December 15, 2012

நீதானே என் பொன்வசந்தம்
இளையராஜாவின் பாடல்கள் வர முதலே என் நண்பர்கள், நான் பழகும் வட்டத்தில் ஒரு விஷயம் சொல்லி இருந்தேன்.. "கௌதம் வாசுதேவ மேனன், விண்ணைத்தாண்டி வருவாயா இளைஞர் வட்டாரத்தில் எடுத்துத் தந்த நல்ல பெயரையும் அந்த காதல் hype ஐயும் வைத்தே நீ தானே என் பொன்வசந்தத்தை ஓட்டிவிடப் பார்க்கிறார்; இதில் வேறு இளையராஜாவின் மீள்வருகை என்று விளம்பரம் வேறு பண்ணி பரபரப்பாக்கப் பார்ப்பார்"

பாடல்கள் வந்தபோது குழாயடிச் சண்டை போல Twitter, Facebook, Forum ஆகியவற்றில் பாடல்கள் பற்றி ராசா ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் (ரஹ்மான் ரசிகர்கள் உட்பட) நடந்த வாதபிரதிவாதங்கள் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடியவை. ;)

நீ தானே என் பொன்வசந்தம் பார்த்தபோதும் இயக்குனர் GVM இன்னமும் விண்ணைத் தாண்டி வருவாயாவின் Hangover இலேயே இருக்கிறார் என்பதைத் தெளிவாக உணரமுடிந்தது.

"உங்கள் காதல் கதை" என்று சொல்லி ஆர்வத்தைத் தூண்டிவிட்டவர், சமந்தா - ஜீவாவை (நித்யா - வருண்) எப்படியாவது ஜெசி - கார்த்திக்  அளவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்காகக் காதலை அள்ளி ஊற்றப் பார்த்திருக்கிறார். ஆனால் அது அலப்பறை ஆகியிருக்கிறது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துத் தந்த எட்டுப் பாடல்களையும் வீணாக்காமல் பயன்படுத்தவேண்டும் என்று முனைந்தும் இருக்கிறார். சும்மாவே அந்த எட்டுப் பாடல்களும் மொத்தமாக 42 நிமிடங்கள்.. இதற்குள் சில இரண்டு மூன்று தடவையும் விட்டு விட்டு வருகின்றன. GVM சில பேட்டிகளில் சொல்லி இருந்ததைப் போல "Musical romantic Hit" ஆக்குவதற்கு முயன்றிருக்கிறார்.

ஆனால் காதல் என்றால் இவை தான், அதுவும் பள்ளிப்பருவ, கல்லூரிக்காலக் காலக் காதல்களில் இவை இவை இருக்கும் என்று நினைக்கின்ற அதே விஷயங்களையே காட்டி இருக்கிறார் படம் நெடுகிலும்...

அதை சுவாரஸ்யமாகக் காட்டி இருந்தால் பரவாயில்லை; கொட்டாவி வருகிற மாதிரி (குறிப்பாக இரண்டாம் பாதியில்) எடுத்தால் யாருக்குத் தான் இது எங்கள் காதல் என்ற எண்ணம் வரும்?

கௌதம் வாசுதேவ மேனன் படங்களில் காட்டிய திரைக்காதல் எங்களையும் காதலிக்க வைத்தவை ... மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா இவற்றின் கதாநாயகர்களாக, நாயகிகளாக எம்மை உருமாற்றிக் கனவிலே காதல் செய்திருப்போம் நாங்கள்..

நீதானே என் பொன்வசந்தத்திலும் அந்த மந்திரசக்தி முற்றாக இல்லாது விடவில்லை. ஆனால் போதாது...
சில காட்சிகளில் சும்மா ஜிவ்வென்று அந்தரத்திலே எங்களைத் தூக்கி சிலிர்க்க வைக்கிறார்...
சில காட்சிகளில் அட, அவளோடு போடா... ஏய் நித்யா அவனைப் புரிஞ்சுக்கடி என்று எங்கள் மனசுக்குள்ளேயே எங்களைக் கத்த வைக்கிறார்.
அவர்கள் சிரிக்கையில், சிலிர்க்கையில் எங்களையும் திரைக்குள் இழுத்துச் செல்கிறார்.

