December 29, 2012

மூன்று மரணங்கள் - சில செய்திகள் & பகிர்வுகள்


இன்று காலையிலே சற்றுத் தாமதமாகத் துயில் எழுந்தது மூன்று மரணச் செய்திகளுடன்...

இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் உபாலி செல்வசேகரன்
டெல்லியில் ஆறு மிருகங்களால் வன்புணர்வு செய்யப்பட்டு பல நாட்களாக வாழ்க்கைக்காகப் போராடி வந்த டெல்லி மாணவி
கிரிக்கெட்டின் ஆங்கில நேர்முக வர்ணனையின்  ஆளுமையாக விளங்கிய டோனி கிரெய்க்

இந்த மூன்று மரணங்களுமே வெவ்வேறு தாக்கங்களை எனது மனதில் ஏற்படுத்தியவை; பல்வேறு தடங்களை இன்னும் விட்டுச் செல்லக் கூடியவை.
நாளாந்தம் எம்மைச் சுற்றி எதோ ஒரு மரணச் செய்தி கிடைத்தவண்ணமே இருக்க, இந்த மூன்றும் எனக்ச் சொல்லியவை என்ன?

உபாலி S. செல்வசேகரன் 


இலங்கையின் சிரேஷ்ட நாடக, திரைப்படக் கலைஞர். தமிழ் மட்டுமன்றி சிங்கள மொழியிலும் தனது முத்திரையைப் பதித்த ஒரு அற்புதக் கலைஞர்.
எனது தாத்தா - லண்டன் கந்தையா (சானா) சண்முகநாதன் காலத்தில் உருவாகிய ஒரு நாடக அணியின்  தொடர்ச்சியாக உருவான அற்புதக் கலைஞர்களின் கூட்டணியில் ஒருவர்.

அந்த நாட்களில் இலங்கை வானொலியில் ஒரு கலக்குக் கலக்கி தமிழ் நேயர்கள் மனதில் இடம் பிடித்த கோமாளிகள் கூட்டணியில் - அப்புக்குட்டி ராஜகோபால், மரிக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன் என்று இந்த மூவரையும் (இவர்களோடு பண்டிதராக அன்புக்குரிய அண்ணன் அப்துல் ஹமீதும்) சிறு வயது முதலே குடும்ப நண்பர்களாகப் பரிச்சயம்.
தாத்தா வழியாகவும், அப்பாவுடன் இவர்கள் மூவரும் கொண்ட நட்பு வழியாகவும் தெரிந்தே இருந்தது.

அப்பா, அம்மா சொல்லி இவர்கள் பற்றி அறிந்ததும் அந்த வேளையிலேயே வானொலி கேட்பதாலும் , பின்னர் சிறுவர் மலர் சிறுவர் நிகழ்ச்சியில் பங்குபற்றும்போதே தெரிவு செய்யப்பட நாடகக் கலைஞனாகத் தெரிவாகியவுடன் நாடகங்கள் நடிக்க ஆரம்பித்ததும் இவர்களது அறிமுகம் அதிகமானது.

1974ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட இவர்களின் நாடகப்பகுதி
அண்ணன் கானா பிரபாவின் Facebook இலிருந்து எடுத்தது...

நான் நடித்த முதலாவது வானொலி நாடகம் ஒரு இலக்கிய நாடகம் - அகளங்கன் அவர்கள் எழுதிய 'அம்பு ஒன்று தைத்தது' - தசரதனின் புத்திர சோக நாடகத்தில் எனக்கு தசரதனின் அம்பு பட்டு இறக்கும் சிறுவன் பாத்திரம். தசரதனாக திரு.K.சந்திரசேகரனும், என்னுடைய பார்வையற்ற தந்தையாக அமரர் செல்வசேகரனும்.
எழில் அண்ணா தான் தயாரிப்பாளர்.

அன்று முதல் இவருடனும், திரு.ராமதாஸ் அவர்களுடனும் எனக்கும் என் தம்பிக்கும் பல நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பு.
எத்தனையோ தசாப்த அனுபவங்களையும் நுணுக்கங்களையும் தங்களோடு நடிக்கும் எமக்கும் சொல்லித் தந்து வளர்த்துவிட்டவர்கள்.

பின்னாளில் சூரியன் வானொலியில் நான் முகாமையாளராகப் பணியாற்றியவேளை முகாமைத்துவத்தால் நாடகங்கள் செய்வதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து 'அரங்கம்' என்ற பெயரிட்டு வாரத்தில் நான்கு நாட்கள் நாடகங்களை ஒலிபரப்பி வந்தோம்.

வெளியே ஒரு கலையகத்தில் செல்வா அண்ணா, சந்திரசேகரன் அண்ணன், ராமதாஸ் அங்கிள், ராஜா கணேஷன் அவர்கள் ஆகிய சிரேஷ்ட கலைஞர்களையும் இன்னும் பல வெளிக்கலைஞர்களையும் கொண்டு தயாரிப்பாளராக பிரதீப்பை அமர்த்தி 'அரங்கம்' நாடகங்களை உருவாக்கினோம்.

தமிழ் ஒலிபரப்பில் மறக்க முடியாத கலைஞர்கள் பலரை ஒன்றாகச் சேர்த்து மீண்டும் அவர்களது நேயர்களையும் எங்கள் வசபடுத்திய அந்த வாய்ப்பும், இவர்களின் அனுபவங்களை எங்கள் இளம் ஒலிபரப்பாளர்களுக்கும், எமக்கும் சேர்த்துப் பெற்ற அந்தக் காலம் உண்மையில் எங்களுக்கும் ஒரு பொற்காலம் தான்.

இப்போதும் இந்தப் பெரியவர்கள் எங்கே எம்மைக் கண்டாலும் 'அரங்கத்தை' ஞாபகப்படுத்துவதும் எங்களுடன் மிக இயல்பாகப் பழகுவதும் இன்னும் இவர்கள் மீது எங்கள் மதிப்பை உயர்த்தியவை.

பிறகு வெற்றி FM இல் நான் பணியாற்றிய நேரம், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கலைஞர்களை மீள நினைவுபடுத்தும் 'வெற்றி பெற்றவர்கள்' என்று நிகழ்ச்சி மூலமாகவும் திரு.செல்வசேகரன் அவர்களைப் பேட்டி கண்டிருந்தோம்.
(தயாரிப்பாளர் - விமல் & பேட்டி கண்டவர் - பிரதீப்)


இந்த அற்புதமான செல்வா அண்ணா சிங்களத் திரையுலகிலும், தொலைகாட்சி நாடகங்களிலும் கூட பெரு மதிப்பைப் பெற்றிருந்தவர்.
மொழிபெயர்ப்பிலும் கெட்டிக்காரர்.

'சரசவிய' விருது பெற்ற ஒரே தமிழ் கலைஞர் உபாலி' செல்வசேகரன் தான்.
இன்னமுமே இவர் போன்ற எங்களின் அற்புதமான கலைஞர்களை நாம் இன்னமும் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது.

உபாலி செல்வசேகரன் அவர்களுக்கு அஞ்சலிகள்.

---------


வன்புணர்வு, பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு, ரேப் இப்படியான சொற்கள் பத்திரிகைகள், இணையத் தளங்கள், செய்திகள் எங்கும் இறைந்து கிடக்கும் ஒரு காலப்பகுதியில் நாம் பயணித்துக்கொண்டிருகிறோம் என்பதே மனிதகுலத்துக்கு இழிவு தரும் ஒரு விடயமல்லவா?

இந்தியத் தலைநகரில் ஒரு இளம் மாணவி ஆறு மிருகங்களால் ஓடும் பேருந்தில் கொடுமையாக சீரழிக்கப்பட்டு கொடுமையாக நிர்வாணமாக வீசி எறியப்பட்டிருக்கிறாள்.
இந்த செய்தி ஏற்படுத்திய தாக்கம், இதற்கு எதிராக எழுந்த குரல்கள், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் ஆகியன எதிர்காலத்தில் இப்படியொரு விடயம் நடக்கக்கூடாது என்பதற்கான முடிவைத் தந்தால்  நல்லது தான்.

ஆயினும் அதன் பின்னரும் நீதி, தகுந்த தண்டனை வேண்டும், இனி இவாறு நடக்கக் கூடாது என்று வலியுறுத்திய மாணவர் போராட்டங்கள் அடக்கப்பட்டது அவ்வளவு ஆரோக்கியமான மாற்றங்களைத் தரும் என்ற நம்பிக்கையை வழங்கவில்லை.


அத்துடன் அதற்குப் பிறகும் பல சம்பவங்கள்.... இந்தியாவிலும் பல பகுதிகளில்..
இலங்கையின் வடக்கில் மண்டைதீவில் நேற்று ஒரு சின்னஞ்சிறுமியை சிதைத்துக் கொன்றுள்ளார்கள்.

1987இல்  IPKF இனால் குதறப்பட்ட ஆயிரக்கணக்கான எம் தமிழ்ப் பெண்கள், பின்னர் கிருஷாந்தி குமாரசாமி முதல் இசைப்பிரியா, இறுதிக்கட்ட யுத்தக்கட்டங்களில் இராணுவத்தால்  சீரழிக்கப்பட்ட பல பெண்கள் என்று தோல்வியுற்ற ஒரு சமூகத்தில் குலைந்துபோன எம் பெண்கள் பற்றிக் குரல் எழுப்பியும் வெளியே வராத சத்தத்துடன் நாம் குமுறிக்கொண்டிருக்கிறோம்.

டெல்லியில் நடந்தால் வெளியே பெரிதாகத் தெரியும் ஒரு சம்பவம் இலங்கையில் மட்டுமல்ல.. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் கிராமமொன்றில் நடந்தாலும் வெளியே வராது; அல்லது ஒரு மூலையில் பெட்டிச் செய்தியோடு முடிந்துவிடும்.


காலாகாலமாகப் பெண்களின் உடலமைப்பினாலும் எங்கள் சமூகக் கட்டமைப்பினாலும் பாலியல் ரீதியிலான வதைகளும் அதன் மூலமான சீரழிவுகளும் தொடரத் தான் போகின்றன.

இதற்கான தண்டனைகள், விழிப்புணர்ச்சி, தகுந்த பாதுகாப்பு பற்றி அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒரு கட்டத்தை அந்த பாவப்பட்ட டெல்லிப் பெண்ணின் சம்பவமும், வாழ்வதற்காகப் போராடி இன்று சிங்கப்பூரில் மரணித்த அவளது மரணமும் ஏற்படுத்திவிட்டுப் போயுள்ளன.
இனியும் எம்மில் உலா வரும் மிருகங்கள் திருந்தும் என்று நான் நம்பவில்லை; திருந்தாத மிருகங்களை சட்டங்கள் மூலமாக வருந்தச் செய்வதிலாவது வெற்றி காண முடியுமா?

------------------------

டோனி கிரெய்க்


கிரிக்கெட் பார்த்து, நேர்முக வர்ணனையைக் கேட்டு ரசிக்க ஆரம்பித்த காலத்தில் நன்கு மனதில் பதிந்த இரு குரல்கள் Richie Benaud & Tony Greig.
இலங்கையிலிருந்து ஏதாவொரு ஆங்கில நேர்முக வர்ணனையாளரும் இல்லாதிருந்த காலகட்டத்தில் கிரெய்க் தான் எம் அணிக்காக (பரிதாபப்பட்டோ என்னவோ) பரிந்து பேசி நேர்முக வர்ணனை செய்வார்.

அவரது பிரபலமான Little Sri Lankans, Marvelously talented Aravinda(rr) De silva, Captain cool Ranatunga, my dear Little Kaloo (Kaluwitharana) இப்படியான இலங்கை , இலங்கை வீரர்கள் பற்றிய வர்ணனைகளும் ,

அவருக்கே உரித்தான கம்பீரமான குரலில் வந்து விழுந்த வார்த்தைப் பிரயோகங்களும் கிரிக்கெட் போட்டிகளை சுவாரச்யமாக்கித் தந்திருந்தன.
"Dear oh dear this Little master (Tendulkar) has all magic in his blade"
'Once again Jayasuriya(rr) taking this game away singlehandedly"
“This Test is done and dusted.”
"These Sri Lankans are very very good, they catch everything."

1996 உலகக் கிண்ணம் வென்றபோது இலங்கையரைப் போலவே ஆனந்தப்பட்ட இன்னொருவர் என டோனியை நாம் கண்டோம்..
'These little Sri Lankans are giving the Aussies a real hiding'
 ‘This is a little fairytale. The thing that I like about these guys is that they not only win, but they win in style. It is only a small place Sri Lanka. And what a moment this is for Sri Lankan people.’

இன்று அந்தக் கிண்ணம் வென்று ரணதுங்க கிண்ணம் தூக்கும் காட்சிகளைப் பார்த்தாலும் குதூகலிக்கும் கிரேய்க்கின் குரலை நாம் ரசிக்கலாம்.

தென் ஆபிரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் போராடி அணிக்குள் நுழைந்து தலைவராகி, பின்னர்  கெரி பக்கருடன் சேர்ந்து கிரிக்கெட்டில் ஏற்படுத்திய World Series புரட்சி, அதன் பின்னர் நேர்முக வர்ணனையாளர் என்று அனைத்திலும் தடம்பதித்தவர் இறுதியாகப் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த இந்தக் காலத்திலும் தனது உயர்ந்த தோற்றம் போலவே கம்பீரமாகவே நின்றிருந்தார்.

டோனி யின் இறுதிப் பேட்டியில்  அவர் சொல்வதை அவதானியுங்கள்Twitterஇல் அண்மையில் தான் இணைந்துகொண்ட இவர் அளவாக, யாரையும் புன்படுத்தாமலே அதிலும் தன் கருத்துரைத்து வந்திருந்தார்.

கண்ட சில சந்தர்ப்பங்களில் ஆசைக்காக ஒரு சில வார்த்தைகள் பேசினாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. மிக நேசித்த ஒரு மனிதர்...

நண்பர் Rex Clemetine தனது Facebook இல் இவர் பற்றி சொல்லியிருப்பவை...
Tony Greig,  
Born in South Africa  
Played for England
 
Lived in Australia
 
Supported Sri Lanka
 
Rest in Peace.

ஆங்கில வார்த்தைகளின் அழகை சொல்லித்தந்த சிலரில் ஒருவரை இழந்த சோகம் மனதில் கனக்கிறது.

We will miss you Tony (Greig).5 comments:

Unknown said...

உபாலி பற்றிய தெரியாதிருந்தேன்(ஒரு சகோதர இந்தத்தவர் என்று தான் எண்ணியிருந்தேன் முதலில் ).அறிமுகத்துக்கு நன்றி சகோ.
மூவரின் ஆத்மாக்களும் சாந்தியடையட்டும்.

எஸ் சக்திவேல் said...

>ஆனால் அதற்குப் பிறகும் பல சம்பவங்கள்....
இலங்கையின் வடக்கில் மண்டைதீவில் நேற்று ஒரு சின்னஞ்சிறுமியை சிதைத்துக் கொன்றுள்ளார்கள்.

1987இல் IPKF இனால் குதறப்பட்ட ஆயிரக்கணக்கான எம் தமிழ்ப் பெண்கள், பின்னர் கிருஷாந்தி குமாரசாமி முதல் இசைப்பிரியா, இறுதிக்கட்ட யுத்தக்கட்டங்களில் இராணுவத்தால் சீரழிக்கப்பட்ட பல பெண்கள் என்று தோல்வியுற்ற ஒரு சமூகத்தில் குலைந்துபோன எம் பெண்கள் பற்றிக் குரல் எழுப்பியும் வெளியே வராத சத்தத்துடன் நாம் குமுறிக்கொண்டிருக்கிறோம்.

---------------------

கனத்த வேதனை மற்றும் ஆற்றாமை.

Komalan Erampamoorthy said...

இந்தியாவில் இருந்தது தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் , நாடகத்தொடர்கள் படங்கள் இவைமட்டும் தான் எங்கள் ஊடகங்கள் பிரதி எடுத்து வெளியிட்டார்கள் இப்போது அவர்களுடைய செய்த்திகளுக்கு அங்கே கொடுக்கிற அதே முக்கியத்தை இங்கேயும் முடியல .............

அதுமட்டும் இல்லை........... இந்த்தியாவில்கூட தினமும்
கிராமப்புறங்களில் இதைவிட கேவலம் எல்லாம் அரங்கேறுகின்றன அவைபற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுவது இல்லை ............ ஊடகங்கள் தகவல்களை தரவேண்டியத்து மட்டும் தான் ஆனால் அவர்கள் எங்களை வழிநடத்த எத்தனிக்கிறார்கள் இது மிகவும் கண்டனத்துக்கு உரியது.

Unknown said...

எம் மண்ணின் கலைஞனுக்கு அஞ்சலிகள் அவர் பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா

பிரதீப் said...

//(தயாரிப்பாளர் - விமல் & பேட்டி கண்டவர் - பிரதீப்)//

அண்ணா, அந்த நேர்காணலைச் செய்தது விமல் அல்லது வைதேகியாக இருக்கவேண்டும். நான் அல்ல.
-பிரதீப்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner