மென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா? - #ICCWT20

ARV Loshan
6

நேற்று இலங்கையின் ஆரம்பமே அமர்க்களமாகி இருக்கிறது.
இலங்கை வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் இப்படி அமோகமாக வெல்லும் என்றும் முதலாவது போட்டி இப்படி ஒரு பக்கத்துக்கு இலகுவாக வெற்றியைக் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

இரண்டு மென்டிஸ்களும் சேர்ந்து உருட்டி எடுத்து விட்டார்கள் பரிதாபமான சிம்பாப்வே அணியை.

அஜந்த மென்டிஸ் தான் வைத்திருந்த T20 சர்வதேசப் போட்டிகளின் மிகச் சிறந்த பந்துவீச்சு சாதனையை நேற்று மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளார்.
ICC உலக T20 போட்டிகளில் பெறப்பட்ட மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியை வைத்திருந்த உமர் குல்லையும் (6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள்) மென்டிஸ் பின் தள்ளியுள்ளார்.

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய T20 வெற்றி இது. (ஓட்டங்களின் அடிப்படையில்)

இரண்டு மென்டிஸ்களும் நேற்று தங்களுடைய நாளாக மாற்றிக்கொண்டார்கள்.
ஜீவன் மென்டிஸ் துடுப்பாட்டத்தில் இலங்கை அணிக்குத் திடத்தைக் கொடுத்திருந்தார்.
நேற்று சங்காவை விட, ஆரம்பத்தில் ஜீவன் தான் இலங்கை அணிக்கு ஜீவனைக் கொடுத்திருந்தார். (வசன உதவி நன்றி கங்கோன் கோபி)

பந்துவீச்சிலும் நேற்று வீழ்த்தப்பட்ட பத்து சிம்பாப்வே விக்கெட்டுக்களில் ஒன்பதை மென்டிஸ்களே கைப்பற்றியிருந்தார்கள்.
ஆறு அஜந்த & மூன்று ஜீவன்.

மென்டிஸ் ஒன்பது மாத காலம் காயம் காரணமாகவும், form இழப்பு காரணமாகவும் அணியிலிருந்து வெளியேறி, மீண்டும் SLPLஇல் காட்டிய திறமை காரணமாக அணிக்குள் அழைக்கப்பட்ட போது தனது முதல் ஒன்றரை ஆண்டுகளில் காட்டிய அதே மாயாஜால வித்தைகளை மென்டிஸ் தொடர்ந்தும் காட்டுவாரா என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது.

மென்டிசின் முதல் ஒன்றரை ஆண்டுகளில் அவர் சுழல் பந்துவீச்சாளர்களை இலகுவாக ஆடும் இந்திய அணியையே ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும், பின்னர் இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரிலும் உருட்டி எடுத்திருந்தார் என்பதை இந்திய வீரர்களே கனவில் கூட மறக்க மாட்டார்கள்.

ஆனால் அதன் பின்னர் கொஞ்சக் காலத்திலேயே மென்டிசின் மந்திரவித்தைகளை முதலில் பாகிஸ்தானும், பின்னர் இந்தியாவும் நொறுக்கித் தள்ள அதன் பின் பிள்ளைப் பூச்சிகளான நியூ சீலாந்து போன்ற அணிகள் கூட மேன்டிசைக் கணக்கெடுக்காமல் அடித்தாடிய காலமும் இருந்தது.

இதனால் மென்டிசில் எங்களுக்கெல்லாம் பெரிய டவுட்டு..

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்க முன்னர் ஒவ்வொரு நாளும் அணிகளின் தலைவர்கள், வீரர்களுடன் ஊடகவியலாளர் சந்திப்புக்கள் பல இடம்பெற்றன.

அதில் ஒன்றில் அஜந்த மென்டிசை நாம் சந்தித்தபோது, அவரிடம் ஏதாவது புதிய 'ஆயுதங்கள்' இருக்கின்றனவா என்று கேட்டபோது, முன்பு தன்னிடம் இல்லாத Off spin பந்துவீச்சைத் தான் SLPL இல் பரீட்சித்ததாகவும், அதே போல காயத்திலிருந்து மீண்ட பிறகு கொஞ்சம் பந்துவீசும் பாணியை மாற்றி இருப்பதாகவும் சொல்லி இருந்தார்.
அந்த மாற்றம் தனக்கு பந்துவீச்சை மேலும் மெருகேற்ற உதவியதாகவும் சொல்லி இருந்தார்.

SLPL இன் அரையிறுதிகள் தவிர்ந்த ஏனைய போட்டிகள் பார்க்காததால் எனக்கு மென்டிஸ் சொன்னவை உண்மையா எனத் தெரிந்திருக்கவில்லை.
எனவே  இது முன்பே பலர் செய்வது போல ஒரு பீலா என்றே நினைத்திருந்தேன்..

ஆனால் நேற்று மென்டிஸ் சொன்னது உண்மை தான் என்று புரிந்தது.. அந்த பழைய வித்தைகள் பாவம் பச்சைக் குழந்தைகள் சிம்பாப்வேக்கு மிக மிக அதிகம் தான்.

மென்டிஸ் இன்னும் ஒன்றையும் சொல்லி இருந்தார்.
"கிறிஸ் கெய்லின் அதிரடியை சமாளிக்கவும் தன்னிடம் வித்தை இருக்கு "
கெய்ல் நல்ல 'மூடில்' இருந்து கொஞ்சநேரம் ஆடுகளத்தைப் பழகியும் விட்டால் மென்டிஸ் என்ன, முரளி, வோர்ன், கும்ப்ளே வந்தாலுமே ஒன்றும் செய்ய முடியாது.

எனவே நாம் மனசுக்குள் கொஞ்சம் சிரித்துக் கொண்டோம்..

அடுத்ததாக "கெய்ல் சுழல் பந்துவீச்சாளர்களைப் பெரிதாக அடித்தாட மாட்டார்' என்றும் போட்டார் பாருங்கள் அடுத்த பிட்டு.

என்னடா இவன் என்று நினைத்தேன்.. இலங்கைக்கு இரண்டாம் சுற்றில் ஒரு போட்டி மேற்கிந்தியத்தீவுகளுடன் நடைபெறும்.. மே.இ அடுத்த சுற்றுக்குத் தெரிவானால்..

அப்போது மென்டிஸ் கெய்லுக்கு பந்துவீசும் போது அன்றைக்கு சொன்னது நடக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் நேற்று மனிதர் சுழற்றிய சுழற்றில் சிம்பாப்வே சுழன்றதைப் பார்த்தபிறகு உண்மையாவே ஏதாவது விஷயம் இருக்குமோ என்று யோசிக்கிறேன்..
நேற்று மசகட்சாவை ஆட்டமிழக்கச் செய்தது அந்த off spin பந்தோ?

நேற்று தொலைக்காட்சியில் வசீம் அக்ரம் "நான் இலங்கைத் தேர்வாளராக இருந்தால் அனைத்து T20 , ஒருநாள் போட்டிகளிலும் அஜந்தா மென்டிசை விளையாடத் தெரிவு செய்வேன், அவர் ஒரு விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர். டெஸ்ட் போட்டிகளில் வேண்டுமானால் ஆடுகளத்தைப் பொறுத்து அவரது தெரிவு அமையும்"

சௌரவ்  கங்குலி "மென்டிஸ் ஒன்றும் பெரிய மந்திரவாதி அல்ல. அவரது பந்துவீச்சை முதல் தடவை எதிர்கொள்ளும் எல்லா அணிகளுமே தடுமாறும். நாமும் முதல் சில தடவைகள் உருண்டு தான் பின்னர் அவரைப் பழகி அடித்தோம்..சிறப்பாக அடித்தாடும் ஆற்றல் உள்ளவர்கள் அவரை சிறப்பாகக் கையாளுவார்கள்"
(பாருங்களேன்.. பழைய கடுப்பு மாறவில்லை)

கெவின் பீட்டர்சன் (அவர், அந்த ட்விட்டர் தான்) "மென்டிஸ் இன்று கலக்கினார். அவரது பந்துவீச்சை இன்று எந்தத் துடுப்பாட்ட வீரராலும் ஊகித்து ஆடுவது சிரமமாகவே இருந்திருக்கும்"

காத்திருக்கிறேன் அஜந்த மென்டிஸ் தென் ஆபிரிக்காவை எப்படிக் கவனித்துக்கொள்ளப் போகிறார் என்று பார்க்க.
ஆனால் ஒன்று என்னதான் புதிய வீரர்கள். ஆடுகளம் என்று பேசினாலும் ஒரு பந்துவீச்சாளர் தனது நான்கே ஓவர்களில் இரு தடவைகள் ஆறு விக்கெட்டுக்களை எடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது உண்மையில் பெரிய விஷயம் தான்.

Player Overs Mdns Runs Wkts Econ Team Opposition Ground Match Date Scorecard
BAW Mendis 4.0 2 8 6 2.00 Sri Lanka v Zimbabwe Hambantota 18 Sep 2012 T20I # 263
BAW Mendis 4.0 1 16 6 4.00 Sri Lanka v Australia Pallekele 8 Aug 2011 T20I # 203

ஆனால் இன்று ஹம்பாந்தோட்டையிலிருந்து வந்த ஒரு தகவலின்படி தென் ஆபிரிக்காவின் மூன்று வீரர்களுக்கு வயிற்று உபாதை என்றும் அவர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் தெரியவந்தது.
(அந்த மூன்று பேர் - A.B.De Villiers, Kallis & Amla)
நேற்று மென்டிசின் பந்துவீச்சைப் பார்த்திருப்பார்களோ? ;)

-----------------


ஆஸ்திரேலியா எதிர் அயர்லாந்து
இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் போட்டிகள் பார்க்க இன்று வந்துள்ள R.பிரேமதாச மைதானத்தில் இன்று பார்த்து மனம் கொதித்து உரியவர்களுக்கு (ICC, SLC & Spokesman of President) உடனடியாக ட்வீட்டும், கடித மூலம் & வாய் மூல முறைப்பாடும் செய்த விடயம்
ரசிகர்களுக்கான அறிவித்தல் பலகைகள், அறிவிப்புக்கள் உள்ள இடங்களில் தமிழ் மொழி எங்கும் இல்லாமை.
அத்தனை அறிவுறுத்தல்களும் வெறும் ஆங்கிலம் & சிங்களத்தில் தான்.

https://twitter.com/LoshanARV/status/248380116604973056

தமிழ் அரச மொழி அமுலாக்கம், தமிழ் மொழி எல்லா அலுவலகங்கள், திணைக்களங்கள், பொது இடங்களில் பயன்படுத்தப்படவேண்டும் என்று அரசு வாய் கிழியக் கத்திக்கொண்டிருக்க இங்கே சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரொன்றில் தமிழ் மொழிக்கு இடம் இல்லையா?

இது வரை எந்தத் தரப்பிடமிருந்தும் பதில் இல்லை.. பார்க்கலாம் யார், எப்போது, என்ன பதில் தருவார்கள் என்று....

Post a Comment

6Comments

Please Select Embedded Mode To show the Comment System.*