சிறுவயதுக் காதல், பள்ளிக்காதல், கல்லூரிக் காதல், பின் திருமணத்துக்கு முன்னதான என்று நான்கு பருவங்களிலும் சேர்ந்து, பிரிந்து, கூடி, மோதி காதலித்து செல்பவர்கள் இறுதியாக சேர்ந்தார்களா இல்லையா, ஏன் என்று சொல்வது தான் 'நீதானே என் பொன் வசந்தம்'

ஆனால் முதல் இரு பருவக் காதல்கள் பெரிதாக பிரிதல் ஒட்டவில்லை. இதனால் ஏதோ ஒரு சம்பவமாகக் கடந்து சென்று விடுகிறது.
ஆனால் அந்த டியூஷன் கிளாஸ் சம்பவங்களும், பேட்ச, பழக முயலும் காட்சிகளும் எங்களையும் பின்னோக்கி அழைத்துச் செல்பவை.

கல்லூரிக் காதல் கொஞ்சம் ரசனை.. ஆனாலும் பிரிவுக்கான காரணத்தில் அழுத்தம் போதாது.

தன குடும்ப சூழலை சொல்ல முடியாத காதலனோ, அவனை அவ்வளவு உயிருக்கு உயிராக நேசிக்கிற காதலிக்கு அவனது குடும்ப சூழலோ புரியாமல் இருக்குமா?
காதலுக்காக தனது காதலனுக்காக எதை வேண்டுமானாலும் அப்பாவுக்குத் தெரியாமல் தரக்கூடிய ஒரு காதலி இருந்தால் வேறென்ன வேண்டும்? அவள் மீது அப்படியே பைத்தியமாக வேண்டாமா?

சில நெருக்கமான, ரசனையான காதல் காட்சிகள் கௌதம் ஸ்பெஷல்.
அதன் பின்னதான ஏக்கமும், பிரிவும், திருமண ஏற்பாடும் டச்சிங் தான்..
ஆனால் மணப்பாறை பயணமும் காட்சிகளும், வி.தா.வ வை ஞாபகப்படுத்தாமல் இல்லை.

ஜீவாவின் திருமணத்துக்கு முன்னதான அந்த இரவு சந்திப்பும், பழைய நினைவுகள் மீட்டல்களும் மனதை நெகிழச் செய்வது உண்மை.
ஜீவாவின் இடத்தில் எங்களை வைத்துப் பார்த்து ஒவ்வொருவரும் கொஞ்சம் உருகியிருப்போம்.

சமந்தாவை முதல் தடவையாகக் கல்லூரியில் காணும் நேரம் அவரைக் கவர்வதற்காக ஜீவா "நினைவெல்லாம் நித்யா"வில் இளையராஜா தந்த என்றும் இனிக்கின்ற 'நீதானே என் பொன் வசந்தம்' பாடலைப் பாடுகின்ற நேரம் சமந்தாவின் கண்களும், உதடுகளும் காட்டும் அந்த வெட்கம், காதல், துடிப்பு இவை எல்லாமே ஒரு முழு நீளப்படம் பார்த்த பூரண திருப்தி.
அந்தப் பாடலையும் அவ்வளவு மோசமாகப் பாடாமல் நன்றாகவே (ஒரு கல்லூரி மேடைப் பாடகர் என்ற அளவில்) பாடி  காதுகளைக் காப்பாற்றித் தந்த இயக்குனருக்கு நன்றி.
ஆனால் அதே படத்தில் வந்த சிறிய ஹம்மிங் பாடலான "நினைவெல்லாம் நித்யா"வையும் எங்கேயாவது சொருகி இருக்கலாம்.

படத்தின் கதைப் பயணத்தோடு "முதல் முறை", "என்னோடு வா வா" ஆகியன (மட்டுமே) மனதில் ஒட்டுகின்றன.
என்னோடு வா வா பாடல் மட்டுமே பாடல்கள் வெளியான நாளில் இருந்து எனக்குப் பிடித்திருந்தது என்று அடிக்கடி சொல்லிவந்தேன். படத்திலும் ஏமாற்றவில்லை.மனதை அள்ளுகிறது.

பல பாடல்களைக் கதை சொல்லிகளாகவே கௌதம் பயன்படுத்தியிருக்கிறார். இளையராஜா பாடிய 'வானம் மெல்ல' உட்பட..
இசைஞானி மற்றும் அவரது ரசிகர்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவல்.

இந்த இடத்தில் தான் நான் கௌதம் வாசுதேவ மேனனுக்கு முன்பு இசையமைத்த ஹரிஸ் ஜெயராஜும், A.R.ரஹ்மானும் நினைவு வருகிறார்கள். அவர்களை இங்கே ஒப்பிட்டே ஆகவேண்டி இருக்கும்..
இளையராஜா கொடுத்த காதலை விட இவர்கள் இருவரும் இன்னும் பின்னணியிலும் கதையோட்டத்துக்குப் பொருத்தமான பாடல்களிலும் கலக்கி இருப்பார்கள். - இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

பீரியட் படம் என்பதால் தான் ராசாவின் தெரிவு என்று கௌதம் சொல்வாரேயானால், அப்படி ஒன்றும் ராஜா பிரமாதப்படுத்தவில்லையே?
ஹரிஸ் வாரணம் ஆயிரத்தில் இதைவிட ரசிக்கச் செய்திருந்தாரே?

படத்திலும் படம் முடிந்த பிறகும் முழுமையாக மனதில் நிறைந்திருக்கும் ஒரே விடயம் சமந்தா(நித்யா)வின் பாத்திரம்.

இப்படியொரு காதலும் காதலியும் கிடைத்தால் வேறென்ன வேண்டும்? வெறித்தனமாகக் காதலித்துக்கொண்டே இருக்கலாம். (அப்படியான காதலால் தான் எனது வாழ்க்கை எந்த சந்தர்ப்பத்திலும் இனிக்கிறது)
இளைஞர்கள் பைத்தியம் பிடித்து அலையப் போகிறார்கள்.

அழகுக்கு அழகு, பார்வை, முகபாவங்கள், வசீகரிக்கும் புன்னகை, ஏன்டா என்னைப் புரிந்துகொள்கிறாய் இல்லை எனும் ஒரு பரிதாப ஏக்கம், காதலா இதோ என் உயிரையே தருகிறேன் என்று உணர்த்தும் கண்களும் உதடுகளும்..... அற்புதமான தெரிவு.

உணர்ச்சிமிக்க காட்சிகள் இயல்பாகத் தெரிய இவர் மட்டுமே ஒரே காரணம் என்று சொன்னாலும் தப்பில்லை. இவரை அழ வைத்ததில் ஜீவா மீதும், கௌதம் மீதும் கூடக் கோபம் தான் வருகிறது.
கௌதமின் படங்களில் மட்டுமே இப்படி நாயகியர் இவ்வளவு அழகாகத் தெரிகிறார்கள்.

ஜீவாவும் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். ஸ்மார்ட் ஆக இருக்கிறார். காதல், ஏக்கம், காதலைத் தவிர்க்கவும் பின்னர் சேரவும் தடுமாறுவது என்று நன்றாகவே செய்திருக்கிறார். கடைசிக் காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.
அந்த இயல்பான சிரிப்பும், நகைச்சுவைக் காட்சிகளும் இவரது பிளஸ்.

சந்தானம் படத்தின் மிக முக்கிய ஒரு உயிர் நாடி. படத்தை ஓரளவாவது தொய்வில்லாமல் கொண்டு செல்ல இவர் தான் தேவைப்பட்டிருக்கிறார்.
அந்த இயல்பான படு கஷுவலான நக்கல் தொனி ரசனைக்குரியது.
"லாரிக்கு கீழ விழுந்தவனைக் கூட காப்பாத்தலாம்.. ஆனா லவ்வுல விழுந்தவனைக் காப்பாத்தவே முடியாதுடா"
'ஏன்டா சல்வார் சாயம் போன பிறகு தான் pant பக்கம் வருவீங்களா?"
இப்படிப் போகிற போக்கில் செமையாக வாருகிறார். திரையரங்கம் அதிர்கிறது.
சமந்தாவுக்கு அடுத்தபடியாக வரவேற்பும் இவருக்குத் தான்.

இந்த மூவருக்குள்ளேயே முக்கியமான கட்டங்கள் நகர்ந்துவிடுவதால் ஏனையோர் பற்றிப் பெரிதாகக் கவனிக்கத் தேவையில்லை.

எடிட்டர் அன்டனி பாவம்.. அவரும் எவ்வளத்தை தான் வெட்டி, குறைத்து, பொருத்தி கோர்த்திருப்பார். ஆனால் நேர்த்தியாக உழைத்திருக்கிறார். கௌதமுக்குப் பிடித்தபடி.

ஒளிப்பதிவு - M.S.பிரபு & ஓம் பிரகாஷ்.. கண்களுக்கு இதமாகவும், தேவையான இடங்களில் பிரமிப்பையும், சில இடங்களில் ரசனையோடு ஈர்க்கவும் வைக்கின்றன.

காதலர்களுக்கு இடையிலான மோதல்கள், ஈகோ'க்கள், எதிர்பார்ப்புக்கள், விட்டுக்கொடுப்பது யார் என்ற விடாப்பிடிகள், possessiveness, பொறாமைகள், சின்னச் சண்டைகள் பெரிய பிளவுகளாக மாறுவது என்று அத்தனையும் எங்கள் வாழ்க்கை, எங்கள் காதல்களுக்கு உரியவை தான்...

காதலி பாவம்... உயிரைக் கொடுத்து காதலித்த அவளை காதலன் தான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்ற ஒரு சமநிலை இல்லாத தோற்றப்பாட்டையும் கொடுத்து நிற்கிறது திரைப்படம். இதனாலும் நித்யா மனதில் நிறைந்துபோகிறாள்.

ஆனால் இழுத்த இழுவையோ, அல்லது ஏற்கெனவே நாம் பார்த்ததோ, அல்லது கௌதம் ஹிந்தி , தெலுங்கிலும் சமாந்தரமாக எடுக்கும் ஆர்வத்தில் திரைக்கதையை ஐதாக்கியதோ சமந்தாவை மட்டும் ரசிக்கச் செய்து 'நீதானே என் பொன்வசந்தத்தை' மனதில் நுழையாமல் செய்து விட்டிருக்கிறது.

நீதானே என் பொன்வசந்தம் - நெருங்கவில்லை நெஞ்சை 


6 comments:

Krish said...

Same blood. :-)
இறுதிக் காட்சியை சுபமாக முடிக்க வேண்டுமென்றே மொண்ணைத்தனமாக மாற்றியது போன்றிருந்தது.
அதுவரை அந்தச் சந்திப்புக் கணங்கள் மனதிற்கு நெருக்கமாக இருக்க, ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக மாப்பிள்ளை வேண்டாமென்றுவிட்டு காரில் கிளம்பி வருவதென்பது ஏனோ ஒட்டவில்லை.

Unknown said...


//இப்படியொரு காதலும் காதலியும் கிடைத்தால் வேறென்ன வேண்டும்? வெறித்தனமாகக் காதலித்துக்கொண்டே இருக்கலாம். (அப்படியான காதலால் தான் எனது வாழ்க்கை எந்த சந்தர்ப்பத்திலும் இனிக்கிறது)
இளைஞர்கள் பைத்தியம் பிடித்து அலையப் போகிறார்கள்//
படம் பாக்கும் போ து நம்ம பசங்க பீலிங் .
படத்தில ரசிச்ச சில விசயங்களில ஒன்று சின்மயி குடுத்த டப்பிங் வாய்ஸ்.

anuthinan said...

//ஆனால் அந்த டியூஷன் கிளாஸ் சம்பவங்களும், பேட்ச, பழக முயலும் காட்சிகளும் எங்களையும் பின்னோக்கி அழைத்துச் செல்பவை.//
:) அதுதான் கவுதம் மேனனின் வெற்றி பார்மூலா! படத்தில், ஏதோ ஒரு இடத்திலிருந்து எல்லோருக்கும் தாக்கம் தரக்கூடிய ஒரு விடயத்தை வைத்து கொண்டு, சிக்ஸ்சர் அடிப்பது.....! என்ன இந்த தடவை பந்து எல்லைக்கோடு வரை வந்து, களத்தடுப்பாளரிடம் சிக்கி கொண்டது :)

எனக்கு கவுதம் மேனனின் காதல் கதை மட்டும் மட்டுமே பிடித்திருக்கிறது :)

anuthinan said...

//ஆனால் அந்த டியூஷன் கிளாஸ் சம்பவங்களும், பேட்ச, பழக முயலும் காட்சிகளும் எங்களையும் பின்னோக்கி அழைத்துச் செல்பவை.//
:) அதுதான் கவுதம் மேனனின் வெற்றி பார்மூலா! படத்தில், ஏதோ ஒரு இடத்திலிருந்து எல்லோருக்கும் தாக்கம் தரக்கூடிய ஒரு விடயத்தை வைத்து கொண்டு, சிக்ஸ்சர் அடிப்பது.....! என்ன இந்த தடவை பந்து எல்லைக்கோடு வரை வந்து, களத்தடுப்பாளரிடம் சிக்கி கொண்டது :)

எனக்கு கவுதம் மேனனின் காதல் கதை மட்டும் மட்டுமே பிடித்திருக்கிறது :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//இந்த இடத்தில் தான் நான் கௌதம் வாசுதேவ மேனனுக்கு முன்பு இசையமைத்த ஹரிஸ் ஜெயராஜும், A.R.ரஹ்மானும் நினைவு வருகிறார்கள். அவர்களை இங்கே ஒப்பிட்டே ஆகவேண்டி இருக்கும்..
இளையராஜா கொடுத்த காதலை விட இவர்கள் இருவரும் இன்னும் பின்னணியிலும் கதையோட்டத்துக்குப் பொருத்தமான பாடல்களிலும் கலக்கி இருப்பார்கள்.//
உண்மைதான்.இளையராஜா மேதைதான்.அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.இருதாலும் தலைமுறை இடைவெளியை அவர்
உணர்ந்து கொள்ள வேண்டும்.அவர் தனது பழைய பாணியைப் பயன்படுத்தினால் இளைஞர்களை ஈர்க்க முடியாது.பாணியை மாற்றினால் தனித் தன்மை போய்விடும்.இதை கருத்தில் கொண்டு இளையராஜா இசை அமைப்பை தவிர்த்தல் நல்லது.

Bavan said...

// சமந்தாவை முதல் தடவையாகக் கல்லூரியில் காணும் நேரம் அவரைக் கவர்வதற்காக ஜீவா "நினைவெல்லாம் நித்யா"வில் இளையராஜா தந்த என்றும் இனிக்கின்ற 'நீதானே என் பொன் வசந்தம்' பாடலைப் பாடுகின்ற நேரம் சமந்தாவின் கண்களும், உதடுகளும் காட்டும் அந்த வெட்கம், காதல், துடிப்பு இவை எல்லாமே ஒரு முழு நீளப்படம் பார்த்த பூரண திருப்தி.//

My Fav scene in the movie ♥ =))

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner