September 05, 2012

காலத்தின் கட்டாயம்??!! - தேர்தல் இடுகை


இன்னும் மூன்று நாட்களில் மூன்று மாகாண சபைத் தேர்தல்கள்..

இதிலே தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறைவான வடமத்திய மாகாணத்தை விட்டுவிடலாம்..
ஆளும் கட்சி நிச்சயம் வெல்லப் போகின்ற ஒரே மாகாணம் இதுவாகத் தான் இருக்கும். 

யாருக்கு வாக்களிப்பது? எப்படிப்பட்டவரைத் தெரிவு செய்வது?

யாரோ சொல்லி எப்பவோ கேட்டது - வேட்பாளர் தெரிவும் வாக்குத் தெரிவும் காதல் போன்றது என்று.. 
நாம் தெரிவு/முடிவு செய்தபிறகு வேறு யார் என்ன சொன்னாலும், யார் பிரசாரம் பண்ணினாலும் மாற்ற முடியாதவாறு உறுதியாக இருக்கவேண்டும்..
(அத்தெரிவு சரியாக இருக்கும்பட்சத்தில்)




இன்று காலை விடியலில் (வழமையாகவே தேர்தல்களுக்கு முன்னதாக செய்கின்ற நிகழ்ச்சி போல) இம்முறை வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கவனத்தில் எடுக்கவுள்ள முக்கிய விடயம் என்ன என்பது பற்றிக் கேட்டிருந்தேன்.

இதன்மூலமாக ஓரளவுக்கு வாக்காளரின் நாடித்துடிப்பை சரிபார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதும் ஒரு மினி கருத்துகணிப்பாகவும் இது அமைந்துவிடும் என்பதும் உண்மை. 

கிழக்கில் வீடும், மரமும் அநேகரின் தெரிவு என்பது தெரிந்ததே.. அதேபோல தமிழ் பேசும் வாக்காளர்கள் செறிந்துவாழும் சபரகமுவா மாகாணத்தில் சேவல் என்பது தமிழ் வாக்குகளை சிதறாமல் இருக்கச் செய்யும் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது இன்று கருத்துத் தெரிவித்த பலரும் ஏற்றுக்கொண்ட விடயமாக இருந்தது.
எனினும் வேறு தெரிவுகள் இல்லாததால் இருப்பதில் பரவாயில்லை என்று கருதும் மனநிலையுடன் வாக்களிக்கப் போகிறார்கள் என்றே உணர்கிறேன்.

கிழக்கு மாகாண சபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37. (தேர்தல் மூலம் 35 & போனஸ் ஆசனங்கள் 2 ) 
திருகோணமலை மாவட்டம் - 10
மட்டக்களப்பு - 11
அம்பாறை - 14

சபரகமுவா மாகாண சபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 44. (தேர்தல் மூலம் 42 & போனஸ் ஆசனங்கள் 2 )
இரத்தினபுரி -24
கேகாலை - 18

எத்தனை உறுப்பினர்களை எந்தக் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் என்ற ஊக்க விளையாட்டுக்களை உங்கள் தெரிவுக்கே விட்டுவிடுகிறேன்.  



எப்போதும் வலியுறுத்துவது போல, கட்டாயம் வாக்களிக்கச் செல்லுங்கள்; உங்கள் வாக்குகளை நீங்களே வழங்குவதை உறுதிப்படுத்துங்கள்; உங்கள் வாக்குரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள்; தவறானவர்களைத்தெரிவு செய்யாதீர்கள் என்ற வழமையான ஆலோசனைகளுடன் ... 
நேயர்களின்/ வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்களைக் கேட்டபோது..



சிறுபான்மையின் வாக்கு சிதறக்கூடாது, தமிழ்ப் பிரதிநிதித்துவம் காக்கப் படவேண்டும், மற்றவர்களை நம்ப முடியாது, இருப்பவர்களில் இவர்கள் பரவாயில்லை, வேறொரு தெரிவும் இப்போதைக்கு இல்லை, சர்வதேசத்துக்கு நாம் பிளவு பட்டுள்ளோம் என்ற தவறான கற்பித்தல் போய்விடக் கூடாது என்ற காரணங்கள் தமிழர்களாலும்,

உள்ளூர் அபிவிருத்தி, உரிமைகளைக் காப்பது, இன ஒற்றுமை, பேரம் பேசும் தன்மை, வால் பிடிப்பது மட்டுமே நோக்கமாக இல்லாமல் பேசவும் செய்கிறார்கள் என்று முஸ்லிம்களும் காரணங்களை அடுக்கினார்கள்.

சபரகமுவா மாகாணத்தைப் பொறுத்தவரை பிரதானமான மலையகத் தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தமிழ்ப் பிரதிநித்துவத்தைக் காக்க உறுதிப் பட்டுள்ளமை மக்களுக்குப் பெரிய ஆறுதலைக் கொடுத்துள்ளது. 
இப்படியான ஒற்றுமை எப்போதாவது தானே சாத்தியப்படுகிறது?

வாக்களித்து என்னாவது, எல்லாரும் கள்ளன்கள் தான். வாக்குக் கேட்டு வென்ற பின் எல்லாருமே மாறி விடுகிறார்கள்.. இதனால் தேர்தலில் நம்பிக்கை இல்லை என்றும் கணிசமான கருத்துக்கள் வந்திருந்தன.


இந்த நம்பிக்கையீனத்தைத் துடைத்தெறிய அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் என்ன செய்யப் போகிறார்கள்? இதனால் வாக்கு சதவீதம் கணிசமாக சரிந்தால் பாதிப்பு எமக்குத் தானே? நாம் என்ன செய்யப் போகிறோம்?

எவ்வளவு காலம் வேறு ஒன்றும் இல்லை என்பதனால் இருப்பதில் திருப்தி காணப்போகிறோம்?
நம்பிக்கையீனத்தையே பிரதானமாகக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு சலிப்புடன் வாக்களிப்பதை வெறும் கடமைக்காக செய்யப் போகிறோம்?
இதற்கான செயற்பாடுகளை எதிர்காலத் தலைமுறைக்கு விட்டிருக்க முடியாது.. உடனேயும் சட்டுப்புட்டென்று ஏதும் செய்யவும் கூடிய நிலை எம்மத்தியில் இல்லை.

நம்பிக்கை ஏற்படுத்தும் எதிர்காலத்துக்கான அரசியல் தலைமையை தேடிக்கொள்ள இந்தத் தேர்தலும் வழிகாட்டப் போவதில்லை.
குறைந்தபட்சம் வட மாகாணத் தேர்தலுக்கு முன்னாவது??

முஸ்லிம்களும் தெளிவாக ஒரு பக்கம் நிற்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசே அநேகரின் தெரிவாக இருந்தாலும் (இன்று கேட்டவரை & நண்பர்களிடம் அறிந்த வரை) - அந்தந்த ஊர்களில் உள்ளூர் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளின்படி வெற்றிலையும் கூட சில இடங்களில் செல்வாக்காக இருக்கிறது.

ஆனால் முஸ்லிம் தலைமைகள் உறுதியாக இருக்கும் அளவுக்காவது நம் தமிழ்த் தலைமைகள் இல்லை என்பதை முன்பே ஒரு இடுகையில் கவலையுடன் பகிர்ந்திருந்தேன்.
பிரதியீடுகள் இன்னும் தயாரில்லை என்பது 'மூத்த' தலைமைகளுக்கு ஆறுதலாக இருக்கும்..

ஆனால் ஒன்று அவர்களுக்குப் பாடம் கற்பிக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ இது தகுந்தவேளை இல்லை என்பதால் வீட்டுக்கு வாக்களித்தே ஆகவேண்டும் என்பது அவர்கள் சொல்வது போல ' காலத்தின் கட்டாயம்' தான்.

2 comments:

நிரூஜா said...

I hv lot to talk abt this with u. Hope we'll find some quality time soon together!!!

Easy (EZ) Editorial Calendar said...

நல்லது நடந்தால் சரிதான்....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner