ஆஸ்திரேலியத் தொடராக இந்தத் தொடர் அமையக்கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.


மஹேல ஜெயவர்த்தன இந்தத் தொடரின் பின்னர் தலைமையிலிருந்து விலக இருப்பதாக அறிவித்த  பின், அவர் மீதும் மத்தியூஸ் மீதும் மஹேல மீதும் கூர்ந்த அவதானங்கள் திரும்பியுள்ள நிலையில் ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் இலங்கை எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும்? எப்படித் தோற்கும் என்று விமர்சகர்கள் மட்டுமல்ல இலங்கை ரசிகர்களும் கூடக் காத்திருந்தார்கள்.

இலங்கையின் பந்துவீச்சு ஒன்றும் வெளிநாடுகளில் பெரிதாக டெஸ்ட் போட்டிகளை வென்று தரக்கூடிய உலகத் தரம் வாய்ந்த ஒன்று அல்ல.
ஆனால் ஹேரத் இருக்கிறார். உலகின் சிறந்த துடுப்பாட்ட வரிசைகளையும் தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறார்.

தென் ஆபிரிக்காவிலே இப்படி ஒரு பந்துவீச்சு வரிசையை வைத்துக்கொண்டு தான் இலங்கை ஒரு சரித்திரபூர்வ டெஸ்ட் வெற்றியைப் பெற்றது.
இலங்கையின் அதிகம் அறிமுகமில்லாத வேகப்பந்துவீச்சாளர்கள் திடீரென ஆஸ்திரேலியர்களையும் தடுமாற வைக்கக்கூடும்.

இப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், தென் ஆபிரிக்காவிடம் கண்ட  டெஸ்ட் தொடர் தோல்வியானது ஆஸ்திரேலிய அணியை விழிப்படையவும், பொன்டிங்கின் ஓய்வின் பின்னதான புதிய சகாப்தத்தின் முதல் டெஸ்ட்  போட்டி என்பதால் உத்வேகமாக விளையாடவும் வைத்திருந்தது.

முதலாம் இனிங்க்ஸ் இலங்கையின் பந்துவீச்சு 'வழமையான வெளிநாட்டு மண்ணில் இலங்கையின் பந்துவீச்சு'.

500 ஓட்டங்கள் பெற வாய்ப்பு இருந்தும் அதற்கு முன்னதாகவே கிளார்க் ஆஸ்திரேலிய அணியின் இனிங்க்சை நிறுத்தியது, தகுந்த தீர்க்கதரிசனம் என்று இலங்கையின் நான்காவது இனிங்க்சின் பொறுமையும், இடை நடுவே அச்சுறுத்திய மழையும் மட்டுமல்லாமல் முதலாம் இனிங்க்சிலேயே காயமடைந்து வீழ்ந்த வேகப் பந்துவீச்சாளர் பென் ஹில்பென்ஹோசின் உடல் தகுதியும் காட்டியிருந்தன.

இலங்கை அணியின் முதலாம் இனிங்க்ஸ் துடுப்பாட்டத்தில் டில்ஷான் - மத்தியூசின் இணைப்பாட்டம் தான் மிகத் தீர்மானம் மிக்கதொன்று.
இதுவரை எந்தவொரு வீரரும் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டைச் சதம் பெற்றதில்லை. சங்கக்கார கடந்த தொடரில் ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் போராடிப் பெற்ற 192 ஓட்டங்கள் தான் அதிகபட்சம்.

டில்ஷானின் 147 ம் அதற்கு இணையான ஒன்று தான்.

ஆடுகளத் தன்மையை புரிந்து அவர் ஆடிய விதமும், மத்தியூசுடன் சேர்ந்து அமைத்த இணைப்பாட்டமும் இலங்கையின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கும் அடுத்த போட்டிகளுக்கு உற்சாகம் கொடுக்கக் கூடியவை.

முதலாம் இனிங்க்சில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய 109 ஓவர்களும் இரண்டாம் இன்னிங்சின்  119 ஓவர்களும் உண்மையில் ஆரோக்கியமானவை.

காரணம் சிடிளின் இரண்டு இன்னிங்க்ஸ் பந்துவீச்சும் (பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சையைத் தவிர்த்து) எந்த ஒரு தரமான அணியையும் சிதைத்துவிடக் கூடியது.

அதேபோல முக்கியமான மஹேல, சங்கா (இரண்டாவது இனிங்க்ஸ் அரைச்சதம் தவிர) இருவரின் பெரியளவு பங்களிப்பில்லாமலேயே இத்தனை ஓவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் தாக்குப்பிடித்தது பெரிய விஷயமே.
ஆனால் மஹேல கொஞ்சம் நின்று ஆடி இருந்தால் வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெற்றிருக்கலாம்.

இந்தியாவின் சச்சினின் துடுப்பாட்டம் சரிந்துகொண்டே போவது போல, மஹேலவின் துடுப்பாட்டமும் தளர்ந்து கொண்டு வருகின்றது.
குறிப்பாக வெளிநாட்டு மண்ணில்...
தம்பி கண்கோன் கோபிகிருஷ்ணா இதுபற்றி விரிவாக ஆராய்ந்து அலசி இட்டுள்ள ஆங்கிலப்பதிவு இது பற்றி விரிவாகச் சொல்கிறது.


Do we really need Mahela Jayawardene?இலங்கை அணிக்கு தொடர்ந்து வரும் இரு போட்டிகளில் நம்பிக்கை தரக்கூடிய சில விஷயங்கள்...

புதிய வீரர் திமுது கருணாரத்னவின் நம்பிக்கையளிக்கும் துடுப்பாட்டம்
வேகப்பந்துவீச்சாளர்கள் காட்டிய கடும் உழைப்பு
எதிர்பார்த்தபடி ஹேரத் சிறப்பாக செய்கிறார்.

இவற்றோடு சங்கா, மஹேல ஆகியோரும் தங்களைத் தாங்களாக வெளிப்படுத்தினாலும், மத்தியூஸ் ரண்டு இன்னின்க்சிலும் பொறுமையாக ஆடி அடித்தளம் இட்ட பின் அவசரப்பட்டு ஆட்டமிழப்பதைத் தவிர்த்தாலும் இலங்கை முதன் முதலாக ஒரு டெஸ்ட் வெற்றியை ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்யலாம்.


ஆஸ்திரேலியாவுக்கு கிளார்க், ஹசி ஆகியோரின் தொடர்ச்சியான ஓட்டக் குவிப்பும், சிடில் தொடர்ந்தும் ஆக்ரோஷமாகப் பந்துவீசி வருவதும் , ஹியூஸ், கொவான், வோர்னர் ஆகிய மூவரும் இலங்கையுடனான முதலாவது போட்டியில் ஓட்டங்களைப் பெற்றதும் நம்பிக்கை அளித்துள்ளது.

ஆனால் அவர்களது உபதலைவர் ஷேன் வோட்சனின் தடுமாற்றம்  தரும் சிக்கலைப் போலவே, வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படும் காயங்கள் + உபாதைகளும் தலைவளையையே கொடுக்கின்றன.

எல்லாவற்றிலும் பெரிய தலைவலியாக அணித்தலைவர் கிளார்க் 26 ஆம் திகதி ஆரம்பிக்கும் Boxing Day Test போட்டியில் விளையாடும் உடற்தகுதி பெறுவாரா என்ற கேள்வி.

அவர் விளையாடாதவிடத்து இலங்கைக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்..  காரணம் கிளார்க் இந்த வருடம் முழுவதும் குவித்துவரும் ஓட்டங்கள்.

கிளார்க் இல்லாவிட்டால் அணியில் தன் இடத்தையே நிலை நிறுத்தத் தடுமாறும் வொட்சன் அவ்வளவு திறம்பட அணியை வழிநடத்துவாரா என்பது இயல்பான சந்தேகமே...

இதற்கு முதல் இலங்கை ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய Boxing Day Test போட்டியானது (1995-96) வரலாற்றில் சர்சைக்காகப் பெயர்பெற்றது.
முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றது என்று நடுவர் டரல் ஹெயார் வழங்கிய தீர்ப்பு.
இந்தமுறை சர்ச்சைகளோ? சாதனைகளோ?

முதலாவது டெஸ்ட் போட்டிகளிலும் சிறு சர்ச்சைகள் இல்லாமல் இல்லை..

1.பீட்டர் சிடில் பந்தை சேதப்படுத்தியது - வீடியோ காட்சிகளில் பதிவானாலும் இலங்கை அணி உத்தியோகபூர்வமாக இது பற்றிப் போட்டித் தீர்ப்பாளரிடம் முறையிடவில்லை.
ஆதாரம் இருப்பதால் முறைப்படி நடுவர்கள் + போட்டி மத்தியஸ்தரே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இலங்கை நிர்வாகத்தின் முறையான கருத்து.
ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என போட்டித் தீர்ப்பாளரான க்றிஸ் ப்ரோட் அறிவித்திருந்தார்.

2. நடுவர் டோனி ஹில்லின் சில தீர்ப்புக்கள். இலங்கை அணிக்கு எதிராகவே எல்லாமமைந்தன.
DRS மூலமாக இலங்கை வீரர்கள் சிலவற்றிலிருந்து தப்பினாலும், இலங்கை அணியின் தலைவர் மஹேல இன்னும் சரியாக இதைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

நல்லகாலம் இந்திய - இங்கிலாந்து டெஸ்ட் தொடரைப் போல DRS இல்லாமும், நாக்பூர் போட்டியில் குக்குக்கு நடந்தது போலும் நடக்காது என்று நம்பியிருக்கலாம்.

இலங்கை ஆஸ்திரேலிய அணியிடம் 3-0 என்று தோற்றுத் தான் நாடு திரும்பும் என்று நினைப்போர் மத்தியில் முதலாவது போட்டியில் கடைசி வரை காட்டிய போராட்டம் தந்த தெம்பு காரணமாக (அதற்கு முதலேயே நண்பர்களிடம் இலங்கை அவ்வளவு மோசமாகத் தோற்காது என்று சொல்லி இருந்தேன்) இலங்கை அணியில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்கிறேன்.

தலைவர் மஹேலவுக்கு தலைமைப் பதவியிலிருந்து கௌரவ வழியனுப்பல் கொடுக்கவாவது...


2 comments:

Unknown said...

இதெல்லாம் நடக்க உலகம் அழியாமல் இருக்கனுமேன்னு எவனாச்சும் வந்து கமெண்ட் பண்ணனுமே இப்போ :P

Krish said...

தமிழ்மிரர் ஆக்கத்தை வாசித்தேன்.
இங்கே கருத்திடுகிறேன்.


என்னைப் பொறுத்தவரை அணியில் நிரந்த இடமுள்ள, தலைமைத்துவப் பண்புகள் கொண்ட ஒருவர் இருந்தாலே போதும் அவருக்கு அணித்தலைமைப் பதவி வழங்கப்படலாம். அனுபவம், அணித்தலைவராக இருந்த அனுபவமென்று எதுவும் தேவையில்லை.

அப்படிப் பார்க்கும் போது மீண்டும் பிரச்சினை வருமென்பது இன்னொன்று. இந்திய அணியில் நிரந்தர வீரரென்று யாருமில்லை, சச்சினைத் தவிர. ;-) அவர் எப்போதும் நிரந்தரம் தான்.

என்னைப் பொறுத்தவரை டோணியை நீக்குதல் என்பது இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முக்கியமானது. குறுகிய கால அடிப்படையில் யாரேனுமொருவருக்கு அணித்தலைமையை வழங்கலாம். Series by series?

அவுஸ்ரேலியத் தொடரில் விராத் கோலி அல்லது செற்றேஸ்வர் புஜாரா சிறப்பாகச் செயற்பட்டால் அதற்கடுத்த தொடரில் யாரேனும் ஒருவருக்கு வழங்கலாம்.

ஆனால் தனிப்பட்ட ரீதியில் டெஸ்ற் வீரராக இன்னும் நான் விராத் கோலியில் முழுமையான நம்பிக்கையை வைக்கவில்லை, புஜாராவின் technique தொடர்பாக இன்னும் முழுமையான நம்பிக்கையில்லை.

ஒப்பீட்டளவில் இலங்கையின் துடுப்பாட்டம் இந்தியாவின் துடுப்பாட்டத்தை விடச் சிறப்பான நிலையில் இருக்கிறதென்பது அல்ப சந்தோசப்பட்டுக் கொள்ளக்கூடிய ஒன்று. :-)

மஹேலவின் பதவி விலகல் இலங்கைக்கு அதிக நன்மைகளை வழங்குமென நினைக்கிறேன். பார்ப்போம்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner